சகோதரி சாந்தி பொன்னு
(நவம்பர்-டிசம்பர் 2017)

இன்னுமொரு வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த நாட்களில் நமது வீடுகளை, சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்துவது நமக்கு வழக்கமாகிவிட்டது. அது நல்லது. தேவையற்றவைகளை எறிந்து, வீட்டைச் சுத்திகரிப்பது நமது ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.

ஆனால், எறிகின்ற அல்லது எறியப்படுகின்ற ‘குப்பை’, இன்னும் சொல்லப்போனால் ‘குப்பை அகற்றுதல்’ இன்று பெரிய பிரச்சனையாக மாறிவிட்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. நாடாளுமன்றத்தில் பலத்த விவாதத்திற்குள்ளாகுமளவுக்கு குப்பை முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால் குப்பையைக் குறித்தும் சிந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்றுதான் சொல்லவேண்டும். கிராமங்களில் குப்பை, குப்பை அகற்றுவது ஒன்றும் பெரிய பிரச்சனையே அல்ல. அதைச் சேகரித்து வயலில் உரமாக உபயோகிப்பதுண்டு. ஆனால் எல்லாவிதக் குப்பைகளும் உரத்துக்கு உதவாது. மீதிக்குப்பையை எறிந்துவிட கிராமங்களிலே இடமா இல்லை? ஆனால், நகரவாசிகள் இப்படியாகக் குப்பைகளை வீசமுடியாது. தெருவோரங்களிலும் நினைத்த இடங்களிலும் வீசி எறிந்தால் அது சுகாதாரக் குலைச்சலை ஏற்படுத்திவிடும்.

ஆகவே, நகர்ப்புறங்களில் குப்பைகளைச் சேகரிக்கும் ஒரு இடம் இருக்கும். குறித்த தினத்தில் அதற்குரியவர்கள் வந்து அவற்றை அகற்றிச் செல்வார்கள். அகற்றுகின்ற குப்பைகளை அவர்கள் எங்கே போடுகிறார்கள் என்பதைக் குறித்து நகர வாழ் மக்கள் கரிசனைகொள்வதே இல்லை. ஒரு தடவை குப்பைமேடு சரிந்து விழுந்து ஒரு சிலர் அதில் அகப்பட்டு இறந்தபோதுதான், ‘இப்படியுமா’ என்று மூக்கில் விரல் வைக்குமளவுக்கு ஆடிப்போனார்கள் இந்த நகரவாசிகள், இந்தக் குப்பைகளை என்ன செய்வதென்று ஆராய்ந்ததன் விளைவாக ‘குப்பைக்கும் ஒரு ஆராய்ச்சி’ இப்போ குப்பைகளை வகை பிரிக்கவேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. மக்குகின்ற குப்பை, மக்காத குப்பை; மக்காத குப்பையிலும், கடுதாசி வேறு, பிளாஸ்டிக் வேறு, இதினிமித்தம் முதலில் முறுமுறுத்தவர்களை, குப்பைகளை எடுக்கமாட்டோம் என்று பயமுறுத்தியே குப்பையை அகற்றுகிறவர்கள் அதற்குப் பழக்கப்படுத்திவிட்டார்கள். எப்படியோ குப்பைகள் அகற்றப்பட்டாகவேண்டும் என்பதற்காக அப்படியே செய்யத் தொடங்கி, ‘இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது’ என்று ஏற்றுக்கொண்டு செயலாற்றுமளவுக்கு மக்களும் இன்று பழகிவிட்டனர் (என்றாலும் சில விஷமிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்).

