கர்த்தருக்குக் காத்திருத்தல்!

Dr.உட்ரோ குரோல்
(மே-ஜுன் 2019)

அனைத்து செயல்களும் துரிதமாக நடக்க வேண்டும் என்று நினைக்கிற காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். எனவே காத்திருப்பது நமக்குக் கடினமாகத் தோன்றுகிறது. ஆனால் வாழ்வில் சில காரியங்களுக்கு நாம் காத்திருந்துதான் ஆகவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு பெண் தனது குழந்தையைப் பெறுவதற்கு நீண்ட கடினமான பத்து மாதங்கள் எதிர்பார்ப்போடு காத்திருப்பது அவசியம். தேவனுக்கும் நமக்கும் இடையேயான உறவும் இப்படிப்பட்டதே. தேவன் தமக்காகக் காத்திருப்பதை எதிர்பார்க்கிறார். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அவ்வாறு நாம் காத்திருக்கும்பொழுது நம்முடைய வாழ்வில் நிறைவைக் காணமுடியும். சங்கீதம் 37இல் நாம் கிறிஸ்தவ வாழ்வுக்குத் தேவையான சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுகிறோம்.

பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சலடையாதே என்று சங்கீதக்காரன் தொடங்குகிறார். உன்னுடைய வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை அறியாமலிருக்கும்பொழுதும், மற்றவர்கள் செழித்திருக்க நீ தாழ்ந்திருக்கும் பொழுதும் தேவனிடம் கோபம் கொள்ளாதே. உனக்கென்று தேவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார், அத்திட்டத்தை அவர் நிறைவேற்றுவார். அதை அவரது திட்டத்தின்படியே அவரது நேரத்தில் நேர்த்தியாய் செயலாக்குவார்.

அடுத்ததாக, அவர் கர்த்தரை நம்பு என்கிறார். தேவனுடைய தன்மை, அவருடைய ஞானம், அவருடைய திட்டம் என அனைத்தின் மீதும் முழு நம்பிக்கை வைக்கவேண்டும். நம்புவது மாத்திரமல்ல; அவருக்குக் கீழ்ப்படிவதும் அவசியம். விசுவாசிப்பது மாத்திரமல்ல; அதைக் கிரியைகளிலும் காண்பிக்க வேண்டும். எனவேதான் அவர் கர்த்தரை நம்பி நன்மை செய் என்கிறார்.

நாம் மகிழ்ச்சியான ஒரு கிறிஸ்தவ வாழ்வை விரும்புகிறோம். அதற்கு சங்கீதக்காரன் கூறும் ஆலோசனைகளை தியானிக்க விரும்புகிறேன். அப்படிப்பட்ட வாழ்விற்கு நாம் ஆயத்தமாக வேண்டும். தீயதை நமது சிந்தையிலும் கொள்ளக்கூடாது. இயேசுவை விசுவாசிக்கும்பொழுது கிறிஸ்தவ வாழ்வின் பயணம் ஆரம்பமாகிறது. அப்பயணத்திற்கு முடிவில்லை. அவர் நமக்கு நித்திய வாழ்வை அளிக்கிறார். இவ்வாழ்வுக்கு நாம் ஆயத்தமாக வேண்டும். அதன் முதல்படி தீயதைச் செய்வதற்கு நமது சிந்தையிலும் எண்ணக்கூடாது.

எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் நாம் அதனைப் பற்றி சிந்திக்கிறோம். “இதை நான் செய்யக்கூடாது; ஆனால் நான் செய்தாக வேண்டும். இது தவறு என்று எனக்குத் தெரியும்; ஆனால் எனக்குத் தேவை.” என்று நாம் எண்ணுகிறோம். பாவத்தைப்பற்றி சிந்திப்பதில் அறிவுக்கு அதிக வேலை உண்டு; அதையே திரும்பத்திரும்ப எண்ணுகிறோம். பாவத்தில் ஈடுபடுவதற்கு நமது சிந்தனையே அடிப்படையான காரணமாகும். எனவேதான் சங்கீதக்காரன் பொல்லாப்பு செய்ய ஏதுவான எரிச்சலடையாதே; அதை சிந்தையிலும் எண்ணாதே; உன்னுடைய வாழ்வில் பரிசுத்தமாயிரு என்கிறார். தூய்மை ஏன் அவசியம்? இவ்வுலகில் நாம் வாழும் ஒரு தூய வாழ்வே நித்தியத்தில் நமது மகிழ்ச்சியை நிர்ணயிக்கும். ஒருநாளில் கிறிஸ்துவின் நியாயத் தீர்ப்பு சிங்காசனத்துக்கு முன் நாம் நிற்கும்பொழுது அவர் நம்முடைய வாழ்வில் நாம் செய்த காரியங்களை நல்லது கெட்டது என தீர்ப்பளிப்பார். அந்த நாளில் பரலோகத்தில் நாம் அனுபவிக்கும் நித்திய வெகுமதி கிறிஸ்துவின் சிங்காசனத்தின் முன்பாகத் தீர்மானிக்கப்படும். தேவனுக்கென்று பாவம் படிந்த கரங்களுடனும் சுத்தமில்லாத இருதயத்துடனும் நீங்கள் ஊழியம் செய்தீர்களெனில் உங்கள் வாழ்வு மிகவும் பரிதாபத்துக்குரியதாகும். பொல்லாப்பான காரியங்களைச் செய்ய எண்ணாமல் இருப்பதே நித்திய வாழ்வில் நாம் மகிழ்வதற்கான ஆயத்தமுறையாகும்.

திருச்சபையின் இன்றைய தேவை பரிசுத்தமே என நான் கருதுகிறேன். “யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? கைகளில் சுத்த முள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருப்பவனே” என்று சங்கீதம் 24 உரைக்கிறது. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றும் என்னுடைய வாழ்க்கை பரிசுத்தமாக இருக்கவேண்டும். அது கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்பு அல்ல. இப்பொழுதே ஆரம்பமாகிறது. தவறான நோக்கத்துடனும் தவறான காரணத்துக்காகவும் கறை படிந்த கரங்களுடனும் அசுத்தமான மனதுடனும் நான் செய்தால் அது மாபெரும் இழப்பையே தரும். எனவே கிறிஸ்தவ வாழ்வை நித்தியமாய் நான் மகிழவேண்டுமெனில் ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்பார்த்து என்னுடைய பாவத்தை அவரிடம் அறிக்கை செய்ய வேண்டும். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்தி கரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” என்று 1 யோவான் 1:19 நமக்கு உறுதியைத் தருகிறது.

நமது வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ வாழ்வை மகிழ்வுடன் அனுபவிக்க வேண்டுமெனில், மற்றவர்கள் நாம் மறைத்து வைத்துள்ள காரியங்களைக் கண்டுபிடித்துவிடுவார்களோ என பயந்து கொண்டிருக்கக்கூடாது. மக்களை நாம் நேரடியாக சந்திக்க தைரியமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனெனில் நாம் ஆண்டவரின் முன்னர் நேரடியாக நிற்க வேண்டியவர்கள். அங்கே பாவத்தை மறைக்கமுடியாது.

9ம் வசனம் மிக முக்கியமானது. “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்” என்று சங்கீதக்காரன் கூறுகிறார். அதாவது காத்தருக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நம்பிக்கை உண்டு. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒருநாள் எனக்காக திரும்பவும் வருகிறார் என நான் நம்புகிறேன். அந்த நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது. எனவே இந்த நாளில் நான் எதையும் எதிர்கொள்ள ஆயத்தமாயிருக்கிறேன். ஏனெனில் இன்றைய நாளிலேயே அவர் வரக்கூடும் என நான் காத்திருக்கிறேன்.

கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பதன் பொருள் என்ன? பரிசுத்த வேதாகமத்தில் நான்கு இடங்களில் இச்சொற்றொடரை நாம் வாசிக்கிறோம். முதலாவது, சங்கீதம் 123:2 இல் காணப்படுகிறது. “இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப் போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப் போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது”. ஒரு வேலையாள் தனது எஜமானனை எப்பொழுதும் எதிர்நோக்கியிருக்க வேண்டும். “நீ இதைச் செய்; இங்கே வா; அங்கே செல்;” என்று அவரது கட்டளைக்காகக் காத்திருக்கிறான். அதுபோல நாமும் தேவனுடைய கட்டளைக்குக் காத்திருந்து அவருடைய இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஏசாயா 8:17இல் இச்சொற் றொடர் காணப்படுகிறது. “நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்”. காத்திருப்பது என்ற சொல் வருமிடமெல்லாம் அங்கு ஓர் எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.

