உங்கள் குடும்பத்தை கிறிஸ்துவுக்காக ஆதாயப்படுத்துங்கள்!

Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2019)

அப்போஸ்தலனாகிய பவுலும், நற்செய்திப் பணியில் உடன் ஊழியனுமான சீலாவும் நற்செய்தியைப் பொதுமக்களுக்கு அறிவித்த குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அப்போஸ்தலர் 16ஆம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சியை நாம் வாசிக்கலாம்.

நடுராத்திரியில் பவுலும், சீலாவும் பாட்டுப் பாடிக்கொண்டும், ஜெபித்துக்கொண்டும் இருந்தார்கள். அப்பொழுது திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி உண்டாயிற்று. அந்த அதிர்ச்சியில் சிறைச்சாலையின் கதவுகள் எல்லாம் திறந்துவிட்டன. உள்ளே அடைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் அப்பொழுது தப்பி ஓடிவிட நல்ல வாய்ப்பு இருந்தது. சிறைக் காவலாளன் தூங்கிக்கொண்டிருந்தான். திடீரென்று அவன் விழித்தெழுந்தபோது சிறைக் கதவுகளெல்லாம் விரிந்து திறந்து கிடப்பதைக் கண்டான். அவற்றின்மூலம் கைதிகள் அனைவரும் தப்பி ஓடியிருப்பார்கள் என்று நினைத்துப் பயந்தான். தன்மேல் குற்றஞ்சுமரும் என்று பயந்து தன் பட்டயத்தை உருவித் தன்னைக் கொலை செய்து கொள்ளப்போனான்.

இதைக்கண்ட “பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான்” (அப்.16:28). அந்தச் சிறைக் காவலாளன் அங்கு நடந்ததெல்லாம் தேவச்செயல் என்று உணர்ந்து, பயந்து நடுங்கிக் கொண்டு பவுலிடம் வந்து, “ஆண்டவமாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான் (வச.30). இதற்குப் பவுல் கொடுத்த பதில் வேதாகமத்திலேயே மிக முக்கியமான வசனங்களில் ஒன்று. “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” (வச31). ஒரு தனிமனிதனுக்கும், அவனுடைய குடும்பத்துக்கும் இரட்சிப்படைவதற்குரிய தேவனுடைய வாக்குத்தத்தம் இது.

இந்த சத்தியத்தை எத்தனையோ பெற்றோர் முதலிலேயே அறிந்திருந்தார்களானால் அவர்களுடைய வாழ்க்கையில் அவர்கள் சிந்திய எவ்வளவோ கண்ணீரையும், அனுபவித்த கவலைகளையும், வேதனைகளையும் தவிர்த்திருக்கலாம். இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசத்துடன் ஏற்றுக் கொண்டிருந்தார்களானால் அவர்கள் குடும்பம் இரட்சிக்கப்பட்டிருக்கும். ஒரு விசுவாசியின் குடும்பம் இரட்சிக்கப்படுவது, வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் மாபெரும் சத்தியங்களில் ஒன்று. நீதிமொழிகள் 11:21 இப்படிக் கூறுகிறது: “நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்”. விடுவிக்கப்படுவது எதிலிருந்து? நரகத்திலிருந்து விடுவிக்கப்படும், சாத்தான் பிடிகளிலிருந்து விடுவிக்கப்படும், நம் ஆண்டவருக்கு எதிர்ப்பான அனைத்திடமிருந்தும் விடுவிக்கப்படும். இந்த வாக்குத்தத்தத்தில் எல்லாமே உள்ளடங்கியிருக்கிறது.

தேவன், தமது கிருபையில், விசுவாசிக்கு ஒரு பணக்காசோலையைக் (Cheque) கொடுத்திருக்கிறார். இந்தக் காசோலையைக் கொடுத்துக் கடவுளின் கணக்கிலிருந்து பணம் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த விசுவாசி அந்தக் காசோலையில் தனக்குத் தேவையான பணத்தின் தொகையைப் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும்.

