பேராசிரியர் S.C.எடிசன்
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசன நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்.
ஜீவ அப்பம் நானே (யோவா.6:48). பிதாவானவர் மோசேக்கு இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று வெளிப்படுத்தினார். 10 கற்பனைகளைக் கொடுக்கும்பொழுது, உன்னை விடுவித்த தேவன் நானே! என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்! என்று திட்டவட்டமாக சொல்லி “நானே” என்பது தேவனை மட்டுமே குறிக்கும் என்பதை அவர் தெளிவாக சொன்னார். அதனால், யூதர்கள் இன்றைக்கும் யேகோவா ஒருவர்தான் தேவன் என்றும் இயேசு தேவன் அல்ல என்றும் கருதுகின்றனர். மேசியாவை பிதா அனுப்புவார் என்று இன்றும் மேசியாவுக்காக காத்திருக்கிறார்கள்.
இயேசுகிறிஸ்து பிதாவை வெளிப்படுத்துவதற்காக பூமிக்கு வந்தார், பிதா எப்படிபட்டவர், அவர் தன்மை என்னவென்பதை உலக மக்களுக்கு காட்டுவதற்காக இயேசுகிறிஸ்து வெளிப்பட்டார். அவர் வெளிப்பட்டபொழுது அவரும் பிதாவும் ஒரே தன்மையுடையவர்கள்; யாருடைய உதவியுமின்றி தானாகவே தோன்றினவர்கள் (Self Existing) என்பதையும் பிதாவும் குமாரனும் ஒன்றாயிருக்கிறவர்கள்; பரிசுத்த ஆவியோடே திரியேக தேவனாய் இருக்கிறவர்கள் என்பதையும் வெளிப்படுத்தினார். ஆகவே அந்த இயேசு கிறிஸ்து அவர் தன்னை பிதாவோடு ஒப்பிட்டு நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்று சொன்னார். அந்த விதத்திலே “நானே ஜீவ அப்பம்” என்றும் இயேசு சொன்னார். இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதாவராய் இருக்கிறார் என்று எபிரெயர் 13:8இல் நாம் வாசிக்கிறோம். அதுதான் இருக்கிறவராகவே இருக்கிறேன் என்பதின் அர்த்தமாகும்.
பிதாவானவர் இஸ்ரவேலருக்கு வனாந்தரத்திலே மன்னாவை பொழியப்பண்ணினார். இயேசுவோ 5 அப்பம் 2 மீன்களைக் கொண்டு ஐயாயிரம் பேருக்கு அப்பமும் மீனும் கொடுத்தார். ஆனாலும், இந்த யூதர்கள் எங்கள் பிதாக்கள் வானத்திலிருந்து வந்த மன்னாவை புசித்தார்கள். நீர் எங்களுக்கு என்ன அடையாளத்தைக் காட்டுகிறீர் என்று இயேசுவிடம் கேட்டார்கள். அதற்கு இயேசு என் பிதா வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்கு கொடுக்கவில்லை. அந்த மன்னாவை புசித்தவர்கள் மரித்துப்போனார்கள். நான் கொடுக்கிற அப்பத்தை புசிக்கிறவனோ, அவனுக்குள் நித்திய ஜீவன் உண்டாயிருக்கும். அவன் முடிவில்லாத ஒரு வாழ்வைப் பெறுவான் என்று இயேசு சொன்னார். அவர்களுக்கு எதுவும் விளங்கவே இல்லை. நானே ஜீவ அப்பம்; என் மாம்சத்தை புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று அவர் சொன்னார். முடிவில்லாத வாழ்வு அவனுக்கு உண்டு என்றார். ஆகவே இதுவே என் பிதா உலகத்திற்கு தந்தருளின மெய்யான அப்பம். தாமே “மெய்யான அப்பம்” என்று இயேசு ஜனங்களுக்கு சொன்னார். இந்த இயேசு வனாந்தரத்தில் அவர்கள் புசித்த மன்னாவைவிட, மேலானவர்! ஏனென்றால், அந்த மன்னாவை புசித்தவர்கள் மரித்தார்கள். இயேசுவைப் புசிக்கிறவனுக்கோ நித்திய ஜீவன் உண்டு. இது கடினமான உபதேசம்தான்! இறுதி இராப்போஜனத்தில் இயேசு: அப்பத்தை பிட்டுக் கொடுத்து திராட்ச ரசத்தையும் கொடுத்து புது உடன்படிக்கையை ஏற்படுத்தி இந்த அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் என் மாம்சமாகவும் என் இரத்தமாகவும் புசிக்கிறவனுக்கு நித்திய ஜீவனும் முடிவில்லாத வாழ்வும் பரலோகத்தில் உண்டு என்று சொன்னார்.
