Dr.W.வாரன் வியர்ஸ்பி
(மே-ஆகஸ்ட் 2021)

ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி:இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்.23:42,43).


(கடந்த இதழில் வெளியான இன்றைக்கு என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்! என்ற செய்தியின் தொடர்ச்சி)

அவனுடைய இரட்சிப்பில் ஆச்சரியப்படத்தக்க மூன்றாவது காரியமும் உண்டு. ஆச்சரியப்படத்தக்க சூழ்நிலை மற்றும் ஆச்சரியப்படத்தக்க விண்ணப்பமும் அன்றி அவன் இரட்சிப்படைந்ததும் ஆச்சரியப்படத்தக்க ஒன்றாகும்.

இழந்து போனதைத் தேடவும், இரட்சிக்கவுமே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வந்தார். இயேசு கிறிஸ்துவை தங்கள் இரட்சகராக ஏற்று, இரட்சிப்பை பெறவேண்டும் என்று அறியாதவர்களை, நாம் இரட்சிப்பிற்குள் கொண்டுவர முடியாது. தாங்கள் கிறிஸ்துவை அறியாது வழி தப்பிப்போனவர்கள் என்று மக்கள் உணராதிருப்பதே இன்றைய பிரச்சனை. தாங்கள் வழிதப்பிப் போன ஆடுகளைப் போலிருக்கிறோம் என்பதை மக்கள் உணரவில்லை. தவறான வழியில் பயணிக்கும் மந்தைகளோடு அவர்கள் பயணிக்கின்றனர். அழிவை நோக்கி வழிநடத்தும் விசாலமான பாதையில் அவர்கள் பயணிக்கிறார்கள். அவர்கள் காணாமற்போன காசுகள் – அவைகள் மதிப்புள்ளவைகள். ஆனால் காணாமற் போன காசுக்கு மதிப்பு இருந்தும் அதனால் பயன் என்ன? தங்கள் தகப்பனை ஒருசிறிதும் மதிக்காது தூர தேசத்திற்குக் கடந்துபோன காணாமற்போன குமாரரும் குமாரத்திகளுமாவர்.

இந்தக் கள்ளன் தான் காணாமற்போனவன் என்பதைக் கண்டுகொண்ட மனிதன். தான் ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டவன் என்பதை அறிந்துகொண்டவன். அதனால்தான் அவன் இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தரும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் (லூக். 23:42,43).

ஆச்சரியப்படத்தக்கவிதமாகக் காணப்படும் இந்த இரட்சிப்பின் பண்புகள்தான் என்ன?

1. இரட்சிப்பு என்பது முற்றிலும் கிருபையால் கிடைப்பது:

முதலாவது இரட்சிப்பு என்பது முற்றிலும் கிருபையால் கிடைப்பது. இந்த கள்ளன் இரட்சிப்பைப் பெற ஒரு சிறிதும் தகுதியற்றவன். முதலாவது ஆதாம் கள்ளனாக மாறி பரதீசிலிருந்து தள்ளப்பட்டான். கடைசி ஆதாமாகிய இயேசுகிறிஸ்து கள்ளனைப் பார்த்து, இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று கூறினார். அன்பானவர்களே, இதுதான் கிருபை! நரகத்திற்குத் தள்ளப்படத் தகுதியான நம்மை தமது மிகுந்த இரக்கத்தால் நரகத்திற்குத் தள்ளாமல், பரலோகத்தைப் பெறத் தகுதியற்ற நமக்கு தேவன் தமது கிருபையினால் பரலோக பாக்கியத்தைத் தந்தருளினார்.

இந்தக் கள்ளன் தனக்குத்தானே தன் முயற்சியினால் இந்த இரட்சிப்பை சம்பாதிக்க முடியாது. பரலோகம் செல்ல வேண்டுமென்றால் பத்துக் கற்பனைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறும் மக்களை நான் அறிந்திருக்கிறேன். மரிக்கும் தருவாயில் இருந்த இந்தக் கள்ளனுக்கு பத்துக் கற்பனைகளைக் கடைப்பிடிப்பதற்கான தருணமே இல்லை. பரலோகம் செல்ல வேண்டுமானால் சில சமய சடங்காசாரங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்று வேறு சிலர் கூறுவார்கள். இரட்சிப்பை ஒரு கடினமான காரியம் என்று குழப்பவேண்டாம். இந்த கள்ளனுடைய இரட்சிப்பு முற்றிலும் தேவனுடைய கிருபையால் கிடைத்தது. இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள இக்கள்ளன் ஒரு சிறிதும் தகுதியற்றவன். இவன் இரட்சிப்பை சம்பாதிக்கவில்லை. ஆனால் தன் எளிய விசுவாசத்தால் அதைப் பெற்றுக்கொண்டான்.

உங்களுக்கு விசுவாசமிருந்தால், உங்களுக்குக் கிருபை உண்டாயிருக்கும். உங்களுக்கு நியாயப் பிரமாணமிருந்தால் நீங்கள் கிரியை செய்ய வேண்டும். இந்தக் கள்ளன் தன் இரட்சிப்பிற்காக கிரியை செய்யமுடியாது. அவனால் செய்யக்கூடிய காரியம் என்னவென்றால், தேவனுடைய கிருபையின் ஈவாக அவன் இரட்சிப்பை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

கிருபையின் ஈவாக தேவனிடமிருந்து நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது நான் அதிகமான ஜெபங்களை ஏறெடுக்கிறேன், அநேகக் கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். அநேக நற்காரியங்களைச் செய்கிறேன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இதுதான் உங்கள் நிலையானால் நீங்கள் இரட்சிப்படைய முடியாது. ஏனென்றால் கிருபையினால் நாம் இரட்சிக்கப்படும் பொழுது, நாம் பெருமைப்பட்டுக்கொள்ள ஒன்றுமில்லை. கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு, இது கிரியைகளினால் உண்டானதல்ல (எபேசி. 2:8,9).

2. இரட்சிப்பு நிச்சயமானது, உறுதியானது!

இந்த ஆச்சரியமான இரட்சிப்பைப் பற்றி இன்னும் கூறவேண்டுமானால், இரட்சிப்பு உறுதியானது. இரட்சிப்பை பெற்றுக்கொண்டேன் என்று நம்புகிறேன் என்றோ, இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டேன் என்று அனுமானிக்கிறேன் என்று கூறும் நம்பிக்கையற்ற நிலையல்ல. ஆமென். மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன். இவ்வாறுதான் இயேசு அக்கள்ளனிடம் கூறினார். மெய்யாகவே (ஆமென்) நான் உனக்குச் சொல்லுகிறேன் என்று இயேசு உறுதிபடக் கூறினார் (லூக்.23: 43). இந்த கள்ளன் தான் பெற்ற இரட்சிப்பு உறுதியானது என்ற எவ்வாறு அறிந்துகொண்டான்? ஏனென்றால் இயேசு அவனிடம் மெய்யாகவே என்று உறுதிபடக் கூறினார். இன்று நீங்கள் கேட்கலாம். என்னிடம் நேரடியாகப் பேசுவதற்கு இங்கு இல்லையே என்றும்; அவர் பேசுவது எனக்குத் தெளிவாகக் கேட்கவில்லை என்றும் கூறலாம். ஆனால் அவருடைய வசனம் நம்மோடு இருக்கிறது; அது பேசுகிறது. வேதத்தில் நாம் வாசிக்கும் வசனங்கள் அனைத்தும் ஆம் என்றும் ஆமென் என்றும் உறுதியான வசனங்களாக இருக்கிறது.

நீங்கள் மரணத்தைச் சந்திக்கும்வரைக்கும் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது இல்லையா என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இவ்வாறு நானும் சில சமயம் சிந்திப்பேன்! நான் மரிக்கும்முன் நான் மோட்சத்திற்குப் போவதை அறிய விரும்புகிறேன். கள்ளனும் அவ்வாறே எண்ணினான். தகுதியற்ற கள்ளன் தான் பரதீசுக்குப் போகப்போகிறேன் என்பதை நன்கு அறிந்திருந்தான். அவனுக்கு அது எப்படித் தெரிந்தது? இயேசு அவனுக்கு அதை சொல்லியிருந்தார்.

இயேசு என் நேசர்; இயேசு என் நேசர்
கண்டேன் வேத வாக்கிலே
மெய்வேத வாக்கு இதுவே
என்னை மீட்க மரித்தார்
மோட்சவாசல் திறந்தார்
கண்டேன் வேதவாக்கிலே

என்ற பல்லவி இதற்கு பொருத்தமானது.

3. இரட்சிப்பு என்பது தனிநபருக்கே உரியது

இரட்சிப்பின் மூன்றாவது சிறப்புத்தன்மை அது தனி மனிதனின் அனுபவமாகும். இரட்சிப்பு முற்றிலும் கிருபையால் கிடைப்பது. அது நிச்சயமானது, உறுதியானது (ஆம் என்றும் ஆமென் என்றும்) தனிநபரின் அனுபவம். இயேசு அந்தக் கள்ளனி டம்தான் கூறினார். மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன் என்று (லூக்.23:43).

தேவன் நம் ஒவ்வொருவரையும் தனித் தனியே நேசிக்கிறார். தேவன் இவ்வளவாய் அன்பு கூர்ந்தார் என்று யோவா.3:16இல் வாசிக்கிறோம். தேவன் என்னில் அன்புகூர்ந்து எனக்காக தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார் (கலா.2:20) என்று பவுல் எழுதுகிறார். நம் தனிப்பட்ட ஒவ்வொருவருக்காகவும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மரித்தார். தனித்தனியே நம் ஒவ்வொருவரிடமும் தேவன் தம் அன்பை வெளிப்படுத்துகிறார். தேவன் நம் ஒவ்வொருவரையும் நேசிக்கிறார். ஒரு கூட்ட மக்களின் ஒரு பகுதியாக தேவன் நம்மைக் கருதுவது இல்லை. ஒரு பெருங்கூட்டத்தை மொத்தமாக தேவன் இரட்சிப்பது இல்லை. ஆனால் தனி மனிதனை தனித்தனியே இரட்சிக்கிறார். இப்படிப் பட்ட தனி மனிதனுக்குரிய இரட்சிப்பைத்தான் கள்ளனுக்குக் கொடுத்தார்.

4. உடனே பெறும் இரட்சிப்பு

இரட்சிப்பு என்பது தனிமனிதனுக்குரியது. உடனே பெற்றுக்கொள்ளும் இரட்சிப்பு. இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் (லூக். 23:43). இன்றைக்கே என்ற பதத்தை உற்று நோக்குங்கள். ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று அந்தக் கள்ளன் கூறினான். வருங்காலத்தில் ஒரு நாளில் உமக்கு ஒரு ராஜ்யம் இருக்கப்போகிறது. அவ்வாறு அந்த ராஜ்யத்தை நீர் பெறும்பொழுது நீர் என்னை நினைத்தருளும் என்று அந்தக் கள்ளன் கூறுவது போலிருக்கிறது. ஏன் வருங்காலத்திற்காகக் காத்திருக்கவேண்டும்? இந்த நிமிஷமே உனக்கு இரட்சிப்பைக் கொடுக்கிறேன். இன்றைக்கே என்று இயேசு கூறினார்.

இரட்சிப்பு ஒரு தொடர் நிகழ்வு அல்ல. இன்று ஒரு சிறிது இரட்சிப்பு, மறுவாரம் இன்னும் கொஞ்சம் இரட்சிப்பு, மறுவருடம் இன்னும் சற்று அதிகமான இரட்சிப்பு என்று இரட்சிப்பு ஒரு தொடர் நிகழ்வு அல்ல. நீங்கள் உங்கள் விசுவாசத்தை இயேசு கிறிஸ்துவின் மீது வைக்கும்பொழுது, தேவ வல்லமையால் அந்த வினாடியே பெற்றுக்கொள்ளக்கூடிய ஆவிக்குரிய அனுபவமாகும். இன்றைக்கு நீ என்னோடேகூடப் பரதீசிலிருப்பாய். இரட்சிப்பு தனித்தனி மனிதனுக்கே உரியது. உடனே பெற்று அனுபவிக்கும் ஒன்று.

5. இரட்சிப்பு கிறிஸ்துவையே மையமாகக் கொண்டது.

இரட்சிப்பு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையே மையமாகக் கொண்டது என்பதை நான் அறிகிறேன். இரட்சிப்பு என்பது இயேசுகிறிஸ்துவுக்கு சொந்தமானது. இக்கள்ளனைப்போல் இயேசு கிறிஸ்து ஆக்கினைத்தீர்ப்புக்கு ஒப்புவிக்கப்பட் டார். இதுதான் சிலுவை என்பது. இரட்சிப்பு என்பது மோசேயை மையமாகக்கொண்டது அல்ல, கற்பனைகளைக் கைக்கொள்வதும் அல்ல; இது யோவான் ஸ்நானனை மையமாகக்கொண்டதுமல்ல. இது ஒரு சில போதகர்களையோ, சில திருச்சபைகளையோ அல்லது கடந்தகால பிரசித்திப் பெற்ற சில மனிதரைப்போல் அல்ல.

நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று இந்த கள்ளன் மற்றொரு கள்ளனைப் பார்த்து சொல்ல முடியாது. ஏனென்றால் அவன் நண்பனுக்கு ஒரு ராஜ்யம் இல்லை. இந்தக் கள்ளன் போர்வீரர்களைப் பார்த்தோ, அங்கு நின்ற சமயத்தலைவர் களைப் பார்த்தோ அல்லது ஆசாரியர்களைப் பார்த்தோ நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்று கூற முடியாது. அவர்களால் ஒன்றும் செய்யவே முடியாது. அவன் இயேசுகிறிஸ்துவை மாத்திரம்தான் பார்க்கவேண்டும்.

நீங்கள் எப்பொழுதாவது இயேசுகிறிஸ்துவை நோக்கிப் பார்த்து என்னை இரட்சியும் என்று கேட்டிருக்கிறீர்களா? இயேசு கொடுக்கும் இரட் சிப்பு முற்றிலும் கிருபையை அடிப்படையாகக் கொண்டது. நம்பிக்கையும் உறுதித்தன்மையும் கொண்டது (ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது). தனிமனிதனுக்கு உரியது, உடனே கிடைப்பது, இயேசுகிறிஸ்துவையே மையமாகக் கொண்டது.

6. இரட்சிப்பு மகிமையானது!

இரட்சிப்பு மகிமையானது என்பதும் குறிப்பிடத் தக்கது. இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய் (லூக்.23:43). மக்கள் அனைவரும், ஏதோ தங்களுக்குத் தெரிந்த குறைந்த அறிவின் படி எதிர்காலத்தில் தாங்கள் பங்குபெறப் போகிற ராஜ்யத்தைப் பற்றி எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். நீங்கள் இதுவரை அறிந்திராததுமான ஓர் இடத்தைதான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன்; நீங்கள் என்னுடன் பரதீசில் இருப்பீர்கள். 2கொரி.12ஆம் அதிகாரத்தில் பரதீசை இயேசு வாசம் செய்யும் ஸ்தலம் மூன்றாம் வானம் என்று பவுல் கூறுகிறார். இயேசு கள்ளனைப் பார்த்து, நீ என்னுடன் மகிமையும், துதியும் நிறைந்த இடத்தில் இருக்கப்போகிறாய். அங்கே துக்கமும், வருத்தமும், கண்ணீரும் இல்லாத இடத்தில் இருக்கப் போகிறாய் என்று கூறினார்.

ஆம்! நானும் அந்தக் கள்ளனைப்போல் வாழப் போகிறேன்; பின் என் வாழ்க்கையின் கடைசி நிமிடம்வரை காத்திருந்து பின் மரிக்கும் தருவாயில் இயேசுவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்ளப் போகிறேன் என்று நீங்கள் சொல்லலாம். அவ்வாறு நீங்கள் சொல்வீர்களானால், நீங்கள் இரண்டு மாபெரும் பிரச்சனைகளை எதிரிட்டு அவற்றை தீர்க்க வேண்டியதிருக்கும். முதலாவது, அந்தக் கடைசி நிமிடம் எப்பொழுது வரும் என்பது உங்களுக்குத் தெரியாது. நான் மரிக்கும் சில நிமிடங்கள் வரைக்கும் நான் ஆத்தும இரட்சிப்பை தள்ளிப்போடப்போகிறேன் என்று நீங்கள் ஒரு காகிதத்தில் கையெழுத்திட முடியுமா? நீங்கள் எந்த நிமிடத்தில் மரிக்கப்போகிறீர்கள் என்ற அந்தக் கடைசி நிமிடம் தெரியாததால், உங்களால் அவ்வாறு கையெழுத்திட முடியாது.

இரண்டாவதாக எதிரிடும் பிரச்சனை என்ன வென்றால், மரித்துக்கொண்டிருக்கும் அந்தக் கள்ளனுக்கு அவன் இரட்சிப்படைய கிடைத்த அந்தத் தருணம் கடைசித் தருணம் அல்ல. அவனுக்குக் கிடைத்த முதலும், கடைசியுமான தருணமே அதுதான். அந்த முதல் தருணத்திலே இரட்சிப்பைப் பெற்றுக்கொண்டான்! இயேசு கிறிஸ்துவை அவன் கல்வாரியில் சந்திக்குமுன் அவன் இயேசுவின் பிரசங்கத்தை எங்காவது கேட்டிருப்பான் என்று கருதுவதற்கு சாத்தியமே இல்லை. இயேசுவைச் சந்திக்கக் கிடைத்த முதல் தருணத்திலேயே அக்கள்ளன் அவரைத் தன் இரட்சகராக ஏற்றுக் கொண்டான்.

உங்களுக்கும், அந்தக் கள்ளனுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், அவன் பிடிபட்டான், நீங்களோ இன்னும் பிடிபடவில்லை. ஆனால் ஒருநாள் பிடிபடுவீர்கள். இன்றே இரட்சண்ய நாள். பிடிபடுங்கள்.

மாபாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்
மன்னிப்பும் மோட்சானந்தமும்
அடைந்து பூரித்தான்
அவ்வாறே நானும் இயேசுவால்
விமோச்சனம் பெற்றேன்
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan