இயேசுவின் உயிர்த்தெழுதல் நமக்கு போதிக்கும் உண்மைகள்

பேராசிரியர்.எடிசன்
(மார்ச்-ஏப்ரல் 2017)

இயேசுகிறிஸ்துவின் இனியநாமத்தில் சத்தியவசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். உலகத்தை கலக்கின ஒரு காரியத்தைக் குறித்து நாம் தியானிக்கப்போகிறோம். அது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்!

இதை அநேகரால் நம்பமுடியவில்லை. இயேசுகிறிஸ்து மரித்தார்; அதோடு முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு அவர் உயிரோடு எழுந்ததை அவர்களால் நம்பமுடியவில்லை. இந்த உலகத்திலும் இப்பொழுதும் அநேகர் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழவில்லை, அதற்கான ஆதாரங்களை நான் தருகிறேன் என்று சொல்லி ஆராய்ந்தவர்கள் எல்லாரும் கடைசியில் இயேசுகிறிஸ்து நிச்சயம் உயிரோடு எழுந்தார் என்று சொல்லி முடித்தார்கள். அல்லேலூயா!

தேவன் இந்த உலகத்திலே அதி அற்புதமான ஒன்றை செய்தார் என்றால் அது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்!

அதுதான் அவர் தேவகுமாரன் என்பதற்கு மறுக்க முடியாத அத்தாட்சியாக இருக்கிறது. அவர் அந்த உயிர்த்தெழுதலினால் பல காரியங்களை நிச்சயம் என்று அவர் நமக்கு போதித்தார்.

முதலாவதாக, இந்த உலகத்து மனிதன் சொல்லுவது என்ன? ஒவ்வொரு நிமிடமும் மனிதன் கல்லறையை நோக்கி ஒடிக் கொண்டிருக்கிறான் என்று சொல்லுகிறான். ஆனால் இயேசு சொல்லுகிறார்: கல்லறை முடிவல்ல; மரணம் முடிவல்ல; அது ஒரு வாசல். ஒரு வாழ்க்கையிலிருந்து நித்திய வாழ்க்கைக்குள்ளாக கடந்து செல்லுகிற ஒருவாசல் என்று சொல்லுகிறார். அது எப்படி உண்மை என்பதை தன்னுடைய உயிர்த்தெழுதலினாலே அவர் நிரூபித்தார். மனிதனாய் பிறந்தார்; மாம்சமும் இரத்தமும் உடையவராய் வாழ்ந்தார்; அவர் மகிமையின் சரீரத்தோடு எழுந்திருக்கும்போது எனக்கும் அதே நம்பிக்கை உண்டு. மறுமை ஒன்று உண்டு; அது நிச்சயம் என்கிற அந்த உண்மையை இயேசுவின் உயிர்த்தெழுதல் உலகிற்கு காட்டியது.

இரண்டாவதாக, எபிரேயர் 2:14 வசனத்திலிருந்து வாசிப்போம். “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்”. மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயம் எங்கே? என்று ஒவ்வொருவரும் ஆர்ப்பரிக்கத்தக்கதாக மரணம் முடிவல்ல; அது ஒரு சோகமான அனுபவமல்ல; அது சந்தோஷமான காரியம்; மரணம் ஒரு ஆசீர்வாதம் என்று தன்னுடைய உயிர்த்தெழுதலினாலே இயேசு நிரூபித்தார். ஆம், பிரியமானவர்களே! மரணம் ஒரு ஆசீர்வாதம்; நான் மரித்தால் எனக்கு முன் மரித்த அத்தனை பேரையும் நான் சந்திக்க முடியும். இன்னும் அவர்களோடு பிரியாமல் இருக்க முடியும்.

