நற்செய்தியைக் கொண்டாடுவோம்
(நவம்பர்-டிசம்பர் 2018)

நாம் நன்மை செய்கிறவர்களாகவோ அல்லது தீமையிலிருந்து நாம் விலகி வாழுகிறவர்களாக இருக்கும்படியாக வேதவாக்கியங்கள் நமக்கு சீரான முறையில் போதிக்கிறது.


பாப்டிஸ்ட் இறையியலாளரும் மற்றும் மிஷனரி வழக்கறிஞருமான, ஆண்ட்ரூ புல்லர், அவர்கள் கேம்பிரிட்ஜ்-இல் உள்ள வுக்கன் இடத்தில், 5 பிப்ரவரி 1754 இல் பிறந்தார். தனது சிறுவயதி லிருந்து ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து ஆழமாய் அறியவிரும்பினார். தனது பதினாறு வயதில் அவர் சோஹாமில் உள்ள பாப்டிஸ்ட் திருச்சபையில் சேர்ந்தார். அவர் ஊழியத்திற்கான எந்தவொரு சிறப்புப் பயிற்சியும் பெறாத போதும் வேதாகமத்தை ஆய்வு செய்வதில் அவர் சிறந்த கிருபைப் பெற்றிருந்தார். இதினால் 1775ஆம் ஆண்டு அந்த திருச்சபையின் ஆயராக நியமிக்கப்பட்டார். சாரா கார்டினரை 1792ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அநேக ஆண்டுகளாக சோஹாமிலிருந்து அருட்பணியாற்றினார். அதன்பிறகு கெட்டெரிங்கிற்கு மாற்றம் செய்யப்பட்டார். தனது இறுதி நாட்கள்வரை கெட்டெரிங்கிலேயே அருட்பணியாற்றி வந்தார்.

புல்லர் ஒரு திறமையான போதகர் மற்றும் இறை யியல் எழுத்தாளாரும் ஆவார். அவர் பாப்டிஸ்ட் மிஷனெரி சொசைட்டியை ஸ்தாபித்து, அதன் முதல் செயலாளரும் ஆனார். அதின் முன்னேற்ற பணியில் மிகவும் திறமையாக செயல்பட்டார். அவரது சர்ச்சைக்குரிய செயல்பாடு எப்பொழுதும் பெரியதாக இருந்தது. இவர் பாப்டிஸ்ட் மிஷனெரி சொசைட் டியை வலுப்படுத்துவதற்காக தேச முழுவதும் பயணம் செய்து அதற்கான நிதியை திரட்டினார். வருடத்தின் பெரும்வாரியான நாட்கள் பிரயாணத்திலே செலவழித்தார். 1798 முதல் 1813 வரையும் ஐந்து நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து அருட்பணிக்கான நிதியையும் ஆதரவையும் திரட்டினார்.

இவரது தீவிரமான செயல்பாட்டினால், வில்லியம் கேரி அதிகமாக ஈர்க்கப்பட்டார். கேரி மிஷனெரியாக அனுப்பப்பட்டார். கேரி, புல்லரிடம், “நீங்கள் கயிறை பிடித்துக்கொள்ளுங்கள், நான் தங்கசுரங்கத்தில் இறங்க தயாராகிறேன்” என்றார். கேரியின் அருட்பணி சாதனைகளுக்கு புல்லர் முழு காரணமாயிருந்தார். பாப்டிஸ்ட் மிஷனெரி சொசைட்டியில் இவரது இருபது ஆண்டு காலம் அர்ப்பணிப்பான சேவை இந்தியாவில் சுவிசேஷம் பரவுவதற்கு ஏதுவாயிருந்தது. பாப்டிஸ்ட் மிஷனெரி சொசைட்டியின் வாயிலாக செய்யப்பட்ட அருட்பணியின் விளைவாக 700 பேர் ஞானஸ்நானம் பெற்றனர், 10,000 குழந்தைகள் பள்ளியில் சேர்ந்து படிப்பறிவு பெற்றனர், 27 இந்திய மொழிகளில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டன. இதை புல்லர் இறப்பதற்கு முன்பதாக காணமுடிந்தது. “கடவுள் உங்கள் முலமாக இந்தியாவில் தூண்டிவிட்ட ஒரு தீப்பொறி இப்பொழுது பெரும் ஜூவாலையாக மாறியுள்ளது” என்று புல்லர் கேரிக்கு எழுதினார்.

புல்லர் பக்கவாதத்தினால் தாக்கப்பட்டார். தனது கடைசி 15 ஆண்டுகள் புல்லர் சுகவீனமாகவே காணப்பட்டார். இறுதியில் 1815 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தனது 62வது வயதில் மரித்தார். பிற தேசங்களுக்கு புறப்பட்டு செல்லாமல் தங்கள் சொந்த தேசத்திலிருந்து அருட்பணியில் ஈடுபடுவோருக்கு புல்லருடைய அனுபவம் உற்சாகமூட்டுவதாகவும் எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது.

மொழியாக்கம்: G.வில்சன்