தேவன் அமைத்த முதல் குடும்பம்

திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(ஜனவரி-பிப்ரவரி 2019)

நம்முடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், வேதாகமத்தில் குடும்பத்தைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்து நாம் சிந்திக்க இருக்கிறோம்.

பல இடங்களுக்கு ஊழியத்திற்காக போகும்போது அநேக குடும்பங்களிலே உள்ள பிரச்சனைகள் நிமித்தம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது, குடும்பங்கள் உடைக்கப்படுகிறது என கேள்விப்பட முடிகிறது. இந்நாட்களிலே குடும்பங்களிலே பிரச்சனைகள் இருக்கிறது என்பதற்காக அல்ல; பிரச்சனைகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடைய குடும்பத்தைப்பற்றி வேதம் என்ன சொல்லுகிறது என்றும், இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே தேவன் நம்முடைய குடும்பத்தைப்பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்றும் நாம் பார்க்கலாம்.

என்னுடைய நண்பர் ஒருவர் விமானத்தில் பிரயாணமாய் போய்கொண்டிருந்தபோது அவரோடுகூட பக்கத்திலே ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார்களாம். அங்கே ஆகாரம் பரிமாறப்பட்ட போது, இவர் ஆகாரத்தை வாங்கி சாப்பிட்டார். ஆனால் பக்கத்திலே இருந்த அந்த பெண்மணி சாப்பிடவில்லை. அப்பொழுது அவர், நீங்கள் ஏன் சாப்பிடவில்லை என்று கேட்டாராம். அப்பொழுது அந்த பெண்மணி, நான் உபவாசம் இருக்கிறேன் என்று சொன்னார்களாம்.

அப்பொழுது எனது நண்பர், இவர் கிறிஸ்தவராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ஏனென்றால் கிறிஸ்தவர்களாகிய நாம்தான் உபவாசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம் என்று கருதிக்கொண்டு, நீங்கள் கிறிஸ்தவரா, நானும் ஒரு கிறிஸ்தவன் என்று அந்த பெண்மணியிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு அந்த பெண்மணி, கிறிஸ்தவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்றார்களாம்: ஆனாலும் நீங்கள் ஏன் உபவாசிக்கிறீர்கள் என்று கேட்டபொழுது, கிறிஸ்தவ குடும்பங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பதற்காக லூசிபரிடத்திலே, அதாவது பிசாசினிடத்திலே நாங்கள் விண்ணப்பம்பண்ணி உபவாசம் இருக்கிறோம் என்று சொன்னார்களாம். இது ஒரு வேளை நமக்கு வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் உண்மையாக நடந்த ஒரு சம்பவம். இன்றைக்கு பிசாசை வணங்குகிற ஒரு கூட்டத்து மக்கள் கிறிஸ்தவ குடும்பங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், தேவன் எவைகளையெல்லாம் கட்டுவாரோ அவைகளையெல்லாம் உடைப்பதுதான் அவனுடைய வேலை. இன்றைக்கு திருச்சபை தாக்கப்பட்டு கொண்டிருக்கலாம். அதற்குக் காரணம் திருச்சபை என்பது தேவன் கட்டியெழுப்புகிற ஒரு நிறுவனம். அதேபோல குடும்பமும் தேவனாலே கட்டி யெழுப்பப்பட்ட ஒரு நிறுவனமாகும்.

குடும்பத்தைப்பற்றிய தேவனுடைய நோக்கம்

ஆதியாகமம் முதலாம் இரண்டாம் அதிகாரத் திலே தேவன் ஆதியிலே வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்று வாசிக்கிறோம். அதற்கு பிறகு தேவன் ஒரு அருமையான ஒரு உலகத்தைப் படைத்தார். எல்லாவற்றையும் நல்லது, நல்லது என்று கண்டார் என்று வேதத்திலே வாசிக்கிறோம். ஆனால் இரண்டாம் அதிகாரம் 18வது வசனத்திலே, பின்பு தேவனாகிய கர்த்தர் மனுஷன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். அப்படியென்றால், எல்லாவற்றையும் நல்லது என்று கண்ட தேவன் மனிதன் தனியாய் இருப்பது நல்லதல்ல என்று கண்டு அவனுக்கு ஏற்ற துணையை உண்டு பண்ணுவேன் என்று சொல்லி ஏவாளை சிருஷ்டித்தார் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் என்ன அர்த்தம், தேவன் மனிதனை உண்டாக்கியதின் அடிப்படையான நோக்கம் உறவுக்காக என்பதேயாகும்.

