விடுவித்தாலும் விடுவிக்காமற் போனாலும்….

சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2017)

“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,  உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” (யாக்கோபு 1:2,3)

பசுபிக் சமுத்திரத்தில் ஏறத்தாழ 26,000 அடிகள் ஆழத்திலுள்ள மரியானா அகழ்விலே இதுவரையிலும் யாராலும் கண்டுபிடிக்கப்படாத விநோதமான தோற்றத்தைக் கொண்ட ஒரு ஜாதி மீனைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம் விஞ்ஞானிகள். தேவனுடைய படைப்பின் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் கண்டுபிடிப்பதில் மிகுந்த பிரயத்தனம் எடுக்கின்ற மனிதன், தன்னைத்தானே கண்டுகொள்ள முடியாதிருக்கிறானே என்பது எல்லாவற்றிலும் மேலான அதிசயம் அல்லவா! விநாடிக்குவிநாடி அதிசயங்களை உருவாக்குவதைச் சவாலாக எண்ணிச் செயற்படுகின்ற மனிதன், தனக்குள் இருப்பது என்ன, இந்த வாழ்வின் அதிசயம் என்ன, தனக்கு நேரிடுகின்ற சம்பவங்கள் எதற்காக என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவது ஏன்?

ஒரு மாபெரும் கட்டடக் கலைஞர், ஒரு அசைகின்ற பெரிய மாடிக் கட்டிடத்தை வடிவமைத்திருக்கிறாராம். அந்த பிரதிபிம்பத்தைப் பார்க்கும்போது கட்டடம் மாத்திரமல்ல, தட்டுகள்கூட அசைவதுபோலத் தெரிகிறது. ஒவ்வொரு தட்டையும் விரும்பிய திசைக்குத் திருப்பமுடியும் என்று சொல்லப்படுகிறது. இக்கட்டடம் எழும்பினால் இது மாபெரும் அதிசயமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு நிமிடமும், விநாடியும் உலகம் காணாத அதிசயங்களை உருவாக்குவதைச் சவாலாக எண்ணிச் செயற்படுகின்ற மனிதன், தனக்குள் இருப்பது என்ன, வாழ்வில் என்னதான் நடக்கிறது, வாழ்வின் இரகசியம்தான் என்ன, தனக்கு நேரிடுகின்ற சம்பவங்கள் எதற்காக என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுவது ஏன்?

பல நவீனங்கள் தோன்றினாலும், பல கண்டுபிடிப்புகளைச் சாதித்தாலும், மனிதன் அன்றும் இன்றும் குழப்பத்துக்குள்தான் இருக்கிறான். ‘ஏன்’ ‘எனக்கு ஏன்’ ‘எதற்கு’ ‘நான் என்ன பாவம் செய்தேன்’ என்பதுபோன்ற கேள்விகள் இன்னமும் மனிதனுக்குள் எழுந்து அவனை வேரறுத்துக்கொண்டேதான் இருக்கிறது. வாழ்வில் சோதனைகளும் வேதனைகளும் வரும் என்பது நாம் அறிந்த உண்மை. இருந்தும் அப்படிப்பட்ட சமயங்களில் அதனை மேற்கொள்ளமுடியாமல், தடுமாறித் தவித்து வாழ்க்கையையே வெறுத்து விடுமளவுக்கு இன்னமும் மனிதனின் இயல்புநிலை இருப்பது துக்கத்துக்குரிய விஷயம். ஏதேனிலே மனிதன் தனக்குள் தானே ஆரம்பித்துவைத்த போராட்டம் இன்னமும் மனுக்குலத்தின் சரித்திரத்தில் தொடரத்தான் செய்கிறது.

