திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(மே-ஜுன் 2019)

3. கணவன் – மனைவி இணைந்து செயல்படுதல்

தேவனுடைய மனதிலே உருவாக்கப்பட்ட குடும்பத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். தேவன் குடும்பத்தைத்தான் முதலாவது சிருஷ்டித்தார். குடும்பங்களின் மூலமாகதான் இந்த உலகத்திலே தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அவர் விரும்பியிருக்கவேண்டும். ஆனால் மனிதன் அதை உடைத்துப் போட்டான் என்று பார்க்கிறோம்.

ஆதியாகமம் 3 அதிகாரம் 1-5 வரையுள்ள வசனம்: “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம். ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன் நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

இந்த சந்தர்ப்பம் பாவம் மனிதனுடைய வாழ்க்கைக்குள் எவ்விதமாக பிரவேசித்தது என்பதைக் காட்டுகிறது. இந்த சோதனை ஏவாளுக்கு வந்தபோது நமக்கு தெரிந்த அளவிலே இந்த பகுதியிலே நாம் கற்றுக்கொள்ளுகிற காரியம், ஏவாள் தனிமையாக இருக்கிறாள். அந்த இடத்திலே ஆதாம் இல்லை என்று பார்க்கிறோம். ஆதாம்-ஏவாள் இரண்டு பேரையும் இவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இரண்டு பேர் ஒன்றாகவே இணைந்து செயலாற்றுவார்கள்; ஒன்றாகவே இணைந்து செயல்படுவார்கள் என்று தேவன் சிருஷ்டித்தார். ஆனால் இங்கே பிசாசானவன் வந்து ஏவாளை சோதிக்கிறபொழுது ஏவாள் தனிமையானவளாக இருக்கிறாள். நீ இதை புசிக்கக் கூடாது என்று தேவன் சொல்லி இருந்தும், பிசாசானவன் இதை நீ புசிக்கிற நாளிலே சாகப்போவதில்லையென்று தேவன் சொன்ன காரியத்துக்கு விரோதமாக அவன் கற்றுக்கொடுக்கிறான்; நீங்கள் தேவர்களைப்போல் மாறுவீர்கள் என்று சொன்னபொழுது ஏவாள் அந்த சோதனைக்கு உட்படுவதாக நாம் பார்க்கிறோம்.

இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம், இரண்டு பேராய் சேர்ந்து செயல்படுவதற்காய் படைக்கப்பட்ட குடும்ப வாழ்க்கையிலே தனிப்பட்டவர்களாக நீங்கள் செயல்படக்கூடாது. தனிப்பட்டவர்களாய் சில தீர்மானங்களை எடுக்கக்கூடாது. பல தீர்மானங்கள் எடுக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் வரலாம்; சூழ்நிலைகள் வரலாம். ஆனால் பெரிய தீர்மானங்கள் எடுக்கும்போது தனிப்பட்டவர்களாய் எடுக்காதபடிக்கு ஒருவரோடு ஒருவர் அதைக்குறித்து பகிர்ந்துகொண்டு இரண்டு பேராக சேர்ந்து தேவனோடுகூட இணைந்து தீர்மானங்களை எடுக்கும்போது சரியான தீர்மானங்களை நீங்கள் எடுக்கமுடியும். தனிப்பட்டவர்களாக எடுக்கும் தீர்மானம் நம்மை தவறான வழிமுறைக்கு நேராக நம்மை வழிநடத்தலாம். அந்த ஸ்திரீ ஏவாள் அந்த கனியைப் பறித்துப் புசித்தது மாத்திரமல்ல; பின்பு அதை கணவனுக்கும் கொடுத்து அவனையும் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்யத் தூண்டுகிறாள். அந்த குடும்ப வாழ்க்கையிலே ஒரு பெரிய பிரச்சனை உருவாக ஆரம்பித்துவிடுகிறது. 3வது அதிகாரம் 12வது வசனத்திலே தேவன் ஆதாமிடத்திலே வந்து, ஆதாமே, நீ ஏன் அதைச் செய்தாய் என்று கேட்ட பொழுது ஆதாம் சொன்ன பதில் என்ன தெரியுமா? “நீர் என்னோடுகூட இருக்கும்படியாக நீர் கொடுத்த இந்த ஸ்திரீயானவள் அதை எனக்கு கொடுத்தாள்; அதை நான் புசித்தேன்” என்று. சில நாட்களுக்கு முன்பாக அவன் பாடின பாடல்: நீ என் எலும்பில் எலும்பும், மாம்சத்தில் மாம்சமுமானவள் என்று பாடினான். ஆனால் இப்பொழுது அவன் சொல்லுகிறான்: “நீர் என்னோடுகூட இருக்கும்படியாக நீர் எனக்கு கொடுத்த இந்த ஸ்திரீயானவள்” என்று. அச்சமயத்தில் ஏவாளை தனது மனைவி என்று சொல்லக்கூட அவன் ஆயத்தமாயிருக்கவில்லை. ‘இந்த ஸ்திரீ’ என்று சொல்லுகிறான். அதிலிருந்து நாம் பார்க்கிற காரியம் என்னவென்றால், அந்த குடும்ப வாழ்க்கையிலே ஒரு சிறிய உடைசல், ஒரு சிறிய விரிசல் அங்கே ஏற்பட்டுவிடுகிறது.

தேவனாலே சிருஷ்டிக்கப்பட்ட குடும்பத்தை பிசாசானவன் உடைக்க ஆரம்பிக்கிறான். அது எப்படி நடந்தது? தனிமையாக இருக்கும்போது ஏவாள் செய்த ஒரு தீர்மானந்தான் இதற்குக் காரணம் என ஓரளவிற்கு நாம் அறிந்துகொள்ள முடிகிறது. தனியாக இருக்கும்போது கணவனோ அல்லது மனைவியோ தனிப்பட்ட முறையிலே எடுக்கிற தீர்மானங்கள் பல வேளைகளிலே தவறான தீர்மானங்களாக மாறிவிடும். ஆகவேதான் நீங்கள் ஒருவராய் இருக்கவேண்டும் என்று தேவன் சொன்னார். அதாவது, ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு இரண்டும் பேரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை நாம் இங்கே பார்க்கிறோம்.

பின்னாலே தேவன் நமக்கு கொடுத்த பலவிதமான கற்பனைகளிலே ஒன்று தீமோத்தேயுவுக்கு பவுல் அப்போஸ்தலன் எழுதின 2 நிருபம் 3வது அதிகாரத்திலே, கடைசி நாட்களிலே நடக்கிற காரியங்களைக் குறித்து நாம் வாசிக்கிறோம். முதல் சில வசனங்களை வாசிப்பீர்கள் என்றால் மனுஷர்கள் தற்பிரியர்களாய் இருப்பார்கள், பணப்பிரியர்களாய் இருப்பார்கள், வீம்புக்காரராய் இருப்பார்கள், அகந்தையுள்ளவர்களாய் இருப்பார்கள். இப்படி பல காரியங்களையெல்லாம் சொல்லிவிட்டு இன்னொரு காரியத்தை 7வது வசனத்தில் சொல்லுகிறார்: எப்போது கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்தும் உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளிலே இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். இதை நீங்கள் தெளிவாக அறிந்து கொண்டிருக்கிறீர்களா?

இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கிற நமக்கு இது ஒரு பெரிய எச்சரிப்பாய் இருக்கிறது. கடைசி நாட்களிலே ஒருசில மக்கள் வருவார்கள். அவர்கள் எப்போது கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறியாத மக்களை வஞ்சித்து விடுவார்கள். அவர்கள் எப்படி வஞ்சிப்பார்களாம்? அப்படிப்பட்ட பெண்பிள்ளைகளுடைய வீடுகளிலே நுழைந்து அவர்களை வசப்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் தனிமையாக இருக்கும்போது அவர்கள் வருவார்கள். தனிமையாக இருக்கும்போது உங்களுக்காக ஜெபித்துவிட்டு போக வந்தோம் என்பார்கள். தனியாக இருக்குபோது சில கள்ள பிரசங்கங்களைக் வேதத்திற்கு மாறான கருத்துக்களை போதிக்க ஆரம்பிப்பார்கள். பலவேளைகளிலே தனிமையாக இருக்கிற பெண்கள் இப்படிப்பட்ட காரியங்களைக்கேட்டு வசப்பட்டு தங்களுடைய வாழ்க்கையிலே தவறான தீர்மானங்களைச் செய்துவிடுகிறார்கள். இன்றைக்கு அநேக குடும்பங்களிலே இவ்வாறு நடைபெறுகிறது. இதினால் குடும்பங்கள் உடைந்துவிடுகிறது. சபைகள் உடைந்துவிடுகிறது. மனைவி ஒரு சபைக்கு போய்க்கொண்டிருப்பாள், கணவன் இன்னொரு சபைக்கு போய்க்கொண்டிருப்பான். பிள்ளைகள் எந்த சபைக்கு போவதென்று தெரியாது தெருமுனையிலே போய் நின்று கொண்டிருப்பார்கள். இப்படிப்பட்ட காரியங்கள் வருவதற்கு காரணம், எப்போது கற்றாலும் ஒரு போதும் சத்தியத்தை அறியாத பெண் பிள்ளைகளுடைய வீட்டில் அவர்கள் நுழைந்து அவர்களை வசப்படுத்திக்கொள்வதுதான். எனவே நீங்கள் தனிமையாக இருக்கும்பொழுது இப்படிப்பட்ட வஞ்சனையான காரியங்களுக்கு ஈடுபடக் கூடாது, அதற்கு இடம் கொடுக்கவும் கூடாது. அப்படிப்பட்ட கிருபையை உங்களுக்கு தேவன்தான் கொடுக்கவேண்டும். அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும், பேச வேண்டும், ஜெபிக்க வேண்டும். இரண்டு பேரும் இணைந்து தேவனுடைய சித்தத்தை அறிந்து செயல்படவேண் டும். அப்படிப்பட்ட குடும்பத்தில் தேவன் கொடுக்கும் ஆசீர்வாதத்தை நீங்கள் காண முடியும்.

ஆக, தேவபிள்ளைகளாகிய நம்முடைய குடும்பத்திலே நாம் செய்கிற எல்லா காரியங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு இணைந்து தீர்மானங்களைச் செய்யவேண்டும். தனிப்பட்ட முறையிலே நாம் தீர்மானங்களை எடுக்கும்போதும் செயல்படும்போதும் பிசாசானவன் பல விதங்களிலே சோதனையைக் கொண்டுவந்து நம்முடைய வாழ்க்கையை சீரழித்துவிடுகிறான். இது இந்த நாட்களிலே நடந்து கொண்டிருக்கிறது.

கணவர்களாகிய நீங்கள் மனைவிகளாகிய நீங்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு ஒருமனப்பாட்டுடன் இந்த காரியங்களிலே ஈடுபட வேண்டும். உதாரணமாக நியாயாதிபதிகளின் புத்தகம் 13ஆம் அதிகாரத்திலே நாம் சிம்சோன் பிறப்பதை கர்த்தருடைய தூதன் தரிசனமாகி சொன்னதைப்பற்றி 3ஆம் வசனத்திலே வாசிக்கிறோம்: கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளை பெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். ஆதலால் நீ திராட்ச ரசமும் மது பானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் என்று சொல்லி சிம்சோனைப் பற்றி சில காரியங்களை சிம்சோனின் தாய்க்கு தேவன் வெளிப்படுத்துகிறார்.

ஆனால் நாம் 6ஆம் வசனத்திலே வாசிக்கிறோம்: அப்பொழுது அந்த ஸ்திரீ தன்னுடைய புருஷனிடத்திலே வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்திலே வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை என்று அவள் சொன்னாள். நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெறுவாய் என்று அவர் சொன்னதைச் சொல்கிறாள்.

இதிலேயிருந்து நாம் கற்றுக்கொள்ளுகிற ஒரு பாடம் என்னவென்றால், மனைவிக்கு தேவதூதன் இந்த காரியத்தை வெளிப்படுத்தினபோது அவள் ஓடிப்போய் தன்னுடைய கணவனாகிய மனோவாவினிடத்திலே அதைக் குறித்து அவள் சொல்லுகிறாள். இரண்டு பேருமாக இணைந்து தேவனுடைய நோக்கம் என்னவென்பதைப் புரிந்து கொள்வதற்காக அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அந்த ஆசையின் அடிப்படையிலே தேவதூதன் மறுபடியுமாக தோன்றி மனோவாவினிடத்திலே அதைக்குறித்து அவர் பேசுகிறார். ஆகவே மனோவாவும் அவனுடைய மனைவியும் ஒருவருக்கொருவர் இணைந்து காரியங்களைப் பகிர்ந்து கொண்டதை நாம் பார்க்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் அருமையானவர்களே, ஒருவேளை தேவதூதர்கள்கூட உங்களிடத்தில் வந்து ஒருசில காரியங்களை பகிர்ந்து கொண்டாலும் அதை உடனடியாகவே தேவனை விசுவாசிக்கிற உங்கள் துணைவியோடு அல்லது துணைவரோடே நீங்கள் ஆலோசனை பண்ணி தீர்மானங்களை எடுக்கும்போது அதில் தெளிவான தீர்மானங்களை நீங்கள் செய்யமுடியும். மனோவாவும் அவனுடைய மனைவியும் அதற்கு ஒரு நல்ல மாதிரியாக வேதத்திலே நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு அருமையான குடும்பத்திலிருந்து உருவாகிவந்த சிம்சோனுடைய வாழ்விலே காணப்பட்ட ஒரு பிரச்சனை என்னவென்றால், அவனது குடும்பத்தோடு அவனுக்கு ஒரு சரியான தொடர்பில்லை. என் வாழ்க்கை, என் இஷ்டப்படி நான் செய்வேன் என்று அவன் காரியங்களை செய்ய ஆரம்பிக்கிறான். அதைக்குறித்து நியாயாதிபதிகள் 14ஆம் அதிகாரத்திலே வாசிக்கிறோம்: சிம்சோன் திம்னாத்துக்குப்போய், திம்னாத்திலே பெலிஸ் தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான் (வச.1,2).

சிம்சோனுடைய வாழ்க்கையின் தத்துவம் என்ன? நான் கண்டேன், நான் விரும்புகிறேன் எனக்கு அதுவேண்டும். இதுதான் இன்றைய அநேக வாலிபருடைய வாழ்க்கையிலே இருக்கிற ஒரு கொள்கை. நான் கண்டேன், எனக்கு அது விருப்பமாய் இருக்கிறது. ஆகவே எனக்கு அது வேண்டும், அவளை நான் கொள்ள வேண்டும். இவ்விதமாக அவன் தீர்மானித்தபடியே திருமணம் நடக்கிறது. நடந்த பிறகு ஒருநாள் அவன் வெளியே போய்விட்டு திரும்ப வந்தபொழுது, அந்த பெண்ணை அவளுடைய மாமனார் அவனுடைய தோழரின் சிநேகதனுக்கு கொடுத்து விடுகிறார். இப்பொழுது அவர் என்ன சொல்லுகிறார் என்று சொன்னால், நீ அவளை வெறுத்தாய் என்று நாங்கள் எண்ணி அவளை கொடுத்துவிட்டோம் என்று சொல்லுகிறார்கள்.

அப்படியென்றால் இங்கு நாம் எதைப் பார்க் கிறோம்? சிம்சோனுடைய வாழ்க்கையிலே சிம்சோனுக்கும் அவனுடைய மனைவிக்கும் சரியான தொடர்பு இல்லை. நான் கண்டேன், அவளை விரும்புகிறேன், எனக்கு அவள் வேண்டும். அது ஒருநாளிலே நடந்த சம்பவம். பின்னாலே நடந்த காரியம் மற்றவர்கள் அவனைப் பார்த்து சொல்லுகிறார்கள்: நீ அவளை வெறுத்தாய் என்று சொல்லி நாங்கள் எண்ணினோம், நினைத்துவிட்டோம் என்கிறார்கள். ஏன் அவ்விதமாக எண்ணினார்கள்? ஒருகாரணமும் இல்லாமல் அப்படி எண்ணியிருக்க முடியாது.