வருடத்தில் ஒருதடவை அல்ல; தினமும் குப்பைகள் அகற்றப்பட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவு என்ன என்பதை இன்னொருவர் சொல்லி நாம் தெரியவேண்டிய அவசியமில்லை. 2009ம் ஆண்டில் வெளி நாடொன்றுக்குச் சென்றிருந்தபோது, அங்கே நகரசபை வேலைநிறுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாட்டிலே குப்பை அகற்றுகிறவர்கள் ‘டிப் டாப்’ என்பார்களே, அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதால் அந்த அழகான நாட்டிலே குப்பைகள் சேர்ந்தது. நான் தங்கியிருந்த வீட்டிலும் குப்பைகளை மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்தனர். இது துர்நாற்றம் எடுத்தபோது, அதைத் தவிர்க்க ஏதேதோ பிரயத்தனம் எடுத்தனர். பின்னர் ஒரு அறிவித்தல் வந்தது. அதைக் கேட்டதும் அவசர அவசரமாக அந்த மூட்டைகளைக் கையளிப்பதற்காகச் சென்றபோது நானும் போனேன். என்ன ஆச்சரியம்! அங்கே ஒரு நீண்ட வரிசையில் மக்கள் தங்கள் வாகனத்தில் காத்து நின்றனர். ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்து நின்று அந்தக் குப்பைகள் கையளிக்கப்பட்டன. ஒருசிலர் அதைச் சரியாகக் கொண்டுவராததால் திருப்பி அனுப்பப்பட்ட பரிதாபக் காட்சிகளும் அரங்கேறின. எனக்கோ அழுவதா சிரிப்பதா என்றிருந்தது. இந்த நாட்டிலுமா? இதுதான் என் கேள்வி.

குப்பையிலும் பல ரகங்கள்

குப்பையை அகற்றுவது குறித்து இத்தனை காரியங்களா? இன்னும் அதிகம் உண்டு. ஆனால் அதை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, நாம் அகற்றவேண்டிய குப்பைகளைக் குறித்துச் சற்று சிந்திப்போம். உபயோகித்த கழிவுகள், வேண்டாம் என்று தள்ளி விடுகிறவைகள். உடைந்து கிழிந்து பயன்பாட்டுக்கு உதவாதவைகள், புதிதாக வாங்கியதால் பழையதானவைகள், இப்படியாக சில மேலான ரகங்கள் கிடைத்தால் சிலவற்றை நாம் ஒதுக்கினாலும் அவை இன்னமும் பயன்பாட்டுக்கு உகந்தவை என்று கண்டால் வேறு யாராவது உபயோகப்படுத்தட்டுமே என்று சொல்லியும் அவற்றையும் அகற்றுவதுண்டு. சில வெளிநாடுகளிலே, பயன்பாட்டுக்குரிய பொருட்களை வீதியிலே வைத்துவிடுவார்கள். அவற்றை எடுத்துப்போய் தங்கள் வீடுகளை அலங்கரிக்கிறவர்களும் உண்டு. மொத்தத்தில், நமக்கு அவசியமற்றவை என்று காண்பவற்றைத்தான் நாம் குப்பை என்று எண்ணுகிறோம். அதாவது நமக்கு அவை ‘உதவாது’ என்றுதான் எறிகிறோம். அதனால் நமக்கு எந்தவித நட்டமோ இழப்போ ஏற்படப்போவதில்லை.

ஆக, ஒன்று கழிவுகளை அகற்றுகிறோம். அடுத்தது, சில காலத்திற்கு பின்னர் நமக்கு இனி மேல் உதவாது என்று எண்ணக்கூடிய பொருட்களைப் பணம் கொடுத்து வாங்கி நமது இல்லங்களையும் நம்மையும் அலங்கரிப்பதற்காக, நம்மிடம் இருக்கும் பழையவைகளை நமக்கு இவை உதவாது அல்லது வேண்டாம் என்று அகற்றுகிறோம். அதாவது நாம் இப்போ புதியவைகள் நல்லவைகள் என்று கருதுவது ஒருநாளைக்கு உதவாமற்போகும்.

எப்படியோ குப்பைக்குள் எறிந்தது எறிந்ததுதான், இங்கே மூன்று கேள்விகளை உங்கள் முன்பாக வைக்க விரும்புகிறேன்.

1. ‘இவை உதவாத குப்பை’ என்று நாம் முத்திரை வைத்து எறிந்துவிடுகின்ற அல்லது அகற்றிவிடுகின்ற குப்பைகளால் நமக்கு ஏதாவது நஷ்டமுண்டா?

2. அப்படியாகத் தள்ளிவிடுகிறவைகளை எதற்காகக் குப்பை என்கிறோம்? அவை உதவாதவை என்றா? உதவக்கூடியவை என்றாலும் நமக்கு வேண்டாம் என்றா?

3. எதைப் பெற்றுக்கொள்வதற்காக இவற்றைக் குப்பையாக எண்ணுகிறோம்? அதாவது இவற் றின் இடத்தை நிரப்பப்போவது எது?