பரீட்சிக்கப்படவேண்டிய விசுவாசம்

ஆனால், போராட்டங்களும் சோதனைகளும்தான் நமது விசுவாசத்தின் ஊன்று கோல்கள் என்றால் மிகையாகாது. ஒரு குழந்தையின் மூன்றாவது பிறந்தநாளன்று அழகான பெரிய கேக் ஒன்று வாங்கிக்கொண்டு போனாராம் ஒரு போதகர். அதனைப் பார்த்த குழந்தையின் தகப்பன், ‘இன்று காலையில் எங்களது குழந்தை, ‘இயேசப்பா இன்று எனக்குப் பிறந்தநாள். ஆனால் கேக்தான் இல்லை. ஆனாலும் பரவாயில்லை இயேசப்பா ஸ்தோத்திரம்’ என்று ஜெபித்தாள் என்று சொன்னாராம். இதை அறிந்திராத போதகர் இப்போ பெரியதொரு கேக்குடன் சென்றிருக்கிறார். இந்தச் சம்பவத்தைக்குறித்து அந்தப் போதகர் பகிர்ந்து கொண்டபோது, “இக்குழந்தையின் ஜெபத்தின் முன்னால் நான் வெட்கப்படுகிறேன். சமீபத்திலே நான் பலத்த வியாதிக்குள்ளாகி இருந்தபோது, இப்படிப்பட்ட ஒரு விசுவாச ஜெபத்தை என்னால் செய்ய முடியவில்லையே என்று நான் வருந்துகிறேன்” என்றார்.

‘நான் விசுவாசிக்கிறேன், நம்புகிறேன்’ என்று சொல்லுவதால் விசுவாசம் உண்டாவதுமில்லை; அது இருப்பது உண்மையாகிவிடுகிறதுமில்லை. சோதனைக்குட்படுத்தப்படாத விசுவாசம் விசுவாசமும் அல்ல. சோதனைகளிலும், பாடுகளிலும் அசையாமல் சாட்சியாய் நிற்கும் விசுவாசமே விசுவாசம். “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது … அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்கிறார் யாக்கோபு (யாக்.1:2,3). இது சாத்தியமா? அந்த ஏழைக் குழந்தைக்கு இது சாத்தியமானபோது, நமக்குச் சாத்தியமாகாமற் போவது எப்படி?

வைரம் ஏறிய விசுவாசம்:

கி.மு. 600ஆம் ஆண்டளவில் நடந்த ஒரு சம்பவம் இன்றும் நமக்கு சவாலாயிருப்பதை மறுக்கமுடியாது. நேபுகாத்நேச்சாரின் ராஜ கெம்பீரம் அவன் அமர்ந்திருந்த சிங்காசனத்திற்கு அழகூட்டியதா? அல்லது ராஜாவின் அதிகாரம் சிங்காசனத்திற்கு மதிப்பளித்ததா தெரியவில்லை. ராஜசமுகத்தில் ஏராளமான போர்வீரர் காவலாளர்கள் ஒருபுறம்; மறு புறத்தில் ஏராளமான மக்கள் குவிந்து நிற்கிறார்கள். அறுபது முழம் உயரமும், ஆறு முழம் அகலமுமான பொற்சிலை ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பிரதிஷ்டைக்கு ஏராளமான அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்தனர். காரியம் இதுதான். கீதவாத்தியங்கள் இசைக்கப்படும்போது, எல்லோரும் தாழ விழுந்து அந்தப் பொற்சிலையை வணங்கவேண்டும். “எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்து கொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச் சூளையின் நடுவிலே போடப்படுவான்” (தானியேல்3:6) என்று ராஜா கட்டளை கொடுத்துவிட்டான்.

எல்லாம் கட்டளைப்படியே சரியாய் நடந்தது. ஆனால், ‘நீர் பதவியில் இருத்திய மூன்று வாலிபர்கள் உம்மை மதிக்கவில்லை. அவர்கள் அந்தப் பொற்சிலையை நீர் சொன்னதுபோல வணங்கவில்லை’ என்று ராஜாவிடம் ஒரு புகார் வந்தது. ராஜா உக்கிர கோபமடைந்தான். அந்த மூன்று வாலிபர்களையும் அழைப்பித்து, இன்னுமொரு தருணம் கொடுத்து, இதையும் தப்பவிட்டால், ‘உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார்’ என்று சூளுரைத்தான் ராஜா. ஆனால், அவர்களோ, ‘இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை’ என்று சொல்லி, தாங்கள் ஆராதிக்கிற தேவன் தங்களை விடுவிக்க வல்லவர் என்றும், ‘விடுவியாமற்போனாலும், … நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வதில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது’ என்று உறுதியாகப் பதிலளித்தார்கள். இவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்தத் தைரியம்?