தேவன் மிருகங்களைப் படைத்தார், மரங்களைப் படைத்தார், விண்ணிலே இருக்கிற பல விண்மீன்களைப் படைத்தார், இவைகளோடு மனிதன் உறவுகொள்ள முடியாது. பிறரோடு உறவு கொள்ளவேண்டும், அந்த உறவு முற்றுப் பெற வேண்டும் என்றால் மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல. உறவுக்காக ஏவாளைப் படைத்து ஆதாமிடத்திலே கொண்டு வந்து இரண்டு பேரையும் ஒன்றாக இணைத்தார் என்று வேதத்திலே பார்க்கிறோம்.

முதலாவது, நாம் பார்க்கிற சத்தியம் என்னவென்றால், இந்த குடும்ப வாழ்க்கை என்பது தேவனாலே நிறுவப்பட்டதாகும். குடும்பம் என்பது தேவன் உலகத்திலே நிறுவின முதலாவது நிறுவனம் என்று நாம் சொல்லலாம். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற காரியம் என்னவென்றால், தேவனுடைய மனதிலே அவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு குடும்பத்தைத்தான் அவர் சிருஷ்டித்தார். குடும்பத்தின் மூலமாக தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற வேண் டும் என்று தேவன் விரும்பினார். ஆகவே ஆதாமை படைத்த தேவன் அவன் தனிமையாக இருப்பது நல்லதல்ல என்று கண்டு ஏவாளைப் படைத்தார் என்று பார்க்கிறோம். ஆதாமையும் ஏவாளையும் தேவன் படைத்தபொழுது ஆதியாகமம் முதலாவது அதிகாரம் 26,27 ஆகிய வசனத்தில் வாசிக்கிறோம்: “பின்பு தேவன்: நமது சாயலாகவும் தமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் அனைத்து பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார்”. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற காரியம்; தேவன் ஆணையும் பெண்ணையும் தம்முடைய சாயலிலே சிருஷ்டித்தார் என்று பார்க்கிறோம்.

ஒரு தம்பி அடிக்கடி தனது அப்பா அம்மாவுக்கு கடிதம் எழுதுவான். அந்த கடிதத்திலே அவன் சொன்னானாம்: என்னுடைய ஆகாரத்தை சமைத்து சமைத்து எனக்கு களைப்பாய் இருக்கிறது, சமைக்கிற ஒரு இயந்திரம் வேண்டும் என்று. அதற்கு பிறகு கொஞ்சநாட்கள் கழித்து எழுதினான், என்னுடைய ஆடைகளை துவைத்து எனக்கு கஷ்டமாக இருக்கிறது, எனக்கு துவைக்கிற இயந்திரம் வேண்டும். அதற்குபின்பு கொஞ்ச நாட்கள் கழித்து எழுதினான், வீட்டை சுத்தம் செய்து செய்து எனக்கு களைப்பாய் இருக்கிறது, வீட்டை சுத்தம் செய்யும் ஒரு இயந்திரம் வேண்டும் என்று. இப்படியாக பலவிதமான இயந்திரங்கள் தனக்கு வேண்டும் என்று அவன் எழுதினதை அவர்கள் படித்தபோது அவனுடைய பிரச்சனையை புரிந்துகொண்டு அவனுக்கு திருமணம் ஒழுங்கு செய்துவிட்டார்கள்.

இன்றைக்கு சிலர் எண்ணுகிற காரியம் மனைவி என்பவள் ஏதோ ஒரு இயந்திரம் போன்றவள், வீட்டை சுத்தம் செய்பவள், சமைப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்ட ஒரு பெண் என்று எண்ணுகின்றனர். ஆனால் வேதத்தில் நாம் அப்படிப் பார்க்கவில்லை. ஆணையும் பெண்ணையும் தேவன் தம்முடைய சாயலிலே சிருஷ்டித்தார். உங்கள் மனைவியை இரண்டாந்தர பிரஜைகளாக நீங்கள் பாவிப்பீர்கள் என்று சொன்னால் அவரது சாயலின்படி படைத்த தேவனை நாம் அவமானப்படுத்துகிறோம். ஆகவே தேவன் இரண்டு பேரையுமே தமது சாயலிலே சிருஷ்டித்தார் என்ற அடிப்படையிலே வாழ்வதற்கு உங்களை ஒப்புக்கொடுக்க வேண்டும். இந்த நாளிலே உங்களைத் தாழ்த்தி கணவனும் மனைவியுமாக இணைந்து தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்று உங்களை அர்ப்பணியுங்கள். அவர் உங்கள் குடும்ப வாழ்க்கையை ஆசீர்வதித்து மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக மாற்றுவார்.

