Dr. W.வாரன் வியர்ஸ்பி
(மார்ச்-ஏப்ரல் 2021)
ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி:இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்.23:43).
எப்பொழுதெல்லாம் ஒருவர் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து, மனந்திரும்புகிறாரோ அது மிகவும் ஆச்சரியமான ஒரு அனுபவமாகும். ஏனென்றால், அச்சமயத்தில் ஒரு அற்புதம் நடை பெறுகிறது. அது என்னவென்றால், ஆவியில் மரணமடைந்த ஒரு பாவி நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக எழுப்பப்படுகிறான். அவன் அந்த காரத்தினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைக்கப்படுகிறான். மறுபடியும் பிறந்த புதிய அனுபவத்தைப் பெறுகிறான். உள்ளான மனிதன் புதுப்பிக்கப்பட்டு தெய்வீகத் தன்மையை அடைகிறான். இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவரை இரட்சகராக நம்பி மனந்திரும்பும் ஒவ்வொரு பாவியின் அனுபவமும் இதுவேயாகும்.
ஆனால், மனந்திரும்புகிற சிலருடைய சூழ்நிலைகள், மற்ற அநேகரது சூழ்நிலைகளைவிட மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நான் கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்ட சூழ்நிலை வித்தியாசமானது. ஒரு உயர்நிலைப் பள்ளியின் அரங்கத்தின் பின்னே நின்று கொண்டு, அங்கே பேசிக் கொண்டிருந்த ஒரு சுவிசேஷகருடைய பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் என் கரத்தை உயர்த்தவில்லை, கூட்டத்தின் நடுவே நடந்து செல்லவுமில்லை. ஆனால், என் இருதயத்தை கிறிஸ்துவிற்கு திறந்துகொடுத்தேன். உடனே இரட்சிக்கப்பட்டேன். எனது இந்த சூழ்நிலை, அப்.பவுல் மனந்திரும்பின சூழ்நிலைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகும் (அப்.9:1-8).
பவுல் மிகவும் பிரகாசமான ஒளியைக் கண்டார். அவரோடு பேசின ஒரு சத்தத்தைக் கேட்டார். அவர் கர்த்தராகிய இயேசுவை முகமுகமாய்க் கண்டார். ஒவ்வொரு மனந்திரும்புதலும் ஆச்சரியமானது! ஆனால், சில மனந்திரும்புதல்கள் மற்றவற்றை விட மிகவும் ஆச்சரியமானவைகளாக உள்ளன. சிலுவையிலே தொங்கின கள்ளனின் மனந்திரும்புதலை நீங்கள் எண்ணிப்பார்த்தால் அது மிகவும் ஆச்சரியமானது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்.
ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து, இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக் கொள்ளட்டும் என்றார்கள். போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம் பண்ணினார்கள். இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துகளில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனை கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்.23:35-43).
இது நமது ஆண்டவர் சிலுவையிலே கூறின இரண்டாவது வார்த்தையாகும். அவர் சிலுவையிலே கூறின முதல் வார்த்தை, பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்பதாகும் (லூக். 23:34). நமது ஆண்டவர் முதலாவது அவரது எதிராளிகளுக்காக ஜெபித்தார். அவரது இரண்டாவது வார்த்தை, மனந்திரும்பின ஒரு பாவியின் பக்கம் திரும்பி, அவன் பரலோகத்திற்குப் போகப் போகிறான் என்ற நிச்சயத்தையும் கொடுத்தார். இந்தக் கள்ளனுடைய மனந்திரும்புதலில் நடந்த ஆச்சரியமான காரியத்தைக் கவனிப்போம்.
ஆச்சரியமான சூழ்நிலை:
கல்வாரியில் நடந்த அந்த ஆச்சரியமான சூழ்நிலையை உங்களால் கவனிக்காமல் இருக்க இயலாது. நமது ஆண்டவராகிய இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைந்தபொழுது, அவரை இரண்டு கள்ளர்கள் மத்தியில் அறைந்தார்கள். அந்த இருகள்ளர்களையும் அவர்கள் ஒன்றாக சிலுவையில் அறைந்திருக்கலாம், அதுதான் உண்மையில் நடந்திருக்கவேண்டும்.
அந்த இரு கள்ளரும் குற்றச்செயல்கள் புரிவதில் பங்காளிகளாக இருந்து செயல்பட்டிருக்கலாம் என்று நாம் கருதலாம். ஆகவே அந்த சிநேகிதர்களாகிய இரண்டு கள்ளர்களையும் அருகருகே சிலுவையில் அறைந்திருக்கலாம். அதற்குப் பதிலாக, ஆண்டவராகிய இயேசுவை அவர்கள் இருவருக்கும் நடுவாக சிலுவையில் அறைந்தனர். இது ஓர் ஆச்சரியமான நிகழ்ச்சியாக உள்ளது.
தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்:
இது, ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறின ஒரு நிகழ்ச்சியாகும். ஏசாயா 53:12இல் அவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவரோடுகூட இரண்டு கள்ளர்களை சிலுவையில் அறைந்தார்கள். அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள் (மாற்கு 15:27,28).
கல்வாரியில் நடந்த நிகழ்ச்சி மனிதர்களால் மட்டும் ஏற்படவில்லை. தேவனுடைய கரமும் செயல்பட்டது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ளவேண்டும். மனிதன் தேவனுடைய திட்டத்தை செயல்படுத்தினான். எந்த ஒரு கட்டாயமுமில்லாமல், மிகவும் பொறுப்புடன் செயல்பட்டான். அதன் மூலம் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறிற்று. ஆண்டவராகிய இயேசு அக்கிரமக்காரர்களில் ஒருவராக எண்ணப்பட்டார்.
அவர் அக்கிரமக்காரர்களுக்காக பிறந்தார். அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் (மத்.1:21).
அவர் அக்கிரமக்காரர்களுக்காக வாழ்ந்தார். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் (மத்.20:28).
அவர் அக்கிரமக்காரரோடு மரித்தார். அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார். ஆகவே அந்த ஆச்சரியமான நிகழ்ச்சி தீர்க்கதரிசன நிறைவேறுதலிருந்து துவங்குகிறது.
தேவனுடைய கிருபையால் முன்னறிந்து வழி நடத்துதல்:
அந்த ஆச்சரியமான நிகழ்ச்சியில் மேலும் சில காரியங்கள் உண்டு. நமது ஆண்டவராகிய இயேசு இரு கள்ளர்கள் நடுவே தொங்கினார். ஏனென்றால், தேவன் அவரது கிருபை நிறைந்த செயல்பாட்டை செயல்படத் துவங்கினார். Providence என்ற வார்த்தைக்கு முன்னறிதல் அல்லது பின்னால் நடப்பவைகளை முன்னாலே அறிதல் என்று அர்த்தமாகும். எதிர்காலத்தில் நடக்க இருந்த காரியங்களை தேவன் முன்னதாகவே அறிந்து செயல்பட்டார். தேவன் முன்னறிந்தார். ஆண்டவராகிய இயேசுவின் வாழ்க்கையில் தற்செயலாய் நடந்த காரியம் என்று சொல்ல ஒன்றுமில்லை; அனைத்தும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவைதான். ஆண்டவராகிய இயேசு இரண்டு கள்ளர்கள் மத்தியில் சிலுவையில் அறையப்பட்டது தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வு அல்ல. அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தேவனுடைய நிகழ்ச்சியாகும்.
பிதாவே, இவர்களுக்கு மன்னியும் தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருக்கிறார்களே (லூக்.23:34) என்று இயேசு பிதாவை நோக்கி வேண்டிக்கொண்டதை அந்த இருகள்ளர்களும் நிச்சயமாக கேட்டிருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர் அந்த ஜெபத்தின் மூலம் அவர்கள் இருவருடைய இருதயத்திலும் பேசி இருப்பார். இங்கு பிறரை மன்னிக்கிறவரும் பிறர் மன்னிக்கப்பட வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறவரையும் காண்கிறோம்.
