நாடும் கிறிஸ்துவின் பிள்ளைகள் நாமும்!

சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஜுன் 2019)

“அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால் அவனுக்குப் பானங்கொடு; … நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோம.12:20,21)


“பிதாவே, இவர்களுக்கு மன்னியும். இவர்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள் என்ற வார்த்தையைத் தியானித்து இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை. இப்போ நம்மால் அந்த மன்னிப்பைச் செயலில் காட்டமுடியுமா?” “மகா வல்லமையுள்ளவர் கடவுள் என்றால், இதைத் தடுக்கமுடியாதபடி அவருடைய வல்லமை எங்கே போனது?” கடந்த ஏப்ரல் 21ம் தேதியின் கொடூரங்கள் எழுப்பிய கேள்விகள் இவை. இவற்றைக் கேட்டவர்கள் புறவினத்தார் அல்ல; கிறிஸ்தவ விசுவாசிகள்தான் என்பதை கவனிக்க வேண்டும்.

கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் மனதில் ஏற்படுத்திய ஆறாத காயங்கள் வடுக்கள் மத்தியிலும், கிறிஸ்துவின் பிள்ளைகள் நமக்குப் பொறுப்புகள் பல உண்டு. அந்தப் பொறுப்புகளிலிருந்து நாம் ஏற்கனவே பின்வாங்கிவிட்டோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. தேசம் இரத்தம் சிந்துகின்ற ஒவ்வொரு தடவையும் ஜெபங்கள், உபவாசங்கள் என்று முன்னெடுக்கிறோம். நாளடைவில், தேசம் எப்படி எல்லாவற்றையும் மறந்து அடுத்த கட்டத்திற்கு நகருகிறதோ, நாமும் எல்லாவற்றையும் மறந்து நமது சுயநல காரியங்களுக்குள் மூழ்கி விடுகிறோம். இதுவே நம்மில் காணப்படுகின்ற பெரிய குறைபாடு என்றால் அது மிகையாகாது.

இலங்கை ஒரு சிறிய, ஆனால் எல்லா வளங்களும் நிறைந்த, நல்ல சுவாத்தியமுள்ள, அற்புதமான வடிவம்கொண்ட, அழகான நாடு. ஆனால், நாம் சுதந்திரம் பெற்ற பின்னர் ஒன்றுக்கு மூன்று இனக்கலவரங்கள், நீண்டகால யுத்தம், சுனாமி என்று பல இழப்புகளையும் இரத்தக்களரிகளையும் இலங்கை கண்டுவிட்டது. நாம் பரலோக ராஜ்யத்தின் பிரஜைகள்தான்; ஆனால் இந்த உலகில் நாம் வாழுவதற்காகவும், ராஜ்யத்தின் பணிகளை முன்னெடுக்கவும் இந்த நாட்டில் தானே தேவன் நம்மை வாழவைத்திருக்கிறார். அந்த வகையில் நமது நாட்டின் பொறுப்பு நமது கைகளில் என்பதை யார் சிந்திக்கிறோம்?

ஜெபமும் கீழ்ப்படிதலும்

ஜெபம் என்பது நமக்குப் பழகிப்போய்விட்டதா? ஆண்டவருடைய சிலுவைப்பலி தேவனுக்கும் நமக்குமிடையே தொங்கிய பாவத்திரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்து, பிதாவிடம் நாம் உரிமையோடு கிட்டிச்சேருகின்ற கிருபையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்தக் கிருபை வெறுமனே வார்த்தைகளை உதிர்த்து விடுவதற்கல்ல; அமர்ந்திருந்து கர்த்தருடைய இருதயத்தின் பாரத்தையும் சுமக்கவேண்டிய கட்டாயத்தையும் நமக்கு உணர்த்துகிறது என்பதை மறந்துவிட்டோமோ என்னவோ!

அன்று சோதோம் கொமோராவை அழிப்பதற்கு முன்னர், கர்த்தர், “நான் செய்யப்போவதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ” என்றாரே. ஏன் தெரியுமா? கர்த்தரே பதில் சொல்கிறார். “அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும், நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்” (ஆதி.18:17-19). அப்படியென்றால், ஆபிரகாமைப்போல தேவனுடைய கட்டளைகளையும் நீதி நியாயத்தையும் இன்று நமது பிள்ளைகளுக்கும் எடுத்துச்சொல்லி கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று சொல்லுகின்ற ஒருவராவது இன்று இல்லையோ? அதனால்தான் நம்முடைய இருதயத்தில் ஒரு உணர்வுகூட ஏற்படவில்லையோ?

