பழைய ஏற்பாட்டு வேதபாடம்
Dr.உட்ரோ குரோல்
(நவம்பர்-டிசம்பர் 2021)
தானியேல்
3 ஆம் அதிகாரம்
ஒரு பேரரசனுடைய கட்டளைக்கும் சர்வ வல்ல தேவனுடைய கட்டளைக்கும் கீழ்ப்படிவதற்கு இடையே நடக்கும் போராட்டத்தை தானியேல் மூன்றாம் அதிகாரம் நமக்கு விளக்குகிறது. தங்களை சிறைபிடித்துச் சென்ற பாபிலோன் அரசருடைய ஆணைக்கு அடிபணிய மறுத்து, துணிச்சலுடன் மரணத்தை எதிர்நோக்கிய மூன்று இளைஞர்களைப்பற்றி இங்கு நாம் வாசிக்கிறோம். இவர்கள் யாரெனில் அனனியா, மீஷாவேல், அசரியா என்ற தானியேலின் நண்பர்கள். இந்த பெயர்கள் அவர்களுடைய பெற்றோர்களிட்ட யூத பெயர்கள். அவை பரலோக தேவனின் பெயர்களுடன் தொடர்புடையதாயிருந்ததால் அவைகளை சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்று பாபிலோனிய சிறையிருப்பில் மாற்றிவிட்டனர். ஆனாலும், தங்களது மிகப்பெரிய போராட்டத்தில் இவ் வாலிபர்கள் தேவனை நம்பியிருந்தனர்.
விசுவாசம் என்பது தேவன் நமக்கு அளிக்கும் ஈவு! அதனை நாம் பயிற்சிசெய்யும்பொழுது நாம் இன்னும் அதில் வளரமுடியும். ஜான் ஹஸ் என்ற பொஹிமியன் மதசீர்திருத்தவாதி தனது விசுவாசத்தில் உறுதியாய் நின்றதால் 1415ஆம் ஆண்டு ஒரு கம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டார். தான் இறப்பதற்கு முந்தின இரவு மரணத்திற்கு பயந்தவன் இன்னும் வாழ்வதற்குக் கற்றுக்கொள்ளவில்லையென்று தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார்.
தானியேல் மூன்றாம் அதிகாரத்தில் மரணத்துக்கு அஞ்சாத மூன்று யூத இளைஞர்களை நாம் வாசிக்கிறோம். “விழுந்து வணங்கு அல்லது எரிந்து விடு” என்ற ஆணை வந்த பின்னரும் அவர்கள் அக்கினிக்கு இரையாவதற்கு அஞ்சவில்லை.
இந்நிகழ்ச்சி நேபுகாத்நேச்சாரின் 18ஆம் ஆண்டில் நடந்தது என்று எபிரெய பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் (செப்துவஜென்ட்) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த யூதமக்கள் கி.மு 604 இல் பாபிலோனுக்குச் சிறைபிடித்துச் செல்லப்பட்ட னர். அப்பொழுது அவர்களுக்கு பதினாறு வயதிருக்கும். ஆனால் தற்பொழுது கி.மு 587இல் 17 ஆண்டுகளுக்குப் பின்பு அவர்கள் 33 வயதுடைய இளைஞர்கள்; இவர்கள் இன்னும் சிறுவர்கள் அல்லர்.
இவ்வதிகாரத்தின் முதல் ஏழு வசனங்கள் அரசனுடைய கட்டளையை விவரிக்கிறது. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபது முழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். நாட்டின் அனைத்து மக்களும் தான் உண்டாக்கிய சிலையைப் பணிந்துகொள்ள வேண்டும் என்று ஆணையிட்டான்.