தனிமனிதனின் விசுவாசம்

ஒரு தனி மனிதன் இரட்சிக்கப்படத் தன் விசுவாசத்தைச் செயல்படுத்த வேண்டுமா? ஆம், நிச்சயமாக. எபேசி.2:8 இப்படிக் கூறுகிறது: “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்”. ஆனால் நீங்கள் இப்படிக் கேட்கலாம். பவுல் அந்தச் சிறைச்சாலைக்காரனிடம், “கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும், உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றானே, அப்படியானால், இரட்சிக்கப்பட ஒவ்வொருவருக்கும் விசுவாசம் வேண்டும் என்பது எப்படிப் பொருந்தும்?

அந்தத் தனிநபர் இரட்சிப்படைவதற்குக் கொண்ட விசுவாசமே, அவனுடைய குடும்பத்தையும் இரட்சிப்புக்குக் கொண்டுவரும். அவர்களும் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைப்பார்கள், இரட்சிக்கப்படுவார்கள். இதுவே அந்தக் கேள்விக்கு விடையாகும். ஆனால் அவர்கள் விசுவாசிக்கவில்லையென்றால்? அது அந்த விசுவாசியின் விசுவாசக் குறைவே காரணமாகும். ஏனென்றால் ஒருவர் விசுவாசித்தால் அந்தக் குடும்பமே இரட்சிக்கப் படும் என்று தேவன் கூறுகிறார்.

அந்த வாக்குத்தத்தத்தின் முதல் பகுதியை ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி” – இதை விசுவாசிக்காமல், “உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்னும் இரண்டாம் பகுதியை நீங்கள் கேட்கமுடியாது. நீங்கள் முதற்பகுதியை விசுவாசித்துவிட்டு, வசனத்தின் இரண்டாம் பகுதியை விசுவாசிக்காவிட்டால், உங்களிடம் கர்த்தர் கூறும் அவ்வளவையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விசுவாசம் இல்லை.

நீங்கள் இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட் சகர் என்று விசுவாசித்தால், நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். பவுல் சிறைச்சாலைக்காரனிடம் கூறியபடி இயேசுகிறிஸ்துவை உங்கள் இரட்சகர் என்று விசுவாசித்து ஏற்றுக்கொண்டால், உங்கள் குடும்பம் தானாகவே இயேசுவிடம் திரும்பும். உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று விசுவாசிப்பது போலவே உங்கள் குடும்பமும் வந்து சேரும் என்று நிச்சயமாக நம்பலாம்.

விசுவாசியின் விசுவாசத்தின் பலனாக, அவனுடைய குடும்பத்திற்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டிருந்தால் தேவன் அவர்களை நித்தியமான இரட்சிப்புக்குள் வழிநடத்த ஏதுவாகும் என்பது உண்மை. குடும்பத்தினருக்கு நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிப்பார்கள். பவுலும் சீலாவும் “அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள்” (அப். 16:32). “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்,103:17).

ஒரு பெற்றோர் தன் பிள்ளையினுடைய ஆத்துமாவுக்காக தேவனிடம் வேண்டுகிறார். இங்கு ஒருவனுடைய இரட்சிப்பு அவனுடைய விசுவாசத்தைப் பொறுத்தது என்று கூற முடியாது. இது ஒரு சுலபமான கிறிஸ்தவ அனுபவமாகவும் ஆகிவிடாது. உங்கள் விசுவாசம் காரணமாக தேவன் உங்கள் குழந்தையை இரட்சித்துக்கொள்ளுகிறார். ஏனெனில், இரட்சிப்பு கர்த்தருடையது.

சில குழுக்கள் தேவனோடு உடன்படிக்கையின் உறவு உண்டென்று போதிக்கிறார்கள். சிலர் ஒரு பிள்ளை ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்துவிட்டால் அது தேவனோடு உடன்படிக்கை உறவு கொண்டுவிடுகிறது. ஒரு சடங்கின் மூலமாக அதன் பெற்றோர் இதை உறுதி செய்கிறார்கள் என்று கூறுகின்றனர். இது வேதத்துக்கு உகந்தது என்று நான் நம்பவில்லை. இங்கே நான் வலியுறுத்துவதும் இதுவல்ல. ஒருவன் இயேசுவை விசுவாசித்து இரட்சகராக ஏற்றுக்கொண்டால், தனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்பட அவன் எதிர்பார்க்கலாம் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.

இவ்விஷயத்தில் அந்தத் தனிநபருக்குக் கிறிஸ்துவின் மீது பூரண விசுவாசம் இருப்பதால் அவனது குடும்பத்தார் நற்செய்தியை அறிந்திருப்பதால், அவர்களும் இயேசுவை நம்பி, அவரைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளுவார்கள்.

நோவாவும் அவனுடைய குடும்பமும்

“கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன்” (ஆதி,7:1). இந்தப் பகுதியைக் குறித்து அறிவர் ஹென்றி அயன்சைட் இவ்வாறு கூறுகிறார்: “தம்முடைய மக்களின் குடும்பத்தார் அனைவரையும் காப்பாற்றுவது தேவனுடைய விருப்பமாயிருந்தது. நோவாவின் குடும்பம் பேழையில் இடம்பெற்றது. ஏனெனில் அவர்களுடைய தகப்பன் – நோவா தேவனை ஏற்றுக்கொண்டு அவருக்கு முன்பாக நீதிமானாக நடந்துகொண்டார். குடும்பத்தாரைப் பொறுத்த வரையில் தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிய வேண்டியது அவர்களது கடமையாக இருந்தது.

தேவன் அழைத்தபடியே அவர்கள் பேழைக்குள் பிரவேசித்து, பாதுகாப்பைப் பெற்றுக்கொண்டார்கள். எனவே அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள். ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்கள். தேவனற்றவர்களின் மீதுள்ள தேவகோபாக்கினையிலிருந்து தப்பினார்கள். நோவா தேவனை விசுவாசித்தான். தனது குடும்பத்தார் அனைவரும் இரட்சிக்கப்படும்படியாக, தேவனை விசுவாசித்தான். அதன்மூலம் அவர்கள் அனைவருக்காகவும் நல்ல ஆயத்தம் செய்திருந்தான்.

நோவாவின் விசுவாசம் காரணமாக, குடும்பத்தாரின் விசுவாசத்துடன் அவருடைய வார்த்தைக்கு அவர்களைக் கீழ்ப்படியச் செய்வது வசதியாயிருந்தது. அவர்களும் நோவாவின் விசுவாசம், நீதி இவற்றின் அடிப்படையில், அவனுடன் சேர்ந்து பேழையில் பிரவேசித்துக் காக்கப்பட்டார்கள்.

ராகாபும் அவளுடைய குடும்பமும்

எரிகோ நகரத்தைச் சுற்றிப்பார்த்து வரும்படி யோசுவா வேவுகாரர்களை அனுப்பினான். அவர்கள் ராகாப் என்னும் வேசியின் வீட்டில் போய்த் தங்கினார்கள். வேவுகாரர்கள் வந்ததை எரிகோவின் ராஜா கேள்விப்பட்டு, அவர்களைப் பிடித்துவர ஆட்களை அனுப்பினான். அவர்கள் வந்து கேட்டபோது, என் வீட்டுக்கு இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் யாரென்று நான் அறியேன். அவர்கள் மாலை இருட்டுகிற வேளையிலே இங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்று எனக்குத் தெரியாது. நீங்கள் போய்த் தேடினால் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டாள். ஆனால் அவள் அவர்களைத் தன் வீட்டின்மேல் தளத்தில் சணல்தட்டையினுள்ளே ஒளித்து வைத்திருந்தாள். தேடிவந்தவர்கள் போனதும் ராகாப் இந்த வேவுகாரர்களிடம் சென்று, ‘நாங்கள் உங்களை இந்த ஜன்னல் வழியே இறக்கிவிடுவோம். நீங்கள் தப்பிச்செல்லுங்கள். பின்னர் இஸ்ரவேலர் எரிகோ பட்டணத்தைப் பிடித்துக்கொள்ள வரும்போது, என்னையும், என் குடும்பத்தையும் தாக்காமல் காப்பாற்ற வேண்டும்’ என்றாள். அதற்கு அவர்கள், “இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள்… என்றார்கள். அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்” ராகாப் இஸ்ரவேலருக்குச் செய்த உதவிக்குப் பிரதி உபகாரமாக அவளுடைய குடும்பம் முழுவதும் இரட்சிக்கப்பட்டது (யோசு.2:12-21, 6:25).

