ஆண்டவரின் இன்பமான வழிகள்

எம்.எஸ்.வசந்தகுமார்
(மார்ச்-ஏப்ரல் 2016)
(சென்ற இதழ் தொடர்ச்சி)

ஆண்டவரின் இன்பமான வழி

2. வேதத்தில் தியானமாயிருத்தல்

இரண்டாவதாக, நாம்  கர்த்தருடைய வேதத்தில் “தியானமாயிருக்க வேண்டும்” என்றும் முதலாவது சங்கீதம் கூறுகிறது. “தியானம்” என்னும் தமிழ் வார்த்தை மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள எபிரேயச் சொல்லின் அர்த்தத்தை முழுமையாக அறியத்தரவில்லை. ஆங்கிலத்திலும் “மெடிட்டேட்” (meditate) என்னும் சொல், மெளனமாக இருந்து சிந்திப்பதையே குறிக்கின்றது. சில மதங்களில் இருப்பதுபோல, மனதை வெறுமையாக்கி தியானித்தல், அல்லது மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கி தியானித்தல் என்பன எபிரேய மக்கள் மத்தியில் இருந்த பழக்கங்கள் அல்ல. மேலும், இவ்வசனத்தில் தியானம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் மெளனமான செயலையல்ல, சத்தமிடும் செயலையே குறிக்கின்றது. இதனால், வேதாகமத்தின் சில வசனங்களில், சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கும் (ஏசா.31:4), புறாவின் புலம்பலுக்கும் (ஏசா.38:14), மானிட பேச்சுக்கும் (சங்.37: 30, 71:24) இச்சொல்லே உபயோகிக்கப்பட்டுள்ளது.

மேலும், அக்காலத்தில் மெளனமான வாசிப்பு பெரும்பாலான மக்கள் அறியாததொன்றாகவே இருந்தது. பொதுவாக மக்கள் ஓரளவு சத்தத்துடன் வாசிப்பதையே தம் பழக்கமாகக் கொண்டிருந்தனர். இதனால், மனனம் செய்த வேதப்பகுதியைச் சொல்லும்படியாக, அல்லது எழுதப்பட்ட வேதப்பகுதியை சிறிதளவு சத்தத்துடன் வாசிக்கும்படியாக, அல்லது வேத வசனங்களை முணுமுணுக்கும்படியாக, அல்லது பாடும்படியாகவே முதலாம் சங்கீதம் கூறுவதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஆனால், “ஓரளவு சத்தத்துடன் பல தடவைகள் மறுபடியும் மறுபடியுமாக ஒரு வேதப்பகுதியை வாசித்தல்” என்னும் அர்த்தத்துடனேயே முதலாம் சங்கீதத்தில் இச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. இது, ஒருவன் தனக்குள்ளேயே, ஆனால் சிறிதளவு சத்தத்துடன் தன்னோடு பேசும் விதத்தில் வேதத்தை வாசிக்கும் முறையாகும். மேலும், இது குறிப்பிட்ட வேதப்பகுதியைப் பல்வேறு கோணங்களிலும் ஆராய்ந்தும் சிந்தித்தும் பார்க்கும் விதத்தில் பல தடவைகள் வாசிக்கும் முறையாகவும் உள்ளது.

உண்மையில், முதலாம் சங்கீதம், நாம் எவ்வாறு வேதாகமத்தை வாசிக்கவேண்டும் என்பதை அறியத்தருகின்றது. நாம் ஒரு வேதப் பகுதியைப் பல தடவைகள் வாசிக்கவேண்டும். அப்பகுதியிலுள்ள விஷயங்கள் மனதில் ஆழமாகப் பதியும்வரை நாம் மறுபடியும் மறுபடியுமாக அதை வாசிக்க வேண்டும். தற்காலத்தில் பலர் காலையில் வாசிக்கும் வேதப்பகுதியிலுள்ள விஷயங்களைப் பகலில் மறந்துவிடுகின்றனர். இதனால் பலதடவைகள் ஒரு பகுதியை வாசிக்கும்படி முதலாம் சங்கீதம் கூறுகிறது. மேலும், மெளனமாக வாசிக்கும்போது மனம் அங்குமிங்கும் அலைக்கழிக்கப்பட்டால் ஓரளவு சத்தமாக வாசிப்பது நல்லது. இவ்வாறு வேதத்தை நாம் வாசிக்கவேண்டியதன் காரணம், நாம் வாசிக்கும் வேதப்பகுதியை சரியான விதத்தில் புரிந்துகொண்டு அதன்படி நடப்பதற்கேயாகும். ஏனெனில், தியானம் என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல்லின் அர்த்தம், வாசிப்பதை மட்டுமல்ல, வாசிப்பவற்றை வாழ்க்கையில் பிரயோகிப்பதையும் உள்ளடக்கியுள்ளது. எனவே இது, “விஷயங்களை அறிந்துகொள்வதற்காக வாசிப்பதைப்பற்றிய கட்டளை அல்ல. மாறாக, வேதத்தின் சத்தியங்களைக் கைக்கொண்டு வாழ்வதற்காக வாசிப்பதைப்பற்றிய அறிவுறுத்தலாகும்”. முதலாம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய கட்டளை ஆரம்பத்தில் யோசுவா என்னும் பக்தனுக்கு கொடுக்கப்பட்டது. “இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்வாய்” (யோசு.1:8).

வேதாகமக் காலத்தில் “தியானம்” சத்தமாக வாசிக்கும் செயலாக இருந்ததினாலேயே “இந்த நியாயப்பிரமாணப் புஸ்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக” என்று தேவன் யோசுவாவுக்குக் கட்டளையிட்டுள்ளார். மேலும் தியானத்தின் நோக்கம் வேதத்தில் “எழுதியிருக்கிறவைகளின் படியெல்லாம் செய்யக் கவனமாயிருத்தலாகும்”.  எனவே, ஒரு வேதப்பகுதியைப் பல தடவைகள் வாசித்து, அப்பகுதியில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களைப் புரிந்துகொண்டு, அதன்படி நாம் வாழவேண்டும். யாக்கோபு இதைப்பற்றி அறிவுறுத்தும்போது, “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்” (யாக்.1:23) என்று குறிப்பிட்டுள்ளார். தற்காலத்தில் பலர் வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒரு மந்திரப் புத்தகத்தை வாசிப்பதுபோல வேதாகமத்தை வாசிக்கின்றனர். வேதாகமத்தை வாசிப்பது மட்டும் தேவனுடைய ஆசீர்வாதத்தைக் கொண்டு வராது. வாசிக்கும் வேதப்பகுதியைச் சரிவர புரிந்துகொண்டு அதன்படி நாம் வாழவேண்டும். தேவனுடைய வார்த்தை நம்முடைய சிந்தனைகளிலும் செயல்களிலும் எப்பொழுதும் செல்வாக்கு செலுத்தும் விதத்தில் நமக்குள் நிலைத்திருக்கவேண்டும். அப்பொழுது மட்டுமே தேவ வார்த்தை நம்முடைய வாழ்வுக்கு ஆசீர்வாதத்தையும் ஆனந்தத்தையும் தரும்.

வேதாகமத்தைத் தியானிக்கும்போது, நாம் கருத்திற்கொள்ளவேண்டிய சில விஷயங்கள் உள்ளன. இவற்றில் மிகவும் முக்கியமானது, தனியாக ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்து தியானிப்பதைத் தவிர்த்தலாகும். வேதாகமத்தில், ஒரு வசனத்தின் தொடர்ச்சி அதற்கு முன்னும் பின்னுமுள்ள வசனங்களில் உள்ளன. இதனால், இத்தொடர்ச்சியைக் கருத்திற் கொள்ளாதவர்களாக ஒரு வசனத்தை மாத்திரம் தனியாக எடுத்தால், நாம் வேத வசனங்களைத் தவறான விதத்திலேயே புரிந்து கொள்வோம். தற்காலத்தில் பலர் வேதாகமத்தில் அங்கொன் றும் இங்கொன்றுமாக வசனங்களைத் தனித்தனியாக எடுத்து தங்களுடைய சிந்தனைக்கும் கருத்துக்கும் ஏற்றவிதத்தில் அவற்றிற்கு அர்த்தம் கற்பித்து வருகின்றனர். சமீபத்தில் “வெண்ணை” விளம்பரத்திற்கு வேத வசனங்களை உபயோகித்தவர்கள், “மனிதன் அப்பத்தினால் மாத்திரம் பிழைப்பதில்லை” என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கின்றார். எனவே கொஞ்சம் வெண்ணையையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார்கள். அப்பத்தை மாத்திரம் தனியாகச் சாப்பிடக்கூடாது என்னும் அர்த்தத்தில் இயேசுகிறிஸ்துவின் கூற்றை இவர்கள் புரிந்துள்ளனர். இதற்குக் காரணம், இயேசுகிறிஸ்து எந்த சந்தர்ப்பத்தில் எத்தகைய நோக்கத்துடன் இவ்வாறு கூறினார் என்பதையும், அவருடைய கூற்றுக்கு முன்னும் பின்னும் உள்ள வசனங்களையும் கருத்திற்கொள்ளாமல், அவரது கூற்றை மாத்திரம் தனியாக எடுத்து பிழையாக விளங்கிக்கொண்டுள்ளனர். இதைப்போலவே பல கிறிஸ்தவர்கள் வேதவசனங்களைத் தனியாக எடுத்து, தங்களது சிந்தனைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றவிதத்தில் தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.

தற்காலத்தில் ஒரு வசனத்தை அல்லது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்து, அதைத் தங்களுடைய தவறான செயல்களை நியாயப்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. உதாரணத்திற்கு, விபசாரத்தில் விழுந்தவன் “ஆவி உற்சாகமுள்ளது, மாம்சம் பலவீனமானது” என்னும் வசனத்தின் மூலம் தேவன் தன்னைத் தேற்றுவதாகவும், “அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” என்னும் வசனத்தின்படி, தான் நடத்தும் விபசார விடுதியில் தேவன் தனக்கு நல்ல வருமானத்தைக் கொடுப்பதாகவும், சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுக்குச் சென்றவன் “ஒரு தீங்கும் உன்னை அணுகாது” என்னும் வசனத்தின்படி பிரயாணத்தில் தேவன் தன்னைப் பாதுகாத்தார் என்றும் சாட்சி சொல்கின்ற கிறிஸ்தவர்களும், இவற்றைச் சரியான செயல்கள் என்று ஆதரிக்கின்ற ஊழியர்களும் நம் மத்தியில் உள்ளனர்.

இதனால், தனியாக ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்து, நம்முடைய சிந்தனைக்கும் விருப்பத்திற்கும் ஏற்றவிதத்தில் அதற்கு அர்த்தம் கொடுக்காமல், அவ்வேதவசனம் இடம்பெறும் அதிகாரத்தை அல்லது புத்தகத்தை முழுமையாக வாசிக்கவேண்டும். அப்போது மாத்திரமே நமது தியானம், தேவனுடைய வார்த்தையை நாம் சரியான விதத்தில் புரிந்து கொள்வதற்கு உதவிடும்.

(தொடரும்)

சத்தியவசனம்