இச்சிலையானது மனித உருவத்தில் இருந்திருக்கவேண்டும். ஆனால் அது மனித அளவுக்கு பொருத்தமானதாக இல்லை. அது 60 முழ உயரமும் 6 முழ அகலம் கொண்டதுமாயிருந்தது. எனவே அது மிக உயரமாயும் ஒடுக்கமாயும் ஒரு ஸ்தூபிபோல் இருந்திருக்கவேண்டும். நேபுகாத் நேச்சார் தனது மக்கள் யாவரும் இந்த சிலையை வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான்.
அந்த சிலை ‘தூரா’ சமவெளியில் நிறுத்தப்பட்டது. இந்த சமவெளி எங்கிருக்கிறது என்று துல்லியமாகக் குறிப்பிட இயலவில்லை. ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் பாபிலோனுக்கு தென் கிழக்கே ஆறு மைல் தொலையில் ஒரு பெரிய சமவெளியைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கே செங்கற்களால் ஆன ஒரு பெரிய திறந்தவெளியும் இருந்தது. ஒருவேளை இந்த இடத்தில் அந்த ஸ்தூபி கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்ச்சிக்கு தொல்லியல் நிரூபணமும் நமக்குக் கிடைத்துள்ளது.
வசனம் 2 இல் தேசாதிபதிகள், ஆலோசகர்கள், ஆளுநர்கள் மற்றும் உயர்அதிகாரிகள் ஆகியோரைப் பற்றி வாசிக்கிறோம். இவர்கள் யார் என நீங்கள் யோசிக்கலாம். இவர்கள் அரசரின் தலைமை பிரதிநிதிகள் மற்றும் தலைவர்கள், நிர்வாகிகள் அல்லது இராணுவ தளபதிகள். அங்கே மக்களின் ஆட்சியாளர்களும் இராணுவ ஆட்சியாளர்களும் இருந்தனர். தேசாதிபதிகள் மக்களுடைய ஆளுநர்கள். நீதிசாஸ்திரிகள் மற்றும் ஆலோசகர்கள் அரசனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் அரசனது ஆட்சிக் குழுவினர்.
மேலும் பொக்கிஷக்காரர்கள் என்பவர்கள் நிதிப் பொறுப்பாளர்கள்; நீதிசாஸ்திரிகள் என்பவர்கள் சட்டம் ஒழுங்கு இவற்றைக் கண்காணிப்பவர்கள். விசாரிப்புக்காரர்களோ நீதிபதிகளின் ஆணைகள் சரியாகக் கடைபிடிக்கப்படுகிறதா என கவனிப்பவர்கள். மக்கள் இவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். இறுதியாக இவர்களுக்குக் கீழாகப் பணிபுரியும் நாட்டின் அனைத்து உத்தியோகஸ்தர்களும் அங்கே வரவழைக்கப்பட்டிருந்தனர்.
அங்கே திரளான மக்கள் திரண்டிருந்தனர். வசனம் 4 இல் அரசனுடைய கட்டளை பறைசாற்றுவோன் மூலமாக அறிவிக்கப்படுகிறது. சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள் (வச. 4,5) என்பதாகும். இங்கே ஓர் இசைவிழா அரங்கேறவில்லை; ஆனால் பலவித இசைக்கருவிகள் முழங்கும்பொழுது அனைவரும் தாழவிழுந்து அச்சிலையைப் பணிந்துகொள்ள வேண்டும். தனது மக்களுடைய முழுகவனத்தையும் பக்தியையுமே அரசர் எதிர்பார்த்தார்.
வசனம் 6இல் அரசனுடைய கட்டளைக்குக் இணங்காதவர்களுக்குக் கிடைக்கும் பயங்கரமான விளைவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான். தேவனாகிய கர்த்தர் ஒருவரையே தொழுது வாழும் இந்த எபிரெய வாலிபர்களுக்கு இது ஒத்துவரவில்லை. தங்களுடைய கர்த்தராகிய ஆண்டவரின் கட்டளையை மீற மறுத்தார்கள். வசனம் 8இல் அவர்கள் அச்சிலையை வணங்க மறுத்ததால் கல்தேயரால் குற்றஞ் சுமத்தப்பட்டார்கள்.
