கலாநிதி.அஜித் பெர்னாண்டோ
(மார்ச்-ஏப்ரல் 2021)
கிறிஸ்தவ வாழ்வை தேவனோடு உள்ள உறவென நாம் கூறலாம். எந்த ஓர் உறவிலும் உரையாடல்கள் இருப்பதுபோலவே கிறிஸ்துவ வாழ்விலும் இருக்கின்றது. ஜெபத்தில் நாம் தேவனோடு பேசுகிறோம். தேவனோ நம்மோடு பலதரப்பட்ட முறைகளிலும் பேசுகிறார். எனினும் தேவன் நம்மோடு பேசுவதற்காக உபயோகிக்கும் முறைதான் வேதவாக்கியங்களின் மூலமாக பேசுவதாகும்.
வேதாகமத்தை அணுகும்போது சங்கீதக்காரனின் ஜெபம் நம் மனதில் இருக்கவேண்டும். உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படி என் கண்களைத் திறந்தருளும் (119:18) என அவன் ஜெபித்தான். தேவன் அதிசயமான காரியங்களைக் காண்பிக்கிறார் என இவ்வசனம் கூறுகிறது. எனினும், இதில் நாம் செயலற்றவர்களாக இருப்பதில்லை. நாம் வேதத்தில் இவற்றைப் பார்க்க வேண்டும். வார்த்தைகள் மூலமாக தேவன் வேதாகமத்தினூடாக நம்மோடு பேசியுள்ளார். எனவே இவ்வார்த்தைகளின் அர்த்தத்தை அறிந்துகொள்வதற்காக வேதாகமத்தை நாம் கருத்துடன் வாசிக்க வேண்டும். இல்லையென்றால் தேவன் எந்தக் கருத்துடன் வேதாகமத்தில் பேசியுள்ளாரோ அந்த அர்த்தத்துடன் வேதாகம வார்த்தைகளை விளங்கிக்கொள்ள மாட்டோம். தேவன் எவ்வாறு வேதாகமத்திலிருந்து நம்மோடு பேசுகிறார்? மூன்று முறைகளைப்பற்றி பார்ப்போம்.
முதலாவதாக, அவர் நேரடியான வழி காட்டுதல்முறை மூலமாக நம்மோடு பேசுகிறார். அதாவது நாம் முகங்கொடுக்கும் சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும், எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என நேரடியாக அவர் அறிவுறுத்தல்களைக் கொடுக்கிறார். பின்வரும் கேள்விகள் ஒரு குறிப்பிட்ட வேத பகுதியிலிருந்து எவ்வாறு தேவன் நேரடியாக நமக்கு வழிகாட்டுகிறார் என்பதை அறிந்துகொள்ள உதவும். எனவே. ஒரு வேதபகுதியை வாசித்து தியானிக்கும்போது அப்பகுதியைப்பற்றி பின்வரும் கேள்விகளை கேளுங்கள்.
இந்தப்பகுதியில் எனக்கென்று வாக்குத்தத்தம் ஏதாவது உண்டா? இப்பகுதியில் நான் கீழ்ப்படிய வேண்டிய கட்டளைகள் ஏதாவது உண்டா? நான் விட்டுவிடவேண்டிய பாவம் எதையாவது இப்பகுதி எனக்கு சுட்டிக்காட்டுகிறதா? நான் பின்பற்றவேண் டிய உதாரணம் ஏதாவது இப்பகுதியில் உள்ளதா?
தாங்கள் வாசிக்கும் பகுதியின் பொதுவான செய்தியைப் பெற்றுக்கொள்வதில் அநேகர் திருப்தியடைந்துவிடுவதனால், தேவனிடமிருந்து தெளிவான வழிகாட்டுதலைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றனர். வேதாகம செய்தியை நமது நடைமுறை வாழ்வுக்கு பிரயோகிப்பதில் நாம் திட்டமாய் இருக்கவேண்டும். உதாரணமாக. கிறிஸ்தவர்கள் தங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் எனும் செய்தியை நம் வாழ்வில் பிரயோகிக்க வேண்டுமென்றால் நமக்கு எதிராக செயல்படும் நபர்கள் யார் என்பதை குறிப்பிட்டு, அவர்களுக்கு எவ்வாறு நம்முடைய அன்பைக் காட்டலாம் என்பது பற்றி தீர்மானிக்க வேண்டும்.
