தேவனை வாஞ்சித்தல்!

Dr.உட்ரோ குரோல்
(ஜூலை-ஆகஸ்டு 2013)

சத்திய வசன வாசகர்களுக்கு இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். இவ்விதழில் நாம் சர்வவல்ல தேவனிடம் நெருங்கி வாழ்வதைப்பற்றி ஆராய்வோம். தாவீது அரசர், தான் தேவனை வாஞ்சித்துத் தேடுவதாகவும், தேவன்மேல் தாகமாயிருப்பதாகவும் சங்கீதம் 42இல் கூறியுள்ளார். இவ்விரண்டுக்கும் என்ன வேறுபாடு? இவை இரண்டுமே தேவனோடு நாம் நெருங்கி ஜீவிக்கவேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்துகிறது. நாம் உயிர் வாழ காற்றும் தண்ணீரும் தேவை. நமக்கு மூச்சு திணறும்பொழுது காற்றை சுவாசிக்கிறோம். தாகத்தைத் தணிக்க நீரைப் பருகுகிறோம். நமது வாழ்வின் ஆதாரமான தேவனை நாம் அதிகமாய் வாஞ்சித்து தாகத்தோடு தேட வேண்டும்.

கடந்த ஆண்டுகளில், “அதிகமாக நீரை அருந்துங்கள்; அப்படி செய்யும்பொழுது நீங்கள் இன்னும் அதிகமாக அதனை நாடித் தேடுவீர்கள்” என்று மருத்துவக்குறிப்புகள் வலியுறுத்தின. நமது சரீரத்துக்குத் தேவையான நீரை நாம் அலட்சியம் செய்வதைவிட ஆவிக்குரிய தாகத்தை அதிக அலட்சியம் செய்கிறோம் என்பது உண்மை. நீரைக் குறைவாக அருந்துவதற்கும், சரீரத்தில் நீர் குறைந்து போவதற்கும் வேறுபாடு உண்டல்லவா? அதிகநேரம் நாம் நீரைக் குடிக்காவிட்டால் நமது சரீரத்தில் நீர்ச்சத்து குறைந்துபோகும் நிலை உண்டு. அதுபோலவே தேவனையும் அவரது வார்த்தையையும் தேடுவது குறைந்தால், நாமும் ஆவிக் குரிய நீர்க்குறைவால் அவதியுறுவோம். தேவனுடைய வார்த்தையைத் தேடுவதில் நீங்கள் கவனமாய் இருந்தால், ஆவிக்குரிய வாழ்வில் வறண்டுபோவதற்கு நீண்டகாலம் ஆகும்.

“மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” என்று சங்கீதம் 42:1 கூறுகிறது. அருமையானவர்களே, நாம் தேவனுடன் நெருங்கி ஜீவிக்க வேண்டுமானால் நம்முடைய ஆத்துமா அவரை வாஞ்சித்து தாகமாய் இருக்கவேண்டியது அவசியம். சங்.42:2இல் அருமையாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. வேதத்தை நாம் வாசிக்கும்பொழுது ‘தாகம்’ என்ற சொல் பலமுறை கையாளப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

யாத்.17:3இல் இஸ்ரவேலர் ரெவிதீம் வனாந்தரத்தில் பாளையமிறங்கியபொழுது, தண்ணீர் தவனமாயிருந்ததை வாசிக்கிறோம். இது சரீர தாகமாகும். இதே வார்த்தைதான் தேவனைத் தேடுவதற்குரிய ஆத்தும தாகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் தேவனோடு நெருங்கி வாழ விரும்புகிறீர்களா? நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும் பொழுது உங்களுடைய ஆவிக்குரிய பயணத்தைத் தொடங்குகிறீர்கள். இது பரலோகத்தை நோக்கிய பயணம் என்பதைவிட ஆன்மீகப் பயணம் என்பதே மிக முக்கியம்.

ஆன்மீகப் பயணத்தில் மிக முக்கியமானது தேவனுடன் நெருங்கியிருப்பதாகும். ஆவிக்குரிய வாழ்வில் குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து முதிர்ச்சி நிலையை அடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் நாம் தேவனிடம் நெருங்கி வரவேண்டும்.

