சகோ.சற்குணம் சாமுவேல்ராஜ்
(ஜனவரி-பிப்ரவரி 2022)
கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார் (சங்கீதம் 115:12).
கர்த்தர் நல்லவர்! ஒரு புதிய ஆண்டை நமக்கு தந்து, ஒரு புதிய ஆண்டுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தை நம் ஒவ்வொருவருக்கும் தந்திருக்கிறார். ஆண்டவர் நல்லவர் என்பதும், அவர் நேசிக்கிறார் என்பதும், அவர் ஒருபோதும் தம்மை தேடுகிறவர்களை கைவிடுவதில்லை என்பதும், அனுதினமும் நாம் ருசித்துக்கொண்டிருக்கிற சத்தியமாகும். ஒருவேளை இந்த புதிய ஆண்டிலே பலவிதமான மகிழ்ச்சி நமக்கு ஏற்படலாம். பல விதமான எண்ணங்கள் நம்முடைய மனதிலே வந்துபோகலாம். இந்த நாளிலும் நம்மோடுகூட இருக்கும் தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறவராயிருக்கிறார். அதிலும் குறிப்பாக சங்கீதம் 115:12 இவ்விதம் சொல்லுகிறது: கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் நம்மை ஆசீர்வதிப்பார்.
நினைத்திருக்கிறார் என்பதற்கும், ஆசீர்வதிக்கிறார் என்பதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அவர் திடீரென்று நம்மை ஆசீர்வதிப்பதில்லை, ஆண்டவர் எல்லாக் காலங்களையும் அவர் கைகளில் வைத்திருக்கிறார். ஆனால் ஆண்டவர் நமக்கு பரிசாக கொடுத்ததுபோல் இந்த புதிய ஆண்டைக் கொடுத்திருக்கிறார். அதற்கு காரணம் அவர் நம்மை நினைத்திருக்கிறார். நினைத்துத்தான் கொடுக்கிறார், இந்த புதிய ஆண்டில் இவர்களுக்கு நான் பரிசாக காலத்தைக் கொடுக்கிறேன் என்று சொல்லி, ஆண்டவர் கொடுக்கிறார். காலத்தைக் கொடுக்கிற ஆண்டவர் அந்த காலத்தில் நம்மை ஆசீர்வதிக்கவும் செய்கிறார். இந்த நாளிலே ஒரு மூன்று குறிப்பை உங்களோடு சந்தோஷமாய் பகிர்ந்துகொள்ள நான் விரும்புகிறேன்.
1. தேவன் நமக்கு கேளாத ஆசீர்வாதத்தைத் தர வல்லமையுள்ளவர்.
பொதுவாக நாம் ஆசீர்வாதத்தைக் கேட்டு கேட்டு தேவனிடமிருந்து வாங்கவேண்டும் என்று நினைப்போம். அது உண்மைதான். நிச்சயமாக நாம் கேட்க வேண்டும், ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கிறார். ஆனால் வேத புத்தகத்திலே 1இராஜாக்கள் 3வது அதிகாரத்திலே சாலொமோனிடத்திலே ஒரு வார்த்தையை ஆண்டவர் கேட்கிறார். இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். ஒருவேளை இந்தப் புத்தாண்டிலே நீ விரும்புகிறதை என்னிடத்திலே கேள் என்று சொன்னால், நாம் என்ன கேட்போம்? நமது விருப்பத்தின் அடிப்படையிலே பல காரியங்களைக் கேட்போம். ஆண்டவர் நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறவர், ஆண்டவர் நம்மை எல்லா விதத்திலும் நன்றாய் நடத்துகிறவர், நம் தேவைகளையெல்லாம் தருகிறவர், நம் தேவைகள் எதையுமே அவர் மறுத்ததில்லை.
சாலொமோன் என்ன செய்கிறார் என்று தெரியுமா? நான் போக்குவரத்து அறியாத ஒரு சிறுபிள்ளையாய் இருக்கிறேன், ஜனங்களோ பெரிய அளவில் இருக்கிறார்கள், ஆகையினாலே எனக்கு, ஞான இருதயத்தைத் தாரும் என்று அவர் கேட்கிறார். நாமும்கூட இந்த புதிய ஆண்டிலே ஆண்டவரிடம் சரியான ஒன்று நாம் கேட்டு பெற வேண்டும் என்று சொன்னால், அது காலத்தை எண்ணிப்பார்க்கும் இருதயம், காலத்தை பிரயோஜனப்படுத்தும் ஞானம், தீமை செய்யக்கூடாது என்று யோசித்து நன்மையே செய்கிற ஞான இருதயம் ஆகியவையாகும். இதை தேவன் நமக்கு தருவரானால் நமது காரியங்கள் எல்லாமே ஒழுங்கும் கிரமமுமாக இருக்கும், இந்த ஆண்டு முழுவதும் அந்த ஞானம் நம்கூட இருந்தது என்று சொன்னால், நாம் ஒருநாளையும் குறித்து கலங்க வேண்டிய அவசியமில்லை, எந்தவொரு சூழ்நிலையையும் குறித்து நாம் கலங்கவேண்டிய அவசியமில்லை.
சாலொமோன் ஞான இருதயத்தை கேட்டபோது, சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை (1இராஜா.2:10-12). நீ இந்த காரியத்தைக் கேட்டது, ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாய் இருந்தது, நீ இந்த காரியத்தைக் கேட்டு நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியால், நான் உன் வார்த்தையின்படி செய்தேன் என்று சொன்னார்.
தேவன் சாலொமோன் கேட்ட ஞான இருதயத்தைக் கொடுத்துவிட்டு, 13வது வசனத்தில், இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார். ஆசீர்வாதம் எப்படி வருகிறதென்று பாருங்கள்! அவர் நாம் கேட்பதை இன்னதென்று அவர் காதுகொடுத்து கேட்கிறார், நாம் என்ன நோக்கத்திற்காக கேட்கிறோம் என்பதை அவர் யோசித்து பார்க்கிறார், ஆனால் கொடுக்கும்போது எப்படிக் கொடுக்கிறார் என்றால், நீ சரியானதைக் கேட்டாய், ஆகையினாலே உன்னுடைய மற்ற காரியங்களைக் குறித்துக்கூட உன்னை ஆசீர்வதிக்க விரும்புகிறேன் என்று சொல்லி கேட்காத நிறைய ஆசீர்வாதங்களை தேவன் சாலொமோனுக்குக் கொடுக்கிறார்.
ஆனால் சாலொமோனுடைய வாழ்க்கையின் பிற்பகுதியிலே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் உண்டு. ஆசீர்வாதமும் கீழ்ப்படிதலும் இணைந்தால்தான், அந்த ஆசீர்வாதமானது நமது வாழ்நாட்கள் முழுவதும் மிக பிரயோஜனமுள்ளதாக இருக்கும். ஆசீர்வாதத்தைப் பெற்ற சாலொமோன் சில காரியங்களிலே தவறிவிடுகிறார். ஆண்டவர் அவரை உணர்த்துகிறார், நீங்கள் 1இராஜாக்கள் 11 ஆம் அதிகாரம் 9வது வசனத்தை வாசித்து பார்க்கும்போது இரண்டு முறை தரிசனமாகி, நீ அந்நிய தேவர்களைப் பின்பற்ற வேண்டாம் என்று கட்டளையிருந்தும், அவன் கர்த்தரை விட்டு தன் இருதயத்தைத் திருப்பினான். ஆதலால் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளுகிற நீங்களும் நானும், கவனத்தோடு கருத்தில் கொள்ளவேண்டிய ஒன்று என்னவென்று தெரியுமா? ஆசீர்வாதத்தைப் பெறுகிற நாம், கீழ்ப்படிதலை விட்டுவிடக் கூடாது. அதனால்தான் வேதம் முழுவதும் நீங்கள் வாசித்து பார்க்கும்போது ஆசீர்வாதமும் கீழ்ப்படிதலும் இணைந்தேதான் வரும். நீங்களும் நானும் தான் அதைப் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், வேதம் அதைப் பிரித்துப் பார்க்கவில்லை. எந்த மனிதனைக் கர்த்தர் ஆசீர்வதிக்கிறாரோ, அந்த மனிதனிடத்தில் கீழ்ப்படிதலை எதிர்பார்க்கிறார்.
அவர் என்ன சொன்னாலும் அதற்கு கீழ்ப்படிய வேண்டும். அதற்கு வேதத்திலே நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு, நோவா கர்த்தர் சொன்னபடி பேழையைச் செய்கிறார். சொன்னபடி எல்லாவற்றையும் செய்கிறார். ஆபிரகாம் உன் இனத்தைவிட்டு நீ வா, நான் சொல்லுகிற இடத்துக்கு நீ போ என்று சொல்லி ஆதியாகமம் 12ஆம் அதிகாரத்தில் கூப்பிடுகிறார். ஆபிராம் அழகாகக் கீழ்ப்படிகிறார், அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதத்தைப் பாருங்கள், அவை குறையாத ஆசீர்வாதம், அவர்களைவிட்டு போகாத ஆசீர்வாதமாகும். ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொள்ளுகிற நாம் அதைத் தக்க வைத்துக்கொள்வது, ஆண்டவருக்குக் கீழ்ப்படிதலில்தான் உள்ளது.
ஒவ்வொரு முறை வேதத்தை வாசிக்கும்போது, நாம் ஜெபத்தோடு கேட்கலாம், ஆண்டவரே, இன்றைக்கு நான் வாசித்த பகுதியிலே நான் எந்த வசனத்திற்குக் கீழ்ப்படியவில்லை, இன்றைக்கு நான் வாசித்த பகுதியிலே எந்தவிதமான பாவம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அது எனது வாழ்க்கையிலே இருக்கிறதா? அதை விட்டு விடுவதற்கு உம்முடைய சமுகத்திற்கு வருகிறேன் ஆண்ட வரே என்று சொல்லவேண்டும். அப்பொழுது வேத புத்தகமானது ஆசீர்வாதத்தைத் தருகிற அதே நேரத்தில், நாம் எதையெல்லாம் செய்யக்கூடாது என்றும் எதையெல்லாம் செய்யவேண்டுமென்றும் ஒவ்வொரு நாளும் போதிக்கிறது. ஒருவேளை இதைக் கேட்கிறதில் வாலிப பிள்ளைகள் இருப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் நீதிமொழிகள் புத்தகத்தை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிகாரமாக வாசித்து பழகினால், ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை செவ்வைப்படுத்துவதை நீங்கள் பார்க்கமுடியும்.
2. கீழ்ப்படிவதில் நம்மிடம் குறை இருக்குமானால், கீழ்ப்படிதலுள்ள மனிதனாக மாற்றி நம்மை ஆசீர்வதிக்கிறார்.
நம் ஆண்டவர் எவ்வளவு நல்ல ஆண்டவர், பாருங்கள்! சாலொமோனுடைய வாழ்க்கையிலே ஆசீர்வாதத்திற்கு பிறகு கீழ்ப்படிதல் குறைந்து போனது. அதற்கு பின்பு அவர் எழுதிய பிரசங்கியின் புஸ்தகத்தை வாசிக்கும்போது, அவர் திரும்பவும் அதற்காக மிகவும் வருந்துவதைப் பார்க்கிறோம். திரும்பவுமாக அவர் ஒப்புரவாகி, ஆண்டவரிடத்திலே வருவதைப்போல நாம் பல அதிகாரங்களை வாசிக்கிறோம். ஆண்டவர் கீழ்ப்படியாத ஒரு மனிதனைப் பார்க்கிறார். அவர் அவனை ஆசீர்வதிக்க விரும்புகிறார். அதற்காக அவர் என்ன செய்கிறார் என்பதை, யாக்கோபுடைய வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம். ஆண்டவர் யாக்கோபுடைய வாழ்க்கையிலே இருக்கின்ற அவனது கெட்ட தன்மைகளையெல்லாம் மாற்றி ஆசீர்வதிக்கிறார்.
யாக்கோபு என்ற பெயரின் அர்த்தம் ஏமாற்றுகிறவர், தட்டிக்கழிக்கிறவர் என்பதாகும். பொதுவாக அவர் ஏமாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் ஏமாற்றக்கூடியவர். அவருடைய சகோதரனாகிய ஏசாவின் பசியின் நேரத்தில் கூழை அவனுக்குக் கொடுத்து, அவனிடமிருந்து சேஷ்டபுத்திரபாகத்தை வாங்கிக்கொள்கிறார். ஒரு ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டுபோய், அவர்கள் அப்பாவிடம் சென்று கடைசி ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். அவருக்கு ஒன்றே ஒன்று விளங்கவில்லை, அதென்னவென்றால் நம்மை கர்த்தர்தான் ஆசீர்வதிக்க முடியும் என்பதை அவர் விளங்கிக்கொள்ளவில்லை. கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்க வேண்டுமென்றால், நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்து அவர் யோசித்து பார்ப்பதற்கு வாய்ப்பில்லாதவராக காணப்படுகிறார்.
ஆதி நாட்களிலே முற்பிதாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கர்த்தர் தங்களுக்கு என்ன செய்தார் என்பதைக் குறித்து சாட்சியாக சொல்லிக்கொண்டே வருவார்கள். அதேபோல, ஆபிரகாம், ஈசாக்கு ஆகிய இவர்களுடைய வாழ்க்கையைக் குறித்து யாக்கோபுவுக்கும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். எனவே அவருக்குக் கீழ்ப்படிதலைக் குறித்து முழுவதுமாக ஞானம் இல்லையென்று சொல்லமுடியாது. ஆனால், அவர் ஆசீர்வாதத்தை அடைய வேறுவழியில் செல்லுகிறவராக இருந்தார். கர்த்தர் ஒரு மனிதனைக் தெரிந்துகொள்ளும்போது, அவனைக் கீழ்ப்படிதலுள்ள மனிதனாக மாற்றி ஆசீர்வதிக்கிறார். அவனுடைய வாழ்க்கைப் பயணத்தில் அவனோடுகூட வருகிறார்.
ஏசாவுக்கு பயந்து யாக்கோபு வேறு ஒரு இடத்திற்கு போகவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கேதான் அவருக்கு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தில் மாமனார் பெண்ணையே மாற்றி கொடுத்துவிடுகிறார். யோசித்துப் பார்ப்போம். ஏமாற்றும் தன்மையுடைய ஒரு மனிதன், தான் ஏமாற்றப்பட்டபோது ஏமாற்றுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்திருப்பான். அவனது மாமனார் பத்துமுறை அவனது சம்பளத்தை மாற்றுகிறான், இவ்வாறான எல்லா அனுபவங்களையும் ஆண்டவர் கடக்கவைக்கிறார். கடைசியிலே தன்னுடைய சமுகத்திற்கு அவன் தேடிவர வைக்கிறார்.
ஆதியாகமம் 28வது அதிகாரம் 15வது வசனம் முதன் முதலிலே அவர் ஆசீர்வாதத்திற்கான வாக்குத்தத்த வார்த்தையைப் பெற்ற இடமாகும். தனது மாமாவின் வீட்டிற்கு செல்லும் வழியில் இரவில் தங்கியிருந்த இடத்தில் அவர் ஒரு தரிசனத்தைப் பார்க்கிறார். அதில் தேவன் யாக்கோபிடம், நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார் (ஆதி.28:15). இந்த தரிசனத்தைக் காணும்போது யாக்கோபு தேவனிடம் கீழ்ப்படிபவராக இல்லை. ஆனால், அவர் அவனைப் பார்த்து சொல்கிறார்: நான் உனக்கு ஒன்று சொல்கிறேன், போய்விட்டு திரும்ப வருவாய்; நான் உனக்கு சொன்னதை செய்கிறவரைக்கும், உன்னைக் கைவிடுவதில்லை என்று.
அருமையான சகோதரனே, சகோதரியே ஆண்டவர் சொல்வதைத் தினசரி கேட்கும் பழக்கம் நமக்கு இருக்கிறதா? அனுதினமும் அப்படிப்பட்ட வாஞ்சை நம்மிடம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இன்றைக்கு ஆண்டவர் எனக்குக் கொடுக்கிற வாக்குத்தத்தம் என்ன? இன்றைக்கு ஆண்டவர் எனக்குக் கொடுக்கிற கட்டளை என்ன? இப்படி வேதத்தில் தேடி வாசிக்கும் பழக்கம் இருக்கும்போது, நிச்சயமாக ஆண்டவர் நம்மோடுகூட பேசுவார். நமக்கு அவர் என்ன செய்யப் போகிறார் என்பதையும் சொல்லுவார். நாம் என்ன செய்யவேண்டும் என்பதையும் சொல்லுவார். ஆண்டவர் உனக்கு சொன்னதை செய்யுமளவும், அவர் உன்னைக் கைவிடவேமாட்டார்.
ஆண்டவர் நமக்குச் சொன்னதை நிறைவேற்றுகிறவர். நினைக்கிற ஆண்டவர் ஆசீர்வதிக்கிறார். இங்கே சொல்லுகிற ஆண்டவர் சொன்னதை, நிறைவேற்றுவதிலே குறியாக இருப்பார். கடைசியிலே யாக்கோபை எங்கே கொண்டு வருகிறார்? ஆதியாகமம் 32வது அதிகாரத்தில் பார்ப்போமென்றால், ஏசா தனக்கு எதிராக கிளம்பி வருகிறார் என்ற சூழ்நிலையிலே யாக்கோபு மிகுந்த வேதனையோடு காணப்படுகிறார். அப்பொழுது யாப்போக்கு ஆற்றங் கரையிலே பிந்தி தனித்திருந்து இரவெல்லாம் அங்கே ஜெபிக்கிறார்.
ஆண்டவர் அவனுக்கு ஒரு காரியத்தை கற்றுத் தருகிறார். இதுவரைக்கும் யாக்கோபிடம் இருந்த அவனது முயற்சி, அவனது ஏமாற்றும் திறன் ஆகியவற்றிலிருந்து அவனை மாற்றி வெளியே கொண்டுவரச் செய்கிறார். யாக்கோபை மாறுதலுக்கு உட்பட்ட ஒரு மனிதனாக்கி அவனை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இதுதான் ஆண்டவருடைய திட்டம். அவர் அந்தத் திட்டப்படியே அங்கே செயல்படுகிறார். இரவு முழுவதும் ஜெபத்திலே போராடுகிறார். ஆண்டவரைப் பார்த்து அவர் சொல்கிறார்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்.
ஆதியாகமம் 32:27வது வசனத்தில் ஆண்டவர் அவனிடம் உன் பேர் என்ன என்று கேட்டார்? அதற்கு யாக்கோபு என்று சொல்கிறார். அதற்கு அர்த்தம் எத்தன் என்று பொருள், அவர் உன்பேர் இனிமேல் யாக்கோபு என்று எண்ணப்படாமல் இஸ்ரவேல் எனப்படும் என்கிறார். பெரிய தேசத்திற்கு தலைவனாகவும் ஒருபெரிய இனத்திற்கே அவன் தலைவனாகவும் தெரிந்துகொண்டதை அந்த நாளிலே யாக்கோபிடம் சொல்கிறார். அதற்குப்பின் அவருடைய வாழ்க்கை பயணம் எப்படி இருந்தது என்று தெரியுமா? ஆசீர்வாதத்தின் பாதையிலே நடக்கும் ஒரு பயணமாக மாறிற்று. அருமையானவர்களே, ஆசீர்வாதத்திற்காக ஏங்குகிற நாமும் நமது வாழ்வில் இருக்கின்ற சரி செய்யப் படவேண்டிய காரியங்களைச் சரிபடுத்திக் கொண்டால், நாமும் கர்த்தர் ஆசீர்வதிக்கிற அந்த இடத்திற்கு வந்து சேருவோம்.
3. தேவன் நமக்கு வாக்குத்தத்தங்களைத் தந்து ஆசீர்வதிக்கிறார்.
சங்கீதம் 32இல் ஆண்டவர் பல வாக்குத்தத்தங்களை வைத்திருக்கிறார். வாக்குத்தத்தங்கள் என்பது தேவனுடைய பிள்ளைகளுக்கு உரியது. அதிலே 8வது வசனத்தில் ஆண்டவர் சொல்கிறார்: நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்னை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன் என்று. எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம் பாருங்கள்! எல்லா வாக்குத்தத்தமும் நன்மையான வாக்குத்தத்தந்தான். வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிற அனைத்து வாக்குத்தத்தங்களும் அவரது பிள்ளைகளுக்கு சொந்தமானதாகும். இந்த ஒரு நாளுக்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ மாத்திரம் அல்ல, எல்லா நாளுமே நாம் வாக்குத்தத்தங்களைத் தேவனிடத்திலிருந்து பெற்று அவரை மகிமைப்படுத்தி வாழமுடியும்.
இதிலே அவர் சொல்கிறார்: நீ நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன், ஆதலால் இந்த வருடத்திலுள்ள 365 நாட்களைப் பற்றி நமக்குத் தெரியாது. நாம் எந்த வழியில் நடக்க வேண்டும், எப்படிப்பட்ட ஆலோசனையில் நடக்க வேண்டுமென ஆண்டவர் நமக்கு வாக்குத்தத்தம் கொடுக்கிறார். எனவே, இந்த வருடத்தில் ஒவ்வொரு நாளும் தேவ சமுகத்துக்கு நாம் சென்று பழக வேண்டும், அப்பொழுது நம்மேல் அவரது கண்ணை வைத்து நமக்கு தமது ஆலோசனையைத் தருவார். அவரது ஆலோசனையைக் கேட்டு பழகினால், இந்த ஆண்டில் ஒவ்வொரு நாளிலும் ஆண்டவர் ஆசீர்வதிக்கிறதை நாம் பார்க்கலாம்.
அதேவேளையில் 9வது வசனத்தில் ஒரு பொறுப்பை நம்மிடம் வைக்கிறார். வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப் போலவும், கோவேறுக் கழுதையைப் போலவும் இருக்க வேண்டாம். குதிரை வேகமாக (Fast) ஓடக்கூடிய பிராணியாகும்., கழுதை மிகவும் மெதுவாக (Slow) செல்லக்கூடிய பிராணியாகும். என்னிடத்திலே ஆலோசனை பெற்றுக்கொண்டால் நீ வேகமாகவும் இருக்கக்கூடாது, மெதுவாகவும் செயல்படக்கூடாது என்று ஆண்டவர் கூறுகிறார். நாம் நிதானத்தோடு செயல்பட வேண்டும். நாம் நமது காரியங்களில் என்ன செய்யவேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியும்படியாக ஜெபித்து, தேவனிடத்தில் ஆலோசனைப் பெற்று அவர் நமக்குக் காட்டும் வழியில் நாம் நடப்போமானால், ஆண்டு முழுவதும் நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும்.