ஆகையால் உயிர்த்தெழுந்த பின்னர் பிரிவே இல்லாத வாழ்க்கை நமக்கு உண்டு. அதையும் இயேசுவின் உயிர்த்தெழுதல் நிரூபித்தது. இயேசு சொன்னதெல்லாம் உண்மை என்பது இந்த உயிர்த்தெழுதலினால் தெரிந்தது. சீஷர்கள் நம்பவில்லை; ஆனால் அவருடைய விரோதிகள் நம்பினார்கள். அவர்கள் சொன்னார்கள்: இந்த எத்தன் மூன்று நாளுக்கு பின் எழும்புவேன் என்று சொல்லியிருக்கிறான். அது முந்தின எத்தைவிட கொடியதாய் இருக்காதபடி கல்லறைக்கு காவல் வைத்து முத்திரை போட்டார்கள் (மத்.27:64,66). ஆனாலும், இயேசுவின் உயிர்த்தெழுதலில் அவர் நிரூபித்ததையும் தான் தேவனென்று நிரூபித்ததையும் யாராலும் தடுக்க முடியவில்லை. அவர் சொன்ன காரியங்களெல்லாம் உண்மைதான் என்று அதை நாம் இப்பொழுது அறிந்துகொள்ள முடியும்.

மூன்றாவதாக, இயேசு சொன்னார்: நான் போகிறேன், உங்களுக்கு ஒரு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப்போகிறேன்; ஆயத்தம்பண்ணின பின்பு மறுபடியும் வந்து நீங்கள் என்றைக்கும் என்னுடனே இருக்கும்படிக்கு உங்களை அழைத்துச் செல்வேன் என்றார். இயேசு உயிர்த்தெழவில்லையென்றால் இந்த விசுவாசம் வீணானதாயிருக்கும். இவரே எழும்பவில்லையே, இவரே போகவில்லையே, இவர் எப்படி எனக்கு பின்னால் ஒரு வாழ்க்கையை வாக்குப்பண்ணமுடியும் என்று நினைத்திருப்போம். ஆனால், இன்றைக்கோ அவர் மறுபடியும் வரப்போவது நிச்சயம் என்று நாம் அறிந்திருக்கிறோம். இந்த நிச்சயத்தைக் கொடுப்பது இயேசுவின் உயிர்த்தெழுதலே! அவர் வரும்பொழுது நியாயந்தீர்ப்பேன் என்கிறார். நியாயத்தீர்ப்பின் நிச்சயமும் இயேசுவின் உயிர்தெழுதலினால் நமக்குக் கிடைக்கிறது. பூமியிலே மரித்தவர்கள், அக்கினிக்கு இரையானவர்கள், கடலுக்கு இரையானவர்கள் அனைத்து மக்களும் உயிரோடு எழும்புவார்கள். எழும்பி சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இயேசுவுக்கு முன்பாக நிற்பார்கள். ஒவ்வொருவர் செய்த காரியங்களும் நினைத்த எண்ணங்களும் அந்தரங்கத்தில் செய்தவைகளும் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும். எழுதப்பட்டதின்படி அன்று நியாயத்தீர்ப்பு நடக்கும். அங்கே இரண்டில் ஒன்றுதான் ஒரு மனிதனுக்கு நடக்கும்; ஒன்று நரகத்திற்கு போ அல்லது மோட்ச சந்தோஷத்துக்குள் வா; இந்த இரண்டுதான். ஒன்று சந்தோஷத்துக்குள் வா என்கிற மீட்பு அல்லது நரகத்திற்குள் தள்ளுண்டு போ என்கிற தீர்ப்பு. இது நிச்சயம்! இந்த நிச்சயம் நமக்கு எதைச் செய்கிறது? நம் வாழ்க்கையை பாதுகாக்க இயேசுகிறிஸ்து வரப்போவது உண்மை. நியாயந்தீர்க்கப்போவது உண்மை என்பதினால் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு காரியம் செய்யும்பொழுது அந்த நியாயத்தீர்ப்பிலே இந்த காரியத்தை நான் செய்தால் எப்படி நிற்பேன் என்கிற பயம் நமக்குள் இருப்பதனால் அது நம்முடைய வாழ்க்கையிலே சரியான பாதையிலே ஒரு பரிசுத்த பாதையிலே நடத்துகிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் இந்த ஒரு காரியத்தையும் நமக்கு தருகிறது.

