குடும்பம் சமுதாயத்தின் அஸ்திபாரம்!

Dr.உட்ரோ குரோல்
(ஜனவரி-பிப்ரவரி 2019)

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள காலத்தில் குடும்ப உறவுகள் சீர்குலைய ஆரம்பித்துள்ளன. இது அனைவருக்கும் கவலையைத் தருவதாய் உள்ளது. குடும்பம் என்பதன் வரையறை யாது? நமது சமுதாயத்துக்கும் தேவனுக்கும் அது அளிக்கும் பங்கு யாது? இக்கேள்விகளுக்கு இந்த இதழில் நாம் விடை காண்போம்.

குடும்பத்தை சமுதாயத்தின் அஸ்திபாரம் மற்றும் மூலைக்கல் எனலாம். குடும்பம் என்பதற்கு இக்காலத்தில் மக்கள் வெவ்வேறு வரையறை தருகின்றனர். ஆனால் அவை பாரம்பரிய வரையறைக்கும் தேவனுடைய வரையறைக்கும் மாறுபடுகிறது. ஒரு கட்டிடத்தின் மூலைக்கல் எவ்வாறு அதன் மற்ற பகுதிகளை வடிவமைக்கிறதோ அதைப்போன்று குடும்பமே ஒரு சமுதாயத்தை நிர்ணயிக்கிறது. நல்ல ஒரு குடும்பத்தின் அமைப்பைப் பற்றிய எண்ணங்கள் திரித்துக் கூறப்படுவதால் நாம் வாழும் சமுதாயத்தின் வாழ்வும் மாறிவிடுகிறது. பல சிறிய குடும்பங்கள் இணைந்து ஒரு பெரிய சமுதாயத்தை உருவாக்குகிறது. குடும்பங்களில் பிரச்சனை ஏற்படும் பொழுது அது சமுதாயத்திலும் எதிரொலிக்கும்.

குடும்பம் பிழைப்பதற்கும், செழிப்பதற்கும், முன்னேறுவதற்கும் நாம் மாற்றங்கள் செய்தாக வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் காணப்பட்ட சில மதியீனத்தை நாம் நிறுத்தவேண்டும். நமது குடும்பங்கள் தேவனை மீண்டும் தேட ஆரம்பிக்கவேண்டும். குடும்பத்தைப்பற்றிய தேவனுடைய கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேவனே குடும்பத்தை உருவாக்கினவர். நாம் குடும்பத்தை குலைக்கும்பொழுது அவருடைய படைப்பையும் நாம் குழப்புகிறோம்.

வெப்ஸ்டர் என்பவர் குடும்பத்தைப் பற்றி பின்வரும் வரையறைகளைத் தருகிறார்.

1. “ஒரே வீட்டில் வசிக்கும் மனிதர்கள்.”

2. “இரு பெற்றோர்களும் அவர்களுடைய பிள்ளை களும் கொண்ட குழு.”

3. “இரத்தத்தினால் அல்லது திருமணத்தால் தொடர்புடையவர்கள்; உறவினர்கள்.”

4. “ஒரே முன்னோர்களிலிருந்து வந்தவர்கள்; ஒரே கோத்திரம், ஒரே குலம், ஒரே இனம்”

இவ்வாறு அவர் நான்கு வரையறைகளைத் தந்துள்ளபொழுது நமது சமுதாயமும் அநேக வரையறைகளைத் தரக்கூடும். ஒரு தகப்பன், ஒரு தாய், 2-5 குழந்தைகள் என்பது குடும்பம் என்று பாரம்பரியமாக வரையறுக்கப்பட்ட ஒன்று. அநேக இடங்களில் பல தலைமுறையினர் சேர்ந்து ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தாயும் தகப்பனும் தங்கள் குழந்தைகளுடன் வசிக்கின்றனர். பிள்ளைகள் தங்களுடைய துணைகளுடன் வருகின்றனர். அக்குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கின்றனர். தாத்தாவும் பாட்டியும் கூடவே இருக்கின்றனர். அநேக நாடுகளில் இந்த அமைப்பே பொதுவாகக் காணப்படுகின்றது. நல்ல குடும்பம், பிள்ளைகள் வளர்ப்பு, நல்ல வேலை தேடுவது என்பனவற்றை அறிய கடைகளில் அநேக புத்தகங்கள் காணப்படுகின்றன. ஆனால் வேதம் குடும்பத்தைப் பற்றிக் கூறுவதையும் அதில் நமது பங்கு யாது என்பதையும் குறித்து நாம் ஆராய்வோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈடித் ஸ்காஃ பெர் என்பவர் எழுதிய “What is a Family?” என்ற புத்தகத்தைப் படித்தேன். ஒரு குடும்பம் ஒன்றாக இயங்குவதை ‘காற்றிசைச் சரம்’ என்ற கருவிக்கு உவமைப்படுத்தியிருந்தார். இது நரம்புகளால் இணைக்கப்பட்ட சரங்களைக் கொண்ட ஒரு தொங்கும் அலங்காரப்பொருளாகும். காற்று அதில் வீசும்பொழுது அது இனிமையான இசையை உருவாக்கும். குடும்பமும் இதைப் போன்றதே.

“ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட மக்களைக் கொண்டதே குடும்பம். அவர்கள் வேறுபட்ட குணாதிசயங்களைக் கொண்டவர்கள். அவர்கள் ஒன்றாக சிரிப்பார்கள்; ஒன்றாகக் கவலைப்படுவார்கள். ஒரே ஆலயத்துக்கும் செல்வார்கள். தங்களுடைய அனுபவங்களையும் நினைவுகளையும் ஒரே மையமாகக் கொண்டவர்கள். வெவ்வேறான பெயர்களைக் கொண்டவர்கள். வித்தியாசமான திசையில் வித்தியாசமான வேகத்தில் செல்பவர்கள். ஆனாலும் அனைவரும் ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளனர். இந்த அமைப்பானது ஒன்றாக இருக்கும். இதுதான் குடும்பம்!”.

ஆனால் குடும்பத்தைப்பற்றி பரிசுத்த வேதாகமம் கூறுவதைப்பற்றி நாம் காண்போம். வெவ்வேறான வழிகளில் நாம் செயல்பட்டாலும் குடும்பமாக ஒன்றுபடவேண்டும் என்று அது கூறுகிறது. குடும்பங்கள் சிலவேளைகளில் வெற்றியுடனும் சில வேளைகளில் அவமானத்துடனும் சேர்ந்து நிற்கிறது. சில வேளைகளில் அவர்கள் இணைந்து நிற்கவேண்டிய நிர்ப்பந்தமும் உண்டாகிறது. இதனை யோசுவா 7:16-18 இல் காணப்படும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஆராய்வோம்.

“யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ர வேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப் பட்டான். அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப் பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான்” (யோசு.7:16,17). இந்நிகழ்வில் ஆகான் என்ற தனிமனிதன் மாத்திரமல்ல, அவனது வீட்டார் அனைவருக்கும் தொடர்பு உள்ளது. எரிகோ பட்டணத்தில் தேவனுக்கு விரோதமாக செயல்பட்ட தனி மனிதனைக் கண்டுபிடிக்க அவர்கள் கோத்திரம் என்ற பெரிய பகுதியிலிருந்து அக்குறிப்பிட்ட மனிதன் வரையிலும் குறித்தனர்.

குடும்பம் என்று நாம் சொல்லும்பொழுது அது மக்களின் அமைப்பையும் ஒருவரோடு ஒருவர் தொடர்புடைய மக்களின் அமைப்பையும் குறிக்கின்றோம். இந்த நிகழ்வில் இவர்கள் அனைவரும் இரத்த சம்பந்தமுடையவர்கள் என்று சொல்ல முடியாது; சிலர் அக்குடும்பத்தால் தத்து எடுக்கப்பட்டவர்கள். ஆனாலும் அவர்கள் ஒன்றாக இணைக்கப்பட்டவர்கள். ஈடித் ஸ்காஃ பெர் கூறியபடி அவர்கள் ஒன்றாக பிணைக்கப்பட்டவர்கள். தங்களுடைய சுய வழியில் சுய வேகத்தில் சுய காரியங்களைச் செய்தாலும் ஏதோ ஒரு காரணி அவர்களை ஒன்றாகச் சேர்த்து வைத்துள்ளது.

