Dr.உட்ரோ குரோல்

(ஜனவரி-பிப்ரவரி 2012)

தேவன் பரிசுத்தர்; எனவே நாமும் பரிசுத்தராயிருக்கவேண்டும் என்று அவர் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாயிருக்க வேண்டியது அவசியமே.

யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? (சங்.24:3). இதற்கான விடை கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே (சங்.24:4). நம்முடைய தாலந்துகளோ திறமைகளோ நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவராது. நம்முடைய ஆவி, ஆத்துமா மற்றும் சரீரம் இவை யாவும் தேவனுக்கு முன்பாக குற்றமற்றதாய் இருக்க வேண்டியது அவசியம். இவ்வுலகில் நாம் குற்றமற்றவர்களாய் வாழ்வது சாத்தியமா? அவ்வாறு வாழ நாம் என்ன செய்ய வேண்டும்? இதுபோன்ற கேள்விகள் நமக்குள் எழுகிறதல்லவா? வேதாகமம் எழுப்பும் பல வினாக்களுக்கு நாம் அதிலேயே விடைகளைக் காணமுடியும்.

தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் வாழ ஐந்து வழிகளை நாம் கீழே காண்போம்.

1. கண்கள் காண்பதையெல்லாம் இச்சிக்க வேண்டாம்.

மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கை போடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக் கொண்டிருக்கும்போது, ஸ்நானம் பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு செளந்தரவதியாயிருந்தாள். அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள் (2சாமு.11:1-5).

இப்பகுதி தாவீது செய்த மிகப்பெரிய பாவத்தை விளக்குகிறது. ஆம், தாவீதினுடைய வாழ்வில் கறைபடிந்த நிகழ்ச்சியாக இது அமைந்தது. இப்பாவத்தைச் செய்யும்படி தாவீதைத் தூண்டியது அவனது கண்களின் காட்சியேயாகும். ஒரு சிறந்த படைத் தளபதி, சிறந்த அரசர், போரைப்பற்றிய சிந்தனையில் உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருந்தபோது அவனது கண்கள் நீராடும் ஒரு ஸ்திரீயைக் கண்டது. ஒருவேளை இக் காட்சியில் தனது சிந்தனையைச் செலுத்தாதிருந்தால் இப்பாவத்தில் விழுந்திருக்கமாட்டார். இது தற்செயலாக நடந்த ஒரு சம்பவமாகும். நம்முடைய வாழ்விலும் நம்மை பாவத்தில் விழச்செய்யும் அநேக தற்செயலான நிகழ்வுகள் உண்டல்லவா? நாம் தங்கியிருக்கும் இடங்களிலும், பேருந்து நிறுத்தங்கள் இவைகளிலும் தொலைக்காட்சி சேனல்களின் காட்சிகளிலும் நாம் பலவேளைகளில் தடுமாறினது உண்டல்லவா? என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? (யோபு 31:1). இதனைக் கூறிய பொழுது யோபு ஓர் இளைஞனாயிருக்கவில்லை. முதியவரான யோபு தன்னுடைய வாலிப காலத்துப் பாவங்களைப் பற்றியும் பேசவில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். எல்லா நிலைகளிலும் எல்லா வயதிலும் நம்மைப் படுகுழியில் வீழ்த்தும் பாவங்கள் பல உண்டு. எனவே நாம் அதிக எச்சரிப்புடன் நமது பரிசுத்தத்தைக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பரிசுத்தர் கூட்டம் நடுவில் வீற்றிருக்கும் தேவனோடு உறவாட உங்களுக்கு விருப்பம் இருப்பின் உங்களுடைய கண்கள் காணும் காட்சிகளில் கவனமாயிருங்கள். நம்முடைய இருதயத்தின் பலகணி கண்களே. கண்களுக்கு நாம் வேலி போடவில்லையெனில் நம்முடைய இருதயம் பாவத்தால் நிறைந்து பாழடைந்துவிடும். தொலைக்காட்சிப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமுன்னர், சோரன் கெயிர்கி கார்ட் என்பவர், ஒரு குழாய் மூலம் பேசுவதை நாடு முழுவதும் கேட்கும்படி ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டால் காவல்துறை அதனைத் தடைசெய்ய முடியாது, ஏனெனில் அவ்வாறு செய்தால் நாடு முழுவதும் மக்களின் மனநலம் பாதிக்கப்பட்டுவிடும். அன்று அவர் எழுதியது இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஒருநாள் தொலைக்காட்சிப் பெட்டி பழுதடைந்து விட்டால் நம்மில் எத்தனை பேர் பைத்தியக்காரர் போலாகியிருப்போம். சின்னத் திரை மற்றும் வெள்ளித்திரை இவற்றில் காண்பிக்கப்படும் வன்முறைகள் மக்களது வாழ்விலும் வெளிப்படுகிறதல்லவா? கடந்த சில ஆண்டுகளாக, இளைஞர்கள், சிறுவர்கள் தொலைக்காட்சியில் வன்முறைகளைக் கண்டு, தங்களுடன் பயிலும் சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.