இந்த உயிர்த்தெழுந்த இயேசு மனிதர்களுக்கு என்ன செய்கிறார்?

முதலாவது, அவர் உயிர்த்தெழுந்ததை தரிசித்தவள் மகதலேனா மரியாள். அவள் கல்லறையண்டையில் நின்று அழுது கொண்டிருக்கிறாள். இயேசுகிறிஸ்து உயிரோடு எழுந்துவிட்டார். அவரால் இவளுடைய கண்ணீரை தாண்டி பிதாவினிடத்திற்கு போகமுடியவில்லை. ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவள்: என் ஆண்டவரை எங்கோ எடுத்துக்கொண்டுபோய்விட்டார்கள் என்றாள். மரியாளே! என்று தன்னை உயிரோடு இருக்கிறவராக இயேசு காண்பித்தார். ஒரு பெண்ணின் கண்ணீரைக் கடந்துபோக முடியாத அன்பின் தேவன் இயேசு. அவர் உங்களுடைய கண்ணீரை அலட்சியம் பண்ணுவாரோ. நீங்கள் தேவனைத் தேடுவதற்கு எவ்வளவு வாஞ்சையாயிருக்கிறீர்களோ உங்களை அவர் திக்கற்றவர்களாக ஒருநாளும் விடமாட்டார். உங்கள் கண்ணீரை துடைத்துவிட்டுதான் அவர் பரலோகத்துக்கு போவார்.

இரண்டாவதாக, சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்ததினால் ஒரு மேலறையிலே கதவுகளை யெல்லாம் பூட்டிக்கொண்டு உள்ளே இருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அங்கே வந்து உங்களுக்கு சமாதானம் என்றார். அவர்களோ, அதற்கு ஏதோ ஒரு ஆவிபோல் இருக்கிறதே; பூட்டிய கதவுகளுக்குள்ளும் இவர் வந்துவிட்டார் என்பதினால் ஆவி என்று நினைக்கிறார்கள். இயேசு சொல்லுகிறார்: எனக்கு இருப்பதுபோல் ஆவிக்கு இராதே, எலும்புகளும் மாம்சமும் ஆவிக்கு இராதே என்று. அது மகிமை யின் சரீரம்! அந்தச் சரீரத்தோடு அவர் வந்தபோது அவர்கள் பயம் நீங்கினது; சீஷர்கள் கர்த்தரைக் கண்டு சந்தோஷமடைந்தார்கள். உயிர்த்தெழுந்த இயேசு இன்றைக்கும் பயத்தில் இருக்கிறவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறார்.

உங்களை வாட்டிக்கொண்டிருக்கும் பயம் என்ன? மரணத்தைக் குறித்த பயமா? இந்த வியாதி என்னை மரணத்திற்குக் கொண்டு போய்விடுமோ என்று பயந்து கொண்டிருக்கிறீர்களோ? என் பிள்ளையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று எதிர்காலத்தைக் குறித்து பயப்படுகிறீர்களோ? அல்லது இவ்வளவுநாளும் நான் தேவனற்றவனாக வாழ்ந்துவிட்டேனே என்னை ஆண்டவர் ஏற்றுக்கொள்வாரா? என்று உங்களுடைய ஆத்தும இரட்சிப்பைக் குறித்து பயந்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களோ? ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். பயத்தை நீக்குகிறவர் இயேசுகிறிஸ்து. அந்த பயத்தை சந்தோஷமாக மாற்றுகிறார் எப்படி? ‘இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறான் என்றார்” (மத்.28:20) அல்லேலூயா!

நீ பயப்படாதே, நான் உன்னுடன் கூட இருக்கிறேன். யோசுவாவினிடத்தில் சொன்னார்: திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசு அவ்விதமாக நம்மோடுகூட இருப்பதினால் நாம் எதற்கும் பயப்படவேண்டிய அவசியமில்லை. உயிர்த்தெழுந்த இயேசு நம்மை திக்கற்றவர்களாக இங்கே விட்டுவிட்டு அவர் பரலோகத்தில் போய் சும்மா இருக்கவில்லை. அவர் நம்முடைய கண்ணீரைக் காண்கிறார். நம்முடைய பயத்தைப் போக்க அவர் இன்றைக்கும் இந்த பூமியிலும் கிரியை செய்கிறார்.

