Dr.எம்.எஸ்.வசந்தகுமார்
(மே-ஆகஸ்ட் 2021)

மருத்துவரிடம் சென்றால் அவர்கள் ஊசி போட்டு நம்மை கொடுமைப்படுத்துவார்கள் என்னும் பயம் நம் எல்லோருக்கும் சிறுபிராயத்தில் இருந்திருக்கும். இதனால், மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று பெற்றோர் கூறும்போது, “ஊசி போடாத மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்” என்று அடம்பிடித்து அழுதவர்களாகவே நாம் இருந்திருப்போம். எனினும், அது ஊசி ஏற்படுத்தும் வலியைப்பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அலறலாகவே இருக்கும். ஆனால், இப்பொழுது வளர்ந்து பெரியவர்களாகிய பின்பும் நாம் ஊசிகளுக்குப் பயப்படுகிறவர்களாய் இருந்தால், அது அர்த்தமும் அவசியமும் அற்ற அறிவீனமான ஒரு செயலாகும்.

அப்படியிருந்தும், இன்றைக்குப் பல கிறிஸ்தவர்கள், வேதாகம சத்தியங்களை சரியாக அறியாதவர்களின் தாறுமாறான தவறான போதனைகளை உண்மையென்று நம்புவதினால், கொரோனா தடுப்பு ஊசிகளைப்பற்றிய அச்சத்துடன் சிலரும் அலட்சியத்துடன் பலரும் இருக்கின்றனர். ஏனெனில், தொற்றுநோய்கள் நம்மைத் தொடாமல் இருப்பதற்கு தடுப்பு ஊசியே சரியான பாதுகாப்பைத் தரும் என்பதை ஏற்றுக்கொள்ள மனமற்ற நிலையில், தற்காலத்தில் பல தவறான தாறுமாறான போதனைகள் கிறிஸ்தவர்களைத் தடுமாற வைத்துள்ளன. இதனால், இத்தகைய போதனைகளை வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாய் உள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் சில கிறிஸ்தவ குழுக்களும், ஒருசில வேதப்புரட்டு உபதேசங்களும் மருத்துவரிடம் செல்வதையே பாவமான செயலாகவும் அவிசுவாசத்தின் அடையாளமாகவும் கருதியுள்ளபோதிலும், தற்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கொரோனா தடுப்பு ஊசிகளை அந்தி கிறிஸ்துவின் முத்திரையாகவும், தேவனை அவமதிக்கும் அவிசுவாசச் செயலாகவும் கருதுகின்றனர். ஆனால், உலகிலிருந்து சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பே அந்திகிறிஸ்து வெளிப்படுவான் என்று வேதாகமம் கூறுவதினால், உலகில் சபை இருக்கும் தற்காலத்தில் வந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகளை அந்திகிறிஸ்துவோடு தொடர்புபடுத்துவது வேதாகம சத்தியத்தையே முரண்படுத்தும் தவறான செயலாகவே உள்ளது. மேலும், வேதாகம சத்தியத்தின்படி மருத்துவரிடம் செல்வது அவிசுவாசத்தின் அடையாளமும் அல்ல. ஆனால், மருந்தின் மூலம் ஒருவரை சுகப்படுத்தி அவரை வாழ வைக்கக்கூடியதாக இருக்கும்போது, மருத்துவ உதவியை நாடுவது பாவம் என்று போதிப்பது, வியாதியினால் பாதிக்கப்பட்டவரைக் கொலை செய்யும் அளவுக்கு கொடூரமான ஒரு பாவச்செயலாகவே உள்ளது. அதேசமயம், மருந்துகள் எடுப்பது தேவனுக்கு எதிரான ஒரு செயலும் அல்ல. ஏனெனில்,தேவன் மருந்துகள் மூலமும் மனிதரை சுகப்படுத்துகிறவராக இருக்கின்றார். இதனால், கொரோனா தடுப்பு ஊசிகள் அந்திகிறிஸ்துவின் அடையாளமா? அல்லது இது அவிசுவாசத்தின் அடையாளமா? என்பதை வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்ப்போம்.

அந்திகிறிஸ்துவின் அடையாளமா?

