அந்த திராட்சச் செடி யார்?

சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2019)

“நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். ……கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள் ” (யோவா.15:1-4).


“அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” தனக்கு கந்த ஒரு வாக்குறுதியை வேதாகமத்திலே பொறுக்கி விட்ட குமாரின் குதூகலம் மறுகணமே காற்றுப் போன பலூன் போலாகிவிட்டது. ஏன் தெரியுமா? “மகனே, நீ துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல், பாவிகளுடைய வழிகளில் செல்லாமல், கேலி பண்ணுகிறவர்களுடன் சேராமல், இரவும் பகலும் கர்த்தருடைய வேதத்தில் நீயே விரும்பி பிரியமாயிருந்து அதில் தியானமாயிருந்தால்தான் நீ செய்வதெல்லாம் வாய்க்கும்.” அப்பாவின் விளக்கத்தைக் கேட்ட குமார் அமைதியாகிவிட்டான். நல்லது வேண்டும், ஆண்டவருடைய பிள்ளைகளாக நல்ல கனிகொடுத்து வாழ வேண்டும் என்ற நமது விருப்பங்கள் சரியானவையே. ஆனால் அதே சமயம் நாம் விரும்புகிறபடியே நமக்கு ஆகவேண்டும் என்றும் விரும்புகிறோம். இங்கேதான் தெரிவு தலைநீட்டுகிறது. மெய்யும் பொய்யும் ஒரே இடத்தில் இருக்கமுடியாததால் எதைத் தெரிவுசெய்வது என்பதை, சூழ்நிலைகளை வைத்துத் தீர்மானிக்க எத்தனிக்கிறோம். இங்கேதானே நமது கால்கள் இடறிப் போகின்றன.

மனிதனின் அவலநிலை:

“மிக நன்றாயிருந்தது” என்று தேவன் கண்ட படைப்பு, மனிதன் பாவத்தில் விழுந்தபோது எதிரும் புதிருமான விஷயங்களைத் தோற்றுவிக்க ஆரம்பித்தது. நன்மை தீமை, நல்லது கெட்டது, மெய்யான பொய்யான என்று ஏற்பட்டதால், “தெரிவு” உண்டானது. தேவசாயலில் படைக்கப்பட்ட மனுஷனும் மெய்போன்று காட்சியளித்த பொய்யினால் வஞ்சிக்கப்பட்டு, தவறானதைத் தெரிந்துகொண்டதால், நன்மை எது, நல்லது எது, மெய்யானது எது என்று தெரிந்திருந்தாலும், “தெரிவு” என்றதொரு சோதனைக்குள் தள்ளப் பட்டுப்போனான் மனிதன். இது மனுக்குலத்திற்கு நேரிட்ட கேடு என்றுதான் சொல்லவேண்டும். இன்றும் பொய் தன்னை மெய்போலக் காட்டி நம்மையெல்லாம் வஞ்சிக்க ஒவ்வொரு கணமும் தருணம் பார்த்து நிற்கிறது. அப்படியானால் நாம் எங்கே வஞ்சிக்கப்படுகிறோம்? நமது சுபாவம் தவறு செய்கிறதா? அல்லது, நமது தெரிவு வஞ்சகத்தில் அகப்பட்டு கறைப்பட்டுவிட்டதா?

ஒரு காரியத்தை இன்று நாம் உணர வேண்டும். சுபாவத்தால் தடுமாறி, தெரிவிலே நிலை குலைய நாம் அன்றைய இஸ்ரவேலர் அல்ல; ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் கிருபையாக மீட்புப்பெற்று, அவருக்குள், அவருடைய மகிமையின் மகிழ்ச்சியில் வாழுகிறவர்கள். பரிசுத்தாவியானவரின் ஆளுகை இன்று நமக்கு இருக்கும்போது, பகுத்தறிவின் ஆவியின் வரத்தையே நாம் பெற்றிருக்கும் போது, பொய் எது மெய் எது என்று நமக்குத் தெரியாது என்று சொல்லமுடியாது. என்றாலும் ஏன் நாம் இன்னமும் அடிக்கடி வஞ்சிக்கப்படுகிறோம்? இதற்கு ஒரே பதில், அன்று நான் யாராய் இருந்தேன், இன்று நான் யாருடைய பிள்ளை, நான் யாரில் நிலைத்து வாழுகிறேன், என் வாழ்வில் வெளிவருகின்ற கனிகளை, நான் யாரிலிருந்து வெளிப்படுத்துகிறேன், அவர் யார், அவர் எப்படிப்பட்டவர், அவருடைய குணாதிசயம் என்ன, என் வாழ்வில் நான் வெளிப்படுத்த வேண்டியவர் எப்படிப்பட்டவர், நான் பின்பற்றி நடக்கவேண்டியவர் யார் என்பதையெல்லாம் நாம் ஆழமாக சிந்திப்பதில்லை என்று சொன்னால் அது மிகையாகாது.

“நானே”:

இந்த அவல நிலையில், தடுமாறும் மனிதனிடம், “உன் சுயதெரிவிலே நீ தோற்றுப்போய் விழுந்துபோகாதிருக்க”, இதோ, “நானே” மெய்யானவராய் உன்னுடன் இருக்கிறேன் என்று இயேசுவானவர் தெளிவுபடுத்தியிருக்கிறார். நானே ஜீவ அப்பம், நானே வாசல், நானே நல்ல மேய்ப்பன், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனும், நானே வழி, நானே சத்தியம் என்று தம்மைக் குறித்து வெளிப்படுத்தின ஆண்டவர், இவற்றில் நாம் வழிநடக்கவேண்டுமானால் நாம் அவரில் அவருக்குள் அவரோடு இருக்கவேண்டும் என்பதையும் தெளிபடுத்தியுள்ளார். தவறுமிடத்து, பொய்யானவற்றின் குழிக்குள் நாம் விழுந்துவிட மாட்டோம் என்று சொல்லமுடியாது. ஆகவேதான் யோவான் 15:1ல், “நான் மெய்யான திராட்சச் செடி” என்கிறார் ஆண்டவர். இங்கே “மெய்யான” என்று சொல்லும்போது, நிச்சயம் பொய்யான திராட்சச்செடிகளும் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். செழித்து வளர்ந்து, கவர்ச்சியான தோற்றங்களைப் பெற்று எல்லோரையும் தம் பக்கம் இழுத்துவிடுகின்ற பொய்யான திராட்சச் செடிகள் பல நம் மத்தியிலே ஏராளமாகவே உண்டு. நாம் விழிப்புடன் இருப்பது மிக அவசியம்.

கிறிஸ்தவ வாழ்வு கனிதரும் வாழ்வு என்றும், கனி என்பது தேவனுடைய குணாதிசயங்கள் என்றும், அது முழுமையானது என்றும், பரிசுத்த ஆவியானவரே ஆவியின் கனியை நமக்குள் உருவாக்குகிறார் என்றும், கனி கொடுத்தல் என்பது நமக்கல்ல, பிறருக்கே நன்மை பயக்கும் வாழ்வு என்றெல்லாம் நாம் கற்றிருக்கிறோம். ஆக, கனி என்பது நம்மால் உருவாக்கமுடியாத ஒன்று என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நல்லதும் சரியானதும் பிரயோஜனமானதுமான மெய்யான கனி நம்மில் தோன்றவேண்டுமானால் நாம் மெய்யான திராட்சச்செடியில்தான் ஒட்டப்படவேண்டும் என்பதை யார் சொல்லி யார் தெரிந்துகொள்வது?

எது மெய்? எது பொய்? என தடுமாறும் மானிடனுக்கு இயேசுவானவர், இதைத்தான் விளங்க வைக்கிறார். “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். …கொடியானது திராட்சச்செடியிலே நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனிகொடுக்கமாட்டீர்கள்” (வச.1,4). இங்கே இன்னுமொரு விஷயம் நமக்குத் தெளிவாக விளங்குகிறது. திராட்சச் செடியில் கனி வெளிவருவதில்லை; அதிலுள்ள கொடிகளிலேதான் கனி வெளிவருகிறது, கனி தோன்ற வேண்டுமானால் கொடி செடியுடன் சரியாக நேர்த்தியாக இணங்கியிருக்கவேண்டும். செடி தானாகக் கனிகொடுக்கமாட்டாது, முடியாது.