இயேசுகிறிஸ்து சீஷர்களுக்கு தம்மை வெளிப்படுத்தினபொழுது தோமா அங்கே இல்லை. அவன் வெளியே போய் இருந்தான். நாம் தோமாவை நினைக்கும்போதெல்லாம் சந்தேக பேர்வழி என்று நினைக்கிறோம். சீஷர்கள் அனைவரும் பயந்து கதவை பூட்டிக் கொண்டு வீட்டுக்குள் இருக்கிறார்கள். ஆனால் இந்த தோமா ஒருவன் தான் தைரியமாக வெளியே யூதர்களுக்கு நடுவே சென்றிருக்கிறான். அதனால்தான் அவன் இவ்வளவு தூரம் கடந்து வந்து வேறு எந்த சீஷனும் போகாத அளவிற்கு இந்தியாவிற்கு கடந்து வந்தான். அன்றைக்கு தோமாவின் விசுவாசம் பெலவீனமாயிருந்தது.

“மற்றச் சீஷர்கள் கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் … இயேசு தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்”(யோவா.20:25-27).

மூன்றாவதாக, அவர் நம்முடைய அவிசுவாசத்தை அவர் போக்கி நம்மை விசுவாசத்திலே திடப்படுத்துகிறார். நம் கண்ணீரைத் துடைத்து நம்மை திடப்படுத்துகிறார். நமது பயத்தை, அவிசுவாசத்தை நீக்கி நம்மை திடப்படுத்துகிறார். உயிர்த்தெழுந்த இயேசு இன்றைக்கும் நமக்குச் செய்கிற காரியம் இதுதான். “தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக; என் ஆண்டவரே! என் தேவனே! என்றான்” (வச.28). அதற்கு பின்பதாக தோமா இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து கொஞ்சங்கூட சந்தேகப்படவே இல்லை.

நான்காவதாக, பேதுருவை ஆண்டவர் தனியே திடப்படுத்தினார். யோவான் 21:3ஆம் வசனத்தில், பேதுரு மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டபின்பும், பேதுரு நான் பழைய தொழிலுக்குப் போகிறேன். இயேசு இல்லாமல் என்னால் அவரது சீஷனாய் இருக்கமுடியாது என்று நினைத்து மீன்பிடிக்கப் போனான். ஆனால் இயேசு அவனை விடவில்லை. அவர் கடற்கரையிலே கரிநெருப்பை போட்டு அடுப்பை உண்டாக்கி அதிலே மீன்களை பொரித்து வைத்திருந்தார். பாருங்கள்; ஒரு மனிதனை விசுவாசத்திற்குள் கொண்டு வருவதற்காக இயேசு சமையல்காரனாய் மாறி அவனுக்கு இந்த ஆகாரத்தை ஆயத்தம் பண்ணியிருந்தார். கடலிலே குளிரிலே நடுங்கிக்கொண்டிருந்த பேதுருவை சூடான ஆகாரம் திடப்படுத்தியது.

“அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம், ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். … மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்”

பேதுரு சுவிசேஷத்தை பிரசங்கிக்க வேண்டியவன். மனுஷரைப் பிடிக்கவேண்டியவன்; மீனைப்பிடிக்க வந்திருக்கிறான். அவனுக்குள்ளே ஒரு குற்ற உணர்வு இருக்கிறது, மூன்று தரம் மறுதலித்தேன்; மறுபடியும் நான் அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டேன், நான் அவரை விட்டுவிட்டேன் என்று கலங்கிக் கொண்டிருந்த பேதுவினிடத்திலே, என் ஆட்டுக் குட்டிகளை மேய்ப்பாயாக; என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லி தேவன் அவனுக்கு பெரிய பொறுப்பைக் கொடுக்கிறார்.

