பேராசிரியர் S.C.எடிசன்
(மார்ச்-ஏப்ரல் 2021)
பின்பு இயேசு எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் (லூக்கா 9:23).
இந்த நாட்களில் நாம் அதிகமாக கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூருகிறோம். அவர் சிலுவையில் பட்ட வேதனையையும் அவர் சிலுவையில் சொன்ன வசனங்களையும் இந்நாட்களில் தியானிக்கிறோம். அவரது இரத்தம் நமக்கு எவ்வளவு பெரிய கிருபை என்பதையும், சிலுவையில் அவர் சம்பாதித்த இரட்சிப்பையும் நினைவுகூருகிறோம். உங்க ளிடத்தில் ஒரு கேள்வியை வைக்கிறேன். இந்த சிலுவை என்பது என்ன? லூக்கா 9:23இல் இயேசு இவ்வாறு கூறினார்: பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
நீங்கள் சுமக்கவேண்டிய சிலுவை என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிலுவை என்றால் பாடுகள், கஷ்டங்கள், உபத்திரவங்கள் என்றெல்லாம் அநேகர் சொல்வதுண்டு. ஆனால், அப்படி இல்லை. பாடுகள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஒரு அம்சமாகும். கிறிஸ்துவுக்காக நாம் படும் பாடுகள் தான் நம்மைப் பரலோகத்திற்கு கொண்டு செல்லும் படிகளாகும். நமது மாம்சத்திற்காக நாம் படுகிற பாடுகள், அது ஒன்றுக்கும் உதவாது. அது நம்முடைய மாம்சத்தை ஒடுக்குவதற்கும், கஷ்டப்படுவதற்கும்தானே ஒழிய ஆவியிலே நம்மை உயர்த்தாது, நம்மை பரலோகத்திற்குக் கொண்டு செல்லாது. அந்த கஷ்டங்கள் சிலுவையல்ல; அது கிறிஸ்தவ வாழ்க்கையின் ஓர் அம்சமாகும்.
நாம் சுமக்கவேண்டிய சிலுவை என்னவென்றால், அதை நாம் கிறிஸ்துவிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். அவர் சிலுவையில் அறையப்படும் முன்னதாக சீஷர்களோடு இராப்போஜனத்தை முடித்த பின்பு, அவர் கெத்செமனேயிலே தன்னை சிலுவைக்கு ஆயத்தம் பண்ணினதை நாம் நினைக்கும்பொழுதுதான் சிலுவையென்றால் என்னவென்பதை நான் கண்டுகொள்ள முடியும். கெத்செமனேக்கு போவோம் வாருங்கள். அங்கே எல்லா சீஷர்களையும் ஓர் இடத்தில் விட்டுவிட்டு, பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டு போய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னுடனேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார் (மத்.26:37-39).
தன் சித்தம் வேறொன்றாய் இருக்க. பிதாவின் சித்தம் இவரை சிலுவையில் அறைவதாய் இருக்கிறது. இரண்டு சித்தங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருந்தபடியினால், இயேசுவானவர் மூன்று தரம் அதே வார்த்தைகளைச் சொல்லி ஜெபித்தார். குமாரன் கேட்கும் முன்பதாகவே எல்லாவற்றையும் அருளிச்செய்த பிதாவானவர் இந்த ஒரு இடத்தில் மட்டும் தன்னுடைய சித்தம்தான் நடக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, குமாரனின் சித்தத்தை அவர் கொடுக்கவே இல்லை. அதை அனுமதிக்கவே இல்லை. இயேசுவும் பிதாவின் சித்தத்தைத் தெளிவாக தெரிந்தபடியால் தன்னை சிலுவைக்கு ஒப்புக்கொடுத்தார். ஆகவே நாம் சுமக்கவேண்டிய சிலுவை என்னவென்றால், நம் இஷ்டம், நம் ஆசைகள், நம்முடைய சுயசித்தத்தை விட்டுவிட்டு தேவனுடைய சித்தத்தையே ஒவ்வொரு நாளும் செய்வதுதான் நம்முடைய சிலுவையாகும்.
தாவீது ஒரு அருமையான ஜெபம் செய்கிறார். கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன் (சங்.143:9). தினமும் காலையில் ஆண்டவரே, நான் உலகத்திற்குள் போகிறேன் சாத்தான் தவறான வழிகளில் என்னை திசை திருப்ப முயற்சிக்கிறான். ஆனால், நானோ உம்மை புகலிடமாக கொள்ளுகிறேன் என்று அவருக்கு உங்களை ஒப்புக் கொடுங்கள். அடுத்ததாக, உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும் (வச. 10). என் பிள்ளைகளுக்கோ, என் மேலதிகாரிக்கோ, எனது மனைவிக்கோ, கணவருக்கோ பிரியமா னதை அல்ல, உமக்குப் பிரியமானதை நான் இந்த நாளிலே செய்யும்படி எனக்குப் போதியும். நான் காரியம் அறியாத மூடன்; நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியில் நடத்துவாராக என்று சொல்லி ஜெபியுங்கள்.
அப்பொழுது நீங்கள் இடறமாட்டீர்கள், பிசாசிற்கு இடங்கொடுக்கமாட்டீர்கள், தேவனை மகிமைப்படுத்துவீர்கள். எனக்குள்ளே இருந்து அந்த பரிசுத்த ஆசை வரவில்லை ஆண்டவரே, நீர் எனக்கு போதித்து உம்முடைய நல்ல பரிசுத்த ஆவியானவர் என்னை செம்மையான வழியிலே நடத்துவாராக என்று நம்மை ஒப்புவிப்போம். இந்த லெந்து காலங்களிலே நாம் சுமக்கவேண்டிய சிலுவை இதுதான். தேவசித்தத்திற்கு நம்மை ஒப்புவித்து நம்முடைய சுயசித்தத்தை அழிக்கவேண்டும்.
நம்மில் அநேகர் திருமணங்கள் நிச்சயிக்கும் பொழுது இந்த தேவசித்தத்தை அணுகுகிறோம். இந்த நேரங்களில் நமக்கு ஒரு ஞானம் வரும். மனுஷன் முகத்தைப் பார்க்கிறான். தேவனோ இருதயத்தை பார்க்கிறார். இன்றைக்கு நல்லதொரு பெரிய வேலையில் இருக்கிறார். நாளைக்கு வேலை இருக்குமோ இருக்காதோ தெரியாது. ஆனால் தேவனுக்கு எல்லாமே தெரியும். ஆகையால், அவரிடத்தில் இந்த காரியத்தை ஒப்புக்கொடுப்போம் என்று நாம் சொல்லுகிறோம். பிள்ளைகளை நேசிக்கிறதினால், அவர்களுக்கு ஒரு நல்ல வாழ்வு வேண்டுமென்று நாம் தேவனிடத்திலே அவருடையச் சித்தத்தை கேட்கிறோம்.
ஒரு வாலிபனும் தன்னுடைய திருமணத்திற்காக, ஆண்டவரிடத்திலே அவன் ஒரு ஜெபம் பண்ணினான். ஆண்டவரே, மேரி, ரோஸி, குளோரி இந்த மூன்று பேர்கள் இருக்கிறார்கள். மூன்று பேருமே எனக்கு தகுதியானவர்கள். இவர்களில் நான் யாரை திருமணம் செய்வது என்று எனக்கு உம்முடைய சித்தத்தை வெளிப்படுத்தும். ஆண்டவரே, உம்முடைய சித்தம் அது மேரியாக இருக்கட்டும் என்று ஜெபித்தானாம். என்னவொரு வேடிக்கையான ஜெபம் பார்த்தீர்களா! இவனுடைய சித்தத்தை தேவன் செய்ய வேண்டுமென்று அந்த வாலிபன் கேட்கிறான். இது பிசாசின் வேலை, தேவனுடைய சித்தத்திற்கு நான் என்னை ஒப்புக் கொடுக்கிறேன். இந்த மூன்று பேரில் யாரானாலும் நீர் கொடுப்பது எனக்கு உத்தமம் என்று ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், தனது ஆசையை நிறைவேற்றத் தேவனிடத்திலே அவன் இந்த காரியத்தைக் கேட்கிறான். இது தவறானது.
திருப்பத்தூரிலே ஒரு பெரிய ஆஸ்பத்திரியும் ஒரு பெரிய குருக்குலமும் ஆரம்பிக்கப்பட்டு, அநேகம் பேருக்கு அங்கே சுவிசேஷம் சொல்லப்பட்டது. இந்தியாவை சேர்ந்த பெரிய அண்ணன் ஜேசுதாசன், இங்கிலாந்தை சேர்ந்த சின்ன அண்ணன் பேட்டன் ஆகிய இருவரும் இங்கிலாந்தில் மருத்துவம் படிக்கையில் கூடி ஜெபம் பண்ணுவார்கள். அவர்கள் படிப்பு முடிந்தவுடன், நான் இந்தியாவிற்கு திரும்பி ஊழியஞ் செய்ய விரும்புகிறேன் என்று ஜேசுதாசன் சொன்னார். அப்போது பேட்டன் தானும் இந்தியா வருவதற்கு விருப்பம் தெரிவித்தார். பின்பு தனது சொத்துகளையெல்லாம் விற்று, ஜேசுதாசனுடன் இந்தியாவுக்கு வந்தார். அவர்கள் ஊழியம் செய்வதுதான் தேவசித்தம் என்பதை அறிந்தனர். ஆனால், எந்த இடத்தில் ஊழியஞ் செய்யவேண்டுமென்பது அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் உண்மையாகவே தமது சித்தத்தை அறிந்துகொள்ள விரும்புகிறார்களா என் பதை அறிய தேவன் அவர்களைச் சோதித்தார்.
அவர்கள் திப்பெத்தில் சாது சுந்தர்சிங் மாதிரி ஊழியஞ் செய்யலாம் என்று முயற்சித்தார்கள். ஆனால், முயற்சி தோல்வியானது. வட இந்தியாவில் எங்கேயாவது செய்யலாம் என்று பார்த்தார்கள் ஒரு இடமும் அமையவில்லை. கடைசியாக, இரண்டு பேரும் தீர்மானித்தது என்னவென்றால், இரயிலில் பிரயாணப்பட்டு டெல்லியிலிருந்து இந்தியா முழுவதும் சுற்றிவருவோம். எந்த இடத்தை தேவன் காட்டுகிறாரோ, அந்த இடத்தில் நாம் மருத்துவ ஊழியத்தை ஆரம்பிப்போம் என்று சொல்லி, உமக்கு சித்தமான இடத்தைக் காட்டும் என்று ஜெபித்து தங்களை ஒப்புக்கொடுத்தார்கள்.
வட இந்தியாவிலிருந்து கல்கத்தாவிற்கு வந்தனர். விசாகப்பட்டினம் வழியாக சென்னைக்கு வந்தார்கள். சென்னையிலிருந்து தெற்கே போகும் போது திருப்பத்தூர் அருகே இரயில் விபத்திற்குள்ளானது. விபத்திலே கை, கால்களை இழந்தவர்கள் எல்லாரும் மருத்துவ உதவிக்காக அலறினார்கள். உடனே ஜேசுதாசனும் பேட்டனும் ஒரு மருத்துவ முகாம் மாதிரி ஒரு இடத்தை ஆயத்தம் பண்ணி, அவர்களுக்கு சிகிச்சையை அளித்தார்கள். அப்பொழுது தேவன் அவர்களோடு பேசினார். இதுதான் நான் உங்களுக்கு வைத்த இடம்: இதிலே என் ஊழியத்தை ஆரம்பியுங்கள் என்று. அப்போதுதானே திருப்பத்தூரிலே அவர்கள் தங்கள் ஊழியத்தை ஆரம்பித்தார்கள்.
சகோதரனே, தேவனுடைய சித்தம் தாமதிக்கலாம். ஆனால் அதற்கு காத்திருப்பதுதான் சிலுவையைச் சுமப்பதாகும். இந்த காரியத்தை நீங்கள் அறிந்திருப்பீர்களென்றால் சிலுவை சுமப்பது என்னவென்று உங்களுக்கு தெரியும். என்னுடைய சித்தத்தை நான் ஒழிக்கவேண்டுமென்றால் என்னை முதலாவது வெறுக்கவேண்டும். என் எண்ணங்கள் எல்லாம் தவறு, அது பாவத்தால் கறைபட்டது என்கிற ஓர் உணர்வு வந்தால்தான் நான் என்னை வெறுக்க முடியும்.
அருமையானவர்களே, இதைத் தியானியுங்கள், உங்களுக்காக பரலோகத்தைவிட்டு மனிதனாய் பிறந்து பாவத்தை சுமக்க, அத்தனை அருவருப்புகளைச் சகிக்க அவர் தயங்கும்பொழுதும் பிதாவின் சித்தம் என்னவென்றுக் கேட்டு அதற்கு தன்னை ஒப்புக்கொடுத்தாரே. அவருடைய நாமத்தைச் சுமந்துகொண்டு, கிறிஸ்தவர்கள் என்று பேர் பெற்றிருக்கிற நீங்கள், இன்றைக்கு உங்களை ஒப்புக்கொடுப்பீர்களா? கிறிஸ்தவர்களுக்கு மட்டும் அல்ல; உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவருக்காகவும் இயேசுகிறிஸ்து சிலுவையில் இரத்தம் சிந்தி, இரத்தத்தின் வல்லமையை நம்புகிற ஒவ்வொருவனுக்கும் பாவத்திலிருந்து விடுதலையையும் ஜெயத்தையும் கொடுத்து அவர்களைப் பரலோகத்திற்கு அழைத்துச் செல்லுகிறார்.
அன்புக்குரியவர்களே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேவசித்தம் செய்வது அது தேவனைப் பிரியப்படுத்தும். உலகத்தில் மனுஷருக்குப் பிரயோஜனமாய் இருக்கும். உங்களுக்குள் ஆத்தும சந்தோஷம் உண்டாயிருக்கும். ஆனால் உங்களுடைய சுயசித்தத்தின்படி வாழ்வீர்களென்றால் உங்களுடைய வாழ்க்கையால் ஒருவருக்கும் பிரயோஜனம் கிடையாது. ஆகவே, நாம் இயேசு கெத்செமனேயிலே அவர் அடைந்த வேதனைகளைப்போல தினமும் அதிகம் ஜெபித்து பிதாவே, என் சித்தத்தை விட்டுவிட்டு, உமது சித்தத்தைச் செய்கிறேன்; எனக்கு பெலன் தாரும் என்று நாம் ஜெபிக்கும் பொழுது தேவன் பெரிய காரியங்களைச் செய்வார்.
உங்களுக்குத் தெரியுமா?
தேவனுடைய வார்த்தையை நீங்கள் எந்தளவுக்கு நேசிக்கிறீர்கள் என்பதைக்கொண்டு தேவனை நீங்கள் எந்த அளவிற்கு நேசிக்கிறீர்கள் என்பதை அளவிடலாம்!