புதிய வருஷத்திற்குரிய பழைய அறைகூவல்

– சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜனவரி-பிப்ரவரி 2012)

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோ.3:1-4).

கர்த்தருக்குள் பிரியமான சகோதர சகோதரிகளே, ஒரு புதிய ஆண்டிற்குள்ளாக பிரவேசித்திருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் சத்தியவசன ஸ்தாபனத்தின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

ஆண்டவர்தாமே உங்களையும் உங்கள் குடும்பங்களையும் இன்றைக்கு இருப்பதை விட பல மடங்கு ஆசீர்வதித்து வழிநடத்துவாராக. பிரியமானவர்களே, கொலோசெயர் 3ஆம் அதிகாரம் 1லிருந்து 4 வசனங்களை புத்தாண்டு செய்தியாக நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

எங்களுடைய வீடு கட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிற்பாடு நானும் என் சகோதரனும் அதை சுத்தப்படுத்த ஆரம்பித்தோம். அப்படி பல நாட்களாக அந்த வீட்டிலுள்ள எல்லா அறைகளையும் சுத்தப்படுத்துகிற பணியிலே நாங்கள் ஈடுபட்ட பொழுது, மூன்று உண்மைகளைக் கண்டு கொண்டோம்.

1. நாங்கள் பாதுகாத்து வைக்கவேண்டிய பொருட்கள் எவைகள் என்பதைக் குறித்த அறிவு எங்களுக்கு கிடைத்தது.

2. நீக்கப்படவேண்டிய சில காரியங்கள் உண்டு என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம்.

3. எந்தெந்த பொருட்களை எங்கெங்கு இருக்கின்றன என்பதை ஞாபகத்திலே வைத்துக்கொள்ளவேண்டும் என்கிற அறிவையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

பழைய வருடத்தைக் கடந்து புதிய வருஷத்திற்குள்ளே நுழைந்திருக்கும் நமக்கு, இந்த மூன்று கருத்துக்களும் பிரயோஜனமாக அமையும் என்பதை நான் அறிந்து நம் ஆண்டவராகிய கர்த்தரை மனதார ஸ்தோத்தரிக்கிறேன். இந்த சிந்தனையோடு கொலோசெயர் 3:1 முதல் 4 வசனங்களை கவனமாக எடுத்து வாசித்துப் பாருங்கள். இந்த வசனங்கள் ஒருவிதத்திலே வித்தியாசமான வசனங்களாகும்.

புதிய ஆண்டின் செய்திக்காக பலர் இந்த வசனங்களைக் கையாள்வதில்லை. ஆனால் இந்த வேத பகுதிக்கு நான் வைத்திருக்கும் தலைப்பு என்னவென்றால், புதிய வருஷத்திற்குரிய பழைய அறைகூவல்.

1.பாதுகாக்கப்படவேண்டிய காரியங்கள்

பழைய ஆண்டை கழித்து புத்தாண்டுக் குள்ளே கடந்து வந்திருக்கும் நமக்கும் பாது காக்கப்படவேண்டிய சில காரியங்கள் உண்டு.

i. நமக்கு ஒரு மீட்பர் உண்டு.

நமக்கு ஒரு மீட்பர் உண்டு, அவர் உயிரோடிருக்கிறார் என்ற உண்மையை நாம் காத்துக் கொள்ளவேண்டும். அழுத்தங்கள், விக்கினங்கள், விசனங்கள், விபத்துக்கள், விபரீதங்கள் போன்ற சூழ்நிலைகள் வரும்போது, நமக்கு மீட்பர் ஒருவர் உண்டு, நமக்கொரு தெய்வம் உண்டு என்பதை மறந்து அங்கலாய்த்து நாம் அடிக்கடி புலம்பிவிடுகிறோம். அந்த மீட்பர் யார்? கொலோ.3:1ல் நீங்கள் கிறிஸ்துவுடனே கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் என்று வாசிக்கிறோம். தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் ஆண்டவர் ஒருவர் நமக்கு உண்டு என்பதை இவ்வசனத்தின் மூலம் அறிகிறோம். இந்த எண்ணத்தை நமது மனதில் பாதுகாக்கவேண்டும்.

