சகோதரி சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2021)
இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் (ஆதி.15:21).
நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசுவா 1:3).
வாழ்க்கை ஒரு பயணம் என்று பலர் சொல்லுவதுண்டு. ஆனால், ஒரு பயணத்திற்கு முன் ஆயத்தங்கள் பல இருக்கின்றன. முதலில், என் பயணத்தின் நோக்கம், இலக்கு என்ன என்பது முக்கியம். எங்கே போகவேண்டும் என்று ஓர் இலக்கு இல்லாமல் எப்படிப் பயணம் புறப்படுவது? பேருந்திலே ஏறிவிட்டு, இந்தப் பேருந்து எங்கே போகிறதோ அங்கே போகிறேன் என்று நடத்துனரிடம் சொல்லமுடியுமா? அடுத்தது, நமது இலக்கை அடைய பலவித மார்க்கங்கள் இருக்கலாம். ஆக, நான் எந்தப் பாதையில் செல்லப்போகிறேன் என்பதைத் தெரிந்தெடுக்கும் சுதந்திரமும் எனக்குண்டு. அடுத்தது, எதை எடுத்துப்போக வேண்டும், எதை விட்டுப்போகவேண்டும், எதை எடுத்துப்போகக் கூடாது என்பவை மிக முக்கியம். நான் தனியாகவா, அல்லது யாருடன் போகப் போகிறேன் என்பதுவும் மிக முக்கியம். ஏனெனில் கூடவருகிறவர்கள் நமது பயணத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது. மேலும், வழியில் பல தடைகள் வரலாம், வராமலும் போகலாம்; அவற்றுக்கெல்லாம் முகங்கொடுக்கவும் தயாராக வேண்டும். ஆக, நான் யாரை நம்பி இந்தப் பயணத்தை ஆரம்பிக்கிறேன் என்பது மிக மிக முக்கியம்.
ஒரு தடவை என் உறவினர் ஒருவர் தங்கள் குடும்பத்துடன் ஒரு பயணம் வரும்படி கேட்டார். எங்கே என்பது என் கேள்வி. அவரோ, என்னில் நம்பிக்கை இருந்தால் அவசிய தேவைகளை மாத்திரம் எடுத்துக்கொண்டு வா என்றார். என்ன ஆச்சரியம்! நான் ஒருபோதும் சென்றிராத இலங்கை நாட்டின் அழகு கூத்தாடும் மலைநாடாகிய நுவரேலியாவில் எங்களது பயணம் சென்றடைந்தது. என் மகிழ்ச்சியைச் சொல்லிமுடியாது.
பயணத்திற்கு ஒரு அழைப்பும், ஆபிராம் எடுத்த முதற்படியும்:
கல்தேயர் நாட்டிலே ஊர் என்ற ஒரு பட்டணம்; அங்கே இஷ்ட தெய்வங்களை வணங்கிக் கொண்டு செழிப்பாக வாழ்ந்திருந்த ஒரு மனுஷன்தான் ஆபிராம். அவருடைய மனைவி சாராய். அவருக்கு எல்லாவித செழிப்பும் இருந்தது. சாதாரணமாக ஓடிக்கொண்டிருந்த அவருடைய வாழ்வில் அந்த “ஒருநாள்” வந்தது. அன்று அவர் ஒரு சத்தத்தைக் கேட்கிறார். “புறப்படு” – இதுதான் அந்தச் சத்தம். யார் பேசுகிறார், எதற்காக என்னைப் புறப்படச் சொல்லுகிறார் எதுவும் அவருக்கு புலப்பட்டிருக்க நியாயமே இல்லை. இந்த அழைப்பைக் குறித்து, …ஆபிரகாம் …மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார் என்று ஸ்தேவான் அறிக்கை செய்வதை (அப்.7:2,3) வாசிக்கிறோம். அதாவது, ஆபிராமைத் தேவன் கண்டார்; “வா” என்று அழைத்தார். அழைத்த வரை ஆபிராமுக்குத் தெரியாது; எங்கே போவது என்றும் தெரியாது. ஆனால்,”வா” என்றால் “என்னோடே வா” என்பதுதானே அர்த்தம். ஆனால், நடந்தது என்ன? கர்த்தர் அழைத்தது ஆபிராமை; ஆனால், பயணத்தை ஆரம்பித்தது அவரது தகப்பன் தேராகு. மாத்திரமல்ல, தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், தன் பேரனாகிய லோத்துவையும். ஆபிராமின் மனைவி சாராயையும் அழைத்துக்கொண்டு ஊர் பட்டணத்தை விட்டு, கானானை நோக்கிப் புறப்பட்டு, ஆரான் மட்டும் வந்து அங்கே இருந்துவிட்டார்கள் (ஆதி.11:31).
