அந்தியோகியா திருச்சபை

ஆ.பிரேம்குமார்
(மார்ச்-ஏப்ரல் 2017)

ஆண்டவரின் வார்த்தை கற்பிக்கப்பட்ட சபை

ஒரு பிரசங்கியார் ஒரு சிறிய கிராம சபைக்கு முதல் முறையாகப் பிரசங்கிக்கப் போயிருந்தார். அங்கு ஒரு மனிதன் மாத்திரமே வந்திருந்ததால் அவருக்கு பிரசங்கிப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார். பின்பு அந்த மனிதனிடமே தான் பிரசங்கிக்கவா வேண்டாமா என வினவினார்.

அந்த மனிதனோ, ‘எனக்குப் பிரசங்கத்தைப் பற்றித் தெரியாது. நான் ஒரு பிரசங்கி அல்ல, நான் ஓர் விவசாயி. நான் ஒரு வண்டி நிறைய வைக்கோல் எடுத்துக்கொணடு போகும்போது ஒரு மாடுமட்டும் இருந்தாலும் அம்மாட்டிற்கு வைக்கோல் போடுவேன்’ என்றான்.

இவ்வார்த்தைகளால் உற்சாகம் அடைந்த பிரசங்கியார், இரண்டு மணி நேரங்களாகப் பிரசங்கித்தார். பின்னர் அப்பிரசங்கத்தைக் கேட்ட அந்த ஒரே நபரிடம், பிரசங்கம் எப்படியிருந்ததென கேட்டபோது அந்த மனிதன் கொடுத்த பதில்: நான் ஒரு பிரசங்கியல்ல, பிரசங்கத்தைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் ஒரு விவசாயி, நான் வண்டி நிறையவைக் கோலோடு போகும்போது ஒரு மாடு இருந்தால், அந்த ஒரு மாட்டிற்கு வண்டி நிறைய உள்ள வைக்கோல் அனைத்தையும் உண்ணக் கொடுக்க மாட்டேன் என்றானாம்.

அந்தியோகியா சபை பெயர்பெற்ற அப்போஸ்தலரால் அல்ல, பெயர் அறியப்படாத அகதிகளால் ஆரம்பிக்கப்பட்டது என கவனித்தோம். அடுத்ததாக நாம் அந்தியோகியா சபையைக்குறித்து அறிந்து கொள்ளும் விஷயமென்ன?

2.ஆண்டவரின் வார்த்தையால் கட்டப்பட்ட சபை
(ஆண்டவரின் வார்த்தை கற்பிக்கப்பட்ட சபை)

“கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியா வரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள், அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான், அவன் நல்லவனும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.

பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டு வந்தான். அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று (அப்.11:21-26).

அந்நிய ஜாதிகளுக்கு கர்த்தரை அறிவித்தவர்கள் மேல் கர்த்தரின் கரம் இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகிக் கர்த்தரிடம் திரும்பினார்கள் என காண்கிறோம்.

ஆண்டவர் இவர்கள் பிரயாசத்தை ஆசீர்வதித்து பலன் பெறச் செய்தார். சிறிய சபை உருவாகியது. சபை என்பது கட்டிடமல்ல, அழைக்கப்பட்ட விசுவாசிகளின் கூட்டம், பாவத்திலிருந்தும் சுயநீதியிலிருந்தும் தேவனிடம் திரும்பிய விசுவாசக் கூட்டம். பெயர் அறியப்படாத இந்த அகதிகளால், உருவான சபை பின்னர் பெரிதானதொரு மிஷனரி மையமானது. அதற்கு அடித்தளம் இட்டவர்கள் யார் என கவனிப்போம்.

மிஷனரி ஊழியத்தின் இலக்கு சபைகளில்லாத இடங்களில் சபைகளை ஸ்தாபித்து தேவனை மகிமைப்படுத்துவதாகும். வேறு வார்த்தையில் சொல்வதானால், ஆராதனை இல்லாத மக்கள் மத்தியில் தேவனை ஆராதிக்கும் சமூகங்களை உருவாக்குவதாகும். ஏற்கனவே பல சபைகளுள்ள இடத்தில் பத்தோடு தம் சபையையும் ஸ்தாபிப்பதல்ல.

“மேலும் அவருடைய செய்தியை அறியாதி ருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன்” (ரோமர் 15:20,21) என அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகின்றார்.