பாபிலோனில் இருந்த ஜோதிடர்கள் ஒற்றர்களாயிருந்தார்கள். அவர்கள் யூதவாலிபர்களைக் கண்டித்தனர். அரசரிடம் சென்று “யூத வாலிபர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; நீர் கட்டளையிட்ட காரியத்தை அவர்கள் செய்யவில்லை” என்றனர். எனவே அவர்கள் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட வேண்டுமென்று என்று கூறினார்கள்.
வசனம் 12: பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். இம் மக்கள் அடிமைகளாய் வந்த யூதர்கள் தங்களுக்கு மேல் அதிகாரிகளாய் இருப்பதை விரும்பவில்லை; தாங்கள் வெற்றி பெறாதபொழுது இந்த யூதர்கள் வெற்றிபெற்று உயர் பதவியில் இருப்பது அவர்களுக்கு பொறாமையும் வெறுப்புமாய் இருந்தது.
அரசர் இம்மக்களின் சூழ்ச்சி வலையில் மாட்டிக் கொண்டார். அதுவரைக்கும் அம்மூன்று வாலிபர்களையும் நேசித்த அரசர் இப்பொழுது உக்கிரக் கோபம் கொண்டார். வசனம் 16இல் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்று பதிலுரைத்தனர்.
தானியேலைப்போலவே இவர்களும் அரசருக்குக் கண்ணியமாகப் பதிலுரைத்தனர். “அரசரே, நாங்கள் அதனைச் செய்ய இயலாது. எங்களை விடுவிக்கும் ஒரு தேவனை நாங்கள் வணங்குகிறோம்; அவர் எங்களை விடுவியாமல் போனாலும் பரவாயில்லை” என்றனர். இவர்கள் துணிச்சல் மிக்க தோழர்கள். தங்களுக்கு என்ன நேரிட்டாலும் அதைப்பற்றி கவலைப்படாதவர்கள். அதை பூமியில் அதிகாரமுடைய அரசனிடம் “நாங்கள் ஆண்டவனின் கட்டளையை மீற மாட்டோம்” என்று கூறவும் துணிந்தவர்கள்.
விசார்ட் ஆஃப் ஆஸ் (Wizard of oz) என்ற கதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு கோழையான சிங்கம் துணிச்சலைப்பற்றி பேசியது. அதில் எனக்கு பிடித்தமான வரிகள் “ஒரு அடிமையின் ராஜாவை எது உருவாக்குகிறது? துணிச்சல். கொடி மரத்தின் உச்சியில் கொடியைப் பறக்கவைப்பது எது? துணிச்சல்! மூடுபனியிலும் அந்திவேளையிலும் யானை தாக்குவதற்கு தேவையானது எது? துணிச்சல்! மூன்று எபிரெய வாலிபர்களை பொற்சிலையை வணங்க மறுப்பு தெரிவித்தது எது? துணிச்சல்!
வசனம் 17இல் அந்த நான்கு யூதவாலிபர்களும் தாங்கள் வழிபடும் தேவனுக்குள்ள தங்களுடைய முழுஅர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறார்கள். அக்கினிச்சூளையில் போடப்பட்டாலும் அது ஜீவனுள்ள தேவனுக்குச் செய்யும் ஆராதனையே என்று கருதினர். தேவன் தங்களைத் தப்புவிப்பார் என்று முழுவதுமாக விசுவாசித்தனர். “நீங்கள் எங்களை அக்கினிச் சூளையில் போட்டாலும், எங்கள் தேவன் எங்களை விடுவிப்பார். அவருடைய வல்லமை பெரியது.” வசனம் 18 அவ்வாலிபர்களின் மிகவும் ஆழ்ந்த பக்தியை வெளிப்படுத்துகிறது. அவர்கள் தேவனுடைய சித்தத்துக்குத் தங்களை முழுவதுமாக ஒப்படைத்துவிட்டனர். தேவன் தங்களைக் காப்பாற்றாவிட்டாலும் அதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.