மூன்றாவதாக, ஏசாயா 40:31 இல் காணப்படுகிறது. “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்”. நாம் மலைமீது ஏறி பறந்து போகும் நாளை எதிர்பார்க்கிறோம்.

நான்காவதாக, காத்திருத்தல் என்பது சலனமற்று அமர்ந்திருப்பது அல்ல; காத்திருத்தல் என்பதற்கு மற்றொரு சொல் நம்பிக்கை எனலாம். கிறிஸ்தவ வாழ்வின் மிகப் பெரிய நம்பிக்கை இயேசுகிறிஸ்துவின் வருகையாகும். அதற்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம்.ஒவ்வொரு நாளும் வானத்தைப் பார்த்து இன்று என் ஆண்டவருடைய வருகை நாளாயிருக்குமா? என்று நம்பிக்கையோடு காத்திருப்பது ஆகும். புலம்பல் 3:22-26 இல் “நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலை தோறும் புதியவைகள்; உமது உண்மை பெரியதாயிருக்கிறது. கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது”. இவ்வசனங்களில் காத்திருப்பதற்கும் நம்பிக்கைக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளுகிறோம்.

“பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்” (37:9). இங்கு கர்த்தருக்குக் காத்திருப்பவர்களுக்கு நம்பிக்கை உண்டு என்று கூறுகிறார்.

வாழ்க்கைப் பயணத்தில் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டுமெனில் – கர்த்தரிடத்தில் மன மகிழ்ச்சியாயிரு; உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு என்ற ஆலோசனைகளை சங்கீதக்காரன் தந்துள்ளார். இந்த பயணம் நம்மை ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் மகிமைக்கு நேராக வழிநடத்துகிறது. ஆனால் காத்திருப்பது நமக்குக் கடினமாகத் தோன்றுகிறது. “நான் மீண்டும் வருவேன்” என்று இயேசுகிறிஸ்து கூறிய வார்த்தைகள் நமக்கு நம்பிக்கையளிக்கிறது. ஓர் ஆங்கில அறிஞர் கூறியது போல “நீங்கள் இன்னும் எதையும் காணவில்லை. தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை”. “நான் மீண்டும் வருவேன்” என்று இயேசு கூறியுள்ளார். இதுவே உங்களுக்கும் எனக்கும் உள்ள பெரிய நம்பிக்கை.

அவர் ஒரு மருத்துவர். நல்ல பலசாலியும் தன்னம்பிக்கையும் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவியோ மிகவும் பலவீனமானவர். தனது காரியங்கள் யாவற்றுக்கும் கணவனையே நம்பியிருந்தார். ஒரு நாள் அம்மருத்துவர் மரித்துவிட்டார். அவரது பிரிவை அம் மனைவி தாங்கமாட்டாள் என அனைவரும் எண்ணினர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக அவர் தனது காரியங்களை நன்கு நடத்தினார். அவருடைய கணவர் உயிரோடிருந்த காலத்தில் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல பிணைப்பை அளித்திருந்தது. இம்மருத்துவர் தனது நோயாளிகளைப் பார்க்கச் செல்லும் பொழுது ஒரு குறிப்புச் சீட்டை கதவில் வைத்து விட்டுச் செல்வார். அவர் மரித்தபின் அம்மனைவி அதனை எடுத்து அனுதினமும் தான் பார்க்கும் படியாக ஒரு சுவரில் மாட்டிவைத்தார். அக்குறிப்பு அவருக்கு அதிக நம்பிக்கையையும் வலிமையையும் தந்தது. அவ்வாறு அவருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிப்பதற்கு அக்குறிப்பில் என்ன எழுதியிருந்தது? “வெளியே சென்றுள்ளேன், சீக்கிரத்தில் வந்துவிடுவேன்” என்ற சொற்களே அதில் காணப்பட்டது.

நம்முடைய பெரிய மருத்துவரும் இரட்சகரும் தந்துள்ள “சீக்கிரத்தில் வந்துவிடுவேன்” என்று வாக்குறுதி அடங்கிய புத்தகத்தை நாள்தோறும் வாசித்து மகிழ்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழலாம். அவர் வரும்பொழுது தவறுகள் யாவும் சரிபடுத்தப்படும். துன்பங்கள் யாவும் முடிவடையும். வேதனைகள் யாவும் மறைந்துவிடும். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் யாவும் நீங்கிவிடும். சென்றவர் மீண்டும் வரும் பொழுது மகிழ்ச்சி பூரணமாகும். தேவன் கூறிய காரியங்களை நீங்கள் செய்வதனால் உங்களுடைய கிறிஸ்தவ வாழ்வு மகிழ்ச்சியுடன் உள்ளதா அல்லது இவ்வாழ்வின் முடிவு எப்பொழுது வரும் என்று துன்பத்துடன் அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறீர்களா? தமது சபையைச் சேர்த்துக்கொள்ள கிறிஸ்து வருகிறார் என்பதே நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை!

நாம் ஆண்டவரில் நம்பிக்கை வைக்கலாம்; அவரில் மனமகிழ்ச்சியாயிருக்கலாம், நம்முடைய வழியை அவருக்கு ஒப்புவித்து காத்திருக்கலாம். கோபத்தை நெகிழ்ந்து உக்கிரத்தை விட்டு விடலாம். பொல்லாங்கு செய்பவர்களைக் குறித்து எரிச்சலடையாதிருக்கலாம்; ஏனெனில் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

இவை யாவும் நமது வாழ்க்கைப் பயணத்துக்கு மகிழ்ச்சியைத் தருவன. ஆனால் இப் பயணம் முடிந்தபின்னர் மற்றொன்று ஆரம்பமாகிறது. அங்கே எல்லையில்லா மகிழ்ச்சி உண்டு. நீங்கள் லிங்கன் நெப்ராஸ்காவிலிருந்து அமெரிக்காவின் மற்ற எந்த பகுதிக்கும் செல்லவேண்டுமெனில் சிக்காகோ நகரின் ஒகேர் விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து வேறொரு பெரிய விமானத்துக்கு மாறவேண்டும். சிக்காகோ என்பது நான் பயண வாகனத்தை மாற்றும் இடம். அதுபோல மரணம் என்பது என்னுடைய இறுதி இடம் அல்ல. இயேசு என்ற மாபெரும் முடிவினை அடைய மாறுமிடம்.

இப்பயணத்தை ஆரம்பிக்க நீங்கள் ஆயத்தமா? நீங்கள் யாராயிருந்தாலும் சரி; இயேசு என்றும் இரட்சகரை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் சிலுவையில் நம்முடைய பாவத்துக்கு பலியாக மரித்தார். நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியாது. ஆனால் இயேசுவால் கூடும். நீங்கள் அவரிடம் விண்ணப்பித்தால் அப்பொழுதே அதைச் செய்வார். என்னுடனேகூட ஜெபிப்பீர்களா?

பிதாவே, கிறிஸ்தவ வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பற்றி நாங்கள் தியானித்தோம். ஆனால் இதை வாசிக்கும் சிலர் இயேசுவே இரட்சகர் என்பதை அறியாமல் இருப்பதால் மகிழ்ச்சியற்று இருக்கிறார்கள். அவர்களை நீர் மீட்கவேண்டும் என விரும்புகிறார்கள். இயேசு அவர்களது வாழ்க்கையை மாற்றவேண்டுமென விரும்புகிறார்கள். புதியதொரு வாழ்வை ஆரம்பித்து கிறிஸ்துவுடன் பயணித்து புதிய இலக்கினை அடைய நீர் அவர்களுக்கு உதவும். கல்வாரியின் தியாகத்தை அறிந்து கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள நீர் கொடுத்த இந்த வாய்ப்புக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில் எங்கள் நன்றியை ஏற்றுக்கொள்ளும். ஆமென்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்