பவுல் எண்ணிய குப்பை

தன் வாழ்வை ஆராய்ந்து பார்த்த பவுலும் சில வற்றைத் தனக்கு நஷ்டம் என்று எண்ணினார். நஷ்டம் என்று எண்ணியதை மேலும் குப்பை என்று எண்ணினார். குப்பை என்று எண்ணியதால் அவற்றைத் துச்சமாகத் தூக்கிப்போட்டார். இதையெல்லாம் எதற்குச் செய்தார். விலைமதிப்பற்ற, கிடைத்தற்கரிய, என்றும் அழியாத, நிலையான ஒன்றை அவர் கண்டுவிட்டார். அதைத் தனது வாழ்வுக்குள் கொண்டு வரவேண்டுமென்றால், தன்னிடம் இருப்பவை விலைமதிப்புள்ளவையாக இருந்தாலும், இரண்டும் ஒரே இடத்தில் வைக்க முடியாததால், தனக்கு லாபமாயிருந்தவற்றையெல்லாம் குப்பை என்றெண்ணி அகற்றிவிட்டார்.

பவுல், சவுல் என்று அழைக்கப்பட்ட நாட்களில் பெயர் புகழ்பெற்ற ஒருவராயிருந்தார். இவர் ஒரு யூதன்; யூத முறைமைப்படி எட்டாம் நாளிலே விருத்தசேதனமடைந்தவர். அவர் இஸ்ரவேல் வம்சத்தான்; பென்யமீன் கோத்திரத்தான். எபிரெயரில் பிறந்த எபிரெயன். நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன். ‘பரிசேயன்’ என்றாலே மக்கள் மத்தியிலே பெருத்த மதிப்புப் பெற்றிருந்தவன். இன்னும் சொல்லப்போனால் யூதமதத் தலைவர்கள் கூடுகின்ற சனகெரிப் சங்கத்தில் அங்கம் வகித்தவர்களில் மிகவும் வயதில் இளையவர் இவர்தான். கமாலியேலின் பாதத்தில் அமர்ந்து கல்வி கற்றவர் என்றாலே, அவர் ஒரு கல்விமான், அறிவாளி, கெட்டிக்காரர். எதையும் துணிந்து செயலாற்றக் கூடியவர். எவ்வளவுப் பெரிய மனுஷன் இவர்! துடிப்புள்ளவர்; ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனுக்காய் வைராக்கியம் காட்டியவர். இவர் ரோமப் பிரஜா உரிமை பெற்றவர். இதற்கும் மிஞ்சி ஒரு மனுஷனுக்கு என்னதான் வேண்டும்? இப்படிப்பட்ட பெரிய பாக்கியங்களை, சிலாக்கியங்களை யாரேனும் குப்பை என்று தூக்கி எறிவார்களா? இன்று வெளிநாட்டுப் பிரஜா உரிமைகளுக்காக நமது மக்களே எந்தளவுக்காகப் பாடுபடுகிறார்கள்? அப்படிப் பெற்றதைத் தூக்கி எறிந்துவிட்டுச் சொந்த நாட்டுக்குத் திரும்புவார்களா?

ஆனால் பவுல் எழுதுகிறார்: ‘ஆகிலும் எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன்’ (பிலி.3:7). எல்லாவற்றையும் நஷ்டமும் குப்பையுமென்று எண்ணுகிறேன். இந்தப் பவுலுக்குப் பைத்தியமா? கிடைத்தற்கரிய பொக்கிஷங்களையெல்லாம் குப்பை அள்ளுகின்ற வாகனம் எடுத்துப் போக விட்டுவிடலாமா? போனால் போனதுதான், திரும்ப வராது என்பது தெரியாதா? ஆனால் அவரோ, அவை எல்லாம் குப்பை என்று சொல்லுகிறார். அவற்றை அவர் இனித் தன்னுடைய பெருமைக்காகப் பயன்படுத்தப்போவதில்லை. இந்த மனுஷனுக்கு என்னதான் நேர்ந்தது? இப்படியும் ஒருவன் செய்வானா? பவுல் குப்பையாக எண்ணியவை பெறுமதிப்பு வாய்ந்தவை. அவர் ஒருவருக்கே சொந்தமானவை. பலத்த பிரயத்தனத்தின் பலனாய் அவரே பெற்றுக்கொண்டவை. அவருக்குப் பெருமைசேர்த்தவை. அவற்றை இன்னொருவர் எடுத்து உபயோகப்படுத்தவும் முடியாது.

இவற்றை அவர் குப்பை என்கிறார். பெருத்த லாபம் ஈட்டக்கூடியவற்றை நஷ்டம் என்கிறார். உலக நடப்புக்கு இது ஒவ்வாத ஒன்று. ஆனால் பவுல் எண்ணினார். சொன்னார், செய்தார். அவரால் எப்படி இது முடிந்தது? யாருக்காக இவற்றைத் தள்ளினார்? எதைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த அரிய பொக்கிஷங்களைக் குப்பை என்றார்?

1. கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினார்.

2. கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக நஷ்டமென்று எண்ணிக்கொண்டார்.

3. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும், விசுவாசமூலமாய் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருப்பதற்காக நியாயப்பிரமாணத்தால் வருகின்ற சுயநீதியைத் துச்சமாய் எண்ணினார்.

4. தான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறவன் என்று காணப்படும்படிக்கும்,

5. கிறிஸ்துவையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும்,

6. அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி எப்படியாயினும் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும்,

அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன். குப்பையுமாக எண்ணுகிறேன் என்றார் (பிலிப்.3:5-11). அதாவது பவுல் தனக்கு லாபமானதை வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக் கொண்டு இயேசுவைப் பின்பற்றினார்.

இப்படியெல்லாம் வெறுத்துவிடுகின்ற ஒருவன், எவ்வளவாகப் பெருமை பேசுவான்! நான் ஊழியத்திற்காக என் வேலையைவிட்டேன், ஊதியத்தை உதறினேன் என்று மேடை போட்டு சொல்லுகிறவர்கள் பலர். ஆனால் பவுல் இத்தனைக்குப் பின்பும், “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” (வச.12) என்றே எழுதுகிறார்.

நமது காரியம் என்ன?

டிராபிக் போலீஸார் தவறாக ஓட்டப்பட்ட வாகனத்தை நிறுத்தினார்கள். ஓட்டுனரிடம் தவறு இருந்தது. ஆனால் அந்த ஓட்டுனர் சாதாரணமானவர் அல்ல. அவரை யார் என்று அறிந்துகொண்ட வீதிப்பாதுகாப்புப் போலீஸார், “ஐயா நீங்களா” என்று வழியனுப்பினர். அவரும் புறப்பட்டார். ‘உங்கள் பதவியும் புகழும் இல்லாவிட்டால் நீங்கள் இன்று தண்டப்பணம் கட்டியிருப்பீர்கள்” என்று அவருடன் பயணம் செய்த நான் சொன்னபோது ஒரு சிரிப்புடன் அவர் சமாளித்துவிட்டார். இன்று தங்கள் ஊழியத் தகுதிகளைக்கூட எத்தனைபேர் உபயோகித்து, தங்கள் காரியங்களைச் சாதிக்கிறார்கள்.

இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் என்றிருக்கின்ற நாமும் சில காரியங்களைக் குப்பை என்று எண்ணுகிறோம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சினிமாக் கொட்டகையிலே சினிமாப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டோம். அந்நிய தெய்வங்களுக்குப் படைத்தார்களோ இல்லையோ, புறவினத்தார் பண்டிகை நாட்களில் தருவதை உண்ணமாட்டோம். அந்நிய தெய்வ வழிபாடுகளில் (திருமணங்கள் தவிர) கலந்துகொள்ளமாட்டோம். இப்பொழுது மதுபானம் குடிக்கமாட்டோம், சிகரெட் பழக்கத்தை விட்டுவிட்டோம். (ஆனால் சிலவகை குளிர்பானம் இல்லாமல் நமக்கு ஒன்றும் ஓடாது) நாம் எதற்கும் அடிமைப்படமாட்டோம் (மொபைல் போன்களும், இணையத்தளத்தின் சில அசிங்கங்களை மட்டும் தவிர்க்கமாட்டோம். அவையின்றி நமக்கு வாழ்வே இல்லையென்றாகிவிட்டது). உலகப்பிரகாரமானவை என்று சொல்லி இவற்றை விலக்குகிறோம் என்பது உண்மைதான். நல்லது.