கொரோனா தடுப்பு ஊசிகளைப்பற்றி கிறிஸ்தவர்கள் மத்தியில் காணப்படும் முக்கியமான தடுமாற்றம், இது அந்திகிறிஸ்துவின் அடையாளம் என்னும் அறிவீனமான எண்ணமாகும்; இதனால், கொரோனா தடுப்பு ஊசியின் மூலம் மனிதருடைய சரீரத்தில் அந்தி கிறிஸ்துவின் முத்திரைப் போடப்படுகிறது என்றும், தடுப்பு ஊசி போட்டவர்களை அந்திகிறிஸ்து தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றான் என்றும் கிறிஸ்தவர்கள் தவறான கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். இதனால், அந்திகிறிஸ்து என்பவன் யார்? இவன் எப்பொழுது வருவான்? இவனுடைய முத்திரை எப்பொழுது மனிதருக்குப் போடப்படும்? கொரோனா தடுப்பு ஊசிகளுக்கும் அந்தி கிறிஸ்துவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? என்னும் கேள்விகளுக்கான பதில்களை இப்பகுதியில் ஆராய்ந்து பார்ப்போம். அடுத்த பகுதியில், தடுப்பு ஊசிகள் போடுவதும் மருந்துகள் எடுப்பதும் அவிசுவாசத்தின் அடையாளமா? என்னும் கேள்விக்கான பதில் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராயப்பட்டுள்ளது.

அந்திகிறிஸ்து என்னும் சொல் வேதாகமத்தில் யோவான் எழுதிய நிருபங்களில் மொத்தம் ஐந்து தடவைகள் மாத்திரமே காணப்படுகின்றது. எனினும் இது ஒரு தமிழ் சொல் அல்ல. ஏனெனில், வேதாகமத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் “அன்டிகிறிஸ்டொஸ்” என்னும் கிரேக்கச் சொல்லை மொழிபெயர்க்காமல், ஆங்கிலத்தில் அதை “அன்டிகிரைஸ்ட்” என்று எழுதியதினால், நமது தமிழ் வேதாகமத்தில் இதை அந்திகிறிஸ்து என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், புதிய ஏற்பாடு எழுதப்பட்ட கிரேக்கத்தில் அன்டி கிறிஸ்டொஸ் என்பது “கிறிஸ்துவுக்கு எதிரானவன்” என்னும் அர்த்தமுடைய ஒரு சொல்லாகும். எனவே, அன்டி கிறிஸ்டொஸ் என்னும் சொல்லை நாம் மொழி பெயர்த்து 1யோவான் 2:18ஐ எழுதினால், “கிறிஸ்துவுக்கு எதிரானவன் (அந்திகிறிஸ்து) வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் (அந்திகிறிஸ்துகள்) அநேகர் இருக்கின்றார்கள் என்றே யோவான் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிந்திடலாம். உண்மையில், இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த காலத்திலிருந்தே அவருக்கு எதிரானவர்கள் பலர் இருந்தனர். கிரேக்க மொழியில் இவர்கள் அனைவரையும் அன்டி கிறிஸ்டொஸ் (அந்தி கிறிஸ்து) என்றே கூறவேண்டும். இதனால்தான், யோவானுடைய நிருபத்தில் இச்சொல் ஐந்து தடவைகள் இடம் பெற்றாலும், ஒரேயொரு தடவை மாத்திரமே அந்திகிறிஸ்து என்று தற்காலத்தில் கிறிஸ்தவர்கள்; யாரைக் குறிப்பிடுகின்றனரோ அவனைப் பற்றிய குறிப்பாக உள்ளது. ஏனைய இடங்களில், தனது காலத்தில் இருந்த வேதப்புரட்டர்ளையே கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் என்னும் அர்த்தத்தில் யோவான் இவ்விதமாக அழைத்துள்ளார். மேலும், 1யோவான் 2:18இல் அந்தி கிறிஸ்து என்னும் சொல்லை யோவான் இரண்டு தடவைகள் உபயோகித்தாலும், தனது காலத்தில் இருந்த வேதப்புரட்டர்களைக் குறிப்பிடும்போது இதைப் பன்மையிலும், எதிர்காலத்தில் வரும் உலக ஆட்சியாளனைக் குறிப்பிடும்போது ஒருமையிலும் குறிப்பிடுவதன் மூலம், இரண்டு இடத்திலும் இச்சொல்லின் அர்த்தத்தை வேறுபடுத்தியும் காண்பித்துள்ளார். இதனால், “இப்பொழுதும் அநேக அந்திகிறிஸ்துகள் இருக்கிறார்கள்” என்று யோவான் கூறுவதினால், உலகின் இறுதி ஆட்சியாளனான அந்திகிறிஸ்து இப்பொழுதே உலகத்தில் இருக்கின்றான் என்று எண்ணுவது தவறாகும். ஏனெனில், கிறிஸ்துவுக்கு எதிரானவர்களே இப்பொழுது உலகத்தில் இருக்கின்றார்கள். ஆனால், உலகத்தின் இறுதி ஆட்சியாளன் இன்னும் வரவில்லை. ஏனெனில், உலகிலிருந்து சபை எடுத்துக்கொள்ளப்பட்ட பின்பே அவன் வருவான்.