சிருஷ்டிகரின் வடிவமைப்பை குடும்பம் செயல் படுத்தாதபொழுது அது செயலற்றதாகிவிடும். அவ்வடிவத்தைப் பாதிப்பதோடு நில்லாமல் அதை அழித்தும்விடும். இரத்த உறவு இல்லாத சிலர் குடும்பத்தோடு இணைக்கப்பட்டிருப்பர். கோத்திரப்பிதா ஆபிரகாம் தனது குடும்பத்தில் எலியேசர் என்கிற வேலைக்காரனை ஒரு குடும்ப உறுப்பினராகவே எண்ணினார். தமது சுதந்திர வீதத்தை இவருக்கு அளிப்பதாகவும் இருந்தார். இதுவே குடும்பத்துக்கு வெளியே உள்ள உறுப்பினரைச் சேர்த்துக்கொள்வதாகும். நாமும் சிலரை நமது குடும்ப உறுப்பினராகக் கருதுகிறோம். குடும்பம் நமக்கு உரிமையையும் பாதுகாப்பையும் தருகிறது. குழந்தைகள் தங்களது வீட்டில் பாதுகாப்பை உணரவேண்டும். அவ்வாறு இல்லையெனில் அக்குடும்பத்தில் ஏதோ தவறு உள்ளது. தேவன் குடும்பத்தை உருவாக்கினார். அரசாங்கம் மற்றும் சபையையும் அவரே உருவாக்கினார். “பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” (ஆதி.2:18). அவர் ஆதாமின் விலா எலும்பை எடுத்து ஏவாளை உருவாக்கினார். அங்கே குடும்பம் உருவானது. அங்கே பிள்ளைகள், வம்சங்கள் கோத்திரங்கள் இல்லை. தேவன் உருவாக்கிய குடும்பத்தில் இருவர் மாத்திரமே இருந்தனர்.

குடும்பமே அனைத்து வம்சங்களையும் கோத்திரங்களையும் இணைக்கும் பசையாகும். நமது சமுதாயத்தின் மூலைக்கல் குடும்பமே. குடும்பம் அச்சுறுத்தப்பட்டால் சமுதாயமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். வரலாற்றைத் திருப்பினால் இதைப்போன்ற அநேக நிகழ்வுகளை நாம் காணமுடியும். உலக வரலாற்றில் முதன் முறையான அச்சுறுத்தல் முதல் குடும்பத்துக்கு ஏற்பட்டது. அது யாது? கொலை – ஆம், காயீன் ஆபேலைக் கொன்றான். வேதாகமத்தில் காணப்பட்ட சகோதரர்களில் ஒருவன் மற்றவனைக் கொலை செய்தான்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆதிவரலாற்றில் இதைப்போன்றே நடந்தது. ஆனால் அது கொலையல்ல. ஆனால் குடும்பங்கள் பிரிந்தன, கலைக்கப்பட்டன, துன்புற்றன; ஒரு குடும்ப உறுப்பினர் ஒரு தோட்டத்துக்கும் மற்றொருவர் வேறொரு தோட்டத்துக்கும் அனுப்பப்பட்டார். அநேக குடும்பங்கள் பிரிக்கப்பட்டன. அவர்கள் ஒருவரையொருவர் மீண்டும் சந்திக்கவேயில்லை. ஆயினும் இம்மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மீது வைத்திருந்த நம்பிக்கை அவர்களுக்குள் இருந்தது. அது, அவர்கள் பிரிந்திருந்தாலும் மனவலுவாக வைத்திருந்தது. தங்களுடைய குடும்ப உறுப்பினர்களை அவர்கள் மீண்டும் சந்திக்கவில்லை.

குடும்ப உறவுகளைப் பிரிக்கும் காரியங்கள் யாவை? விபச்சாரம், கள்ளத்தொடர்பு, திருமணத்துக்கு முன்னர் கொள்ளும் உறவு ஆகியவை குடும்பத்துக்கு ஏற்படும் ஆபத்துகள் ஆகும். ஓரினச் சேர்க்கை, மனைவியைத் துன்புறுத்துதல், குழந்தைகளை கடத்திச்செல்லுதல், பெற்றோரைவிட்டு பிள்ளைகளைப் பிரித்தல் ஆகியனவும் குடும்பங்கள் பிரிவதற்கான காரணிகளாகும்.

