Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2020)
விசுவாசமுள்ள ஜெபம்
“அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்” (யாக்.5:15).
இந்த வசனத்தில் உள்ள இரண்டு சொற்றொடர்கள் சிந்திக்கத் தகுந்தவை.
1. விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிளை இரட்சிக்கும்.
2. அவன் பாவம் செய்திருப்பானானால் . . .
விசுவாசம் உள்ள ஜெபம்
யாக்கோபு 5:15இல் குறிப்பிடப்பட்டுள்ள விசுவாசம் உள்ள ஜெபம் மூப்பர்களின் ஜெபத்தைக் குறிக்கிறதென்பது முக்கியமானது. வியாதிப்பட்டவனுக்கு ஏறெடுத்த ஜெபம் அல்ல. இந்த உண்மை இக்காலத்தில் வியாதியஸ்தரைக் குணமாக்குகிறோம் என்று ஊழியஞ் செய்கிறவர்களின் போதனைக்கு முற்றிலும் மாறுபட்டது. அவர்கள் தாங்கள் ஜெபித்த ஒரு வியாதியஸ்தனுக்குச் சுகம் கிடைக்கவில்லையானால், அதற்குக் காரணம் வியாதியஸ்தனிடம் விசுவாசம் இல்லை என்பார்கள். இந்த வசனத்தின்படி ஜெபத்தின் விசுவாசம் ஜெபிக்கும் மூப்பர்களிடத்தில்தான் இருக்கவேண் டும்; பிணியாளிகளிடம் அல்ல.
விசுவாசம் ஒரு வரம் என்று வேதம் கூறுகிறது. எபேசி.2:8 கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; 1கொரிந்தியர் 12ஆம் அதிகாரம் 8 – 10 வரையுள்ள வசனங்களில் பவுல் கூறும் ஆவியின் வரங்களில் விசுவாசமும் ஒன்று.
ரோமர் 10:17 இவ்வாறு கூறுகிறது: விசுவாசம் கேள்வியினாலே வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். இந்த வசனத்திலிருந்து தேவன் நமக்குத் தந்துள்ள வேதவசனத்தின் மூலம் நமக்கு அதிகமான விசுவாசம் உண்டாகும் என்று அறிகிறோம். இருந்தபோதிலும் வியாதிப் படுக்கையில் இருக்கிற பிணியாளி, குணமாகுதல் குறித்து வேதாகமத்தில் நேரடியான செய்தி இல்லாத போதிலும், தேவன் குணமாக்குதல் குறித்து வேதாகமத்தில் கூறியுள்ள கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
விசுவாச ஜெபம் என்பதில் ஒன்றின்மீது கொள்ளும் நம்பிக்கை என்னும் கருத்து உட்படுகிறது. இது நம் உள்மனதில், இருதயத்தின் ஆழத்தில் நாம் கொள்ளும் ஒரு நம்பிக்கை ஆகும். இது மேலெழுந்த வாரியான ஒரு உணர்ச்சி அல்ல. பெற்றுக்கொள்ளுவோம் என்ற உறுதியான நம்பிக்கையையே இந்த விசுவாசம் காட்டுகிறது.
என்னுடைய குடும்பத்தில் நடந்த இரண்டு அனுபவங்கள் இந்தக் கருத்தை உறுதி செய்கின்றன. ஒருமுறை எனது மகளுடைய மூத்த குழந்தைக்கு இரண்டு வயதானபோது அவனுக்கு மிக அதிக சுகவீனம் ஏற்பட்டது. எனது மனைவியும் நானும் அவனுக்காக ஜெபம் செய்தோம். மிக ஊக்கத்துடன் ஜெபித்தோம். அவனை அதிகமாக நேசித்ததால் அவன் சுகம் பெறவேண்டும் என்று கண்ணீருடன் ஜெபித்தோம். அவன் எங்களோடு வாழவேண்டுமென விரும்பினோம். ஆனால் எங்களைவிட அதிகமாக தேவன் அவனை விரும்பினபடியால் தம்மோடு இருக்கும்படி எடுத்துக்கொண்டார்.