ஆண்டவரை அறியாத மக்கள் இனங்களை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்தி ஜாதிகளை (மக்களினங்களை) சீஷராக்குதல்தான் மிஷனரி ஊழியமாகும். தேவனை மகிமைப்படுத்துவதே மிஷனரி ஊழியத்தின் இறுதி இலக்காகும்.

அந்தியோகியாவில் அநேகர் கர்த்தரிடமாய்த் திரும்பினார்கள் என்று எருசலேம் சபையார் கேள்விப்பட்டபோது நல்லவனும் பரிசுத்த ஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாகிய தேவமனிதனான பர்னபாவை புதிதாக உருவாகியுள்ள அந்தியோகியா சபையினிடம் அனுப்பினார், புதிதாக உருவாகியுள்ள சபை ஒரு கைக்குழந்தையைப் போன்றது. அதனைப் போஷித்து வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு எருசலேம் சபைக்கிருந்தது. ஒருவேளை இந்த சபையைச் ஸ்தாபித்தவர்கள் இச்சபையைக் கட்டியெழுப்பக்கூடிய அறிவோ அனுபவமோ இல்லாதவர்களாக இருந்திருக்கலாம். எருசலேம் சபை, எப்பொழுதும் மற்றவர்களை ஊக்கப்படுத்துகிறவராகிய பர்னபாவை அங்கு அனுப்பியது. பர்னபா புறஜாதிகளையும் தேவனிடம் கொண்டுவந்த ஆண்டவரின் கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான். அவர்கள் ஆண்டவருக்குள் உறுதியாயிருக்கும்படி ஊக்கப்படுத்தினார்.

தேவமனிதனாகிய பர்னபா அங்கு சென்ற பின்பு திரும்பவுமாக அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள் என வாசிக்கிறோம். ஆம், சபை எண்ணிக்கையில் வளருகிறது. எண்ணிக்கையில் மட்டும் வளர்வது போதாது, தரத்திலும் வளரவேண்டும். அதனை தான் மட்டுமே செய்ய இயலாது, அதற்குப் பொருத்தமான இன்னொரு நபர் தேவை என்பதை உணர்ந்து சவுலை தேடி தர்சு பட்டணத்திற்கு சென்று அவனை அழைத்து வருகிறார்.

கமாலியேல் என்னும் வேதப்பண்டிதனிடம் கல்வி கற்றவரும், முன்னர் சபையை துன்பப் படுத்தியவருமாகிய சவுலைத் தேடி சவுலின் பட்டணமாகிய தர்சுவுக்குப் போகிறார். சவுலை உளவாளியோ என சீஷர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்கியபோது அவரை நம்பி சபைக்குச் சிபாரிசு செய்த பர்னபா பல மைல் தூரம் சென்று சவுலை தேடி அழைத்துக்கொண்டு வருகிறார்.

இன்று சிலர் தாமே அனைத்தையும் செய்யவேண்டும் என்று நினைக்கின்றனர். தமக்குரிய வரம் இல்லாத காரியங்களையும் தாமே செய்ய முற்படுகின்றனர். பர்னபாவோ இந்த சபையைக் கட்டியெழுப்ப சவுல் மிகவும் உபயோகமாயிருப்பார் என்று அவரைத் தேடி அழைத்துவருகிறார். பொருத்தமான நபர்களைப் பொருத்தமான காரியங்களைச் செய்ய நாம் பயன்படுத்த வேண்டும்.

எல்லா போதகர்களும் நல்ல நிர்வாகிகள் அல்ல; அதற்கு நிர்வாகத் திறமையுள்ளவர்களைப் பயன்படுத்தலாம். எல்லா போதகர்களும் நல்ல ஆலோசகர்கள் அல்ல; தன்னிடமில்லாத வரங்களுக்கு அதனை உரியவர்களைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த தலைவனுக்குரிய இலட்சணமாகும்.

