சகோ.ஆ.பிரேம்குமார்
(செப்டம்பர்-டிசம்பர் 2020)
1.கசப்புணர்வென்பது
ஜிம் வில்சன் என்பவர் சிறைக்கைதிகளைச் சந்திக்கச்சென்று கசப்புணர்வு பற்றி அவர்களுடன் பேசினார். ஒரு கைதி அவரிடம் வந்து “எங்கள் மூன்று வயது மகளை இரக்கமற்ற விதமாக அடித்துக்கொன்றவன் மேலுள்ள கசப்பிலிருந்து நான் எப்படி விடுபடலாம்” என்று கேட்டார். இதற்கு ஜிம் வில்சன் அந்தக் கைதி எப்படி கசப்புணர்விலிருந்து விடுபடலாம் என்று விளக்கிய பின்பு “நீங்கள் கசப்புணர்விலிருந்து விடுபட்ட பின்பு இந்த நபர் மற்ற சிறுகுழந்தைகளை அடிக்காதபடி அவருக்கு உதவலாம் என்று கூற, அக்கைதியோ “அந்த நபர் உதவப்பட முடியாதவர்” என்றார். ஜிம் வில்சனோ “நிச்சயமாக அவர் உதவப்படக்கூடியவர்” என்றார். அக் கைதியோ “இல்லை, இல்லை” எனக் கூற, ஜிம் ஏன் கூடாது எனக்கேட்க அக்கைதி “அவர் உயிருடனில்லை” என்றார். அந்தக் கைதி தன் மகளைக் கொன்ற அந்த நபரைக் கொன்றுவிட்டுதான் சிறைக்கு வந்திருக்கிறார். ஆனாலும் அவனைக் கொலை செய்த பின்பும்கூட அவரால் அவனை மன்னிக்க முடியவில்லை. கசப்புணர்விலிருந்து விடுபட முடியவில்லை.
கசப்புணர்வு காயப்படுதலோடு ஆரம்பிக்கிறது. மற்றவர் நமக்கெதிராக செய்த, சொன்ன காரியத்தை அல்லது அவர்கள் அப்படிச் செய்ததாக நாம் நினைப்பதைக் காரணமாக்கி கசப்புணர்வு கொள்கிறோம். கசப்பு காயப்படுதலோடு ஆரம்பிக்கிறது. அக்காயப்படுதல் சரியாகக் கையாளப்படாமல் காயம் ஆறாமல் இரணமாகி ஆறாக் காயமாகிவிடுகிறது. அதனை ஏற்படுத்திய அல்லது ஏற்படுத்தியதாக நாம் நம்பும் நபருக்கெதிராக நாம் கொள்ளும் கோபமாகிறது. அக் கோபம் தணியாமல் நிலைத்திருந்து வெறுப்பையும் கசப்பையும் ஏற்படுத்துகிறது.
உதாரணமாக, ஒருவர் உங்ளைப்பற்றி அவதூறாய்ப் பேசியதாகக் கேள்விப்படுகிறீர்கள். அப்பொழுது இவர் என்னைப் பற்றி அப்படி பேசிவிட்டாரே என மனம் காயப்படுவதோடு அவரோடு கோபமும் ஏற்படுகிறது. நாம் உண்மை என்னதென்று ஆராயாமல் சம்பந்தப்பட்டவருடன் நேரடியாக பேசித் தீர்க்காமல் உள்ள காயத்தையும் கோபத்தையும் வைத்து அதனையே திரும்பத்திரும்ப நினைக்கையில் அது கசப்பாக மாறுகிறது. அவர் வேறு ஏதாவது செய்தாலும் இதே கண்ணோட்டத்தோடு அவர் செய்ததற்கு மனதில் விளக்கம் கொடுக்கிறோம். அவர் செய்ததை அல்லது சொன்னதை திரும்பத் திரும்ப நினைக்க நினைக்க மற்றவரிடம் அதைப் பற்றிப் பேச பேச கசப்பு ஆழமாக வேரூன்றுகிறது.
