திரு.பிரகாஷ் ஏசுவடியான்
(ஜனவரி-பிப்ரவரி 2020)
நம்முடைய குடும்ப வாழ்க்கையைப் பற்றியும், வேதாகமத்தில் குடும்பத்தைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைக் குறித்தும் நாம் சிந்தித்து வருகிறோம்.
127 மற்றும் 128வது சங்கீதத்தின் அடிப்படையிலே, மனைவியினுடைய பொறுப்பு, கணவனுடைய பொறுப்பு, இரண்டு பேருமாக இணைந்து அவர்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலே அவர்களுக்கு இருக்கிற பொறுப்பு, இவைகளைக் குறித்து நாம் பார்த்தோம். ஒலிவமரக் கன்றுகளாக வளருகிற பிள்ளைகள், அவர்கள் வளரும்போது, மிகவும் மிருதுவான பிள்ளைகளாக இருக்கிறார்கள். ஒலிவமர கன்றுகள் பற்றி பேசுகிறவர்கள், அந்த கன்றுகள் மிருதுவான கன்றுகளாக வளருகிறது என சொல்லுகிறார்கள். அந்த மிருதுவான கன்றுகளை வளர்க்கும்போது, அவைகள் பாதுகாக்க வேண்டிய அளவுக்கு பாதுகாக்க வேண்டும். அவர்கள் வளருவதற்கேற்ற, பல சூழல்களை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்றெல்லாம் நாம் பார்த்தோம். இவைகளெல்லாம் மிக முக்கியம். இப்பொழுது அவர்கள் வளர்ந்து வளர்ந்து வாலிப பிராயத்திற்குள் வந்து விடுகிறார்கள். 13 வயதிற்கும் 20 வயதிற்கும் உட்பட்ட வாழ்க்கையை, வாலிப பிராயம் அல்லது டீன் ஏஜ் (Teen age) என்று சொல்லுகிறோம்.
வாலிப வயதிலே இருக்கிற பிள்ளைகள் இருக்கிற வீட்டிலே பல பிரச்சனைகளை குறித்து பெற்றோர் பேசுகிறார்கள். ஐயா, எங்கள் பிள்ளைகளுக்காக ஜெபியுங்கள், என்று சொல்லுகிற அநேக பெற்றோர்கள் உண்டு, ஓரளவிற்கு வாலிப பிள்ளைகளுடைய வாழ்க்கையில் நடைபெறுகிற, சில பிரச்சனைகள் குடும்பத்தைப் பாதித்திருக்கிறது. அதேவேளையில் குடும்பத்தின் தலைவர் செய்யவேண்டிய பொறுப்புகளையும் அவர்கள் நிறைவேற்றாமலும் இருக்கின்றனர். இந்த இரண்டு காரியங்களைக் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த வாலவயதின் குமாரர் அல்லது வாலிபர்களைக் குறித்து 127வது சங்கீதம் 5வது வசனத்திலே வாசிக்கிறோம். வாலவயதின் குமாரர் பலவானின் கையில் உள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். இந்த வாலிபர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களுடைய வாழ்க்கையிலே அதிக உற்சாகம் இருக்கிறது. அதிக சக்தி இருக்கிறது, ஓரளவிற்கு அறிவு இருக்கிறது, ஞானம் இருக்கிறது, பலவிதமான சந்தர்ப்பங்களில் கிரியைகளைச் செய்யக்கூடிய சக்தி அவர்களுக்குள் இருக்கிறது (Young People are full of potentials) நிறைய சக்தியோடுகூட இருக்கிற அவர்கள் எந்த திசையிலே அவர்கள் போவார்கள் என்பதை கணிப்பது யார்? எந்த திசையிலே அவர்களை நாம் அனுப்புகிறோமோ, அந்த பொறுப்பை பெற்றோர்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாலவயதின் குமாரர் பலவானின் கையில் உள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். ஒரு பலவானுடைய கையிலே வில் அம்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த வில்லிலே அம்பை வைத்து நாணேற்றி, அவர் அதை அனுப்பும்போது, என்ன நடக்கிறது? அது எந்த திசையிலே போகும் என்பது, அவர்கள் எந்த திசையிலே அனுப்புகிறார்களோ அதைப் பொறுத்தது. அந்த வில்லிலே நாணை வைத்து அவர்கள் அதை வளைக்கும்போது, அதற்குள்ளே நிறைய சக்தி இருக்கிறது. அந்த சக்தியோடுகூட அது புறப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறது, இப்படித்தான் நம்முடைய வாலிப பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாலவயதினுடைய சக்தியும், பெலனும் இருக்கிறது. எந்த திசையிலே போகவேண்டும் என்பதும் அல்லது எந்த திசையிலே அனுப்பவேண்டும் என்பதும் யாருடைய கையிலே அந்த அம்பு இருக்கிறதோ, அதைப் பொறுத்துதான் இருக்கிறது. அன்பானவர்களே, எந்த திசையிலே நாம் அவர்களை வழிநடத்தப் போகிறோம் என்பதைக் குறித்து நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அப்படியென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?
