மேட்டிமை

சகோ. எம்.எல்.பிரான்சிஸ்
(மே-ஜுன் 2019)

“ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். அவையாவன : மேட்டிமையான கண், பொய் நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம், சிந்துங் துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால், அபத்தம் பேசும் பொய்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே” (நீதி, 6:16 – 19).


கர்த்தர் வெறுப்பதாயும் அருவருப்பதாயும் கூறப்பட்டவைகளுள் முதலாவது கூறப்பட்டிருப்பது மேட்டிமையான கண் என்று காண்கிறோம். கண் மனிதனுக்கு அவசியம், அத்தியாவசியமும் கூட. ஆனால், அது மேட்டிமையான கண் என்றால் கர்த்தர் அதை வெறுக்கிறார்; அருவருக்கிறார். தேவனுக்கு அதிக அருவருப்பையும் வெறுப்பையும் உண்டுபண்ணுகின்ற மேட்டிமையைக் குறித்து மட்டுமே இக்கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

மேட்டிமை (PRIDE) என்பதை ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி வேறு பல சொற்களாலும் அழைக்கின்றோம். அகங்காரம், அகந்தை, கர்வம், இறுமாப்பு, தலைக்கனம், செருக்கு. பெருமை – இன்னும் பல சொற்கள் தமிழில் உண்டு. பெருமை என்பது சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலே தகைமை உடைய ஒன்றாக வருவதையும் நாம் மறுக்க முடியாது. தேவன் தன்னைக் குறித்துப் பெருமை பாராட்டுவதை சரியென்றே சொல்ல வேண்டும். அதை அகந்தை என்று சொல்வதற்கில்லை. மனிதர்கள்கூட முறையான இடத்தில் சரியான சந்தர்ப்பத்தில் அடக்கத்தோடு பெருமை கொள்வதில் தவறில்லை. தேவ பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்தவர்கள் எனப் பெருமைப்படலாம், நமக்கொரு இரட்சகர் உள்ளார் என்று பெருமை கொள்ளலாம். சிலுவை யைக் குறித்து பவுல் வெட்கப்படவில்லை என்றால் பெருமைப்படுகின்றார் என்பதே அர்த்தம். ஆனால், நாம் இங்கு இழிவாகக் கருதப்படும் செருக்கு, இறுமாப்பு, அகங்காரம், மேட்டிமை போன்றவற்றையே குறிப்பிடுகின்றோம்.

வேதாகமம் நாம் தெரிந்துகொள்ள விரும்புகின்ற சகலத்தையும் வெளிப்படுத்தாமல், நமக்குத் தெரிந்திருக்கவேண்டிய அனைத்தையும் வெளிக் கொணருகின்றது. உலகிலே பாவம் புகுந்ததை ஆதியாகமம் ஓரளவுக்காவது படம் பிடித்துள்ளது. எனினும், பாவம் மனிதனுக்குள் வருவதற்கும் முன்பே தோன்றிவிட்டதை நாம் மறக்கலாகாது. லூசிபர் என்ற தேவதூதன் – சேனைகளின் தலைவன் அகங்கார மேலீட்டால் பாவம் செய்து பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளான் என்பதை வேதாகமத்தில் கண்டுகொள்ளக் கூடியதாயுள்ளது.

இன்று பிசாசு என்றும் சாத்தான் என்றும் இழிவாக இடித்துரைக்கப்படுகின்ற லூசிபர் அன்றொரு நாள் ஆண்டவர் அருகே அழகே உரு வாய் அமர்ந்திருந்தான். அவன் தன் அழகினால், ஞானத்தால் கர்வம் (மேட்டிமை) கொண்டு பரலோகத்திலே தேவனுக்கெதிராய் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணினான். இவனிடமே மேட்டிமை முதலாவதாகத் தோன்றியது. பாவத்திற்குள் தலையான பாவமாய் விளங்குவதும் இக்கர்வமே. கர்வத்தின் தந்தை இந்தப் பிசாசானவன்தான். ஒளிக்குத் தேவனான கர்த்தருக்கு எதிராக இருளின் தேவனான பிசாசு கிளம்பினான். இவனே பாவத்தை உலகில் புகுத்தியவன். கர்வத்தை, மேட்டிமையை அகந்தையை மனிதனிடத்து உதிக்கச் செய்து மனிதன் அளப்பரிய இழிவான செயல்களில் ஈடுபட்டு, பாவத்தில் புரண்டு, சர்வ நாச யுத்தங்களிலே சிக்குண்டு பரிதவிக்க வைத்துள்ளான். மேட்டிமை யாரிடத்தில் முதலில் உதித்தது? எப்படி மேட்டிமை உலகில் புகுந்தது என்பதை நீங்கள் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டும்.

மேட்டிமை என்ற பாவமே தேவனால் அதிகமாக வெறுத்து அருவருக்கப்படுகிறது. இன்னும் சில வேதாகமப் பகுதிகளை நாம் பார்த்து இதை நிச்சயித்துக்கொள்ளல் நலமாயிருக்கும். “மேட்டிமைக் கண்ணனையும், பெரு நெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்” என்று சங்கீதம் 101:5 சொல்கின்றது.

பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும் புரட்டு வாயையும் நான் வெறுக்கிறேன்” என்று நீதிமொழிகள் 8:13 பகருகின்றது, அழிவுக்கு முன்னானது மனமேட்டிமை என்று நீதிமொழிகள் 16:18 உரைக்கின்றது. புதிய ஏற்பாடு, “தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்” (யாக். 4:6) என்று எடுத்தியம்புகிறது. இவற்றால் நாம் ஒரு முடிவான கருத்தைப் பெறுகின்றோம். தேவனின் வெறுப்பை, அருவருப்பை எதிர்ப்பை படுமோசமான தலையான பாவமாகிய பெருமையும், அகந்தையும், மேட்டிமையும் பெறுகின்றது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நின்று தூரத்திலே வைத்து அவனைத் தன்னிடம் நெருங்கவிடார். மாறாக, உடைந்த உள்ளம். நெகிழ்ந்த நெஞ்சம், இளகிய இருதயம், நொறுங்குண்ட இருதயம் இவற்றை தேவன் விலக்கமாட்டார்.

மேட்டிமை அல்லது பெருமை கொண்டவன் யார்? மற்றவர்களிலும் தான் பெரியவன் என்ற இறுமாப்பு உள்ளம் உடையவனே அவன். இவ்வித நெஞ்சம் உடையவன் தேவனுக்கும் எதிரியாகி, மனிதனுக்கும் பகையாளியாகின்றான். பெருமை, மேட்டிமை தன்னை உயர்வாக்கி. தேவனின் தன்மையை தனக்களிக்க முற்படுகின்றது. தேவன்மட்டும் பெருமைக்கு உரித்துடையவர், அவர் உன்னதமானவர். ஒரு மனிதன் பெருமைகொள்ள முற்படும்பொழுது அவன் தன்னை உயரத்தில் இருத்தப் பார்க்கிறான். தேவன் ஒருவரே உன்னதமானவர் என்பதை மறந்தவனே பெருமைகொள்கிறான்.

தேவனுடைய ஆதரவிலிருப்பவன் தன்னைத் தாழ்த்திக்கொள்கின்றான். தேவனின் ஆதரவுக்குள் வர விரும்பாதவன், தன்னைத்தான் உயர உயர்த்தி, தான் “உயர்ந்தவன்” என்றெண்ணி, மேட்டிமை அடைகின்றான். முதல் மனிதன் ஆதாம் தேவனுடைய ஆதரவை உதறிவிட்டு, தன் போக்கில் சென்று சுய புத்தியில் நடந்ததால் அவன் மேட்டிமையின் தந்தையான பிசாசின் தோழனானான். அவனுடன் சேர்ந்து அகந்தை கொண்டு மேட்டிமைக்காரனானான். இரண்டாம் ஆதாமெனப்படும் இயேசுவோ பிதாவின் ஆதரவில் அமர்ந்திருந்து கீழ்ப்படிந்து நடந்து, அவரின் வல்லமையில் பணி செய்தார், இவர் தாழ்மைக் கோலம் பூண்டார், மேட்டிமை யால் ஒருவன் மேலிருந்து கீழே வீழ்கின்றான். “தாழ்மையினால் வேறொருவர் கீழிலிருந்து மேன்மை பெறுகின்றார்”.

மேட்டிமை எங்கெல்லாம் கொடி விட்டுப் படர்கிறது பாருங்கள்! அழகிலே, அறிவிலே ஆற்றலிலே எல்லாம் பெருமை பெரிதாய் பேசப்படுகிறது. பெற்ற வெற்றியிலே சாதனையிலே பட்டம் பதவியிலே எல்லாம் கர்வம் தலைக்கேறுகிறது. பிறப்பாலும் பெருமை பேசப்படுகிறது. குலம், கோத்திரம், குடும்பம் என்பதிலே அகந்தை ஆட்சி செய்கிறது. ஆனால், மேற்கூறிய மேட்டிமை எல்லாவற்றிலும் மிக மோசமென தேவனால் அருவருக்கப்படுவது ஆவியில் பெருமை (Spirit ual Pride) ஆகும். தன்னைத்தான் தாழ்த்திக் கொள்ளாமல், “ஆவியில் நிறைந்தவன் என்றும் அதிக தாலந்துகள் தனக்குண்டென்றும் பெருமைப்படுவதும் மேட்டிமைதான்”. தாமே கட்டியெழுப்பிய சுயநல ஆலயத்தில் தம்மையே ஆராதிப்பவர் இவர்களாவர்.

பெருமை கொண்டவன் தன்னை யாராவது புகழ்வாரா, துதிப்பாரா என்று தாகமாயிருக்கிறான். யாராவது துதித்தால் ஆனந்தம் அடைவான். துதிகள் கிடைக்காவிடில் துக்கித்துச் சோர்வடைவான். அவன் தன்னைப் பற்றியே அதிகம் பேசுவான்; அவனது உரையாடல் முழுவதும் அவனைச் சுற்றியே வலம் வரும். இவன் தேவனுக்குச் சாட்சி சொல்கிறேன் என்று வந்தாலும் தனக்கே சுய விளம்பரம் போட்டு தனக்கே பெருமை தேடிக்கொள்ள எத்தனிப்பான். இவர்களை நாம் இனம் கண்டுகொள்ள வேண்டும்.

மேட்டிமையை அகற்றுவது எப்படி என்பதை நாம் நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும். சில வழிகள் அல்லது படிகள் (Steps) எவையென்று பார்ப்போம்.

1. தாழ்மை: இதுவே மேட்டிமைக்கு விரோதி

2. சிட்சை: அருவருப்புக்குரிய அகந்தையைப் பிள்ளைகளிடத்தே வராது தடை செய்ய பெற்றோர், ஆசிரியர், பெரியோர் சிட்சை செய்தல் வேண்டும்.

3. ஒறுத்தல்: விவசாயிகளைப் பிடுங்கி விளைச்சலைப் பெருக்குவது போல் நம்மைநாமே ஒறுத்து கர்வத்தைச் சாகடிக்க வேண்டும்.

4. ஒப்பீடு: நம்மை இயேசுவோடு ஒப்பீடு செய்து அவரைப் பின்பற்ற வேண்டும் .

5. தியானம்: கிறிஸ்துவில் தியானம் செய்வதால் தூய ஆவி மேட்டிமையை நம்மிடத்திலிருந்து அகற்ற உதவிடுவார்.

சத்தியவசனம்