உலகின் இறுதியில் முழு உலகையும் தன்னுடைய ஆளுகையின் கீழ் வைத்திருப்பவனை இன்றைக்கு நாம் அந்திகிறிஸ்து என்றே அழைத்தா லும், 1 யோவான் 2:18ஐத் தவிர ஏனைய வசனங்களில் இவன் பாழாக்கும் அருவருப்பு (தானி.9:27, 12:11, மத்.24:15) “கேட்டின் மகனாகிய பாவ மனுஷன்” (2தெச.2:3), “அக்கிரமக்காரன்” (2தெச.2:8-9) என்றும், வெளிப்படுத்தல் புத்தகத் தரிசனங்களில் “மிருகம்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளான் (வெளி.13:1-7, 13:14-18, 17:8, 17:11, 19:19-20). எனினும், இவன் கிறிஸ்துவுக்கு எதிரானவனாக இருப்பதினால்தான்,யோவான் இவனை “அன்டி கிறிஸ்டொஸ்” அதாவது, அந்திகிறிஸ்து என்று குறிப்பிட்டுள்ளார் (1யோவா.2:18). கிரேக்க மொழியில் ஒரு சொல்லுக்குமுன் “அன்டி” என்னும் சொல்லைச் சேர்க்கும்போது, “அதற்கு எதிரானது அல்லது அதற்கு பதிலாய் இருப்பது” என்னும் அர்த்தத்தைக் கொடுக்கும். எனவே, உலகத்தின் இறுதி ஆட்சியாளன் கிறிஸ்துவுக்கு எதிரானவனாய் மாத்திரமல்ல, கிறிஸ்துவுக்குப் பதிலாகத் தன்னையே கிறிஸ்துவாக, அதாவது மேசியாவாக மக்களுக்கு காண்பிப்பவனாகவும் இருப்பான். உண்மையில், வெளிப்படுத்தல் புத்தக தரிசனத்தின்படி, யுத்தமொன்றில் மரணமடையும் இவன் சாத்தானால் உயிர்ப்பிக்கப்படுவதினால், மக்கள் எல்லோரும் இவனைத் தெய்வமாகவே ஏற்றுக்கொள்வார்கள் (வெளி.13: 3-4). இதனால், கிரேக்க மொழியில் அன்டி கிறிஸ்டொஸ் என்னும் பெயர் இவனுக்கு மிகவும் பொருத்தமானதாகவே உள்ளது. இதனால்தான், வேதாக மத்தில் இவனைக் குறிப்பிடும் பாழாக்கும் அருவருப்பு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன், மிருகம் என்னும் பெயர்களைவிட அந்திகிறிஸ்து என்னும் பெயரே கிறிஸ்தவ உலகில் பிரபலமாகி உள்ளது.