ஆபிரகாமும், உலகம் ஆசீர்வதிக்கப்படுதலும்

தனிப்பட்ட நபரின் விசுவாசத்துக்கு வேதாகமத்தில் உள்ள ஆபிரகாமின் விசுவாசமே முதல் உதாரணம். இதற்கு இணை வேறு இல்லை. இந்த ஆபிரகாமின் விசுவாசம் காரணமாக அவனது இரத்த சம்பந்தமான குடும்பத்தார் அனைவரும், அவனுடன் ஆவிக்குரிய உறவுகொண்டிருந்த மக்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டனர். ஆபிரகாம் அவனது வீட்டிலிருந்தும் நாட்டிலிருந்தும் அவற்றை விட்டுவிட்டு அவருக்குப் பின்செல்லும்படி அழைக்கப்பட்டான். ஆதியாகமம் 12:1இல் ஆபிரகாமின் அழைப்பைக் காண்கிறோம். வசனங்கள் 2,3 இவற்றில் தேவன் அவனுக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களின் வாக்குறுதி காணப்படுகிறது.

இந்த ஒரு மனிதனின் விசுவாசத்தால், அவனது குடும்பம் முழுவதற்கும் ஆசீர்வாதம் வந்து சேர்ந்தது. ஆபிரகாமின் குடும்பத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் இரட்சிக்கும் விசுவாசம் இருக்க வேண்டியதாய் இருந்தது. ஆபிரகாமின் விசுவாசம் காரணமாக, நிபந்தனையுள்ள ஆசீர்வாதங்கள் இந்த உலகம் முழுவதுக்கும் வழங்கப்பட்டன.

ஆபிரகாமின் வாழ்க்கை உதாரணம் அவன் ஒருவன் மூலம் இந்த உலகம் முழுவதும் ஆசீர்வாதம் பெறும் நிலையைக் காட்டுகிறது. இதிலிருந்து நம்மில் ஒருவருடைய விசுவாசத்தின்மூலம் எதிர்கால உலகமே ஆசீர்வதிக்கப்படும் நிலை உருவாகலாம் என்று தெரிகிறது. இன்றைய விசுவாசிகள் தேவனுடைய கிருபையின் நற்செய்தி வழங்கும் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் முற்பிதாவான ஆபிரகாமின் விசுவாசமே.

யோசுவாவும் அவனுடைய குடும்பமும்

யோசுவாவின் வாழ்க்கையின் இறுதி நாட்களில் நடந்த ஒரு சம்பவம், ஒரு மனிதன் தன் விசுவாசத்தினால் தன் குடும்பத்துக்கு எதையாவது சம்பாதித்துக் கொடுக்கமுடியும் என்று காட்டுகிறது. யோசுவா இஸ்ரவேலருக்குக் கொடுத்த கடைசி அறைகூவல், இதற்கு உதாரணமாகும். அவன் மக்களுக்கு முன்பாக ஆண்டவர் அவர்களுக்கு இரக்கமாய், நீண்ட நாட்களாய் செய்துவந்த நன்மைகளை ஒவ்வொன்றாக நினைவுபடுத்தினான். தேவனுடைய மகத்துவத்தை அவர்கள் உணரச்செய்தான். இறுதியில், அவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். “யாரைச் சேவிப்பீர்கள்? என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்;.. நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்” (யோசு.24:15) என்றான்.

யோசுவா தன் குடும்பம் முழுவதின் சார்பிலும் உறுதியாகத் தங்கள் தீர்மானத்தைக் கூறினான். யோசுவா முதிர்ச்சியின்றிப் பேசி விட்டானா? யோசுவா தன்னுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் தனது பிள்ளைகளின்மேல் வைக்கவில்லை. ஆனால் அவனை ஆசீர்வதிக்கும்போது தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தையே உறுதியாகப் பற்றிக் கொண்டான். தனது விசுவாசத்தை தேவன் மதித்துத் தன் குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் இரட்சிப்புக்கு வழிநடத்துவார் என்று நம்பினான். நிச்சயமாகவே யோசுவா தன் குடும்பத்தார் அனைவருக்கும் தேவசத்தியத்தை எடுத்துக்கூறி, அவரையே பின்பற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து, நம்பச் செய்திருந்தான். எனவே ஒவ்வொருவருக்கும் தேவனிடம் தங்கள் விசுவாசத்தை அறிக்கை செய்யும் நிலை இருந்தது.