பாலியல், வன்முறை இவ்விரண்டுமே இக்கால தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அடிப்படையாக அமைந்துள்ளது. நம்முடைய வீட்டுக்கு அழைக்க விரும்பாத மனிதர்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக நாம் வரவழைக்கிறோம். நம்முடைய கைபேசி, நாம் பார்க்கும் இணையதளங்கள் YouTube மற்றும் FaceBook வழியாக நாம் காணும் காட்சிகள், உரையாடல்கள், படங்கள் இவைகள் மூலமாக நமது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. ஆனால் இச்சாதனங்களை நாம் ஆக்கப்பூர்வமாகவும் உபயோகித்துக்கொள்ள முடியும். நாம் காணும் காட்சிகளில் எச்சரிக்கையில்லாதவர்களாயிருந்தால் நமக்குநாமே அழிவைத் தேடிக்கொள்ளுகிறவர்களாய் இருப்போம். 23ஆம் சங்கீதத்தைத் தழுவி TV-யைப் பற்றிய ஒரு கவிதையை நான் வாசிக்க நேர்ந்தது.

TV என்னுடைய மேய்ப்பராயிருக்கிறது; என்னுடைய ஆன்மீக வாழ்வு குறைவுபட்டது. தேவனுடைய நாமத்துக்கு எதையும் செய்யவிடாமல் அது என்னை நிறுத்திவிட்டது.

கிறிஸ்தவனின் கடமைகளைச் செய்யவிடாமல் வேறு சில காரியங்களைக் காண்பிக்கிறது.

தேவனுடைய வார்த்தையை ஆராயவிடாமல் இவ்வுலக ஞானத்தினால் என்னை நிரப்புகிறது.

ஆலய ஆராதனைக்கும் செல்லவிடாமல் தடுத்து, பல நல்ல காரியங்களை விளக்குகிறது.

நான் நூறு வயது வரை வாழ்ந்தாலும் TV-யைப் பார்த்துக்கொண்டே இருப்பேன்; ஏனெனில் அது எனக்கு நல்ல ஒரு நெருங்கிய துணைவன். அதன் ஒலியும் காட்சிகளும் எனக்கு ஆறுதலைத் தருகிறது.

என் குடும்பக் காரியங்களையும் கவனிக்க விடாது நல்ல பொழுதுபோக்கைத் தருகிறது.

தேவ வார்த்தைக்கு முரண்படும் அறிவால் அது என் எண்ணங்களை நிரப்புகிறது. நான் வீணாய்க் கழித்த காலங்களுக்காக என் வாழ்வில் எந்த நன்மையும் வரப்போவதில்லை.

என்றென்றும் எனக்கு வருத்தமும் துக்கமும் உண்டாயிருக்கும்.

இக்கவிதை இன்றைய சமுதாயத்தின் உண்மை நிலையை விளக்குகிறதல்லவா?

2. போகாத இடந்தன்னில் போகவேண்டாம்.

இரண்டாவதாக, நாம் செல்லும் இடங்களைக் குறித்து கவனமாக இருக்கவேண்டும். சிம்சோன் என்ற ஒரு வாலிபரின் வரலாறை நியாயாதிபதிகள் 15ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். இம்மனிதன் தேவனுக்கு முன்பாக மகாபராக்கிரமசாலியாக இருந்தான். அதேவேளையில் பெண்களை நாடுபவனாகவும் இருந்தான்.

அவன் லேகிவரைக்கும் வந்துசேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள்; அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்று போட்டான் (நியாயா. 15:14-15).