அந்திகிறிஸ்துவைப் பற்றி வேதாகமம் வெளிப்படுத்தியுள்ள விஷயங்களைக் கருத்திற்கொள்ளும்போது, இவன் உலகத்தின் இறுதி ஆட்சியாளனாக இருப்பது மாத்திரமல்ல, முழு உலகத்தையும் தன்னுடைய ஆளுகையின் கீழ் வைத்திருப்பான். ஆனாலும், இதுவரை கால உலக சரித்திரத்தில், வேதாகமம் கூறுகின்ற விதமாக எந்த ஓர் அரசனும் முழு உலகையும் தனது ஆளுகையின் கீழ் வைத்திருக்கவில்லை. பலநாடுகளை உள்ளடக்கிய பெரும் சாம்ராஜ்யங்கள் இவ்வுலகில் இருந்துள்ளபோதிலும், இவற்றில் எந்த ஒரு ராஜ்யமும் முழு உலகையும் ஆளுகை செய்யும் பேரரசாக இருந்ததில்லை. இதனால், இதுவரையில் அந்தி கிறிஸ்து வெளிப்படவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், ஒவ்வொரு காலத்திலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு எதிராக இருந்த ஆட்சியாளர்களை அல்லது மதத்தலைவர்களை அந்திகிறிஸ்துவாகவும், தாங்கள் வாழும் காலத்தைக் கடைசிக் காலமாகவும் எண்ணிக் கலக்கத்துடனும் குழப்பத்துடனும் வாழ்ந்துள்ளனர். இதைப்போலவே, தற்காலத்திலும் கொரோனா கிருமிகளைக் கடைசிக் காலத்தின் அடையாளமாகக் கருதும் கிறிஸ்தவர்கள், கொரோனா தடுப்பு ஊசிகள் மூலம் அந்திகிறிஸ்துவின் முத்திரை மனிதருக்கு போடப்படுவதாக எண்ணிக் கலக்கமடைந்துள்ளனர். ஆனால், அந்திகிறிஸ்துவின் முத்திரை மனிதனுடைய சரீரத்திற்குள் ஊசியின் மூலம் ஒரு திரவ மருந்தாகச் செலுத்தப்படுவதில்லை. ஏனெனில், இது மனிதருடைய வலது கைகளில் அல்லது நெற்றிகளில் போடப்படும் ஒரு அடையாளமாகவே இருக்கும் என்றே வெளிப்படுத்தல் 13:16-17இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமாத்திரமல்ல, அந்திகிறிஸ்துவின் ஆட்சி இன்னும் ஆரம்பமாகவும் இல்லை. எனவே, கொரோனா தடுப்பு ஊசிகளைப் பற்றி கலக்கமடைவது, இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்து பயமடையும் பரிதாபமான ஒரு செயலாகவே உள்ளது.

உலகத்தின் இறுதியிலேயே அந்திகிறிஸ்து வெளிப்படுவான் என்றாலும், அவன் வருவதற்கும் முன்பே இயேசுகிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அவயவங்களாய் இருக்கும் கிறிஸ்தவர்களாகிய நாம், இவ்வுலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவோம் என்றும் வேதாகமம் கூறுகிறது. இதனால், கொரோனா தடுப்பு ஊசிகள் மூலம் தற்காலத்தில் அந்திகிறிஸ்து தன்னுடைய முத்திரையை மனிதர்களுக்குப் போடுகிறான் என்னும் போதனை, வேதாகம சத்தியத்தையே அறியாத தவறான ஒரு வேதப்புரட்டு உபதேசமாகவே உள்ளது. ஏனெனில், அந்திகிறிஸ்து வருவதற்கும் முன்பே சபை உலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்பதை 2தெசலோனிக்கேயர் 2ஆம் அதிகாரம் நேரடியாகவே அறியத்தருகின்றது.

மேலும்,இவ்வதிகாரத்தில் இயேசுகிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் இரண்டு அம்சங்களைப் பற்றியும் பவுல் விளக்கியுள்ளார். அதாவது, இயேசுகிறிஸ்து உலகிலிருந்து சபையை எடுத்துக்கொள்வதையும், அந்திகிறிஸ்துவின் ஏழு வருஷ உலகளாவிய ஆட்சியின் பின்னர், அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட சபையுடன் பகிரங்கமாக இவ்வுலகத்திற்கு வருவதையும் விரிவாக எழுதியுள்ளார். இதனால்தான், “அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்” (2தெச.2:1) என்று பவுல் இவ்வதிகாரத்தை ஆரம்பித்துள்ளார். எனினும், இவ்வசனத்தில் “இயேசுகிறிஸ்துவின் வருகை” என்பது அவருடைய பகிரங்க வருகையையும், “நாம் அவரிடத்தில் சேர்க்கப்படுவது” என்பது சபை மக்களாகிய நாம் உலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவதையும் குறிக்கின்றது. சில கிறிஸ்தவர்கள், இவ்விரண்டு சம்பவங்களும் ஒரே நேரத்திலேயே நடைபெறும் என்று போதித்தாலும், இவற்றிற்கிடையில் அந்தி கிறிஸ்துவின் ஏழு வருஷ ஆட்சி இருக்கும் என்றே வேதாகமம் கூறுகிறது. மேலும், மூன்றாம் வசனத்தில் “விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவ மனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது” என்பதில் “அந்த நாள்” என்பது இயேசுகிறிஸ்துவின் பகிரங்க வருகையைப்பற்றிய குறிப்பாகும். ஏனெனில், அந்திகிறிஸ்து வெளிப்பட்டபின்பே இயேசுகிறிஸ்துவின் பகிரங்க வருகை நடைபெறும். மேலும், அந்திகிறிஸ்து எப்படிப்பட்டவனாக இருப்பான் என்பதை நான்காம் வசனத்தில் விளக்கும் பவுல், ஆறாம் வசனத்தில், “அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே” என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, அந்திகிறிஸ்து வெளிப்படுவதை ஏதோவொன்று தடை செய்கிறது என்பது தெளிவாகின்றது.

அந்திகிறிஸ்து வெளிப்படுவதைத் தடை செய்வது யார் என்பது கிறிஸ்தவ உலகில் அதிக சர்ச்சைக்குரிய விஷயமாய் உள்ளது. ஏனெனில், “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படு முன்னே அது வெளிப்படாது. நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்” (2தெச.2:7-8) என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். எனினும், “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது” என்று பவுல் கூறுவதினால், அந்திகிறிஸ்து இப்பொழுதே இருக்கின்றான் என்று கூறமுடியாது. ஏனெனில், பவுல் இதை முதலாம் நூற்றாண்டிலேயே எழுதியுள்ளார்.

எனவே, அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியை செய்கிறது என்பதினால் அந்தி கிறிஸ்து இப்பொழுதே செயற்படுகிறான் என்றால், அவன் முதல் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால், பவுலின் காலத்தில் அந்தி கிறிஸ்து இருந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனினும், அந்திகிறிஸ்து சாத்தானின் வல்லமையினால் செயல்படுகிறவனாகவே இருப்பான் (வெளி.13:2) என்பதினாலேயே பவுல் இவ்வாறு எழுதியுள்ளார். அதாவது, உலகின் முடிவில் அந்தி கிறிஸ்துவை செயல்பட வைக்கும் சாத்தான் இப்பொழுதும் உலகத்தில் இருப்பதினால், சாத்தானுடைய அக்கிரமச் செயல்கள் இப்பொழுதும் உலகத்தில் உள்ளன. ஆனாலும், சாத்தான் எப்படி செயல்படுகின்றான் என்பதை நம்மால் அறியமுடியாமல் இருப்பதினால், இதை இரகசியம் என்று பவுல் குறிப்பிட்டுள்ளார். எனினும், சாத்தான் இப்பொழுது கிரியை செய்தாலும் அவனால் கொண்டு வரப்படும் அந்திகிறிஸ்து இன்னும் வெளிப்படவில்லை. ஏனெனில், தற்காலத்தில் பரிசுத்தாவியானவரின் வல்லமையுடன் செயல்படும் சபை அந்திகிறிஸ்து வெளிப்படுவதைத் தடை செய்வதினால், சபை உலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்வரை அந்திகிறிஸ்து வெளிப்படமாட்டான் என்பதையும் பவுல் அறியத்தந்துள்ளார்.

தேவனால் மாத்திரமே அந்திகிறிஸ்து வெளிப்படுவதைத் தடை செய்யமுடியும் என்பது உண்மை என்றாலும், தற்காலத்தில் தேவனுடைய செயல்கள் அனைத்தும் பரிசுத்தாவியானவரால் சபையின் மூலமாகவே செய்யப்படுகின்றன. இதனால், தற்காலத்தில் சபையில் செயல்படும் பரிசுத்தாவியானவரே அந்திகிறிஸ்து வெளிப்படுவதைத் தடை செய்கிறவராக இருக்கின்றார். மேலும், தேவனைப்போலவே பரிசுத்தாவியானவரும் நித்தியமானவராக இருக்கின்றபோதிலும், பெந்தெகொஸ்தே நாளில் சபை உருவானபோது, விசுவாசிகளின் உள்ளத்தில் நிரந்தரமாக வாசஞ்செய்யும் விதத்தில் சபைக்கு அருளப்பட்டார். இதனால், சபை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்போது, தற்காலத்தில் சபையின் மூலமாக நடைபெறும் அவருடைய செயற்பாடுகளும் இல்லாமற் போய்விடும். எனவே, தற்காலத்தில் “பரிசுத்தாவியானவரின் வல்லமையுடன் இயங்கும் சபை சாத்தானுக்கு எதிராகச் செயற்படுவதினால், சபை உலகத்தில் இருக்கும்வரை சாத்தானால் அந்தி கிறிஸ்துவின் ஆட்சியைக் கொண்டுவர முடியாது”.  இதனால்தான், தாம் கட்டும் சபையைப் பாதாளத்தின் வாசல்களினால் மேற்கொள்ளமுடியாது (மத்.16:18) என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இயேசுகிறிஸ்துவின் கூற்றிலுள்ள பாதாளத்தின் வாசல் என்பது யூதர்களின் மொழி வழக்கில் “மரணத்தைக் குறிப்பிடும் உருவகமாகும்”. ஏனெனில், இது கல்லறை என்னும் அர்த்தமுடைய ஷியொல் என்னும் எபிரெயச் சொல்லை அக்கால யூதர்கள் குறிப்பிடும் முறையாக இருந்தது. ஏசாயா38:10இல் இத்தகைய அர்த்தத்துடன் பாதாளத்தின் வாசல் என்னும் சொல் உள்ளது. இரண்டு ஏற்பாடுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட யூதர்களின் நூல்களிலும் இத்தகைய சொற்பிரயோகம் உள்ளது. மேலும், யோபு 38:17,சங்கீதம் 9:13, 107:18 என்னும் வசனங்களில் நேரடியாகவே மரண வாசல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, “தாம் கட்டும் சபைக்கு மரணம் இல்லை, அதாவது, அதற்கு அழிவோ அல்லது முடிவோ இல்லை என்றே இயேசுகிறிஸ்து மத்தேயு 16:18இல் குறிப்பிட்டுள்ளார்.” இதனால், சபையில் இருப்பவர்கள் மரிக்க மாட்டார்கள் என்பது இதன் அர்த்தமல்ல. ஆனால், சபையில் இருப்பவர்கள் மரித்தாலும் சபை இல்லாமல் போகாது. ஏனெனில், “சபையை யாராலும் அழிக்கமுடியாது”. “சபையை அழிக்கக் கூடிய வல்லமை எதற்கும் இல்லை”. “எந்தத் தீய சக்தியினாலும் அதை மேற்கொள்ள முடியாது”. ஏனெனில், “சாத்தானின் சகலவிதமான தாக்குதல்களையும் மேற்கொண்டு சபை அழியாமல் இருக்கும் என்றே இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார்”. உண்மையில், “சபைக்கு முடிவென்பதே இல்லை”. இதனால், சபை உலகத்தில் இருக்கும் வரை அந்திகிறிஸ்துவினால் உலகத்திற்கு வர முடியாது. ஏனெனில், அந்திகிறிஸ்துவின் வருகையைத் தடுக்கும் வல்லமை சபைக்கு இருக்கின்றது.