இரண்டாவதாக வேதாகம நியதிகளைக் கொடுப்பதன் மூலமாக தேவன் நம்மோடு பேசுகிறார். இவை பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிய சத்தியமாகும். உதாரணமாக, வேதாகமம் தேவன் எப்படிப்பட்டவர், அவர் எவ்வாறு செயல்படுபவர், மனிதன் எத்தகையவன், அதேபோல இந்த உலகம், நரகம், பரலோகம், சாத்தான் என்போரைப் பற்றிய விஷயங்களைக் கற்பிக்கின்றது. நமது வாழ்வில் இவைகளை உடனடியாக பிரயோகிக்க முடியாமல் இருந்தாலும், இந்த சத்தியங்களை நாம் நமது இதயத்தின் ஆழத்தில் பதித்து வைக்கவேண்டும் (சங்.119: 11). இவ்விதமாக தேவையேற்படும் சமயத்தில் பெற்றுக்கொள்வதற்காக வேத சத்தியங்களை நாம் நமக்குள் சேகரித்து வைக்கிறோம்.
உதாரணமாக, எல்லாமே நல்லபடியாக நடக்கும் ஒரு நாளில், எவ்விதமான பிரச்சனைகளும் இல்லாத சமயத்தில் ஆதியாகமம் 50:20ஐ வாசிக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். யோசேப்பினுடைய சகோதரர்கள் அவனுக்குத் தீங்கு செய்ய நினைத்தும் தேவன் அதை நன்மைக்கேதுவாய் மாற்றினார். இச்சத்தியத்தை உடனடியாக நம் வாழ்வில் பிரயோகிக்க முடியாதவர்களாய் இருப்போம். ஆனால் முக்கியமான ஒரு வேதாகம நியதி நமது இதய சேமிப்புக்குள் செல்கிறது. தேவன் ஒருவரே சுய அதிகாரமுடையவராய் இருக்கின்றமையால், நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கும் பட்சத்தில் மக்கள் நமக்கெதிராக செய்யும் தீமையான காரியங்களையும் நன்மையாக மாற்றுவார் என்னும் நியதியை நாம் கற்றுக்கொள்கிறோம். சிலநாளைக்குப் பின்பு யாராவது நமக்கு தீங்கிழைக்கும்போது, இல்லையென்றால் பேரிழப்பு ஒன்று ஏற்படும்போது, எதிர்காலமே இருண்டதாக தோன்றும். துயரமும் விரக்தியும் அடைவோம். அப்போது நம் இதயசேமிப்பில் இருந்து ஆதியாகமம் 50:20 மனதிற்கு வரும். தேவன் ஒருவரே சுய அதிகாரமுடையவர். தேவன் இதை நன்மைக்கேதுவாய் அமைத்திடுவார். நாம் அவருக்கு கீழ்ப்படிவதைக் குறித்தே நம் கவனத்தைச் செலுத்த வேண்டும். நமது எண்ணம் மாற்றப்படும், அத்தோடு, வேதனைக்கு மத்தியிலும் நம் மனதில் சமாதானம் இருக்கும்.
வேதாகம சத்தியங்களை இதயத்தினுள் சேகரித்து வைப்பது மிகவும் முக்கியமானது. இதுவே ஒரு மனிதனை ஆவிக்குரிய பிரகாரமாக பெலப்படுத்தும். அத்தோடு நாம் எதிர்நோக்கும் சவால்களுக்கு சரியான விதத்தில் முகங்கொடுக்க நமக்கு போதுமான உள்ளான வல்லமையைக் கொடுக்கும். எனவே, நாம் ஒவ்வொருமுறை வேதாகமத்தை வாசிக்கும்போதும் குறிப்பிட்ட வாழ்வு சம்பவத்திற்கு அதன் செய்தியை பிரயோகிக்க முடியவில்லையே என்று சோர்வடைந்து போகக்கூடாது. வேதாகமம் தேவனுடைய வார்த்தை. எனவே, ஒவ்வொரு முறையும் அதை வாசிக்கும்போதும், உடனடியாகவோ அல்லது பின்போ பிரயோகிக்கக்கூடிய முக்கியமான காரியங்களை தேவன் நமக்குக் கற்பிக்கின்றார்.
மூன்றாவதாக, சிறப்பான செய்திகள் மூலமாகவும் தேவன் நம்மோடு பேசுகிறார். தேவன் எப்போதும் நம்மோடு பேசுவதற்கு விருப்பமுடையவராக இருக்கிறார். ஆனால், அநேகமான சமயங்களில், நாம் அவரோடு சரியான உறவில் இல்லாதபடியினால் அவருடைய குரலைக் கேட்க முடியாதவர்களாயிருக்கிறோம். வேதாகமத்தை வாசிக்கும்போது நம்மை அறியாமலேயே செவி கொடுக்கும் நிலையை நாம் அடைகிறோம். எனவே வேதாகமத்தை வாசிக்கும்போது நாம் வாசிக்கும் பகுதியிலிருந்து ஒரு செய்தியை தேவனால் நமக்கு கொடுக்கக் கூடியதாக இருக்கின்றது.