அந்த இரு கள்ளர்களும் ஆண்டவராகிய இயேசுவின் இருபக்கங்களிலும் தொங்கினபடியால் அவரது சிலுவைக்கு மேலாக வைக்கப்பட்டிருந்த வார்த்தைகளைப் பார்க்க இயன்றிருக்கும். நற்செய்தி நூல்களின் இசைவுத் தன்மையை நீங்கள் பார்க்கும்பொழுது, அந்த வாசகங்கள் இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்பதாகும். அந்த வாசகங்கள் மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்த இருமொழிகளை அந்தக் கள்ளர்கள் நிச்சயமாக அறிந்திருப்பர். அந்த வார்த்தைகள் பிலாத்துவினால் எழுதப்பட்டிருந்தது. ஒருவேளை அதுதான் முதன்முதலாக எழுதப்பட்ட நற்செய்தி கைப்பிரதியாக இருக்கலாம். அது ஆண்டவராகிய இயேசுவின் சிரசின்மேல் தொங்கவிடப்பட்டிருந்தது.
அங்கு தொங்கின இரு கள்ளர்களும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதோடு இயேசுவையும் பார்த்திருப்பார்கள். அவர்கள் ஆண்டவராகிய இயேசுவைப் பார்த்தபொழுது, நிச்சயமாக இயேசுவின் சிரசிற்கு மேலாக தொங்கின வார்த்தைகளையும் பார்த்திருப்பார்கள். அந்த வார்த்தைகள் அவர் யார் என்று தெளிவாகக் கூறின. அவர் இயேசு; அதாவது அவர் இரட்சகர். அவர் நாசரேத் தூரானாகிய இயேசு. அவர் வெறுத்து ஒதுக்கப்பட்ட இடத்தில் அதாவது தள்ளப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து வந்தவராகும். அவர் யூதர்களின் ராஜா, அவர் ஒரு ராஜ்யத்திற்கு சொந்தமான இரட்சகர். ஆகவே அந்த வார்த்தைகளை வாசித்ததின் மூலம் அவர்கள் நற்செய்தி கூறும் செய்தியை அறிந்திருப்பார்கள்.
அவர் இரட்சகர்; அதாவது, காணாமற்போன பாவிகளின் இரட்சகர். அவருக்கு ஒரு ராஜ்யம் உண்டு. அவர் யூதர்களின் ராஜா. சுற்றி நின்று வேடிக்கை பார்த்த கூட்டம் அவரை நிந்தித்து பேசின பேச்சுகளையும் அந்த இரண்டு கள்ளரும் கேட்டிருப்பார்கள். நீ யூதருக்கு ராஜாவானால், உன்னைத்தானே இரட்சித்துக்கொள் (வச.37) என்று சேவகர்கள் அவரை நிந்தித்தார்கள். அங்கிருந்த மக்களும் அதிபதிகளும் (மதத்தலைவர்கள்) அவரை நிந்தித்தார்கள். அவன் மற்றவர்களை இரட்சித்தான் (வச.35). அது ஒரு நற்செய்தியாகும். இரு கள்ளர்களில் ஒருவன் தனக்குள்ளாக அவன் மற்றவர்களை இரட்சித்திருந்தால், என்னையும் இரட்சிக்க இயலும் என்று தனக்குள்ளாக கூறியிருப்பான் என்று நான் எண்ணுகிறேன். பிலாத்து, கலங்கிப்போயிருந்த அவருடைய மனசாட்சியை சாந்தப்படுத்துவதற்காக, அவருடைய சிரசிற்கு மேலாக அந்த வார்த்தைகளை எழுதி வைத்தான். ஆனால், பிலாத்துவினால் கேலியாக எழுதப்பட்ட வார்த்தைகள் மூலமாக தேவன் காணாமற்போன ஆத்துமா ஒன்றை இரட்சித்தார். தேவனுடைய கிருபை நிறைந்த அநாதி தீர்மானம் எவ்வாறு செயற்பட்டது என்பதைப் பார்க்கும்பொழுது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
அந்த இருகள்ளர்களும் ஆண்டவராகிய இயேசுவோடு தொடர்புகொள்ள முடிந்தது. அதற்காக அவர்கள் அதிகதூரம் செல்ல தேவையில்லாதிருந்தது. அவர்கள் இருவருக்கும் நடுவாக அவர் தொங்கினார். அந்த இருகள்ளர்களும் ஒன்றாக சிலுவையில் அறையப்பட்டிருந்ததால், அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர் சம்பாஷித்துக் கொண்டார்கள். அவர்கள் அவ்வாறு பேசும்பொழுது, நிச்சயமாக இயேசுவைப் பார்க்க வேண்டியதிருந்திருக்கும். அவர்கள் அவரைப் பார்த்தபொழுது, அவர் வேறுபட்டு இருந்ததைக் கண்டார்கள். அவர்கள் இருவரும் அவரிடம் பேசிக்கொள்ள இயன்றது.