ஆனால் நமக்கு நல்லது, லாபமானது, பெயர் புகழ் தருவது, அந்தஸ்துக்குரியது, சந்தோஷத்துக்குரியது, சந்ததிக்குரியது, மொத்தத்தில் நமக்கு அவசியமானது பெறுமதிப்பு வாய்ந்தது கிடைத்தற்கரியது என்று நாம் கணக்கிட்டு வைத்திருக்கிற பணம், பட்டம், அந்தஸ்து, கிறிஸ்தவன் பக்திமான் கொடைவள்ளல் என்ற பெருமை, சபையில் வகிக்கும் பதவிகள், இப்படியாக நமக்குப் புகழ் தருகின்ற எதையாவது குப்பை என்று நம்மால் எறிந்துவிட முடியுமா? சும்மாவல்ல, அவற்றிலும் மேன்மையான ஒன்றை நமது வாழ்வில் நிறுத்துவதற்காக, அதாவது கிறிஸ்துவினிமித்தம் அவரை அறிகின்ற அறிவினிமித்தம், கிறிஸ்துவின் பாடுகளில் ஐக்கியப்பட, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் தரித்துக்கொள்ள, அவருடன் நித்தியமாய் வாழுவதற்காக நமக்குப்பிரியமானது என்றும் மேன்மையானது என்றும் நாம் எண்ணுபவற்றை, ‘வேண்டாம், இது குப்பை’ என்று தள்ளிவிட்டிருக்கிறோமா அல்லது தள்ளிவிடமுடியுமா? ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் என்னை நானே வெறுத்து, என் சிலுவையை எடுத்துக்கொண்டு கிறிஸ்துவைப் பின்பற்றி முன்செல்லுவதற்காக எனக்குப் புகழ்ச்சியாக இருப்பவற்றை லாபமாக இருப்பவற்றை, இவற்றிலும் மேலான நித்தியமான ஒருவரை என் வாழ்வின் மத்தியில் அமர்த்திவிடு வதற்காகவென்றே என்னால் அவற்றையெல்லாம் குப்பையென்று எண்ண முடியுமா?

பிரியமானவர்களே, வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். வீட்டுக் குப்பைகள் அகற்றப்பட வேண்டியவைதான். ஆனால், இந்த வருட இறுதியிலே இன்னுமொரு குப்பையையும் அடையாளங் கண்டு முதலில் அவற்றை அகற்றும்படி ஒரு புரட்சி செய்வோமா! அடுத்த ஆண்டிலே ஒரு வேறுபட்ட வித்தியாசமான, தேவனுக்கு மாத்திரமே பிரியமான வாழ்வு வாழுவதற்காகவென்றே, என் சிலுவையைச் சுமப்பதற்காகவென்றே இந்தக் குப்பைகளை அடையாளங்கண்டு அகற்றுவோமாக. இது கடினம்தான்; ஆனால் பவுலுக்கு இது முடியுமானால் ஏன் நமக்கு முடியாது? பவுல் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றிய ஒருவர். அவர் எழுதியதாவது: “அவர் (கிறிஸ்து) தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்” (பிலி.2:6,7). இதற்கும் மேலாக நமக்கு என்னதான் வேண்டும்? இயேசுவே தமது மேன்மையை லாபமாக எண்ணாமல் சிலுவையைச் சகித்திருக்க, நமக்கு என்ன வேண்டும்?

சிலுவையா அல்லது உலகமா, நமக்கு எது வேண்டும்? இயேசுவின் பாடுகள் உயிர்த்தெழுதலில் பங்கடைவதா அல்லது உலகப் பெருமைகளா, நமக்கு எது வேண்டும்? ஆண்டவருடனான அழியாத வாழ்வா அல்லது நாளை மாறிப்போகின்ற இந்த உலக இன்பமா, நமக்கு எது வேண்டும்? இந்த உலகத்தையும் அதன் காரியங்களையும் குப்பையாக எண்ணித் தள்ளி, என்றும் நிலையான ராஜ்யத்தின் ராஜாவை நமது வாழ்வின் ராஜாவாக உட்கார வைப்போமாக. வருகின்ற புத்தாண்டு ஒரு விசேஷ ஆண்டாய் அமைய கர்த்தர்தாமே நம் அனைவரையும் வழி நடத்துவாராக. ஆமென்.