பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(மே-ஆகஸ்ட் 2021)
இறையாண்மை என்றால் அதிமேன்மையான சக்தி என்பது பொருள். அதாவது அது எல்லையற்ற அதிகாரத்தைக் குறிக்கும். நம்மில் எவருமே இந்தத் தகுதியை அடைய முடியாது. இது முழுவதும் சுயமானதும், முழுவதும் தன்னியக்கமானதுமாகும். இது இறைவன் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும். இறையாண்மையைப் பற்றி நமக்கு சிறந்த வெளிப்பாடுகள் தானியேல் புத்தகத்தில் தரப்பட்டுள்ளது. எனவே நாம் இப்புத்தகத்தின் மூலமாக தேவனுடைய இறையாண்மையைப் பற்றி ஆராய்வோம்.
தானியேல் புத்தகம் ஒரு தனித்துவமானது. அது திடீரென்று இரண்டு பகுதிகளாக நடுவில் பிரிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் முதல் பகுதி வரலாற்றை அறிவிக்கிறது. இரண்டாவது பகுதி தீர்க்க தரிசனங்களைத் தெரிவிக்கிறது. இந்நூலின் மையக் கருத்து: தேசங்களெல்லாம் தேவனுடைய ஆளுமைக்குட்பட்டது என்பதாகும். ஓர் அரசினை உயர்த்தி மற்றொரு அரசினைத் தாழ்த்த அவர் ஒருவரால் மாத்திரமே முடியும். அவர் ராஜாக்களைத் தள்ளி ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; இந்நூலில் அதற்கு ஆதாரமாக சில அரசுகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நாம் காணலாம்.
மேலும் இது ஒரு தரிசன நூல். அதாவது எதிர் கால நிகழ்வுகளின் கண்ணோட்டத்துடன் எழுதப்பட்ட புத்தகம் என்று கூறலாம். பரி.வேதாகமத்தில் இரண்டு பெரிய தீர்க்கதரிசன நூல்கள் உள்ளன. வேறு சில வேதபகுதிகளும் உண்டு; ஆனால், பழைய ஏற்பாட்டில் தானியேலும் புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தின விசேஷமும் தேவனுடைய எதிர்கால செயற்பாடுகளை நமக்கு அறிவிக்கின்றன.
மற்ற வேதபுத்தகங்கள் எழுதப்படும் முறையிலிருந்தும் இப்புத்தகம் மாறுபடுகின்றது. புதிய ஏற்பாட்டுப் புத்தகங்கள் அனைத்தும் கிரேக்க மொழியிலும் பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் பல எபிரெய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. ஆனால், தானியேல் புத்தகம் எபிரெய மற்றும் அதன் துணைமொழியான அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளது. தானியேல் 1-2:4; 8-12 பகுதி எபிரெய மொழியிலும், இவற்றுக்கு இடையில் உள்ள பகுதிகள் அரமேய மொழியிலும் உள்ளன.
தேவனுடைய உண்மையை விளக்குவதற்காக தானியேல் புத்தகம் எழுதப்பட்டது. தம்முடைய மக்களுக்கு தேவன் எவ்வாறு உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை இந்நூல் விளக்குகிறது.
கிறிஸ்துவுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் தானியேல் சவாலானதும் துணிச்சல் மிக்கதுமான ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். கொடிய அரசர்களின் கீழும் சிங்கக் குகையிலும் போடப்பட்டார் என்ற சிறப்பு பெற்றிருந்தாலும், ஜீவனுள்ள தேவன் மீதுள்ள அசையாத விசுவாசமே வரலாற்றின் பக்கங்களில் அவரது பெயரை நிலை நிறுத்தியுள்ளது.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த தேவ மக்களான இஸ்ரவேல் மக்களுக்கு தேவன் உண்மையாயிருந்ததைப் பற்றி தானியேல் விளக்குகிறார். பழைய ஏற்பாட்டுக்காலத்து மக்களுக்கு மட்டுமல்ல, இன்றும் தேவன் உங்களுக்கும் எனக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார். தானியேல் புத்தகமானது தேவனுடைய உண்மையைப் பற்றி நாம் விளங்கிக்கொள்ள ஒரு சிறந்த வழியாகும். தம்முடைய மக்களான இஸ்ரவேலரை நல்வழிப் படுத்துவதில் தேவன் அவர்களைப் பாதுகாத்தார். தேவனுடைய சீர்திருத்தும் கரம் நம்மை நசுக்கவோ அல்லது அழிக்கவோ செய்யாது என்பதே தானியேல் புத்தகத்தின் மையச்செய்தியாகும். இப்புத்தகத்தின் நோக்கமும் அதுவே.