ஒட்டப்படும் திராட்சைக்கொடிகள்:

ஜெர்மனி, இஸ்ரவேல் போன்ற தேசங்களில் பல ஏக்கர் நிலங்களில் திராட்சத் தோட்டங்களைக் காணலாம். நாட்டப்பட்ட குட்டையான திராட்சச் செடிகளைப் பார்க்க மிகவும் ஆச்சரியமாயிருக்கும். இந்தக் குட்டையான செடியிலிருந்தா கொடிகள் வந்து, அதில் திராட்சப்பழங்கள் குலைகுலையாகத் தொங்கும்! இதைவிட, ஒட்டுதலும் நடைபெறுகிறது. நமது நாட்டிலே ஒட்டு மா மரங்கள் கண்டிருக்கிறோம். சில பூ மரங்களிலும் இந்த ஒட்டுதல் முறைமைமூலம் பல்வேறுபட்ட நிறங்களில் பூக்கள் பூக்கிறதையும் கண்டிருக்கிறோம். யூதா தேசத்திலே திராட்சை மிக முக்கியமான ஒன்று. திராட்சை, ஒலிவ், அத்தி இவற்றுடன் பேரீந்தும் மிக முக்கியமானதாகும். ஆக, திராட்சையைக் குறித்துப் பேசினால் அன்றைய யூதா தேசத்து மக்களுக்கு நன்கு புரியும். ஆகவேதான் ஆண்டவர், “நானே மெய்யான திராட்சச்செடி” என்று, திராட்சையை உவமானமாக வைத்துப் பேசுகிறார். ஆக, கிறிஸ்துவைப்போல வேஷம் தரித்திருக்கிற பொய்யான திராட்சச்செடிகளும் உண்டு என்பதை ஆண்டவர் முதலில் எச்சரிக்கிறார். ஆகவே, நாம் மெய் என்று நம்பி பொய்யான செடிகளில் ஒட்டப்பட நம்மை விட்டுவிடாத படிக்கு எச்சரிப்புடன் இருப்பது அவசியம்.

கர்த்தருடைய ஆதங்கம்:

“நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, அதை நாட்டினீர்” (சங்.80:8) என்றும், “இப்பொழுதோ அதன் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்”(வச.12) என்றும் ஆசாப் புலம்புகிறார். ஏசாயாவோ, “என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார். அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது” (ஏசா.5:1,2) என்றார். “நான் உன்னை முற்றிலும் நற்கனி தரும் உயர்குலத் திராட்சச் செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன” (எரே.2:21) என்று கர்த்தருடைய ஆதங்கத்தை எரேமியா எடுத்துரைத்தார்.

தேவனாகிய கர்த்தர், இஸ்ரவேல் என்ற திராட்சச்செடியை எகிப்திலிருந்து வெட்டி எடுத்து வந்து, தமக்குச் சாட்சியாக, தம்மை வெளிப்படுத்தும்படியாக நற்கனி தரும் சாட்சியாக அவர் வாழுவார்கள் என்று நம்பி கானானிலே வாழ வைத்தார். ஆனால் இஸ்ரவேலோ, காலத்துக்குக் காலம் தேவனுக்கு விரோதமாகவே செயற்பட்டு, கசப்பான கனி கொடுத்து, தேவனைத் துக்கப்படுத்தியது. இப்போ தேவன்தாமே ஒரு மனிதனாக, இயேசுவாக உலகில் வந்து, “நானே மெய்யான திராட்சச்செடி” என்று தம்மை அறிமுகப்படுத்துவதைப் பார்க்கிறோம். இஸ்ரவேல் தவறிவிட்டதை ஆண்டவர் நிவர்த்தியாக்குகிறார். அவருடைய இரத்தத்தால் பாவத்திலிருந்து மீட்கப்பட்டு, அவரது பிள்ளைகள் என்ற அதிகாரத்தை உரிமையைப் பெற்றிருக்கிறோம் என்று சொல்கிறோமே, அதன் அர்த்தம் என்ன?

நாம், கிறிஸ்து என்ற திராட்சச்செடியிலிருந்து முளைத்தெழுந்த புதிய இஸ்ரவேலர்கள் அல்ல; குப்பையிலே பாழான குழியிலே வீசப்பட்டுக் கிடந்த நம்மை தேவன் கிருபையாய் கொண்டு வந்து, அதாவது நாம் ஒட்டப்பட்டிருந்த இந்த உலகம் என்ற செடியிலிருந்து நம்மை வெட்டியெடுத்து வந்து, கிறிஸ்து என்ற செடியிலே கிருபையாய் ஒட்டப்பட்டிருக்கிறோம் என்பதை ஒருகணமேனும் மறக்கக்கூடாது. மனம்போனபடி வாழ்ந்து, தேடுவாரற்று, கசப்பான கனியைத் தோற்றுவித்து, பலரைக் கெடுத்துக்கொண்டு, தீமையில் இன்பம் கண்டு, அழிவு என்பதையும் உணராமல், சுயத்தில் இச்சைகண்டு கிடந்த நம்மை, தேவன் கிருபையாய் கிறிஸ்துவில் ஒட்டவைத்திருக்கிறார் என்றால் நாம் எத்தனை பாக்கியம் பெற்றவர்கள்!

ஆகவே, நாம் கிறிஸ்துவில் நிலைத்திருந்து நற்கனி கொடுக்கமாட்டோமா என்று தேவன் நம்பேரில் வாஞ்சையாய் இருப்பாரே என்ற பயம் இன்று நமக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. அன்றைய இஸ்ரவேல் செய்த அதே தவறை, இயேசுவின் இரதத்தினாலான மீட்பைப் பெற்ற நாமும் செய்வது எந்த விதத்தில் நியாயம்?

மெய்யான கனி தோன்ற…

ஆனால், கிறிஸ்து என்ற செடியில் ஒட்டப்பட்டு வளருகின்ற கொடிகள் நாம் என்றால், அதற்கேற்ற கனி கொடுத்தேயாகவேண்டும். அதற்கு நமது வாழ்வில் இரண்டு விஷயங்கள் நடந்தாக வேண்டும்.

1.வெட்டப்பட்டு சுத்திகரிக்கப்படவேண்டும்:

மரம் செழித்து, இலைகள் அடர்த்தியாகி அழகாக வளரும்போது தோட்டக்காரர் வெட்டிச் சுத்தப்படுத்து வதைக் கண்டிருக்கிறோம். அப்போதுதான் அந்த மரத்தால் நல்ல பலன் கொடுக்கமுடியும். இதைத்தான் பிதா நமது வாழ்விலும் அப்பப்போ செய்கிறார். இயற்கைக்கூடாகவே தேவன் நமக்கு யாவையும் கற்றுத்தருகிறார். அதிலும் இந்த நாட்களில் செழிப்பு என்பது ஒரு கவர்ச்சியாக மாறிவிட்டது. தேவனுடைய ஆசீர்வாதத்தையும், செழிப்பையும் ஒன்றோடொன்று நாம் தவறாகக் கணக்குப் போடுகிறோம். ஆனால் ஆண்டவருக்குத் தேவை செழிப்பல்ல, வெளித்தோற்றம் அல்ல, கவர்ச்சித் தோற்றம் அல்ல. மாறாக மெய்யான கனிதரும் வாழ்வையே அவர் விரும்புகிறார். ஆகவே, அப்பப்போ நாம் வெட்டப்படும்போது, கர்த்தர் நம்மைச் சுத்திகரிக்கிறார் என்பதை நினைந்து அவரை ஸ்தோத்தரிப்போமாக. நாம் வெட்டப்பட கர்த்தர் உபயோகிக்கின்ற சூழ்நிலையோ, சம்பவங்களோ, அல்லது மனிதரோ எதுவாயினும் அவற்றுக்காக தேவனுக்கு நன்றி சொல்லுவோமாக. ஏன் தெரியுமா? கனிகொடுக்காத கொடியெல்லாம் வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படும். அதற்குப் பின்னர் தருணமே கிடைக்காது.

2.நிலைத்திருக்கவேண்டும்:

இந்த நிலைத்திருத்தல் என்ற சொல், வெறுமனே சார்ந்திருத்தலோ, தங்கியிருத்தலோ அல்ல. பிரிக்க நினைத்தாலும் பிரிக்க முடியாத, பிரித்தாலும் கிழிந்துபோகுமளவுக்கு ஒட்டப்பட்டிருத்தல் எனலாம். ஆக, செடியில் நிலைத்திருக்கின்ற கொடியில் உண்டாகின்ற கனியில், அது நிலைத்திருக்கின்ற செடியின் அத்தனை தன்மைகளும் ருசி உட்பட எல்லாமே வெளிப்படும்.

இப்போ, நாம் சிந்திப்போம். நான் சுதந்திரமாய் கனிகொடுக்க எத்தனிக்கிறேனா? எனக்குப் பிரியமான, செழிப்புத் தருகின்ற, உலகத்தாரின் பாராட்டைப் பெறக்கூடிய உலகம் என்ற செடியில் ஒட்டவைக்கப்படப் பிரியப்படுகிறேனா? அல்லது, மெய்யான திராட்சச்செடியாகிய கிறிஸ்துவில் நான் ஒட்டப்பட்டு அவரில் நிலைத்திருக்க என்னை ஒப்புக்கொடுப்பேனா?

மெய்யான திராட்சையில் ஒட்டப்படுவதன் பலன்

அறிவில் தேறின நமக்கு, வெட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுவதினதும், நிலைத்திருத்தலினதும் பலனைக் கணக்குப் பார்க்கத் தெரியாதா? செடியில் நிலைத்திராத கொடி அது தானாய் கனி கொடுக்காது என்பதை இயேசுவே விளக்கியுள்ளார். மேலும், “நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்கமாட்டீர்கள்” என்றும் திட்டவட்டமாக ஆண்டவர் கூறிவிட்டார். கிறிஸ்துவில் நிலைத்திருந்து கொண்டு, செழிப்பையே நாடி, தங்களைத் தாங்களே வளர்த்துக்கொண்டு, நற்கனி கொடுக்காத கொடிகள் யாவும் வெட்டப்பட்டு அக்கினியில் போடப்படுவது நிச்சயமானால், பொய்யான திராட்சையில் ஒட்டப்பட்டு செழித்து வளர்ந்து கசப்பான கனிகளைக் கொடுக்கின்ற கொடிகளுக்கு என்ன நேரிடும்?

மெய்யான திராட்சச்செடியாகிய கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்கும்போது, அவர் நம்மை வீணராக விடமாட்டார்; நிச்சயம் அதற்குப் பலன் உண்டு. அந்தப் பலன்களைக் குறித்து ஆண்ட வரே நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஒன்று, ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் என்றார் (வச.5).

இரண்டாவது, நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும் என்றார் (வச.7). இதிலே கவனிக்கவேண்டியது, வார்த்தை நம்மில் நிலைத்திருக்கவேண்டும், அப்போதுதான் நாம் கேட்பது செய்யப்படும்.

மூன்றாவது, “என் பிதா மகிமைப்படுவார்”.

நான்காவது, “எனக்குச் சீஷராயிருப்பீர்கள்” (வச.8). சீஷராயிருப்பீர்கள் என்றால், நாம் இயேசுவை எல்லாவிதத்திலும் நமது முழுமையோடும் பின்பற்றுகிறவர்கள். மொத்தத்தில் நம்மில் வெளிப்படுகின்ற கனியானது, இயேசு நம்மில் வாழுவதால் வெளிப்படுகின்ற நற்கனியாகும்.

இங்கேதான் ஒரு கேள்வி எழுகிறது. நான் மெய்யான திராட்சச்செடியாகிய கிறிஸ்துவில்தான் ஒட்டப்படவேண்டும் என்று விரும்பியும், ஒட்டப்பட்டிருக்கிறேன் என்பதை நான் விசுவாசித்திருப்பதும் உண்மையானால்,

இந்த மெய்யான திராட்சச்செடியாகிய கிறிஸ்து யார்? நான் ஒட்டப்பட்டிருப்பது கிறிஸ்து என்ற திராட்சச் செடியில்தானா?

இந்தக் கேள்விக்கு நாம் “ஆம்” என்று பதில் சொல்லுவது உறுதி. அப்படியானால் கிருபையாய் நாம் ஒட்டவைக்கப்பட்டிருக்கிற இந்த கிறிஸ்து யார்?

தேவனை உலகுக்குச் சாட்சியாய் அறிவிக்க வேண்டிய இஸ்ரவேல் அன்று தவறிவிட்டது. இன்று பாவிகளாக, துரோகிகளாக, கவனிப்பாரற்று, அக்கினிக்குள் வீசப்படவேண்டியவர்களாக, வீதியிலே கிடந்த நம்மை, பிதாவாகிய திராட்சத் தோட்டக்காரர், தேடிக்கண்டெடுத்து வந்து, கிறிஸ்து என்ற திராட்சச்செடியிலே கிருபையாய் ஒட்டவைத்து, அவரில் நிலைத்திருக்கிற பாக்கியத்தைத் தந்திருக்கிறார். இப்படியிருக்க, திரும்பவும் இஸ்ரவேல் செய்ததை நாமும் செய்வது எப்படி? உயர் ரகமான மிகுந்த கனி கொடுப்போம் என்று தானே தேவன் நமக்கு வேலி அடைத்துக் காவல் காக்கிறார். அப்படியிருக்க அடிக்கடி தித்திப்பான கசப்பான கனியை நம் வாழ்வில் அப்பப்போ தோற்றுவிப்பது ஏன்? வார்த்தை நம்மில் நிலைத்திருந்தால் வார்த்தைக்கு ஏற்ப நம்மில் கனி வெளிப்பட்டாகவேண்டும். அதை விடுத்தது அடிக்கடி கசப்புத் தோன்றுவது எப்படி?