ஜிம் எலியட் என்ற மிஷனரி தனது நாட் குறிப்பில் “தேவனே, நான் உமக்காக எரிந்து பிரகாசிக்க, என்னுடைய வாழ்வில் செயலற்றுக் கிடக்கும் குச்சிகளை நீர் எரிய வையும்; நீண்ட ஆயுளையல்ல, நிறைவான வாழ்வையே வேண்டுகிறேன்” என்று எழுதி வைத்துள்ளார். அந்த நாட்குறிப்பு 1956ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம் தேதியன்று நிறைவேறியது. அவரும் அவருடன் சேர்ந்த நான்கு அருட்பணியாளர்களும் தேவன் மேல் வைத்த விசுவாசத்துக்காக தங்களுடைய உயிரைவிட்டனர். தேவனுடைய சித்தத்துக்கு தங்களை முற்றுமாக அர்ப்பணித்தனர்.
செட் பிட்டர்மன் என்பவர் கொலம்பியாவின் தலைநகரமான பொகோட்டா என்ற இடத்தில் விக்ளிஃப் வேதாகம மொழிபெயர்ப்பாளராக இருந்தார். “நிக்கராகுவா இடத்தின் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டுவருகிறது. ஒருவேளை கொலம்பியாவில் நான் தேவனுக்காக இரத்த சாட்சியாக மரிக்க தேவன் அழைத்திருப்பார் எனில் நான் ஆயத்தமாக இருக்கிறேன்” என்று அவர் 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தனது நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார். 1981ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதியில் செட் பிட்டா மன்னை ஆயுதம் ஏந்திய ஏழு கொரில்லா தீவிரவாதிகள் அவரைப் பிணைக்கைதியாகப் பிடித்துச் சென்றனர். ஏழு நாட்கள் அவரைக் காவலில் வைத்திருந்து பின்னர் சுட்டுக்கொன்றனர்.
இதுவே தேவனுடைய சித்தத்துக்கு அர்ப்பணிப்பதன் பரிபூரண நிலையாகும். தேவனுக்கென்று எதையாகிலும் கொடுக்க நினைக்கும் இளைஞர்களுக்கு நீங்கள் வழிகாட்டியாக இருப்பீர்களெனில் இத்தகைய பரிபூரண அர்ப்பணிப்பை அவர்கள் உங்களில் காணவேண்டும். சிங்கக் கெபியோ சூளை நெருப்போ எதையும் சந்திக்க ஆயத்தமாயிருக்கக்கூடிய ஒரு தலைமுறை நமக்குத் தேவை.
தேவன் தங்களை அக்கினியினின்றும் காத்துக்கொள்ளுவார் என எபிரெய வாலிபர்கள் முழு நிச்சயமாய் நம்பினர். அவர் தங்களை விடுவிக்காமற் போவார் என்றாலும் அவரை நம்பினர். தேவனுடைய சித்தத்துக்குத் தங்களை முழுவதுமாய் ஒப்புவித்துவிட்டனர்.
வசனம் 19இல் அவர்கள் எரிகிற சூளையில் போடப்பட்டனர் என வாசிக்கிறோம். அது சாதாரணமாய்ச் சூடாக்குவதைவிட ஏழு மடங்கு அதிகமாய்ச் சூடாக்கப்பட்டது. அந்த இளைஞர்களின் பாடுகள் சீக்கிரத்தில் முடிந்துவிடவேண்டும் என்ற காரணத்திற்காக சூளையை அதிகமாய்ச் சூடாக்கினார்கள் என்று சில வேதவிளக்க உரைகளில் நான் படித்தேன்.