சிம்சோனை பலமான கயிறுகளால் கட்டியிருந்தாலும் அவன் அவைகளை அறுத்து ஒரு கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரக்கணக்கான பெலிஸ்தர்களைக் கொன்றான் என வாசிக்கிறோம்.

ஆனால்,பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான் என்று நியாதி.16:1இல் வாசிக்கிறோம். காசா என்பது பெலிஸ்தர்களின் பட்டணங்களில் ஒன்று. அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்று போடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள் (நியாயா.16:2). ஆனால் அவனோ அவர்களிடமிருந்து தப்பிவிட்டான்.

14ஆம் அதிகாரத்தில் திம்னாத்தில் ஒரு பெண்ணைக்கண்டு தனக்கு மனைவியாக்கிக்கொள்ள விரும்பினான். 16ஆம் அதிகாரத்தில் ஒரு வேசி, மற்றும் தெலீலாள் ஆகியோரை விரும்பிச் சென்றான் என வாசிக்கிறோம். செல்லக்கூடாத இடங்களுக்குச் சென்றதினால் சிம்சோன் சுத்தமானவனல்ல. அப்.பவுல் இளைஞனான தீமோத்தேயுவுக்கு, அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. (2தீமோ.2:22) என்ற ஆலோசனையை வழங்குகிறார்.

இச்சைக்கும் சுத்த இருதயத்துக்கும் உள்ள வேறுபாட்டை நிர்ணயிப்பது நீங்கள் செல்லும் இடமும், காணும் காட்சிகளுமே. இந்த ஆலோசனையை வேதபுத்தகமும் கூறுகிறது. ஆனால் ஒருவரும் இதனைப் பின்பற்றுவது கிடையாது.

3. மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்.

சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ள வேண்டும் என்றான். அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜன மனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். (நியா. 14:1-3). மனோவா இந்தக் காரியத்தில் தன் மகனைத் தண்டித்திருக்க வேண்டும். மாறாக அவனுடைய விருப்பத்துக்கே விட்டுவிட்டனர். தன் இஷ்டத்துக்கு விடப்பட்ட பிள்ளை தவறான பாதையை நோக்கிப் பயணிக்கிறான் என்பது உண்மை. இருதயம் வஞ்சனையுள்ளது. உங்கள் விருப்பத்துக்கெல்லாம் தேவன் இணங்குவாரெனில் உங்களுக்கு அழிவு உறுதி.

இருதயத்தின் சின்ன ஆசையானது விழுது விட்டு வளர்ந்து பெரிய சாதனையைப் படைக்க அடிகோலுகிறது. எடுத்துக்காட்டாக, பாப்ஃபெல்லர் என்பவர் ஐந்து வயது சிறுவனாயிருந்த பொழுது பாழடைந்த ஒரு சுவரின் ஓட்டை வழியாகப் பந்தை போடுவதில் ஒவ்வொரு நாளும் பலமணி நேரங்களைச் செலவழித்தார். அவருடைய பத்தாவது வயதில் அவரது தந்தையார் தமது பண்ணை வீட்டில் ஒரு மைதானம் அமைத்து பேஸ்பால் விளையாடத் தேவையானவைகளை அவருக்கு வாங்கிக் கொடுத்தார். பாப்ஃபெல்லர் அவருடைய 13ஆவது வயதில் உள்ளூர் குழுவில் இடம் பெற்றார். அவர் சராசரியாக 20 புள்ளிகளை எடுத்தார். தமது 17ஆவது வயதில் கிளீவ்லாந்து அணியில் விளையாண்டு 266 புள்ளிகள் பெற்றார். பேஸ்பாலின் சாதனை வீரர்களின் பட்டியலில் பாப்ஃபெல்லர் விளங்குகிறார். இதில் அவருடைய திறமை மட்டுமல்ல, தீவிர ஆர்வமும் இச்சாதனைகளைப் படைக்க உதவியது.

உங்களுடைய வாழ்வின் விருப்பம் என்ன? நாம் பாடுபட்டுத் தேடி வைக்கும் பொன்னும் பொருளும் செல்வாக்கும் நம்முடன் நித்தியத்துக்கு வராது. எனவே மனம்போன போக்கெல்லாம் சென்று உங்களுடைய வாழ்வை அழித்துக்கொள்ள வேண்டாம். கண்கள் காணும் காட்சிகள், காதுகள் கேட்கும் சொற்கள், நாவு பேசும் வார்த்தைகள் இவற்றால் சரீரத்தை குற்றமற்றதாய்க் காத்துக் கொள்ளுங்கள்.

