சத்திய வசனம் பங்காளர் மடல்

ஜனவரி-பிப்ரவரி 2017

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற கர்த்தருடைய நாமத்திலே அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இப்புதிய வருடத்தில் இந்த சஞ்சிகை மூலமாக உங்களைச் சந்திக்க தேவன்கொடுத்த கிருபைக்காக அவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. அலுவலகத்தில் ஏற்பட்ட பல வேலைகளினிமித்தம் இம்மாத சஞ்சிகை தாமதமாக அனுப்ப நேரிட்டது. இப்புதிய ஆண்டிலும் நம்முடைய தேசத்தின் சமாதானமும் நலனும் காக்கப்பட நாம் அதிகமாக ஜெபிக்க கடமைப்பட்டுள்ளோம். நாம் தற்போது சந்தித்துவரும் தன்னெழுச்சி போராட்டங்களும், அரசியல் சூழ்நிலை மாற்றங்களும் நாட்டின் நலனுக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எத்தகைய தீங்கை ஏற்படுத்தாதபடியும், நாம் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணுவதற்கும் வேண்டுதல் செய்வோம். குறிப்பாக வாலிபர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுப்புதல் உண்டாவதற்கு திறப்பின் வாசலில் நின்று ஜெபிக்க நம்மை அர்ப்பணிப்போம்.

சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் தெளிவாக கேட்பதற்கு நீங்கள் ஜெபித்து வந்தீர்கள். இதன் மூலமாக இன்னும் அநேகமாயிரம் பேர் ஆசீர்வதிக்கப்படவும், புதியதாக ‘சத்தியம்’ டிவியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  சத்திய வசனம் தொலைகாட்சி நிகழ்ச்சி மூலமாகவும் அநேகர் சந்திக்கப்பட ஆசீர்வதிக்கப்படவும் உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் தங்கள் மேலான ஆதரவைத் தந்து ஜெபத்தோடு தாங்கி வந்தீர்கள். நன்றி கூறுகிறோம்.  “அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள்” (நெகேமி.2:18).தொடர்ந்தும் தங்களது நல்ஒத்துழைப்பைத் தந்திட அன்புடன் வேண்டுகிறோம்.

இம்மாத சஞ்சிகையில் இப்புதிய ஆண்டில் நாம் ‘புதிய சிந்தை”யோடு கிறிஸ்தவ வாழ்க்கை நடத்துவதற்கு Dr.உட்ரோகுரோல் அவர்களும், “கிறிஸ்துவின் மாதிரியில்” வளருவதற்கு சகோதரி சாந்திபொன்னு அவர்களும் விசேஷித்த கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். “ஆவியானவரின் சத்தத்திற்கு உணர்வுடனிருந்த சபை” என்ற தலைப்பில் நமது திருச்சபை எவ்வளவு மிஷனரி தரிசனத்தோடு செயல்பட வேண்டும் என்பதை சகோ.பிரேம்குமார் அவர்கள் எழுதியுள்ளார்கள். நாம் எந்த சூழ்நிலையிலும் மகிழ்ச்சியோடு வாழமுடியும் என்பதை வலியுறுத்தி சகோ.சுந்தர்சிங் மாத்யூஸ் அவர்களும், நாம் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரின் ஜெபங்களும் எவ்வளவு ஆசீர்வாத அனுபவங்களாகிறது என்பதை சகோதரி பிரியா கோவிந்தராஜ் அவர்களும் சிறப்பான கட்டுரைகளாக எழுதியுள்ளார்கள். வழக்கம்போல் வெளிவரும் தொடர் வேதபாடமாக Dr.தியோடர் எச்.எஃப். அவர்கள் எழுதிய ‘விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்’ என்ற கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரைகள் யாவும் தங்கள் யாவருக்கும் பிரயோஜனமாக அமைந்திட வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்