சகோ.ஜெகராஜ் பெர்னாண்டோ
(மே-ஆகஸ்ட் 2021)

நியாயாதிபதிகள் புத்தகத்தை ஆழமாக நோக்குகையில் மறைந்துள்ள பொக்கிஷங்களை நீங்கள் கண்டுபிடிக்க விரும்புகிறீர்களா? ஆம். அதை நாம் பின்னோக்கிப் பார்க்கையில் முன்னோக்கிச் செல்ல தேவ ஆவியானவர் உதவி செய்கின்றார் என்ற சத்தியத்தை இச்செய்தியின் வாயிலாக காண்போம்.

தேவனைக் குறித்தும், தேவனது மக்கள், தலைவர், சேவகர் என்போரைக் குறித்தும் வேதாகமத்தில் பார்க்கையில், நாம் தேவ பார்வையில் முன்னேறிச் செல்ல உதவும். நாம் இவ்வுலகத்தில் ஏன் இருக்கிறோம் என்ற நோக்கத்தை மறக்கும்போது, இங்கு வாழ்வதன் முக்கியத்துவத்தை நாம் இழந்துபோய்விடுவோம். அப்படி நோக்கத்தை இழக்காமல் வாழ நியாயாதிபதி புத்தகம் நமக்குக் கற்றுத்தருவது எது என பார்ப்போமா?

தேவன் தேடுவது சேவகர்களையே…

தேவன், தமது வார்த்தையைக் கேட்டு அவரது வல்லமையைப் பெற்று அவரது திட்டத்தையும் சித்தத்தையும் நிறைவேற்றுபவர்களையே தேடுகின்றார். நியாயாதிபதிகள் நூலிலிருந்து தேவன் எப்படிப்பட்ட ஆணையும் பெண்ணையும் பயன்படுத்துகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

பலவீனமான கிதியோனை தனக்குள்ளே பெலப்படுத்தினார். பாராக் தனியாகப் போராடப் பயந்தான். எனவே, வித்தியாசமானவர்களாக இருந்தாலும் எவரும் தேவனை சேவிக்கலாம், அவரது மகிமைக்காக பயன்படுத்தப்படலாம்.

தேவன் நம்மையும், நமக்குள்ள தகுதி, தாலந்து, திறமை, குடும்பப் பெயர் நிமித்தமல்ல, அவருக்கு ஆயத்தமாயுள்ள யாவரையும் அவர் எடுத்து உபயோகிப்பார். இங்கு அநேக நேரங்களில் தாங்கள் தலைமைத்துவ தகுதிகள் அற்றவர்கள் என்று நினைப்பவர்களை தெரிவு செய்து, தகுதியும் பிரயோஜனமும் உள்ள சேவகர்களாக மாற்றினார் தமது கிருபையினால்! மெய்யான சேவகர்களாய் ஜீவிக்க, நம்மையும் நமக்குள்ள சவாலை மட்டுமே நோக்காமல், இரட்சகரையே நாம் நோக்க வேண்டும்.

தேவன் ஆட்சி செய்கிறார், சரித்திரத்தை ஆளுகிறார்!

தேவன் செயல்படுகின்றார். சகல தேசங்களிலும் புறஜாதி-யூதர் மத்தியிலும் எங்கும் அவரே ஆளுகை செய்கிறார் என்பதை தெளிவாகக் காணலாம். சரித்திரத்தினதும் பூகோளத்தினதும் கர்த்தர் அவரே. தனது சொந்த ஜனத்தை சிட்சிக்கவும் திருத்தவும் புறஜாதி தேசத்தைப் பயன்படுத்தினார்.

ஓர் அதிபதியை நியமிப்பதும் உருவாக்குவ தும் அவரே. அதேநேரம் இன்னொரு அதிபதியையும் அரசனையும் கீழிறக்குவதும் அவரே. எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது. சரித்திரம் என்பது அவரது கதை (History is HIS Story).