கிறிஸ்து இருக்கின்ற இடத்திலே சகல ஆசீர்வாதங்களும் சகல வல்லமைகளும் இருக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் எதற்காக வீற்றிருக்கிறார்? எனக்காகவும் உங்களுக்காகவும் பரிந்து பேசுகிறவராக இருக்கிறார். வலதுபாரிசம் என்பது ஆண்டவருடைய வல்லமையையும், பராக்கிரமத்தையும் மகா அதிகாரத்தையும் குறிப்பிடுகிறது.

எனவே நமக்காக பிதாவினுடைய வலதுபாரிசத்தில் கிறிஸ்து என்கிற ஜீவனுள்ள இரட்சகர் இருக்கிறார் என்ற எண்ணத்தை நமது மனதிலே என்றென்றும் பாதுகாக்க வேண்டும். இதை நம்முடைய மனதிலிருந்து இழந்து விடாதபடி எப்பொழுதும் நாம் ஜாக்கிரதையாய் இருக்க அழைக்கப்படுகிறோம். அவர் நம்முடன் இருக்கிறார் என்கிற எண்ணம் நமக்கு இருந்தாலே, தைரியமும், தன்னம்பிக்கையும், திடநம்பிக்கையும் நமக்குள்ளே உருவாகிவிடுகிறது.

ii. கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளை நாம் தேட வேண்டும்.

அடுத்ததாக, அவர் இருக்கிற இடத்திலுள்ள உயர்ந்ததை, சிறந்ததை, மேன்மையானவைகளை, நித்தியத்துக்கடுத்ததை, அல்லது அந்த மகிமையான இராஜ்ஜியத்துக்கு அடுத்தவைகளை நாம் தேடவேண்டும். நம்முடைய குறிக்கோள் அதுவாகத்தான் இருக்கவேண்டும். இந்த உலகத்திலிருக்கிற அநேகமக்கள் இம்மையே சதம் என்று எண்ணுகிறார்கள், உலகத்தின் பொருட்கள், உலகத்தின் ஆஸ்தியே நிரந்தரம் என்று எண்ணுகின்றனர். நமக்கு ஒரு தேவராஜ்ஜியம் உண்டு, நாம் குடியிருக்கப்போகும் நிரந்தர தேசம் அதுதான். அந்தக் குடியிருப்பிலே நாம் பங்காளியாய் போவதற்காக ஆயத்தப்படுகிறோம். ஆகவே, நித்தியத்திலே உள்ளவைகளைத் தேடும்படியாகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். உன்னதத்திற்கு அடுத்தவைகளை தேடுவதையே நமது நோக்கமாகக் கொள்ளவேண்டும். ஓட்டப் பந்தயத்திலே ஓடுகிறவன், தனது இலக்கை நோக்கி ஓடுவது போல, நாமும் ஆண்டவரையும் அவரது வலதுபாரிசத்திலுள்ள மேன்மையானவைகளையும் நோக்கி ஓடவேண்டும்.

நம் ஆண்டவருக்கு அடுத்தவைகள் எது? அது நித்தியத்துக்காக வாழ்வதாகும். நித்திய இராஜ்ஜியத்துக்காக உழைப்பதும் நித்தியத்துக்காக நம் வாழ்வை செலவிடுவதும் நித்திய இராஜ்ஜியத்திற்காக நம் பங்களிப்பை செலவிடுவதும் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதும் தேவ இராஜ்ஜியத்தைக் கட்டுவதும் ஆண்டவருடைய சாயலாக இந்த உலகத்தில் ஆண்டவருடைய பிரதிநிதியாக வாழ்வதுமான இப்படிப்பட்டவைகளே ஆண்டவருக்கு அடுத்தவைகளாயிருக்கிறது. இதை நம் மனதில் கொள்ள வேண்டும்.