ஏற்கனவே பேதுருவைக் குறித்து சொல்லியிருந்தார்: இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை என்றும், இதோ பரலோகத்தின் திறவுகோலை உனக்குத் தருகிறேன் என்றும் சொல்லியிருந்தார். ஆனாலும் குற்ற உணர் வோடுகூட இருந்த அவனைப் பார்த்து இயேசு மேலும் ஒரு பொறுப்பைக் கொடுத்து அவனது குற்ற உணர்வை நீக்குகிறார். இந்த அன்பின் தேவன் நீங்கள் இன்றைக்கு எந்தப் பாவத்தைக் குறித்து குற்ற உணர்வோடு இருக்கிறீர்களோ, வாலிபத்தில் செய்த பாவமோ அல்லது முதிர் வயதில் பிறரை ஏமாற்றி அபகரித்ததினால் உள்ளத்திலே சமாதானம் இல்லையோ, குற்ற உணர்வு உங்களுக்குள் இருக்கிறதோ, இந்த குற்ற உணர்வை இயேசு ஒருவர்தான் மாற்ற முடியும். அவரது அன்பு ஒன்றுதான் உங்களை குற்ற உணர்விலிருந்து தூக்க முடியும்.

ஐந்தாவதாக, உயிர்த்தெழுந்த இயேசு மனிதருக்கு செய்கிற காரியம் என்னவெனில், குற்ற உணர்வில் இருக்கிறவர்களை தூக்கியெடுத்து, “பயப்படாதே, உன் பாவத்தையெல்லாம், உன் தப்பிதங்களையெல்லாம் என் முதுகுக்குப் பின்னால் எறிந்துவிட்டேன்; சமுத்திரத்தின் ஆழத்தில் போட்டுவிட்டேன், இனி நான் நினைப்பதில்லை” என்று சொல்லி திடப்படுத்துகிறார். உயிர்த்தெழுந்த இயேசு சீஷர்களை மாத்திரமல்ல; நம் எல்லோரையும் திடப்படுத்துகிறார்.

“அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ் சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்” (வெளி.12:10).

பிசாசு பிதாவினிடத்திலே நம்மைக் குறித்து அவன் ஓயாமல் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறான். நீர் இவனுடைய சிந்தனையைப் பார்க்கிறீர். இவன் அந்தரங்கத்தில் இதை செய்துகொண்டிருக்கிறான். ஆலயத்துக்கு வருகிறான், காணிக்கை கொடுக்கிறான்; ஆனால் எங்கேயோ பிசாசினிடத்திலே குறி கேட்கப்போகிறான் என்று சொல்லி ஒவ்வொரு வரைக்குறித்தும் அங்கே குற்றஞ்சாட்டிக்கொண்டே இருக்கிறான். ஆனால் நமது ஆண்டவர் நம்மை அப்படியே விட்டுவிடுவதில்லை. அவர் நம்மை நேசிக்கிறார். நமக்கு எப்படியும் சாத்தானிடத்தில் ஜெயம் வேண்டும். அதற்காக அவர் என்ன செய்கிறார் என்பதை யோவான் கூறுவதைப் பாருங்கள்: “என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ் செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார்” (1யோவான் 2:1-2). பிசாசு நம்மீது குற்றஞ் சாட்டும்போது அவர் நமக்காக வாதாட வக்கீலாக அவர் இருக்கிறார். இன்றைக்கும் அந்த ஊழியத்தை அவர் செய்துகொண்டே இருக்கிறார். உயிர்த்தெழுந்த இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் பரலோகத்தில் பல காரியங்களைச் செய்துகொண்டு இருக்கிறார்.

இறுதியாக, அவர் உயிர்த்தெழுந்ததினால் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனை அனுப்பி நம்மை திடப்படுத்துகிறார். இந்த உயிர்த்தெழுதலை நீங்கள் விசுவாசிப்பீர்களா?

தேவனிடத்தில் சேருங்கள்! அவர் உங்களை உயர்த்துவார்!!

சத்தியவசனம்