புற ஜாதிகளின் காலத்தைப் பற்றிய சுருக்கமான கருத்தையும் இது தருகிறது. வரலாற்றில் புற ஜாதிகளின் காலம் என்று அழைக்கப்படும் காலம் மிகவும் உணர்ச்சிபூர்வமான காலமாகும். கடைசி காலங்களில் வாழ்வதைப்பற்றி அது நமக்குக் கற்பிக்கிறது.
இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலம் கடைசி காலம் எனில், 2000 ஆண்டுகளைக் கடந்த நாம் அதைவிட இன்னும் கடைசிக் காலத்தை கிட்ட நெருங்கிவிட்டோம். அந்த கடைசி காலத்தில் நடக்க விருக்கும் நிகழ்வுகளை தானியேலின் புத்தகம் நமக்கு நன்கு விளக்குகிறது.
தானியேலின் புத்தகம் ஒரு வரலாறு மட்டு மல்ல; அது ஓர் ஆச்சரியமான கதையும் ஆகும். இது ஒரு நாட்குறிப்பைப் போன்று எழுதப்பட்டுள் ளது. அதில் முதல் பதிவு தானியேல் 1:1,2 இல் காணப்படுகிறது. “யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.” யோயாக்கீம் என்பவர் யூதாவின் 17வது அரசர். இவருடைய மூன்றாம் வருஷம் என்பது சுமார் கி.மு.604 என நாம் அறியலாம். யூதா ஒரு தனி நாடாகத் திகழ்ந்த இறுதிக்காலம். அது சீக்கிரத்தில் சிறைபட்டுப்போனது. நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து அதனை முற்றிக்கையிட்டான். எருசலேமிலிருந்த உச்சிதமானவைகளை அவன் தன்னுடன் எடுத்துச்சென்றான். யூதாவின் அரசனான யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் சில பாத்திரங்களையும் அவன் தன்னுடன் எடுத்துச்சென்று தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். சினேயார் என்பது பாபிலோன் நகரத்தையும் பாபிலோன் தேசத்தையும் குறிக்கும் ஒரு பாபிலோனிய சொல்.
மேலும் நேபுகாத்நேச்சார் அனைத்து மக்களையும் சிறைபிடித்துக்கொண்டு செல்லவில்லை என்பதையும் கவனியுங்கள். வசனம்-3 இல் “அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜ குலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும் தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கட்டளையிட்டான். இவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்ட அரச குலத்திலும் துரைமக்களிலும் இருந்த வாலிபர்களில் தானியேலும் ஒருவனாயிருந்தான்.
அப்பொழுது தானியேல் 16 வயதுடைய வாலிபனாக இருந்தான். அவனது விருப்பத்துக்கு மாறாக அவனது நண்பர்களைவிட்டும் அவன் வளர்ந்த நாட்டைவிட்டும் சுமார் 700 மைல்களுக்கு அப்பால் எடுத்துச் செல்லப்பட்டான். மீண்டும் தனது குடும்பத்தை அவன் சந்திக்கவில்லை. அவ்வாலிபர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக் கொடுக்கவும், ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கட்டளையிட்டான்.
நேபுகாத்நேச்சாருக்கு மிகச் சிறந்தவர்களே தேவையாயிருந்தது என்பதால், பிரபு குலத்தைச் சேர்ந்தவனும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவனுமாகிய தானியேல் என்று கூடுதல் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சரீரத்தில் எந்தவொரு குறைவுமில்லாதவர்களுமாய் அழகானவர்களுமாய் அறிவிற் சிறந்தவர்களுமாய் கல்வியில் தேறினவர்களுமாய் அரச சபையில் ஊழியம் செய்யத் தகுதியுள்ளவர்களுமாய் இருக்கும் வாலிபர்களையே அவன் தெரிந்தெடுத்தான்.
சாத்தானும் நம்மிடமுள்ள மிகச் சிறந்ததையே தெரிவு செய்கிறான். மிக ஞானமும் அறிவுமுள்ள நமது வாலிபர்களையே அவன் குறிவைக்கிறான். தேவனுக்கு சிறந்தது தேவையில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். ஆம், அவருக்கும் சிறந்ததே தேவை. ஆனால், மாற்றுத் திறனாளிகளையும், கண்ணொளியற்றவர்களையும், செவித்திறனற்றவர்களையும், அறிவிற் குறைந்தவர்களையும் தேவன் உபயோகப்படுத்திக்கொள்ள அவர் வல்லவர். உங்களையும் என்னையும்கூட அவர் பயன் படுத்துவார்; ஏனெனில் நம்முடைய வாழ்வில் அவர் தேவையான மாற்றங்களை உண்டுபண்ணக் கூடும். சாத்தானால் அவ்வாறு செய்ய இயலாது. எனவே அவன் சிறந்ததைத் தெரிந்தெடுத்து முடிவில் தரம் குறைந்ததையே தருவான்.
நேபுகாத்நேச்சார் இஸ்ரவேலரின் இளைஞர்களில் சிறந்தவர்களையே தன்னுடைய பணிக்கென்று தெரிந்தெடுத்தான். யூதாவிலுள்ள மிகச் சிறந்த மக்களை பாபிலோனுக்கு சிறைபடுத்திச் செல்ல சாத்தான் நேபுகாத்நேச்சாரைப் பயன்படுத்திக் கொண்டான்.
தானியேலின் நாட்குறிப்பில் இரண்டாவது பதிவு வசனம் 5இல் காணப்படுகிறது. “ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்ச ரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்று வருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான்.”
தன்னுடைய வாழ்வில் ஓர் உறுதியான தீர்மானம் எடுக்கவேண்டிய சூழல் தானியேலுக்கு ஏற்பட்டது. தன்னுடைய சொந்த நாட்டிலிருந்து சுமார் 700 மைல்களுக்கு அப்பால் இருந்தான். மகாபாபிலோன் அரசரின் சமுகத்தில் அமர்ந்திருக்கிறான், ஆனால், அவருடைய கட்டளைக்கு அவனால் ஒத்துப்போகாத நிலை. “நீங்கள் என் சமுகத்தில் இருக்க நான் அனுமதிக்கிறேன். இரண்டாவதாக உங்களுக்கு அரச காரியங்களில் பயிற்சி கொடுக்க வாய்ப்பு தர உள்ளேன்; உனக்கும் உன் நண்பர்களுக்கும் இக்கல்தேய நாட்டின் காரியங்களில் பயிற்சி தருகிறேன்” என்று கூறினார். விவசாயம், சட்டம், வானவியல், சோதிடம் மற்றும் கணிதம் போன்ற அநேக காரியங்களிலும் கல்தேயரின் மொழியிலும் அவர்களைப் பயிற்றுவிக்க நினைத்தார்.
இவ்விளைஞர்கள் அரசவையில் அமர்ந்திருக்கவும் அரசாங்க காரியங்களில் பயிற்சியெடுத்து இறுதியில் அரசாங்க கடமைகளில் பொறுப்பெடுக்கவும் இருந்தனர். தங்கள் தாய் நாட்டை விட்டு வெகு தொலைவில் அந்நிய தேசத்து அரசருக்கு ஊழியம் செய்ய அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் ஒரு பிரச்சனை இருந்தது.
வசனம் 8 இல் நாம் அதனை காண்கிறோம். அதற்கு முன்னர் 6ஆம் வசனத்தில் காணப்படும் பெயர்களைக் கவனியுங்கள். அவர்களுக்குள் யூதா புத்திரராகிய நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் யாரெனில் தானியேல், அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியா. இப்பெயர்கள் யாவும் அவர்கள் யூதா நாட்டில் வாழ்ந்தபொழுது வழங்கப்பட்ட பெயர்கள். ஆனால் சிறை பிடித்துக் கொண்டு சென்றபின்னர், அந்த புறஜாதி அரசன் அவர்களை அவ்வாறு அழைக்க விரும்பவில்லை. ஏனெனில் தானியேல் என்பதற்கு தேவன் என் நீதிபதி என்றும், மீஷாவேல் என்பதற்கு தேவனைப் போன்றவர் யார் என்றும், அசரியா என்பதற்கு யேகோவா என் உதவி என்றும் அனனியா என்பதற்கு யேகோவா கிருபையுள்ளவர் என்றும் பொருள்படும்.
யேகோவா தேவனை நம்பாதவர்கள், அனனியாவை ஒவ்வொரு முறையும் அழைக்கும் பொழுது யேகோவா கிருபையுள்ளவர் என்று கூற விரும்பமாட்டார்கள். எனவேதான் பிரதானிகளின் தலைவன் அவர்களது பெயர்களை உடனடியாக மாற்றிவிட்டார். தானியேலை பெல்தெ ஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். இவை யாவும் பிறசமய கடவுளரது பெயர்களாகும்.
வசனம் 8 இல் தானியேல் அரசரது சிறப்பு உணவினாலும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணிக்கொண்டான்.
பிரதானிகளின் தலைவனிடத்தில் அதை உண்ணாமலிருக்க அனுமதியும் கேட்டார். தானியேல் பெருமையாகவோ, ஆணவமாகவோ மூர்க்கத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. அவர் மரியாதையுள்ளவராகக் காணப்பட்டார். ஏனெனில் அவர் தன்னுடைய விசுவாசத்தையும், அதற்கான காரணத்தையும் அறிந்திருந்தார். “இந்த உணவை நான் உண்ணக்கூடாது, ஏனெனில் அது எங்களது மதச்சட்டத்தில் விலக்கப்பட்ட பொருட்களால் ஆனவை. இரண்டாவதாக அது யூத முறைமையின்படி சமைக்கப்படவில்லை” என்று கூறினார். அவ்வுணவை உண்ணக்கூடாது என்பதிலும், திராட்சரசத்தைப் பருகக்கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார். “இவைகளால் நான் என்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ள மாட்டேன். அவர்கள் என்னைக் கொன்றுபோட்டாலும் பரவாயில்லை” என்று தனக்குள் தீர்மானம் பண்ணிக்கொண்டார்.
தானியேல் தான் விசுவாசிப்பதை நன்கு அறிந்திருந்தார். அந்த நம்பிக்கையை எவரும் அழித்துப் போட அனுமதிக்கமாட்டார். இவரைப்போன்ற இளைஞர்களை நான் வியந்து பாராட்டுகிறேன். இவர்களைப் போன்ற வாலிபர்களே இன்று நமக்குத் தேவை. தானியேல் தன் இருதயத்தில் தேவனுக்கு உண்மையாய் இருக்க தீர்மானம் பண்ணிக்கொண்டான்.
தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார் என வசனம் 9 இல் நாம் வாசிக்கிறோம். வாழ்வில் நமது செயல்முறைகளை நாமே அமைத்துக் கொள்வது என்றாலும் நமக்கு ஒத்தாசை செய்யும் தேவனை அண்டிக் கொண்டிருப்பதே சிறந்தது.
தானியேல் தேவனுக்காக வாழ உறுதியாய் இருந்தான்; அவ்வாறு வாழ தேவனும் அவனக்குத் துணை செய்தார். அங்கு ஒரு சோதனை நடத்தப்படுகிறது. தானியேல் தங்களுக்கு விசாரணைக்காரனாக வைக்கப்பட்ட அதிகாரியிடம், “பத்து நாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜ போஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்” (வசனம் 12,13) என்று கோரிக்கை வைக்கிறார்.
நமது விசுவாசத்தில் நாம் உறுதியாய் நிற்கும் பொழுது தேவனுடைய உண்மைத்துவம் அசாதாரண முறையில் நமக்கு வெளிப்படும். நடந்த காரியத்தை வசனம் 15 விளக்குகிறது. பத்தாம் நாள் இறுதியில் அரசபோஜனத்தை உண்டு வந்த இளைஞர்கள் அனைவரையும்விட அவர்கள் முகம் மிகக் களையுள்ளதாயும் சிறந்த புஷ்டியுமாய்க் காணப்பட்டது.
இது உடல் எடையைக் குறைக்கும் உணவு முறை அல்ல; தானியேலும் அவனது நண்பர்கள் சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ ஆகியவர்களும் தேவனுக்காக உறுதியாக நின்றார்கள். “எங்களைப் பத்துநாள் வரைக்கும் சோதித்துப் பாரும்” என்று அவர்கள் கூறினார்கள். அது போலவே மேல்ஷார் அவர்களைச் சோதித்துப் பார்த்தான். பத்தாம் நாள் இறுதியில் அரச உணவை உண்ட மற்ற இளைஞர்களைவிட அவர்கள் ஆரோக்கியமாகவும் ஊட்டச்சத்து மிக்கவர்களாகவும் காணப்பட்டனர்.
நீங்கள் செம்மையானவைகளைச் செய்வீர்களானால் தேவன் உங்களுக்கு வெகுமதிகளை அளிப்பார் என்பதை நீங்கள் அறிவீர்களா? தானியேலுக்கும் அவனது நண்பர்களுக்கும் நான்கு வித வெகுமதிகள் கிடைத்தன. முதலாவதாக அவர்கள் மற்ற இளைஞர்களைவிட ஆரோக்கியமானவர்களாகவும் ஊட்டச்சத்து மிக்கவர்களாயும் காணப்பட்டனர்.
நீங்கள் உத்தமமானதைச் செய்தால் தேவன் உங்களுக்கு சரீர ஆசீர்வாதத்தைத் தருவார் என்று நான் இளைஞர்களுக்குச் சொல்லுவேன். உங்களுக்கு எந்த வியாதியோ நோயோ வராது என்பது அதன் பொருளாகாது. ஆனால் உங்களுடைய உணவுப்பழக்கத்துக்கும் உங்களது சரீர செயல்களுக்கும் தொடர்பு உண்டு. இந்த இளைஞர்கள் சரீரத்திலும் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டனர்.
அதுமாத்திரமல்ல; இந்த நான்கு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலை சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார் என்று வசனம் 17இல் நாம் வாசிக்கிறோம். தேவன் அவர்களுக்கு சரீர ஆசீர்வாதம் மாத்திரமல்ல, அறிவு சார்ந்த ஆசீர்வாதத்தையும் அருளினார். “ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால் தேவனிடத்தில் கேட்கக்கடவன்” மூன்றாவதாக, தானியேலுக்கு சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியும் அறிவினைக் கொடுத்தார். இது அவருடைய ஆன்மீக வளர்ச்சியைக் காட்டுகிறது. சரீரம், ஆத்துமா மற்றும் அறிவு ஆகிய அனைத்திலும் ஆசீர்வாதம் பெற்ற ஒரு மனிதனை இங்கு நாம் காண்கிறோம்.
நான்காவதாக, இளைஞர்களின் வாழ்வில் காணப்படவேண்டிய மற்றொரு வளர்ச்சியை நாம் வசனம் 18,19இல் காண்கிறோம். “அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்துவிட்டான். ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜ சமுகத்தில் நின்றார்கள்.”
நான்காவது பகுதி சமுதாய வாழ்வு. தங்களுடைய நம்பிக்கைக்காக உறுதியுடன் நின்ற இவனைப் போன்ற ஒரு மனிதனை நான் என் வாழ்வில் கண்டதில்லை. எந்த காரியத்துக்கும் முன்னால் நிற்கும் மனிதர்கள் உண்டு; அவர்களை உலகம் வியந்து பாராட்டும். ஆனால் இந்த நான்கு இளைஞர்களும் சரியான விசுவாசத்துக்காக உறுதியாய் நின்றார்கள். தேவனும் அவர்களுக்கு சரீரம், அறிவு, ஆத்தும மற்றும் சமுதாயம் ஆகிய நான்கு பகுதிகளிலும் அவர்களுக்கு வெகுமதிகளை அளித்தார். நேர்மையானதைச் செய்யும் ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பார் என்பதற்கு தானியேலின் வாழ்க்கை நிரூபிக்கிறது. ஆசீர்வாதம் கிடைக்கும் என்பதற்காக தேவனுக்கு கீழ்ப்படியும் எண்ணம் தவறானதாகும். அவர் நமக்கு செய்த நன்மைகளுக்காக நாம் நன்றியுள்ளவர்களாகவும் அவருடைய தன்மைக்கு அவரை மதிப்பவர்களாகவும் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும். அவருக்கு பணி செய்ய அவர் நமக்கு உதவுவார் என்பதே நமது ஊழியத்தின் நோக்கமாக இருக்கவேண்டும்.
“நம்முடைய விசுவாசத்தை மதிக்காத அல்லது பகிர்ந்துகொள்ளாத மக்கள் மத்தியில் வாழும் முறைக்கு தானியேலின் வாழ்க்கையை ஓர் எடுத்துக்காட்டாக வேதாகமம் அளிக்கிறது” என்று பிலிப் யான்சி என்பவர் கூறியுள்ளார். தானியேலைப்போல நாம் வாழவேண்டும். நமது விசுவாச நம்பிக்கையில் உறுதியாய் இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டேன்.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை