பவானி மகேந்திரன்
(மே-ஆகஸ்ட் 2021)

எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை (எரேமியா 6:6)


கொரோனா வைரஸ்‌ என்ற சிறிய கிருமியானது இந்த உலகத்தையே ஆட்டிப்படைக்கும்‌ தருணத்தில்‌ நம்மில்‌ அநேகருக்கு வந்த கேள்வி “இது ஏன்‌?” கர்த்தர்‌ ஏன்‌ இதை அனுமதித்தார்‌? நாம்‌ என்ன தவறு செய்தோம்‌? நாம்‌ செய்த தவறுகள்‌ காரணமாக இருக்குமோ? இது ஆண்டவரால்‌ அனுப்பப்பட்ட பட்டயமா? ஆண்டவருடைய வருகைக்கான அறிகுறியா? ஆண்டவருடைய பார்‌வையில்‌ நாம்‌ விசாரிக்கப்பட வேண்டியவர்களா? இப்படியாக அநேக கேள்விகள்‌ ஒவ்வொருவரின்‌ மனதிலும்‌ வரத்தான்‌ செய்தன. நாம்‌ முழுமையாக நம்பியிருந்த யாவும்‌ நம்மை இன்று கைவிட்டுவிட்டது. நமது பணம்‌, நமது ஞானம்‌, நமது கல்வி, நமது தொழில்‌, நமது சுயமுயற்சிகள்‌ யாவும்‌ நம்மை கைவிட்டன. இந்த வருடம்‌ வெகு அமோகமாக இருக்கும்‌ எனக்‌ கூறியவர்கள்‌, அதை நம்பியவர்கள்‌, விஞ்ஞானமே உலகம்‌ என வாழ்ந்தவர்கள்‌ அனைவரும்‌ தீகைப்புறும்‌ வண்‌ணம்‌ காரியங்கள்‌ நடைபெறத்தான்‌ செய்தன.

‘இந்த வருடத்தில்‌ அநேக திட்டங்களைத்‌ தீட்டிய சிலர்‌, தீட்டங்கள்‌ நீறைவேறும்முன்‌ மரணத்‌தைத்‌ தழுவிக்கொண்டனர்‌. தீனக்குறிப்பு புத்தகத்‌தில்‌ நாட்களைக்‌ குறித்து வைத்தவர்கள்‌ அது நடக்‌குமா? நடக்காதா? என்று நீலைகுலைந்து போயிருக்கின்றனார்‌. அவசர அவசரமாக ஓடிக்கொண்டிருந்த அனைவரும்‌ ஸ்தம்பிதமடைந்த நிலையில்‌, “ஏன்‌ நாம்‌ விசாரிக்கப்பட வேண்டும்‌? ஏன்‌ நமது சபை விசாரிக்கப்பட வேண்டும்‌?” என்பதைச்‌ சிந்திப்பது நல்லது.

எருசலேமுக்கு விரோதமாய்க்‌ கொத்தளம்‌ போடுங்கள்‌; அதுவே விசாரிக்கப்பட வேண்டிய நகரம்‌; அதின்‌ உட்புறலமல்லாம்‌ கொடுமை (எரே.6:6) என்றார்‌ எரேமியா தீர்க்கர்‌.

௮ன்பானவர்களே! எருசலேம்‌ நகரம்‌ மாத்தீரமல்ல, நாம்‌ ஒவ்வொருவரும்‌ கர்த்தரால்‌ விசாரிக்‌கப்பட வேண்டியவர்களாகவே கிருக்கின்றோம்‌. இதை உணர்வதற்கு நமக்கு ஆண்டவர்‌ தருகின்ற ஒரு அருமையான சந்தர்ப்பம்‌ இதுவாகும்‌. எருசலேம்‌ என்றால்‌ சமாதான ஸ்தலம்‌ என பொருள்படும்‌. யூதர்கள்‌ வரகாத்திருக்கும்‌ மேசியா இங்கிருந்து உலகம்‌ முழுவதையும்‌ ஆளுகை செய்வார்‌ என எதிர்பார்த்தீருக்கும்‌ ஒரு ஸ்தலமாக எருசலேம்‌ விளங்கியது. மேசியா ஸ்தாபிக்கும்‌ புதிய ஸ்தலமானது புதிய எருசலேம்‌ அல்லது மேலான எருசலேம்‌ என பெயர்‌ பெறுகிறது.

எருசலேம்‌ நடுவில்‌ வாசம்பண்ணுவேன்‌. எருசலேம்‌ சத்தியநகரம்‌, கர்த்தரின்‌ பர்வதம்‌, பரிசுத்த பர்வதம்‌ என்று கர்த்தரால்‌ தெரிந்துகொள்ளப்பட்ட நகரம்‌ மற்றும்‌ மக்கள்‌ நம்பிக்கை வைத்தீருந்த இந்த நகரத்தைக்‌ குறித்து ஆண்டவர்‌ கூறிய வாக்கியமானது அது விசாரிக்‌கப்படவேண்டிய நகரம்‌. இந்நிலைமைக்கான காரணம்‌ என்ன? அந்நகரத்தின்‌ உட்புறமெல்‌லாம்‌ கொடுமை நிறைந்திருந்தது.

1. புறக்கணித்தல்‌

கர்த்தர்‌ கூறுகின்றார்‌: ஜீவத்தண்ணீர்‌ ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்‌ (எரே.2:13). நிரந்‌தரமற்ற செயல்களுக்காக அங்குமிங்கும்‌ ஓடித்திரிந்த நமது வாழவில்‌ நிலையான வாழ்வை அருளும்‌ கர்த்தருக்கு இடங்கொடுத்திருந்தோமா? இல்லவே இல்லை. அவரை விட்டுவிட்டோம்‌. நமது வாழ்வைத்‌ தொலைத்துவிட்டோம்‌. நமது வீடுகளில்‌ குடும்ப ஜபங்கள்‌ ஏறெடுக்க நேரம்‌ கொடுத்தோமா?

பிள்ளைகளோடு சேர்ந்து ஆண்டவரை நேசிக்‌கவும்‌ அவரோடு உறவாடவும்‌ நேரம்‌ செலவழித்‌தோமா? பிள்ளைகளுக்கு ஆண்டவரைக்‌ குறித்து கூறினோமா? சபையில்‌ ௮நேக காரியங்களில்‌ ஈடுபட்டோம்‌. தவறில்லை. அநேக செயற்திட்டங்களில்‌ ஈடுபடுகிறோம்‌. தவறில்லை. பாடகர்‌ குழுவில்‌ கிறிஸ்‌துமஸ்‌ ஆராதனையில்‌, கீத பவனியில்‌, திருச்சபை ஆண்டு விழாக்கள்‌, உயிர்ப்பின்‌ நாள்‌ கொண்டாட்‌டங்கள்‌ எதுவுமே தவறில்லை. ஆனால்‌, இவையெல்லாவற்றிலும்‌ கர்த்தருக்கு முதலிடம்‌, முக்கியத்‌துவம்‌ கொடுத்தோமா அல்லது மனுஷரைப்‌ பிரியப்‌படுத்த முற்பட்டோமா? தீறமைகளைக்‌ காட்ட முயற்‌சித்தோமா? ௮ல்லது அர்ப்பணிப்புடன்‌ செய்தோமா? சுயமுயற்சி, திறமைகளை நம்புகிறோமா? அப்படியாயின்‌, நாம்‌ செய்த அனைத்திலும்‌ கர்த்தர்‌ புறக்கணிக்கப்பட்டிருப்பாராயின்‌ நாமும்‌ நமது சபையும்‌ விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்‌.

ஆகவே நம்மைப்‌ பார்த்து கர்த்தர்‌ எழுப்பும்‌ கேள்வி: இவைகளை நான்‌ உனக்கு மன்னிப்பது எப்படி? உன்‌ பிள்ளைகள்‌ என்னை விட்டுவிட்டார்‌கள்‌ (எரேமி.5:7). நமது பிள்ளைகள்‌ கர்த்தரைத்‌தேடுவதற்கு நாம்‌ முன்னுதாரணமாக செயல்படுகின்றோமா? பிள்ளைகள்‌ காலை எழுந்து கையடக்க தொலைபேசியைத்‌ தேடூகிறார்களா? கர்த்தரைத்‌ தேடவில்லையா? நல்ல பெற்றோராக, கர்த்தரை நாம்‌ தேடும்பொழுது பிள்ளைகளும்‌ நம்மைப்பார்த்து பழக ஆரம்பிப்பார்களே! ஞாயிறு பள்ளிக்குக்‌ கிரமமாக நேரத்துடன்‌ வருவார்களே! நமது பிள்ளைகள்‌ கர்த்தரைத்‌ தேடாததற்கு நாமேதான்‌ காரணமானவர்களா?

2. தீங்கு புரிதல்‌

… அது தன்‌ தீங்கைச்‌ சுரக்கப்பண்ணுகிறது: அதிலே கொடுமையும்‌ அழிம்பும்‌ கேட்கப்படுகிறது (எரேமி. 6:7).

எருசலேம்‌ ஆலயத்தீல்‌ நன்மையான செயல்‌கள்‌ குறைவடைந்தன. கொடுமையான செயல்‌கள்‌ அநேகம்‌ நீகழ்ந்தன. அவ்விடத்தில்‌ ௮நேகருக்கு நடந்த அநீதிகளும்‌, துன்பங்களும்‌, அவர்‌கள்‌ பட்ட காயங்களும்‌, வேதனைகளும்‌ கர்த்தருக்கு முன்பாக ஏறெடுக்கப்பட்டது.

துக்கமும்‌ காயங்களும்‌ நீத்தமும்‌ எனக்கு முன்‌பாகக்‌ காணப்படுகிறது (எரேமி.6:7). அங்கிருந்த ஏழைகள்‌ விசாரிக்கப்படவில்லை. பணத்துக்கு முன்‌னுரிமை கொடுக்கப்பட்டது. சபைக்கு வருபவர்கள்‌ புறக்கணிக்கப்பட்டார்கள்‌. தங்களது வாயின்‌ வார்த்தைகளினால்‌ அநேகரை மனம்‌ நோகச்‌செய்தார்கள்‌. கர்த்தருடைய பணியைப்‌ போட்டி பொறாமையோடு செய்தார்கள்‌. நான்‌ பெரிது, நீ பெரிது என்ற வாக்குவாதம்‌ எழும்பின. சபையில்‌ பிரிவினை தனி-தனிக்‌ குழுக்கள்‌ இயங்கின.

சரீரமாகிய சபை கை வேறு கால்‌ வேறாக அவயவங்கள்‌ ஒவ்வொன்றும்‌ தனித்தனியாக இயங்கத்‌ தொடங்கின. வெளிப்புறத்தில்‌ வர்ணம்‌ பூசி மின்‌ விளக்குகளினால்‌ அலங்கரிக்கப்பட்ட மின்னும்‌ சபைகளின்‌ உட்புறத்திலோ கொடுமையான காரியங்கள்‌ நடைபெற்றன.

இன்று நமது சபைகளின்‌ நீலை என்ன? அவை எப்படியாக இயங்குகின்றன? நாம்‌ எப்படியாக இயங்குகிறோம்‌. சபை அங்கத்தவர்களோடு இணைந்து இயங்குகின்றோமா? நமது சபையின்‌ தலையாக கிறிஸ்து கிருக்கின்றாரா? தேவவார்த்தைக்கு முதலிடம்‌ உண்டா? வழிதப்பிப்‌ போனவர்கள்‌ மீண்டும்‌ மனந்திரும்பி வரும்போது அவர்களை நாம்‌ எப்படியாக ஏற்றுக்கொள்கிறோம்‌? நமது சபைகளின்‌ உட்‌புறத்திலும்‌ கொடுமை காணப்படுமாயின்‌ நாமும்‌ விசாரிக்கப்பட வேண்டியவர்கள்‌ அல்லவா!

3. பொய்யர்கள்‌

பொய்யைப்‌ பேச தங்கள்‌ நாவைப்‌ பழக்குகிறார்கள்‌, அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்‌ (எரே.9:5). எருசலேம்‌ ஆலயத்திலிருந்த சிறியோர்‌ பெரியோர்‌ ௮னைவரும்‌ பொருளாசைக்காரராக, பண ஆசை பிடித்தவர்களாக, பணத்தைக்‌ குறித்து ஆண்டவர்‌ கணக்கு கேட்பார்‌ என்ற பயம்‌ இல்லாதவர்களாக வாழ்ந்தனர்‌.

பணத்தைக கொள்ளையடிப்பது ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியம்‌ என்பதை மறந்தே போனார்கள்‌. உண்மையான சமாதானம்‌ இருப்‌பதுபோல்‌ நடித்தார்கள்‌. துயருற்ற மக்கள்‌ பாவத்‌தின்‌ ௮டிமைத்தனத்திலிருக்கும்‌ மக்களின்‌ காயங்‌களை மேல்பூச்சாக குணமாக்கீனார்கள்‌. பாவத்‌தில்‌ விழுந்த மக்களை விடுவித்து கர்த்தரிடத்தில்‌ அவர்களை வழிநடத்த தவறினார்கள்‌. பயமில்‌லாமல்‌ ஆசாரியர்கள்‌, மேய்ப்பர்கள்‌ பொய்யர்களாக வாழ்ந்தனர்‌. துணிகரமான பாவங்களில்‌ பயமில்லாமல்‌ கர்த்தரின்‌ நாமத்தைக்‌ கூறி ஈடுபட்‌டனர்‌. இப்படியான ஒரு பயங்கரமான வாழ்விற்கு அடிமைப்பட்டிருந்த எருசலேம்‌ விசாரிக்கப்படவேண்டிய ஸ்தலமாயிற்று.

இப்படியாக, கர்த்தருக்குப்‌ பிரியமில்லாத காரியங்களில்‌ ஈடுபட்டுக்‌ கர்த்தரின்‌ வார்த்தைகளைக்‌ கைக்கொள்ளாமல்‌ வாழ்ந்த இவர்கள்‌ தாங்கள்‌ நடந்துகொண்ட முறையை எண்ணி வெட்கப்படவில்லை. ஒன்றும்‌ நமது வாழ்விலும்‌ கர்த்தருக்குப்‌ பிரியமில்லாத காரியங்களில்‌ துணிகரமாக ஈடுபட்டு அதைக்குறித்து சிறிதளவேனும்‌ வெட்கமோ பயமோ இல்லாமல்‌ வாழ்கின்றோமா? கர்த்தருடைய ஊழியத்தை முன்வைத்து மறைவில்‌ ௮வலட்சணமாக செய்கையில்‌ ஈடுபடுகிறோமா? கர்த்தருடைய பணத்தைக்‌ களவாடுகின்றோமா? இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்வோமானால்‌ நாமும்‌ விசாரிக்கப்பட வேண்டியவர்கள்‌ அல்லவா!

4. கர்த்தருடைய வார்த்தையை அவர்கள்‌ விரும்பவில்லை.

கர்த்தருடைய வசனம்‌ அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல்‌ அவர்களுக்கு விருப்பமில்லை (எரேமி. 6:10).

எருசலேம்‌ ஜனங்கள்‌ ஆண்டவருடைய வார்த்‌தையை வெறுத்தார்கள்‌. வார்த்தைகளை அவர்கள்‌ விரும்பவில்லை. அதை கைக்கொள்ளவில்லை. இன்றும்‌ நாம்‌ கர்த்தருடைய வார்த்தையை வாசிக்‌கின்றோம்‌. தியானிக்கின்றோம்‌. நமது சபைகளில்‌ வேதபடிப்புகள்‌ கிரமமாய்‌ நடைபெறுகின்றன. தேவ செய்திகளை சிரத்தையுடன்‌ கேட்கின்றோம்‌. ஆனால்‌ எந்தளவு கைக்கொள்கின்றோம்‌? நமது வாழ்க்கை யில்‌ அதை நடை முறைப்படுத்துகின்றோமா?

நல்லவார்களைபோல்‌ நடிக்கும்‌ நமது நாவின்‌ கீழ்‌ விஷம்‌ உண்டா? விஷத்தைக்‌ கக்கி ஒருவரையொருவர்‌ கடித்துக்‌ குதறுகின்றோமா? உண்மையாக கர்த்தரின்‌ வார்த்தையை கைக்கொள்ளுகிறவர்களின்‌ வாழ்வில்‌ மாற்றங்கள்‌ காணப்படும்‌. “ஏனெனில்‌ ஒருவன்‌ கிறிஸ்துவிற்குள்‌ (அவரது வார்த்தைக்குள்‌) வாழ்வானேயாகில்‌ அவன்‌ புதிய மனிதன்‌ ஆகின்றான்‌”. நமது வெளித்தோற்றத்‌தில்‌ அல்ல; நமது உள்ளான வாழ்வில்‌ மாற்றங்‌கள்‌ வரவேண்டும்‌.

ஒரு சிறிய கிருமியானது இவ்வுலகத்தையே மாற்றக்கூடியதாக இருப்பின்‌ இருபுறமும்‌ கருக்‌குள்ள பட்டயம் போன்ற ஆண்டவருடைய வார்த்‌தையானது நமது வாழ்வில்‌ எப்படியான மாற்‌றத்தை உண்டுபண்ண வேண்டும்‌. ஆண்டவர்‌ கிருபையாகத்‌ தந்திருக்கும்‌ காலத்தை நாம்‌ உதாசீனம்‌ செய்யாது மனமாற்றம்‌ அடையவேண்டும்‌.

மாற்றம்‌ என்பது நாம்‌ முகக்கவசம்‌ அணிவதும்‌ கைகளைக்‌ கழுவுவதும்‌ சரீரத்தைச்‌ சுத்தமான வைத்திருப்பதும்‌ ௮ல்ல. நமது வாழ்வு மாறவேண்டும்‌. நமது எண்ணங்கள்‌, சிந்தனைகளில்‌ மாற்றம்‌ ஏற்பட வேண்டும்‌. தேவன்‌ எதிர்பார்க்‌கின்ற மாற்றம்‌ இல்லையெனில்‌ நாம்‌ விசாரிக்கப்‌படவேண்டியவர்கள்‌. நிச்சயமாகக்‌ கர்த்தர்‌ நம்மை விசாரிப்பார்‌.

5. கர்த்தரைத்‌ தேடவில்லை.

அறுப்புக்காலம்‌ எசன்றது, கோடைக்காலமும்‌ முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை (எரே.8:20). மேய்ப்பர்கள்‌ மிருக குணமுள்ளவர்களாகி, கர்த்தரைத்‌ தேடாமற்‌ போனார்கள்‌; ஆகையால்‌, அவர்கள்‌ காரியம்‌ வாய்க்காமற்போய்‌, அவர்கள்‌ மந்தையெல்லாம்‌ சிதறடிக்கப்பட்டது (எரே.10:21). அன்று, கர்த்தரின்‌ பணியில்‌ ஈடுபட்டவர்கள்‌ கர்த்‌தரை ஒருபுறத்தில்‌ ஒதுக்கி வைத்துவிட்டு அவரைத்‌தேடாமல்‌ செயற்பட்டார்கள்‌. அவர்கள்‌ புரியும்‌ பணிகள்‌, கட்டிட வேலைகள்‌, எழுப்புதல்‌ கூட்டங்கள்‌, திருச்சபை கூட்டங்கள்‌ நடந்தாலும்‌ அவர்களோ கர்த்தரைத்‌ தேட நேரமில்லாமல்‌ இருந்தார்கள்‌.

ஆகவே, அவர்கள்‌ தீட்டம்தீட்டி செய்த பணிகள்‌ யாவும்‌ வாய்க்காது போனது. மந்தைகளும்‌ சிதறடிக்கப்பட்டது. இன்றும்‌ உங்கள்‌ திருச்சபை சிதைவடைந்து பிரிவினை, பகை, போட்டி மனப்பான்‌மைகளோடு உள்ளனவா? சொந்த திருச்சபைக்குச்‌ செல்ல மனம்‌ இன்றி மக்கள்‌ ௮லைந்து திரிகின்றனரா? கர்த்தரைத்‌ தேடாமல்‌ நமது சுய பலத்தினால்‌ கர்த்தருடைய பணியைத்‌ தொடரும்‌ நாம்‌ ஒவ்வொருவரும்‌ கர்த்தரால்‌ விசாரிக்கப்பட வேண்டியவர்களாய்‌ இருக்கின்றோம்‌.

அன்பான தேவபிள்ளைகளே! கர்த்தர்‌ நம்மிடம்‌ கேட்பதெல்லாம்‌ உங்களது வழிகளையும்‌ சீர்தூக்கிப்‌ பாருங்கள்‌ என்பதே.

நமது வழிகளிலும்‌ நமது நடக்கைகளிலும்‌ மாற்றத்தைக்‌ கொண்டுவருவோம்‌. நமது எண்ணங்களும்‌ சிந்தனைகளும்‌ தேவனுக்குப்‌ பிரியமான ஒன்றாகக்‌ காணப்பட நம்மை இன்றே சீர்ப்படுத்துவோமாக!