விசுவாசியின் ஆவிக்குரிய போராட்டம்

Dr.தியோடர் எச்.எஃப்.
(மார்ச்-ஏப்ரல் 2017)

5. கால்களுக்கு பாதரட்சை (எபேசி. 6:14-17)

எபேசியர் 6ஆம் அதிகாரத்தில் பவுல் குறிப்பிடும் சர்வாயுதவர்க்கத்தின் மூன்றாவது பாகம் “சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்” (வச.15). இந்த வசனம் சாதாரணமாக விசுவாசி சமாதானத்தின் நற்செய்தியை எங்கும் அறிவிக்க ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது. ரோமர்10:15 இதற்கொப்பான வசனம் என்று கூறப்படுகிறது: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள்!”.

எனினும், “என்னுடைய கருத்து எபேசியர் 6:15, இருதயத்தில் சமாதானம் பெற்றிருத்தல் என்பது சமாதானத்தைப் பிரசங்கிப்பதைவிடச் சிறந்தது என்பதாகும்” என்று பவுல் கூறுகிறார். இது இந்தச் சந்தர்ப்பத்துக்கும் பொருத்தமானது. ஆவிக்குரிய போராட்டத்தில், சாத்தான் நம்முடைய இருதயத்தின் சமாதானத்தைக் குலைக்கப் புறப்படுகிறான். சாத்தான் நம்மைக் காரியங்களைச் சந்தேகப்படும்படி தூண்டுகிறான். அதனால் நமக்குப் பயமும், நடுக்கமும் ஏற்படுகிறது. எனவே நமது ஆத்துமா குழப்பமடைகிறது. எனவே இந்தச் சர்வாயுதவர்க்கம் நமக்குத் திடமான வாழ்க்கையையும், சமாதானத்தையும் தரவேண்டும். எபேசியர் 2:14 இப்படிக்கூறுகிறது: “எப்படியெனில், அவரே நம்முடைய சமாதானக் காரணராகி இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து..”. இன்னும் அநேக வேதவசனங்கள் சமாதானத்தைப் பற்றிக்கூறுகின்றன. யோவான் 14:27 இயேசுவின் வாக்குறுதியை நேரடியாய் நமக்குக் கூறுகின்றது. “சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், பயப்படாமலும் இருப்பதாக.” மேலும் இயேசு கூறியதாவது: “என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்” (யோவான் 16:33). இவ்விதமாக இயேசுவே சமாதானமாக இருப்பதைக் காண்கிறோம். நாம் இயேசுவை நமக்குள் பெற்றுக்கொள்ளும்போது நமக்கு உண்மையான சமாதானம் கிடைத்துவிடுகிறது. நம்முடைய ஆத்துமாவின் குழப்பம் மறைந்துபோகிறது.

புதிய ஏற்பாட்டில் இரண்டுவகையான சமாதானங்கள் பேசப்படுகின்றன. அவை: ‘தேவனுடன் சமாதானம்; தேவனுடைய சமாதானம்’.

தேவனுடன் சமாதானம் குறித்து ரோமர் 5:1 இல் காண்கிறோம். “இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப் பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்”. நாம் பாவத்தை விட்டு விலகி இயேசுகிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது இந்த சமாதானம் நமக்குக் கிடைக்கும். அந்தத் தீர்மானம் எடுக்கும் அதே வேளையில் நாம் தேவனுடைய பிள்ளைகளாகவும் ஆகிவிடுறோம். இயேசு நமது பாவங்களின் பிராயச்சித்தத்தைச் செலுத்திவிட்டபடியால், நாம் இயேசுவை ஏற்றுக்கொண்ட உடனேயே தேவனுடன் சமாதானமாகி விடுகிறோம்.

2கொரிந்தியர் 5:18 கூறுகிறது: “இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு, நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்”. தேவனோடு சமாதானம் என்பது அப்போஸ்தலர் 10:36 இலும் கூறப்பட்டுள்ளது. “எல்லோருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக் கொண்டு, அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே!”. தேவனோடு நமக்குள்ள சமாதானத்தை இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம். இந்தச் சமாதானம் தேவனோடு நிரந்தரமானதும், உறுதியானதுமாகும். சாத்தானுடைய தாக்குதல்கள் இதைச் சேதப்படுத்த முடியாது.

தேவனுடைய சமாதானத்தைக் குறித்து வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கிறோம். பிலிப்பியர் 4:6,7 வசனங்கள் இவ்வகையான சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறது. “நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்”. இயேசுவை நமது இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவதன் மூலம் நாம் தேவனோடு ஐக்கியம் கொண்டு ஒன்றாய் இணைந்து விடுகிறோம். தேவனுடைய சமாதானம் அனுபவித்து அறியும் சமாதானமாய் இருக்கிறது.