கானான் நோக்கி இவர்கள் ஏன் புறப்பட்டார்கள்? பின்னர் வழியிலே ஆரானிலே தங்கியது என்ன? ஊர் பட்டணத்திலிருந்து கானான் போகும் பாதை, ஆரான் பட்டணம் வரைக்கும் மிக இலகுவானதும் செழிப்பானதுமான பாதை என்று சொல்லப்படுகிறது. அதற்கு அப்புறம் வனாந்தரமும் கடினமுமான பாதையாகும். ஆரானிலே வாழ்க்கை இலகுவாக இருந்ததால் தேராகு தங்கிவிட்டாரா அல்லது வேறு காரணமா நாம் அறியோம். ஆனால் தேராகு அங்கேயே தங்கிவிட்டார். அவர் அங்கே வாழ்ந்து மரிக்கும்போது அவருக்கு வயது 205. தேராகுக்கு 70 வயதானபோதுதான் ஆபிராம் பிறந்தார் (ஆதி.11:26). அப்படியானால், ஆபிராமுக்கு வயது 75 ஆகும்போது, தேராகுக்கு வயது 145 ஆகியிருக்கும். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்படும்போது அவர் வயது 75, தோராகின் வயது 145. ஆனால் தேராகு ஆரானிலே மரிக்கும்போது வயது 205. அப்படியானால் ஆபிராம் தகப்பனைவிட்டுப் புறப்பட்ட பின்னர் ஏறத் தாழ 60 வருடங்கள் தேராகு ஆரானிலேயே வாழ்ந்திருந்திருக்கிறார். ஆக, ஆபிராம் தன் தகப்பனை விட்டுப் புறப்பட்டார் என்று விளங்குகிறது.
அழைப்பில் தொடர்ந்த சில அவசியமற்றவைகள்:
ஆரானிலே சில வருடங்கள் தங்கிவிட்டதற்காக அழைத்த தேவன் ஆபிராமை அப்படியே விட்டு விடவில்லை. தேவனுடைய அநாதி திட்டம் ஆபிராமில் நிறைவேறவேண்டுமே! இப்போ கர்த்தர் சில நிபந்தனைகளுடன் தெளிவாகவே பேசுகிறார்: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப்புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ (ஆதி.12:1).
இங்கே இரண்டு காரியங்கள் மாற்றமடைந்து விட்டன. ஒன்று, தகப்பன் வீடு, அதை ஆபிராம் முற்றிலும் விடவேண்டும்; அடுத்தது, எங்கே போவது என்று கூறாமல், கர்த்தர் காண்பிக்கும் இடம்மட்டும் ஆபிராம் போகவேண்டும். ஆனால், கர்த்தர் ஆபிராமை வெறுமனே அழைக்கவில்லை. பெரிய வாக்குக் கொடுக்கிறார். ஒன்று, உன்னைப் பெரிய ஜாதியாக்கி, ஆசீர்வதித்து, பேரைப் பெருமைப்படுத்துவேன்; அடுத்தது, பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார் கர்த்தர். ஒரு சந்ததிப் பெருக்கம், ஒரு தேசம் ஆகிய எல்லாம் வாக்களிக்கப்பட்டபோது, ஆபிராமுக்கு ஒரு பிள்ளையும் இல்லை என்பது நாம் அறிந்த விஷயம்.
அப்படியே மறுகேள்வியின்றி ஆபிராம் புறப்பட்டார். ஆனால் தகப்பன் வீட்டானாகிய லோத்துவையும் கூட்டிக்கொண்டுதான் புறப்பட்டான். முழுமையான விசுவாசக் கீழ்ப்படிதல் இன்னமும் ஆபிராமில் முற்றாக வெளிப்படவில்லை. இப்போது ஆபிராமுக்கு வயது 75. ஆபிராம் விசுவாசப் பயணத்தில் சென்றாலும், தேவன் குறிப்படாத லோத்துவோடு கூடமாத்திரமல்ல, தங்கள் சம்பத்தெல்லாவற்றுடனும், ஆரானிலே தங்கியிருந்த போது சேர்த்துக்கொண்ட ஜனங்களோடுங்கூடவே ஆபிராம் புறப்பட்டார். கர்த்தர் இட்ட நிபந்தனைகளில் சில தடுமாறிவிட்டது அல்லவா!
என்றாலும், கானானில் கானானியர் குடியிருந்த சீகேம் என்ற இடத்தைச் சேர்ந்தபோது கர்த்தர் தரிசனமாகி, இந்தத் தேசத்தை உனக்குக் கொடுப்பேன் என்கிறார். ஆபிராம் ஒரு பலிபீடத்தைக் கட்டினான், அதாவது, கர்த்தரைத் தொழுதுகொண்டான். பின்னர் பெத்தேலுக்கு அருகே போய் அங்கே தன் கூடாரத்தைப் போட்டு, அங்கேயும் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். இவ்வளவும் சரி. இப்போ ஆபிராமுக்குத் தேவன் குறிப்பிட்ட இடம் எது என்று தெரிந்துவிட்டது. ஆனால் ஆபிராம் செய்தது என்ன? தொடர்ந்து பிரயாணம் செய்ய ஆரம்பித்தார். அதில் தவறு இல்லை. கானான் என்ற பெரிய தேசத்துள் அவர் சுற்றித் திரிவதில் தவறில்லை. ஆனால், கர்த்தருடைய அனுமதியுடன் சென்றாரா என்பதே கேள்வி. ஏனென்றால் சென்ற இடமெல்லாம் அவருக்கு விசுவாசப் பரீட்சைகள் காத்திருந்தன. ஆனால், இந்தப் பரீட்சைகள் அவருக்கு அவசியமாகவே இருந்தது என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார் என்பதை இன்று நாம் கற்றிருக்கிறோம்.
கர்த்தர் ஒருபோதும் வாக்கில் மாறவே மாட்டார்; ஆனால், தமது வாக்கு நிறைவேறுதலுக்கு நாம் சரியாகும்வரைக்கும் கொடுத்த வாக்கை நிறைவேற்றவும் மாட்டார். அந்தக் கிருபையின் தகுதியைப் பெற்றுக்கொள்வதற்கு நிச்சயம் நமக்கு சோதனைகள் அவசியம். ஒன்று, நாம் தேவனையே சார்ந்துநின்று அந்தத் திட்டத்துக்கு ஆயத்தமாக வேண்டும். அடுத்தது, தேவதிட்டம் நம்மில் நிறை வேறவேண்டுமானால் நமது திட்டங்களும் முயற்சிகளும் அழிக்கப்படவேண்டும். அப்படியானால் அதற்கு அக்கினி சோதனை அவசியந்தானே! இதைத்தான் பேதுரு, அழிந்து போகின்ற பொன் கூட அக்கினியால் சோதிக்கப்படுமானால், அதிலும் விலையேறப்பெற்ற நமது விசுவாசம் சோதிக்கப் படவேண்டிய அவசியத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் (1பேது.1:7).
விழுந்ததும், வெற்றி பெற்றதுமான சோதனைகள்:
இன்னுமொரு விஷயம். தேவனுக்கு ஆரம்பமும் தெரியும், முடிவும் தெரியும். நாம் என்ன செய்வோம் என்பதுவும் அவருக்குத் தெரியும். என்றாலும், நாம் தமது சித்தத்துக்கும் திட்டத்துக்கும் உட்படவேண்டும் என்ற அவருடைய அன்பின் இருதயம் நம்மைத் தமது திட்டத்துக்குத் தகுதிப் படுத்துகின்ற செயற்பாட்டில் திட்டவட்டமாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால்தான் ஆதியாகமம் 12 முதல் 16 வரையிலான பகுதி முழுவதும் தேவன் தமது வாக்குக்கும் உடன்படிக்கைக்கும் தகுதியாகும்படி ஆபிராமை நடத்திய சங்கதிகளைக் பரிசுத்த ஆவியானவர் நமக்காகவே தெளிவாக எழுதி வைத்திருக்கிறார்.
கிருபையாக ஒரு பெரிய அழைப்பைக் கொடுத்த கர்த்தருக்குப் பஞ்சத்தில் போஷிக்கத் தெரியாதா? ஆபிராம் காலத்தில் நேரிட்ட பஞ்சம் நிச்சயம் அவருக்காகவே நேரிட்ட விசுவாசப் பரீட்சைதான் என்றால் மிகையாகாது. பஞ்சத்திற்கும் பசிக்கும் பயந்த ஆபிராம் பாதைமாறி எகிப்துக்குச் சென்று, பொய் பேசி, தலைகுனிய நேரிட்டது. கர்த்தரோ எகிப்துக்குப் போகவேண்டாம் என்ற தடுக்கவில்லை; ஆனால் எல்லாம் நடந்துமுடிந்த பின்னர் ஆபிராம் எங்கிருந்து வழிமாறினாரோ அந்தச் சந்தியில் கொண்டுவந்து விட்டு. நேராகப் போ என்று அனுப்புகிற கர்த்தருடைய அன்பை ஆதி.13:1-4 வரையில் பார்க்கிறோம். தன்னை அழைத்தவர் தன்னைப் போஷிப்பார் என்பதை ஆபிராம் நினைத்துப்பார்க்கத் தவறிவிட்டார்.
பின்னர் லோத்துவைவிட்டுப் பிரியத்தக்கதாக ஒரு சம்பவம். இதுவரையிலும் ஒன்றாயிருந்த வேலைக்காரர், சொத்துக்கள் பெருகியதால் வாக்குவாதம் பண்ண, லோத்து தன் தெரிவின்படி சோதோமை நோக்கிச்செல்ல, ஆபிராம் கானானிலே குடியமர்ந்தார். இப்போ தகப்பன் வீடு முற்றாகப் பிரிந்தது. இன்னமும் ஆபிராம் பெலப்படவில்லை என்பது தேவனுக்குத் தெரியும்.
வேதாகமத்தில் நாம் காணும் முதல் யுத்தம் வருகிறது (ஆதி.14). சிறைப்பிடிக்கப்பட்ட லோத்து வையும் அவனுடைய சகலத்தையும் மீட்டுவருவதற்காக யுத்தத்துக்குப் புறப்பட்ட ஆபிராம், வெற்றி பெற்றுத் திரும்பியபோது, அவர் பெருமைப்படக் கூடிய ஒரு சோதனை காத்திருந்தது. உன்னத தேவனின் ஆசாரியனும், சாலேமின் ராஜாவுமாகிய மெல்கிசெதேக்கு, களைத்து வந்த ஆபிராமுக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து அவனை ஆசீர்வதித்தார். இது கிடைத்ததற்கரிய ஆசீர்வாதம். இதைத் தொடர்ந்து வந்த சோதோ மின் ராஜா, சோதோமியரைமட்டும் தந்துவிட்டு யுத்தத்தில் திருப்பிக்கொண்டுவந்த எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்னான். சாலேமின் ராஜாவினால் ஆசீர்வதிக்கப்பட்ட ஆபிராம் பெருமைகொண்டு இந்தப் பொருட்களையெல்லாம் எடுத்திருந்திருக்கலாம். அது அவர் யுத்தத்தில் சம்பாதித்த அவருடைய உரிமை. ஆனால், ஆபிராம் முற்றிலுமாக மறுத்துவிட்டார். உலக ஆஸ்திகள்மேல் அவருக்கு வந்த சோதனையிலும், பெருமை என்ற அரக்கத்தனமான சோதனையிலும் ஆபிராம் வெற்றி பெற்றார். முதலில் விழுந்த அவர் இங்கே எழுந்து நிற்கிறார். இந்தப் படியையும் தாண்டியாயிற்று.
பயணத்தில் அவசரப்பட்ட ஆபிராம்:
இதன்பின்னர் கர்த்தர் ஆபிராமை அழைத்து, பயப்படாதே, நான் உன் பெலன் என்றார். ஆனால், ஆபிராமோ இன்னமும் பிள்ளை இல்லை என்று சொல்லி தன் ஊழியன் எலியேசரை தன் வாரிசாக்க முனைகிறார். அதையும் கர்த்தர் பொறுத்துக்கொண்டு, வானத்து நட்சத்திரங்களைக் காட்டி தமது வாக்குறுதியை இரண்டாவது தடவையாகவும் ஆபிராமுக்கு உறுதிப்படுத்தி, இரத்த உடன்படிக்கையைச் செய்து, ஆபிராமின் சந்ததிக்கு என்ன நடக்கும் என்றெல்லாம் விளக்கிவிட்டு, இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்று முடிந்துவிட்ட ஒரு சங்கதியாகக் கர்த்தர் அறிவிக்கிறார். என்றாலும் ஆபிராமின் சோதனைகள் இன்னமும் முடியவில்லை. கர்த்தர் அவரைப் பூரணமாகவே அறிந்திருந்தார்.
இப்போ ஆபிராமுக்கு ஏறத்தாழ 86 வயதாகிவிட்டது. தேசம் இருக்கிறது, ஆனால் ஒரு பிள்ளையும் இல்லை. இங்கே ஒரு அன்பின் வடிவில் மனைவி சாராய்மூலமாக வருகிறது ஆபிராமுக்கு அடுத்த சோதனை. இதுவரை பிள்ளை இல்லை என்று அலட்டிக்கொள்ளாத ஆபிராம், வாக்குக் கிடைத்ததும் அது நிறைவேறப் பிள்ளை இல்லை என்று அங்கலாய்க்கிறார். இதுவரைக்கும் தன் மனைவிக்கு உத்தமமாய் வாழ்ந்த ஆபிராம், இப்போது தன்னால் முடியும் என்பதுபோல தன் சொந்தப் பெலத்தில் சாருகிறார். தனது மனைவியே உறுதுணையாக இருந்ததால் இது சரி என்ற எண்ணம்கூட அவருக்குள் தோன்றியிருக்கும். இல்லையானால் எகிப்திய அடிமைப் பெண்ணிடம் சேர்ந்து, கர்த்தருடைய சித்தமில்லாமல், இஸ்மவேல் என்ற ஒருவனை உலகத்திற்குள் கொண்டுவந்திருப்பாரா ஆபிராம்? அவன் கர்ப்பத்தில் உருவானது முதல் இதுவரை அமைதியாயிருந்த குடும்பம் ஆட்டம் காண ஆரம்பித்தது. இஸ்மவேல் பிறந்தபோது ஆபிராமுக்கு 86 வயது.
சுயபெலத்தில் சார்ந்திருக்கும் வரைக்கும் தேவ பெலம் வெளிப்படாது:
இதன்பின்னர் 13 ஆண்டுகளாகக் கர்த்தர் ஆபிராமுடன் பேசவேயில்லை என்பது கவனிக்கப் படவேண்டிய விஷயம். உன் சொந்தப் பெலத்தில் சுயபுத்தியில் நீ இயங்கும் வரைக்கும் என்னால் எதுவும் செய்யமுடியாது என்பதுபோல கர்த்தர் மெளனமானார். அதற்காகக் கர்த்தர் ஆபிராமைத் தள்ளிவிடவில்லை. உண்மையிலேயே மேற்கண்ட எல்லா சந்தர்ப்பத்திலும் இந்த விசுவாசப் பயணத்திலே கர்த்தர் ஆபிராமை உருவாக்கி வருகிறதையே நாம் காண்கிறோம். ஆம், நமது சொந்தப் பெலத்தில் நாம் நம்பிக்கை கொண்டிருக்குமளவும் கர்த்தருடைய பெலம் நிச்சயமாகவே நம்மில் செயற்பட ஏதுவிராது. எப்போது நமது பெலம் செத்து, முழுமையாகவே கர்த்தரில் மாத்திரம் நிலைத்து நிற்கிறோமோ அங்கேதான் தேவனுடைய வல்லமை நம்மில் பொங்கி வழியும்.
இப்போ கர்த்தர் ஆபிராமை நோக்கி, நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீயோ எனக்கு முன்பாக உத்தமனாய் இரு என்கிறார். இது ஆபிராமைச் சற்று வெட்கமடையவும் செய்திருக்கலாம். ஏனெனில், அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். இப்போ தேவன் தெளிவாகப் பேசி, தாம் வாக்குப்பண்ணியபடி ஜாதிகள் பெருகும் என்று ஆபிராம் என்ற பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, மூன்றாம் தடவையாகத் தமது வாக்கை நித்திய சுதந்திரமாக உறுதிப்படுத்தினார். தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியுமுகமாக உடன்படிக்கைக்கு அடையாளமாக விருத்தசேதன முறைமையையும் தேவன் கட்டளையிட்டு, சாராயின் பெயரையும் சாராளாக மாற்றி, பிறக்கப்போகும் பிள்ளைக்கு ஈசாக்கு என்ற பெயரையும் கொடுத்தார் கர்த்தர். இத்தனைக்கும் இப்போ ஆபிரகாமின் வயது 99. புரிகிறதா! ஆபிரகாம் தன் சொந்தப் பெலத்தை இழந்து, சாராயும் சரீரம் செத்தவளான பின்னர் கர்த்தர் கூறுகிறார், நான் சர்வ வல்லமையுள்ள தேவன்.
இன்னமும் முடியவில்லை. இப்போ ஆபிரகாம் எகிப்தை நோக்கிய திசையிலே கேராருக்குப் போய் அங்கே தங்கிவிட்டார். அங்கே அவருக்கு மறுபடியும் சோதனை. ஆபிராம் மறுபடியும் தன் மனைவியைச் சகோதரி என்று பொய் சொன்னதால், அந்நிய ராஜாவுக்கு முன்பாகத் தலைகுனிவு ஏற்பட்டது. 90 வயதான வயது முதிர்ந்த சாராளில் அப்படி எதைத்தான் கண்டானோ அந்த ராஜா அபிமலேக்கு. ஆனால் அதுவல்ல விஷயம். இது ஆபிராமுக்கு நேரிட்ட பலத்த சோதனை. மூன்றாம் தரம் வாக்கு உறுதிப்பட்ட பின்னரும், இவர் கேராருக்கு ஏன் போனார்? அடுத்தது, வாக்களித்த தேவன் பாதுகாப்பார் என்பதை எப்படி மறந்து மறுபடியும் பொய் சொன்னார்? இங்கேயும் ஆபிராம் தடுமாறிவிட்டார்.
என்றாலும், ஆபிரகாமின் 100வது வயதில், தன்னால் எதுவும் முடியாது என்ற நிலையில் கர்த்தர் ஆபிரகாமுக்கு ஈசாக்கைக் கொடுத்தார். அதற்காக அவருடைய விசுவாசப்பயணமும், பரீட்சையும் இன்னமும் முடியவில்லை. ஈசாக்குப் பிறந்ததே அதிசயம், இனிக் குழந்தை பிறக்க முடியாது என்ற நிலையிலும், சந்ததிப்பெருக்கத்தை வாக்களித்த கர்த்தரே, அந்த ஒரே மகனைத் தகன பலியிடும்படி கேட்டாரே; அதுவே ஆபிரகாமுக்கு நேரிட்ட உச்சக்கட்டப் பரீட்சை. ஆனால் ஆபிரகாம் கர்த்தர் சொன்னபடியே பலியிடக் கத்தியை ஓங்கினாரே, அதுதான் அவருடைய விசுவாசத்தின் நீதி! இதுவரை அவர் கடந்துவந்த விழுகைகள் எழுந்திருக்குதல்கள் எதுவும் வீணாகிப்போகவில்லை. நடந்தது என்ன?
மோரியா மலையிலே ஈசாக்கு அல்ல, ஆபிர காமே பலியானார். அவருடைய சகலமும் அந்தப் பலிமேடையிலே தூள்தூளாகத் தகர்ந்தது. கர்த்தர் அதைக் கண்டார். ஈசாக்கைத் திரும்பவும் கொடுத்தார். ஆபிரகாமை மீண்டும் ஆசீர்வதித்த கர்த்தர், இப்போ மாம்சத்திற்குரிய சந்ததியையும் ஆவிக்குரிய சந்ததியையும் சேர்த்து வாக்களிப்பதை 22:17ல் காண்கிறோம். ஆம், இந்த முடிவைத் தம்மகத்தே கொண்டிருந்த கர்த்தர்தாமே, அந்தப் புள்ளி வரைக்கும் தாம் அழைத்த ஆபிரகாமை உருவாக்கிக் கொண்டுவந்தார் என்பதுதான் உண்மை.
நம்பிக்கையும் விசுவாசமும்
25 ஆண்டுகள் ஆபிரகாமின் வாழ்வில் கடந்துவிட்டது. ஆனால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக் கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப் போகிறார்கள் என்று தெரியப்படுத்துகிறார்கள் என்று எபிரெய ஆசிரியர் தெளிவாக எழுதியுள்ளார் (எபி.11:12-14). அன்று ஆபிரகாம் கண்களுக்குத் தெரிந்த வாக்குப் பண்ணப்பட்ட கானானைக் காட்டிலும், காணாத ஒன்றை விசுவாசித்து, இந்தக் கானானிலே பரதேசியாகத் திரிந்தாரே! இதை மறக்கக் கூடாது.
நம்பிக்கை என்பது என்ன? நம்பிக்கைக்குரிய ஒருவர் சொன்னதால் அது நிச்சயம் என்று ஏற்பது. எந்த மனுஷனை நம்புவது? ஆகவே நம்பிக்கைக்குரிய ஒரே தேவன் என்ன சொன்னாரோ, அவர் சொன்ன வார்த்தை சத்தியம் என்று நம்புவது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இல்லாமல் விசுவாசம் தோன்ற இடமில்லை. அவருடைய வார்த்தையை நம்பி, கண்களுக்கு முன்பாக எந்த அடையாளமோ சூழ்நிலைகளோ இல்லாவிட்டாலும்கூட, கர்த்தர் தாம் சொன்னது சொன்னபடியே நம்மை நடத்துவார் என்று வார்த்தையை முற்றிலும் சார்ந்துகொள்வது விசுவாசம். ஆக நம்பிக்கையைத் தொடருகிறது விசுவாசம். இதுதான் ஆரம்பப்படி. நமக்கு அருளப்பட்ட இரட்சிப்பைக் கூட. தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, நம்பி, அதைக் கர்த்தர் செய்தார் என்ற விசுவாசத்தினாலே கிருபையாகவே நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இயேசுவை நேர்முகமாகப் பார்த்தேனா? சிலுவை மரணத்தை நேரில் கண்டேனா? ஆனால். பரிசுத்தாவியானவர் நமக்குள் தந்த அந்த ஒப்பற்ற உன்னத விசுவாசம், அதுவே நம்மை இரட்சிப்புக்குள் கிருபையாக நடத்தியது. கவனிக்கவும், பரிசுத்தாவியானவரே இந்த விசுவாசத்தை நமக்குள் ஊற்றுகிறவர். மாறாக, நம்மால் விசுவாசத்தை உருவாக்கமுடியாது. கிருபையைக்கொண்டு விசுவாசத்தினால் பெற்றுக்கொண்ட இந்த இரட்சிப்பு நித்திய இலக்கை நோக்கிய ஒரு நீண்ட விசுவாசப்பயணத்தை நமது வாழ்வில் தொடக்கிவிட்டிருக்கிறது.
இன்று, நமது மாம்சக் கண்களால் காண முடியாததும், நமக்காக ஆயத்தம் பண்ணப்பட்டதுமான நித்தியத்தை இலக்காகக்கொண்டல்லவா நமது விசுவாசப்பயணம் தொடரவேண்டும்! அப்படியிருக்க, அப்பப்போ நாம் விரும்பியதை நிறைவேற்றுகின்ற மந்திர வித்தையாக விசுவாசத்தைப் பயன்படுத்துவது எப்படி? நமது அந்தத் தூர இலக்கை அடைவதற்கு நாம் ஆயத்தப்பட வேண்டும், தகுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்குத்தான் வாழ்வின் பாதையிலே சோதனைகளும் உபத்திரவங்களும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் இலக்கு மாறாது, அது தூரத்தே இருக்கிறது. விசுவாசப்பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கிற பரிசுத்தவான்கள், நமக்கு முன்பாக வாழ்ந்துபோன தேவபிள்ளைகள், மிஷனரிமார்கள், இரத்தசாட்சிகள், இவர்கள் இந்த உலகில் எதைக் கண்டார்கள்? எதை அனுபவித்தார்கள்? இப்படியிருக்க, இன்னமும் இந்த உலகத்துள்ளும் அதன் வஞ்சக வலைக்குள்ளும் அகப்பட்டு, தேவனைவிட்டு விலகுவதே தெரியாமல் நாம் விலகிப்போவது ஏன்?
விசுவாசம், தேவன் செய்வார் என்பதுடன் நிற்பதில்லை. அடுத்தபடிக்கு நாம் முன்னேற வேண்டும். வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ (யாக்.2:20) என்று இன்றும் யாக்கோபு நம்மிடம் கேட்கிறார். விசுவாசம் நமக்குள் வேர் விடுமானால், அது வளரவேண்டிய முதற்படி விசுவாசத்தினாலாகும் கிரியை. கர்த்தர் சொன்னதைச் செய்வார் என்பதை ஏற்றுக்கொண்டால் போதாது, நாம் முன்படியை எடுத்துக் கிரியையில் முன்னேற வேண்டும். இங்கேதான் அழையா விருந்தாளி ஒருவர் பயணத்தில் நம்முடன் இணைகிறார். இவர் இல்லாவிட்டால் இந்த விசுவாசப்பயணம் சுவாரஸ்யமாகவும் இருக்காது; வெற்றியாகவும் அமையாது. இவர் யார்? ஆம், பாடுகளும் துயரங்களும் உபத்திரவங்களும் சோதனைகளும் இன்றி நமது விசுவாசம் பலப்பட இடமுமில்லை; இலக்கை அடைவதற்குச் சாத்தியமுமில்லை. ஏனென்றால் சோதிக்கப்படாத எந்தவொரு விசுவாசமும் விசுவாசமே இல்லை. இதை நாம் ஏற்கனவே ஆபிரகாமின் வாழ்வில் கண்டுவிட்டோம். இந்த உலக வாழ்வில் நமக்கு நேரிடுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் நமது விசுவாசத்தை உறுதியாக்குகின்ற உரங்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியிலும் நமக்குச் சோதனைகள் காத்திருக்கிறது என்ற விழிப்பு இல்லாவிட்டால் நாம் விழுந்து போவது உறுதி.
அன்று இயேசுவின் போதனைகளையெல் லாம் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, கப்பர்நகூமில் நடந்த அற்புதத்தை நேரிலே பார்த்துவிட்டு, அநேகர் சொஸ்தமானதையும் கண்டுவிட்டு, இயேசு ஏறின படவிலே தாங்களும் ஏறிக்கொண்ட சீஷர்கள் கடலில் பெருங்காற்று உண்டாகி படவு அலைகளில் அகப்பட்டபோது என்ன செய்தார்களோ (மத். 8:23-26) அதைத்தானே நாமும் செய்கிறோம். நாமும் அற்ப விசுவாசிகளா?
பயணத்தின் உச்சப்படி:
வண்டி ஓட்டப்பழகும்போது, முதலில் சொல்லிக் கொடுக்கும் பாடம், கீழே பார்க்காதே, நேரே தூரப்பார் என்பதுதான். விசுவாச ஓட்டத்திலும் நமது இலக்கு நேரே தூரத்தேதான் இருக்கிறது. ஆக, இந்தப் பயணத்தில் நாம் ஜெயம் பெற உச்சப் படி ஏறவேண்டும். அது என்ன தெரியுமா? கர்த்தர் ஆபிராமிடம், இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார் (ஆதி.15:21). யோசுவாவிடம், நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன் (யோசு.1:3) என்றார். இன்னும் பல உதாரணங்களை வேதாகமத்திலே காணலாம். இங்கே ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? கொடுத்தேன் என்று கர்த்தர், காரியம் சம்பவிக்கும் முன்னரே சம்பவித்தாயிற்று என்கிறார். ஆக, ஏற்கனவே முடிந்துவிட்ட ஒன்றை இவர்கள் முன் சென்று உரிமைகொள்ள வேண்டும். அவ்வளவும்தான். இதுதான் விசுவாசத்தின் உச்சப்படி.
ஆம், நமக்காக இயேசு சிலுவையில் யாவையும் செய்துமுடித்துவிட்டார். முடிந்தது என்று சிலுவையிலே இயேசு சொன்னது நமது காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். நித்தியத்தில் தம்முடன் நித்தியமாய் வாழுவதற்கான சகலத்தையும் சிலுவையிலே செய்துமுடித்துவிட்ட ஆண்டவர் நாளை மாறிப்போகின்ற இந்த உலகக் காரியங்களில் பெலனற்றுப் போவாரா? ஒன்றை மனதில் மறுபடியும் நிறுத்துவோம். நித்தியத்தை நோக்கிய நமது விசுவாசப்பயணத்தில் நாம் தேறுகிறவர்கள் ஆகுவதற்கே இந்த உலக காரியங்கள் தடைகள் சோதனைகள் நமக்கு அனுமதிக்கப்படுகின்றன. அந்த விசுவாசம் இல்லாமலா, சீஷர்கள் இரத்த சாட்சிகளாக மரித்தார்கள். அந்த விசுவாசம் இல்லாமலா பவுல் இருட்டறையில் சிறை வைக்கப்பட்டபோதும், மகிழ்ச்சியாயிருந்தார்?
இன்னுமொரு முக்கிய விஷயமும் உண்டு. இந்த அற்புதமான விசுவாசப்பயணத்தில் பின் திரும்பிப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். போட்டி மனப்பான்மையும் பெருமையும் பயணத்தைத் தகர்த்தெறியும். அடுத்தது, கிருபையின் அழைப்பை மறந்து, பெரிய ஓட்டத்தில் நம்மை நடத்துகிறவரை மறந்து, சின்னச் சின்ன விஷயங்களில் வழிபிசகிப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். சின்ன விஷயங்களில் நம்மை விழுத்துகின்ற சாத்தானுக்கு இடமளித்தால் பெரிய தடுக்கலை அவன் கொண்டுவருவது நிச்சயம். ஆகவே சின்ன விஷயத்திலும் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாக ஓடத் தேவனுடைய பெலத்தை நாடுவோமாக.
ஆம், கர்த்தர் நமக்காகச் செய்துமுடித்துவிட்ட மாறாத அழியாத நித்தியம் என்ற ஒரே இலக்கை நோக்கி முன்செல்லும் இந்த விசுவாசப் பயணத்தில் நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தை என்ன தடைகள் வந்தாலும் பொறுமையோடே ஓடக்கடவோம். வழியில் நேரிடுகிற தேவைகள் நம்மை முன்தள்ளும் ஏதுக்கள். ஆகவே தைரியமாக முன்னேறுவோமாக.
நமக்காகவே நமது ஆண்டவர் பரிசில்களோடு காத்து நிற்கிறார். தடைகளைத் தாண்டி ஜெயமெடுப்போமா! ஆமென்.
வருந்துகிறோம்!
கடந்த 2021 மார்ச் 1 ஆம் தேதியன்று Dr.Rev.சாம் கமலேசன் அவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிரவேசித்ததை அறிந்து மனம்வருந்துகிறோம். அவர்களது பிரிவினால் வாடும் அவர்களது குடும்பத்தினர் யாவருக்கும் மற்றும் உடன் ஊழியர்களுக்கும் தேவன்தாமே ஆறுதலையும் தேறுதலையும் தந்தருள வேண்டுகிறோம். சத்தியவசன வானொலிப் பணியில் எங்களோடு அவர்கள் இணைந்து செய்த மகத்தான ஊழியங்களை நினைவுகூருகிறோம். அவர்கள் செய்தியின் வாயிலாக அநேகமாயிரம் மக்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பிரயோஜனமடைந்தனர். தேவனுடைய இராஜ்ஜியம், சீஷத்துவம், குடும்பம் மற்றும் அருட்பணி ஆகியவற்றை மையமாக வைத்து அவர்கள் ஆற்றிய அருளுரைகள் இன்றளவும் மக்களின் மனங்களில் ஆழமாய் பதிந்துள்ளது. அருட்பணியில் அவர்களைக்கொண்டு தேவன் ஆற்றிய மகத்தான பணிகளுக்காகவும் விளைவுகளுக்காவும் தேவனைத் துதிக்கிறோம்.
ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். (தானி.12:3).