ஆதாமுக்கு ஏற்ற துணை

வேதாகமத்தை நாம் பார்க்கும்போது ஏவாளை படைப்பதற்கு முன்பு ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார் என்று ஆதி.2:21 வசனத்திலே பார்க்கிறோம். ஏன் அவனுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார் என்ற கேள்வி நம் மனதிலே எழும்பலாம். அதற்கு எனக்கு பதில் தெரியாது. ஒரு வேளை சிலர் சொல்லுவார்கள்; அவனுடைய விலா எலும்பை எடுத்து ஏவாளை சிருஷ்டித்தார். அந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு அவனுக்கு அயர்ந்த நித்திரையைக் கொண்டு வந்தார் என்று சொல்லுவார்கள். ஒரு வேளை அவ்வாறு இருக்கலாம். சிலர் இவ்வாறும் சொல்லுவதுண்டு: அன்றைக்கு ஒருவேளை ஆதாம் விழித்துக்கொண்டிருந்திருந்தால் ஏவாளை சிருஷ்டிக்க விட்டிருக்கவே மாட்டான். அவள் எப்படிப்பட்டவளாக இருக்கவேண்டும் அவளுடைய தோற்றம் எப்படி இருக்க வேண்டும், நிறம் எப்படி இருக்கவேண்டும், மூக்கு எப்படி இருக்கவேண்டும், கண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பல விதமான ஆலோசனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்திருப்பான். ஆகவேதான் தேவன் அவனுக்கு கனநித்திரையைத் தந்தார் என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

ஆனால் இதிலே இருக்கிற உண்மை என்னவென்றால்; தேவனை பரிபூரணமாக நாம் நம்பி அவர் என்னுடைய வாழ்க்கையிலே ஏற்ற துணையைக் கொண்டுவருவார் என்ற நம்பிக்கையோடு கூட நாம் அமைதலாக காத்திருக்க வேண்டும், தேவனை நாம் நம்ப வேண்டும்.

என்னை அழைத்த தேவன் நான் பாவத்திலே விழுந்தபோது என்னை மீட்பதற்காக சிலுவையிலே தமது உயிரைக் கொடுத்தார். இன்றைக்கு என்மூலம் என் வாழ்க்கையிலே கிரியைச் செய்து கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியானவராகிய திரித்துவ தேவன் என்மேல் அக்கறை உடையவராய் இருக்கிறார். ஆகவே என் வாழ்க்கையிலே சிறந்த காரியத்தையே செய்வார் என நம்பவேண்டும்.

இன்றைக்கு திருமண வாழ்க்கையிலே பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. சிலர் என்னுடைய பிள்ளைகளுக்கு வயதாகிக் கொண்டேபோகிறது, இன்னும் திருமணம் ஆகவில்லையே அதற்காக ஜெபியுங்கள் ஜயா என்பார்கள். சிலர், ஏற்ற துணையை நீங்கள் கண்டுபிடித்து தாருங்கள் என்று கேட்பதுண்டு. இன்னும் சிலர், ஜெபித்து ஆண்டவர் என்ன சொல்லுகிறார் என்பதைக் கேட்டு எங்களுக்கு சொல்லுங்கள் என்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நான் சொல்லுகிறது என்னவென்றால்; தேவனை நீங்கள் நம்பவேண்டும். நம்முடைய தேவன் யார் அவரை நாம் எப்படி நம்புகிறோம் என்பதுதான் அடிப்படையான கேள்வியாகும்.

நம்முடைய தேவன் பெரியவர்! வானம் பூமி எல்லாவற்றையும் படைத்தவர். மனிதனைப் படைத்தவர், மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்ட தேவன் நம்முடைய வாழ்க்கையிலே சிறந்த காரியத்தையே செய்வார். தேவன் நமக்கு அதனதன் காலத்திலே சகலத்தையும் சிறந்த முறையிலே செய்கிறார் என்று வேதாகமம் நமக்கு சொல்லுகிறது. ஆகவே நம்முடைய வாழ்க்கையிலே சிறந்த காரியத்தையே தேவன் செய்வார் என்ற அடிப்படையிலே நாம் அவரை நம்பவேண்டும். நம்பி நம்முடைய வாழ்க்கையை அவருக்கே அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணித்துவிட்டு அமைதலாக காத்திருக்க வேண்டும். நம்முடைய ஆவி, ஆத்மா, சரீரம் குடும்பம் அனைத்தையும் அவருக்கு அர்ப்பணித்துவிட வேண்டும். அவர் மேல் நம்பிக்கை வைத்து அவருடைய வாக்குத் தத்தங்களைச் சார்ந்து நாம் அமைதலாக இருக்கவேண்டும். ஆங்கிலத்திலே சொல்வேனென்றால், “We must trust God, entrust our life to God and rest in His Promises”. இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற உங்கள் வாழ்க்கையிலே தேவனை நீங்கள் நம்புகிறீர்களா?

ஆதாம் அயர்ந்த நித்திரை பண்ணிக்கொண்டிருந்த பொழுது ஏவாளை படைத்து ஆதாமிடத்திலே கொண்டுவந்தார் என்று பார்க்கிறோம். அந்த இரண்டு பேரையும் இணைத்து அந்த இரண்டு பேரும் இணைந்து ஒருவராக மாறினார்கள். இவ்வாறு முதல் குடும்பம் உலகத்திலே உருவானது.

ஒருமுறை இவ்விதமான செய்தியை நான் கொடுத்தபோது, ஒரு வாலிப தம்பி என்னிடத்திலே வந்தான். அண்ணன், நீங்கள் பண்ணின பிரசங்கம் நன்றாக இருந்தது. ஆனால் அந்த உதாரணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொன்னான். என்னவென்று கேட்டேன். ஆதாம் – ஏவாள் பற்றி நீங்கள் பேசினீர்கள். அன்றைக்கு ஆதாம் கண் விழித்துப் பார்த்தபோது அவனுக்கு முன் நின்றது ஒரேயொரு ஏவாள்தான். ஆகவே தேவசித்தத்தைக் கண்டுபிடிப்பதிலே அவனுக்கு பிரச்சனையே இல்லை. உடனே அவளை ஏற்றுக்கொண்டான். ஆனால் இன்றைக்கு என் தலையைச் சுற்றிலும் அநேக ஏவாள்கள் இருக்கிறார்களே! யாரைப்போய் கண்டுபிடிப்பது? கல்லூரிக்குப் போனால் அங்கே அநேக ஏவாள்கள் இருக்கிறார்கள் அல்லது பஸ் ஸ்டாப்பிற்குப் போனால் அங்கேயும் ஏவாள்கள் இருக்கிறார்கள் அல்லது வாலிப கூட்டங்களுக்குப் போனால் அங்கே அநேக ஏவாள்கள் இருக்கிறார்கள் யாரைக் கண்டுபிடிப்பது என்று வேடிக்கையாக சொன்னான்.

இந்த விஷயத்திலே கர்த்தருடைய சித்தத் தைப் புரிந்துகொள்ளவேண்டுமென்று சொன்னால் நாம் அவரை நம்பவேண்டும். அவருடைய பரிபூரண சித்தத்திற்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும், அவர் சிறந்த காரியத்தை நமக்காகச் செய்வார் என்று சொல்லி நீங்கள் பொறுமையோடுகூட காத்திருக்கும்போது அவர் அதினதின் காலத்தில் சகலத்தையும் நன்மையாக நிறைவேற்றுவார்.

மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று கண்ட தேவன் ஏவாளை சிருஷ்டித்தார் என்று பார்க்கிறோம். ஆகவே ஏவாள் இல்லாதபடிக்கு மனிதன் பரிபூரணப்பட்டவன் அல்ல, இதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்த குடும்ப வாழ்க்கையிலே மனிதன் மாத்திரம் தனியாய் அதை நடத்தமுடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதே வேளையில் மனைவியை ஒரு இயந்திரத்தைப்போல பாவிக்கக்கூடாது. அவள் கணவனுக்கு உதவி செய்ய சிருஷ்டிக்கப்பட்டாள் என்ற எண்ணத்தோடுகூட மனைவிகளும் இருக்கவேண்டும். ஒரு மனிதன் என்னிடத்தில், “ஆதாமுக்கு ஏற்ற துணையை தேவன் உண்டாக்கினார்; ஆனால் என் மனைவி எனக்கு துணையாக அல்ல; உபத்திரவத்தைக் கொடுக்கிறவளாக மாறிவிட்டாள்” என்று சொன்னார்.

நான் ஒன்றை உங்களுக்கு சொல்லுகிறேன். தேவன் உபத்திரவத்தைப் படைக்கவில்லை, துணையைத்தான் படைத்தார் என்று அங்கே பார்க்கிறோம். ஆனால் சில மனைவிமார் சில கணவனுக்கு உபத்திரவத்தை கொடுக்கிறவராக மாறிவிடுகிறார்கள். ஒருவேளை இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற உங்களுடைய வாழ்க்கையிலே உங்கள் கணவனுக்கு உறுதுணையாக இருக்காமல் உபத்திரவத்தையே கொடுக்கிறவர்களாக நீங்கள் இருப்பீர்களானால் இன்றைக்கு மனந்திரும்பி தேவன் எங்களை இணைத்தார் என்ற உறுதியோடுகூட அவருக்கு அர்ப்பணிக்கவேண்டும். அவரை நம்பி அவர் வாக்குத்தத்தங்கள்மேல் அமைதலாக காத்திருங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் அவருடைய சித்தத்ததை நிறைவேற்றுவார்.

(தொடரும்)


உங்களுக்குத் தெரியுமா?

குடும்பம் என்பது சமுதாயம் என்ற கட்டிடத்தின் கற்கள்!

பரிசுத்தமான வாழ்க்கையும், சரியான மதிப்பீடுகளுமே ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லக்கூடிய மேலான சொத்து!

சத்தியவசனம்