பல கேள்விகள் ஒரே பதில்!

சகோதரி சாந்தி பொன்னு
(ஜனவரி-பிப்ரவரி 2012)

மதுரை சத்தியவசன சஞ்சிகை வாசகர்களுக்கு என் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கர்த்தர்தாமே, இந்தப் புதிய ஆண்டிலும் உங்களை நிறைவாகவே ஆசீர்வதிப்பாராக.

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால், அவரிடத்திலே நம்பிக்கை கொண்டிருப்பேன் (புலம்.3:24) எரேமியா இப்படிக் கூறுவதற்குக் காரணமாய் அமைந்தது, தேவனுடைய உண்மைத்துவத்தில் எரேமியா கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையேயாகும். அந்த நம்பிக்கை நம்மிடத்தில் உண்டா? அந்த உறுதியை எரேமியா விடாமல் பற்றிக்கொண்டதன் இரகசியம், தேவ கிருபையும் தேவ இரக்கமும் காலைதோறும் புதியவைகள் என்ற அனுபவத்தை எரேமியா பெற்றிருந்ததுதான். அதனாலேதான், எரேமியா, தன் வாழ்வில் பல இன்னல்கள் அவமானங்களைச் சந்திக்க நேரிட்டபோதும், கடைசிவரைக்கும் தேவனுக்குள் உறுதியாயிருந்து ஜெயம்பெற ஏதுவாயிருந்தது. ஆனால், இன்று நமது காரியம் சற்று வித்தியாசம். தேவனுடைய உண்மைத்துவத்தில் நமக்கு நம்பிக்கை இல்லையா? அப்படியல்ல; ஆனால், தினமும் தேவன் உண்மையுள்ளவர் என்பதை நமது வாழ்வில் வெளிப்படுத்த முடியாதவர்களாக, சூழ்நிலைகள் தடுமாறும் போது நாமும் தடுமாறிவிடுகிறோம். இந்த நிலைமை ஏன்? இக்கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால், காலைதோறும் என்று சொல்லும் எரேமியாவின் அனுபவம் நம்மிடம் இருக்கிறதா, என் பங்கு கர்த்தர்தான் என்று நமது ஆத்துமா சொல்லுகிறதா என்ற கேள்விகளுக்குரிய நமது பதில் என்ன என்பதைத்தான் நாம் முதலில் கண்டறியவேண்டும்.

பெத்தானியா ஊர் குடும்பம்

எருசலேமிலிருந்து இரண்டு மைல்களுக்கு அப்பால் ஒலிவமலை அடிவாரத்தில் அமைந்த ஊர் பெத்தானியா. அந்த ஊர் வேதாகமத்திலே முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணமாயிருந்தது அங்கே வாழ்ந்திருந்த ஒரு குடும்பம். அந்தக் குடும்பம் முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணமாயிருந்தது, இயேசு அந்தக் குடும்பத்தில் அன்பாயிருந்தார்; அங்கே தங்குவார்; அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரே தம்பி லாசருவில் இயேசு மிகவும் அன்பாயிருந்தார். அக்கா மார்த்தாள், பொறுப்புமிக்க குடும்பத் தலைவி. தங்கை மரியாள், தம்பி லாசரு. விருந்தோம்பல் என்பது அவர்களுடைய கலாச்சாரத்திலே மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தக் குடும்பமும் விருந்தோம்பலில் சளைத்தவர்கள் அல்ல.

இப்படிப்பட்ட ஒரு அன்பான குடும்பத்திலும் ஒரு வேதனையான சம்பவம் நிகழத்தான் செய்தது. ஒரே தம்பி லாசரு மரித்துப் போவானோ என்று எண்ணுமளவுக்கு வியாதிப்பட்டான். ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சகோதரிகள் இயேசுவுக்கு உடனடியாகவே தகவல் அனுப்பிவிட்டார்கள். ஆனால், அவரோ வரவில்லை. லாசரு மரித்தான்; அடக்கமும் முடிந்தது. அப்போதும் இயேசு வரவில்லை. அடக்கம் முடிந்து நான்கு நாளானபின்பே இயேசு வருகிறார் என்ற செய்தி வந்தது. உடனே எழுந்து ஓடியது மார்த்தாள்தான். மரியாளோ வீட்டிலே இருந்துவிட்டாள். இது முதலாவது காரியம்.