அக்கினிச் சூளை ஏழு மடங்கு அதிகமாக்கப்பட்டது. குற்றவாளிகளாகக் காணப்பட்ட மூன்று வாலிபர்களும் கட்டப்பட்டவர்களாக நிற்கிறார்கள். அருகிலே காவலாளர்கள். ‘இந்த வாலிபருக்குப் பைத்தியமா? ஒரு தடவை இந்தச் சிலையை விழுந்து வணங்கினால் குறைந்தாபோவார்கள். யார் பெற்ற பிள்ளைகளோ?’ நாம் அன்று அங்கே நின்றிருந்தால் இப்படித்தான் பேசியிருப்போம். ஆனால் வாலிபர்கள் அக்கினியின் நடுவிலே போடப்பட்டார்கள். போட வந்தவர்கள் எரிந்துபோனார்கள். வாலிபர்களோ அக்கினி நடுவிலே சேதமின்றி நின்றார்கள். மூன்று பேர்கள் போடப்பட்டனர்; சேதமுறாத இவர்களுடன் நாலாவது நபர் ஒருவர் உலாவுதை ராஜாவே கண்டான். சோதிக்கப்பட்ட விசுவாசம் கண்ட வெற்றி இது!

உங்கள் முன் வைக்கப்படுகின்ற கேள்விகள் இவைதான்:

1. சிறையிருப்பில் இருந்தும், மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி தங்களைக் கனப்படுத்திப் பணித்த ராஜாவை எதிர்க்கு மளவுக்கு அந்த வாலிபருக்குத் துணிச்சல் எங்கிருந்து வந்தது?

2. இந்தச் சூழ்நிலையிலும் அந்த வாலிபர் தங்கள் உயிருக்கும் பயப்படாமல் நின்றது எப்படி?

3. அக்கினியில் எறியப்படாமல் கர்த்தர் ஏன் தனது தாசர்களைக் காப்பாற்றவில்லை?

இந்த வாலிபரும் நண்பன் தானியேலும் ஒன்றிணைந்து, ஆரம்பத்திலிருந்தே தேவனுக்கு விரோதமாக எந்தவிதத்திலும் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடிக்குத் தீர்மானம் எடுத்து செயற்படுத்தி வந்தனர். அத்தீர்மானத்திலிருந்து அவர்கள் அசையவேயில்லை. ஆகவே அவர்கள் ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருந்தார்கள் என்பதை நாம் உணரவேண்டும். அதனால் தான் மரண பயமுறுத்தலால்கூட அவர்களை அசைக்க முடியவில்லை.

அவர்களைக் காப்பாற்றவும், தமது மகா வல்லமையை வெளிப்படுத்தவும் தேவனுக்குப் பல வழிகள் இருந்தன. வானம் இடி இடித்து நடுங்கியிருக்கலாம். மழை கொட்டியிருக்கலாம். நெருப்பு அணைந்திருக்கலாம். ராஜாவின் மனம் மாறியிருக்கலாம். இன்னும் எத்தனையோ. ஆனால் கர்த்தரோ மவுனமாயிருந்தார். தேவஞானத்தை நம்மால் அளவிடமுடியுமா?

இந்த வாலிபரும், ‘உயிருடன் இருந்தாற்தானே தேவனுக்கு ஊழியம் செய்யலாம்’ என்று சாக்குச்சொல்லி சிலையை ஒருதரம் விழுந்து வணங்கி அக்கினியைத் தவிர்த்திருக்கலாம். அன்று மாத்திரம், ‘தேவனுடைய பிள்ளைகள் நமக்கா இந்தச் சோதனை?’ என்றெல்லாம் கேள்விகேட்டு, பின்வாங்கி, சிலையை வணங்கி, அந்த வாலிபர்கள் அக்கினிச் சூளைக்குத் தம்மைத் தப்புவித்திருந்தால், இவர்கள் அந்த நாலாம் நபரின் உறவைப் பெற்றிருப்பார்களா? அந்த ராஜாதான் அந்த நாலாவது நபரைக் கண்டிருப்பானா? அந்த வாலிபரின் வாழ்விலே தேவன் மகிமைப்பட்டிருப்பாரா? அவர்களின் விசுவாசம் இன்னமும் வைரமாக உறுதிப்பட்டிருக்குமா? ‘இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை’ என்று நேபுகாத்நேச்சாரினால் அறிக்கை பண்ணத்தான் முடிந்திருக்குமா?