தேவன், இன்றும் முன்குறித்த தீர்மானங்களோடு செயல்பட்டு, மக்கள் இரட்சிக்கப்பட வழி வகுக்கிறார். ஒருவரும் தற்செயலாக இரட்சிக்கப்படவில்லை. தேவன்தான் கிரியை செய்கிறார். தேவன் சூழ்நிலைகளை ஏற்படுத்தி அதன்மூலம் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்கப்பட ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருகிறார்.
ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று தேவன் விரும்புகிறார் (2பேது.3:9). எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார் (1தீமோ. 2: 3,4). இக்காலத்தில் நடக்கும் மிக சோகமான சம்பவம் என்னவென்றால், இரட்சகரை நம்புவதற்கான சந்தர்ப்பங்களை மக்கள் தவற விட்டுவிடுகின்றனர். ஆச்சரியப்படத்தக்க சூழ்நிலையின் மத்தியில் இயேசு இருக்கிறார்.
ஆச்சரியமான வேண்டுதல்:
ஓர் ஆச்சரியமான வேண்டுகோளை இங்கு கவனியுங்கள். ஆண்டவராகிய இயேசுவோடு சிலுவையில் தொங்கின இரண்டு கள்ளர்களில் ஒருவன் செய்த ஜெபம் உண்மையிலேயே வேதாகமத்தில் உள்ள ஜெபங்களில் ஆச்சரியமான ஒரு ஜெபமாகும். அவன் தான் தேவனுக்குப் பயப்படுகிறவன் என்பதை ஏற்றுக்கொண்டான். அவன் கடவுளைப் புரிந்துகொள்ளாதவன் அல்ல. நாஸ்திகனுமல்ல, மத நம்பிக்கை அற்றவனுமல்ல. அவன் தனது குற்றத்தை ஒத்துக்கொண்டான். நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம் (லூக். 23:41) என்று கூறினான். அவனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை சரியானதே என்பதை ஒத்துக்கொண்டான். இயேசு கிறிஸ்து குற்றமற்றவர் என்றும், மரணத்திற்குப் பின் ஒரேயொரு வாழ்க்கைதான் உண்டு என்பதையும் நம்பினான். இது சிலுவையில் தொங்கின ஒரு கள்ளனின் ஆச்சரியமான அறிக்கையாகும்.
அன்பானவர்களே, மரணத்திற்குப்பின் ஓர் வாழ்க்கை உண்டு என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? அதற்கு நீங்கள் ஆயத்தமாக உள்ளீர்களா? இப்பொழுது நீங்கள் மரித்தீர்கள் என்றால் எங்கே போவீர்கள்? இயேசுகிறிஸ்து பரதீசின் தேவன் என்பதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் குற்றஞ் செய்த பாவி என்றும், நீங்கள் நியாயந்தீர்க்கப்பட வேண்டியவர்கள் என்றும் நம்புகிறீர்களா? கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவருக்கு நீங்கள் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்கள் என்றும் நம்புகிறீர்களா?