தேவன் ஓர் அமைப்பை உருவாக்கினார்; பாவம் அதனைப் பிரித்தது. தேவன் கணவனையும் மனைவியையும் இணைத்தார். குழந்தைச் செல்வங்கள் மூலம் ஆசீர்வதித்தார். இதுவே தேவனுடைய கட்டமைப்பு. தேவனுடைய அமைப்பை குலைக்கும் எதுவும் குடும்பத்துக்கு பாதிப்பையே கொண்டுவரும். மக்கள் தங்கள் விருப்பம்போல் செயல்படுவதால் குடும்பங்கள் உடைந்துபோகின்றன. சில வேளைகளில் குடும்பத்தை இணைத்திருக்கும் கயிறை அறுத்துவிடுகின்றனர். விவாகரத்து ஏற்படும் பொழுதும் பிள்ளைகள் வீட்டைவிட்டு வெளியேற “இனி என்னைத் தேடவேண்டாம்” என்று கூறும் பொழுதும் குடும்பத்திற்கு அச்சுறுத்தல்கள் உண்டாகின்றன.

சில வேளைகளில் கருத்து வேறுபாடுகள் பிரச்சனையை உருவாக்குகின்றன. அந்நேரத் தில் அக்குடும்பத்தை இணைத்திருந்த கயிறுகள் ஒன்றோடொன்று சிக்கி, அவிழ்க்க இயலாத முடிச்சாகிவிடுகின்றது. அப்பொழுது தேவன் நியமித்த அமைப்பை அக்குடும்பம் கெடுத்துவிடுகிறது. தேவன் குடும்பத்தை உருவாக்கினார். அதனை சில மக்களும் சமுதாயமும் அழித்துவிடுகின்றன. குடும்பங்களை ஒன்றாக்குபவர் தேவனே. அவைகள் காற்றிசைச் சரத்தின் கயிறுகள் போன்றவை. அவைகளுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் அவை குடும்பத்தை ஒன்றாகப் பிணைந்திருக்கவேண்டும். குடும்பங்கள் பிரியும்பொழுது தேவன் கட்டியிருந்த கயிறு அறுந்தும் விடுகிறது. குடும்பம் என்னும் தேவனுடைய அமைப்பில் அன்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். குடும்பத்தில் பிரிவினைகளும் உண்டாகின்றன, புது தொடர்புகளும் உண்டாகின்றன. ஒரு கயிறு அறுபடும்பொழுதோ அல்லது புது கயிறுகள் கட்டப்படும்பொழுதோ, தேவன் உண்டாக்கிய அமைப்புக்கு பழுதுவராதபடி நாம் கவனமாயிருக்கவேண்டும்.

விவாகரத்து, பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் என்பன குடும்பத்தின் கயிறுகளை அறுக்கும் வன்முறைகள் என பார்த்தோம். ஆனால் தேவன் குடும்பத்தை உருவாக்குபவர் மாத்திரமல்ல; அதனை சீர்செய்யவும் செய்கிறார். குடும்பத்திலிருந்து பிரிந்துபோனவர்களை மீண்டும் இணைக்கிறார். நம்முடைய அனுமதியில்லாமல் நமது குடும்பத்தை நாம் அழிக்க முடியாது. குடும்பத்தில் வன்முறைகள் எழும்பாதவாறு நாம் செய்ய வேண்டியதை மாற்கு 3:27 இல் காண்கிறோம்.

“குடும்பம் இணைந்திருப்பதற்கு தேவனுக்கு பயப்படுவதும், குடும்ப உறுப்பினர் ஒவ்வொரு வரும் அக்குடும்பம் தனக்குக் கிடைத்த உரிமை என்றும் அதனைப் பேணிக்காப்பது தனது கடமை என்றும் எண்ணவேண்டும்”.

நான் தனி மனிதனாக இருந்தாலும் ஒரு தகப்பனாக குடும்பத்துடன் போதிய நேரம் செலவிட வேண்டும். அவர்கள் விருப்பப்படும் காரியங்களைச் செய்வதும், தங்களுடைய விருப்பங்களை வெளியிடுவதற்கு தேவையான சுதந்திரமும் வாய்ப்பும் கொடுக்கப்படவேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் கருத்துக்களை பரிமாற்றிக் கொள்ளவேண்டும். இல்லறத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு காரணம் தகவல் தொடர்பு குறைவே ஆகும். தகப்பனும் தாயும் பிள்ளைகளுக்கு முன்பாக தங்களுடைய ஒற்றுமையைக் காட்டவேண்டும். தகப்பனிடம் தங்களுடைய தேவை நிறைவேறாதபொழுது பிள்ளைகள் தாயிடம் செல்வார்கள். தனது பிள்ளைகளுக்கு முன்பதாக கணவனுடைய கருத்துக்கு முரணாக மனைவி பேசக்கூடாது. அவர்களைக் குறைகூறுவதோ கேள்விகள் கேட்பதோ கூடாது. சில நேரங்களில் குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டியதாய் இருக்கும். மனைவியின் ஆதரவே குடும்ப உறவை வலுப்படுத்தும். இருவருக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைத் தனியே பேசிக்கொள்ள வேண்டும். ஆனால் இருவரும் பிள்ளைகள் முன்னர் ஒருமித்த கருத்தையே கூற வேண்டும்.

பிள்ளைகள் வளர்ப்பில் மனைவிக்கே பெரும் பங்கு உண்டு. பிள்ளைகள் ஆலோசனைக்கும் அனுமதிக்கும் தங்கள் தாயையே எதிர்நோக்கு கின்றனர். குடும்பத்தின் ஒழுக்கத்தையும் மனைவியே பராமரிக்கிறாள். கணவனும் மனைவியும் வேலைக்குச் சென்றாலும், வீட்டுக்குத் திரும்பியவுடன் மனைவிக்கே பிள்ளைகளை வளர்ப்பதில் அதிக பொறுப்பு உள்ளது. இதில் கணவன் மனைவிக்கு உதவலாம். மனைவியின் அழுத்தங்களைக் கவனித்து அதைக் குறைப்பதில் கணவனுக்கும் பொறுப்பு உண்டு.

பிரிந்த குடும்பங்களில் ஒத்தாசை செய்ய தேவ னுடைய பரிசுத்த ஆவியானவர் உண்டு. தேவனுடைய ஒத்தாசையைக் கேளுங்கள். உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றிவிடுங்கள். உங்கள் துணைவர் இல்லாததால் சரியான காரியங்களை செய்யாமல் இருக்காதீர்கள். தனிமையில் பிள்ளைகளை வளர்ப்பது கடினமே. உங்களுக்கு உதவி தேவையெனில் உங்கள் சபையையோ, உடன் பிறந்தவர்களையோ கேளுங்கள். நீங்கள் தனிமையில் இல்லை; உங்களுக்கு ஒத்தாசை செய்ய தூய ஆவியானவர் உண்டு. இவ்வுலகத்தில் கிடைப்பதைவிட அவரே பெரிய உதவி.

புதிய ஏற்பாட்டில் காணப்படும் தீமோத்தேயுவின் தாய் ஐனிக்கேயாள் ஒரு விசுவாசி. ஆனால் அவருடைய தகப்பன் விசுவாசியல்ல. ஆனால் அத்தாய் தனது மகனுக்கு விசுவாசத்தை ஊட்ட மிகுந்த பிரயாசப்பட்டு வெற்றி கண்டாள். பெற்றோரில் ஒருவர் விசுவாசியாய் இராவிட்டால் அது சில இடர்பாடுகளைத் தரும். பிள்ளைகளை விசுவாசத்தில் வளர்ப்பது மிகக் கடினமே. ஆனால் அது இயலாத காரியம் அல்ல.

நம்முடைய விசுவாச குடும்பங்கள் இன்று சமுதாயத்துக்கு ஓர் உதாரணமாக விளங்குகிறதா?

பிரிந்திருக்கும் குடும்பங்களை இணைக்க நாம் என்ன முயற்சிகளை எடுக்கிறோம்?

நம்முடைய பிள்ளைகள் அமைக்க இருக்கும் குடும்பங்கள் விசுவாசத்தில் முன்னேறுமா?

அருமையானவர்களே, சாத்தான் இன்று விசுவாச குடும்பங்களையே இலக்கு வைத்து அதைப் பிரிப்பதையே குறியாக இருக்கிறான். எனவே எச்சரிக்கையுடன் செயல்படுவோம்!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்