ஆனால் வசனம் 19இல் அப்பொழுது நேபுகாத் நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு, சாத்ராக், மேஷாக் ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது என்று எழுதப்பட்டுள்ளது. அவர்களை அவர் விரும்பியதாய் அல்ல; அவர்களை வெறுத்ததினாலேயே இவ்வாறு செய்தார். அவர்களை எவ்வளவு சீக்கிரமாய் எரித்து விடமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாய் எரிக்க விரும்பினார். ஆகவேதான் அந்த சூளையை ஏழுமடங்கு சூடாக்கக் கட்டளையிட்டார். உங்களுடைய விசுவாசத்துக்காக நீங்கள் எழுந்து நிற்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள மக்கள்; உங்களை நிச்சயமாகவே பகைப்பார்கள். அவர்கள் உங்களைப் பார்த்து ஆச்சரியப்படவோ பாராட்டவோ மாட்டார்கள். அவர்கள் வெறுக்கவே வெறுப்பார்கள்.
வில்லியம் டின்டேல் என்பவர் தேவனுடைய வார்த்தையை ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்தார். அதனால் அவரை வெறுத்தனர். அவரது கழுத்தை நெரித்துக் கொன்று ஒரு கம்பத்தில் கட்டிவைத்து எரித்தனர்.
ஜான் வைக்ளிப் என்பவர் மற்றொரு வேதாகம மொழிபெயர்ப்பாளர். அவர் இறந்து 41 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கல்லறையைத் தோண்டியெடுத்து அவரது எலும்புகளை எரித்தனர். அந்த அளவு அவர்களது பகைமை அதிகமாயிருந்தது. பாபிலோன் அரசருடைய கோபமும் அதிகமாய் இருந்ததினால் ஏழு மடங்கு சூடாக்கப்பட்ட அக்கினியில் இந்த யூத வாலிபர்கள் போடப்பட்டனர். இந்நிலையில் நான் அவ்வாலிபர்களை நெருப்பில் தூக்கிப்போட்ட இராணுவ பலசாலிகளைவிட சாத்ராக், மேஷாக் மற்றும் ஆபேத்நேகோ என்பவர்களாகவே இருக்க விரும்புகிறேன்.
ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினி ஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக் கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது என வசனம் 22இல் வாசிக்கிறோம். அவர்கள் மூவரும் கட்டப்பட்டு எரியும் உலைக்களத்தில் போடப்பட்டனர். இராணுவ வீரர்கள் சூளையின் மேல்புறத்துக்கு அவர்கள் மூவரையும் தூக்கிச் சென்றனர். அதன் முன்புறம் நெருப்பு மூட்டும் திறப்பு இருந்தது. வாலிபர்களைத் தூக்கிச்சென்ற பலசாலிகள் அக்கினியின் சூட்டினால் கருகிப் போனார்கள்.
இனி தேவன் கிரியை செய்ய ஆரம்பித்தார். நேபுகாத்நேச்சார் எரிந்து கொண்டிருந்த அக்கினியைப் பார்த்தார்; அவர் கண்டதை அவரால் நம்ப முடியவில்லை. அப்பொழுது ராஜாவாகிய நேபு காத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள் என்று வசனம் 24 இல் வாசிக்கிறோம். மூன்று பேரைக் கட்டியவர்களாய் போட்டோம். ஆனால் இப்பொழுது அவர்கள் கட்டவிழ்க்கப்பட்டவர்களாய்க் காணப்பட்டனர்.
அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். அரசர் ஆச்சரியப்பட்டார்; கட்டிப்போடப்பட்டவர்கள் எப்படி நடக்கமுடியும். மேலும் அவர்களது எண்ணிக்கையும் கூடிவிட் டது. அந்த நான்காவது நபர் தேவபுத்திரன்போல் இருக்கிறார்; அவர் தேவனுடைய குமாரன் என்று வியப்புற்றார்.
இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் மனித உருவுக்கு முன்பான வெளிப்பாடு. அக்கினியின் நடுவில் அவர்களுக்குத் தேவையான வேளையில் இயேசு வந்து நின்றார். சுட்டெரிக்கும் அக்கினி போன்ற துன்பங்களின் மத்தியிலும் இயேசு உங்களுடனேகூட இருப்பார்.
அரசரின் அழைப்பைக் கேட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ் செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள் என்று வசனம் 27 இல் நாம் வாசிக்கிறோம். இதைச் சற்று கற்பனை செய்து பாருங்கள் – தூக்கிச் சென்றவர்களை அக்கினி பட்சித்துப்போட்டது; ஆனால் இவர்கள் உடலில் தீக்காயங்கள் எதுவும் இல்லை. இது முதற் காரியம். இரண்டாவது, அவர்கள் தலைமுடி கருகவில்லை. மூன்றாவது, அவர்களுடைய உடைகள் தீப்பற்றி எரியவில்லை; நான்காவதாக, நெருப்பின் புகை நாற்றம் அவர்களிடம் வீசவும் இல்லை.
நேபுகாத்நேச்சார் என் கண் காண்பதை என்னால் நம்பமுடியவில்லை; அவர்களிடம் அக்கினி மணம் வீசாததையும் நம்பமுடியவில்லை. ஆம் அக்கினிக்குள் அவர்கள் நடந்தாலும் அது அவர்களைத் தீண்டவில்லை. அக்கினிக்குள் சென்றதற்கான எந்தவொரு அறிகுறியும் அவர்களிடம் காணப்படவில்லை.
இந்நிகழ்வின் இறுதியில் வசனம் 28இல் நேபுகாத்நேச்சார் கூறியதாவது: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம். இவ்வண்ணமாய் மீட்கின்ற ஆற்றல்படைத்த இறைவன் வேறெவரும் இல்லை. பிறகு அரசன் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியோர்க்கு பாபிலோன் மகாணத்தில் பதவி உயர்வு அளித்துச் சிறப்பித்தார்.
இவ்வரசர் கூறியது சரியே. ஆனால் அது முழுமையடையவில்லை. தேவனைப் பாராட்டுவது விசுவாசத்தை வெளிப்படுத்தாது; மேலும் அது நித்திய இரட்சிப்பையும் தராது. தேவன் நல்லவர். அவர் உன்னதமான கடவுள்; அவர் வல்லவர் என்று நீங்கள் புகழலாம். ஆனால் அவர் உங்களுக்கு இரட்சிப்பை அருளியிருக்கிறார் என்று நீங்கள் நம்பும் வரை அவர் வல்லமையுள்ள தேவன். ஆனால் அவர் உங்களுடைய தேவன் அல்ல.
நேபுகாத்நேச்சார் செய்தது சரியானதே. இன்னும் அநேகர் தேவனை நம்புகிறார்கள். ஆனால், அது போதாது. தேவன் அவர்களை நேசிக்கிறார்; தமது குமாரனை அவர்களுக்காக சிலுவையில் பலியாகக் கொடுத்தார் என்று விசுவாசிக்கவேண்டும்.
ஒரு சிறுமி விடுமுறை வேதாகமப் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினாள். வழியில் அவளது தாயாரிடம் அங்குள்ள நூலகத்தில் நிறுத்தக் கேட்டாள். அவளுடைய தாயார் காரணம் கேட்க, “ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள் மாத்திரமே பரலோகத்தில் பிரவேசிக்கமுடியும் என்று ஆசிரியர் கூறினார்கள். நான் இந்த நூலகத்தில் சென்று அது இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்” என்றாள்.
இயேசுவே உலக இரட்சகர் என்று நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், அவர் உங்கள் இரட்சகராக இருக்கிறாரா?