இப்போதுதான் இந்தச் செய்தியின் முக்கிய இடத்திற்கு வந்திருக்கிறோம். இதுவரை நாம் பார்த்த காரியங்களைக் குறித்து நாம் அநேக செய்திகள் கேட்டிருக்கிறோம். ஆனால் இந்தச் செய்தியினூடாக இந்தக் கனிகொடுத்தலின் இன்னொரு ஆழத்திற்கு வாசகர்களை அழைக்க விரும்புகிறோம். நாம் கொடிகள்; கிறிஸ்து என்ற மெய்யான செடியிலே ஓட்டப்பட்டு கிழிக்கப்படாமல் நிலைத்திருக்கும்படி வைக்கப்பட்டிருக்கிறோம். நம்மில் உண்டாகின்ற கனியானது செடியின் தன்மையை கொஞ்சம் அல்ல; முழுமையாகக் கொண்டிருக்க வேண்டும். இவை யாவும் சரியான விஷயங்களே. ஆனால் கேள்வி இதுதான்.

“நான் ஒட்டப்பட்டிருக்கிற செடி யார்? அவர் எப்படிப்பட்டவர்? அவரில் நிலைத்திருக்கிறேன் என்று சொல்லுகின்ற நான், அவருக்கேற்ற கனி கொடுக்கிறேனா?”

கிறிஸ்து என்ற செடியில்தான் நான் ஒட்டப்பட்டிருக்கிறேன் என்றால், அவரைக் குறித்து நான் கொண்டிருக்கின்ற சிந்தை என்ன? அவரில் இருந்த சிந்தை பிறருக்கான சிந்தை (பிலிப்பியர் 2:4-11). இந்த சிந்தை நம்மில் காணப்படுகிறதா? நாம் எங்கே தவறி நிற்கிறோம்? இதற்கு நாம் யோவான் 15ம் அதிகாரத்திற்கு முன்னாக உள்ள, 12,13,14ம் அதிகாரங்களைச் சற்றுத் திருப்பிப் பார்ப்பது நல்லது. 12ம் அதிகாரத்தில் மரியாள் பரிமள தைலம் பூசியதையும், “என்னை அடக்கம் பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள்” என்று இயேசு சொன்னதையும் வாசிக்கிறோம். பின்னர் கடைசி எருசலேம் பவனி, அதைத் தொடர்ந்து கோதுமைமணியின் சாவைக் குறித்தும் இயேசு பேசுகிறார். 13ம் அதிகாரத்தில் கடைசி பஸ்கா விருந்தையும், இயேசு சீஷரின் கால்களைக் கழுவியதையும், தோய்த்த துணிக் கையை யூதாஸிடம் கொடுத்து, “நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய்” என்று அனுப்பிவைப்பதையும் பார்க்கிறோம். அதன் பின்னர் “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்றார் இயேசு. 14ஆம் அதிகாரத்திலே ஒரு பிரியா விடைப் பேச்சைக் காண்கிறோம். “உங்கள் இருதயம் கலங்கவேண்டாம். நான் இப்போது போகிறேன். திரும்ப வந்து உங்களைச் சேர்த்துக்கொள்வேன்” என்கிறார். இத்தனைக்கும் பின்னர்தான், “நான் மெய்யான திராட்சச்செடி” என்றார் இயேசு.

நாம் ஒட்டவைக்கப்பட்டு நிலைத்திருக்கிறோம் என்று சொல்லுகிற திராட்சச்செடியாகிய இயேசு யார்? ஒரு விஷயத்தை இந்த இடத்திலே நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெட்டப்படாமல் ஒட்டப்படமுடியாது. ஆனால், ஒட்டுதல் செய்யும்போது எது முதலில் வெட்டப்படுகிறது என்பது, ஒட்டு முறையைக் கையாண்டவர்களுக்கு நன்கு தெரியும். வெட்டப்படுவதற்கும் ஒரு முறை உண்டு. முதலில் வெட்டப்படுவது செடிதான். பின்னர்தான் சாய்வாகச் சீவப்பட்ட கொடி அந்தச் செடியில் நேர்த்தியாக வைக்கப்பட்டு, இவ்விதமாக ஒட்டுதல் நடைபெறும்.