சகோதரனே, இந்த இயேசு அவர் உலகத்திற்கு மெய்யான மன்னாவாக வந்தார். நமக்கும் இயேசுவானவர் ஒரு மன்னாவைத் தருகிறார். மத்தேயு 4ஆம் அதிகாரத்தில் பிசாசு அவரை சோதித்தபொழுது, மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல; தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று அவர் சொன்னார், நமக்கும் தேவன் தமது வார்த்தைகளைப் புசிக்கும்படியாகக் கொடுத்திருக்கிறார். இந்த வசனத்தை வாசித்து தியானித்து, உட்கொண்டு, இருதயத்தில் நிரப்பி, பாவத்திற்கு விலகினால், நமக்கும் நித்திய ஜீவன் உண்டு. அதாவது, முடிவில்லாத வாழ்வு நமக்கு உண்டு.
வேத வசனத்தை நீங்கள் இன்றைக்கு புசித்தீர்களா? இதை தியானித்தீர்களா? இதன்மூலம் தேவனோடும் தேவன் உங்களோடும் பேசினதைக் கேட் டீர்களா? அவ்வாறு கேட்டு, அவருக்கு என்ன பதில் கொடுத்தீர்கள். தேவனே பாவியாகிய என் மேல் கிருபையாயிரும் என்று உங்களைத் தாழ்த்தி தேவனுடைய கிருபையைப் பெற்று இருக்கிறீர் களா? அன்றைக்கு வனாந்தரத்தில் பெய்த அந்த மன்னாவை புசித்தவர்களுக்கு காண்டா மிருகத்துக்கு ஒத்த பெலன் உண்டு; அவர்களுக்கு வியாதி இல்லை. ஆனால், இந்த வசனத்தைப் புசிக்கிற எனக்கோ சாத்தானின்மேல் அதிகாரம் உண்டு. சாத்தானை ஜெயிக்கிற பெலன் எனக்கு உண்டு. அதனால்தான் நானே ஜீவ அப்பம் என்று இயேசு சொன்னார். நான் இயேசுவை ஏற்றுக் கொண்டால், அவர் எனக்குள் வருகிறார், எனக்குள் வாசம் பண்ணுகிறார். எனக்குள் வாசம் பண்ணும்பொழுது சாத்தான் என் இருதயத்திற்குள் வாசம் பண்ண முடியாது. அவர் எனக்குள் இருப்பதால் சாத்தான் கொண்டு வருகிற சோதனைகளை நான் ஜெயிக்க முடியும். அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு நான் நடந்தால் நான் இடறல் அடையவேமாட்டேன். என் கால் தள்ளாடாது, அப்படிப்பட்ட இயேசுவாக அவர் இருப்பதால்தான் அவர் சொன்னார்: “ஜீவ அப்பம் நானே” என்று. அந்த “நானே” என்பது தன்னை தேவனாக அறிவிக்கிற ஒன்றாகும். இதுதான் யூதர்களை மிகவும் கோபப்படுத்தினது, நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் (யோவான் 10:30) என்றபடியால் இவர்கள் இயேசுவைக் கொலைச் செய்யத் தீர்மானித்தார்கள்; அவர்மேல் அவர்களுக்கு அவ்வளவுக் கோபம். இந்த இயேசு நமக்கு வசனத்தை மட்டும் தருவதில்லை. வாழ்க்கையின் வழியை மட்டும் காட்டுவதில்லை, அவர் நமக்குள்ளாக இருக்கிறார். ஜீவ அப்பத்தின் மூன்று தன்மைகளைக் குறித்து பார்ப்போம்.
1. ஜீவனுள்ள அப்பம் (Living Bread):
அந்த அப்பத்திற்கு தனக்குள்ளேயே உயிர் உண்டு. அது தானாகவே ஜீவிக்கிற ஒரு அப்பம். ஏனெனில், பிதாவானவர் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார் என்று யோவான் 5:26இல் வாசிக்கிறோம். ஜீவ அப்பம் என்று சொன்ன இயேசு தம்மில்தாமே ஜீவன் உள்ளவராயிருக்கிறார். அந்த ஜீவன் அவரால் உண்டானது என்பதால், அந்த ஜீவனை ஒருவரும் எடுத்துக்கொள்ள முடியாது. அவரை சிலுவையில் அறைந்தாலும் அவராக தன் ஜீவனைக் கொடுக்காதவரை, அவருடைய ஜீவன் தானாக போகவே போகாது. ஆகவேதான் அவர் சிலுவையிலே, பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று சொல்லி தன் ஜீவனைப் பிதாவினிடத்தில் ஒப்புக் கொடுக்கிறார். ஆகவே, இந்த அப்பமானது ஜீவனுள்ள அப்பம் (Living Bread). இந்த அப்பத்தை நான் புசித்தால் அவர் எனக்குள் வாசம் பண்ணுவார்! He lives in me! எனக்குள் அவர் ஜீவிக்கிறார். இதுதான் ஜீவனுள்ள அப்பத்தின் ஒரு தன்மை, யாரெல்லாம் ஜீவ அப்பத்தைப் புசிக்கிறார்களோ அவர்களுக்குள்ளே இந்த ஜீவன் உண்டாகிறது. அன்றைக்கு மன்னா அதை இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கவில்லை. ஆனால், இயேசுவே மெய்யான அப்பமாயிருப்பதினால் அவரைப் புசிக்கிறவர்களுக்கு அந்த ஜீவனை அவர் கொடுக்கிறார். அவருக்குள்ளும் அந்த நித்திய ஜீவன் உண்டாகிவிடுகிறது. அதனால்தான் அவரை நாம் ஜீவனுள்ள அப்பம் Living Bread என்று சொல்லுகிறோம். The bread of Life.
2. ஜீவன் ஊட்டும் அப்பம் (Life giving Bread):
அந்த அப்பத்தை சாப்பிடும்போது நமக்குள் நிச்சயமாகவே உயிர்ப்பித்தல் உண்டாகிறது. அக்கிர மங்களினாலும் பாவங்களினாலும் மரித்த நம்மை உயிர்ப்பித்தார் என்று எபேசியர் 2:2 வாசிக்கிறோம். காரணம், அவர் ஜீவன் ஊட்டும் அப்பம். எப்படி உயிர்ப்பித்தார்? இயேசு தனது ஜீவனை சிலுவையிலே என் பாவத்திற்கு கிரயமாக செலுத்தி, தமது இரத்தத்தைக் கிரயமாக செலுத்தி என்னை பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு என்னை தேவனுக்குள்ளாக உயிரோடிருக்கிறவனாக மாற்றியிருக்கிறார். ஆகவே, அவர் ஜீவன் ஊட்டும் அப்பம்! பாவத்திலிருந்த என்னை அவர் இரட்சித்து தம்முடைய இரத்தத்தாலே பாவங்களை கழுவி என்னை நீதிமானாக்கி அவருடைய ஊழியத்தைச் செய்ய அழைத்திருக்கிறார். சகோதரனே, செத்துப்போன ஆத்துமாவை அவர் உயிர்ப்பிக்க முடியும். உன்னுடைய ஆத்துமா எந்த நிலைமையில் இருந்தாலும் சரி, அதை உயிர்ப்பித்து, பெலப்படுத்தி தேவனுக்கென்று உழைப்பதற்கு அழைத்துக்கொள்ள அவர் ஆவலாயிருக்கிறார்.
அன்பானவர்களே, இன்றைக்கு நீங்கள் அந்த ஜீவன் ஊட்டும் அப்பத்தை புசிக்கிறீர்களா? அந்த அப்பம் பாவியாகிய ஒருவனை நீதிமானாக மாற்றுகிறது. ஆகவே அது தானாக தனக்குள்ளே ஜீவனுள்ள அப்பம், அது பாவிக்குள்ளாக பரிசுத்த வாழ்க்கையையும் உயிர்ப்பிக்கிற ஜீவனையும் ஊட்டும் அப்பமாகவும் அது இருக்கிறது. நாம் பாவம் செய்யும்போது ஆத்துமா சாகிறது. ஆனால், அவர் மன்னிக்கும்பொழுது மறுபடியும் உயிர்த்து எழுகிறது, சகோதரனே, உங்களுடைய ஆத்துமா எந்த நிலையில் இருக்கிறது? அது மயக்கத்தில் இருக்கிறதா? அது மரித்துப் போனதா? கவலையேயில்லை, இயேசுவண்டை வாரும், தகப்பனே, நான் பாவத்தில் சாகிறேன். என்னை மீட்டுக்கொள்ளும் என்று உண்மையாய் இயேசுவைக் கூப்பிட்டால், இப்பொழுதே நீர் கூப்பிட்ட அந்த நேரத்திலேயே உமக்குள் ஒரு புதுஜீவன் உண்டாயிருக்கும். அதைத்தான் பவுலும் சொல்லுகிறார்: நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் ஜீவிக்கிறார். இந்த அனுபவத்தைப் பெற வேண்டுமானால் சகோதரனே இன்றைக்கு உம்மை தேவனுக்கு ஒப்புக்கொடும்.
3. ஜீவனைக் கொடுத்த அப்பம் (The Bread of Love):
“நானே ஜீவ அப்பம்” என்பதின் அர்த்தம் என்னவென்றால், என் ஜீவனைக் கொடுக்க வந்த மெய்யான அப்பம் என்று இயேசு தன்னைக் குறித்து சொன்னார், என் ஜீவனை ஒருவனும் என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள முடியாது. நானே அதை கொடுக்கிறேன், அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. மரணத்தின்மேல் எனக்கு அதிகாரம் உண்டு என்பதை அவர் இங்கே தெளிவாகச் சொல்கிறார். இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பது உலகத்திலிருக்கிற எல்லாருக்கும் தெரியும். கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்திலிருக்கிற சகலருக்கும் இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பது தெரியும். ஆம், இயேசு பாவிகளுக்காக மரித்தார் என்பது தெரியும். ஆனால், பாவ மன்னிப்பை எப்படிக் கொடுக்கிறார் என்பது அவர்களுக்கு தெரியாது. அவர் தன் ஜீவனைக் கொடுத்து எப்படி ஒரு பாவியை நீதிமானாக்குகிறார் என்பது அவர்களுக்கு தெரியாது. ஆனால் இயேசுவை அறிந்த உங்களுக்கும் எனக்கும் தெரியும். 2கொரிந்தியர் 5:21 இவ்வாறு சொல்லுகிறது: பாவமே அறியாத அவர் நமக்காக பாவம் ஆக்கப்பட்டார் என்று. He was made Sin The Sinless was made Sin.
சகோதரனே, சிலுவையிலே அவர் என்னுடைய பாவத்தை அவர்மேல் ஏற்றுக்கொண்டு, அவருடைய நீதியை எனக்கு தந்திருக்கிறார். அவருடைய நீதியை எனக்கு தந்ததினால் நான் பாவமே செய்யாத ஒரு நீதிமானாக மாறுகிறேன். ஏனென்றால் என் வாழ்க்கையிலிருந்த எல்லாப் பாவங்களையும் கசப்புகளையும் தவறுகளையும் அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டு அவற்றை அவர் செய்ததாக ஏற்றுக்கொண்டு என்னைப் பாவமற்றவனாக மாற்றிவிடுகிறார். ஒரு பாவி இப்படித்தான் நீதிமானாக மாறுகிறான். சகோதரனே, உங்களுக்கும் இதே காரியத்தைச் செய்யத்தான் அவர் சிலுவையில் தன்னுடைய ஜீவனை விட்டார்.
இயேசு ஜீவனைக் கொடுக்க வந்த அப்பம். ஒருவன் தன் சிநேகிதருக்காக ஜீவனை கொடுப்பதிலும் அதிக அன்பு கிடையாது என்றார். அவ்வாறு அவர் தனது ஜீவனை நமக்காகக் கொடுப்பதற்கு எந்த ஒரு முகாந்தரமும் இல்லை. ஆனாலும், நம்மை நேசிப்பதினால் நம்பேரில் அன்பு வைப்பதினால் நமக்காக மரித்தார். இதை உணராமல் நிர்விசாரமாய் இருக்கிறோமா? அன்பினால் அவர் தன் ஜீவனை எனக்காக கொடுத்தார். அன்பினால் அவர் என் பாவத்தை தன்மேல் ஏற்றுக்கொண்டு தன்னுடைய நீதியை எனக்குக் கொடுத்தார். பிதா, குமாரனை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்து, கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்றார்.
சகோதரனே, அந்த இயேசுவை ஏற்றுக்கொள்வீரா? அவர் உமக்காக மரித்த ஜீவனுள்ள அப்பம். தன் ஜீவனை அவர் உமக்குள் தரக்கூடிய ஜீவன் ஊட்டும் அப்பம். உம்மை மீட்க ஜீவனைக் கொடுத்த அப்பம். சகோதரனே, அவர் நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்ததினால், நாமும் மற்றவர்களுக்காக நம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கு கடனாளிகளாய் இருக்கிறோம். இதை நீங்கள் உணருகிறீர்களா? ஜீவ அப்பமாகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரது வார்த்தைகளைப் புசித்து, தியானித்து, ஜீரணித்து வல்லமைப் பெற்றுக்கொள்வோம். அவருக்காக பிழைத்திருப்போம்.
ஜெபம்: அன்பின் தகப்பனே, தேவனே நீர் ஜீவ அப்பம் என்பதை நாங்கள் தியானித்தோம். நீர் ஜீவனுள்ள அப்பமாகவும், ஜீவன் ஊட்டுகிற அப்பமாகவும், ஜீவனைக் கொடுத்த அப்பமாகவும் இருக்கிறீர். உம்மை நாங்கள் உட்கொண்டு நாங்களும் மற்றவர்களுக்கு ஜீவனுள்ள அப்பமாகவும் ஜீவன் ஊட்டும் அப்பமாகவும் ஜீவனை கொடுக்கிற அப்பமாகவும் வாழ எங்களைப் பெலப்படுத்தியருளும். கரம் பிடித்து அழைத்துச் செல்லும். இயேசு நாமத்தில் பிதாவே, ஆமென்!
சிந்தியுங்கள்
ஒரு தேவனுடைய பிள்ளை செய்கின்ற தீமை ஒரு பாவி செய்கின்ற தீமையைவிட அதிக கெடுதியை விளைவிக்கிறது.