முதலாவது, நமது வாலிப பிள்ளைகளோடு பழகி அவர்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அவர்கள் என்னென்ன காரியங்களைச் செய்கிறார்கள்? என்னென்ன தாலந்துகள் அவர்களுக்கு இருக்கிறது? என்னென்ன சக்திகள் இருக்கிறது? எதிலே அவர்கள் நிபுணர்களாக இருக்கிறார்கள்? என்னென்ன விருப்பங்கள் அவர்களிடத்திலே இருக்கிறது? அவர்களுக்குள் இருக்கிற வாய்ப்புகள் என்ன? இவைகளெல்லாம் குறித்து நாம் கவனித்துப் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொண்டபிறகு, அந்த திசையிலே அவர்களை நாம் வழிநடத்த வேண்டும். இது மிக முக்கியமான ஒரு காரியமாகும்.
என்னுடைய வீட்டிலே என்னுடைய மகள் நன்றாக படித்து நிறைய மார்க்குகள் வாங்கியிருந்தாள். அவள் மெடிக்கல் காலேஜ் போயிருக்கலாம், இன்ஜினியரிங் காலேஜ் போயிருக்கலாம் என்று பலர் சொன்னார்கள். ஆனால், அவள் சைக்காலஜி மனோதத்துவம் படிக்கவேண்டும் என்று சொன்னாள், ஏன் என்று கேட்டபொழுது இந்த மனோதத்துவ முறையிலே குறைபட்டு இருக்கிற பிள்ளைகள்மேல் அவள்கொண்ட பரிதாபம் மட்டுமல்ல, அதில் வாஞ்சை, விருப்பம், ஆசை, அன்பு அதிகமாய் காணப்பட்டது.
நாங்கள் போய்க் கொண்டிருக்கிற சபையிலிருக்கிற ஓய்வுநாள் பாடசாலையின் ஆசிரியர்கள் மாதத்திற்கு ஒருமுறை இப்படிப்பட்ட பள்ளிக் கூடங்களிலே போய், மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு உதவி செய்வார்கள். அவர்களோடு இவளும் செல்லும்போது, மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளுக்கு உதவி செய்யவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டபடியினால், நான் சைக்காலஜி படிக்க வேண்டும் என்று சொன்னாள். அப்போது மற்றவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? இல்லை, இல்லை அவள் மெடிக்கலுக்கு போகணும் என்று சொன்னார்கள். நாங்கள் சொன்னது, தேவன் அவளுக்கு என்ன தாலந்தைக் கொடுத்திருக்கிறாரோ, அந்த அடிப் படையிலே அவளை வளைக்கவேண்டுமே தவிர தேவன் வலது பக்கமாக வளைக்க விரும்புகிறபடியான தாலந்தைக் கொடுத்திருந்தால் அவளைப் பிடித்து நாம் இடதுபக்கமாக வளைக்கக்கூடாது, உடைந்துபோவார்கள்.
அருமையானவர்களே, உங்களுடைய பிள்ளைகள் பலவானுடைய கையிலே இருக்கிற அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவர்களுடைய தாலந்துகளை நீங்கள் கவனிக்க வேண்டும், அவர்களுடைய வாய்ப்புகளை நீங்கள் கவனிக்கவேண்டும், அவர்களுக்கு இருக்கிற தாலந்துகளை அறிந்து அந்த வழியிலே அவர்களை நீங்கள் நடத்தவேண்டும். அந்த திசையிலே அவர்கள் போவதற்கு, நீங்கள் வழிகளை உருவாக்கிக் கொடுக்கவேண்டும், சில பெற்றோர் சொல்லுவார்கள், நாங்கள் MBBS படித்து டாக்டராகனும் என்று நினைத்தோம், எங்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை, ஆகவே நீ படித்து டாக்டராக வேண்டும் என்று தங்கள் பிள்ளைகளை வற்புறுத்துவார்கள், சில வேளையிலே அவர்கள் படித்து விடுவார்கள். டாக்டரும் ஆகிவிடுவார்கள். கடைசியிலே கஷ்டப்படுவது யார்? அங்கே வருகிற நோயாளிகள்தான் கஷ்டப்பட வேண்டும். நம்முடைய பிள்ளைகளை வழி நடத்தக்கூடிய ஞானம் அதிகமாக நமக்குத் தேவை. அவர்கள் பலவானுடைய கையிலே இருக்கிற அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். சரியான திசையிலே நடத்த வேண்டும்.
சரி, இவைகளெல்லாம் நம்முடைய வாழ்க் கையிலே நடக்கவேண்டும் என்றால், அதற்கு அடிப்படையான காரியம் என்ன?
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா (சங். 127:1)
தேவன் நம்முடைய குடும்பத்தைக் கட்டவேண்டும். “ஆண்டவரே, என்னுடைய குடும்பத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறேன். நீர் என் குடும்பத்தின் இராஜாவாக இருந்து, அதை நீர் வழிநடத்தும், நீர் என்னுடைய குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்” என்று ஆண்டவர் கரத்திலே அர்ப்பணிப்போம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பது மாத்திரமல்ல, மற்றவர் களுக்கும் ஆசீர்வாதமாக மாற்றுவார்.
ஜெபம்: அன்புள்ள தகப்பனே எங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, எங்கள் வாலிப பிள்ளைகளை, வழிநடத்த வேண்டிய பொறுப்புகளை எங்களுக்குத் கற்றுத்தாரும். அதற்கான ஞானத்தைக் கொடும், ஆண்டவரே, எங்கள் பிள்ளைகளுக்கு வேண்டிய கிருபைகளைத் தந்தருளும். பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டிய ஞானத்தை எங்கள் பிள்ளைகளுக்குத் தாரும். இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே கேட்கிறோம், பிதாவே! ஆமென்.