இப்போ சிந்திப்போம். நான் இன்று கிறிஸ்துவில் ஒட்டப்பட்டிருக்கிறேன் என்றால், முதலில் வெட்டப்பட்டுக் காயப்படுத்தப்பட்டு அலங்கோலமாய்ப்போனது என் ஆண்டவர்தான். ஆம், நான் நற்கனி கொடுப்பதற்காக முதலில் காயப்படுத்தப்பட்டு இரத்தம் சிந்தியது என் இயேசு. இவர் யார்? இவர் சொகுசு வாழ்வு வாழ்ந்தவர் அல்ல. அவருக்குத் தலை சாய்க்க இடமே இருக்கவில்லை. அவர் நெருக்கப்பட்டார், வேதனைப்பட்டார், செய்யாத குற்றங்களையெல்லாம் தம்மேல் சுமந்தார். மனிதரால் வெறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார், அடிக்கப்பட்டார். தாம் நேசித்தவர்கள் முன்னிலையில் குற்றவாளிபோல தலைகுனிந்து நின்றார். அவமானச் சிலுவையைச் சுமந்தார். சொல்லொண்ணா சிலுவைப் பாடுகளையும் சகித்தார். அவர் குற்றமற்றவராயிருந்தும், பாவமில்லாதவராயிருந்தும், பாவமாக்கப்பட்டவராக, குற்றவாளியைப்போல, சிலுவையிலே தொங்கினாரே. ஏன்?

ஒரே பதில் நமக்காகத்தானே! நாம் பாவத்திலிருந்து மீட்படைவதற்காகத்தானே! இன்று நாம் சிலுவையில் அறையப்படத் தேவையில்லை. ஆனால் எனக்கான சிலுவையை நான் சுமக்கிறேனா? அவர் நடந்த பாதையில் நான் நடக்கிறேனா? சொந்த ஜனத்தாலேயே தள்ளப்பட்டபோதும், அவர்களை நேசித்தாரே நம் இயேசு, அந்த சிந்தை நம்மிடம் உண்டா? நமக்காகத் தமது பரலோக மேன்மை யாவையும் விட்டிறங்கி, நம்மைப்போல ஆனாரே, அந்த உணர்வு நமக்குள் உண்டா? நான் இந்த இயேசுவில் ஒட்டப்பட்டிருப்பது மெய்யானால், பகைவரையே நேசிக்க வேண்டிய நம்மால், நம்மை உண்மையாய் நேசிக்கிறவர்களிலேயே கபடற்ற அன்பைச் செலுத்தக் கடினமாயிருப்பது ஏன்? நன்மைசெய்து பாடுபடவேண்டிய நாம், தீமை செய்தாலும் அதை மறைத்து சுயநீதியை நிலைநாட்டத் துடிப்பது ஏன்? கோபம், குரோதம், ஆத்திரம், பழியுணர்வு, பிரிவினைகள், பொறாமை, எரிச்சல், மன்னிக்க முடியாத கடின இதயம், விட்டுக் கொடுக்கமுடியாத சுபாவம், நான் என்ற பெருமை, சுயமேன்மை, உலக ஆசை, பதவிஆசை, பண ஆசை, விபச்சாரம், வேசித்தனம், இன்னும் என்ன சொல்ல… நம் வாழ்வில் இவற்றில் ஒன்றுதன்னும் காணப்படமுடியுமா? சிந்திப்போம்.

நான் ஒட்டவைக்கப்பட்டிருப்பது கிறிஸ்து என்றால், அவருடைய குணாதிசயங்கள், அவர் நடந்த பாதை, அவர் வாழ்ந்த வாழ்வு, அவர் நம்மில் வைத்த அன்பு, நாம் சுமக்கவேண்டிய சிலுவை எல்லாம் நம் வாழ்வில் இருக்கிறதா என்பதைச் சிந்தித்து, உண்மையான இதயத்துடன் மனந்திரும்புவோமாக. கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருக்கின்ற நாம் அந்த உன்னத நாமம் மகிமைப் பட நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.

சத்தியவசனம்