கழுகு தன் கூட்டைக் கலைத்து…

சகோ.கே.பழனிவேல் ஆபிரகாம்
(மே-ஜுன் 2019)

“கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, … சுமந்து கொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்” (உபா, 32:11).


நம்முடைய கிறிஸ்தவ ஓட்டத்திலே, நாம் அடைந்த ஆவிக்குரிய அனுபவத்திலும் பெற்ற ஆசீர்வாதங்களிலும் ஒரே நிலையிலே திருப்தியடைந்து அதிலேயே நிலைகொண்டிருக்க முடியாது. தேவன் நம்மைப் பலவிதமான மேன்மையான நிலைகளுக்கு அழைத்துச்செல்கிறார். நாம் அனுகூலமான சூழ்நிலைகளையும் நன்மையான ஆசீர்வாதங்களையும் தேவனிடமிருந்து பெற்று சுகமாயிருக்கும்போது நமது சூழ்நிலைகள் சகலமும் எதிர்ப்பதமாகவோ அல்லது தலைகீழாகவோ மாறி வேதனையும் துன்பமும் நிறைந்த அனுபவத்தின் வழியாக நாம் செல்ல நேரிடும். நமது அவிசுவாசத்தினாலும், பாவத்தினாலும் இப்படிப்பட்ட நிலை நமக்கு நேரிட்டுள்ளதோ என்று நம்மைநாமே சந்தேகித்து துக்கிக்கிறவர்களாய் காணப்படலாம். எல்லா வேளைகளிலும் அப்படியல்ல. தேவனே நாம் விரும்பாத துன்பங்களும் துக்கங்களும் பாடுகளும், வேதனைகளும் நிறைந்த பாதையை நம் வாழ்க்கையில் அனுமதிக்கிறார். தேவன் நம் ஜீவியத்தில் இப்படிப்பட்ட பாதையை அனுமதித்திருக்கிறபடியால், நாம் அதில் செல்ல மனப்பூர்வமாய் நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும்.

நன்மையைப் பெற்றுச் சுகித்திருந்த அநேக தேவனுடைய பிள்ளைகள் இப்படிப்பட்ட பாடுகளின் வழியில் செல்லத் தங்களை ஒப்புக் கொடுக்காமல் கிறிஸ்தவ ஜீவியத்தில் பின்வாங்கிப் போனதுண்டு. தேவன் அனுமதிக்கும் பாடுகளும் துன்பங்களும் நிரந்தரமானவையல்ல. அது மேன்மையான அடுத்த நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லுகின்ற பாதையாகவும் பயிற்சியாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட அனுபவத்தை உபா.32:11 ஆம் வசனத்தின் மூலம் நாம் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். “கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்து கொண்டு போகிறதுபோல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்”. மோசே இஸ்ரவேல் ஜனங்களை தேவன் வழிநடத்திய அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்.

கழுகு தான் மிகவும் கஷ்டப்பட்டுக் கட்டிய கூட்டில் தன் குஞ்சுகளைப் பாதுகாப்பாக வைத்துப் பராமரிக்கிறது. தாய் கழுகு கொண்டுவரும் சத்தான ஆகாரத்தை உட்கொண்டு புஷ்டியாயும் சுகமாயும் சகல வசதிகளுடன் அந்தக் கூட்டில் குஞ்சுகள் வளருகிறது. அவைகள் தொடர்ந்து அதே நிலையிலிருப்பதற்கு தாய் கழுகானது விரும்புவதில்லை. தனது குஞ்சுகள் செட்டைகளை அடித்து உயரே எழும்பி பறப்பதற்கான பயிற்சியை அடைய விரும்புகிறது. அதற்காக குஞ்சுகளுக்காக தான் கட்டிய கூட்டைத் தானே கலைக்கிறது. தன்னுடைய கடூரமான குணத்தினாலோ இரக்கமற்ற தன்மையினாலோ தாய் கழுகு அவ்வாறு செய்வதில்லை. தன் குஞ்சுகள் உன்னதமான அடுத்த நிலைக்குச் செல்ல விரும்பியே அவ்வாறு செய்கிறது.

பிரியமானவர்களே! யோசேப்பின் வாழ்க்கையிலும் தேவன் இப்படிப்பட்ட அனுபவத்தை அனுமதித்தார். தன் தகப்பனுடைய அரவணைப்பில் மற்ற சகோதரர்களுக்கு கிடைக்காத அனுகூலமான சூழ்நிலையில் செல்லப்பிள்ளையாய் வளர்ந்து வந்தான். தேவன் அவன் கூட்டைக் கலைக்கும்போது அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தான் யோசேப்பு. எகிப்திலே அடிமையாகவும், சிறைக்கைதியாகவும் இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் ஒருநாள் அவன் எகிப்தின் உன்னதமான ஸ்தானத்திற்கு உயர்த்தப்படுவதற்கு இதுவொரு வாய்ப்பாக அமைந்தது.

அதேபோல யோபுவை சாத்தான் தொடுகிறதற்கு தேவன் அனுமதித்தபோது அவன் பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் தன்னை ஒப்புக் கொடுத்தான். ஏழு குமாரர்கள், மூன்று குமாரத்திகள், திரளான மிருக ஜீவன்கள் மற்றும் பணி விடைக்காரார்கள் யாவரையும் இழந்து பரிதபிக்கக் கூடிய சூழ்நிலைக்கு அவன் நிலைமை தலைகீழாக மாறியது. ஆனால், யோபுவோ தேவனிடத்தில் திடவிசுவாசத்தோடு இருந்தான். கடைசியாக, அவன் தேவனிடத்தில் சாட்சி பெற்றதோடு தான் இழந்த யாவற்றையும் பெற்று அதிக மேன்மையான நிலையை அடைந்தான். யோபுவின் பொறுமையும் சோதிக்கப்பட்ட அவரது உத்தமமும் இன்றளவும் தேவபிள்ளைகளால் தியானிக்கப்படுகிறது. ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத் தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோம-8:18).
கழுகு தன் குஞ்சுகள் மேல் அசைவாடுகிறது.

கூட்டைக் கலைத்துவிட்டு ஏனோதானோ என்று செல்லாமல் தனது குஞ்சுகள்மேல் அசை வாடுகிறது. அவைகள் சிதறிப்போகாதவாறும் எந்த தீங்கும் நேரிடாதவாறும் தனது குஞ்சுகள் மேல் தனது சிறகுகளை விரித்து அசைவாடுகிறது. நாம் ஆராதிக்கிற தேவனும் நமது ஆபத்து காலத்திலும் சோதனை நேரங்களிலும் நம்மை கைவிடாமல் பாதுகாப்பார். எகிப்திலே அடிமையாயிருந்த யோசேப்பை தேவன் கைவிடவில்லை. அவருடைய கிருபை அவன்மேல் அசைவாடியது. கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபை வைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார் (ஆதி.39:21). அருமையானவர்களே, இன்றளவும் தேவன் தம்முடைய பிள்ளைகளை இவ்வாறே நடத்துகிறார். நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினி ஜூவாலை உன்பேரில் பற்றாது (ஏசா-43:2).
இப்படிப்பட்ட அனுபவத்தின் வழியாக நீங்கள் கடந்துவந்து கொண்டிருப்பீர்களென்றால், மனங் கலங்காதிருங்கள், நாம் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவோம். நம் நிலைமை தலைகீழாக மாறுவதற்கு அவர் அனுமதித்தாலும் நம்மைக் கைவிடாமல் நாம் அடையவேண்டிய அடுத்த உன்னதமான நிலைக்கு நம்மைக் கொண்டுசென்று ஆவிக்குரிய சகலவிதமான ஆசீர்வாதங்களினாலும் நம்மை நிரப்புகிறார்.

தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின் மேல் சுமந்து கொண்டு போகிறது.

பறப்பதற்காகக் கடுமையான பயிற்சிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்த குஞ்சுகளுக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும்போது தாய் கழுகு அவைகளைச் சுமக்க முன்வருகிறது. இது கழுகு தன் குஞ்சுகள் மேல் வைத்திருக்கும் அன்பையும் கரிசனையையும் காட்டுகிறது. அவைகள் உயரே எழுந்து பறப்பதற்கு ஏற்ற பயிற்சியை அடையும்வரை தன் செட்டைகளை விரித்து வைக்கிறது. இதே வண்ணமாக தேவன் நம்மை சுமக்கும்படியாக அவர் தமது செட்டைகளை விரித்து வைத்திருக்கிறார். நாம் இப்பூமிக்குரியவர்கள் அல்ல, இவ்வுலகத்தின் இழுவிசையிலிருந்து மீண்டு உயரே பறந்து சென்று உன்னதங்களில் தேவனோடு வாசம் பண்ணுகிறவர்கள். தேவன் நம்மை பயிற்சிக்க விரும்பும்போது அதற்கு நம்மை ஒப்புவிக்க ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இஸ்ரவேல் ஜனங்களை வனாந்தரத்தின் வழியாக வழிநடத்தி வந்த தேவன் அவர்கள் கானான் தேசத்திற்கு வந்தடையும் வரைக்கும் அவர்களை சுமந்துகொண்டு வந்தார் என மோசே இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைவு படுத்தினார். ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே (உபா-1:31).

கழுகு தன் குஞ்சுகளைப் பறப்பதற்குப் பயிற்றுவிக்கும்போது கூட்டை கலைக்கிறது. கடுமையான அந்த சுழ்நிலையில் தன் குஞ்சுகளை கைவிடாமல் அதன்மேல் அசைவாடுகிறது. அவைகள் பறக்க பயிலும்போது தனது செட்டைகளை விரித்து அவைகளை சுமக்கிறது. கொழுமையும் புஷ்டியுமாக வளர்ந்த குஞ்சுகள் இளைத்து பறப்பதற்கான உடல் அமைப்பைப் பெற்று உயர்ந்த பர்வதங்கள் மேல் பறந்து செல்லக்கூடிய உன்னத பெலனை அடைகிறது. இதைப்போன்று கர்த்தர் ஒருவரே நம்மையும் வழிநடத்துகிறார்.

சத்தியவசனம்