ஆகவே நம்முடைய வாழ்க்கையிலும் நான் கண்டேன், எனக்கு அவள் வேண்டும் என்று சொல்லி, கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற அடிப்படையிலே திருமணத்தை நாம் நியமிக்கக்கூடாது. தேவனுடைய சித்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே நாம் வாசிக்கிற ஒருவசனம்: இது தேவனாலே அனுமதிக்கப்பட்ட ஒரு காரியம் என்பதை அவனுடைய தகப்பனும் தாயும் அறியாமலிருந்தார்கள் என்று பார்க்கிறோம். அப்படியானால் சிலர் சொல்லுவார்கள். இந்த பெலிஸ்திய ஸ்திரீயை அவன் திருமணம் பண்ணியது தேவனுடைய சித்தம் என்று. உண்மை, நாம் நம்முடைய விருப்பப்படி நான் கண்டேன் எனக்கு வேண்டும் என்று சொல்லி என் இச்சையின்படியும் என்னுடைய ஆசையின்படியும் தேவனுக்கு விரோதமாக நான் காரியங்களைச் செய்தாலும்கூட தேவன் என்ன சொல்லுவார்; உன் இஷ்டப்படி நான் உன்னை விட்டுவிடுகிறேன். ஏனென்றால், நீ இயந்திரமல்ல, நீ மனிதன்; உன்னை நான் இயக்கமாட்டேன், உன்னுடைய விருப்பப்படி விட்டுவிடுகிறேன். ஆனால் என்னுடைய நோக்கத்தை நான் நிறைவேற்றியே தீருவேன். தேவனை நாம் மாற்ற முடியாது. அந்த அர்த்தத்தில்தான் இதைப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலத்திலே இதைக் குறித்து சொல்லுவோ மென்றால், It was not a Perfect will of God; It was permissive will of God. அது தேவன் சிம்சோனுடைய வாழ்வில் வைத்திருந்த பரிபூரணமான சித்தம் அல்ல; ஆனால், தேவன் அனுமதித்த ஒரு சித்தமாகும். அப்படியென்றால் என்ன அர்த்தம், அவனை மனிதனாக படைத்தபடியினால் உன் இஷ்டப்படி நீ செய்ய விரும்புகிறாய், செய்து விடு. அதனுடைய பலனை நீ அறுக்கப்போகிறாய். ஆனால் என்னுடைய நோக்கத்தை நான் நிறைவேற்றுவேன். பெலிஸ்தியர் கையிலிருந்து மக்களை விடுவிப்பதற்கு இதை நான் பயன்படுத்துவேன் என்று தேவன் சொல்லுகிறார். அந்த அர்த்தத்தில்தான் அந்த வேதவசனத்தை நாம் விளங்க வேண்டும்.

ஆனால் சிம்சோனுடைய வாழ்க்கையிலே மனைவியை அவன் வெறுத்தான் என்பதை மற்றவர்கள் கண்டுகொள்கிறார்கள். சிம்சோனை வெளியரங்கமாய் நீங்கள் பார்ப்பீர்கள் என்று சொன்னால் ஒரு பெரிய தேவனுடைய மனுஷன். சிம்சோனைக் குறித்து நாம் வேதத்திலே அடிக்கடி வாசிக்கிற காரியம்; அவன் அங்கே போனான், தேவனுடைய ஆவியானவர் அவன்மேல் இறங்கினார். வல்லமையான காரியங்களைச் செய்தான். அவன் இங்கே போனான், தேவனுடைய ஆவியானவர் அவன் மேல் இறங்கினார். வல்லமையான காரியங்களைச் செய்தான். ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட காரியத்திலே, அங்கே போய் ஒரு பெண்ணைக் கண்டு, ஒரு வேசியைக் கண்டு என்று வாசிக்கிறோம். வாழ்க்கையிலே பரிசுத்தமில்லை. குடும்பவாழ்க்கையிலே தூய்மையில்லை. வெளியரங்கமாக வல்லமையான காரியம்; ஆனால் உள்ளான வாழ்விலே தூய்மையில்லை. அந்தக் குடும்பத்திலே பிரச்சனைகள் வந்துவிடுகிறது.

நம்முடைய வாழ்க்கையிலே தேவனுடைய சித்தத்தை அறிந்து நீங்கள் செயல்பட வேண்டுமென்றால் ஒருவரோடொருவர் இணைந்து செயல்படுங்கள், ஒருவரோடு ஒருவர் இணைந்து பரிமாறிக்கொள்ளுங்கள். மற்றவர்களை வெறுக்காதபடிக்கு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு உங்களை ஒப்புக்கொடுங்கள். எல்லாவற்றையும் சிந்தித்து செயல்படக்கூடிய பாக்கியத்தை, தன்மையை கர்த்தர் கொடுக்கும்படியாக ஜெபியுங்கள்.

(தொடரும்)


நினைவுகூருங்கள்

நம் உதடுகள் மட்டுமல்ல, நமது வாழ்க்கையும் கிறிஸ்துவையே பிரஸ்தாபம் பண்ணவேண்டும்.


சிந்தியுங்கள்!

மற்றவர்களிடத்தில் நீ எதை வெறுக்கிறாயோ, அது உன்னிடம் காணாதபடி உன்னைத் திருத்திக்கொள்!