‘விடுவிப்பார், விடுவியாமற்போனாலும்…’ இதுதான் அன்று அவர்களது அறிக்கை. அதாவது தேவன் விடுவிக்க வல்லவர். ஆனால், அக்கினியில் வெந்து கருகித்தான் தேவநாமத்தை மகிமைப்படுத்த வேண்டுமானாலுங்கூட தேவனைத் தவிர வேறொருவரையும் வணங்கமுடியாது என்றார்களே. அங்கேதான் அந்த வாலிபரின் விசுவாசம் பொன்னாய் விளங்கியது. அவர்கள் அக்கினியிலே போடப்பட்டிராவிட்டால் பொன்னாய் விளங்கின அவர்களுடைய விசுவாசத்தின் வைரம் போன்ற உறுதி நிரூபணமாக வாய்ப்பும் இருந்திராது. அவர்கள் ஒரு அடி எடுத்து வைத்தார்கள். தேவன் அடுத்த அடியிலே அவர்களுடனே நின்றார். இதுதான் விசுவாசம்.

இயேசு சந்தித்த அக்கினிச்சூளை

நமது ஆண்டவராகிய இயேசு ஏழு அல்ல; ஏழெழுபது மடங்கு பற்றியெரிந்த அக்கினிச் சூளைக்கு முன்னே நிறுத்தப்பட்டார். அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இழிவான, கேவலமான சிலுவைக்கு முன்னே நிறுத்தப்பட்டார். “பிதாவே. எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும்” (மாற்கு 14:36) என்று சிலுவைக்குப் போகும் முன்னர் ஜெபித்த ஜெபத்தில் கலங்கி நின்ற இயேசுவின் உள்ளம் தெரிகிறது. ஆனால், “ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று தன் ஜெபத்தை முடித்தபோது, அவரது முழுமையான அர்ப்பணம் வெளிப்பட்டது. பிதாவின் சித்தம் ஒன்றைத்தவிர, அதாவது சிலுவையில் தன் ஜீவனைக் கொடுப்பதற்கென்றே பிதாவினால் தாம் அனுப்பப்பட்டு வந்ததைத்தவிர தமக்கு வேறெதுவுமே இந்த உலகில் இல்லை என்று சொல்லி, அதை நிறைவேற்றினார் இயேசு. அன்று இயேசு அந்தச் சிலுவை மரணத்தை ஏற்றிராவிட்டால், மரணத்தின் கூரை ஒடிக்கின்ற தேவ வல்லமையை இந்த உலகம் கண்டிருக்குமா? இயேசு, ‘ஏன்’ ‘எனக்கா’ என்று கேள்வி கேட்கவில்லை. தம்மை ஒப்புக்கொடுத்தார்; ஜெயம் பெற்றார்.

மிகுந்த சந்தோஷம்:

நாம் தேவனுக்காக நிற்கும்போது அவர் நமக்காக நிச்சயம் நிற்பார். இது சத்தியம். மாத்திரமல்ல, இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: தேவன் தமது பிள்ளைகளை ஆயத்தம் செய்யாமல் விசுவாசப் போருக்கு அனுமதிக்கிறவரே அல்ல. சோதனையோ வேதனையோ எல்லாத் தருணங்களையும், நம்மைத் தமக்குள் பெலப்படுத்தவும், விசுவாசத்திலே நாம் ஆழமாக வளரவும் தேவன் பயன்படுத்துகிறார். நமக்கு இன்று அந்த ஏழு மடங்கு அக்கினி இராது. ஆனால் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு அடியிலும் நாம் அக்கினி சோதனையைச் சந்திக்கிறோம். அவற்றை ஒரு தருணமாக எடுத்துக்கொண்டு, அந்தச் சூழலிலே நாம் தேவனுக்குள் ஜெயம் எடுத்து தேவனை மகிமைப்படுத்துவோமானால் அதைப் போன்றதொரு சந்தோஷத்தை நாம் எங்குமே காணமுடியாது. இது சொல்லியல்ல; அனுபவித்துப் பார்க்கவேண்டியது.