கசப்பு அல்லது கசப்புணர்வு என்றால் என்ன என்று வேதாகம ரீதியாக ஆராய்வோம். யாத். 15:22-25 வரையான பகுதியிலே பின் வருமாறு வாசிக்கிறோம்.
பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று (யாத்.15:22-25).
லோரன்ஸ் ரிச்சட்ஸ் என்பவர் கசப்பு, கசப்புத் தன்மை என்பதாக மொழி பெயர்க்கப்பட்டுள்ள எபிரேயச் சொல் மாரா (mārāh), மாரார் mārar என்னும் அடிப்படைச் சொற்களிலிருந்து (roots) தோன்றியதாகும் என்கிறார். அதன் அர்த்தம் கசப்பாகும். அவ்வப்போது பெலப்படுத்தப்படுதல் (to be strengthened) என்றும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். சில வேளைகளில் அது சொல்லர்த்தமாக மூலிகையொன்றின் கூரான (கடுமையான) சுவையை (sharp taste of an herb) சுட்டிக்காட்ட பயன்படுத்தப்பட்டது. ஆனால், பொதுவாக ஓர் உணர்வை உருவகப்படுத்தும்படி அச்சொல் பயன்படுத்தப்பட்டது என்கிறார்.
லாரன்ஸ் ரிச்சட்ஸ் ரூத் 1:2; 2ராஜா 4:27; யோபு 3:20; சங்71:20; எரேமி. 4:18-19 போன்ற வசனங்களை அடிப்படையாக வைத்து குறிப்பிடுவதாவது “பழைய ஏற்பாட்டிலே கசப்புணர்வைக் குறித்து வாசிக்கையில் சூழ்நிலைகளால் நொறுக் கப்பட்ட ஒரு நபருடைய இதயத்திற்குள் ஆழமாக நோக்கும்படி அழைக்கப்படுகிறோம்”. அங்கு நாம் கோபத்தையோ மனக்கசப்பையோயல்ல (not anger or resentment but helpless pain) உதவியற்ற வேதனையையே நம்மால் உணரமுடிகிறது என்கிறார்.
புதிய ஏற்பாட்டில் கசப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கச் சொல் பிக்ரொஸ் (Pikros) ஆகும். பெயரெச்சமாகிய பிக்ரொஸ்; ‘பிக்’ என்னும் அடிப்படையிலிலிருந்து தோன்றியதாகும்; (Pikros from the root pik). ‘பிக்’; என்றால் ‘வெட்டு’ அல்லது ‘குத்து’ என்ற அர்த்தத்தையுடையது (meaning to cut, to prick). கசப்புக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கச் சொல் குத்தும் அல்லது துளைத்துச் செல்லும்; ஆழமாக ஊடுருவும் என்று குறிப்பிடுகிறது.
எனவே சொல் அர்த்தத்தில் முனைப்புடைய, கூர்மையான, சுவையணர்வு, நுகர்வு (மணம்) போன்றவற்றை அர்த்தப்படுத்துகிறது. யாக்கோபு 3:11,12இல் 11ஆம் வசனத்தில் இயல்பாக தண்ணீரையும் 14ஆம் வசனத்தில் உருவகமாக எரிச்சலையும் குறிக்கிறதாக வைன் இன் வியாக்கியான அகராதி குறிப்பிடுகிறது.
லாரன்ஸ் ரிச்சட்ஸ் -ம் இதற்கு இசைவாக பிக்ரோஸ் மற்றும் அதனோடு தொடர்புடைய சொற்களதும் அர்த்தம் கூரான அல்லது கசப்புச் சுவையை குறிப்பிடும். அது யாத்.3:11இலும் வெளி.8:11இலும் சொல் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் உருவகமாக பயன்படுத்தியுள்ளன என்கிறார். நாம் கஷ்டங்களுக்கூடாக போகையில் விருத்தியாகும் கோபமான தணியாத சினமுடைய சுவை கொண்ட மனதையே புதிய ஏற்பாடு கண்ணோக்கமாயிருக்கிறது. லாரன்ஸ் மேலும் எழுதுகையில் “புதிய ஏற்பாடு கசப்போடு தொடர்புபடுத்துகிற சொற்களில் நாம் இந்த வலியுறுத்தத்தைக் காண்கிறோம். கொலோ.3:19இல் கசப்பு அன்போடு (முரண்படுத்தப்பட்டு) கடுமையாக நடத்தப்படுவதை பிரோகிக்கிறது. ரோ.3:14இல் சபிப்பதோடு எபே.4:31 என்பவற்றோடும் யாக்:3:14இல் எரிச்சலோடும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது.
லாரன்ஸ் மேலும் எழுதுகையில் “விருத்தியடைந்த புதிய ஏற்பாட்டுச் சித்திரமானது கசப்பு என்பது கோபத்தையும் பகைமையுள்ள கண்ணோட்டத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த கண்ணோட்டமானது தணியாச் சினத்தினூடாகவும் மற்றவர்களை தாக்குவதனூடாவும் வெளிப்படுத்தப்படுகிறது. புதிய ஏற்பாட்டு சொற்கள் பயன் படுத்தப்பட்டுள்ள விதமானது நமது ஆள் தன்மையை மறைத்து நம்மை கடினமான பகைமையுள்ள மனிதர்களாக மாற்றுகிறது. “கசப்புண்டாக்கும் தணியாச் சினமுள்ள ஒப்புரவாக மறுக்கும் ஆவி (உணர்வு)” என்று இதனை அர்மிட் டேஜ் ரொபின்சன் வரையறுக்கிறார்.
எனவே, கசப்பென்பது விரும்பத்தகாத சுவைகொண்ட கூரான அல்லது கடுமையான தீமையான பாவத்தன்மை கொண்ட நிலைத்திருக்கும் கோப உணர்வாகும். நடந்த பாதகமான சம்பவம் நமக்கு எவ்வளவு அருகிலுள்ளதோ அந்தளவுக்கு பாதிப்பும் அதிகமாகும். உதாரணமாக வேறு இடத்தில் ஒரு சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டாள் என்றால் அது நமக்கு வேதனை ஏற்படுத்தும்; கோபம்கூட வரும், வரவேண்டும். ஆனால், அது கசப்பாக மாற வாய்ப்புக் குறைவு. ஆனால், அந்தச் சிறுமி எனது வீட்டில் ஒருவர் என்றால் அது வெகு அதிகமாக என்னைப் பாதிக்கும். நாம் கவனமாயிராவிட்டால் அது கசப்புணர்வுக்கு வழி நடத்தும்.
2.கசப்புணர்வுக்கான அறிகுறிகள்: (Symptoms of bitterness)
ஒருமுறை ஒரு பையனிடம் ஒருவர், நீ எதனை வேண்டுமானாலும் நினைத்துக்கொள். பூனையைப்பற்றி மட்டும் நினைக்காதே என்று சொன்னாராம். அவனோ பூனையை நினைக்காமல் இருக்க எவ்வளவு முயற்சித்தாலும் பூனையின் உருவந்தான் அவன் ஞாபகத்திற்கு வந்ததாம். கசப்பான அனுபவத்தை நாம் நினைக்காமல் இருக்க முயற்சித்தாலும் அது வந்துகொண்டேயிருக்கலாம். ஒருவேளை நாம் அதனை இப்பொழுது நினைப்பதில்லை என நமக்குச் சமாதானம் சொல்லிக்கொள்ளலாம், “கசப்பு” ஒரு வேராக ஆரம்பிக்கிறது. அது மிகச் சிறிய வேராக ஆரம்பிக்கிறது. எனவே அதனை இலகுவாகக் கண்டு பிடிக்க முடியாது. கசப்பின் வேர் பெரியதல்ல அல்லது இலகுவில் கண்டுபிடிக்கும்விதமாக வெளிப்புறத்தில் காணப்படுவதுமல்ல. ஆனால் அது புற்றுநோயைப் போன்றது. நமது ஆத்துமாவின் எலும்பின் மச்சைவரை (எலும்புக்குள் இருப்பது) ஆழமாகக் கீழே போய் வஞ்சகமான கிரியையை நடப்பிக்கும். அது பரவிய பின்பாகவே கசப்பான சொற்கள், கசப்பான சிந்தனை கசப்பான கிரியைகளின் அறிகுறிகள் வெளியே தென்படும்.
கசப்பு ஒரு வேரைப்போன்றது. அது இலகுவில் வெளியே தெரியாமல் இருக்கலாம். ஆனால் வேர் வளரவளர கசப்பின் கனிகளும் வெளிப்படுவதுண்டு. ஒருவருக்கு கசப்பு இருக்கிறதா என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம். கசப்புக்கான அறிகுறிகள் சிலவற்றை கவனிப்போம்.
1. கசப்புணர்வானது மற்றவர்கள் நமக்கு எதிராக செய்பவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும்.
ஒருவர் நமக்கெதிராக செய்த ஒரு காரியத்தை நாம் திரும்பத்திரும்ப நினைத்துக் கோபப்படுவதோ அல்லது அதனை நினையாமல் இருக்கும்படி அதை வெளியே வராமல் அடக்கினாலும் அந்த நினைவுகள் வந்துகொண்டேயிருக்கும். சிலரைப் பொறுத்த வரையில் தான் சிறுவனாக சிறுமியாக இருக்கையில் தனக்கோ தனக்கு நெருக்கமானவருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை தாம் வயது போன நிலைக்கு வந்தபின்பும் மறக்கமுடியாமல் இருக்கும். அவர் செய்த காரியங்கள் அவரது மனத்திரையில் வந்து போய்க்கொண்டிருக்கும். மேல் மனதில் அதை நினைக்க விரும்பாமல் அடி மனதிற்கு தள்ளிவிட்டாலும் மறக்க முடியாதிருக்கும். மற்றவர்கள் நமக்கெதிராக செய்தவற்றின் பட்டியல் மனதில் பதிந்திருக்கும்.
2. அந்த நபரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் பாதகமாக வெறுப்பாக கோபமாயிருக்கும்.
மகிழ்ச்சியான வேளையில் கூட அந்நபர் பற்றி நினைப்பு வந்தால் அல்லது மற்றவர் நினைவூட்டி னால் அந்த மகிழ்ச்சி மங்கி பாதகமான வெறுப்புணர்வு மேலோங்கும். அவரைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் கோப உணர்வு மேலிடும். சில வேளைகளில் மேலோட்டமாக நான் அவரோடு எந்தக் கோபத்துடனும் இல்லை என்று எண்ணினாலும் அவரைப்பற்றிய கசப்பான நினைவுகள்; உள் ஒளிந்திருக்கும் கோபத்தை வெளிக்கொண்டு வரும். அவரைக் குறித்த நினைப்பே கசக்கும், பாதகமாயிருக்கும்.
3. அந்நபரை மன்னிக்க மிகக்கடினமாயிருக்கும் அல்லது மன்னிக்கவே முடியாது எனத் தோன்றும்.
அவர் அல்லது அவள் அல்லது அவர்கள் எனக்கு இழைத்த தீங்கு மோசமானது. ஏன் சிறுவயதுப் பிராயமே சிதைந்துபோனது அல்லது எனது வாலிபப்பிராயமே வசந்தமிழந்து போனது. எனது இளமையை அவர் வீணாக்கிவிட்டார். என்னால் அவரைமட்டும் மன்னிக்க முடியாது எனக் கூறு வோமாயின் நமக்கு கசப்புண்டு. அப்படி அவரை மன்னிப்பதற்கு என் மனக் காயமும் பெருமையும் இடங்கொடாது. அவர் மன்னிப்பைப்பெற தகுதியற்றவர் தண்டிக்கப்பட வேண்டியவர் என்ற உணர்வே மேலோங்கியிருக்கும். அவரை நேரில் காணும் சூழ்நிலைகளை முடிந்தளவு தவிர்ப்போம். அப்படி தற்செயலாகக் கண்டாலும் காணாதவர்போல செல்லவே விரும்புவோம். அப்படியே அவரைப் பார்த்து புன்முறுவல் காட்டினாலும் அது போலியான புன்முறுவலாகவேயிருக்கும்.
4. அந்நபரைப்பற்றி அவதூறாகப் பேசிக்கொண்டிருப்போம்.
அந்நபர் பற்றிய நினைவுகளை மறக்க முற்பட்டாலும் முடிவதில்லை. அவரைப்பற்றி அவதூறாக மற்றவருடன் பேசிக்கொண்டேயிருப்போம். அவர் செய்த தவறுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்போம். அந்நபர் நமக்கிழைத்த தவறு மற்றவரிடம் சொல்லமுடியாத அவமானத்திற்குரியதொன்றாயிருந்தால் நாம் அத்தவறைப்பற்றி மற்றவரிடம் சொல்ல வெட்கப்பட்டு அதனைச் சொல்லாமல் ஏனைய காரியங்களில் அவரைப்பற்றி அவதூறாகப் பேசுவோம். ஆனால், நமது உண்மையான பிரச்சனை, அவர் நமக்கிழைத்த தீங்கும் அதனால் வந்த கசப்புமாகும். அநேகரிடம் அநேக தடவைகள் அவரைப்பற்றி அவதூறாகப் பேசுவோம். அந்நபரைப்பற்றி பாதகமாகச் சொல்ல ஆயிரம் காரியங்கள் இருக்கும். நன்மையாகச் சொல்ல ஐந்து காரியங்கள்கூட ஞாபகத்திற்கு வராது.
5. மற்றவர்கள் அவரைப்பற்றி நன்றாகக் சொல்லிவிட்டாலோ உயர்த்தினாலோ நம்மால் தாங்க முடியாது.
மற்றவர் மேல் நமக்கு எரிச்சல் இருந்தாலும், போட்டி இருந்தாலும்கூட இந்தக் காரியம் நடக்கலாம். கசப்புக்கும்கூட இது ஒரு அறிகுறியாகும். அவரது வெற்றிகள் நமக்கு வேதனையையும் அவரது தோல்விகள் நமக்கு மகிழ்ச்சியையும் தரும்.
6. கசப்புணர்வுள்ளவர் மற்றவர்களைக்குறித்தும் தம்மை சூழ உள்ள உலகைக் குறித்தும் கண்டன, நியாயந்தீர்க்கும் மனப்பாங்குடன் காணப்படுவர்.
மனக்காயப்பட்டு காயம் மாறாமல் கசப்பாக மாற இடங்கொடுத்தவர்கள் மற்றவர்களைக் கண்டனக் கண்ணோட்டத்தோடு நியாயந்தீர்ப்பவர்களாக இருப்பர். உலகத்தின் மீதும் தம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீதும் கோபத்துடனும் கண்டனக் கண்ணோட்டத்துடனும் இருப்பர். தங்களைத் தவிர மற்ற அனைவரும் தவறு செய்பவர்கள் என்ற உணர்வுடன் இருப்பர். போதகர் ஒருவருக்கு அன்பான ஒத்தாசையான மனைவியும், போதகரை நேசிக்கும் சபையும் இருந்தும் அவர் மனைவியைக் குற்றப்படுத்திக் கொண்டும் சபையைக் குற்றப்படுத்திக்கொண்டும் இருந்தார். ஒருநாள் மனைவி ஓர் ஆலோசகரைச் சந்தித்து தனது கணவரைப் பற்றி கூறினார். அந்த ஆலோசகர் கணவனை தனியே சந்தித்தபோது, அவர் இராணுவத்தில் பணியாற்றிய நாட்களில் தான் பணி செய்த நாட்டில் சோதனைக்குட்பட்டு ஓரிருமுறை விபசாரிகளிடம் போனதாகவும் திரும்ப வந்து தனக்கு நிச்சயித்திருந்த பெண்னை மணம் முடித்ததாகவும் கூறினார். தான் செய்த தவறை தன்னால் மன்னிக்க முடியாததால் தன்னை அன்பு செய்த மனைவியையும் சபையையும் குற்றப்படுத்தினார். அவரது பிரச்சனை தன்னைத்தானே மன்னிக்க முடியாததாகும். மனைவியின் அன்பை ஏற்க முடியாததற்கு அவ்வன்பைப் பெற்றுக்கொள்ள தான் பாத்திரனல்ல என்ற உணர்வும் தன்னையே மன்னிக்க முடியாத நிலையும் காரணமாயிருந்திருக்கலாம். (இக்கதை கசப்பிலிருந்து விடுபடுவதற்கும் பயன்படுத்தலாம்)
7. சுயபரிதாபம் (Self pity)
மனக்காயப்படுகிற பலர் மற்றவர்களிலிருந்து தம்மை தனிமைப்படுத்தி தமக்கு நேர்ந்த அவலத்தை நினைத்துநினைத்து “ஐயோ எனக்கு இப்படி நடந்துவிட்டதே எனக்குத்தான் எல்லாம் நடக்கிறது”என்று சுயபரிதாபம் கொள்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. நானும் சுயபரிதாபத்தோடு போராடின நாட்கள் உண்டு. ஒருநாள் இங்கிரிட் ட்ரோபிஷ் என்பவர் எழுதிய ஒரு ஆக்கத்தை வாசிக்கும்போது ஆண்டவர் என்னோடு பேசினார். சுயபரிதாபம் சுயத்தை நடுமையத்தில் கொண்டது என்பதையும் அது சாத்தானுடைய ஆயுதம் என்பதையும் அறிந்து கொண்டேன். சுயபரிதாபம் எப்படிப்பட்டதென்றால் நான்கு பக்கங்களிலும். மேற்புறத்திலும் தரையிலும் கண்ணாடியினால் செய்யப்பட்ட ஒரு அறைக்குள் பிரவேசிப்பது போன்றது. எங்கு பார்த்தாலும் உங்கள் முகமே உங்களுக்குத் தெரியும். சுயபரிதாபமும் அப்படி உங்களைப் பற்றியே சிந்திக்க வைக்கும். சுயம் நடுமையத்திலான பாவ நிலை. அது ஆண்டவர் உங்களைக்கொண்டு செய்ய திட்டமிட்டுள்ளவற்றை செய்ய முடியாதபடி உங்களை செயலிழந்து போகச்செய்யும். எனவே உங்களுக்கு நேரிட்ட அநியாயத்தையே எண்ணி எண்ணி அதில் மூழ்கிவிடாதீர்கள். சில பிச்சைக்காரர்கள் தங்கள் காயம் ஆறுவதை விரும்புவதில்லை. அப்படி காயம் ஆறிவிட்டால் மற்றவரின் அனுதாபத்தை இழந்துவிடுவோமென காயத்தை ஆறவிடாமல் செய்வதுபோல நாமும் மனக் காயத்தை ஆறவிடாமல், சுயபரிதாபத்தையும் மற்றவரின் பரிதாபத்தையும் நாடி நிற்கிறோமா? சுயபரிதாபம் கூட கசப்பின் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
மேற்குறிப்பிட்ட காரியங்களில் பல உங்களில் காணப்படுமானால் உங்களுக்குள் கசப்புள்ள தென்பது கசப்பான உண்மை.