விசுவாசிகளின் வாழ்க்கை:

விசுவாசிகளின் வாழ்க்கைக்கும் அவிசுவாசிகளின் வாழ்க்கைக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. ஏசாயா 57:20,21 வசனங்களில் கூறுவதைப் பாருங்கள். “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக்கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்கு சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்”. அவிசுவாசிகளுக்கு தேவனோடு சமாதானம் இல்லாதபடியால், அவர்களால் தேவனுடைய சமாதானத்தை அனுபவிக்கவும், அறியவும் முடியாது. தேவனுக்கிருக்கும் சமாதானம் எத்தகையது என்று சிந்தித்துப் பாருங்கள். அவரை அசைக்கவோ, கவிழ்க்கவோ, சீர் குலைக்கவோ எவராலும், எதனாலும் முடியாது. நாம் பரிபூரணமாக எல்லாவற்றுக்கும் அவரை நம்புவோமானால் இத்தகைய சமாதானத்தை நாமும் அனுபவிக்கலாம்.

இயேசு தமது மக்களுக்கு இந்தச் சமாதானம் வேண்டும் என்று விரும்புகிறார். பத்மு தீவில் யோவானுக்கு இயேசுகிறிஸ்துவைக் குறித்த ஒரு வெளிப்பாடு காட்டப்பட்டபோது யோவான் இப்படிக் கூறினான்: “நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” (வெளி. 1:17,18).

மேலும் இயேசு தம்மைக்குறித்து இப்படிக் கூறினார்: “இருக்கிறவரும், இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அலஃபாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம் பற்றுகிறார் (வெளி.1:8). இயேசுவைப்பற்றிய இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கும்போது, நாம் அவரது ‘சர்வவல்லமை’யைக் காண்கிறோம். எவரும், எந்த சக்தியும் அவரை மேற்கொள்ள முடியாது என்று அறிகிறோம். இப்பொழுது அவர் தமது விருப்பங்களுக்கு மாறான சில காரியங்கள் பூமியில் நடைபெறும்படி அனுமதிக்கிறார். ஆனால் இயேசுகிறிஸ்துவே இந்த உலகத்தில் தேவனுடைய இராஜ்யத்தை நிலைநாட்ட வரப்போகிறார். இந்த உலகில் இப்பொழுது நடைபெறும் காரியங்களைக் கண்டு அவர் பாதிக்கப்படவில்லை. அவற்றைக் கண்டு விசுவாசியும் திகைப்படையவேண்டாம். மனிதனால் அதைப் புரிந்து கொள்ளமுடியாது. தேவன் பார்ப்பதுபோல நம்மால் எதிர்காலத்தைப் பார்க்க முடியுமானால், நமக்குக் கேட்க எந்தக் கேள்வியும் இராது. அதனால் நாம் கண்டு நடவாமல், விசுவாசித்து நடக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.

நமக்கு தேவனுக்குள் இருக்கும் பாதுகாப்பை உணரும்போது, தேவனுடைய சமாதானத்தை அனுபவித்து மகிழுவோம். இயேசு கூறினார்: “என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:27-29). எனவே விசுவாசிகளிடம் பவுல், “சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சைகளை” காலில் தொடுத்துக்கொள்ளச் சொல்லும்போது, தேவனோடு சமாதானம், தேவனுடைய சமாதானம் ஆகிய இரண்டையும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறினார். ஏனென்றால் இயேசுகிறிஸ்துவே இரட்சகர் என்று அறிந்து, ஏற்றுக்கொண்டிருக்கிறவர்களால் இது முடியும். நாம் தேவனோடு சமாதானம் அடையவேண்டும் என்பதற்காகக் கிறிஸ்து சிலுவையில் மரித்தார். அதன் மூலம் தேவனுடைய சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுவோம். பரிசுத்த ஆவியின் மூலம் இந்தச் சமாதானம் நம்முடைய இருதயங்களில் காக்கப்படும்.

எபேசியர் 6:15ஆம் வசனம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்படலாம். சமாதானத்தைத் தொடர்புபடுத்தி கால்கள் – பாதங்கள் குறிப்பிடப்படக் காரணம் என்ன? கால்களும் பாதங்களும் நமது சஞ்சாரத்துக்கு அடிப்படை. நமது நடமாடுதலையும், அன்றாட வாழ்க்கையையும் குறிப்பிடுவதற்காகப் பாதம் கூறப்பட்டது எனலாம். இங்கே இயேசு குறிப்பிடப்பட்டிருப்பது தேவன் அவர் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமாதானம் கொடுப்பதற்காகவேயாகும். அன்றாட வாழ்க்கைப் பாதையில் ‘பயம்’ ஏற்படுத்தும் பல சூழ்நிலைகள் ஏற்படும். கடைசிக்காலத்தின் அடையாளங்களில் பயம் ஒன்றாகும். இந்தக் கடைசிக் காலத்தைக் குறித்து இயேசு விவரித்துக்கூறும்போது, “வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்” (லூக்.21:26).

மக்களிடத்தில் ஏற்படும் பயம், கவலை ஆகியவை உலகெங்கும் பரவிவிடும். ஆதலால் இயேசுகிறிஸ்துவின் மூலமாக சமாதானம் பெற்றிருக்கிறவன் பயப்படவும் கவலைப்படவும் தேவையில்லை. காரியங்கள் எப்படித் திரும்பும் என்று நமக்குத் தெரியாவிட்டாலும் நாம் நம்முடைய கவலைகள் யாவையும் ஆண்டவரின்முன் சமர்ப்பிக்கவேண்டும். ஏனென்றால் அவர் நம்மை விசாரித்து, நன்மைகளைத் தந்து, கவலைகளைப் போக்குகிறவர் (1பேது.5:7).

எபேசியர் 6:15 இல் ‘ஆயத்தம்’ என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் சொல்லின் பொருள், ‘தயாராக இருத்தல்’ என்பதாகும். இந்த வார்த்தையைக் குறித்து ஆ.சு.வின்சென்ட் இப்படிக் கூறுகிறார்: கிரேக்க மொழிச் சொல்லின் பொருள் உறுதியான அஸ்திபாரம், நிலைவரப் படுத்துதல் என்பன. இச்சந்தர்ப்பத்துக்கு இப்பொருள் பொருத்தமானவை “உறுதியான அடித்தளமிடுதல்” புதிய ஏற்பாட்டுச் சொல் ஆராய்ச்சி என்னும் நூலில் 867 ஆம் பக்கத்தில் இது உள்ளது. எனவே சமாதானம் என்னும் உறுதியான அடித்தளத்தின் மீது நின்று கொண்டு தீமைகளும், முரண்பாடுகளும் நிறைந்த இந்த உலகில் சமாதானத்தின் நற்செய்தியை எடுத்துக்கூற முடியும்.

ஆழமாக, உறுதியாக அமர்ந்துள்ள சமாதானத்துடன் எப்பக்கத்திலும் இருந்துவரும் சத்துருவாகிய சாத்தானை உண்மையான தன்னம்பிக்கையுடன் நாம் எதிர்கொள்ள முடியும். சங்கீதக்காரன் இந்தத் தன்னம்பிக்கையை அனுபவத்தில் உணர்ந்திருக்க வேண்டும். எனவேதான் அவன் இப்படி எழுதியுள்ளான். “நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார்” (சங்.127:3). சங்கீதக்காரன் மேலும் கூறுவதைப் பாருங்கள். “உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை” (சங்.119:165).

நாம் ஒவ்வொரு நாளையும் தனித்தனியாக வாழப் பழகவேண்டும். ஒவ்வொருநாளும் நம்முடைய கவலைகள், மன இறுக்கங்கள் இவைகளை மேற்கொண்டு வெற்றிகளை தேவனுடைய அருளைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவேண்டும். நம் எதிர்கால பிரச்சனைகளை ஆண்டவரிடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஏனென்றால் நம் வாழ்வின் எதிர்காலத்தில் என்னென்ன நடக்கப்போகிறது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். தேவன் மீது நாம் முழுவதுமாக நாள் முழுதும் சார்ந்திருக்கவேண்டும் என்று இயேசு கூறினார். மத்தேயு 6:25இல் “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?” என்றும் இயேசு கூறினார். இப்படிக் கூறியதன் மூலம் உங்கள் எதிர்காலத்துக்காக கவலைப்படாமலும் திட்டமிடாலும் இருக்கச் சொல்லவில்லை. ஆனால் நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத எதிர்காலம். அது தேவனுடைய கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்கிறது. எனவே நீங்கள் அதைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம் என்ற கருத்தில்தான் கூறினார்.

இயேசு மேலும் தொடர்ந்து இது குறித்துக் கூறியதாவது: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக்குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள். இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். ஆகையால் நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்” (மத்.6:31-34). வசனம் 34இல் காணப்படும் “நாளைக்காகக் கவலைப்படுதல்” என்பது எதிர்காலத்தைக் குறித்து கவலைப்படுதல். இது இயேசுவின் உபதேசப்படி விசுவாசி செய்யக்கூடாது. எல்லாவற்றுக்காகவும் நாம் ஆண்டவரை நம்பி, சார்ந்து, காத்திருக்க வேண்டும் என்பது சங்கீதக்காரன் தாவீதின் அனுபவ வாக்கு. அவன் சங்கீதம் 55:22 இல் கூறுவதைக் கவனியுங்கள்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்: நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்”.

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்