அந்திகிறிஸ்துவின் வருகையைத் தடுக்கும் வல்லமை பரிசுத்தாவியானவரினால் செயல்படும் சபைக்கு இருப்பதினால், சபை உலகிலிருக்கும் தற்காலத்தில் அந்திகிறிஸ்து வந்துவிட்டான் என்றும், கொரோனா தடுப்பு ஊசிகளின் மூலம் அவனுடைய முத்திரை போடப்படுகிறது என்றும் அச்சமடைவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. மேலும், அந்திகிறிஸ்துவின் ஆட்சிக் காலமான உபத்திரவக் காலத்திற்குள் சபை செல்லாது என்று இயேசுகிறிஸ்துவும் வெளிப்படுத்தல் 3:10இல் வாக்களித்துள்ளார். இதனால்தான், “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்ட படியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனை காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன் (வெளி.3:10)” என்னும் வாக்குத்தத்தம் சபை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உபத்திரவம், “பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலமாக” இருப்பதினால், இது தனியொரு சபைக்கு மாத்திரமல்ல, அந்திகிறிஸ்துவின் ஆட்சிக் காலத்தில் முழு உலகிலும் ஏற்படும் உபத்திரவமாகவே உள்ளது. இதனால்தான், இயேசு கிறிஸ்து இதைப்பற்றி கூறும்போது, “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்” (மத். 24:21) என்றும், “அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை. தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் நிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும்” (மத்.24:22) என்றும் தெரிவித்துள்ளார். இதனால்தான், அந்தி கிறிஸ்துவின் ஆட்சிக்காலத்தில் உலகெங்கும் ஏற்படும் கொடிய உபத்திரவம் மூன்றரை வருஷங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இது, அந்தி கிறிஸ்துவினுடைய ஆட்சியின் இறுதி மூன்றரை வருஷ காலமாகும். எனினும், இது இஸ்ரவேல் மக்கள் மனந்திரும்புவதற்காகத் தேவன் அனுமதிக்கும் உபத்திரவமாகவே உலகத்தின் இறுதியில் ஏற்படும். அப்பொழுது, இயேசுகிறிஸ்து மத்தேயு 24ஆம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தல் புத்தகத்திலும் முன்னறிவித்துள்ள கொடிய உபத்திரவங்கள் உலகத்தில் ஏற்படும். இவைகள், உலகத்தின் முடிவுகாலத்தில் நடைபெறும் என்பதையும், (தானி.12:1) அந்திகிறிஸ்துவின் ஆட்சிக்காலம் ஏழு வருஷங்களுக்கு நீடிக்கும் என்பதையும் தானியேலின் தரிசனங்கள் அறியத் தருகின்றன. ஆனால், இத்தகைய கொடிய காலத்திற்குள் சபை செல்லாது என்றே வெளிப்படுத்தல் 3:10இல் இயேசுகிறிஸ்து வாக்களித்துள்ளார்.

வெளிப்படுத்தல் 3:10இல் “சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி” என்பது மூலமொழியின் இலக்கணத்தின்படி, “அக்காலத்திற்கு” உட்படாதபடி தப்புவிக்கப்படுவதையேக் குறிக்கின்றது. இதனால்தான், “சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி” என்பது மூலமொழியில் “சோதனைக் காலத்திற்கு உட்படாதபடி அதிலிருந்து வெளியேற்றப்படும்” என்று அர்த்தந்தரும் விதத்தில் உள்ளது. மேலும், இது “பூமியில் குடியிருக்கிறவர்கள்” மீது வரவிருக்கும் உபத்திரவமே தவிர, சபைக்கு வரும் துயரம் அல்ல. ஏனெனில், வெளிப்படுத்தல் புத்தகத்தில் “பூமியில் குடியிருக்கிறவர்கள்” என்னும் சொற்பிரயோகம், கிறிஸ்தவ சபையை அல்ல, தேவனை அறியாத அவிசுவாசிகளையே குறிக்கின்றது (வெளி.6:10, 8:13, 11:10, 12:12, 13:8, 13:12, 13:14, 17:1, 17:8). எனவே, அவிசுவாசிகளின் மீது தேவனுடைய கோபாக்கினை வெளிப்படும் உபத்திரவ காலத்திற்கு உட்படாதபடி சபை தப்புவிக்கப்படுவதினால், அக்காலம் ஆரம்பமாவதற்கும் முன்பே சபை மக்கள் உலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மேலும், “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு” (யோவா. 16: 33) என்று இயேசுகிறிஸ்து கூறியதினால், சபை உபத்திரவ காலத்திலும் உலகத்தில் இருக்கும் என்று வாதிடுவது அர்த்தமற்றது. ஏனெனில், இவ்வசனத்தில் உபத்திரவம் எதிர்காலத்தில் நடைபெறும் சம்பவமாகக் குறிப்பிடப்படவில்லை. இதைப் போலவே, நிகழ்காலத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்நோக்கும் உபத்திரவத்தைக் குறிப்பிடவே வேதாகமத்தில் இச்சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது (மாற். 4:17,ரோ.5:3,2கொரி.1:4). எனவே, இதை உபத்திரவ காலத்தைப் பற்றிய அறிவிப்பாக எடுத்தால், இரண்டாயிரம் வருஷங்களாக சபை உபத்திரவ காலத்தில் இருப்பதாகவே கூறவேண்டும். ஏனெனில், ஆரம்ப காலத்திலிருந்தே சபை பல்வேறு விதமான உபத்திரவங்களைச் சந்தித்துள்ளது.

ஆனால், வேதாகமத் தீர்க்கதரிசனங்களில் “உலக முடிவில் தீமையின் மீதான தேவனுடைய கோபாக்கினை வெளிப்படும் காலமே உபத்திரவ காலமாக உள்ளது”. மேலும், உலகின் இறுதியில் தேவனை அறியாதவர்கள் எதிர்நோக்கும் இந்த கோபாக்கினைக்கு கிறிஸ்தவர்கள் உட்படுவதில்லை என்பதே வேதாகமம் நமக்கு அறியத்தரும் நற்செய்தியாகும் (யோவா.3:36, ரோ.8:1, 1தெச. 1:10). கிறிஸ்தவசபை ஆரம்பத்திலிருந்தே பலவிதமான உபத்திரவங்களைச் சந்தித்துள்ள போதிலும், இவற்றை சபையின் மீதான தேவ கோபாக்கினை என்று கூறமுடியாது. ஏனெனில், கிறிஸ்தவ சபைக்கு வரும் உபத்திரவங்கள் சாத்தானால் கொண்டு வரப்படுபவை. ஆனால் உபத்திரவ காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்களில் (வெளி. 6-18) முன்னறிவிக்கப்பட்டுள்ள உபத்திரவங்கள் சாத்தானால் கொண்டு வரப்படுபவைகள் அல்ல. இவை தேவனுடைய கோபாக்கினைக்கு உலகம் உட்படுவதைப்பற்றிய முன்னறிவிப்புகளாகும்.

இயேசுகிறிஸ்துவின் வருகை தேவ கோபாக்கினையிலிருந்து சபையை விடுவிக்கும் என்பதை 1தெச.1:10 அறியத்தருவதினால், தேவ கோபாக்கினையாக உபத்திரவங்கள் வருவதற்கு முன்னர் சபை உலகிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெளிவாகின்றது. இவ்வசனத்தில் “விடுவித்தல்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள “ருஹூஓமாய்” (rhuomai) என்னும் கிரேக்கச்சொல் “வல்லமையான செயலினால் ஆபத்திலிருந்து தப்புவிக்கப்படுதல்” என்னும் அர்த்தம் உடையது. இதனால், “தேவ கோபாக்கினை வரும் இடத்திலிருந்து சபை அகற்றப்படுவதைப்பற்றியே இவ்வசனம் கூறுகிறது.” எனவே, இயேசுகிறிஸ்துவின் வருகையின்போது சபை உலகிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்பது தெளிவாகின்றது. உண்மையில், “இயேசுகிறிஸ்துவினால் மீட்கப்பட்டு, நீதிமான்களாக இருக்கும் கிறிஸ்தவர்கள் தேவகோபாக்கினைக்கு உட்படுவார்கள் என்று கூறுவது அர்த்தமற்ற ஒரு தர்க்கமாகவே உள்ளது”. அந்திகிறிஸ்துவின் ஆட்சிக் காலமான உபத்திரவ காலத்தில் தேவனுடைய கோபாக்கினை உலகத்தின்மீது வருவதற்கு முன்பே உலகத்திலிருந்து சபை எடுத்துக்கொள்ளப்படும் என்பதினால்தான், “தேவன் நம்மை கோபாக்கினைக்கென்று நியமிக்காமல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்திருக்கிறார்” என்று 1தெசலோனிக்கேயர் 5ம் அதிகாரத்தில் பவுல் தெரிவித்துள்ளார் (1தெச.5:9).

(தொடரும்)