கிறிஸ்து உயிரோடிருக்கிறார், அவர் தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். கிறிஸ்து இருக்கிற இடத்திலுள்ளவைகளை தேடுவதே நமது நோக்கமாயிருக்க வேண்டும்.

இந்த இரண்டையும் நம்முடைய மனதில் பாதுகாக்க வேண்டும். இதை தீர்மானமாக செய்யவேண்டும். அருமையான என் சகோதர, சகோதரிகளே இந்த உலகத்தில் எவைகளையெல்லாமோ பாதுகாக்க நாம் இரவும் பகலும் பிரயாசப்படுகிறோம். நாம் பாதுகாக்கிற பல காரியங்கள் நிரந்தரமானதல்ல, அவைகள் அழிந்துவிடுகிறது. ஆனால் கிறிஸ்துவையும், கிறிஸ்துவுக்கு அடுத்த காரியத்தையும் நாம் இழந்துவிட முடியாது. இதைத்தான் பவுலடிகளார், உபத்திரவமோ, பாடுகளோ… எதுவாயினும் கிறிஸ்துவின் அன்பைவிட்டு எங்களை பிரிக்கமாட்டாது என்று நிச்சயித்திருக்கிறேன் என்று எழுதுகிறார் (ரோமர் 8:36-39).

2. தவிர்க்கப்படவேண்டிய காரியங்கள் எவை?

பூமியிலுள்ளவைகளையல்ல, மேலான வைகளையே நாடுங்கள் (கொலோ.3:2). இந்த உலகத்திலே பூமியில் உள்ளவைகளை அல்ல என்று பவுல் குறிப்பிடுகிறார். அப்படியெனில், பூமியிலுள்ளவைகள் தவிர்க்கப்பட வேண்டும். பூமியிலுள்ளவைகளை நாம் தேடுவதில் நாம் எவ்வளவு ஜாக்கிரதையுள்ளவர்களாக இருக்கிறோம். பூமியில் உள்ளவைகளைத் தேடுகிறது பெரிதா அல்லது மேலானவைகளைத் தேடுகிறது பெரிதா? இன்று பெரும்பான்மையான மக்கள் பூமியிலுள்ளவைகளையே முதலிடம் வைத்துத் தேடுகிறார்கள்.

ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? தேவனுடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும் முதலாவது தேடும்போது, நாம் எவைகளைக் குறித்து வீணாகக் கவலைப்படுகிறோமோ அதையெல்லாம் ஆண்டவர் கூடக்கொடுக்கிறார். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது (சங்.34:10). ஆகவே பூமிக்கு அடுத்தவைகளை, பூமிக்கு உகந்தவைகளையே நாம் தேடாதபடி அல்லது நாடாதபடி மேலானவைகளையே நாடவேண்டும். நாடுதல் என்ற வார்த்தை உள்ளத்தின் வாஞ்சையை வெளிப்படுத்துகிறதாய் இருக்கிறது.

ஒரு மனிதன் உள்ளத்தில் எண்ணுகிற எண்ணம்தான் அவனது செயலிலே காணப்படுகிறது. இங்கு பவுலடியார் சொல்லுகிறபடி மேலானவைகளை நாடும்போது, நமது தேடலிலே வித்தியாசம் காணப்படுகிறது. ஒரு திருமறை வேதபண்டிதர் இந்த பூமிக்குரியவைகளைக் குறித்து பவுலின் கண்ணோட்டத்திலே விளக்கும்போது இரண்டு காரியங்களைக் குறிப்பிடுகிறார்.

முதலாவதாக, பவுல் வாழ்ந்த காலத்திலே பூமியைச் சார்ந்த அல்லது பூமிக்கு அடுத்த நன்மைகளைக் குறித்த அநேக கலப்பான உபதேசங்கள் பெருகியிருந்ததை அவர் குறிப்பிட்டு எழுதுகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டிலேயும் விதவிதமான கலப்பு உபதேசங்கள், திருமறைக்கு விரோதமான உபதேசங்கள், திரித்துவத்துக்கு விரோதமான உபதேசங்கள், ஆவியானவருக்கு விரோதமான உபதேசங்கள் என அநேக உபதேசங்களை நம்முடைய கண்கூடாகப் பார்க்கிறோம். 30, 40 ஆண்டுகளுக்கு முன்பாக சுவிசேஷம் சுத்த சுவிசேஷமாக இருந்தது. இன்றைய சுவிசேஷமெல்லாம் பொருளியல் சுவிசேஷமாகவும் ஆசீர்வாத சுவிசேஷமாகவும் இம்மைக் கடுத்த சுவிசேஷமாகவும் அல்லது பெருக்கத்தின் சுவிசேஷமாகத்தான் மாறிக்கொண்டிருக்கிறது. எதை சம்பாதிக்கலாம், எதை பெருக்கலாம், எதை பெற்றுக்கொள்ளலாம், எதைக் கூட்டிக்கொள்ளலாம் என்ற எண்ணங்களிலே இன்றைய விசுவாசிகள் வாழ்கிறதை இந்த நாட்களிலே பார்க்கிறோம்.

தியாகம், ஆண்டவருக்காக படுகிற இழப்பு, ஆண்டவரிடத்தில் நம்மை அர்ப்பணித்தல், ஒப்புக்கொடுத்தல். ஊற்றிவிடுதல் போன்ற உபதேசங்களெல்லாம் இன்றைய காலப்போக்கிலே மறைந்துகொண்டு வருகிறது. இன்றைக்கு கிறிஸ்தவத்திலே, உபத்திரவங்கள் இல்லை, பாடுகள் இல்லை என்கிற ஒரு விதமான உபதேசங்கள் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பவுலின் நாட்களில் வாழ்ந்த மக்கள் எல்லாரும் பூமிக்குரியவைகளையல்ல, மேலானவைகளையே நாடினார்கள். பவுலின் காலத்து மக்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டதினாலே ஆஸ்திகளை இழந்தார்கள், உடைமைகளை இழந்தார்கள், உயிரை இழந்தார்கள், உயிருக்கு உயிரான மக்களை இழந்தார்கள், அநேகர் சிங்கங்களின் கெபியிலே போடப்பட்டார்கள், உயிரோடே எரிக்கப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே இம்மைக்குரிய எவைகளையுமே அவர்கள் நற்செய்திக்கு இணையாகக் கருதியதில்லை, தாங்கள் கொண்ட விசுவாசத்திற்கு இணையாகக் கருதியதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்டவரையும் விசுவாசத்தையும் முன்னாலே வைத்தார்கள். ஆகவே பூமிக்கு அடுத்தவைகள் என்பதற்கு இந்த கலப்பான உபதேசத்தையும் குறிப்பிடலாம் என்று அந்த வேத பண்டிதர் எழுதுகிறார்.

இந்த பூமிக்குரியவைகள் என்று எழுதும் போது Foolish Demands என்று எழுதுகிறார். அதாவது, மதியீனமான ஆசைகள், மதியீனமான தேவைகள், மதியீனமான விருப்பங்கள் என விளக்குகிறார். இவைகள் இன்றைக்கு அநேக இடங்களிலே காணப்படுகிறதை நாம் பார்க்கிறோம். அப்படியானால் அருமையானவர்களே, நமது வாழ்க்கையிலே ஆண்டவருடைய வசனத்திற்கு ஒத்துவராத காரியங்கள், ஆவியானவருக்கு ஒத்துவராத காரியங்கள், பரிசுத்தத்திற்கு ஒத்துவராத காரியங்கள், ஆண்டவருடைய இராஜ்ஜியத்தின் கட்டுமானத்திற்கு ஒத்துவராத காரியங்கள் எவைகள் என்பதை கண்டுகொண்டு, அவைகளைத் தவிர்க்கவேண்டும். நம்முடைய சிந்தனை ஓட்டத்தை பூமியிலிருந்து நித்தியத்திற்கு நேராக திருப்பும்படியாக ஆண்டவர் நம்மை அழைக்கிறார்.

3. நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டிய மூன்று காரியங்கள்.

