Dr.தியோடர் எச்.எஃப்.
(மே-ஆகஸ்ட் 2021)
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல்…
அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; … நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்.5:15,16).
இயேசுகிறிஸ்துவை இரட்சகராக அறிந்து கொண்டவர்கள், தங்கள் தனிப்பட்ட பாவத்தை மிகவும் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தேவன் தம்முடைய பிள்ளைகள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கோராவிட்டால் அவர்களைச் சீர்படுத்தும் வண்ணமாக அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார். 1யோவான் 1:7 கூறுகிறது. அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். எனவே இரட்சிப்பு உண்டாகும்படியாக இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட வேண்டியதிருந்தது. இந்த இரத்தத்தின் வல்லமை இன்றும் கிரியை செய்து அனுதினமும் நாம் செய்யும் பாவங்களை கழுவிச் சுத்திகரிக்க வேண்டியதிருக்கிறது. இயேசுகிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் நிலையினால் நமக்கு நீதி உண்டு. எனினும் இந்த நீதியைக் குறித்து ஒருவரும் பெருமை பாராட்ட முடியாது.
இயேசுகிறிஸ்துவின் மேல் ஒருவர் கொள்ளும் விசுவாசத்தின் மூலம் நமக்கு நீதி கிடைக்கிறது என்று கூறிய பவுல், இப்படியிருக்க, மேன்மை பாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விவாசப்பிரமாணத்தினாலேயே (ரோ.3:27) என்று கூறுகிறார்.
கிறிஸ்துவின் நீதியை ஒருவன் பெற்றுக்கொள்ள வேண்டுமானால், இயேசுவை இரட்சகர் என்று விசுவாசிக்கவேண்டும். இதில் தனி மனிதன் பெருமை பாராட்ட எதுவுமில்லை. இப்படி மேன்மை பாராட்டுவதற்குப் பதிலாக விசுவாசி தாவீதைப்போல தேவனுடைய இரக்கங்களின் மீது தன்னைச் சார்ந்திருக்கச் செய்யவேண்டும்.
தன் பாவத்தை அறிக்கை செய்யும்போது தாவீது கூறியதென்ன? தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும் (சங்.51:1). தேவன் ஒருவருடைய வேண்டுதலுக்குச் செவி கொடுக்குமுன், என்ன விரும்புகிறார் என்று பார்க்கும்போது, இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று விசுவாசித்து ஏற்றுக்கொண்டு ஒருவன் விசுவாசி ஆகியிருந்தால்மட்டும் போதாது. அவனிடத்தில் அறிக்கை செய்யப்படாத பாவம் ஏதும் இருக்கக்கூடாது. சங்.66:18 இவ்வாறு கூறுகிறது: என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவி கொடுப்பார் (யோவான் 9:31).
நீங்கள் விண்ணப்பம் பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்க வேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள் (யாக்.4:3) என்று யாக்கோபு கூறுகிறதைக் காண்கிறோம். எவ்வளவு அற்புதமான வாக்குத் தத்தம் நமக்குத் தரப்பட்டுள்ளது.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அறியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார் ( 1 யோவான் 1:9).
அப்படிப்பட்ட மனிதன் இயேசுவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டபடியால் நீதிமானாயும், அவன் தன் வாழ்க்கையிலும் நீதியுள்ளவனாய் இருக்கிறான். தனக்கும் தேவனுக்கும் இடையில் உள்ள உறவை முறித்துப்போட்ட பாவங்களையும் உண்மையுடன் தேவனிடம் அறிக்கை செய்திருக்கிறான். இப்படித் தன் பாவங்களை அறிக்கையிட்டு, தேவன் அவற்றை மன்னித்துவிட்டார் என்ற நம்பிக்கையைப் பெற்றுக் கொண்டவன் தேவன் தன்னுடைய ஜெபங்களைக் கேட்பார் என்று நிச்சயமாக நம்பலாம்.
எனவே யாக்கோபின் வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை என்று உணரலாம். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக். 5:16).
இயேசுகிறிஸ்துவை நமது சொந்த இரட்சகராக விசுவாசித்து ஏற்றுக்கொள்வதன் மூலம் நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம். நமக்குள் இருக்கும் நீதி, நமக்குள் இருக்கும் இயேசுகிறிஸ்துவால் நமக்குக் கிடைக்கிறது (2 கொரி.5:21). அதனால் நம்முடைய விருப்பங்களும், வேண்டுதல்களும் நீதியுள்ளவைகளாய் இருக்கும் (பிலி.2:12,13).
நாம் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருப்போம். கர்த்தருக்கு மகிமை உண்டாக்கும் காரியங்களில் கரிசனை கொள்ளுவோம். ஏசா.58:13 பார்க்கவும்.
நம்முடைய பலவீனத்தினிமித்தம் நாம் கேட்கக்கூடாதவைகளைக் கேட்டால், நாம் தேவனுடைய சித்தம் நம்மிலும், நமக்காகவும் கிரியை செய்யும்படி முற்றிலும் ஒப்புக்கொடுக்க வேண்டியவர்களாய் இருப்போம். தேவன் எப்போதும் நமக்கு நன்மையானவைகளையே செய்வார். அதன்மூலம் அவர் மகிமையடைவார்.
நிறைய சாதித்துக் கொள்கிறான்.
இயேசுகிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தின் மூலமும், தன்னுடைய பாவங்களை அனுதினமும் அறிக்கை செய்யும் அனுபவத்தைப் பெற்ற ஒரு விசுவாசி தேவன் பேரில் நிலை கொண்டிருக்கிறான். இப்படிப்பட்ட ஒருமனிதன் ஏராள மான காரியங்களைத் தன் ஜெபத்தின் மூலம் சாதித்துக்கொள்ளுகிறான். அதாவது அவனது ஜெபம் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுகிறது.
இப்படிப்பட்ட ஒருவர் தன்னுடைய வேண்டுதல்களுக்கெல்லாம் பதில் பெற்றுக்கொள்ளுகிறான் என்று பொருளல்ல. ஆனால், அவனுடைய ஜெபம் கேட்கப்படாமலிருந்தாலும் தேவனிடத்தில் முழு நம்பிக்கையும், சந்தோஷமும் கொண்டிருக்கும் நபர் பல காரியங்களைச் சாதித்துக்கொள்ளுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கையில் உண்மையான நிறைவும், திருப்தியும் நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு எடுத்துக்கொள்ளப்படும் வாய்ப்பை தேவன் நமக்குத் தருகிறார் என்பதில் இருக்கிறது.
தேவன் தங்களுக்குத் தந்துள்ள ஆஸ்தி அந்தஸ்து பிள்ளைகள் போன்ற நன்மைகளைக் குறித்துச் சிலர் பேசும்போது, வேறுசிலர் தேவனையே தங்களுக்குச் சொந்தமாகப் பெற்றிருப்பதைக் கூறுவார்கள். கர்த்தர் தமக்குத் தந்திருப்பவைகளில் களிகூருபவனல்ல, கர்த்தரைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டவனே உலகில் மகிழ்ச்சியான கிறிஸ்தவன். நீதிமான் ஒருவனின் ஜெபம் பல பதில்களைப் பெற்றுத்தரும். விடை கிடைக்காவிட்டாலும்கூட ஜெபிப்பவனுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.
இந்த இடத்தில் ஊக்கமான ஜெபம் செய்த ஒருவனைக் குறிப்பிடுகிறார். யாக்கோபு உதாரணமாகக் கூறிய நபர் எலியா. ”எலியா என்பவன் நம்மைப் போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப் பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான்; அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது” (வச.17, 18). 1 இரா.17,18 அதிகாரங்களில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றியே யாக்கோபு இங்கு குறிப்பிடுகிறார்.
பொல்லாதவனான ஆகாப் இராஜாவின் முன் நிற்கும்படி தேவன் எலியாவை அழைத்தார். “அடுத்தடுத்த வருடங்களில் தேசத்தில் மழையோ பனியோ இருக்காது” என்று அறிவிக்கும்படி தேவன் எலியாவிடம் கட்டளையிட்டார் அதி.17:1. இதைக் கேட்டதும் இராஜா கோபமடைந்தான். உடனே எலியா தன் உயிரைக் காக்க தேவனுடைய கட்டளையின்படி கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிருந்தான். காகங்கள் அவனைப் போஷித்தன. மழையில்லாததால் ஆறு வற்றிப்போனபோது தேவன் எலியாவைச் சாறிபாத் ஊருக்குப் போகச் சொன்னார். அங்கே ஓர் ஏழை விதவை தன் மகனுடன் இருந்தாள். அவளிடம் கொஞ்சம் மாவும், எண்ணெயும் இருந்தது. தேவன் அதை ஆசீர்வதித்து, குறையாமல் இருக்கச் செய்தபடியால் விதவையும் மகனும் எலியாவும் பஞ்சகாலம் முடியும்வரை சாப்பிட உணவாயிற்று.
இந்தச் சம்பவங்களிலெல்லாம் நாம் கவனித்து அறிந்துகொள்ள வேண்டிய ஒரு சத்தியம் இருப்பதைக் காண்கிறேன். தேவன் எலியாவிடம் செய்யும்படி கட்டளையிட்ட யாவற்றையும் அவன் அப்படியே செய்து நிறைவேற்றினான். அவை மனிதர்களுடைய பார்வையில் நியாயமற்றவையாகவோ, சாதாரணமானவையாகவோ தோன்றலாம்.
‘கேரீத் ஆற்றங்கரைக்குப் போய்த் தங்கியிரு காகங்களால் உன்னைப் போஷிப்பேன்’ என்று தேவன் சொன்னார். உடனே அவன் போய் கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான் (வச.5). தேவன் எலியாவிடம், நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருககுப்போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கும் ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். எலியா அப்படியே சென்றான். ஒருவேளை எலியா ஒரு விதவையிடம் அடைக்கலம் சென்று உதவிபெறுவது சிறுமைப்படுத்தப்படுவதுபோல் இருந்திருக்கலாம்.
மூன்றரை வருஷங்களுக்குப்பிறகு, தேவன் எலியாவிடம் ஆகாப் இராஜாவின் முன் செல்லும்படி கட்டளையிட்டார் (18:1) இதற்கிடையில் ஆகாபும் அவனுடைய ஆட்களும் எலியாவைக் கொல்லும்படி தேடிக்கொண்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில் தேவன் அவனை “ஆகாபின் முன் சென்று நில்” என்று சொல்வது மிகவும் பயப்படக் கூடிய ஒரு கட்டளையாக இருந்திருக்கும். அவனுக்கு அங்கு செல்ல அளவு கடந்த தைரியம் வேண்டும். இருந்தபோதிலும் எலியா தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தான். இறுதியில் எலியா ஆகாபைச் சந்தித்தபோது, தேவன் எலியாவைக் காப்பாற்றிவிட்டார்.
எலியாவிடத்தில் “நீ ஆகாப் இராஜாவின் முன் போ” என்று தேவன் கட்டளையிட்டபோது, அவன் அப்படிச் சென்றால் தேவன் அவனுக்குத் துணையாய் இருந்து காப்பாற்றுவார் என்று நம்பினான். எலியாவைக் கண்டதும் ஆகாப் சொன்ன வார்த்தைகள்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான் (1இராஜா.18:17) அப்பொழுது அவன் சொன்ன பதில் அவனது தைரியத்தைக் காட்டுகிறது. இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளைவிட்டுப் பாகாலைப் பின்பற்றினதால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள் (வசனம் 18).
எலியா ஆகாபிடம், உம்முடைய தேசத்தில் உள்ள பொய்யான தீர்க்கத்தரிசிகள் தலைவர்கள் அவ்வளவு பேரையும் கர்மேல் பர்வதத்தில் வந்து கூடும்படிக்கட்டளையிடும் என்று உத்தரவிட்டார். அங்கே உண்மையான கடவுளைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் யார்? என்று கண்டறிய ஒரு சோதனை நடத்தப்படும் என்றான். கர்மேல் பர்வதத்தின்மேல் அனைவரும் கூடியிருக்கும்போது பாகாலின் தீர்க்கதரிசிகள் ஒரு பலிபீடம் கட்டுவார்கள். அதன்மேல் விறகுளை அடுக்கிப் பலியாக ஒரு காளையை வெட்டிவைப்பார்கள்; நெருப்பு வைக்கப்பட மாட்டாது.
வானத்திலிருந்து அவர்களுடைய தெய்வம் அக்கினியை அனுப்பி பலியை ஏற்றுக்கொண்டால் அவர்களுடைய தெய்வம் உண்மையான தெய்வம் என்று அறியப்படும். அப்படியே செய்யப்பட்டது. பாகாலின் தீர்க்கதரிசிகள் 450 பேரும் காலை முதல் பிற்பகல்வரை தங்கள் தெய்வமாகிய பாகாலை அழைத்தார்கள். அக்கினி வரவுமில்லை. பலி பட்சிக்கப்படவுமில்லை. மக்கள் எல்லாரும் இதைக் கண்டார்கள். பின்னர் எலியா மக்கள் அனைவரையும் தன் பக்கம் அழைத்தான். தன் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓர் அகழியை வெட்டி வைத்தான். மேலே விறகுகளை அடுக்கி, அதன்மீது பலியான காளையை வெட்டி வைத்தான். பின்னர் 12 குடம் தண்ணீர் கொண்டுவந்து பலியின்மேல் ஊற்றச் செய்தான்.
பலி நனைந்தது. விறகு நனைந்தது. தண்ணீர் வழிந்தோடி அகழியை நிரப்பிற்று அந்திப் பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ‘ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், …கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். அப்பொ ழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள் (1இரா.18.36-39).
இங்கே எலியா ஏறெடுத்த ஜெபம் சுருக்கமானது. மூலப்பிரதியில் 36 வார்த்தைகள்மட்டுமே உள்ளன. ஆனால், எலியா இதில் நான்கு முக்கியமான காரியங்களைக் குறிப்பிட்டான்.
1. நீரே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்பது இங்கே அறியப்பட வேண்டும்.
2. நான் உம்முடைய ஊழியக்காரன் என்று அறியப்பட வேண்டும்.
3. உம்முடைய சொல்லின்படியே நான் இவைகளைச் செய்துள்ளேன் என்பது அறியப்பட வேண்டும்.
4. ஜனங்களின் இருதயத்தை தேவன் திருப்பினார் என்றுஅறிய வேண்டும். எலியா ஜெபம் பண்ணிமுடித்த உடனேயே தேவனிடத்திலிருந்து பதில் வந்தது.
5. வானத்திலிருந்து அக்கினி வந்து அனைத்தையும், பலிபீடத்தையும் கூடப் பட்சித்துப்போட்டது. இதைக் கண்ட ஜனங்கள் உடனே முகங்குப்புற விழுந்து “கர்த்தரே தெய்வம்”, “கர்த்தரே தெய்வம்” என்று ஆர்ப்பரித்தார்கள்.
இந்த ஆவிக்குரிய போராட்டத்தில் யெகோவாவே உண்மையான தேவன் என்று நிரூபிக்கப்பட்டது. தேசத்தில் மழை பெய்தது. நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள் ளதாயிருக்கிறது என்னும் கருத்தை வலியுறுத்த யாக்கோபு எலியா செய்த இந்த நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி இங்கே குறிப்பிட்டுள்ளான் (யாக்.5:16).
பரிசுத்தஆவியின் ஏவுதலினால் இதையெல்லாம் எழுதிய யாக்கோபு தன் நிருபத்தை வாசிக்கும் அனைவரும் எலியா தங்களைவிட மிகவும் வித்தியாசமானவர் என்பதை உணரவேண்டும் என்னும் எண்ணத்துடன் எழுதியுள்ளான்.
எலியாவின் அனுபவம் நம் அனைவரையும் உற்சாகப்படுத்தி, ஊக்கமடையச் செய்யவேண்டும். எலியாவைப்பற்றி யாக்கோபு குறிப்பிடும்போது, எலியா நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும் (வச.17) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அதாவது எலியாவுக்கும் நமக்குள்ளது போன்ற உணர்வுகள் உண்டு. எனினும் அவன் ஏறெடுத்த ஜெபத்துக்கு தேவன் செவிகொடுத்த விதத்தைப் பார்த்தீர்களா?
எலியா ஒரு அசாதாரண, தெய்வீகப்பிறவி அல்ல, அவன் நம்மைப்போல ஒரு மனிதன். அவன் பல தடவைகள் பயப்பட்டான். நாம் செய்வதுபோலப் பாவங்கள் செய்யும் சூழ்நிலையும் உண்டு. ஆனால் எலியாவுக்கு தேவன்பேரில் பூரண விசுவாசம் உண்டு. தேவன் கட்டளையிட்ட யாவுக்கும் எலியா அப்படியே நூறு சதவீதம் கீழ்ப்படிந்தான்.
அதனால் எலியா ஜெபம் பண்ணினபோது, தேவன் உடனே செயல்பட்டார். காரியங்கள் நடந்தேறின. இதே காரியம் எலியாவின் வாழ்வில் நடந்ததுபோல நம் வாழ்விலும் நடந்தேறும் என்பதே யாக்கோபு நமக்கு எடுத்துக்காட்ட விரும்பும் காரியமாகும்.
நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளது. அது பல காரியங்களைச் சாதிக்கும்.
(முற்றிற்று)
மொழியாக்கம்: G.வில்சன்
சீனாவில் தலைமறைவாகச் செயல்படும் சபைகள்
சுவிசேஷப்பணிக்கும் மக்களை கிறிஸ்து வண்டை வழிநடத்தும் பணிக்கும் குறிப்பாக இறையியல் பட்டம்தான் அடிப்படைத் தேவை அல்லது அளவுகோல் என அநேகர் எண்ணுகிறார்கள். ஆனால் சீனாவில் இது முற்றும் மாறுபட்ட நிலையிலுள்ளது என்பதும் ஊழியத்தில் எதை முதன்மைப்படுத்துகிறார்கள் என்பதை நான் அறியும்பொழுது அது மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. சீனாவிலுள்ள தலைமறைவாகச் செயல்படும் சபைகளில் (Underground Church) ஊழியக்காரர்களாக வருபவர்களிடம் அல்லது பிரசங்கம் செய்ய வருபவர்களிடம் விசுவாசிகள் கேட்கும் முதன்மையான முக்கியமான கேள்வி என்னவெனில் “நீங்கள் எந்தச் சிறையிலிருந்தீர்கள்? எவ்வளவு காலம் நீங்கள் சிறையிலிருந்தீர்கள்?” என்பவைகள்தான். பாடுகள் தான் ஊழியக்காரர்களின் அடிப்படைத் தகுதி என சீனாவின் விசுவாசிகள் கருதுகின்றனர். எத்தனைப் பாடுகளிலும் வறுமையின் வழியாகக் கடந்துசென்றாலும் பிறநாட்டினரின் உதவியை அவர்கள் நாடித்தேடுவதே இல்லை.
சீனாவில் கம்யூனிஸ்ட் அரசால் இன்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் தாங்கொணா உபத்திரவங்களின் வழியாகச் செல்லுகின்றனர். இதற்கு மத்தியிலும் சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக பெருகிக்கொண்டேயிருக்கிறது என்பது எந்த சந்தேகமுமில்லாத பெரிய உண்மையாகும். உபத்திரவங்களின் மத்தியில் வெளிப்படையான வளர்ச்சியைக் காண முடிகிறது. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக சீனாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் பேர்தான். ஆனால், இன்று சுமார் 1000 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்த வளர்ச்சியின் இரகசியம் என்ன? பாடுகள்!
ஆகவே சீனாவிலுள்ள சபைகள் உலகத்திற்குக் கொடுக்கும் செய்தி என்னவெனில், கிறிஸ்துவின் மீது உறுதியான விசுவாசமும் உபத்திரவங்களைச் சகித்துக்கொள்ளும் மனப்பாங்கும் இருக்குமானால் சபை மிகவேகமாக வளர்ச்சியடையும் என்பதுதான்.