4. தூய எண்ணங்களைக் கொண்டிருத்தல்.

தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாயிருக்க வேண்டுமெனில் நம்முடைய சிந்தனை சுத்தமாயிருக்கவேண்டும். நம்முடைய இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். ஆம், வார்த்தைகளின் பிறப்பிடம் நமது சிந்தனையே. சிந்தனையே நமது சரீரத்தை ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது. ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் நமது சிந்தனை சாத்தானால் தாக்கப்படுகிறது. பாவம், பாலியல், வன்முறை இவற்றால் நிறைந்த உலகில் வாழும் நாமும் இவற்றால் பாதிக்கப்படுகிறோம்.

எபேசு சபை விசுவாசிகளுக்கு பவுல் எழுதி யதை உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்.

இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள் (எபேசி.4:21-24).

தேவனுக்கு முன்பாக நாம் பரிசுத்தமாயிருக்க வேண்டுமெனில் நம்முடைய உள்ளம் புதுப்பிக்கப்பட வேண்டும். தேவனுடைய நன்மையையும் அவருடைய கிருபையையும் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒரு மனிதன் தன்னுடைய சிந்தனையின்படியே உருவாக்கப்படுகிறான் என்று எமர்சன் என்ற கவிஞன் கூறினார். இதனையே, ரோமச் சக்கரவர்த்தி மார்க்கஸ் ஆரெலியஸ் என்பவர், ஒரு மனிதனுடைய வாழ்க்கையானது அவனது எண்ணங்களால் உருவாக்கப்படுகின்றன என்று விளக்கினார். வேதபுத்தகமும் மனிதனுடைய இருதயம் அவனுடைய வழிகளை யோசிக்கும் என்று கூறுகிறது. எனவேதான் பவுலடிகளாரும் பிலிப்பு பட்டணத்தார்களுக்கு, கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் (பிலி.4:8) என்ற ஆலோசனையைக் கொடுத்திருப்பார் என நான் எண்ணுகிறேன். கடந்த 24 மணி நேரத்தில் உங்கள் சிந்தனையை ஆராய்ந்து பாருங்கள்.

உங்கள் சிந்தனைகளைக் குறித்து நீங்கள் திருப்தியடைகிறீர்களா? உங்கள் சிந்தனையை ஆக்கிரமித்து உங்களுக்குள் கிரியைகளை உருவாக்கியவைகளை அறிந்துகொள்ளுங்கள். அவைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தீய சிந்தனைகள் எழுமாயின், அவை அகன்றுபோக உடனடியாக தேவனிடம் ஜெபியுங்கள். ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் அதிகநேரம் செலவழியுங்கள். வேதவசனங்களால் உங்கள் சிந்தையை நிரப்புங்கள். இதுவே அத்தீய சிந்தனைகளை அகற்றும் மருந்து. தேவனுக்கு முன்பாக நாம் பாவமற்றவர்களாய்க் காணப்பட முடியாது. ஆனால் குற்றமற்றவர்களாய் வாழ்ந்துகாட்ட முடியும்.

5. உங்கள் வாழ்வின் குறிக்கோளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.

ஷேக்ஸ்பியர் தனது மக்பெத் நூலில், வாழ்க்கை என்பது ஒரு முட்டாள் கூறிய கதையைப் போல ஒலிகளாலும் ஓசைகளாலும் நிறைந்து அர்த்தமற்றதாயிருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதேப்போல உங்கள் வாழ்வும் உள்ளதா? நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான் (1யோவா.3.1-3).

நீங்கள் தேவனுக்கு முன்பாக குற்றமற்றவர்களாய் இருக்கவேண்டுமெனில் உங்கள் வாழ்வு செம்மையானதாக இருக்கவேண்டும். நாளை இயேசுகிறிஸ்துவுடன் நித்தியமாய் வாழ்வோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்குமெனில் இன்று தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் வாழவேண்டியது அதிக அவசியம். நாம் ஏன் வாழ்கிறோம் என்ற கேள்விக்கு அநேக காரணங்களை நாம் அடுக்கிவிடலாம். ஆனால் நம்முடைய வாழ்வு இவ்வுலக வாழ்வுடன் முடிந்து போவதில்லை. முடிவில்லா அந்த நித்திய பேரின்பத்தை அடைய இவ்வுலகில் நாம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் வாழவேண்டும்.