அடுத்தது, ஓடிச்சென்ற மார்த்தாள்: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். அத்துடன் அவள் நிறுத்தவில்லை. இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். நாம் அங்கே நின்றிருந்தால், இப்படியும் ஒரு விசுவாசமா என்று மூக்கில் விரல் வைத்திருப்போம். ஆம், லாசரு மரித்து நான்கு நாட்களானாலும் இன்னமும் இயேசுவால் எதுவும் செய்யமுடியும் என்று மார்த்தாள் நம்பினாள் என்பதை அவளது வாயின் அறிக்கையில் தொனிக்கிறது அல்லவா!

மூன்றாவது, மார்த்தாளுக்கு வேதசத்தியம் தெரியும். கடைசிநாளில் உயிர்த்தெழுதல் நடக்கும், மரித்தோர் உயிர்த்தெழுவார் என்ற இறையியல் எல்லாம் தெரியும். இல்லாவிட்டால் இயேசுவோடு அத்தனை தைரியமாக அவள் பேசியிருக்கமாட்டாள்.

நான்காவது, தாமே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறியபோது, மார்த்தாள் சொன்ன அறிக்கை எல்லாவற்றுக்கும் முடி வைத்தது போலானது. ஆம் ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த அறிக்கை நமக்கு பேதுருவின் அறிக்கையை நினைவூட்டுகிறதல்லவா!

இத்தனைக்கும் பின்னர் எழுந்துபோன மரியாள் பேசியது ஒரேயொரு வார்த்தைதான். மார்த்தாள் சொன்ன அதே வார்த்தையைத்தான் மரியாளும் சொன்னாள். அவ்வளவுதான். எந்தவொரு விசுவாச அறிக்கையோ, வேறு எதுவுமோ மரியாள் பேசவில்லை.

இதோ கேள்விகள்:

ஏன் மரியாள் பேசவில்லை? அவளுக்கு விசுவாசம் இல்லையா? அடுத்தது, மார்த்தாளுக்கு எங்கிருந்து இந்த விசுவாசம் வந்தது? முதன்முதல் இந்தக் குடும்பத்தை லூக்கா 10:38-42இல் நாம் சந்திக்கிறோம். அங்கே மரியாள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்ததையும், மார்த்தாள் வீட்டு வேலையால் மிகவும் வருத்தமடைந்திருந்ததையும் காண்கிறோம். வேதத்திலே எங்கேயும் மார்த்தாள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருந்து கற்றாள் என்று எழுதப்படவில்லை. யோவான்12:2லும் மார்த்தாள் இராவிருந்தில் பணிவிடை செய்துகொண்டிருந்தாள் என்று தான் வாசிக்கிறோம். ஆனால், மரியாளோ இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்து கற்றாள். ஆனால் அவள் எதுவும் பேசவில்லை. அப்படியானால் மரியாளுக்கு விசுவாசம் இல்லையா?

அடுத்தது, மார்த்தாள் வேலை செய்து கொண்டே செய்தியைக் கேட்டாளா என்று எண்ணத்தோன்றுகிறது. அல்லது, பிறரிடமிருந்து கேட்டறிந்து, அல்லது எப்படியோ எந்த விதத்திலேயோ சத்தியத்தை அறிந்து வைத்திருந்தாள் என்பது உண்மை. அவளுக்கு அறிவு இருந்தது; விசுவாசமும் இருந்தது. இது நமக்கும் போதாதா? மாறாக, மரியாளைப்போல நேரத்தை ஒதுக்கி, அமர்ந்திருந்து, வேதத்தை வாசித்துத் தியானித்து, தேவன் நம்முடன் பேசுவதை உணர்ந்து, கற்று, அதன்படி வாழ நம்மைத் தயார்படுத்தவேண்டியது அவசியந்தானா? சுருங்கச் சொன்னால், இந்த அவசர வாழ்விலே, எல்லா வேலைகளையும் ஒதுக்கி, தேவபாதம் அமர்ந்து, வேதவசனத்தைத் தியானித்து ஜெபிப்பது அவசியந்தானா? ஒரு சிறிய ஜெபம் செய்துவிட்டு, எப்படியோ நமது அறிவை வளர்த்துக்கொண்டால், நமது விசுவா சத்தைக் காத்துக்கொள்ள அது போதாதா?