ஒரு கிறிஸ்தவ வியாபாரி, பெரிய முதலீட்டைக் கொண்டு ஒரு புதிய வியாபாரத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கிறார். ஆனால், அவருக்கு இச்சமயத்தில் இதை ஆரம்பிப்பது தேவனுடைய சித்தமா இல்லையா என்பதைப்பற்றி அறியாதவராக இருக்கிறார். தன்னுடைய அனுதின வேத வாசிப்பு முறையின்படி ஒரு குறிப்பிட்ட நாள் அவர் வாசிக்க வேண்டிய பகுதியாக யோசுவா 1:1-9 அமைகிறது. இப்பகுதியில் தேவன் தன்னை விசுவாசித்து முன்னேறிச் செல்லும்படியாகவும் ஆபத்துக்களைக் கண்டு அஞ்சவேண்டாம் என்றும், தான் வெற்றியைக் கொடுப்பதாகவும் யோசுவாவுக்கு உறுதியளிக்கிறார். இப்பகுதி இந்த வியாபாரிக்கு மிகவும் பொருத்தமானதாக தென்பட்டது. அன்றைய தினம் இக்குறிப்பிட்ட பகுதியை நான் வாசிக்க வேண்டும் என்பதை தேவனே ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை உணர்ந்துகொண்ட அந்த வியாபாரி, தேவனை விசுவாசித்து, தன் புதிய வியாபாரத்தை ஆரம்பித்தார். அன்றைய தினம் தேவன் அந்த வியாபாரிக்கு சிறப்பான செய்தியொன்றை கொடுத்திருந்தார்.
தேவன் ஒருவரே சுய அதிகாரமுடையவராக இருக்கின்றபடியால், ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட பிரச்சனைக்கு முகங்கொடுக்கும் நாம், அக்குறிப்பிட்ட பிரச்சனைக்கு பொருத்தமான பகுதியை அன்றைய தின வேதவாசிப்பு பகுதியாக நமக்கென ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். இது தற்செயலாக ஏற்படுகிற ஒன்றல்ல. நாம் கிரமமான முறையில் வேதத்தை வாசித்துக்கொண்டு வரும் போது, அவர் அந்த நாளுக்குரிய செய்தியை அந்த வேத பகுதிகளில் இருந்து நமக்குத் தருகிறார்.
தேவனுடைய சிறப்பான செய்தி எப்போதும் நமக்கு வழிகாட்டும் செய்தியாகமட்டும் இருக்காது. சில சமயம் அது ஆறுதலளிக்கும் செய்தியாகவும், சில சமயங்களில் தைரியமளிக்கும் செய்தியாகவும், இன்னும் சில சமயங்களில் கடிந்துகொள்ளும் செய்தியாகவும் இருக்கும். எனினும் இத்தகைய சமயங்களிலெல்லாம் நாம் தேவனுடைய செய்தியைத்தான் கேட்டோம் என்று முழு நிச்சயமடையவும் முடியாது. ஏனென்றால், சில சமயங்களில் நாம் நம்முடைய சூழ்நிலைக்கேற்றவாறு தேவ வார்த்தையை மாற்றிடவும் கூடும். எனவே, முதல் இரண்டு முறைகளிலும் தேவன் பேசுவதை சரியாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருப்பதுபோல, மூன்றாவது முறை மூலம் அறிவது சற்று சிரமமானதாகவே இருக்கின்றது. சில சமயங்களில் நாம் எதை எதிர்பார்க்கிறோமோ, அதை வேதத்தில் இருந்து பெறும் வண்ணம், நம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வேத வசனங்களுக்கு அர்த்தம் கற்பித்து விடலாம். இதனால் சிறப்பான செய்திகளைப்பற்றி நாம் சற்று ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்.
வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள நேரடியான வழிகாட்டுதல்கள், நியதிகள், அறிவுறுத்தல்கள் என்பவற்றை முரண்படுத்துவதாக சிறப்பான செய்தி இருக்காது. நமக்கு கிடைக்கும் சிறப்பான செய்தி வேத சத்தியங்களை முரண்படுத்துவதாக இருந்தால் அது தேவனுடைய செய்தியல்ல என்பது உறுதி. அதே சமயம் வேதாகமத்தை வாசிக்கும்போது, சிறப்பான செய்திகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடுமட்டும் வாசிக்கக்கூடாது. வேதாகமத்தை நாம் ஓர் ஒழுங்குமுறையின்படி அனுதினமும் வாசிக்க வேண்டும். தேவன் நமக்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் செய்திகளையும் தருவார்.