இங்கு இஸ்ரவேலின் இருண்ட கால கட்டத்திலும் தேவன் அரியணையில் ஆட்சி செய்து அவரது நோக்கத்தை நிறைவேற்றினார். எவ்வளவுதான் தீமையும் பாவமும் எதிர்ப்பும் இவ்வுலகில் நிறைந்திருந்தாலும் இந்த சத்தியமும் சரித்திரமும் அவர்மீது நம்பிக்கை வைக்கவும் அவரை சேவிக்கவும் நம்மை உந்தித் தள்ளுகின்றது.

தேசத்திற்கு ஏற்ற தலைவர்களை தேவனே தருகின்றார்.

கிதியோனுக்குப் பின்பாக நாம் காணக்கூடிய ஓர் அம்சம் என்னவென்றால், தலைவர்கள் படிப்படியாக வீழ்ச்சியடைகின்றனர். சிம்சோனைப் பொருத்தவரையில், சரீரத்தில் பலசாலியாக இருந்தாலும், குணாதிசயத்தில் பெலவீனமுள்ளவனாக மாறினான். யெப்தா மற்றும் சிம்சோன் தேவன் கொடுத்த காரியத்தை நிறைவேற்றினாலும், மக்களுக்கு தேவையான ஆவிக்குரிய தலைமைத் துவத்தை வழங்கவில்லை.

இன்று சபை மக்கள் தேவன் எதிர்பார்க்கும் குணாதிசயத்தைக் கட்டியெழுப்பி, தங்களது தாலந்துகளை தேவமகிமைக்காக உபயோகிக்க வேண்டும். ஏனென்றால், தேவ மகிமைக்காக ஏங்குவதே தேவனுடைய இருதயமாகும். அது சுயநலமல்ல; அதுவே நமக்கு நலம். எந்த சிருஷ்டிப்பும் தேவ நோக்கத்தை நிறைவேற்றும்போது தேவனுக்கு மகிமையையும் சமூகத்திற்கு சமாதானத்தையும் சந்தோஷத்தையும் சுபிட்சத்தையும் கொடுக்கிறது.

தேவகிருபையினால் மன்னித்து திரும்பவும் ஆரம்பிக்க உதவுகிறார்.

நியாயாதிபதிகள் நூலில் காணப்படுகின்ற கீழ்ப்படியாமை, வீழ்ச்சி, உபத்திரவம், தேவகிருபை எனும் சக்கரத்திலிருந்து அவர்கள் கீழ்ப்படியாமல் போகையில் தேவன் சிட்சிப்பதையும், மனந்திரும்பி பாவத்தை அறிக்கையிடும்போது மன்னிப்பதையும் காண்கிறோம். கடந்தகால தோல்விகளிலிருந்து கற்றுக்கொள்ளும் பாடங்களை அநேக நேரம் நாம் மறந்து போவது வேதனைக்குரியது.

இஸ்ரவேல் மக்கள் தேவனது உடன்படிக்கையின் ஜனம். அவரது நீதிச் சட்டங்களைக் கைக்கொள்ளவும் மீறினால் சிட்சிப்பேன் என்பதை தெளிவாக அவர்களுக்குக் கூறினார். இன்னும் அவரை நேசித்து கீழ்ப்படிவதைவிட அநேக கிறிஸ்தவர்கள் அவரிடமிருந்து ஆசீர்வாதங்களை மட்டுமே பெறுவதில் முக்கிய குறியாக உள்ளது வேதனைக்குரியது.

மாறாத தேவன்

மக்களது விசுவாசமின்மை, உண்மையற்ற நிலையிலும் தேவன் தனது வார்த்தையில் மாறாதவர்.

தேவவார்த்தையை விசுவாசித்ததினால், நியாயாதிபதிகள் காரியங்களை நிறைவேற்றினர் (எபி.11:32-34). சிலநேரம் அவர்களது விசுவாசம் பெலவீனமாகவும், பூரணமற்றதாகவும் இருந்தாலும், தேவன் அவர்களது விசுவாசத்தைக் கனம் பண்ணி, அவர்களுக்கூடாக தனது நாமத்தை மகிமைப்படுத்தினார்.