புதிய குச்சி விறகுகளைப் பார்க்கிலும் ஏற்கனவே எரிக்கப்பட்டு, அணைக்கப்பட்டு, கரியான நுனிகளைக்கொண்ட குச்சிகள், விறகுகள், இலகுவில் நெருப்புமூட்ட உதவும் அல்லவா! அதுபோலவே, ஏற்கனவே வாழ்வில் பலவிதங்களிலும் பயிற்றுவிக்கப்பட்டிருப்போமாயின், என்ன கடின சோதனைகள் வந்தாலும் நாம் கலங்கமாட்டோம். வாழ்க்கையில் பற்றியெரியும் அக்கினிச் சூளையானது, நமது விசுவாசம் இன்னும் ஊன்றிக்கட்டப்படுவதற்காக அளிக்கப்படுகின்ற வாய்ப்புகள் என்பதை உணர்ந்து பொறுமையுடன் அவற்றை ஏற்போமாக. அப்போது, உயிர்தான் போனாலும் நாம் பின்வாங்கமாட்டோம். அங்கேதான் பொன்னான நமது விசுவாசத்தின் பெறுமதிப்பு விளங்கும். கஷ்ட துன்பங்கள் வந்தால் வரட்டுமே; வராது போனால் எப்படி நாம் ஜெயிக்க முடியும்!

விடுவியாமற்போனாலும்….

அன்று அந்த வாலிபர்களுக்கு இல்லாத அவர்கள் அறியாத ஏராளங்கள் இன்று நமக்கு உண்டல்லவா! இயேசு, தேவனுடைய வார்த்தை, ஆராதனைகள், சிலுவைப்பலி, இயேசு சிந்தின இரத்தம், பாவமன்னிப்பு, சிலுவையில் அளிக்கப்பட்ட மீட்பு, மரணத்தின் கூர் ஒடிந்தது, பாதாளம் ஜெயமாக விழுங்கப்பட்டது. நித்தியவாழ்வு எல்லாமே நமக்குத் தெரியும்.

இப்படியிருக்க, நாம் தள்ளாடுவது ஏன்? தபசு நாட்கள் முடிய, பெரிய வெள்ளி, உயிர்த்த ஞாயிறு என்று பல நிகழ்வுகளுக்குள் கடந்துபோக இருக்கிறோம். இவைகளெல்லாம் வெறும் நிகழ்வுகள்தானா? அன்று இயேசு வினிடத்தில் சாத்தான் பேசினான். ‘இங்கே யாருமே இல்லை. நீர் சிலுவைக்கும் செல்ல வேண்டிய அவசியமும் நேரிடாது. ஒரேயொரு தடவை என்னை விழுந்து வணங்கும்’ என்றான். ‘அப்பாலே போ சாத்தானே’ என்ற ஒரே வார்த்தையில் இயேசு அன்றைக்கே மரணத்தை ஜெயமாக்கிவிட்டார்! அவர் சிலுவை மரணத்தை மனப்பூர்வமாக ஏற்றிராவிட்டால், இன்று நமது விசுவாசம் வீணாயிருக்குமே! மரணத்தில்தான் உயிர்த்தெழுதல் வலுப்பெறுகிறது.

இப்படியிருக்க, சோதனைகள், துன்பங்கள் வியாதிகள் தாக்கும்போது நாம் தடுமாறுவது ஏன்?

‘விடுவிப்பார், விடுவியாமற்போனாலும் ….’ ‘சுகம் தருவார், தராமற்போனாலும்……’, ‘பிழைப்பேன், பிழைக்காமற்போனாலும்…’ நம்மால் சொல்ல முடியுமா?

இயேசு சுமந்த சிலுவை, சிலுவையில் இயேசு சிந்திய இரத்தம், அந்த இரத்தம் தந்த மீட்பு இவற்றிற்கு நாம் வாழ்வில் எந்த இடத்தைக் கொடுத்திருக்கிறோம்? நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அக்கினிச் சூளையை நமக்கு ஞாபகப்படுத்தட்டும். உலகம் நம்மை இலகுவான சொகுசான இன்பமான வாழ்வுக்கு அழைக்கிறது. நாம் என்ன சொல்லப்போகிறோம்?

நமக்குள் விசுவாசம் இருப்பது உண்மையானால், இயேசுவுக்காய் வைராக்கியமாக எழுந்து சாட்சி சொல்லுவோமா! ஏன் என்ற கேள்வியை விடுத்து, ‘ஆண்டவரே என்னையும் பயன்படுத்தும்’ என்று தேவன் பாதம் சரணடைவோமாக.

சத்தியவசனம்