கொலோசெயர் 3:3,4 ஆகிய வசனங்களில் பவுலடிகளார் கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டிய மூன்று காரியங்களைக் கூறுகிறார்.

i. நீங்கள் மரித்தீர்கள்

நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டிய முதல் காரியம் எதுவென்றால், நீங்கள் மரித்தீர்கள். மரித்தீர்கள் என்றால் எழுத்தின்படி மரிப்பதல்ல, நாம் பாவத்திற்கு மரித்தோம்; ஆனால் பூமியிலே உயிரோடிருக்கிறோம். அப்படியானால் கிறிஸ்துவுக்கென்று பாவ வாழ்வுக்கு மடிந்த அந்த அனுபவத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அவரால் உலகம் எனக்கு சிலுவையில் அறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையில் அறையுண்டிருக்கிறேன் (கலா.6:14) என்று பவுலடிகளார் எழுதுகிறார் அல்லவா. அதே போலவே நம்முடைய வாழ்க்கையிலும், நாம் பாவத்திற்கு மரித்திருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி பாவ சோதனை வரும்போது, பாவ எண்ணங்கள் சூழும்பொழுது, பாவ சோதனைக்குப் பிறர் நம்மை இழுக்கும்பொழுது, நான் கிறிஸ்துவுக்குள் மரித்தவன் என்கிற உணர்வின் நிச்சயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படி மறப்போமானால், பாவக்குழியில் மறுபடியும் விழ நேரிடும். ஆண்டவருடைய அன்பை விட்டு தூரம் போவோம், இடறிப்போவோம் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். எனவே முதலாவது நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் என்பதை நமது மனதில் பதித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ii. நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறது.

நாம் ஞாபகத்தில் வைக்கவேண்டிய இரண்டாவது காரியம் என்னவெனில், நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுடனேகூட தேவனுக்குள் மறைந்திருக்கிறது. நம்முடைய பணத்தை வங்கியிலே வைப்பு நிதியாக சேமித்து வைப்பதுண்டு. அதைப்போன்று நம்முடைய ஜீவன் கிறிஸ்துவுக்குள்ளே அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறதென்று இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நம்முடைய ஜீவன், நம்முடைய எதிர்காலம், நம்முடைய வாழ்வு எல்லாமே அவருக்குள் இருக்கிறது. அவரை விட்டுவிட்டு நமக்குள்ளே ஜீவன் கிடையாது. அவரைவிட்டு விலகிவிட்டால் இந்த ஜீவன் நமக்கு அருளப்பட வாய்ப்பில்லை.

iii. நாமும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவோம்.

மூன்றாவதாக நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டியது, நாமும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவோம். …நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள் (கொலோ. 3:4). அதாவது ஆண்டவருடைய இரண்டாவது வருகையை சூசகமாக பவுலடிகளார் இங்கு எழுதுகிறார். அப்படியானால் ஆண்டவர் வெளிப்படும்போது அந்த ஜீவன் மகிமையிலே வெளிப்படும். நம் ஆண்டவர் சீக்கிரமாய் ஒருநாள் வரப்போகிறார். அப்படி வரும்போது மேலானவைகளை நாடின, தேடின நாமெல்லாரும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவோம்.

கொலோசெயர் 3:1 முதல் 4 வசனம் வரை நாம் கற்றுக்கொள்ளுகிற பாடம் என்னவென்றால், தேடுங்கள்-நாடுங்கள் என்பதாகும். இந்தப் புதிய ஆண்டில் பிரவேசித்திருக்கும் நாம், பாதுகாக்கப்பட வேண்டிய இரண்டு காரியங்களைத் தேடுவோம். அதே சமயத்திலே தவிர்க்கவேண்டிய காரியங்களை தவிர்த்துவிடுவோம். ஞாபகத்தில் வைக்கவேண்டிய காரியங்களை நாடி செயல்படுவோம். அப்படிச் செய்யும்போது அவரது வருகையிலே அவரோடு கூட காணப்படக் கூடிய தகுதியையும் வல்லமையையும் நாம் பெறுவோம்.

சத்தியவசனம்