தாகமாயிருக்கிறேன்!

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2017)

“அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்” (யோவான் 19:28)

யோவான் 19ஆம் அதிகாரம் 28ஆம் வசனத்தில் “அதன்பின்பு எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன்” என்று ஆண்டவராகிய இயேசு சொன்னார். அவர் சிலுவையில் முதல் மூன்று வாக்கியங்களை மற்றவர்களுக்காக சொன்னார். கடைசி மூன்று வாக்கியங்களை தமக்காகச் சொல்கிறார். ‘தாகமாயிருக்கிறேன்’ என்ற இவ்வார்த்தையானது அவர் தமது சரீரத்தை ஒப்புக்கொடுத்ததையே வெளிப்படுத்துகிறது. சிலுவையில் மொழிந்த ஆறாவது வாக்கியம் அவர் தமது ஆத்துமாவை ஒப்புக்கொடுத்ததை வெளிப்படுத்துகிறது. இறுதியாக அவர் தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுத்ததை வெளிப்படுத்துகிறதாக இருக்கிறது. ஆகவே இந்த கடைசி மூன்று வாக்கியங்களுமே கிறிஸ்துவானவர் தன்னைப் பூரணமாய் ஒப்புக்கொடுத்ததை வெளிப்படுத்துகிற வண்ணமாய் காணப்படுகின்றது என்பதை நாம் நன்கு அறிந்துகொள்ள முடிகிறது.

எனக்கு அன்பானவர்களே, ‘தாகமாயிருக்கிறேன்’ என்பதின் பொருள் மிக முக்கியமானதும் நாம் ஆழமாக சிந்திக்கக்கூடிய ஒன்றுமாகும். சிலுவை மரணத்தின் முன்பாக ஆண்டவராகிய இயேசுவை அநேகப் பாடுகளுக்குட்படுத்தினார்கள். “சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால் படியிட்டு அவரை வணங்கினார்கள். அவரைப் பரியாசம்பண்ணின பின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்” (மாற்.15:17-20). பரியாசங்கள், நிந்தனையான பேச்சுகள், விசாரணையினால் ஏற்பட்ட உளைச்சல்கள், மன வேதனைகள் அடிகள் இவற்றோடு கொல்கொதா மலைக்கு கடினமான சிலுவை மரத்தைத் தூக்கிச் சென்றாரே. அந்த வேதனையினாலே இதைச் சொல்லியிருப்பாரோ என பலர் சொல்லக்கூடும்.

முதலாவதாக, ஆண்டவராகிய இயேசு ‘தாகமாயிருக்கிறேன்’ என்று சொல்வதினாலே, அவர் ஒரு பாடுபடுகிற மனிதனாக, மனுஷ குமாரனாக இருந்து இந்த வார்த்தைகளைச் சொன்னார் எனலாம். நம்முடைய ஆண்டவர் உண்மையாகவே தேவ குமாரன்; இன்னொரு கோணத்திலே பார்த்தால் அவர் மனுஷ குமாரன். அவர் பசியாயிருந்தார், தாகத்தோடு இருந்தார். காற்றடித்து கடல் கொந்தளித்த போது படகிலே படுத்து நித்திரையாயிருந்தார், அவர் அழுதிருக்கிறார், கண்ணீர் விட்டிருக்கிறார். இதெல்லாம் அவர் மனுகுமாரன் என்கிற அந்த தன்மையை வெளிப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக பலர் அவர் தெய்வமில்லை என்று வாதிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் அவர் மனிதனில்லை என்று சொல்லி வாக்குவாதம் பண்ணுகிறவர்களும் உண்டு. ஆனால் வேதவசனத்தின்படி அவர் தேவகுமாரன்; அதேசமயத்திலே அவர் மனுஷகுமாரன். இந்த இடத்திலே அவர் சிலுவையிலே மனிதகுமாரனாக அந்த கோரபாடுகளை அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில்தான் தாகமாயிருக்கிறேன் என்று சொல்லியிருக்கக் கூடும்.

யூதமக்களிலே சில பெண்கள் இருந்தார்கள். சிலுவை மரணத்திற்கு குறிக்கப்பட்ட மக்களுக்காக அவர்கள் என்ன செய்வார்கள் என்று சொன்னால், மயக்க மருந்து போன்ற சில காரியங்களை கலந்து குடிக்கக் கொடுப்பார்கள். அதைக் குடிப்பதாலே அவர்கள் வேதனையை மறந்து மரித்துப்போவார்கள் என்பது இந்த யூத பெண்மணிகளின் நம்பிக்கை. ஆனால் ஆண்டவராகிய இயேசுவுக்கு இப்படிப்பட்ட பானங்களை கொடுத்தபோது அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, வாங்க மறுத்துவிட்டார். ஒரு யூத ஆசாரியன் தேவனுடைய சந்திதானத்தில் போய் தொழுதுகொள்ள போகிறபோது அவன் மதுபானத்தையோ அல்லது வேறு எந்த வகையான பானங்களையோ குடிக்கக்கூடாது.

நம்முடைய ஆண்டவராகிய இயேசுவானவர் ஒரு பிரதான ஆசாரியனைப்போல அங்கு சென்று மரித்ததினாலே, அவர் அந்த மதுவை கலந்த திராட்ச ரசத்தையோ அல்லது அதுபோன்ற வேறு எதையோ ஏற்றுக்கொள்ள மறுத்ததை நாம் திருமறையிலே வாசிக்க முடிகிறது. ‘தாகமாயிருக்கிறேன்’ என்று சொன்ன காரியத்தின் முதல் பொருள் என்னவெனில், அவர் வேதனைகளை பாடுகளை ஏற்ற மனுஷ குமாரனாக, அந்த வேதனையின் உச்சத்திலே தாகமாயிருக்கிறேன் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளலாம்.

இரண்டாவதாக, கீழ்ப்படிதலுள்ள ஊழியக்காரன் (Obedience of the servant) என்று சொல்லாம். தேவனுடைய உண்மையான ஊழியக்காரனாய் நின்று கீழ்ப்படிந்தவராய் இதைச் சொல்லியிருக்கலாம் என்று கருதுகின்றனர். “அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரண பரியந்தம், அதாவது சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி.2:8).

அருமையானவர்களே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலே நடந்தவைகள் எல்லாமே தீர்க்க தரிசனங்கள்தான். மத்தேயு நற்செய்தி நூலானது யூதர்களுக்காக ஒரு யூதனால் எழுதப்பட்ட ஒரு நற்செய்தி நூலாகும். ஒவ்வொரு சம்பவத்திலும் தீர்க்க தரிசனம் நிறைவேறும்படியாக இப்படி நடந்தது என்று மத்தேயு எழுதுவதைக் கவனிக்கலாம். அவருடைய வாழ்க்கையிலே ஒன்றுகூட தவறாகவும் தற்செயலாகவும் நடந்ததில்லை. தேவாதி தேவனாலே முன்னுரைக்கப்பட்டது ஒவ்வொன்றும் அப்படியே நடந்தது என்று வேதவசனம் மிக தெளிவாகச் சொல்கிறது. ஆகவேதான் யோவானும் கூட ‘வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக தாகமாயிருக்கிறேன்’ என்றார். ஆண்டவருடைய தாகமானது, வேத வசனம் நிறைவேறுதலுக்குரிய தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதல் என்று பொருள் கொள்ளலாம்.

முதலாவது, பாடுகளிலே வேதனைகளிலே மனுஷகுமாரனுடைய வெளிப்பாடு ‘தாகமாயிருக்கிறேன்’ என்றும், இரண்டாவது வேதவசனத்தின்படி தன் காரியங்களை முற்றிலும் நிறைவேற்றின தேவகுமாரனாகிய அவருடைய வாழ்க்கையின் தீர்க்க தரிசனத்தின் நிறைவேறுதலாக ‘தாகமாயிருக்கிறேன்’ என்றார் என்றும் பார்த்தோம். இஸ்ரவேல் ஜனங்களுடைய தாகத்தைத் தீர்த்த தேவன், சமாரியப் பெண்ணின் தாகத்தைத் தீர்க்கும் வழியைச் சொன்ன ஆண்டவர்தாமே ‘தாகமாயிருக்கிறேன்’ என்கிறார். “நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று” (சங். 69:3), “என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல் வாயோடே ஒட்டிக்கொண்டது” (சங்.22:15), இந்த சங்கீதத்திலே மேசியாவாகிய தேவகுமாரனின் பாடுகள் குறித்து தீர்க்கதரிசனமாய் எழுதப்பட்டிருக்கிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து வருகின்ற ஒவ்வொரு வார்த்தையும் சாதாரண வார்த்தை யல்ல. அது தீர்க்க தரிசன வார்த்தை, தீர்க்க தரிசன வார்த்தையின் நிறைவேறுதலாகும்.

மூன்றாவதாக, ‘தாகமாயிருக்கிறேன்’ என்பது இரட்சகரின் அன்பின் குணத்தை வெளிப்படுத்துகிறது. பிரியமானவர்களே, அவர் ஆத்துமாக்களைக் குறித்த தாகத்தோடு இருந்ததாலே, அந்நேரத்தில் மனிதர்கள் கொடுத்த தாகத்துக்கான தீர்வை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆத்துமாக்கள்மேல், அறியப்படாத மக்கள்மேல், சபையின்மேல் ஆண்டவர் தாகத்தோடிருக்கிறார். அருமையானவர்களே, உங்கள் ஆத்துமாக்களைக் குறித்து தாகம் அவருக்குண்டு. லூக்.16:19-31 வரையுள்ள ஐசுவரியவான் – லாசரு சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே. “அப்பொழுது அவன் (ஐசுவரியவான்): தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்” (வச.24). அதற்கு ஆபிரகாம் இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்கு கடந்துவரவும். அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்கும் கூடாதபடிக்கு பெரும் பிளப்பு உண்டாயிருக்கிறது என்றார். அப்படியானால் என்னுடைய ஐந்து சகோதரர்களும் இந்த வேதனையுள்ள இடத்திற்கு வராதபடி லாசருவை அனுப்பும்படி வேண்டுகிறான். ஐசுவரியவான் பாதாளத்தில் இருந்தாலும் தன் சகோதரர்களைக் குறித்து அவனுக்கிருந்த ஆத்மபாரத்தை நாம் அறியமுடிகிறது. இந்த மனிதனுக்கு இவ்வளவு தாகமிருக்குமானால், தம்முடைய பரிசுத்த இரத்தத்தை சிலுவையில் ஊற்றின நமது ஆண்டவராகிய இயேசுவுக்கு நம்முடைய ஆத்துமாக்களைக் குறித்த தாகம் எவ்வளவாய் இருக்கும் என்பதை நாம் அறிந்துகொள்ள அழைக்கப்படுகிறோம். ஆகவே ‘தாகமாயிருக்கிறேன்’ என்பது ஆவிக்குரிய நிலைப்பாட்டைக் குறித்த தாகம் என்றே சொல்லலாம்.

இன்றைக்கு இந்த இரட்சிப்பைக் குறித்து கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படி தப்பித்துக் கொள்வோம். உலகமே சதம், உலகமே நோக்கம், வாழ்வு என்று எண்ணி விடக்கூடாது. இந்த உலகத்துக்கு பின்பாக மறுமை இருக்கிறது. அந்த மறுமையிலே நம்முடைய ஆண்டவரோடு வாழக்கூடிய கிருபையைத் தர வேண்டுமென்றால் ஆத்துமாவை ஆண்டவரிடத்தில் ஒப்புவித்து அவருக்காக வாழவேண்டும். மனந்திரும்பாத ஒவ்வொரு மனிதனைக் குறித்தும் அவர் கவலையோடு கரிசனையோடு இருக்கிறார். “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்” (வெளி. 3:20). இந்தியாவிலே 4200 மக்கள் கூட்டம் இருக்கிறார்கள். அவற்றிலே 1500 மக்கள் கூட்டம்தான் இதுவரையில் சந்திக்கப்பட்டிருக்கிறார்கள். மீதியான மக்கள் கூட்டங்களை யார் சென்று சந்திப்பது? அந்த மக்களைக் குறித்து ஆண்டவருக்கு தாகம் உண்டு என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். சபையைக் குறித்து ஆண்டவருக்கு தாகம் உண்டு. சபையானது ஆண்டவருடைய சரீரமாக உலகத்திலே இருக்கிறது. ஒரு பக்தன் இவ்விதமாக எழுதுகிறார்: உலகம் எங்கே இருக்கிறது, சபைக்குள் இருக்கிறது. சபை எங்கே இருக்கிறது, உலகத்துக்குள் இருக்கிறது என்று. இன்றைக்கு உலகத்தினுடைய அநேக அழுத்தங்கள் சபைகளுக்குள் நுழைந்துபோய்விட்டது. ஆகவே சபையின் பரிசுத்தத்தைக் குறித்து, சபையின் காரியங்களைக் குறித்து ஆண்டவர் தாகத்தோடிருக்கிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இன்னொரு தாகத்தைக் குறித்துகூட நாம் இங்கு அறிந்துகொள்ளலாம். அது தேவையுள்ள மக்களுக்கு நாம் செய்கிற உதவியென பார்க்கிறோம். மத்.25:35ஆம் வசனத்தில் வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து, “பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்” என்றார். “மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (வச.40) என்று சொல்லி அவர்களை தமது ஆசீர்வாதத்திற்கும், ராஜ்யத்தின் பங்காளிகளாகவும் மாற்றினார். ஆனால் இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து; “மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்” என்று சொல்லி அவர்களை நித்திய ஆக்கினைக்கு தீர்த்துப் போட்டதை நாம் அறிகிறோம்.

இந்தப் பகுதியிலே ஆண்டவர் என் தாகத்தைத் தீர்த்தீர்கள் எனக் குறிப்பிடுவது தேவை நிறைந்த மக்களுக்கு நாம் செய்கிற உதவியாகும். தேவை நிறைந்த மக்களுக்கு அந்தந்த காலத்தில் செய்யக்கூடிய உதவி நம் ஆண்டவருக்கு செய்யக்கூடிய உதவியாக மாறிவிட வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவிலே அன்னை தெரசா அம்மையார் வந்து இவ்விதமாக அநேகருக்கு உதவி செய்து ஆண்டவருக்காக வாழ்ந்ததை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே!

ஆண்டவருடைய ஊழிய தாகத்தை, சபையின் தாகத்தை, மிஷனரி தாகத்தை நிறைவேற்றுவதற்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

ஆண்டவரை அறியாத மக்கள் அறிந்துகொள்வதற்கும், வசனத்திலே வளருவதற்கும் நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?

“மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள்” என்கிறார் ஆண்டவர்.

இன்று தமது கரத்தை நீட்டி இயேசு நம்மை அன்போடே அழைக்கிறார். எழும்பி நாம் அவர் பணி செய்வோம். அவருக்காக உழைப்போம். ஆண்டவர் நம்மை நிச்சயமாய் ஆசீர்வதிப்பார்.

சத்தியவசனம்