கல்லறையண்டையில் மார்த்தாளின் விசுவாசம்:

இக்கேள்விக்கு விடையைக் கண்டு கொள்ளவேண்டுமானால், மார்த்தாள் பெற்றுக் கொண்ட அறிவு அவளுடைய விசுவாசத்தில் ஆற்றிய பங்கு என்ன என்பதைக் கவனிப்பது நல்லது. நீர் இருந்திருந்தால் சகோதரன் மரித் திருக்கமாட்டான் என்றும், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்றும் நான் விசுவாசிக்கிறேன் என்றும் உறுதியாகப் பேசிய மார்த்தாள், இப்போது மரியாளோடும் மற்ற ஜனங்களோடும் கூட கல்லறையண்டையிலே நிற்கிறாள். அது ஒரு குகையாயிருந்தது. அதன்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.

இயேசு, அந்தக் கல்லை எடுத்துப்போடும் படி சொன்னார். அதைக் கேட்டதுதான் தாமதம், மார்த்தாள் முந்திக்கொண்டு பேசுகிறாள். ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலு நாளாயிற்றே. இப்போதும் உம்மாலே எதுவும் செய்யமுடியும் என்றும், நீர் தேவனுடைய குமாரன் என்றும் விசுவாச அறிக்கை செய்த மார்த்தாளின் விசுவாசம், கல்லறையண்டையில் தடுமாறியது ஏன்? அவள் கொண்டிருந்த விசுவாசத்தைத்தான் இயேசு கிரியையில் காட்ட முற்பட்டார். மார்த்தாளோ, அது நாறும் என்று தடுத்தாள். பேசும்போது வெளிப்பட்ட அறிவு இப்போ எங்கே போனது? அவளுடைய பேச்சில் இருந்த விசுவாசம் கிரியையில் வெளிப்படாதது ஏன்? ஆனாலும், ஆண்டவர் அவளைப் புறக்கணிக்கவில்லை. விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்ல வில்லையா என்று திடப்படுத்தினார்.

இயேசுவின் பாதத்தில் பெத்தானியா மரியாள்:

இந்தக் குடும்பத்தை நாம் வேதாகமத்திலே முக்கியமாக மூன்று இடங்களிலே சந்திக்கிறோம். முதலாவது, லூக்கா10:38-42இல் காண்கிறோம். அங்கே மரியாள் எதுவும் பேசவில்லை. இயேசுவின் பாதத்தில் உட்கார்ந்திருந்தாள் என்று வாசிக்கிறோம்.

இரண்டாவது, மேற்கண்ட சம்பவம். அதிலே, மார்த்தாள் இயேசு வந்திருக்கிறார் என்று சொன்னதும், மரியாள் இயேசுவிடம் வந்து, மார்த்தாள் சொன்ன அதே வார்த்தையைத்தான் சொன்னாள். ஆனால், அவளைக் குறித்து எழுதியிருப்பதைக் கவனமாகப் பாருங்கள். மரியாள் சீக்கிரமாய் எழுந்து, இயேசு இருந்த இடத்தில் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்று அழுதாள். இரு சகோதரிகளும் ஒரே ஜெபத்தைத்தான் செய்தார்கள். ஆனால், மரியாள் இயேசுவின் பாதத்தில் விழுந்து ஜெபித்தது, அதன்பின்னர் அவள் மெளனமாய் நின்றது, கல்லறையண்டையிலும் அமைதியாய் செயற்பட்டது எல்லாமே, அவள் இயேசுவில் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை அவளுக்குள் ஊறிப்போயிருந்ததை நமக்கு உணர்த்துகிறதல்லவா.

மூன்றாவதாக, யோவான்12:1-8இல் காண்கிறோம். இதே சம்பவத்தை மாற்கு 14ஆம் அதிகாரத்தில் மிக அழகாக எழுதியுள்ளார். பெத்தானியாவில் சீமோன் வீட்டிலே இயேசுவுக்குக் கொடுத்த இராவிருந்திலே இந்தக் குடும்பமும் இருந்தது. லாசரு இயேசுவுடனே இருந்தான். மார்த்தாள் பணிவிடை செய்து கொண்டிருந்தாள். மரியாளும் இருந்தாள். ஆனால், அவளோ எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால், அவளுடைய செயற்பாடு இன்றும் பேசப்படத்தக்கதொன்றானது. விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலை மயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். மாற்கு இதனை எழுதும்போது அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள் என்று எழுதியுள்ளார். இங்கேயும் மரியாளை இயேசுவின் பாதத்தண்டையிலேதான் காண்கிறோம். இந்தச் சம்பவம் அங்கிருந்த யாவரையும் குழப்பத்திலாழ்த்தியது. ஆனால், ஆண்டவரோ, நான் அடக்கம் பண்ணப்படுவதற்கு எத்தனமாக என் சரீரத்தில் தைலம் பூச முந்திக் கொண்டாள் என்று, எதுவும் பேசாத மரியாளுக்காக சாட்சி பகன்றார்.

மரியாளின் உள்ளுணர்வு:

ஆம், இயேசுவின் மரணத்தை செய்கையிலே முன்அறிவித்தாள் மரியாள். அவளால் மாத்திரம் இது எப்படி முடிந்தது? இயேசு, உலகத்தில் வாழ்ந்திருந்தபோது, தாம் அடைய வேண்டிய பாடுகள் மரணம் உயிர்த்தெழுதலைக் குறித்து அடிக்கடி சொன்னார். சீஷர்களின் பிரதிக்கிரியைகள் விநோதமாக இருந்தது. ஒருமுறை, அவரது வலது இடது பக்கம் இருப்பதைக் குறித்துப் பேச அம்மாவையே கூட்டி வந்தனர் இருவர். இன்னொரு தடவை தமக்குள் யார் பெரியவர் என்று தர்க்கித்தனர். பேதுருவோ, அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான் என்றும் வாசிக்கிறோம். மொத்தத்தில் அவர்கள் இயேசுவின் மரணத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. பரிசேயரும் ஆசாரியரும் அதைக் கேட்டபோது கோபப்பட்டார்கள். யூதரோ, இவரை ஒரு ராஜாவாகப் பார்க்க ஆசைப்பட்டார்களே தவிர, அவருடைய மரணம் உயிர்த்தெழுதலை அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இயேசுவின் மரணத்தை விசுவாசித்த ஒரேயொரு நபர் இந்த பெத்தானியா மரியாள்தான். இது எப்படி ஆனது? அவளுடைய உள்ளுணர்வு எப்படி இதனை உணர்ந்தது?

ஒரே பதில்:

கேள்விகள் பல எழுந்தாலும் பதில் ஒன்று தான். மரியாள், இயேசுவின் பாதத்திலே இருந் தாள். மூன்று சம்பவத்திலும் அவளை இயேசு வின் பாதத்தருகேதான் நாம் காண்கிறோம். அதனால், அவளுடைய உள்ளுணர்வு ஆண்ட வரோடு இசைந்து உறைந்திருந்தது எனலாம். இல்லையானால், ஆண்டவருடைய மரணத்தை வெளிப்படுத்திய அந்த பரிசுத்த செயலை அவளால் மாத்திரம் எப்படிச் செய்யமுடிந்தது?

மார்த்தாள் தவறா:

இப்போ உங்களுக்குக் கேள்விகள் எழும்பலாம். மார்த்தாள் செய்தது தவறா? பணிவிடை செய்தது தவறா? இல்லை, தவறே இல்லை. அவள் ஆண்டவருக்குத்தான் சேவை செய்தாள். அதில் என்ன தவறு?

வீட்டிற்கு வருகிற விருந்தாளிகளை இரு விதங்களில் நாம் கவனிக்கிறோம். ஒன்று, விருந்தாளியைக் கவனிப்பது; அடுத்தது, விருந்தாளியின் தேவைகளைக் கவனிப்பது. இரண்டும் அவசியம். இரண்டும் சமநிலையில் இருத்தல் வேண்டும். இங்கே மரியாள் வந்தவரைக் கவனித்தாள்; மார்த்தாள் வந்தவருடைய தேவையைச் சந்தித்தாள். அப்போ, மார்த்தாளின் பிரச்சனை என்ன? இயேசு, அவள் செய்த பணிவிடையைத் தவறு சொன்னாரா? இல்லை. அவள் தன் பிரச்சனையை ஆண்டவரிடம்தான் சொன்னபோது, அவர் அதனைத் தீர்த்துவைக்கவில்லை. மரியாளை வேலைசெய்ய அனுப்பியிருக்கவேண்டும் என்று நாம் சொல்லக்கூடும். ஆனால், உண்மையிலேயே இயேசு மார்த்தாளின் குறையைத் தீர்த்தார். ஆனால், அவள் நினைத்தபடியல்ல. அப்போ எப்படி? ஆம், இருவரும் இயேசுவுக்குத்தான் சேவை செய்தனர். ஆனால், முதற்சேவை எது என்பதை மார்த்தாள் மறந்துவிட்டாள். மார்த்தாளின் முக்கிய பிரச்சனை மரியாள் வேலை செய்யவில்லை என்பது அல்ல. மாறாக,

1. உணவு அவசியந்தான், ஆனாலும் அதற்கே முக்கியத்துவம் கொடுத்தது.

2. மரியாளின் செய்கையைக் குறைத்து மதிப்பிட்டது.

3. தான் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறாளோ அதற்கே மரியாளும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தது.

4. பல காரியங்களைக் குறித்துக் கவலை கொண்டது.

5. தன் விருந்தாளியுடனிருந்து, முதலில் அவரில் சந்தோஷப்படுவது அவளுக்குக் கடினமாயிருந்தது.

இதுதான் மார்த்தாளின் பிரச்சனை. அவளுக்கு இயேசுவினருகே இருந்து அவரை விசாரித்து, அவரிடமிருந்து கேட்பதைப் பார்க்கிலும், அவருடைய உள்ளுணர்வுடன் இசைந்திருப்பதைப்பார்க்கிலும், அவருக்குப் போஜனம் கொடுப்பதே அவளுக்கு முக்கியமாகத் தெரிந்தது. அவரோ இன்னும் சில நாட்களுக்குள் எருசலேமுக்குள் போகப்போகிறார். பாடுகள் அவரை நெருங்கிக்கொண்டிருந்தது. அவருடைய உள்ளத்தை அறிந்து செயற்படும் பக்குவம் மார்த்தாளிடம் குறைவுபட்டிருந்ததையே நாம் காண்கிறோம்.

ஆனால், மரியாளோ, சரியான நேரத்திலே சரியான காரியத்தைச் செய்தாள். அவளது உள்ளம் ஆண்டவருடைய உள்ளத்துடன் இசைந்திருந்தது. இது பெரிய ஆசீர்வாதம் அல்லவா. மார்த்தாள் தவறு செய்யவில்லை. ஆனால், செய்யவேண்டியதைத் தவறவிட்டு விட்டாள்.

நமது பதில் என்ன:

பிரியமானவர்களே, இன்று நமது வாழ்வில் பலவித சீர்கேடுகளும் தர்க்கங்களும் பிரிவினைகளும் ஏன்? ஆண்டவருடைய உள்ளத்துடன் நமது உள்ளம் இசைந்தில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. அவருடைய நினைவு நம்முடைய நினைவுகளுக்குள்ளும், நமது நினைவுகள் அவருடையதுடனும் இணையும்வரை நம்மால் அவருடைய வார்த்தைக்கு ஏற்ப வாழமுடியாது. நாம் எல்லோரும் எப்படியோ ஓரளவாவது ஜெபிப்போம். எல்லா ஜெபங்களும் தேவனுக்குக் கேட்கும். ஆனால், நமது ஜெபங்களில், எவற்றில் தேவன் பிரியமாயிருக்கிறார் என்பது கேள்விக்குறிதான். தேவவார்த்தை நம் வாழ்வில், நமது செயற் பாட்டில் வெளிப்படவேண்டுமானால், நாம் ஆண்டவர் பாதம் அமர்ந்திருக்க வேண்டும். அதற்கு நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.

வேதத்தைத் திறந்து வாசித்துத் தியானித்து அதை நமது வாழ்வோடு இணைத்துக்கொள்ளவே வேண்டும். வேறு வழியே இல்லை. இன்டர்நெட்டில் வேதம் வாசிப்பதும், தியானத்தை முடித்துக்கொள்வதும், மொபைல் போனிலே வேதம் வாசிப்பதும், வேறு யாரும் எழுதியவற்றை வாசிப்பதும் தவறு என்று சொல்லவரவில்லை. அவை தீமையானதல்ல. ஆனால், அமைதியான நேரத்தில், தனியான இடத்தில், முழங்காற்படியிட்டு, தேவனுடைய வார்த்தையை வாசித்துத் தியானித்து, அதனை முன்நிறுத்தி ஜெபித்து, தேவன் நமக்கு வெளிப்படுத்துவதை, நமது உள்ளத்தில் உணர்த்துவதை தெளிந்த புத்தியுடன் சிந்தித்து, அவற்றை எழுதிவைத்து, அதைத் தொடர்ந்து ஜெபித்து, அந்த ஜெப நேரத்தில் பெற்றுக்கொள்ளும் பெலத்துடன் அந்தந்த நாளை ஆரம்பிக்கும்போது கிடைக்கும் புத்துணர்வு, பெலம், தைரியம், பாவத்திற்கு எதிர்த்து நிற்கும் வைராக்கியம் வேறெங்கும் பெற்றுக்கொள்ள முடியாது.

பிரியமானவர்களே, கேள்விகள் பல எழும்பலாம். ஆனால், பதில் ஒன்றுதான். எந்தக் கேள்விக்கும் தேவபாதம் அமர்ந்திருப்பதே ஒரே பதில். அதற்கு முதலிடம் கொடுப்பதிலிருந்து நாம் தவறுவோமானால், மார்த்தாளைப்போல நாமும் தடுமாறிப்போய் விடுவோம். மரியாள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள் என்று ஆண்டவரே சாட்சி சொன்னார். அவர் நம்மைக் குறித்தும் சாட்சி சொல்லும்படி, கர்த்தரே என் பங்கு என்று நமது ஆத்துமாவும் தேவனைப் புகழுமா? காலைதோறும் புதிய கிருபையையும் பெலத்தையும் நாமும் பெற்றுக்கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில், வேததியானத்துடன் கூடிய ஜெபம் இல்லையானால், அதனை நாம் புறக்கணிப்போமானால், சாத்தானின் தந்திரமான கண்ணி வலைக்குள் நாம் அகப்படுவது நிச்சயம். அந்தத் துர்ப்பாக்கிய நிலை நமக்கு வேண்டாம்.

இப்புதிய ஆண்டிலிருந்தாவது, நமது ஜீவன் உள்ளவரைக்கும், வேததியானத்துடன் கூடிய ஜெபத்திலே ஆண்டவர் பாதத்திலே அமர்ந்திருந்து பெலனடைந்து உத்தம சாட்சிகளாக வாழ நம்மை அர்ப்பணிப்போமாக.

சத்தியவசனம்