தலைவர்கள், மக்கள் கீழ்ப்படியாமல் போகையிலும் அவர்களது அவிசுவாசமும் கீழ்ப்படியாமையும், தேவனது வார்த்தையை நீக்கிவிடவில்லை. ஏனென்றால், அவரது வார்த்தை தோல்வியுறாது. மாறாது. மக்கள் மாறினாலும் அவரும் அவரது வார்த்தையும் வாக்குத்தத்தமும் நிலையானது. அவரது குணாதிசயம் மாறாது. எனவே அவரது பிள்ளைகளான நாமும் அவரது வாக்குத் தத்தத்தின் அடிப்படையில் வாழ வேண்டும். We Live on Promise and not on Explanations.

தேவன்தாமே, தான் ஏன் செய்கிறார், எதைச் செய்கிறார், எதற்காக செய்கிறார் என அநேக நேரம் விளங்கப்படுத்துவதில்லை. எப்பொழுதும் தமது தாசர்களுக்கு வாக்குத்தத்தத்தை அளித்து, தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு காரியத்தைச் செய்ய அழைப்பதே அவரது செயல்பாடு.

நான் தேவனுக்காக சேவை செய்கிறேனா? தேவனோடிருந்து சேவை செய்கிறேனா? என்று ஆராய்வது மிக முக்கியம். தேவன் என்னோடு இருக்கிறார் அல்லது இருக்கவேண்டும் என்பது அநேகரது வாஞ்சை. ஆனால் நாம் தேவனது பக்கத்தில் இருக்கிறோமா? தேவன் எதிர்பார்க்கும் வாழ்க்கை வாழ்கிறேனா? என்பதை ஆராய்ந்திட வேண்டும்.

தேவன் மனித அரசாங்கத்தை தனது சித்தத்தை நிறைவேற்ற உபயோகிப்பார்.

அன்று இஸ்ரவேலுக்கு அரசன் இல்லை. ஆனாலும் தேவன் செயல்பட்டார். எனவே அரசன் இருந்தால் இஸ்ரவேல் மக்கள் தேவனுக்குக் கீழ்ப்படிவார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. அரசாங்கமே முக்கியம். ஆனால் அரசர், ஜனாதிபதி, பாராளுமன்றம் போன்ற எவற்றின் அதிகாரமும் தேவனைக் கட்டுப்படுத்த முடியாது.

எப்படிப்பட்ட அரசியல் சூழ்நிலையாயினும எந்த அரசனுடைய ராஜ்யமாயினும், பாராளுமன்றத்தின் மத்தியிலும் தேவனது ராஜரீகமே மேலானது என்பதை நியாயாதிபதிகள் புத்தகத்தினூடாக நாம் கற்றுக்கொள்ளும் இன்னொரு சத்தியமாக உள்ளது. இன்றும் மதமாற்ற தடைச்சட்டம் வந்தாலும் தேவனே ராஜரீகம் செய்கிறவர், தேவனே ராஜரீகம் செய்வார். தேவனே ராஜரீகம் செய்தார். நீங்கள் இப்போது நிலவும் நாட்டின் நிரந்தரமற்ற நிலையை கண்டு கலக்கம் கொள்கிறீர்களா?

தேவ ஜனம் ஆவிக்குரிய நிலையிலிருந்து தவறும்போது தேசம் வீழ்ச்சியடையும்.

சபை ஒளியையும் உப்பாக இருக்கும் தன்மையையும் இழக்கும்போது சமுதாயத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தாது. உலகத்திற்கும் சபைக்கும் வித்தியாசமற்று சமுகம் வீழ்ச்சியடையும். நீதி நியாயம் அற்று, பாலியல் சுயநலம், தெய்வ நம்பிக்கையற்ற மக்கள் கூட்டம் பெருகும். இஸ்ரவேல் மக்கள் அந்நிய மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி தேவன் எதிர்பார்த்த உயர் தர வேதாகம கோட்பாடுகளை கைவிட்டனர்.

தேவன் எல்லா காரியங்களையும் ஒரே நேரத்தில் கூறமாட்டார்.

தெபோராள், கிதியோன், யெப்தா சிம்சோன் என்பவர்களது வாழ்க்கையில் நல்ல காரியங்களை கூறினாலும், சம்கார், தோலா, யாவீர் என்பவர் களது காரியங்கள் கூறப்படவில்லை. அவர்கள் தேவதிட்டத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் எல்லாம் வெளிப்படுத்தப்படவில்லை. சில நேரங்களில் நாம் செய்யும் பணிகளை மற்றவர்கள் அடையாளம் காண தவறலாம். தலைவர்கள்கூட சேவையை பாராட்டாமல் இருக்கலாம். நாம் யாருக்கு பணி செய்கிறோமோ, அம்மக்களும்கூட பாராட்டாமலும் கவனியாமலும் இருக்கலாம். நமது நோக்கம் தேவன் நமது பணியை பார்க்க வேண்டுமேயல்லாமல், மனிதர்கள் அல்ல.

இன்னுமொரு காரியம், சில காரியங்களைச் செய்யும் நபரை பார்த்து அவர் உயர்வானவர் என கூறுவதுண்டு. சிலர் செய்வது யாருக்கும் பொருட்டாக தெரிவதில்லை. அவர்கள் ஆவிக்குரியவர்கள் அல்லவென்றும் அவர்கள் குன்றியவர் என்றும் மதிப்பிட்டு பாகுபாடுகளோடு அவர்களை நடத்தக்கூடாது. தேவனுக்கு பேரப்பிள்ளைகள் இல்லை. எல்லாரும் அவரது பிள்ளைகளே.

தேவனுடைய சரித்திரத்திற்கு முடிவில்லை.

நியாயாதிபதிகள் புத்தகமானது யோசுவா புத்தகத்தின் தொடர்ச்சியாகும். நியாயா.1:1 யோசுவா மரித்த பின்பு… ஆங்கிலத்தில்… it came to pass… என்று எழுதப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் யோசுவா, 2சாமுவேல், 2இராஜாக்கள், எசேக்கியேல் ஆகிய புத்தகங்களிலும் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால் தேவனது தொடரும் சரித்திரமாக இப்புத்தகங்கள் காணப்படுகிறது. இதில் அரசர்கள் இல்லை. தேவனே அரசர்.

எனவே, இதில் நமக்கு உற்சாகம் நிறைந்த செய்தி யென்னவென்றால், இவ்வுலக போராட்டம், அழுத்தம், வீழ்ச்சி என்பவை முடிவல்ல. நமக்கு அலங்காரமான நித்தியமான வாழ்க்கை உண்டு. அதுவே நிரந்தரமானது, மகிமையானது. எனவே இன்று நாம் கணக்கு ஒப்புவித்து, அவருக்குக் கீழ்ப்படிந்தும், அச்சரித்திரத்தில் தேவன் நமக்கு வழங்கியுள்ள இடத்தில், பங்கில், பொறுப்பில், அழைப்பில், பதவியில் அவரது சித்தத்தையும் திட்டத்தையும் செயலாற்றுவதே நமது வாஞ்சையாகவும் நோக்கமாகவும் கொண்டு வாழவேண்டும்.

இஸ்ரவேலின் சவாலான காலகட்டத்தின் புத்தகமான நியாயாதிபதிகள் புத்தகத்தில் தேவ கிருபையின் சத்தியமும், வாக்குமாறா தேவனின் செயலும், கீழ்ப்படிதலற்ற தேவமக்களின் முரட்டாட்டமும், மெய்சேவகரின் அழைப்பு செயற்பாடுகள் ஆகியவை நமக்குக் கற்றுத்தருவது என்னவென்றால், தேவனின் சரித்திரத்திற்கு முடிவில்லை.

ஆம், தேவனின் சரித்திரத்திற்கு முடிவில்லை. அச்சரித்திரத்தில் நமது பங்கு என்னவென்பதை நாம் அறிந்து, “தேவ நோக்கத்திற்கு ஏங்கி நிற்கும் இருதயமாகவும் அந்த நோக்கத்திற்கு கீழ்ப்படியும் பாத்திரமாகவும் செயற்படுவதே நமது இலக்காகக் கொள்ளவேண்டும்.” அப்படி வாழ இன்றே நாம் அடிபணிவோமாக.