பின்னர் நாங்கள் இதைக்குறித்து சிந்தித்தோம். நாங்கள் இருவரும் மகன் உயிர் பிழைக்கவேண்டும் என்று எவ்வளவோ மன்றாடி ஜெபித்தபோதிலும், ஆண்டவர் ஒருபோதும் எங்களில் ஒருவரிடமும் எங்கள் மகன் பிழைப்பான் என்று உறுதி அளிக்கவில்லை.
அதற்கு நேர்மாறாக அடுத்த வருஷம் எங்கள் அடுத்த மகள் சுகவீனமடைந்தாள். நாங்கள் அவளருகில் முழங்கால்படியிட்டு அவள் பிழைக்கவேண்டும், குணமாகவேண்டும் என்று ஜெபித்தோம். என்ன ஆச்சரியம்! அவள் பிழைப்பாள் என்ற உறுதி அப்போதே எங்களுக்கு அளிக்கப்பட்டது. அவள் சுகமடைந்தாள், எழுந்தாள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! வளர்ந்தாள். இன்று அவள் வளர்ச்சியடைந்த பெண்ணாக இருக்கிறாள். இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாங்கள் ஜெபித்தோம். ஒருதடவை தேவன் எந்த உறுதியும் தரவில்லை. மகன் மரித்தான். அடுத்த தடவை குணமடைவாள் என்று உறுதி அளித்தார். மகள் பிழைத்துக் கொண்டாள். தேவன் வியாதியஸ்தனைக் குணப்படுத்திடுவார் என்று சுலபமாக நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. ஆனால் எப்படியும் பிணியாளி மேல் தேவன் கிரியை செய்வார் என்னும் உறுதி நமக்கு இருக்கலாம்.
பரிசுத்த ஆவியினால் நமது விசுவாச ஜெபம் ஏறெடுக்கப்படவேண்டும். அது முக்கியம்! எபேசி. 6:18 சொல்வதைப் பாருங்கள்: எந்தச் சமயத்திலும், சகலவிதமான வேண்டுதலோடும், விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம் பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும், சகல பரிசுத்தவான்ககளுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள்.
நாம் ஆவியினாலே ஜெபம் பண்ணவேண்டும் என்று கூறப்படுவதற்குக் காரணம், அவர் ஒருவருக்கே தேவனுடைய சித்தம் தெரியும். பரிசுத்த ஆவியானவர் நம்மைச் சத்தியத்துக்குள் வழிநடத்துவார், நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துவார், ரோமர் 8:26,27ஐப் பாருங்கள். ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெரு மூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார்”.
பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய சித்தத்தை அறிகிறவர் என்னும் கருத்து வலியுறுத்தப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அவர் தேவனுடைய சித்தத்தை அறிந்திருக்கிறபடியால், ஜெபம் கேட்கப்படுவது தேவனுடைய சித்தம் என்று அவருக்குத் தெரிந்தால் நமக்கு விசுவாசத்தை உறுதி செய்வார்.
நமக்குப் பிரியமானவர் ஒருவர் வியாதிப்பட்டிருந்தால், அவர் குணமடைய வேண்டுமென விரும்புவது இயற்கை. அதில் தவறில்லை. ஆனால் இந்த விஷயத்தை நாம் முற்றிலும் தேவனுடைய சித்தத்துக்கு ஒப்புக் கொடுக்க வேண்டும்.
நாம் இப்படிப் பூரணமாக அவரிடம் ஒப்படைத்து விடுவோமானால், அந்தப் பிணியாளி பிழைப்பது, குணமடைவது தேவனுடைய சித்தமானால் அவர் நமது விசுவாசத்தை உறுதிப்படுத்துவார். அது தேவனுக்குச் சித்தமில்லையானால், நமக்கு தேவனிடத்திலிருந்து விசுவாசமோ, உறுதியோ, கிடைக்காது. நாம் எவ்வளவுதான் அந்த நோயாளி குணமடைய வேண்டுமென்று விரும்பினாலும், நிலை இதுதான். மேலும் இந்த உறுதி இருதயத்தின் ஆழத்திலிருந்து கிடைக்கும் உறுதியாகும். தேவன் குணமளிக்கப்போகிறார்.
