Rev.நாட் க்ராபோடு
(மே-ஆகஸ்ட் 2021)

…, ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:13.14).


நீங்கள் ஒரு ஓட்டப்பந்தயத்தையோ, அல்லது மாரத்தான் ஓட்டப்பந்தயத்தையோ பார்க்கச் சென்றிருக்கிறீர்களா? நான் போய் பார்த்திருக்கிறேன். பந்தயத்தில் ஓடும் ஓட்டப் பந்தயக்காரர்களைப் பார்த்து ரசிப்பது நம்மை மிகவும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கும். அப்படித்தானே? உண்மையாகவே, நான் ஓடுவதை வெறுக்கிறேன். அது எனக்குப் பிடிக்காது. நாம் கட்டாயமாக ஓடவேண்டும் என்று தேவன் நினைத்திருந்தால், நான்கு சக்கர வாகனமாகிய காரை, ஒருவர் கண்டுபிடிப்பதற்கு அனுமதித்திருக்க மாட்டார் என்று உறுதியாக நம்புகிறேன். உண்மையாகவே ஓடுவதை நான் வெறுக்கிறேன் என்று கூறிக்கொள்கிறேன். ஆம், அது உண்மையான காரியமே. ஆனால், அந்த ஓட்டப் பந்தயக்காரர்கள் ஓடுவதைப் பார்ப்பது நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியத்தைக் கொடுக்கும். பரிசைப் பெறுவதற்காக, தங்களை முற்றிலும். அர்ப்பணித்தவர்களாய் ஒரே நோக்கத்துடன் ஓடுவார்கள். அவர்கள் எண்ணம். சிந்தனை யாவும் பரிசையே நோக்கியிருக்கும். அதில் மிகவும் உறுதியாயும். உற்சாகமாயும் ஓடுவார்கள். வெடிச்சத்தம் கேட்ட க்ஷணத்தில் சிட்டாய் பறந்து எல்லையை அடையும்வரை ஓடுவார்கள், கிறிஸ்தவ ஜீவியத்தில் இந்த ஓட்டமும், பரிசும் எதைக் குறிக்கிறது? அதைத்தான் இங்கே நாம் சிந்திக்க இருக்கிறோம்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஓட்டப் பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம். வெற்றி நிச்சயம்! ஆனால், பரிசைப் பெற்றுக்கொள்ள இன்னும் முயற்சித்து, பவுலைப்போல ஆவிக்குரிய எண்ணத்தோடு ஓட வேண்டியது அவசியம். ஆவிக்குரிய எண்ணம் கொண்ட ஒரு விசுவாசியில் காணப்பட வேண்டிய சில பண்புகளைக்குறித்து இந்த செய்தியில் காண்போம். பரம அழைப்பின் பந்தயப் பொருளை அடை வதற்கு ஆவிக்குரிய எண்ணங்கொண்ட ஒரு விசுவாசியில் காணப்படவேண்டிய பண்புகளை குறித்து பிலிப்பியர் 3:12-21 வரை உள்ள வேத பகுதியிலிருந்து தியானிப்போம்.

1. ஆசையாய் ஓட்டத்தைத் தொடர வேண்டும் (பிலி.3:12).

2. ஒரேயொரு காரியத்தில் மாத்திரம் நோக்கமாக இருக்கவேண்டும் (பிலி.3:13).

3. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடிச் செல்லவேண்டும் (பிலி.3:13).

4. பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர வேண்டும் (பிலி.3:14).

5. முற்றிலும் தேறினவர்களாய் மாறவேண்டும் (பிலி. 3:15-16).

6. நல்ல முன்மாதிரியானவர்களைப் பின்பற்ற வேண்டும் (பிலி.3:17).

7. சிலுவைக்குப் பகைஞர்களாக இருக்கக்கூடாது (பிலி.3:18).

8. இவ்வுலகில் வாழ்ந்தாலும் பரலோகவாசிகளாக வாழவேண்டும் (பிலி.3:19-20).

நமது கிறிஸ்தவ வாழ்வில், ஆவிக்குரிய குழந்தைகளாகவே இருப்பதற்குப் பதிலாக முதிர்ச்சியடைந்த விசுவாசிகளாக இருக்க விரும்புகிறோம். முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் கிறிஸ்தவ வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயத்தில், பந்தய ஓட்டத்தின் துவக்கத்தடத்தில் நிம்மதியாக அமர்ந்திருக்க முடியாது. அவ்வாறு இருக்கவே முடியாது. நாம் முன்னேறிச்சென்று, தேவனுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையையே வாழ்வோம். நாம் முன்னேறிச் செல்வதுடன் சீடர்களையும் உருவாக்குவோம்.

பிலிப்பியர் 3:1-11 வரை உள்ள வேத பகுதியில் பவுல் அப்போஸ்தலனின் கடந்தகால வாழ்க்கையை நாம் பார்க்கிறோம். அதில் அவர் சில உத்தரவாதமுள்ள பணிகளைச் செய்ததாகக் காண்கிறோம். கடந்தகால தனது ஆவிக்குரிய முயற்சிகளும், மாம்சத்தின் கிரியைகளும் குப்பை யென்று தீர்மானித்தார். நாம் நம் பாவத்திலிருந்து விடுதலை பெற நாமோ, அவரோ என்ன செய்ய முடியும் என்பதைக் குறித்து அல்ல; ஆனால், கிறிஸ்து தமது மிகுந்த கிருபையின் மூலம் என்ன செய்தார் என்பதைத்தான் நாம் அறிய இருக்கிறோம். அக்கிருபையினால், நாம் மகிழ்ந்து களிகூர முடியும்.

1. ஆசையாய் ஓட்டத்தைத் தொடர வேண்டும்.

பிலிப்பியர் 3ஆம் அதிகாரத்தின் 12ம் வசனத்தைத் தியானிக்க இருக்கிறோம். “நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப் பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” (பிலி. 3:12).

பவுல் அப்போஸ்தலன் இவ்வசனத்தின் துவக்கத்தில் நான் அடைந்தாயிற்று…., என்று எண்ணாமல் என்று கூறுகிறார். அப்படியானால் அதன் அர்த்தம் என்ன? அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முந்தின வசனங்களை நாம் தியானிக்கவேண்டும். பவுல் அப்போஸ்தலன், தான் இரட்சிக்கப்பட்டதைக் குறித்து மிகவும் சந்தோஷமடைவதை உறுதிப்படுத்துகிறார். கிறிஸ்து செய்து நிறைவேற்றிய கிரியைகளால், தான் நீதிமானாக்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். அவருடைய பாவக்கடனின் விலைக் கிரையம் செலுத்தப்பட்டாயிற்று. எனவே அவர் நீதிமானாக்கப்பட்டார். அவர் மகிமையடைவதற்காக உயிர்த்தெழுதல் என்ற ஒரு நிகழ்ச்சி இனிமேல் தான் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது முற்றிலும் தேறினவனானேன் என்று எண்ணாமல் என்று கூறி அதை விளக்கிக் காட்டுகிறார். முற்றிலும் தேறினவனானேன் என்றால் கிறிஸ்துவைப் போலாகுதல் என்று பொருள்படும். அவர் அதை ஏன் அடையவில்லை என்றால், இது உலகத்தில் நடக்கக்கூடிய ஓர் நிகழ்வு அல்ல. ஆனால் அதைப் பெற்றுக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன் என்று கூறுகிறார்.

அருமையானவர்களே, நாம் முற்றிலும் தேறினவர்களாக மாற, தொடர்ந்து முன்னேறுவோம். நாம் அயராது, ஓய்வின்றி முன்னேறுவோம். நாம், நம் சுயமுயற்சியால் அதைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று அறிந்தே முன்னேறுவோம்.

“கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக் கொள்ளும்படி ஆசையாய்த் தொடர்கிறேன்” என்பது ஆவிக்குரிய மனப்பான்மை கொண்டுள்ள ஒரு கிறிஸ்தவனில் காணப்படவேண்டிய முதல் பண்பாகும். அதாவது அவர்கள், தங்கள் வளர்ச்சியில் கண்ணுங்கருத்துமாய் இருப்பார்கள். இதுதான் பவுல் அப்போஸ்தலன் தான் முற்றிலும் தேர்ச்சி அடையவும் பூரணப்படவுமில்லை; தான் உயிர்த்தெழும்வரையில், கிறிஸ்துவுக்குள் முற்றிலும் தேறினவனாக முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார்.

ஆனாலும், அவர் முன்னோக்கித் தொடர்ந்தார். கிறிஸ்துவின் சாயலை, தான் பெறவேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடு, ஆசையாய் ஓட்டத்தைத் தொடர்ந்தார். இயேசுகிறிஸ்து, பவுலை இரட்சித்ததன் நோக்கமும், நம் ஒவ்வொருவரையும் இரட்சிப்பதன் நோக்கமும் இதுதான். இதில் ஓர் உண்மை அடங்கியுள்ளது. வளர்ச்சி தற்செயலாகத் திகழும் ஓர் காரியமல்ல. வளர்ச்சி என்பது, விருப்பத்துடன் மனமுவந்து செய்யும் ஓர் காரியமாகும்.

பெரும்பான்மையான மக்களுக்கு வாழ்க்கையில் குறிக்கோள்கள் உண்டு. இவ்வாறு நாம், நம் குறிக்கோள்களை அடைய முயற்சிக்கும் பொழுது, நாம் பின்னோக்கிப் பார்த்து, நமது அனுபவங்களில் முன்னேறியிருக்கிறோமா என்று கண்டுகொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் காணப்படும் அறிவாற்றல் அல்லது திறமையின் ஈடுபாடு இன்றியே, நீங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில் A-கிரேடு பெற முடியும், நீங்கள் படித்து A-கிரேடு வாங்கியபின் படிப்பில் அதிக அக்கறை காட்டாதிருக்கலாம். துரதிஷ்டவசமாக, நீங்கள் A – கிரேட் வாங்காத பிறரைவிட ஞானமுள்ளவர் அல்ல.

மேற்கூறிய இந்த சித்தாந்தம் கிறிஸ்தவர்களாகிய நமக்கும் பொருந்தும். நம்மில் சிலர் ஓட்டப் பந்தயத்தில் பங்கு கொள்ளலாம். அதுவே போதும் என்று எண்ணி, பந்தயத்தில் வெற்றி பெற்றுவிட்டோம் என்றும், இரட்சிக்கப்பட்டுவிட்டோம். என்றும் எண்ணிக்கொள்கிறோம். எனவே, நம்மில் அநேகர் என்ன செய்துவிடுகிறோம்? ஓட்டப் பந்தயத் துவக்கத் தடத்திலேயே உட்கார்ந்து விடுகிறோம். ஆனால், நாம் அவ்வாறு செய்யக்கூடாது. ஆவிக்குரிய காரியங்களில் நாம் நம்மையே அர்ப்பணித்து வளர்ச்சியடைந்து, கிறிஸ்து இயேசுவைப் போல், நாமும் மாற நாம் அவருடன் நடக்கவேண்டும்.

ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும், அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென். என்று பேதுரு அப்போஸ்தலன் 2 பேதுரு 3:17,18 இல் எழுதியிருக்கிறார்.

ஆவிக்குள்ளாக நாம் வளர வேண்டுமென்றால், நாம் வாஞ்சையுடன் இலக்கையே நமது குறிக்கோளாகக் கொண்டு முன்னேறவேண்டும் என்று பேதுரு அப்போஸ்தலன் நன்கு அறிந்திருந்தார். எனவேதான், வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு போகாதிருங்கள் என்று எச்சரிக்கிறார். அன்பானவர்களே, யாரும் திடீரென, ஓர் அதிகாலையில் விழித்தெழுந்து நான் என் ஆவிக்குரிய வாழ்க்கையை அழிக்கப் போகிறேன் என்றோ, அல்லது என் மாம்சத்துக்குரிய வாழ்க்கையில் அழிவைச் சந்திக்கப் போகிறேன் என்றோ சொல்ல மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், அதற்கு மாறாக மெல்ல, மெல்ல அவர்கள் வழிவிலகிப் போவார்கள். துவக்க நிலையிலிருந்து நீங்கள் எந்த விதத்திலும் முன்னேறிச் செல்லமாட்டீர்கள். நீங்கள் ஒருபோதும் ஆவிக்குரிய வாழ்க்கையில் முதிர்ச்சி அடையவும் மாட்டீர்கள். நாம் வஞ்சிக்கப்படும்பொழுதோ, நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ந்து முன்னேற முடியாது. அதனால், நாம் வளர்ச்சி அடைவதையே நம் முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

இவ்வாறு நாம் ஆவிக்குரிய கிறிஸ்தவர்களாக வளர்வதைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். எனவே, பிலி.3:13இல், சகோதரரே, அதைப் பிடித்துக் கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி…. இலக்கை நோக்கித் தொடருகிறேன் என்று பவுல் அப்போஸ்தலன் கூறும் கூற்றுப்படி தொடர்ந்து ஓடுவோம்.

இந்த நிருபத்திலே, பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியரை, “சகோதரரே” என்று ஏழுமுறை குறிப்பிடுகிறார். எப்பொழுது நாம் கிறிஸ்துவின் சீடர்களாக மாறுகிறோமோ, அப்பொழுதிலிருந்து நாம் ஒருவருக்கொருவர் கிறிஸ்துவில் சகோதர, சகோதரிகளாக மாறுகிறோம். நாம் தேவனுடைய சுவிகாரப் புத்திரர், எந்த விதத்திலும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாத ஈடு இணையற்ற ஓர் தனித் தன்மையான உறவு நமக்கும், தேவனுக்கும் இடையே உள்ளது.

உலகளாவிய அளவில், புதுப்புது விசுவாசிகளை நான் சந்திக்கும்பொழுது, நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன், இவ்வாறு விரிவாக்கமுள்ள குடும்ப உறுப்பினர் பலரின் சிறந்த உறவை, இந்த சந்திப்பின் மூலம் பெறுகிறேன். பவுல் அப்போஸ்தலன் தான் முற்றிலும் தேறினவன் அல்ல என்று மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறார். கிறிஸ்தவர்களாகும்பொழுது, நமது இயற்கையான பாவத்தன்மை முற்றிலும் அழிந்துபோகாது. ஆனால், கிறிஸ்துவுக்குள் நமது உறுதி முதிர்ச்சி அடையும்பொழுது நாம் பாவத்தை அதிகமதிகமாய் வெறுக்கக் கற்றுக்கொள்கிறோம். பாவத்திற்காக நாம் மனஸ்தாபப்படுவது அதிகரித்து, அதன் மூலம் கிருபையைப் பெற்றுக்கொண்டதால், நன்றியறிதலின் உள்ளமும் பெருகுகிறது.

2.ஒரேயொரு காரியத்தில் மாத்திரம் நோக்கமாக இருக்கவேண்டும்.

பிலிப்பியர் 3ம் அதிகாரத்தை நாம் தொடர்ந்து வாசிக்கும்பொழுது, ஆவிக்குரிய தன்மை கொண்ட விசுவாசியின் மற்றுமோர் பண்பையும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். லேசர் கதிர்போல் அதை மையப்படுத்துகிறார். 13ஆம் வசனத்தில் ஆனால் நான் ஒன்று செய்கிறேன் என்று பவுல் கூறுகிறார்.

பவுல் அப்போஸ்தலன் ஒன்றையே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். அதை விரிவாகப் பார்க்க இருக்கிறோம். அவர் எழுதுவதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால். அவர் விளையாட்டுப் போட்டி, பந்தயங்களைப் பார்க்கச் சென்றிருக்கிறார் என்பதாகும். அதனால்தான். ஒரே காரியத்தில் குறிக்கோளாக இருப்பதை உவமையாகக் காட்டி விளக்குகிறார் என்று நான் கருதுகிறேன். இதனால் ஒற்றுமை வேற்றுமைகளை சிறப்புற விளக்குகிறார். போ ஜாக்சன் போன்ற வெகு சிலரைத் தவிர, விளையாட்டுப் போட்டிகளையே தங்கள் தொழிலாகக் கொண்ட விளையாட்டு வீரர்கள், தங்கள் விளையாட்டுத் துறையிலே சிறந்து விளங்குவார்கள். ஐந்து விளையாட்டுத் துறைகளில் அல்ல, இரண்டு விளையாட்டுத் துறைகளில் அல்ல, தங்களின் ஒரே விளையாட்டுத் துறையிலேயே தம் கவனத்தைச் செலுத்துவார்கள். தங்களின் விளையாட்டில் நன்கு பயிற்சி பெற்று சிறந்து விளங்க, தங்கள் சக்தி அனைத்தையும் பயன்படுத்துவார்கள், இதுதான், அவர்களை அந்தக் குறிப்பிட்ட விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கச் செய்கிறது.

லேசர் கற்றையைப் போல், தங்கள் குறிப்பிட்ட காரியத்திலேயே, தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள், இவ்வாறு எவ்வித குறிப்பிட்ட நோக்கமும் இன்றி, எல்லாவிதமான விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்துகொள்வார்கள் என்றால், அவர்கள் சாதாரணமான அல்லது ஒரு வேளை நல்ல விளையாட்டு வீரர்களாக இருப்பார்களே தவிர, மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களாக இருக்கமுடியாது. கிறிஸ்துவில் மிகவும் தேறினவராகவே இருக்க பவுல் அப்போஸ்தலன் வாஞ்சித்தார். அதாவது ஒரேயொரு காரியத்தில் மாத்திரம் நோக்கமாக இருந்தார்.

நான் என் 29ஆம் பிறந்த நாளை அதிகமாய் நினைத்துப் பார்ப்பேன். அப்பொழுது மன அழுத்தத்திற்குள்ளாக இருந்தேன். இவ்வாறு என் வாழ்க்கையில், நான் மன அழுத்தத்தில் இருந்த நாட்கள் பல உண்டு. ஆனால், அவை என் நினைவிற்கு வருவதே இல்லை. ஆனால், இந்த நாளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். கீழ்தளத்தில் நான் என் படுக்கையில் படுத்திருந்தேன். என் மனைவி கீழே இறங்கி வந்து, இன்று உங்களுக்குப் பிறந்த நாள். உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டாள். என்னைப் பார். நான் வாழ்க்கையில் தோல்வியுற்றவன். எனக்கு 29 வயதாகிவிட்டது. நான் இன்னும் கல்லூரியின் பட்டம் பெறவில்லை. வேலையும் கேள்விக்குறியாக உள்ளது. இன்றும் அநேக பணிகளை என்னால் செய்ய முடியும். ஆனால், நான் இந்தப் பரிதாப நிலையில் இருக்கிறேன். உன்னையும் நம் குழந்தைகளையும் ஓர் உயர்ந்த நிலையில் நான் வாழ வைக்கவில்லை. நான் வாழ்க்கையில் தோல்வியுற்றவன் என்று அவளிடம் கூறினேன்.

ஒரு நற்குணசாலியான மனைவியாக அவள் என்னை உற்சாகப்படுத்தி, மேலே தூக்கியெடுக்க முயற்சித்தாள். கர்த்தர் எனக்குப் பாராட்டின அநேக நன்மைகளை எனக்கு ஞாபகப்படுத்தினாள். ஆனால், அந்த நாளில் அவள் கூறிய உற்சாகமான வார்த்தைகளுக்கு நான் செவிமடுக்கவில்லை. ஆனால், அவள் அன்று கூறிய உற்சாகமான வார்த்தைகள், என்னை முன்னுக்குத் தள்ளி, பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. லேசர் கற்றை, ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தாக்குவதுபோல, அந்த நாளிலிருந்து எந்தவிதமான எண்ணச் சிதறல்கள் இன்றி, ஒரே குறிக்கோளுடன் நான் நோக்க ஆரம்பித்தேன்.

அதன்பின்பு நான், என்னுடைய நிலையைக் குறித்துக் குறை கூறுவதே இல்லை. எந்தக் காரியத்தைக் குறித்தும் வீணாகக் கவலைப்படுவதும் இல்லை. அடுத்த மாதமே பிறருடன் தொலைபேசி மூலம் பேச ஆரம்பித்தேன். வேதாகமப் பள்ளிக்கு மீண்டும் செல்வதற்கான காரியங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அடுத்த இரண்டாண்டுகளில் கவனச் சிதறலின்றி லேசர் கற்றைபோல, ஒரே நோக்கத்துடன் என்னுடைய வேதாகமப் பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்தேன். என் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். நான் என் பள்ளிப் பாடங்களை, வேத பாட ஆராய்ச்சியிலிருந்து ஒரு போதும் வழிவிலகிச் செல்லவில்லை என்று கூறுவார்கள். என் குடும்பத்திற்கும், மற்றும் என் பணிக்கும் மிகக் குறைந்த நேரமே செலவிட முடிந்தது. “மேல் நோக்கி உயரவேண்டுமானால், நாம் சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும்” என்று மாக்ஸ்வெல் கூறுகிறார். அப்படிப்பட்ட ஒரே நோக்கமும், குறிக்கோளும் இருந்தால், ஒரு சிறிது காலம் வரையாவது, நீங்கள் சில காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, அதற்கு முடியாது என்று சொல்வீர்கள்.

நீங்கள் ஆவிக்குரிய விசுவாசியாக வளர்ந்து முன்னேறிச் செல்ல வேண்டுமானால் நிச்சயமாக உங்கள் நோக்கமும், சிந்தனையும் லேசர் கற்றையைப் போல் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். முதன்மையாக முக்கியப்படுத்தப்பட வேண்டிய காரியம் எதுவென்று ஒருவேளை நீங்கள் சிந்திக்கிறீர்களா? தேவனோடு உள்ள ஐக்கியம் என்பதுதான் பதில். மற்ற அனைத்துக் காரியங்களும் அதிலிருந்து ஊற்றுப் பெருக்கெடுக்கும்.

3. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடிச் செல்லவேண்டும்.

பவுல் அப்போஸ்தலன் இந்த ஒரு இரகசியத்தை வெளிக்கொணர்கிறார். நான் பின்னான வைகளை மறந்து முன்னானவைகளை நாடிச் செல்கிறேன் என்று கூறுகிறார். ஆவிக்குரிய எண்ணங்கொண்ட விசுவாசிக்கான மற்றுமோர் சிறந்த பண்பு இதுவாகும். எதிர்காலத்தின் மீதே கண்ணும் கருத்துமாயிருப்பார்கள்.

இக்கருத்தை பவுல் அப்போஸ்தலன் பிலி. 3:5-6ஆம் வசனங்களில் வெளிப்படுத்துகிறார். அவரின் கடந்த காலம், அவரின் கடந்த காலமே. அது முடிந்துபோனது, கடந்துபோனது. அதை நான் மறந்துவிட்டேன் என்று கூறுகிறார். இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஓர் மறதித் தன்மையை தான் பெற்றதாக அவர் கூறவில்லை. கடந்தகால பாவச் சுமைகளையும், குற்றவுணர்வு களையும், தவறுகளையும் துண்டித்துவிட்டார். மாம்சக் கிரியைகளுடன் உள்ள அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டார். கடந்தகால குற்ற உணர்வுகளை நாம் மறக்காமல் மன உளைச்சலில் வாடினால், அது நம்மை முடக்கிவிடும். இதன் விளைவாக கிறிஸ்து நமக்கு அளித்துள்ள உண்மையான, விலையேறப்பெற்ற இரட்சிப்பின் மகிமையை, அனுபவிக்க முடியாத நிலை ஏற்படும். கடந்த காலத்தில் வெற்றி வாழ்க்கையை பின்நோக்கிப் பார்த்துக் கொண்டேயிருந்தால், அது நம்மை உணர்ச்சியற்றவர்களாகவும், சோம்பலிலும் நம்மை ஆழ்த்தி, முன்னேற்றத்தைத் தடுக்கும். “இங்கே நீங்கள் பற்றிக்கொண்டிருப்பது உங்களை அங்கே சென்றடைய விடாது” என்ற நூலில் மார்ஷல் கோல்ட்ஸ்மித் எழுதியுள்ளார். இதையேதான் பவுல் அப்போஸ் தலனும் குறிப்பிட்டுள்ளார்.

என்னிடம் கற்றுக்கொள்ள வருபவர்கள், தாங்கள் இழக்கவும், ஆதாயப்படுத்திக்கொள்ளவும் எந்த உந்துதலினால் ஏவப்படுகிறார்கள் என்பதை நான் விளங்கிக்கொள்ள பலமுறை முயற்சித்திருக்கிறேன். ஆனால், இதிலிருந்து, எதிர்காலத்தின் மீது தங்கள் கவனத்தைச் செலுத்தியிருக்கிறார்கள் என்பதை அறியலாம். எதிர்காலத்தில், ஒரு குறிப்பிட்ட காரியத்திலேயோ அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களிடமோ மனக்கஷ்டத்துடனும் குறைவுகளுடனும் வாழ விரும்புகிறீர்களா? அல்லது, எது எப்படி இருந்தாலும், ஓர் உயர் சிந்தையுள்ள உயர் நோக்கமுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா? ஆனால், என்னைப் பொறுத்தவரையில், அவற்றைப் பற்றிய ஓர் உள் நோக்கத்துடன் அல்லது ஓர் எதிர்காலக் குறிக்கோளுடன் செயல்படும் ஒருவன், சத்தியமும் மகிமையுமான ஓர் எதிர்காலத்தையே உற்று நோக்கிக் கொண்டு இருக்கவேண்டும். இதையே விசுவாசிகளாகிய நம்மிடம் பவுல் கேட்டுக்கொள்கிறார்.

4. பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடரவேண்டும்.

14ஆம் வசனத்தில் அவர் கூறுவதைப் பார்ப்போம். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.

எனவே, பவுல் பின்னானவைகளைப் பற்றிக் கவலைப்படாமல், ஒரே காரியத்தை மாத்திரம் தன்னால் செய்ய முடியும் என்று கூறுகிறார். எல்லைக்கோட்டை அடையும்வரை அவர் இலக்கை நோக்கித் தொடர்கிறார் . அதனால் அவர் பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

“நான் இலக்கை நோக்கித் தொடர்கிறேன்” என்று கூறுகிறார். இதிலிருந்து அவர் ஒரு பெரும் வாஞ்சையோடு ஓடுகிறார் என்று நாம் அறிந்துகொள்ளலாம். அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள, தனக்குள்ள யாவற்றையும், அற்பமும், குப்பையுமாக எண்ணுகிறார். அந்தப் பரிசு என்ன? பரிசு என்பதை சிலர் இரட்சிப்பைப் பற்றி கூறுகிறார் என்று நினைக்கலாம். பவுல் இரட்சிப்பைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. ஏனெனில், இரட்சிப்பை நாம், நமது சுய முயற்சியால் சம்பாதிக்க முடியாது. இரட்சிப்பு என்பது ஓர் ஈவு. இரட்சிப்பு நம்மால் உண்டானதல்ல. அது விலையேறப் பெற்றது. அதற்கு ஈடாக ஒன்றையும் விலைக்கிரையமாகச் செலுத்தவே முடியாது. கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சிப்பு கிடைக்கிறது. எனவே, பவுல் அப்போஸ்தலன் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடவில்லை. கிறிஸ்து, இரட்சிப்பைச் செய்துமுடித்ததினால், பவுல் அப்போஸ்தலன் தன் பந்தய ஓட்டத்தில் பரிசைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. பவுல் அப்போஸ்தலன் பரம அழைப்பின் பந்தயப்பொருளைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடினார். பெற்றுக்கொண்டார்.

இயேசுகிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நீங்கள் பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓட ஊக்கப்படுத்தப்படுகிறீர்கள். அது எவ்விதமான பரிசு? அது பரம அழைப்பின் பந்தயத்திற்கான பரிசு! அதனால்தான் ஆவிக்குரிய விசுவாசிகள் அந்தப் பரிசையே நாடித் தேடுகிறார்கள். நாமும் அந்தப் பரம அழைப்பின் பந்தயப் பொருளைப் பெற பிரயாசப்படுகிறோம்.

பரம அழைப்பின் பந்தயப் பொருள் என்றால் என்ன? பிலிப்பியர் 3:12இல் பவுல் கூறுவது என்ன? முற்றும் தேறினவர்களாக மாற அல்லது பூரணமடைய அதாவது கிறிஸ்துவைப்போல் மாற வேண்டும் என்பதே. இது நாம் நீதிமான்களாக மாறுவதற்கான ஒரு வழிமுறை அல்லது பரிசுத்தமடைவதற்கான ஒரு வழிமுறையாகும். வேறு விதமாகக் கூறவேண்டுமானால் இது ஒரு வேறு பிரிக்கப்பட்ட ஜீவியமாகும்.

இது உலகப்பிரகாரமான பரிசோ அல்லது மனிதனுக்குக் கிடைக்கும் பரிசோ அல்ல. நான்கு சக்கர வாகனங்கள் (கார்). நண்பர்கள், பேர் புகழ் அடைதல். கெளரவமான ஓர் வாழ்க்கை, பங்களா போன்ற வீடு, புகழ் விளங்க வைக்கப்படும் பெயர் பலகை. பானர்கள் வைத்தல் இவைப்போன்ற உலகப்பிரகாரமான பரிசைப் பெற்றுக்கொள்வதற்காக ஓடும் ஓட்டம் இது அல்ல. உங்கள் வாழ்க்கையென்னும் ஓட்டத்தில் இதுபோன்ற சில பரிசுகளை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நாம் ஓடுகின்ற ஆவிக்குரிய ஓட்டத்திற்கான பரிசு அல்ல.

இவற்றிற்காக நாம் ஓடவுமில்லை; கிறிஸ்துவைப்போல் பூரணமடைந்து பரிசைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஓடவேண்டும்,

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan


உங்களுக்குத் தெரியுமா?

எந்தவொரு காரியத்துக்கும் பரிசுத்த வேதாகமத்திலே பதில் உண்டு; ஆலோசனை உண்டு. ஆனால் நம் பிரச்சனை என்னவென்றால் காத்திருக்க நமக்குப் பொறுமை இல்லாதிருப்பதேயாகும். அதனால்தான் சவுல் ராஜா தள்ளுண்டு போனான்.