தேவன் உயர்ந்தவர், சர்வவல்லவர்; அதிகாரமுடையவர். எல்லாவற்றிலும் நான் அவருக்குக் கீழ்ப்படிவேன் என்று நீங்கள் சொல்லலாம். ஆனாலும், அது முழுமையடையவில்லை என்றே நான் கூறுவேன். தேவனே சகலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர். தானியேலின் வாழ்வையும் இந்த மூன்று எபிரெய இளைஞர்களின் வாழ்வையும் தனது பொறுப்பில் வைத்திருந்தார். அவர் உங்களுடைய வாழ்வையும் என்னுடைய வாழ்வையும் பொறுப்பெடுத்துக்கொள்வார். சிங்கக் கெபியோ சூளை நெருப்போ தேவனே நம்மைக் காண்பவர்; அவரே நம்மைக் காப்பவர். நமக்கு ஜெயம் தருபவர் அவரே.
மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்!

தமது வல்லமையான சுவிசேஷ ஊழியத்தாலும், பக்தியுள்ள வாழ்க்கையினாலும் சீன நாட்டை அசைத்து பல சீனர்களை ஆத்தும நேசர் இயேசுவுக்கு ஆதாயம் செய்தவர் ஹட்சன் டெய்லர். இவருக்கு அநேக நல்ல சீன நண்பர்கள் இருந்தபோதும் சுவிசேஷத்தை எதிர்த்த சில பகைவரும் இருந்தனர். இவர்களில் செல்வாக்குள்ள கல்விகற்ற சீனர்கள் ஹட்சன் டெய்லருக்கு விரோதமாக கிரியை செய்ய பல திட்டங்கள் தீட்டினர். இவர்களில் சில நூலாசிரியர்களாயிருந்ததால் ஹட்சன் டெய்லரின் வாழ்க்கை சரிதையை திருத்தி எழுதி சீனர்கள் மத்தியில் அவரை கெட்ட மனிதனாக உருவாக்க தீர்மானித்தனர். ஹட்சன் டெய்லரின் வாழ்க்கையைப்பற்றிய எல்லா குறிப்புகள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள், உபதேசங்கள், குறைகள் எல்லாவற்றையும் சேகரித்துக் கொண்டு பின்பு அதனை மாற்றி எழுதலாமென்று எண்ணி செயல்பட்டனர். ஆனால், இவைகளை சேகரித்த சீனப்பேராசிரியர் ஹட்சன் டெய்லரின் வாழ்க்கை குறிப்புகளைப் படித்தபோது அவர் எவ்வளவு கறை திரையற்ற தெய்வீக இயேசு பக்தன் என்பதையும், அவர் வழிபட்ட ஆத்தும நேசர் இயேசுவின் மகிமையையும் உணர்ந்து சொல்லிமுடியாத அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.
ஹட்சன் டெய்லரை இத்தகைய புனிதனாக்கிய சத்தியவேதத்தையும் கருத்துடன் படிக்க ஆரம்பித்தபோது கிறிஸ்து இயேசுவின் கல்வாரி அன்பும், ஆழமான உபதேசங்களும் அவர் உள்ளத்தை வென்றது. பெரிய பக்திமானான ஹட்சன் டெய்லரை உருவாக்கிய தேவன் எவ்வளவு பெரியவரென்றும், சத்தியவேதம் எவ்வளவு ஒப்பற்ற அழியாத நூல் என்றும் அறிந்து இரட்சிப்பின் வழியை நாடி சுவிசேஷ ஒளியின் சந்தோஷத்துக்குள் வந்தார். அவரைத் தொடர்ந்து அவரது நெருங்கிய நண்பரும், உறவினரும் கிறிஸ்துவுக்குள் ஆதாயம் செய்யப்பட்டனர். இவ்விதமாக பக்தன் ஹட்சன் டெய்லரை பகைத்த சீனர்கள் கிறிஸ்து இயேசுவுக்கு உத்தம சாட்சிகளாயினர்.
ஆ! எவ்வளவு பெரிய பக்தர்கள்! எவ்வளவு பெரிய இரட்சிப்பு! எவ்வளவு பெரிய இரட்சகர்!