தாவீதும் அவனுடைய குடும்பமும்

தேவன் தாவீதுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம், இரட்சிப்பு மட்டுமல்ல, இன்னும் பல காரியங்களை உள்ளடக்கியிருந்தது. எனினும் தேவன் ஒரு குடும்பத்தாரை ஆசீர்வதிப்பதுபோலவே இருந்தது. “ உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி… ஒரு உடன் படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்” (ஆதி.17:7) என்று தேவன் ஆபிரகாமிடம் வாக்குத்தத்தம் செய்திருந்தார். பின்னர் தேவனை விசுவாசித்த தாவீது, தேவனிடமிருந்து, அவனுடைய சிங்காசனம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்னும் வாக்குத்தத்தத்தைப் பெற்றான் (2சாமு,7:13). அந்த வாக்குத்தத்தம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது இரண்டாவது வருகையின்போது இந்த உலகத்துக்கு வந்து தாவீதின் சிங்காசனத்தில் அமரும்போது நிறைவேறும்.

கொர்நேலியுவின் குடும்பம்

தேவன் குடும்பங்களோடு கிரியை செய்வதற்குப் புதிய ஏற்பாட்டிலும் ஒரு உதாரணம் இருக்கிறது. கொர்நேலியு தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டார் அனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான். இப்படிப்பட்ட நீதிமானான கொர்நேலியு தேவ தரிசனம் கண்டு, பேதுருவை ஆள் அனுப்பி வரவழைத்து, அவன் மூலமாக தேவசத்தியங்களையும், நற்செய்தியையும் பேசக்கேட்டு அவன் தன் குடும்பத்தாரை மாத்திரமல்ல, தன் வீட்டில் கூட்டிச் சேர்த்திருந்த அவ்வளவு மக்கள்மேலும் பரிசுத்த ஆவியைப் பெறவும், அனை வரும் ஞானஸ்நானம் பெறவும், இப்படியாக இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவும் வழிவகுத் தான். இந்த சம்பவம் அப்போஸ்தலர் 10ஆம் அதிகாரத்தில் உள்ளது.

விசுவாசமும் கவலையும்

தங்கள் பிள்ளைகள் இரட்சிக்கப்பட வேண்டுமென ஜெபம் பண்ணும் பல தாய்மார்கள், அவர் கள் தீயவழிகளில் செல்வதைக் கண்டு கவலைப்படுகிறார்கள். அவர்களுடைய ஜெபம் தேவ வாக்குத்தத்தத்தை ஆதாரமாகக் கொண்ட விசுவாச ஜெபமல்ல. ஒருவேளை அவர்களுக்கு தேவ வாக்குத்தத்தத்தைப் பற்றித் தெரியாமல் இருக்கலாம். அவர்களது விசுவாசம் அவர்களை மட்டுமல்ல, அவர்களுடைய வீட்டாரையும் இரட்சிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தால் நலமாயிருக்கும்.

விசுவாசமும், கவலையும் ஒருபோதும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதில்லை. விசுவாசம் உள்ள இடத்தில் கவலை இராது. கவலை உள்ள இடத்தில் விசுவாசம் இராது. பலருக்கு ஆசீர்வாதமாயிருந்த ஒரு வாக்குத்தத்தம் பிலிப்பியர் நிருபத்தில் உள்ளது. “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” (பிலி.4:6,7).

விசுவாசத்தோடு இணைந்து ஜெபம் ஏறெடுக்கப்பட்டால், அங்கே நிச்சயமாக நன்றி கூறுதல் இடம்பெறும். உண்மையான விசுவாசம் விசுவாசியின் இருதயத்துக்குச் சமாதானத்தைக் கொண்டுவரும். அவன் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு தேவனுக்கு நன்றிகூறித் துதித்து ஸ்தோத்திரம் செலுத்துவான். அவ்விசுவாசம் நிறைவேறி, ஆசீர்வாதங்களைத் தந்ததற்காகச் சந்தோஷப்படுவான்.