விசுவாச ஜெபம் என்பது உண்மையில் தேவனுடைய விசுவாசமாகும். ஒருதடவை இயேசு தம் சீஷர்களிடம் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள் (மாற்கு 11:22) என்றார். இதைக் கூறியபின் இயேசு தொடர்ந்து பேசுகையில் மலையைப் பெயர்த்து அகற்றுதல் குறித்துப் பேசினார். “தேவனிடத்தில் விசுவாசம் கொள்” என்னும் சொற் பொருளின்படி “தேவனுடைய விசுவாசத்தைக் கொள்” என்று ஆகிறது. அதாவது, “கொடுக்கும் விசுவாசம்”.
தேவனே விசுவாசத்தைத் தருகிறவர் என்னும் கருத்தை இதற்கு முன்னரே விளக்கியிருக்கிறோம். எபே.2:8; 1 கொரி.12:9 இவற்றை முன்னரே பார்த்துவிட்டோம். இதிலிருந்து நாம் அறிவது, ஒருவர் குணமடைவது பற்றிய உண்மையான விசுவாசம் நமக்கு இருந்தால், அது நம்முடைய விசுவாசமல்ல, நமக்குள் உறைந்திருக்கும் தேவ னுடைய விசுவாசமே ஆகும்.
இப்பொழுது நமக்கு ஒரு நியாயமான கேள்வி எழும். இது என்னுடைய உணர்ச்சியா அல்லது தேவன் கொடுத்த விசுவாசமா என்பதை நான் அறிவது எப்படி? இந்த விசுவாசம் உங்களில் இருந்தால் தேவன் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறார் இதை வேறு எங்கும் பெற முடியாது.
விசுவாசத்துக்கும் தன் மூப்பாக ஒருவன் கொள்ளும் நம்பிக்கைக்கும் (PRESUMTION) வேறுபாடு தெரியவேண்டும். சில விசுவாசிகள் இப்படித் தவறாக நம்பிக்கைகொள்ளக் காரணமான வேதப் பகுதி ஒன்று உள்ளது. நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்… (எபி.10:19). இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தால் நம்முடைய பாவங்களுக்காகவோ, நாம் பிதாவின் சமுகத்தில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்றுத்தந்திருக்கிறபடியால் நாம் எப்போ தும் ஆண்டவருடைய சமுகத்தில் சென்று,
• இவனுடைய வியாதியைக் குணமாக்கும்,
• இவனுக்குத் தேர்வில் வெற்றி அருளிச்செய்யும்,
• இவளுக்கு ஒரு குழந்தையைக் கொடும்
என்று தேவனுக்குக் கட்டளையிடுவதுபோல பேசுவதற்கு உரிமையில்லை. இப்படித் தவறாகக் கொண்டிருக்கும் மனநிலையைத்தான் தவறான நம்பிக்கை என்று குறிப்பிடுகிறோம்.
சிலர் தங்களது உறவினர் குணமடைவதற்காக ஜெபித்துவிட்டு, ஆண்டவர் அவருக்குச் சுகம் கொடுக்க வேண்டும் எதிர்பார்ப்பார்கள். தாங்கள் யார் யாருக்கெல்லாம் ஜெபிக்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் தேவன் சுகம் கொடுக்கவேண் டும் என்பதே அவர்களது மனநிலையாகும்! இதைத்தான் தவறான நம்பிக்கை என்கிறோம்.
அதேவேளையில் ஆண்டவரிடம் நமது விண்ணப்பத்துடன் வரும்போது பயம், தயக்கம் இருக்கக்கூடாது. எனவேதான் எபிரெயர் நிருப ஆக்கியோன் ஆண்டவருடைய சமுகத்தில் தைரியமாக வரும்படி ஊக்கப்படுத்துகிறார். உன்னத தேவனின் பரலோக, பரிசுத்த சிங்காசனத்தின் முன்செல்ல, எவருக்கும் தகுதியில்லை. ஆனால் இயேசு நமக்குச் செய்த மீட்பு, இரட்சிப்பு, விடுதலை இவற்றால் தேவனுடைய சமுகத்தில் செல்லும் சிலாக்கியத்தைப் பெற்றுள்ளோம்.