அந்த கள்ளன் ஆண்டவராகிய இயேசுவிடம் பேசின தைரியத்தைக் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். அங்கிருந்தவர்களில் ஒருவர்கூட தாங்கள் இரட்சிக்கப்படவேண்டும் என்று இயேசுவிடம் கேட்கவில்லை. ஆசாரியர்கள் மதத்தலைவர்களும் கிறிஸ்துவை நிந்தித்தார்கள். ஆயினும் அந்தக் கள்ளன் இயேசுவை தைரியத்துடன் விசுவாசித்தான். கூடியிருந்த மக்கள்கூட்டம் இயேசுவை எதிர்த்தது. சேவகரும் அவரைக் கேலி செய்து நிந்தித்தார்கள், நகைத்தார்கள். அந்த கள்ளனின் சிநேகிதனும் இயேசுவை நிந்தித்தான். இன்றும்கூட சிலர் பிற மக்களுக்கு பயப்படுவதால், ஆண்டவராகிய இயேசுவை நம்புவதற்கு விருப்பமில்லாமல் இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு மனிதன் தைரியமாக இயேசுவை நம்புகிறான். அதிகாரிகள், மதத்தலைவர்கள், ஆசாரியர்கள், சேவகர்கள் அவனது நெருக்கமான நண்பர்கள் யாரையும் குறித்து கவலைப்படாமல் ஆண்டவராகிய இயேசுவை நம்பினான்.
அந்த மனிதன் உண்மையில் இயேசுவைப் பற்றி என்ன அறிந்துகொண்டான் என்பதைக் குறித்து சற்றுச் சிந்திப்போம். இயேசு என்றால் இரட்சகர் என்று அர்த்தம். இயேசுவிற்கு ஒரு ராஜ்யம் உண்டு. இயேசு குற்றமற்றவர், இயேசு நாசரேத்திலிருந்து வந்தவர். அவர் மற்றவர்களை இரட்சித்தார்.
நான் இரட்சிக்கப்பட விரும்புகிறேன், ஆனால் அதுபற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்புகிறேன் என்று மக்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிநேகிதனே, இந்தக் கள்ளன் அதிகமாக ஏதும் அறிந்துகொள்ளவில்லை. ஆனால் அவன் அறிந்து கொண்ட காரியம் அவனை இரட்சகரண்டை நடத்தினது. இயேசுவை தள்ளப்பட்டவராக, குற்றஞ் சாட்டப்பட்டவராக, பெலவீனராக, மரித்துக் கொண்டிருப்பவராக அக்கள்ளன் கண்டான். அந்த நிலையில் இருக்கும் ஒருவரை நீங்கள் நம்புவீர்களா? கிறிஸ்து ஒரு அற்புதம் செய்ததினிமித்தம் அவரை நம்புவது இலேசான காரியம். ஆனால், இயேசு இங்கு ஒரு அற்புதமும் செய்யவில்லை. இங்கு இயேசு கைவிடப்பட்டவராக, நகைப்புக்குள்ளானவராக இருந்தார். ஆயினும் அந்தக் கள்ளன் அவரை விசுவாசித்தான்.
உயிர்த்தெழுந்து மகிமையடைந்து, பரலோகத்தில், சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இரட்சகரை நம்புவதற்கு உங்களை அழைக்கிறோம். அப்படிப்பட்ட இரட்சகரை நம்புவதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. அந்தக் கள்ளனுக்கு அதிகமாக அறிவு இல்லை. அவன் இயேசுவைப் பார்த்தபொழுது அழகான காட்சி எதுவும் காணவில்லை. ஆயினும், அவன் இயேசுவை நம்பி இரட்சிப்பை அடைந்தான். தேவனுடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் இந்த மனிதனுடைய விசுவாசம் மிகவும் உயர்ந்ததாக, உன்னதமானதாகக் காணப்படுகிறது.
நமக்கு ஏற்கனவே நிறைவேற்றி முடிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை உடைய வேதாகமம் உண்டு. மக்களுக்கு சாட்சி பகர பரிசுத்த ஆவியானவர் உண்டு. இந்த இருள் சூழ்ந்த உலகில் சாட்சியாக வாழ திருச்சபைகள் உண்டு. ஆயினும் இன்னமும் அநேக மக்கள் இரட்சகரை விசுவாசிக்கிறதில்லை. இந்தக் கள்ளனின் இரட்சிப்பு நிச்சயமாக நமது இதயத்தில் இன்று பேசுவதாக உள்ளது.
ஆச்சரியமான சூழ்நிலை! ஆச்சரியமான வேண்டுதல்!!
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan