ஐசுவரியவான் – லாசரு

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மே-ஜுன் 2012)

ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர் கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான் (லூக்கா 16:19-31). மறுமையை அறிந்த தேவன் இந்த உவமையிலே அதைச் சுட்டிக்காட்டுகிறார். ஐசுவரியவான் பாதாளத்திலிருந்துகொண்டு மேலே பார்க்கிறான். ..தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான் (லூக்.16:23).

பாதாளத்திலே உணர்வுகள் இருக்கிறது, அடையாளம் தெரிகிறது; பாசங்கள் உருவாகிறது. இதையெல்லாம் இந்த உவமையின் மூலம் அறிந்துகொள்கிறோம். ஐசுவரியவான் தண்ணீருக்காக வேண்டுகிறான். அது கிடைக்காமற் போகிற சூழ்நிலையில்தான் .. லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும் (வச.24) என்று ஆபிரகாமைக் கேட்டுக்கொண்டான். அதற்கு எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று ஆபிரகாம் சொல்லுகிறதைப் பார்க்கிறோம். இந்த இடத்திற்கு என் சகோதரர்கள் வராதபடி இந்த லாசருவை அனுப்பவேண்டும் என்று ஐசுவரியவான் கேட்டுக்கொண்டான். அவன் கேட்டுக்கொண்ட ஒவ்வொரு காரியத்திற்கும் எதிர்மறையாகவே பதில் வருகிறது. இந்த ஐசுவரியவானிடத்திலிருந்து ஒரு சில குறிப்புகளை நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

முதலாவது, அவன் காலம் கடந்த ஜெபத்தைச் செய்தான். ஜெபம் பண்ணவேண்டிய காலத்தில் ஜெபம் பண்ணவில்லை. வேண்டுதல் ஏறெடுக்கவேண்டிய காலத்தில் வேண்டுதல் பண்ணவில்லை. சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டு, தன் சகோதரனோடே சந்தோஷமாய் வாழ்ந்துகொண்டிருக்கிற காலத்திலே அவனுக்கு ஜெபம் பண்ண மனதில்லை. ஜெபிக்கவேண்டிய நேரத்தில் அவன் அதைச் செய்யவில்லை. ஆனால் பாதாளத்திலே உட்கார்ந்து வேண்டுதல் செய்கிறான். மரணத்திற்கு பிற்பாடு நாம் செய்யும் ஜெபத்திற்கு பதில் வராது. நாம் பூமியில் இருக்கும்பொழுது நாம் பண்ணுகிற ஜெபம் மிகவும் அவசியமானது.

ஜெபம் என்பது ஆண்டவருக்கும் நமக்கும் இருக்கும் உறவை பலப்படுத்துவதாகும். ஜெபிக்கிறவன் ஆண்டவரை சார்ந்து கொள்கிறான். இந்த ஐசுவரியவான் பூமியில் இருக்கும்போது ஜெபம் பண்ணவில்லை. பாதாளத்திலிருக்கும்போது ஜெபிக்கிறான். இது காலம் கடந்த ஜெபம்.

ஜெபிக்கவேண்டிய காலத்தில் ஜெபிக்காமல் இருந்துவிட்டு பிரச்சனைகள் உன் தலைக்கு மேலே செல்லும்பொழுது, இக்கட்டுகள் உன்னை சூழ்ந்துகொள்ளும்போது, பாவக்கட்டுகள் உன்னை நெருக்கும்போது, ஆண்டவரை விட்டு தூரம் போய் தவிக்கிற வேளையிலே நீ ஜெபம் பண்ணக்கூடிய சூழ்நிலையில் தள்ளப்படலாம். ஆனால் வாய்ப்பும் நேரமும் கிடைக்கும்பொழுது ஜெபம் பண்ணுவாயானால் மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது உன்னை அணுகாது என்று வேதம் சொல்லுகிறது. மரணத்திற்கு பிற்பாடு ஜெபித்துக்கொள்ளலாம் என்பது குருட்டாட்ட நம்பிக்கையாகும். ஐசுவரியவான் காலம் கடந்து ஜெபம் பண்ணினான்.

இரண்டாவது, ஐசுவரியவானுக்கு காலம் கடந்த உணர்வு ஏற்பட்டது. அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான் (லூக்.16:27-29).

மோசே நியாயப்பிரமாணத்தை விளக்குகிறவர், தீர்க்கதரிசிகள் தேவ சித்தத்தை சொல்லுகிறவர்கள். ஆண்டவர் ஒவ்வொரு காலகட்டத்திலும், வசனத்தைப் போதிக்கிறவர்களையும், தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துகிறவர்களையும் அனுப்பிக் கொண்டுதான் இருக்கிறார். இப்படிப்பட்ட வாய்ப்பு ஐசுவரியவானுக்கு கிடைத்திருக்கலாம். ஆனால் அவன் வசனத்தைக் கேட்டு, சித்தத்தை அறிந்தும் தன்னை அர்ப்பணிக்கவில்லை. பாவ உணர்வு அடையவில்லை; நித்தியத்தைத் தேடவில்லை; தேவ ராஜ்ஜியத்தைத் தேடவில்லை; பூமியிலே ஆண்டவரின் ராஜ்ஜியத்தை மகிமைப்படுத்தவில்லை; இதையெல்லாம் உணராமல் காலம் கடத்தினார். தன்னுடைய சகோதரர்கள் பாதாளத்திலே வேதனையுள்ள இடத்திற்கு வராதபடி… என்று சொல்லுகிறார். அன்றைக்கே மோசே, தீர்க்கதரிசிகளின் வார்த்தையை கேட்டிருந்தால் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. இப்போது என் சகோதரர்கள் வராதபடி லாசருவை அனுப்பும் என்கிறான். இது காலம் கடந்த பாவ உணர்வு.

ஆவியானவர் நமக்கு உணர்த்தும்போது உடனே தீர்மானித்து, சரி பண்ணவேண்டும் என்கிற காரியத்தை சரிபண்ண வேண்டும். விட்டுவிட வேண்டிய காரியத்தை விட்டுவிட வேண்டும். காலம் கடந்த பாவ உணர்வு பல சிக்கல்களை உனக்கு உண்டாக்கும். மறுமையில் பாவ உணர்வு அடையலாம் என்று எண்ணி ஏமாந்து விடாதே!

மூன்றாவது, காலம் கடந்த மிஷனரி பாரம். இது ஒரு காலம் கடந்த ஊழியபாரம், ஆத்தும பாரமாகும். பாதாளத்திலிருக்கும் பொழுதுதான் இப்படிப்பட்ட பாரம் வருகிறது. மேலும் தன் ஐந்து சகோதரர்களைக் குறித்து கரிசனை வருகிறது. ஐந்து சகோதரர்களும் பாதாளத்திற்கு வராதபடி வாசருவை அனுப்பும் என்று வேண்டிக்கொள்கிறான்.

ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார் (29 – 31).

மூன்று காரியங்களை நாம் கற்றுக்கொண்டோம். காலம் கடந்த ஜெபம், காலம் கடந்த பாவ உணர்வு, காலம் கடந்த அருட்பணி பாரம். காலம் கடந்தபிறகு இப்படிப்பட்ட பாரம் வருமானால் அது எவ்வளவு நஷ்டத்தை உண்டாக்கும். பூமியில் உயிரோடு இருக்கும்போதே நாம் ஜெபம் செய்வோம்! பாவ உணர்வடைவோம்!! ஊழியம் செய்வோம்!!!

சத்தியவசனம்