இந்த தைரியம், தேவனுடைய கிருபையைத் தவறாகப் புரிந்துகொள்ள இடங்கொடுக்கக்கூடாது. அதேவேளையில் பிடிவாதமாக தேவன் தான் கூறியபடியே செயல்படவேண்டும் என்று கட்டளையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது, எதிர்பார்க்கவும் கூடாது. தேவனிடத்தில் தங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அவருடைய சித்தத்துக்குத் தங்களை ஒப்புவித்துக் காத்திராதவர்களால் பற்பல இருதய வேதனைகள் உண்டாயிருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காரியத்தில் தேவன் தமது சித்தத்தை நிறைவேற்ற விசுவாசமுள்ள ஜெபமும் நம்பிக்கையும் தேவை. இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நாம் ஜெபிக்கும்போது, நமக்கு நன்மையானதையே தேவன் செய்வார், தீமையானதை செய்யமாட்டார் என்று விசுவாசிக்கிறோம்.
தேவனுடைய சர்வவல்ல தன்மையை நினைவிற்கொண்டு நாம் எல்லாக் காரியங்களையும் பிணியாளி சுகம் பெறுவது உட்பட அவரிடம் ஒப்படைத்துவிடவேண்டும். தேவனுக்கு யார் யாருக்கு என்னென்ன தேவை? யார் யாருக்கு எதைச் செய்ய வேண்டும் என்று தெரியும்.
தேவன்மீது திடமான விசுவாசம் விசுவாசிக்கு வேண்டும். இத்தகைய உறுதியான விசுவாசத்துடன் தன் கோரிக்கைகளை அவரிடம் சமர்ப்பித்துவிட்டு, அவருடையசித்தம் நிறைவேறுவதற்குப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
நாம் விழிப்புடன் கவனிக்கவேண்டிய இன்னொரு காரியமும் உண்டு:
விசுவாசிகளிடம் கவலையீனம் காணப்படக் கூடாது. இந்த வீட்டில் உள்ள வியாதி, கவலை துக்கம் வேலையில்லாத நிலை, இவையாவும் ஆண்டவருக்குத் தெரியும், அவர் ஒவ்வொருவருக்கும் தேவையான நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் வழங்கட்டுமே! நான் ஏன் ஜெபிக்க வேண்டும் என்னும் மனநிலை இது சரியா?
நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை.. நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை ( யாக்.4:2 ).
ஜெபம் தேவனால் உண்டாக்கப்பட்ட ஒரு திவ்விய ஒழுங்கு. நம்முடைய தேவைகளைச் சொல்லி ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நம்முடைய ஜெபத்தின்படி தேவன் கிரியை செய்யச் சித்தம் கொள்ளும்போது நம் உள்ளத்தில் விசுவாசத்தைத் தருகிறார்.
ஒருவர் ஜெபித்துவிட்டால் பிணியாளியாயிருக்கிற எவனும், எப்போதும் சுகமடைந்து விடுவான் என்னும் நிலை இருந்தால் கிறிஸ்தவ விசுவாசிகள் ஒருவரும் ஒருபோதும் மரண மடைவதில்லை. எனவே தேவன் எப்போதும் எல்லோரையும் குணமாக்கிவிடுவார் என்னும் கருத்துக்கு முரணானது அல்லவா?
நமக்கு நன்மையாயிருக்கக் கூடிய எல்லாவற்றையும் தேவன் தந்துவிடுவார் என்றும் முழுமையாகக் கூறமுடியாது. சில வேளைகளில் பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் சிலகாரியங்கள் முடிவில் அவர்களுக்கு நன்மையாய் இராது என்பதைப் பெற்றோர் அறிவார்கள். எனவே இந்தக் காரணத்தினால் பெற்றோர் பிள்ளைகள் கேட்கும் எதையும் கொடுத்துவிடுவதில்லை. தேவனும் அப்படியே செய்வார் என்பதை நாம் நினைவுகூரவேண்டும். நமக்கு எப்போதும் நன்மையானது எது என்பது நம் ஆண்டவருக்குத் தெரியும். எனவே அவர் தம் சித்தப்படி செயல்பட நாம் காத்திருக்க வேண்டும்.
ரோமர் 8:28,29 என்னும் வசனங்கள் தேவன் நம்முடைய வாழ்க்கையில் எப்படி செயல்படுகிறார் என்பதைக் காட்டும் முக்கிய வசனங்களாகும். அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரர்களுக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ, அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்.
நம்முடைய வாழக்கையில் நம்மைத் தமது குமாரனுடைய சாயலில் ஆக்கும்படி தேவன் எல்லாக் காரியங்களையும் செய்கிறார்.
வேதாகமத்தில் பார்க்கும்போது தேவன் எப்போதும் குணமாக்குவதில்லை என்பதை அறிகிறோம். 2தீமோ.4:20இல், பவுல் கூறுகிறார்: துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். பவுல் ஏற்கனவே பல வியாதியஸ்தர்களுக்காக ஜெபித்துக் குணமாக்கியிருந்தான். ஆனாலும் துரோப்பீமுவைக் குணமாக்கவில்லை. வியாதிப்பட்டவனாக விட்டுவந்ததாகக் கூறுகி றான். ஏற்கனவே பவுலின் மாம்சத்தில் ஏற்பட்ட ஒரு முள் விலகுவதற்காக ஊக்கமாகப் பலமுறை ஜெபித்தான். அதைக் குணப்படுத்துவது தமக்குச் சித்தம் இல்லை என்று தேவன் கூறிவிட்டார் (2கொரி.12:7-9).
இதிலிருந்து பவுல் ஒரு சத்தியத்தைப் புரிந்து கொண்டான். எனவேதான் அவன் இப்படிக் கூறினான்: அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும் நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2கொரி.12:10 ).
எனவே யாக்கோபு நிருபத்தின்படி சபை மூப்பர்களுக்கு வியாதிகளைக் குணமாக்குவதற்கு அளவில்லாத சக்தி இருந்தால், அவர்கள் யார் யாருக்கெல்லாம் ஜெபிக்கிறார்களோ, அவர்கள் பிழைத்துக் கொள்வார்களானால், அக்காலக் கிறிஸ்தவர்கள் மரணமடையமாட்டார்கள். எனவே மூப்பர்களுக்கு எல்லோரையும் ஜெபித்துக் குணமாக்கும் வல்லமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு வியாதியஸ்தனையும் குணமாக்குவது தேவனுடைய சித்தமல்ல.
யாக்கோபு கூறுகிறார்: விசுவாசம் உள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்(5:15). ‘இரட்சிக்கும் என்ற சொல்லின் பொருள் வியாதியிலிருந்து காப்பாற்றும் என்பதாகும். கர்த்தர் அவனை எழுப்புவார் என்னும் சொற்றொடரும் இதே கருத்துடையது தான். வியாதியிலிருந்து சுகமடையச் செய்து எழுப்புவார்.
இரட்சிக்கப்படுதல் என்பது ஆவிக்குரிய இரட்சிப்பை மட்டும் குறிப்பதல்ல, வியாதியிலிருந்து குணமாக்கப்பட்டு எழும்புவதையும் குறிக்கிறது.
வியாதியில் இருக்கும் ஒருவனை எழுப்புகிறவர் தேவனே. யாக்கோபு யோசனையாகக் கூறியது. ஒருவன் வியாதிபட்டால், சபையில் உள்ள மூப்பர்களை வரவழைக்க வேண்டும். அவர்கள் வந்து அவனுக்கு எண்ணெய் பூச வேண்டும். அப்புறம் ஜெபிக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் செய்தாலும் தேவனே அவனது வியாதியைக் குணமாக்கி, அவனுக்குச் சுகம் கொடுத்து எழும்பச் செய்கிறவர். குணமாக்கப்பட்டதற்கான பாராட்டு கொடுக்கப்பட்ட மருந்துக்கும் அல்ல, ஜெபத்துக்கும் அல்ல, விசுவாசத்துக்கும் அல்ல, மூப்பர்களுக்கும் அல்ல, குணமாக்கிய தேவனுடைய வல்லமைக்கு சகல மகிமையும் சேரும்.
மொழியாக்கம்: G.வில்சன்
சிந்தியுங்கள்!
நாம் கிறிஸ்துவை சொந்தமாக்கிக்கொள்வது தகுதியானதென்றால் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்வதும் தகுதியானதல்லவா?