குடும்ப இரட்சிப்பைப்பற்றி நாம் பேசும்போது, பெற்றோரின் மரணத்துக்குமுன் பிள்ளைகள் இயேசுகிறிஸ்துவைத் தங்களுக்கு ஆண்டவரும் இரட்சகருமானவர் என்று அறிந்துகொள்ளுவார்கள் என்று நிச்சயமாகக் கூறமுடியாது. இதுதான் ஜாண் என்ற ஒரு சிறுவனின் அனுபவம். ஜாண் எவருக்கும் கட்டுப்படாத ஒரு சிறுவன். தன் தாய்க்கும் கீழ்ப்படியாமல் தன் விருப்பம்போல அலைந்து கொண்டிருந்தான். அவனது தாயோ அவளுடைய எல்லாப் பிள்ளைகளும் இரட்சிக்கப்பட வேண்டும், இயேசுவின் பிள்ளைகள் ஆக வேண்டும் என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தார். இது அந்தப் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அந்தத் தாய் தன் விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஆதாரமாகக் கொண்டது என்று கூறினார். தேவன் இரட்சிப்பு அவளுக்கு மட்டுமல்ல, அவளுடைய வீட்டார் அனைவருக்கும் உண்டு என்று வாக்களித்திருந்தார். அந்தத் தாய் மரித்துவிட்டார். ஐந்து வருடங்கள் கடந்த பின் ஒரு ஜெபக்கூட்டத்தில் ஜாண் எழுந்து நின்றான். “என்னுடைய அம்மாவின் இடைவிடாத ஜெபத்தின் பலனாக இன்று நான் இயேசுவின் பிள்ளையாக மாறிவிட்டேன். அவரது இரட்சிப்பும், ஆசீர் வாதமும் எனக்குக் கிடைத்திருக்கிறது” என்று சாட்சி கூறினான்.

குடும்ப இரட்சிப்பின் இரகசியம்

1கொரி.7:14 அவிசுவாசியான புருஷன், தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான். அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே! இப்பொழுதோ அவர்கள் பரிசுத்தமாய் இருக்கின்றனர். இவ் வசனத்தில், ‘பரிசுத்தமாக்கப்படுதல்’, ‘பரிசுத்தம்’ என்னும் சொற்கள் “தனியாகப் பிரிக்கப்படுதல்” என்னும் பொருள் உள்ள மூலவார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

ஒரு வீட்டில் கணவனோ, மனைவியோ ஒருவர் விசுவாசி, மற்றொருவர் அவிசுவாசி. இருவரது வாழ்க்கை முறைகளும் வேறுபட்டவை. ஒரே வீட்டில் கூடி வாழும் இவர்களில் விசுவாசி மற்றவருக்கு முன்பாக பிரித்தெடுக்கப்பட்ட பரிசுத்த வாழ்க்கையை வாழ்ந்துகாட்ட வேண்டும். கூடிவாழும் அவிசுவாசி இதைப் பார்த்துக்கொண்டே இருப்பார். தகப்பனோ, தாயோ இருவரோ, ஒருவரோ விசுவாசியாயிருந்தாலும், அவிசுவாசியாய் இருந்தாலும், பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டவர்களாய் விசுவாசிகளாய் இருந்தால், பெற்றோருக்கு முன்பாக பரிசுத்த வாழ்க்கை வாழ்வார்கள். இவ்வாறு விசுவாசிகளான கணவன் அல்லது மனைவி, அல்லது பிள்ளைகள் இவர்களின் பரிசுத்தமான, பிரிக்கப்பட்ட நடத்தையைக் கண்டு குடும்பத்தில் உள்ள அவிசுவாசிகளான மற்றவர்கள் இரட்சிக்கப்படவும், விசுவாசிகள் ஆகவும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வார். இவ்வாறு அந்தக் குடும்பம் முழுவதுமே இரட்சிக்கப்பட, அனைவரும் விசுவாசிகளாக வாய்ப்பு உண்டாகும். எனவே தைரியமாயிருங்கள்!

ஒருவேளை உங்கள் வீட்டில், உங்கள் குடும்பத்தில் நீங்கள் மட்டுமே இரட்சிக்கப்பட்டவர்களாய் இருக்கலாம். ஆனால் தேவனுடைய வாக்குத்தத்தம் உண்மையாய் நிறைவேறும்!

ஒருவேளை இதன் பலனை உங்கள் வாழ்வில் நீங்கள் காண முடியாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் குடும்பத்தார் அனைவரும் இரட்சிப்படைந்துவிட்டதாக விசுவாசித்து நீங்கள் தேவனைத் துதிக்கலாம், நன்றி கூறலாம்!

மொழியாக்கம்: G.வில்சன்

சத்தியவசனம்