ஆனால் இந்தக் கேள்விக்கு ஒரு சகோதரன் அழகான பதில் கூறினார். உண்மைதான்! நோவா காலத்து ஜலப்பிரளயத்தைக் குறித்து கர்த்தர் நோவாவுக்குச் சொன்னார். சோதோம் கொமோராவைக் குறித்து ஆபிரகாமுக்கு அறிவித்தார். ஒன்றுக்கு இரு தடவைகளாக இஸ்ரவேலை அழிப்பதாக மோசேக்குச் சொன்னார். வடராஜ்யமான இஸ்ரவேலுக்கு வரவிருந்த நியாயத்தீர்ப்பைக் கர்த்தர் ஆமோஸ்மூலம் தெளிவாகத் தெரியப்பண்ணினார். நினிவேயின் அழிவை யோனாவுக்கு அறிவித்தார். இவைகளெல்லாம் தேவன்தாமே தீர்மானித்தவை. ஆகவே அவற்றை அவர் முன் கூட்டியே அறிவித்தார். தேவன் தீர்மானிக்காத, ஆனால் தேவனால் அனுமதிக்கப்பட்டவற்றை யாருக்குத் தெரியப்படுத்துவது? தேவன் செய்வது ஒன்று; அனுமதிப்பது இன்னொன்று. இரண்டையும் நாம் குழப்பக்கூடாது. என்றாலும் இன்னமும் பிந்திப்போகவில்லை. ஆபிரகாமைப்போல, மோசேயைப்போல உள்ளம் உடைந்து மன்றாடுவோம். நமது ஜெபங்கள் உண்மைத்துவமாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்பட்டும்.

அன்று கர்த்தர் இஸ்ரவேலிடம் எதிர்பார்த்த ஒரே காரியம் கீழ்ப்படிதல் ஒன்றுதான். அன்று அவர்கள் கர்த்தருக்கென்று தனித்த ஜாதியாக இருந்தார்கள். ஆனால் நாம் இன்று பல இன மக்களாக வாழுகிறோம். ஆக, இன்று நமக்கிருக்கும் பொறுப்பு அதிகம்! நாமும் வாழ்ந்து, நம்மைச் சுற்றிலும் வாழுகிற மக்களுக்கு முன்பாகத் தேவனுக்குச் சாட்சியாக வாழ்ந்து, தேசத்தைச் சேஷமாகக் காத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்முடையது. ஆகவே, தேவனிடம் கிட்டிச் சேருகின்ற பாக்கியம் பெற்ற நாம் இன்று அல்ல, இன்னொரு துர்சம்பவம் நடக்கும்வரை காத்திருப்பதும் அல்ல; அன்றாடம் தேவபாதத்தில் முழங்காற் படியிட்டு, நமது நாட்டுக்காகப் புலம்பி அழவேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறோம்.

நியாயந்தீர்ப்பது நமக்குரியது அல்ல

பிரச்சனைகளும் தாங்கொண்ணாத வேதனைகள் குழப்பங்களும் நேரிடும்போது, நம்மையும் அறியாமலேயே, “இவன்தான் காரணம்” “அவனுக்குத் தண்டனை கொடுக்கவேண்டும்” என்று நாமே நியாயாதிபதிகளாக மாறிவிடுகிறோம். துடிதுடித்துச் செத்துப்போன பச்சைப் பாலகரையும், நொடிப்பொழுதில் பெற்றோரை இழந்து கதறும் பத்து மாதக் குழந்தையையும், சிதறுண்ட மனித உடல்களையும் பார்க்கும்போது யாருக்குத்தான் இருதயம் வெடிக்காது.

ஆனால் இந்த நேரத்தில்தான் நாம், கிறிஸ்துவின் பிள்ளைகள் கவனமாக இருக்கவேண்டும். தமது சொந்த ஜனம் சிதறடிக்கப்படும்போதும், சாகும்போதும் பார்த்துக்கொண்டிருந்தவர் தேவன். தமது சொந்தக் குமாரனையே அநியாயமாகக் கொலை செய்த போதும் அமைதியாயிருந்தவர் கர்த்தர். ஏன்? அவர் இன்னும் மனிதனை நேசிக்கிறார். அவர் மாத்திரம் அன்றன்று நியாயம் தீர்ப்பாராயின் நாமே இன்று இல்லை. ஆகவே, நீதியுள்ள நியாயாதிபதி அவர் பார்த்துக்கொள்ளட்டும்.

அன்பும் பழிவாங்குதலும்

இந்த இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை. இரண்டும் இரு துருவங்கள். “பழிவாங்குதலும் பதிலளிப்பதும் எனக்குரியது” (உபா.32:35) என்கிறார் கர்த்தர். இதையே பவுலடியாரும் ரோமருக்குக் குறிப்பட்டு எழுதுகிறார். “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்” என்று எழுதிய பவுல், மேலும், “அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால் அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோம.12:19-21) என்கிறார்.

உலகின் ஏதோவொரு நாட்டிலே தன் சொந்தக் காரணத்தினால் ஒருவன் பழிவாங்க, அதைக் கொண்டு எங்கோ இருக்கிற இன்னொரு நாட்டுக்குள் புகுந்து இன்னொருவன் பழிவாங்குகிறான். பாவத்தின் கொடூரத்தின் பயங்கரத்தைப் பார்த்தீர்களா? கொலை செய்யாதிருப்பாயாக என்று கட்டளைக்கு இயேசு, தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபிக்கிறவனுக்கே நியாயத்தீர்ப்பு உண்டு என்பதை உணர்த்தினார். ஏன்? எல்லா மனுஷரும் தேவசாயலைக் கொண்டவர்கள். ஆக, ஒரு மனுஷனைக் கொல்லும்போது அவனில் இருக்கிற தேவசாயலே கொலை செய்யப்படுகிறது. இயேசுதாமே கொலைக்குத் தம்மை ஒப்புக்கொடுத்து, எல்லாப் பழிகளையும் தம்மேல் சுமந்துகொண்டார். இனி நாம் எப்படிப் பழிவாங்குவது? முடியாது. அன்பு ஒன்றைத்தவிர நம்மில் வேறெதுவும் வெளிப்படமுடியாது.

சிலுவையின் கொடூரத்தின் மத்தியிலும் தம்மைச் சிலுவையிலறைந்து வதைத்தவர்களுக்காக மாத்திரமல்ல, நம் அனைவருடைய துரோகத்துக்காகவும் பிதாவின் மன்னிப்பை நாடிக் கதறிய ஆண்டவருடைய அன்பை நாம் பிரதிபலிக்கவேண்டிய தருணங்கள் இவைதான். ஆண்டவர் அந்தக் கொடிய மரணத்தை ஏற்றதால்தான், பின்னால் உயிர்த்தெழுதல் என்றதொரு மகிமையை இந்த உலகம் கண்டது. ஆகவே, எல்லா வேதனைகளுக்கும் பின்னால் ஆண்டவர் ஒரு பெரிய காரியத்தை நமக்கும் தேசத்துக்கும் வைத்திருக்கிறார் என்பதை உணர்த்துவதும் நமது பொறுப்பு.

சத்துருவை நேசியுங்கள் என்று கற்றுத்தந்த ஆண்டவரின் வார்த்தைகளை வாழ்வில் செயற்படுத்த கிடைத்த ஒரு தருணமாக விசுவாசித்து, சத்துருவை மனதாலும் தூஷிக்காமல், அவர்களுக்காகவும் இரத்தம் சிந்திய ஆண்டவரின் திருப்பெயரால் அவர்களுக்காக ஜெபிப்பதும் நமது பொறுப்பு. ஏனென்றால் மனிதன் வெறும் அம்புதான்; அதனை எய்கிறவன் சாத்தான். ஆகவே நமது கோபமும் ஆத்திரமும் ஒரே சத்துருவாகிய சாத்தானை நோக்கியே அன்றி மனிதனை நோக்கித் திரும்புவது எந்த வகையில் நியாயம்?

மனந்திரும்புவோம்

இப்படியொரு கொடூர பாதிப்பு ஏற்படும்போது தான் நமக்கு, 2 நாளாகமம் 7:14 ஞாபகத்துக்கே வருகிறது. ஆனால், இந்த வார்த்தையைக் கர்த்தர் எப்போது கூறினார்? பிரச்சனைக்குள் இஸ்ரவேல் அகப்பட்டபோதா? இல்லையே? தேவாலயத்தைக் கட்டிமுடித்து அதைப் பிரதிஷ்டை செய்யும் முன்பதாக சாலொமோன் ராஜா ஒரு நீண்ட ஜெபத்தைச் செய்தான். அந்த ஜெபத்திலே, மக்கள் சிறைப்பட்டுப்போனால் சிறைப்பட்டிருக்கிற தேசத்திலிருந்து உம்மை நோக்கிக் கெஞ்சி, தங்கள் முழு இருதயத்தோடும் மனந்திரும்பினால் என்றும் (6:37), கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்ததினால் மழை இல்லாதிருந்து அவர்கள் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால் (6:26) என்றும் குறிப்பாக ஜெபித்தான். அந்த ஜெபத்திற்குப் பதில் கொடுக்கும்போதுதான் கர்த்தர் இந்த வார்த்தையைச் (7:14) சொன்னார். ஆக, பிரச்சனைகள் வந்தபிற்பாடு அல்ல; முன் கூட்டியே தேவன் மக்களை மனந்திரும்புதலுக்கு அழைத்த வார்த்தை இது. ஆனால் நாமோ எப்போதெல்லாம் பிரச்சனை எழுகிறதோ, மனந்திரும்புவோமோ இல்லையோ, இதனைமட்டும் ஞாபகப்படுத்துகிறோம்.

கர்த்தருடைய பிள்ளைகள் நாம், மனந்திரும்புதலின் அவசியத்தை உணரவேண்டும். பாவ உணர்வு நம் மத்தியில் செத்துவிட்டது. திருச்சபையாக வேறு திசைக்குத் திரும்பி விட்டோமோ என்று எண்ணத்தோன்றுகிறது. அன்று இயேசு வாழ்ந்துகாட்டிய வாழ்வு, ஊழியம், போதனைகள் எல்லாமே இன்று நவீனம் என்ற போர்வைக்குள் அகப்பட்டுத் தள்ளாடிநிற்கிறது. தேவசித்தம், தேவநாமத்தின் பரிசுத்தம் எல்லாவற்றையும் நமது சுயம் சூறையாடிவருகிறது. பாவம் என்பது மாயையால் போர்க்கப்பட்டு, நோவா காலத்து அடையாளங்களை நிறை வேற்றுகின்றன. ஆகவே, தனிப்பட்டவர்களாக, குடும்பங்களாக, திருச்சபையாக மனந்திரும்ப வேண்டிய மகா பெரிய பொறுப்பு நமது தலையில் விழுந்திருக்கிறதை உணருவோமாக.

அன்று அந்த ஞாயிறு பாடசாலைக் குழந்தைகள் பாவமன்னிப்பு ஜெபம் செய்யவும், இயேசப்பாவுக்காக மரிப்போம் என்று கோஷமிடவும் தக்கதாக அவர்களுக்கு அந்த உந்துதலைக் கொடுத்தது யார்? தாங்கள் மரிக்கப்போகிறோம் என்று தெரிந்தா அவர்கள் செய்தார்கள். இல்லை. இன்று அவர்கள் இயேசப்பாவின் கரங்களில் இருக்கிறார்கள். அன்றாடம் தேவனோடு நம்மை ஒப்புரவாக்கி, பிறருக்காகவும் அவர்களுடைய இரட்சிப்புக்காகவும் முழு உள்ளத்தோடு ஜெபித்து தேவனுக்குப் பிரியமாய் வாழ மனந்திரும்பு வோமாக.

தவறிய பொறுப்புணர்வு

தேசிய உணர்வு, தேசிய ஒருமைப்பாடு, தேசிய பொறுப்பு எல்லாமே இன்று கேள்விக்குறியாகிவிட்டது. நடைபெறுகின்ற அசம்பாவிதங்களைத் தங்களுக்குச் சாதகமாக்க தந்திரமாகச் செயற்படுகிற கூட்டம் ஒன்று. இதையே சாக்காகக் கொண்டு தங்கள் தவறுகளை மறைத்து அடுத்தவரைக் குற்றப்படுத்துகின்ற கூட்டம் இன்னொன்று. தேசம் தனக்குள் பிளவுபடும்போது அதைத் தாக்குவது எதிரிக்கு எத்தனை இலகுவான காரியம் என்பதை யார் சிந்திக்கிறோம்.

இந்த விஷயத்தைக் கிறிஸ்தவர்கள் நாமும் சிந்தியாமல் இருப்பது தவறு. நமக்குள்ளேயே எத்தனை கொள்கைப் பிளவுகள், எத்தனை பிரிவினைகள், ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ள முடியாமை என்று எத்தனை காரியங்கள். இவற்றை எல்லாம் தூக்கியெறிந்து விட்டு, கிறிஸ்துவின் பிள்ளைகள் என்ற ஒரே ரீதியில் கிறிஸ்தவ சமூகமாக, கிறிஸ்துவின் ஒரே இரத்தத்தாலே கழுவப்பட்டவர்கள் என்ற ஒரேமனதோடு, ஐக்கியப்பட்டு நாம் எப்போது முட்டுக்கால் முடக்கி, நமது தேசத்தைக் கரங்களில் ஏந்துகிறோமோ அன்று நமது தேசம் நிச்சயம் செழிக்கும். தேவனுடைய நாமம் மகிமைப்படும். நாம் உணர்வடைவது எப்போது? ஒன்றாய் மண்டியிடுவதும் எப்போது? இது நடக்குமா?

கடைசிக்காலம்

இந்தச் சம்பவம் நடந்தபிற்பாடு அநேக கிறிஸ்தவர்களின் வாயிலிருந்து எழுந்த வார்த்தை, “இது கடைசிக்காலம்” என்பது. முதலாம் நுற்றாண்டு கிறிஸ்தவர்களே, அன்று நடந்த உபத்திரவங்கள் மத்தியில் அது கடைசிக் காலம் என்றுதான் நம்பினார்கள். ஆண்டவர் நிச்சயம் வருவார். ஆனால் நாம் அன்றாடம் எச்சரிப்புடன் விழிப்புடன் ஆயத்தத்துடன் வாழுகிறோமா? கர்த்தருடைய பெரிய கட்டளையாகிய சுவிசேஷ அறிவித்தலை உண்மைத்துவத்துடன் நிறைவேற்றுகிறோமா? முன்னர் அந்தந்த நாடுகள்தான் கலக்கமடையத்தக்க சம்பவங்கள் நடந்தன. இப்போது நடைபெற்ற சம்பவம் நமது நாட்டை மாத்திரமல்ல, சர்வ தேசத்தையே உலுப்பிவிட்டது என்பது மிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய விஷயம்.

ஆம், ஆண்டவருடைய வருகை மிகவும் சமீபமாகிவிட்டது. போதும்! குடித்துப் புசித்து, கொண்டாட்டங்களில் களித்திருந்து, விநோதங்கள் செய்து, ஆராதனைகளில் புதுமைகளைப் புகுத்தி நம்மை நாமே மகிழ்வித்து, கர்த்தருடைய வார்த்தையை அறிந்தும் அறியாதவர்களாக வாழுகிறது போதும்! மனந்திரும்புவோம்! நமது பொறுப்பை மறந்து சுயவழியில் நடக்கும்போது நமது எஜமான் வருவாரானால் நமது கதி என்ன?

பாதிக்கப்பட்டவர்கள் யாராயினும் அவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் சொல்லுவதுடன் நிற்காமல், அவர்கள் தேவைகளையும் சந்தித்து, அன்று எப்படி ஆண்டவர் சிறுமைப்பட்டவர்கள் வேதனைப்பட்டவர்கள் மத்தியில் சுற்றித்திரிந்து அவர்களைத் தாங்கினாரோ, அந்தப் பணி இன்று அவருடைய சீஷர்களாகிய நமக்கே உரியது என்ற பொறுப்புணர்வுடன் செயற்படுவோமாக.

சத்தியவசனம்