உங்களுடைய வாழ்வின் குறிக்கோள் என்ன? நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன். என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது (யோபு 27:5,6). அநேக நாட்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் மெர்வ் கிரிப்பின் நேர் காணல் நிகழ்ச்சி ஒன்றைக் கண்ணுற்றேன். ஓர் ஆணழகன் போட்டியில் பரிசுபெற்றவரிடம் அவருடைய உரையாடல் நடைபெற்றது. மெர்வ் கிரிப் அவரிடம், நீங்கள் எவ்வாறு தசைகளை உருவாக்குகிறீர்கள்? என்று கேட்டார். அந்த மனிதர் பதிலேதும் கூறவில்லை. மாறாக தனது தசைகளை முறுக்கிக் காட்டினார். பார்வையாளர்கள் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். மீண்டுமாக மெர்வ் இவ்விதமாய் தசைகளை உருவாக்குவதன் பயன் என்ன? என்று கேட்டார். அந்த மனிதர் மிகவும் குழப்பமடைந்தார். அக்கேள்விக்கு அவரிடம் பதில் ஏதும் இல்லை.

நானும் உங்கள் முன் சில கேள்விகளை வைக்க விரும்புகிறேன். நீங்கள் ஏன் தேவனுக்கு முன்பாக பரிசுத்தர்களாய் இருக்க வேண்டும்? ஏன் வேதத்தை தியானிக்க வேண்டும்? ஏன் ஜெபக்கூடுகைக்குச் செல்ல வேண்டும்? ஏன் கிறிஸ்தவ நூல்களைப் படிக்க வேண்டும்? ஏன் கிறிஸ்தவ வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்கவேண்டும்? இக்காரியங்களால் உங்கள் ஆன்மீக சரீரம் பலப்படும். தேவனாகிய ஆண்டவருக்குப் பிரியமான வாழ்வு நடத்தி அவருக்காக உழைக்கும் ஊழியக்காரராக நம்மை மாற்றும்.

ஒருமுறை இத்தாலியிலுள்ள மிலன் நாட்டு கதீட்ரல் ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு மூன்று பெரிய நுழைவாயில்கள் இருந்தன. ஒரு வாயில் கதவில் பளிங்கினால் ஆன அழகிய பூங்கொத்து வேலைப்பாடு காணப்பட்டது. அதில் நம்மை மகிழ்வூட்டும் நிகழ்வுகள் தற்காலிகமானவை என்று எழுதியிருந்தது, இரண்டாவது கதவில் ஒரு சிலுவை பதிக்கப்பட்டிருந்தது. அதில் நம்மை அதிர்வூட்டும் நிகழ்வுகள் தற்காலிகமானவை என்றும், நடுக்கதவில் முக்கியமான நிகழ்வுகள் நித்தியமானவை என்றும் எழுதியிருந்தது.

தேவனுக்கு முன்பாக பரிசுத்தராய் வாழ்வதே நமது வாழ்வின் முக்கியமான நோக்கமாக அமைதல் வேண்டும். அவ்வாறு நாம் பரிசுத்தராய் வாழ்வதை பிறருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டியதில்லை. நாம் தேவனுக்கு பிரியமான ஜீவியம் செய்தால் நமது பிரயாசத்தின் நற்கனிகளை நாம் அனுபவிக்க முடியும். அழுக்கான கரங்களிலிருந்து நற்கனிகள் வராது. தேவனும் கறை படிந்த பாத்திரங்களை உபயோகப்படுத்தமாட்டார். நம்மைப் புதுப்பித்து, சுத்தமாக்க பரிசுத்தப்படுத்த, தூய ஆவியானவர் ஒத்தாசை அருளுவார் என்பது நமக்கு ஆறுதலை அளிக்கும் காரியமாகும். இதுவே தேவ அழைப்பின் பந்தயப்பொருளை நோக்கி நாம் பொறுமையுடன் ஓட நம்பிக்கையைத் தருகிறது.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை