சகோதரி சாந்தி பொன்னு
(மே-ஆகஸ்ட் 2021)
தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார் (சங்.27:5).
“இது தண்டனையா ஐயா?” ராமு கேள்வி கேட்டதும், “தண்டனை என்றால் நானும் நீயும் எப்படித் தப்பியிருக்கிறோம்?” கேள்விக்குக் கேள்வி கேட்டார் ஓய்வு பெற்ற டேவிட் ஆசிரியர். “அப்போ இது நியாயத்தீர்ப்பா?” ராமுவும் விடவில்லை. “தம்பி, நியாயத்தீர்ப்பும் இவ்வளவு இலகுவாக வந்திடாது”. டேவிட் ஐயாவின் பதிலைக் கேட்ட ராமு தனது அடுத்த அம்பைத் தொடுத்தான். “ஐயா, அப்போ ஆண்டவர் நமது ஜெபங்களைக் கேட்கவில்லையா? அல்லது, கேட்டும் பதில் கொடுக்காமலிருக்கிறாரா?” இப்போ முதியவர் தெளிவாகப் பேசினார். “தம்பி, உனக்கு நீ நினைக்கின்ற பதில் வேண்டுமென்றால், கடவுள் எதற்கு? நம்மை வேதனைப்படுத்தி மகிழ்ந்திருக்கிற கொடுமைக்கார தேவனையா நாம் ஆராதிக்கிறோம்?˜ இந்தப் பாழாய்ப்போன உலகிற்கு இரட்சகராக வந்து, சிலுவை மரணத்தை ஏற்று மரித்து, உயிர்த்து நமக்கு வாழ்வு தந்தது எதற்காக? பிரச்சனை தேவனில் அல்ல, நம்மிடம்தான் இருக்கிறது. நடப்பவை யாவும் நமக்குப் பாதுகாப்பும் எச்சரிப்பும் கலந்த செய்திகளைத்தான் தந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்திகளை நாம்தான் உலகுக்கு, அதாவது தங்கள் இரட்சகரை அறியாத ஜனத்தண்டைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இந்த வெட்டிப்பேச்சுக்களையும், சந்தேகங்களையும் விட்டுவிடு” என்றார் முதியவர். ராமுவும் எதையோ புரிந்துகொண்டவன் போல நன்றி சொல்லிப் புறப்பட்டுப்போனான்.
பொதுவாக, இன்றைய சூழ்நிலை மக்களின் மனதில், கிறிஸ்தவர்கள் மனதில்கூட பல சந்தேகக் கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பிக்கிறபோது, இந்தியாவில் தொற்றுக் குறைந்து இயல்பு நிலை ஆரம்பித்திருக்கிறது என்ற ஓர் ஆறுதலான செய்தியைக் கேட்க நேர்ந்தது. ஆனால், அடுத்த சவாலாக, ஒருவித பூஞ்சை நோய் மக்களைப் பயமுறுத்துகின்ற செய்தியும் வந்தது. எமது இலங்கை தேசத்தில் வைரஸ் தொற்று இப்போதுதான் உச்சத்திற்குச் செல்லுகிறது என்று சொல்லுகிறார்கள். நமக்கு அன்பானவர்கள், உறவுகள் பாதிக்கப்படும் போது, மரணத்தைத் தழுவும்போது, அந்த வலி தாங்கமுடியாதது என்பதும், இன்றைய காலப்பகுதி மிகவும் கடினமும், சோதனை மிகுந்ததுமாயிருக்கிறது என்பதும் மெய்தான். என்றாலும், இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் மீட்கப்பட்ட நாம், செய்திகளும் பாதிப்புகளும் ஏற்படுத்துகின்ற சோர்வைக் களைந்துவிட்டு, நமக்கும் பிறருக்கும் ஆறுதலின் பாத்திரங்களாகத் திகழ கர்த்தர் நம்மைப் பெலப்படுத்துவாராக.
சமீபத்திலே இந்த வைரஸ் தொற்றினால் தன் அருமை மனைவியை இழந்த ஓர் ஊழியர், கதறி அழுதார். மனைவியின் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு, அடுத்த நாள் இன்னொருவரின் அடக்க ஆராதனையை நடத்திமுடித்த சம்பவம் என்னை உலுப்பிவிட்டது. பின்னர் அவருடன் பேசியபோது, “என் மனைவியின் இழப்பு என் பெலன் போனதுபோல இருந்தாலும், கர்த்தர் அவளுக்காக வைத்திருந்த பொறுப்புமிக்க ஓட்டம் முடிந்துவிட்டதால் ஆண்டவர் அவளைத் தன் இளைப்பாறுதலுக்குள் அழைத்துக்கொண்டார். கர்த்தருக்கே மகிமை” என்றார். சகல ஆறுதலின் தேவனுடைய ஆறுதல் என்கின்ற மாபெரும் கிருபையைப் பெற்ற பாக்கியவான்களாகிய நாம் அந்த ஆறுதலைப் பிறருக்கும் பகிர்ந்துகொள்வோமாக.
வேதம் எதையும் மறைக்கவில்லை
இன்றைய சூழ்நிலையைக் குறித்து பலர் பல வித வியாக்கியானங்களைக் கொடுக்கின்றனர். கர்த்தருடைய சத்தியவார்த்தை சகலத்தையும் நமக்குத் தெளிவாகத் தந்திருக்கும்போது, நம்மை நலிவடையச் செய்கிற செய்திகளுக்கு செவி கொடுக்காமல் இருப்பது நல்லது. வாழ்ந்தாலும் கர்த்தரோடு, மரித்தாலும் கர்த்தரோடு, இது போதும் நமக்கு! “உம்முடைய வருகைக்கும் உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்.24:3, லூக்.21:7) என்று சீஷர்கள் கேட்டபோது, ஆண்டவர் அவர்களுக்கு சகலத்தையும் விபரமாகவே விளக்கினார். “முடிவு உடனே வராது”, “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்”, எப்போது “முடிவு வரும்”, “தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று அறியுங்கள்” என்று பல வார்த்தைகளைச் சொன்ன ஆண்டவர், “இதோ முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்” என்று கூறியதையும் நாம் கவனித்தாகவேண்டும். ஆக, இவையெல்லாம் நடக்கும் என்றும், இவை யாவும் முடிவின் ஆரம்பம் என்றும் வேதவாக்கியம் நமக்குத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
நாம் யாவரும் ஜெபிக்கிறோம். ஆனால், என்ன சொல்லி ஜெபிக்கிறோம்?˜ பழக்க தோஷத்தில் ஜெபிக்கிறோமா?˜ தேவனுக்கு ஆலோசனை சொல்லுகிறோமா˜? அல்லது, அவர் எதையும் அறியார் என்று சூழ்நிலையைத் தெரிவிக்கிறோமா?˜ பவுலுடைய வசனத்தை இந்த இடத்திலே நினைவுபடுத்திக்கொள்வோம். “அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்?˜ அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” (ரோமர் 11:34, 35). இன்று ஆராதனைக்கோ ஜெபத்திற்கோ நாம் நேரடியாக ஒன்றுகூட முடியாவிட்டாலும், பலவிதங்களில் எத்தனை விதமான ஜெபகூடுகைகள்! எத்தனை வேதப் படிப்புகள்! இவற்றுக்கூடாக, இந்த இக்கட்டான சூழ்நிலை நமக்கு உணர்த்துவது என்ன?
1. நம்பிக்கை
கர்த்தருடைய பிள்ளைகள் நாம் ஒரு அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கையை (1பேதுரு 1:4)) நோக்கி விசுவாசத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தைத் தடை பண்ண ஏராளமான தடைகள் குறுக்கிட்டு வரும் என்று வேதவாக்கியங்கள் நம்மை எச்சரித்திருக்கின்றன. என்றாலும், நமக்கொரு மகா பிரதான ஆசாரியர் இருக்கிறார் என்ற உறுதியில் நாம் முன்னேறிச் செல்லுகின்றோம். வேதவாக்கியங்கள் யாவும் ஒன்றன்பின் ஒன்றாகத் துல்லியமாக நிறைவேறிக் கொண்டிருப்பதை நாம் அறிவோம். எப்படித்தான் நமது அறிவுக்கு அது தெரிந்திருந்தாலும், அவற்றுக்கு முகங்கொடுக்கும்போது மனிதராக நாம் தடுமாறிப்போவதை மறுக்க முடியாது. அப்படியொரு சூழ்நிலைக்குள்தான் இன்று நாம் அகப்பட்டிருக்கிறோம். எத்தனை மரண ஓலங்கள்! எத்தனை அவலங்கள்! ஒவ்வொரு வீட்டிலும் கண்ணீர்! பட்டினி! அப்போ தேவன் மனிதனைக் கைவிட்டார் என்போமா? இல்லை. அவர் வாக்குமாறாதவர்; கைவிட மாட்டார். அப்போ கைவிட்டது யார்? நாமேதான் நம்பிக்கையைக் கைவிட்டு விட்டு, நமக்குத் தீவினையைத் தேடிக்கொண்டோமா என்று எண்ணத்தோன்றுகிறது. என்றாலும் வேத வாக்கியம் சத்தியம். தெய்வீக நம்பிக்கை நம்மை ஏமாற்றாது. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” (மத்.11:28) என்ற ஆண்டவரிடம் செல்லுவதில்தான் நாம் தடுமாறுவதுண்டு.
கொசுவலை
நீங்கள் யாராவது கொசுவலைக்குள் படுத்து உறங்குவதுண்டா? ஆரம்பத்தில் சற்றுக் கஷ்டமாக இருந்தாலும், பழகிவிட்டால் அதற்குள் படுக்கும்போது ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுப்பதை மறுக்கமுடியாது. கொசு நம்மை நெருங்கமுடியாது; நமது கால்களின் சின்ன விரல் நுனியில் எந்தக் கொசுவும் கடிக்கமுடியாது. நமது காதுகளில் அதன் ரீங்கார சத்தமும் கேட்காது. கொசு மாத்திரமல்ல; வேறு எந்த பூச்சிகளோ வண்டுகளோ நம்முடைய தூக்கத்தைக் கெடுக்கவும் முடியாது. அப்படியொரு உறுதியைக் கொசு வலை தரும். ஒரு சகோதரி தங்கள் அனுபவத்தை இப்படியாகக் கூறினார். இலங்கையின் யுத்தகாலத்தில் இடம் பெயர்ந்து ஓர் இடத்தில் தங்கியிருந்தபோது, அங்கே தூங்குவதற்கு பாய் மாத்திரமே கிடைத்ததாம். கொசுத் தொல்லை தாங்க முடியவில்லையாம். ஆகவே, கொசுவலையைக் கட்டித்தொங்கவிட்டு, பாய்க்குக் கீழே அதைச் சொருகி, அது வெளிவராதபடி சின்னச்சின்ன மண் மூட்டைகளைச் செய்து ஆங்காங்கே வைத்திருந்தார்களாம். அப்படியாகத் தகப்பனும் சின்னக் குழந்தையும் நிம்மதியாகத் தூங்கி எழுந்து காலையில் பாயைத் தூக்கினால், பாய்க்கு அடியில் ஒரு விஷப் பாம்பு சுருண்டு கிடந்ததைக் கண்டார்களாம். “கொசு வலை கொசுவிலிருந்து மாத்திரமல்ல, எல்லா விஷ ஜந்துக்களிலிருந்தும் நம்மைப் பாது காக்கிறது’ என்று கண்ணீர் மல்க தன் அனுபவத்தைக் கூறினார். இந்தக் கொசு வலைக்குள் இத்தனையா என்று சிந்திக்கிறீர்களா?
கூடாரமறைவு
இந்தச் சங்கடமான காலத்தில் இந்தக் கொசு வலையைப்பற்றி ஏன் எழுதுகிறேன் என்று நீங்கள் எண்ணலாம். இந்தச் சாதாரண கொசு வலை நம் கண்களுக்குத் தெரிகின்ற கொசுக்களின் கடியிலிருந்து வரக்கூடிய தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாத்து நிம்மதியாய்த் தூங்குவதற்கு ஏதுவாக இருக்குமானால், நமது கண்களுக்கு தெரியாத வைரஸ் கொண்டுவருகின்ற தீங்கிலிருந்து நமது தேவனுடைய கூடாரமறைவு எத்தனை பெரிய பாதுகாப்பை நமக்குத் தரக்கூடும் என்பதை நாம் சிந்திக்கவேண்டும்.
‘தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்’ (சங்.27:5). இந்த வசனத்தில் இரண்டு காரியங்களைக் காண்கிறோம். தீங்குநாளில் தம்மிடம் புகலிடம் தேடி ஓடிவருகிற வர்களைக் கர்த்தர் தம்முடைய கூடாரத்துள் இழுத்து, மறைத்துக்கொள்கிறார். துரத்திவருகின்ற சத்துரு, அது எதுவாக இருந்தாலும், அது நம்மைக் கண்டுபிடிக்க முடியாதபடி மறைத்துக்கொள்கிறார். மாத்திரமல்ல, கூடார மறைவிலே ஒளித்தும் வைக்கிறார். கூடாரத்துள் இழுத்துக் கொள்கிறவர், தீங்கு அணுகாமல் மாத்திரமல்ல, அது நம்மைத் தொடாதபடி தமது கூடாரத்தின் மறைவுக்குள் ஒளித்தும் வைக்கிறார். தேடிவருகின்ற சத்துரு, “இவன் தொலைந்தான்” என்று திரும்பிப்போகும்போது, அவர் நம்மை கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் உயர்த்திடுவார். இது கர்த்தருடைய சத்திய வார்த்தை.
ஆனால் நாம்தான் அவருடைய மறைவுக்குள் செல்லத் தயங்குகிறோமே! அதற்குள் செல்ல வேண்டுமானால் நமது சுயபெலத்தை, சுய ஞானத்தை, சுய முயற்சியை மொத்தத்தில் சுயத்தை விட்டுவிடவேண்டும். “உன்னதமானவருடைய மறைவிலிருக்கிறவன்” என்றுதான் வார்த்தை கூறுகிறது. பேழைக்குள் நோவா தானேதான் செல்லவேண்டும். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்கள் தாமேதான் கிறிஸ்துவண்டை வரவேண்டும். வருகிற எவரையும் அவர் தள்ளமாட்டார். கிழிந்து போகக்கூடிய கொசுவலையே நமக்குப் பாதுகாப்புத் தருமானால், நித்தியருடைய அழியாத கூடாரமாகிய நித்திய நம்பிக்கை நமக்கு நித்திய பாதுகாப்பைத் தராமல் போகுமா?
ஆகவே, சூழ்நிலைகள் மாறினாலும், நம்பிக்கையை இழந்துபோகக்கூடிய சந்தர்ப்பங்கள் நேரிட்டாலும், கர்த்தரிலுள்ள நம்பிக்கையில் சிறிதேனும் வழுவிவிடாமல், அன்றாட வாழ்வில் விசுவாசத்தோடு முன்செல்லுவோமாக. நமக்கு முன்னே ஒருவர் செல்லுகிறார். அவர் யாவையும் அறிந்திருக்கிறார். தமது பிள்ளைகளுக்கு நன்மையானதையும், தமது பிள்ளைகளுக்கூடாகத் தமது நாமம் மகிமைப்படுவதையும் அவர் நிச்சயம் செய்வார். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். நமது இருதயமாகிய பலிமேடையைச் சீர்செய்து, விசுவாசத்தோடு நம்மை ஜீவபலிகளாக சமர்ப்பணம் செய்வோம். மற்றவற்றை அவர் பார்த்துக்கொள்வார்.
2. பயம்வேண்டாம்
சமீபத்திலே தமிழ்நாட்டின் தொற்றுவியாதி நிபுணரான மருத்துவர் ஒருவர் கூறியதை உங்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும். “இந்தத் தொற்று அதிகளவில் பரம்புவதற்குரிய காரணம் என்ன?” என்ற கேள்விக்கு அவர் கூறிய ஒரே பதில், “பயம்” என்பதுதான். பயம் மனதையும், கூடவே சரீரத்தையும் நலிவடையச்செய்வது எப்படி என்று அவர் நன்கு விளக்கமளித்தார்.
தேவன் நமக்காக வைத்திருக்கின்ற நித்திய வாழ்வில் அசைக்கமுடியாத நம்பிக்கை நமக்குண்டு. அதை நோக்கிய விசுவாச ஓட்டத்தில் நாம் தேவகிருபையால் ஓடிக்கொண்டிருக்கிறோம். பரிசுத்தாவியானவர் நம்மோடு இருக்கிறார். இவை எதிலும் நமக்குச் சந்தேகமே இல்லை. வேதவாக்கியங்களையும், வேதவாக்கியத்தில் எழுதியிருக்கின்ற தேவனுடைய வாக்குத்தத்தங்கள், அவருடைய மகத்தான கிரியைகள் யாவையும் ஓரளவுக்காகவாவது நாம் அறிந்திருக்கிறோம், அவற்றை விசுவாசிக்கிறோம். என்றாலும் சூழ்நிலைகள், கேள்விப்படும் செய்திகள், பார்க்கின்ற சம்பவங்கள் நம்மைத் திடுக்கிடச்செய்வது உண்மைதான். அது இயல்பான விஷயம். ஆனால், இந்தக் காரியங்கள் நம்மைச் செயலிழக்கச் செய்கின்ற ஒரு காரியத்தை நமக்குள் தோற்றுவித்துவிடுகிறது, அதற்குள் நாமும் அகப்பட்டுவிடுகிறோம். அதுதான் பயம். இதற்கு நாம் இடமளிக்கும்போது நமது நம்பிக்கையிலும் தளர்ச்சி ஏற்பட்டுவிடுவது உறுதி.
யாரைப் பார்த்தாலும், கடைகளில் எதை வாங்கினாலும், வீட்டைவிட்டுப் புறப்பட்டாலும் ஒரு வித பயம். வைரஸ் நம்மையும் பிடித்திடுமோ? நம்மால் நமது குடும்பமும் பாதிக்கப்பட்டுவிடுமோ? அப்படியும் ஒரு பயம். தடுப்பூசி போடுவதற்கும் பயம், போடாவிட்டாலும் பயம். நாம் தடுப்பூசி போடுவதற்குப் போனால், “உங்களுக்கு விசுவாசம் இல்லையா?” என்று கேலி பண்ணுகிறவர்களுக்கும் பயம். இந்தப் பயம் மனிதனுக்கு இயல்பாகவே தோன்றுமென்றாலும், அது நம்மை மேற்கொள்ள விடக்கூடாது. பயத்திற்கு இடமளித்தால், அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மைச் சாகடித்து விடும். மனிதனைச் செயலிழக்கச் செய்கின்ற சத்துருவின் மிகப் பலமான ஆயதம் இந்தப் பயம்தான் என்றால் மிகையாகாது. ஒரு மனிதனின் வாழ்வில் என்னவெல்லாம் நேரிடுமோ அவற்றுக்கெல்லாம் நம்மைத் தப்புவிக்கின்ற, பாதுகாக்கின்ற, பலப்படுத்துகின்ற தேவனுடைய வாக்குகள் நமக்குண்டு. வேதத்திலே ஏறத்தாழ 366 தடவைகள் “பயப்படாதிருங்கள்” என்ற வார்த்தை எழுதப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருந்தும் நாம் ஏன் பயப்படுகிறோம்?
பயப்படுவது இயல்பான விஷயமாயிருக்கலாம்; ஆனால், பயத்துக்கு நாம் அடிமைகளாகி விடக்கூடாது. கர்த்தருடைய பிள்ளைகளான நாமே, நாளை மாறிப்போகின்ற இந்த அநித்திய காரியங்களுக்குப் பயப்படுவோமானால், எப்படி மற்றவர்களைத் திடப்படுத்துவது? “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்” (நீதி.29:25). “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் (நீதிமான்) இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்” (சங்.112:7). இப்படியிருக்க நாமே துர்ச்செய்திகளைக் கேட்டுப் பயந்து நடுங்கினால், பிறருக்கு நாம் எப்படித் தைரியம் கூறுவது? கர்த்தருக்கு மாத்திரமே பயப்படும் பயத்தினால் நமது இருதயத்தை நிரப்புவோமாக. அப்போது நாளை மாறிப் போகும் இந்தப் பயங்கள் நம்மை எதுவும் செய்யாது.
3. எச்சரிப்பு
இன்றைய நிகழ்வுகள் மத்தியில் நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது என்ற சத்தியம் நம்மைத் தேற்றினாலும்கூட, இந்தச் சங்கதிகள் நமக்குப் பெரிய எச்சரிப்பையும் தருகிறது என்பதில் ஐயமில்லை. நாம் செய்யத் தவறியவைகள், அல்லது தவறவிட்ட தருணங்கள், மற்றது, செய்ய வேண்டிய கட்டாயங்கள் இவற்றைக் குறித்து நாம் சற்று விழிப்படையவேண்டியது அவசியம். நமது இருதயம், நமது செவிகள் தேவனுக்குத் திறந்திருக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளுவோம். ஏனெனில், தமது பிள்ளைகளின் வேதனையில் மகிழ்ந்திருக்கிறவர் அல்ல நமது ஆண்டவர். இயேசு தாம் செய்யப்போவது இன்ன தென்றும், லாசரு நிச்சயம் உயிர்த்தெழுவான் என்றும் அறிந்திருந்தாலும், மரியாள் மார்த்தாள் அழுதபோது, ஆவியில் கலங்கியவராய் அவரும் கண்ணீர் விட்டார் அல்லவா!
ஆம், நேரிடவேண்டியவைதான் நேரிடுகின்றன; இன்னமும் நேரிடும். சொல்லப்பட்டவைகள் அனைத்தும் நடந்தேறும். ஆனால், ஆண்டவர் இன்றும் தமது மக்களுக்காக ஏங்கிநிற்கிறார். சிதைந்துபோன மனிதவாழ்வுகள் சீராக்கப்பட யார் வருவார் என்று அவர் நமக்காகவே காத்திருக்கிறார். “என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக் கட்டுவாரில்லை” (எரேமியா 10:20).
எரேமியா 10:19-21 பகுதியிலே கர்த்தருடைய வேதனையை எரேமியா எடுத்துரைப்பதைக் காணலாம். இந்த இடத்திலே தங்கள் கூடாரங்கள் அறுந்துபோன நிலையில் அதைத் தூக்கிக்கட்ட யாருமின்றி அலைகின்ற நாடோடிகளின் காட்சியை எரேமியா உபயோகிக்கிறார். இங்கே யூதாவின் மேய்ப்பர்கள் அவர்களைச் சீராக மேய்ப்பதைவிடுத்து, அவர்களைப் பாதுகாப்பதை விடுத்து, அவர்களுடைய கூடாரங்களை அழியவிட்டு, மந்தையைச் சிதறடித்துவிட்டார்கள் என்ற கர்த்தருடைய மனவேதனையை எரேமியா எடுத்துரைக்கிறார். இன்று இப்படிச் சிதறடிக்கப்பட்ட ஏராளமான மக்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். இயேசு அவர்களுக்காகவும் இரத்தம் சிந்தினாரல்லவா!
சுவிசேஷ ஊழியம் எங்கே?
உலக இரட்சகராகிய இயேசு, தமது கரத்தின் கிரியைகளாகிய மக்களின் மனந்திரும்புதலுக்காக இன்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார். கர்த்தராகிய இயேசுவின் திருரத்தத்தினால் உருவாக்கப்பட்ட அவருடைய சரீரமாகிய திருச்சபை அதை உணருகிறதா? திருச்சபை என்பது யார்? நாமே தான். ஆரம்ப காலத்திலே சுவிசேஷம் ஒன்றுதான் திருச்சபையின் மூச்சாக இருந்தது. மிஷனெரிகள் காலத்தில் சுவிசேஷம் மாத்திரமல்ல, ‘உனக்குப் பிறன் யார்’ என்று இயேசு கேட்ட கேள்விக்குப் பதிலாக, சமூகத்திற்குத் தேவனுடைய அன்பைச் செயல் விளக்கத்தில் காட்டத்தக்கதாக காரியங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று நாம் திருச்சபையாக என்ன செய்கிறோம்? திருச்சபை தேவனுடைய பெரிய கட்டளையை இன்று என்ன செய்கிறது என்பதைச் சிந்திக்கவேண்டும். தன்னைத் தான் வளர்ப்பதிலும், இருக்கிறவர்களை மேலும் மேலும் போஷிப்பதிலும், செய்திகள் பாடல்கள் என்று நிகழ்ச்சி நிரல்களிலும் சபை கடந்துசென்று விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இன்றைய இந்தத் தொற்றுவியாதியில் மரித்துப் போன பெருந்திரளான மக்களில் கிறிஸ்துவின் நாமத்தை அறியாமலேயே மரித்துப்போனவர்கள்தான் ஏராளம். அந்த ஆத்துமாக்களின் நிலை என்ன? இதன் கணக்கு யாரிடம் கேட்கப் படும்? “நரகத்தைப் பார்த்த ஒருவனால் சுவிசேஷத்தை அடக்கிவைக்க முடியாது’ என்ற அர்த்தத்தில் டீ.எல்.மூடி அவர்கள் செய்த பிரசங்கத்தை நாம் நினைவுபடுத்துவது நல்லது.
நம்முடைய பிறன் எங்கே?
அடுத்தது, இன்று இந்தக் கொடூரமான சூழ்நிலையில், ஏராளமான மக்கள் பசியிலும் பட்டினியிலும் தவிக்கிறார்களே! இதைக் குறித்து திருச்சபையின் உணர்வுதான் என்ன? “என் குழந்தை பசியினால் அழும்போது, சுடுநீர் கொடுத்துத் தேற்றுவேன்” என்று ஒரு இளம் தாய் கண்ணீருடன் சொன்னாள். அடுப்புக் காய்ந்த நிலையில் இன்று எத்தனை குடும்பங்கள்! அன்று தங்கள் இல்லாமையிலும் இருப்பதைப் பவுலிடம் கொடுத்து, அவர் அதை அனுப்பி, மற்ற விசுவாசிகளைப் போஷித்த சங்கதிகளைத்தான் நாம் வேதத்தில் படிக்கிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம். கடைசி நாளிலே, “பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் காவலிலடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை” (மத்.25:42,43) என்று கேட்கப்படும்போது, திருச்சபை என்ன பதில் சொல்லும்?
கிறிஸ்து உயிர்த்தெழுந்து பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே கடைசிக்காலம் ஆரம்பமாகிவிட்டது என்பதை நாம் அறிவோம். முதலாம் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்களே கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருந்தார்கள். அத்தனை உபத்திரவங்கள் அவர்களுக்கு. இன்று அப்படிப்பட்ட உபத்திரவங்கள் நமக்கு இல்லை. இன்று நாம், கடைசிக்காலத்தின் கடைசிப் பகுதிக்குள் வந்துவிட்டோம். கர்த்தருடைய வருகை ஆகாயத்திலே இன்று இருக்குமானால், தமது மணவாட்டியை அழைத்துக்கொள்ள அவர் இன்று வருவாரானால், நாம் எங்கே? நமது திருச்சபை எங்கே? நாமும் ஆயத்தமாகி, பிறரையும் ஆயத்தமாக்கவேண்டிய மிகப்பெரிய பொறுப்பைக் கொண்டிருக்கிற நாம் நல்ல உக்கிராணக்காரராய் தேவனுடைய வேலையை உத்தமமாய் செய்கிறோமா என்பதை எச்சரிப்புடன் சிந்தித்துப் பார்ப்போம்.
சபையில் இன்னுமொரு சாராரும் உண்டு. இன்னமும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளாமல் பெயர் கிறிஸ்தவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். பிரியமானவர்களே, கடைசி நேரம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால் அது ஆபத்தையே விளைவிக்கும். எத்தனை பேருக்கு மருத்துவமனையில் கட்டிலோ ஆக்சிஜன் வாயுவோ இல்லாமற்போனதை நினைவுபடுத்துவோம். தயவு பண்ணி இன்றே உங்கள் வாழ்வை ஆண்டவரிடம் அர்ப்பணித்து விடுங்கள். ஆண்டவரையே அறியாமல் மரிக்கிறவர்களிலும், அறிந்திருந்தும் அவரை ஏற்றுக்கொள்ளாமல் மரிப்பது அதிக பரிதாபத்திற்குரியதல்லவா!
நமக்காக ஒரு கூடாரமறைவு உண்டு என்பதே சத்தியம். அதை மறக்கும்போது பயமும் சந்தேகமும் நம்மைத் தேவனிடமிருந்து துரத்திவிடுகிறது. அந்த மறைவு நமக்கு மாத்திரமல்ல, இன்று சகலருக்கும் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது. யார் யார் அதனுள் செல்லுகிறார்களோ அவர்கள் யாவரையும் கர்த்தர் தீங்குக்கு விலக்கிக் காப்பது சத்தியம். இந்த சத்தியத்தை அறிந்திருக்கிற நாம் மாத்திரம் தப்பிப்பிழைத்தால் போது மென்று இராதபடிக்கு, அந்தக் கூடாரமறைவின் மகிழ்ச்சியைப் பிறருக்கும் அறிவிப்போமாக. இன்று தேசத்திற்கு ஒரேயொரு தேவைதான் உண்டு. அந்தத் தேவை “கிறிஸ்து” மாத்திரமே. அதை உணர்ந்து, பயத்தை உதறித்தள்ளிவிட்டு, நம்பிக்கையோடு முன் சென்று, பிறரையும் திடப்படுத்தி, கர்த்தரை ஆகாயத்திலே முகமுகமாய் சந்திக்க நாமும் ஆயத்தமாகி, பிறரையும் ஆயத்தமாக்குவோமாக. ஆமென்.