ஆசிரியரிடமிருந்து…

சத்திய வசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2017

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள விசுவாச பங்காளர்களுக்கு,

நம்மை மீட்கும்படியாக தம்மையே ஈந்த அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். தேவனுடைய இராஜ்யம் விரிவடையும் பணியில் எங்களோடு இணைந்து செயல்படுகிற ஒவ்வொருவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். தாங்கள் இவ்வூழியத்தின் மேல் அன்பு கொண்டு கொடுக்கிற அன்பின் காணிக்கைகளுக்காகவும் ஊக்கமான ஜெபத்திற்காகவும் தேவன் தங்கள் ஒவ்வொருவரையும் அபரிதமாய் ஆசீர்வதிப்பார். தொடர்ந்து வானொலி, தொலைகாட்சி, இலக்கியம் மற்றும் இணையதளம் ஆகியவற்றின் மூலம் வெளிவரும் நற்செய்தியினால் இன்னும் அநேகர் கிறிஸ்துவுக்கென ஆதாயப்படுத்தப்பட எங்களோடு இணைந்து வேண்டுதல் செய்யுங்கள். ஆகையால் ….கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும் அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக (1கொரி.15:58).

இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் மனபாரங்களையும் தாங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் யாவற்றையும் தேவபாதத்தில் வைத்து எமது ஜெப வேளைகளிலும் மாதந்தோறும் நடைபெற்றுவருகின்ற பங்காளர்கள் ஜெபக் கூடுகையிலும் வேண்டுதல் செய்வோம். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்.5:16).

இவ்விதழில் இயேசுகிறிஸ்துவின் பாடுகளின் வாயிலாக தேவன் நம்மேல் விளங்கப்பண்ணின தமது அன்பைக் குறித்து Dr.உட்ரோகுரோல் அவர்களும், சிலுவையில் இயேசு அடைந்த தாகத்தைக் குறித்து சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும், கிறிஸ்து தமது உயிர்த்தெழுதலின் மூலமாக நமக்குக் கற்றுத்தரும் உண்மைகளையும் அதினால் நாம் அடைகிற நன்மைகளையும் குறித்து பேராசிரியர் எடிசன் அவர்கள் வழங்கிய செய்திகளும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் இயேசுகிறிஸ்துவின் பாடு மரணம் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை தியானிக்கும் நமக்கு அதிக ஆசீர்வாதமாக அமையும், மேலும் ‘விடுவித்தாலும் விடுவிக்காமற்போனாலும்’ என்ற தலைப்பில் சகோதரி சாந்திபொன்னு அவர்கள் எழுதிய சிறப்பு செய்தி நமது விசுவாசத்தை கட்டியெழுப்புவதாய் இருக்கிறது. அருட்பணிக்கு முன்மாதிரியாக திகழ்ந்த அந்தியோகியா திருச்சபை எவ்வாறு வேதவசனத்தினால் கற்பிக்கப்பட்டது என்பதை சகோதரர் பிரேம்குமார் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார். விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம் என்ற தலைப்பில் வெளிவருகின்ற தொடர் வேதபாடத்தில் நாம் கால்களில் அணியவேண்டிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் குறித்து Dr.தியோடர் எச்.எஃப் அவர்கள் விளக்கியுள்ளார்கள். இச்செய்திகள் அனைத்தும் தங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

சத்தியவசனம்