பர்னபா இல்லாதிருந்தால் சவுல் இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருக்க முடியாது. சவுலை சீஷத்துவத்தில் வழிநடத்திய பர்னபா சவுல் தன்னைவிட மேலாக வருமளவிற்கு இடங்கொடுத்தவர். அவர்கள் (பவுலும் பர்னபாவும்) ஒரு வருஷகாலமாய் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷருக்கு கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று (அப்.11:21-26). பவுலும் பர்னபாவும் சபையோடு இருந்து ஒருவருட காலமாக வேத வசனத்தைக் கற்பித்து வேத வசனத்தில் இச்சபையை கட்டியெழுப்பினர். வேதப்பண்டிதனாகிய பவுலும் பர்னபாவும் ஒருவருட காலமாகக் கற்பித்தார்கள் என்றால், இந்த சபை மக்கள் வேதத்தை கற்பதற்கு இறையியல் கல்லூரிக்கு போகவேண்டிய அவசியமே இருந்திருக்காது. “பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்து வைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி…” (அப்.20:20) என பவுல் எபேசுவின் மூப்பர்களோடு பேசுகின்றார்.

ஆங்கில மொழிபெயர்ப்பொன்றில் ESV தேவனுடைய முழுமையான ஆலோசனை கொடுத்ததாகவும், KJV ஆங்கில மொழி பெயர்ப்பில் தேவனுடைய அனைத்து ஆலோசனையையும் கொடுத்தாக கூறுகிறது, ஆம், பவுல் தனக்கு விருப்பமான சில வேதாகம தலைப்புகளை மட்டும் கற்பித்துவிட்டு ஏனையவற்றை விட்டுவிடவில்லை. தேவனுடைய முழுமையான ஆலோசனையை, முழுமையான போதனையைப் போதித்தார்.

இன்று சிலர் வேதாகமத்தில் தமக்குப் பிடித்தமான சங்கீதங்களை மட்டுமே வாசிப்பதுண்டு. சபைப் போதகர்கள் பலர் கூட தமக்கு விருப்பமான சில விஷயங்களை மட்டுமே அடிக்கடி கற்பிப்பதுண்டு. ஒரு சிலர் சுவிசேஷம் அறிவிப்பதை மட்டுமே அடிக்கடி போதிப்பர். சீஷத்துவம் குறித்தோ, வேதத்தை கற்பதைக் குறித்தோ, சமூக அக்கறை குறித்தோ கற்பிப்பது குறைவு. இன்னும் சிலர் சுவிசேஷத்தை அறிவிக்க சபை மக்களை ஊக்குவிப்பதேயில்லை. இன்னும் சிலர் எப்பொழுதும் சமூக சேவை பற்றி மட்டுமே அதிகம் பேசுகின்றனர். மற்றும் சிலர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பற்றி மட்டுமே அடிக்கடி கற்பிக்க, இன்னும் சிலர் பரிசுத்த ஆவியைப் பற்றி கற்பிப்பதே இல்லை. சிலர் ஆவியின் கனியைப் பற்றி மட்டுமே கற்பித்து ஆவியின் வரங்களைப் பற்றி கற்பிப்பதில்லை. இன்னும் சிலர் ஆவிக்குரிய வரங்களைப் பற்றி மட்டுமே கற்பித்து ஆவியின் கனியைப் பற்றி கற்பிப்பதில்லை.

சிலர் வேதாகம கொள்ளைகளை மட்டுமே கற்பிப்பார். நடைமுறை வாழ்வு குறித்து அறநெறி குறித்து கற்பிப்பதில்லை. சிலர் குடும்ப வாழ்வு, தொழில் தெரிவுசெய்தல், பிள்ளை வளர்ப்புமுறை, வாழ்க்கைத் துணையைத் தெரிந்தெடுத்தல், திருமணம், பாலியல், பணம் இந்தவிதமான வேதப்போதனைகளைக் கற்பிப்பதில்லை. சிலர் தேவனுடைய ஆறுதல் அன்பை மட்டுமே கற்பிக்கின்றனர்.

அவரது பரிசுத்தத்தைக் குறித்து நியாயத் தீர்ப்பு குறித்து கற்பிப்பதில்லை. சிலர் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்து கற்பிப்பதேயில்லை. இன்னும் சிலரோ அதனை மட்டுமே கற்பிக்கின்றனர். நாம் தேவனுடைய முழுமையான ஆலோசனையை மக்களுக்குக் கொடுக்கவேண்டும்.

“எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்தி சொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம் பண்ணுகிறோம்” (கொலோ. 1:28). “அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்” (அப்.17:11).

பவுல் பிசங்கித்ததுகூட வேதாகம ரீதியானதா என இவர்கள் வேதாகமத்தை ஆராய்ந்து பார்த்தனர். சபை போதகருக்கு மட்டுமல்ல, சபை மக்களுக்கும் வேதாகமம் நன்கு தெரிந்திருக்கவேண்டும், அப்பொழுது சபை போதகரோ அல்லது மற்றவரோ தவறாகப் பிரசங்கித்தால் இவர்கள் சுட்டிக்காட்டலாம். ஆம், வேதாகமம் ஜெபத்தோடு, ஆவியின் வல்லமையோடு கிரமமாக கற்பிக்கப்படும்போது சபை வளரும்.

வெறுமனே எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் வளரும். அதுமட்டுமல்லாமல், வேதப்புரட்டர்கள் சபையை வஞ்சிக்கவும் இடமிராது. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதுகையில், “நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந் தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும், ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்து போகுங்காலம் வரும்” (2தீமோத்.4:1-4).

பவுல் எச்சரித்தவிதமான போதகர்களையும் வாசகர்களையும் நாம் இன்று காணக்கூடியதாய் உள்ளதல்லவா? பாவம், மனந்திரும்புதல், பரிசுத்தம், சீஷத்துவ கிரயம், மிஷனரி ஊழியம், அர்ப்பணம் போன்ற ஆரோக்கிய உபதேசங்களைக் கேட்க விரும்பாமல், தங்கள் பாவ வாழ்வைவிட்டு விலக மனமில்லாமல், ஆண்டவர் நம்மை ஆசீர்வதிப்பார்; நமது பொருளாதார நிலையை செழிப்பாக்குவார்; அவர் கிருபையாயிருப்பதால் நாம் என்னதான் பாவத்தில் வாழ்ந்தாலும் ஆண்டவர் மன்னிப்பார் போன்றதான தாங்கள் கேட்க விரும்பும் காரியங்களை உபதேசிக்கிறவர்களையே மக்கள் தேடி ஓடுகிறார்கள்.

அப்படிப்பட்ட போதகர்களை தங்களுக்கு ஏற்படுத்திக்கொள்கிறார்கள். சந்தைப்படுத்தல் (Marketing) துறையில் மக்கள் விரும்புவதை விற்க விரும்பும் வியாபாரிகளைப்போல, மக்கள் கேட்க விரும்புவதை கொடுக்கும் பிரசங்கிகள், அதாவது கள்ளப்போதகர்கள் அநேகர் இருக்கிறார்கள். நாம் வேதவசனத்திற்கு உண்மையாயிருந்து சத்தியத்தை சத்தியமாகப் போதிக்கவேண்டும்.

நாம் வேண்டுமென்றே மக்களை புண்படுத்த அவசியமில்லை. ஆனால் அவர்கள் புண்படுவார்கள் என்று சத்தியத்தைச் சொல்லாமல் இருக்கமுடியாது. தேவ வசனம் அவர்களை புண்படுத்தட்டும்; சாத்தான் வேத வசனங்களை முற்றிலும் மறுதலிக்கமாட்டான். ஆனால் லேசாகத் திரித்துவிடுவான். இதனால் அநேகர் வஞ்சிக்கப்பட்டு விடலாம்.

சபை வளரவேண்டுமானால் சபை தலைவர்கள் வளரவேண்டும். சபையை வேதவசனத்தில் கட்டியெழுப்ப வேண்டுமானால் போதகர்கள் தாங்கள் மாணாக்கர்களாக வேதத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும், தேவ செய்திக்காக ஜெபத்தில் காத்திருக்க வேண்டும். நேரம் செலவழித்து தங்களை முதலில் ஆயத்தப்படுத்த வேண்டும். அவர்கள் ஆயத்தப்படுத்துகிற தேவனுடைய வார்த்தைகளும் செய்திகளும் அவர்களோடு முதலாவது பேசவேண்டும். வசனம் அவர்கள் வாழ்வை சரிசெய்ய வேண்டும். மாய்மாலக்காரராய் வேஷம் தரித்தவர்களாகப் பிரசங்கிக்கக்கூடாது.

நான் செய்திகள் ஆயத்தப்படுத்திய அநேக வேளைகளில் ஆண்டவர் என்னோடு பேசி என் தவறுகளை உணர்த்தியதுண்டு. அது மட்டுமல்ல; தேவ செய்தியை நேரம் செலவழித்து ஆயத்தப்படுத்த வேண்டும்.

வேதாகமம், ஒத்த வாக்கிய அகராதி விளக்கவுரைகள் போன்றவற்றையும் படித்து ஆயத்தப்படுத்த வேண்டும். ஆண்டவரோடு தொடர்பில்லாதபடி, ஆண்டவரின் பாதத்தில் காத்திராதபடி இவை அனைத்தையும்கொண்டு சிறப்பாக செய்தியை ஆயத்தப்படுத்தினாலும் வல்லமை காணப்படாது. மக்கள் வாழ்வும் மாற்றமடையாது.

தேவனுடைய செய்தி நம் மூலமாக வல்லமையாகச் சென்றடைவதற்கு தடையாக நமக்குள் இருக்கும் காரியங்கள் அகற்றப்பட வேண்டும். அது மற்றவரை மன்னிக்காத தன்மையாக இருக்கலாம் அல்லது அறிக்கையிடப்படாத பாவமாயிருக்கலாம். அல்லது விடமறுக்கிற பாவமாய் இருக்கலாம். எனவே பிரசங்கிக்கும் நாம் நம்மையும் ஆயத்தப்படுத்தவேண்டும். அத்துடன் தேவ பாதத்தில் நாம் காத்திருந்து செய்தியையும் ஆயத்தப்படுத்தவேண்டும். பிரசங்கிமார் பிரசங்க பீடங்களில் வீண் வார்த்தைகளை அலப்பக்கூடாது.

ஒழுங்காக ஆயத்தம் செய்யாதவர்களால் நேரத்திற்கு செய்தியை முடிக்க முடியாது. ஒழுங்கான ஆயத்தமும் சிறப்பான தொடர் பாடலும் நேரத்திற்கு செய்திகளை முடிப்பதும் முக்கியம். வெறுமனே பிரசங்கங்கள் மட்டுமல்ல, கிரமமான வேதப்படிப்புகளும் அவசியம்.

அதிக எண்ணிக்கையான ஜனங்களைக் கொண்ட பெந்தேகொஸ்தே பின்னணி சபை யொன்றில் தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டபோது, புதிய தலைவர் வேத வசனங்கள் சபைக்குள் கற்பிக்கப்பட வேண்டும் என்று உணர்ந்து, பல சிறு குழுக்களுக்கு வேதாகமத்தை கிரமமாகக் கற்பிக்கப்படுதற்குரிய ஒரு பாடத்திட்டத்தை ஏற்படுத்தினார். அது மட்டுமல்ல, ஞாயிறு ஆராதனையிலும் வேதப் புத்தகத்தை கிரமமாகக் கற்பிக்க ஆரம்பித்தார். இது சபையில் ஒரு பெரிய வசனத்தின் அடிப்படையிலான வளர்ச்சிக்கு வழிகோலியது. ஆம், சபைகளிலே வேதாகம புத்தகம் புத்தகமாகவோ அல்லது வேதாகமத் தலைப்புகளின் அடிப்படையிலோ (உ-ம். பரிசுத்தம் கிருபை) கற்பிப்பது மிக முக்கியமானது. அந்தியோகியா சபையில் பவுல் பர்னபா ஆகிய இரு தலைவர்களால் வேதாகமம் கிரமமாகக் கற்பிக்கப்பட்டது. அது அச்சபை ஒரு மிஷனரிச் சபையாக மாற வழிகோலியது.

இதனை வாசித்துக்கொண்டிருக்கும் சபைப் போதகரே, உங்கள் சபையில் வேதாகமம் கிரமமாகக் கற்பிக்கப்படுகிறதா, வெறுமனே உணர்ந்த கொள்கைகள் மட்டுமல்ல, வாழ்வின் சூழ்நிலைக்குப் பொருத்தமான விதத்தில் கற்பிக்கப்படுகிறதா? நாமும் எஸ்றா எடுத்த அதே தீர்மானத்தை எடுப்போமா? “கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்” (எஸ்றா 7:10).

இதனை வாசிக்கும் விசுவாசியே, நீங்கள் வேதவசனத்தை தனிப்பட்ட விதத்தில் கிரமமாக கற்றுக்கொண்டு வருகிறீர்களா? உங்கள் வாழ்வின் தெரிவுகள் வேத வசனத்தின் விழுமியங்களின் அடிப்படையில் அமைகிறதா?

சங்கீதக்காரனோடு சேர்ந்து நாமும் “திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்” (சங்.119:14-15) என்று கூறுவோமா?

(தொடரும்)

சத்தியவசனம்