உங்களில் ஒரு சிலர், 30 ஆண்டுகளாக, 40 ஆண்டுகளாக, 50 ஆண்டுகளாக ஒருவேளை அதற்கும் மேலாகக் கிறிஸ்தவர்களாயிருக்கிறீர்கள். நீங்கள் நீண்ட காலமாக இவ்விசுவாசத்தில் இருப்பதால், இளவயதிலேயே ஓய்வு நாள் பாடசாலையில் ஆசிரியராக போதித்தும், ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கியும் இருப்பீர்கள். ஆனால் கடந்த ஆண்டைவிட இன்று நீங்கள் தேவனை இன்னும் அதிகமாக நெருங்கியிருக்கிறீர்களா? ஒருவேளை இன்று உங்களுக்கு அருமையானவைகளை இழந்தும், அருமையான நபர்களை இழந்தும் தனிமையாக நீங்களும் தேவனும்மட்டும் வாழ்கிறீர்களா? சங்.42:1-2இல் கூறப்படும் ‘மான்கள் நீரோடையை நாடி கதறுவது போல’ நம்முடைய ஆத்துமாவும் ஜீவனுள்ள தேவனையே தாகத்தோடு தேடவேண்டும்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது முது மொழி. ஒவ்வொரு உயிரினமும் வாழ்வதற்கு நீர் இன்றியமையாததாகும். உண்மையில் ஒவ்வொரு உயிரினமும் தன்னகத்தே நீரைக் கொண்டுள்ளது. நம்முடைய உடம்பிலும் மூன்றில் இரண்டு பங்கு நீர் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு கோழிக்குஞ்சு முக்கால் பங்கு நீரைக் கொண்டுள்ளது. அன்னாசிப் பழத்தில் ஐந்தில் நான்கு பங்கு நீர் உண்டு என்ற தகவலை உலகக் களஞ்சிய நூல் தருகிறது. ஒரு மனிதன் உணவில்லாமல் ஒரு மாதத்துக்கு மேலாக இருக்கமுடியும். ஆனால் நீரில்லாமல் அவனால் ஒரு வாரம்கூட இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்குக் குறைந்தது 2.4 லிட்டர் நீரைப் பருக வேண்டும். இதனை நாம் குடிக்கும் பானம், மற்றும் உணவுகளின் மூலம் பெற்றாலும் ஒவ்வொரு நாளும் நாம் சுத்தமான நீரைப் பருக வேண்டும். உங்களுடைய சரீரத்தில் 20 விழுக்காடு நீர் குறையுமானால் ஒரு வேதனையான மரணத்தை நீங்கள் சந்திக்க நேரிடும்.

நீங்களும் நானும் நீருள்ள ஓர் உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் அதில் 97 விழுக்காடு கடலில் உள்ளது. 3 விழுக்காடு மட்டுமே குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. ஆயினும் சுத்தமான குடிநீர் நமக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. ஏனெனில் அவை துருவங்களில் உள்ள பனிகளிலும் பனிப் பாறைகளிலும் உறைந்து கிடக்கின்றன. மிகக் குறைவான நீர் கிடைக்கும் வனாந்தரத்தில் அலைந்த சங்கீதக்காரர், நீர் எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதை அறிந்திருந்தார். எனவேதான் அவர் தேவனைத் தேடுவதில் உள்ள தாகத்துக்கு இந்த உவமையைத் தந்துள்ளார்.

100 டிகிரியைத் தாண்டிய சுட்டெரிக்கும் வெயிலின் அக்கினி நட்சத்திர நாட்களில் ஒரு நாள் நீங்கள் தோட்டத்தில் வேலை செய்து விட்டு வரும்பொழுது, “தாகத்தால் நான் செத்துக்கொண்டிருக்கிறேன்” என்று புலம்புவீர்கள் அல்லவா? அதாவது உங்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வேண்டும். அது கிடைக்கா விட்டால் மரித்து விடுவீர்கள் என்ற எண்ணம். அந்த அளவுக்கு உங்களுக்கு தண்ணீர் அத்தியாவசியமாகிறது.

இதுபோலவேதான் ஆவிக்குரிய வெற்றியைப் பெற்ற கிறிஸ்தவனும் உணருகின்றான். தாகத்தால் நாவறண்டு நீரைத் தேடுவதுபோல, நாமும் பிதாவாகிய தேவனுடன் நேரம் செலவழிக்க வேண்டும். குமாரனாகிய தேவனுடன் ஐக்கியம் கொள்ள வேண்டும். தூய ஆவியாகிய தேவனுடன் நெருக்கத்தையும் உண்டாக்கிக் கொள்ளவேண்டும். இவையில்லாவிட்டால் நாம் தாகத்தால் தவித்து, தேவனுடன் உள்ள உறவைப் பெறமுடியாது போவோம்.

எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் இன்று எப்படி இருக்கிறீர்கள்? தேவனுடன் சஞ்சரிக்கும் உறவில் மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? அல்லது தேவன் – மனிதன் என்ற உறவில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா? அதாவது அவர் தேவன்; நீங்கள் ஒரு மனிதன். உங்களுடைய வாழ்வில் அவர் இடைபடாமல் விலகியுள்ள நிலையில் இருக்கிறாரா? அல்லது நீங்கள் தேவனை வாஞ்சிக்கிறீர்களா? அவரைத் தேடி தாகத்துடன் இருக்கிறீர்களா?

“என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது” (சங்.143:6) என்ற தாவீதின் கதறல் உங்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன். தேவனைத் தன் முன் கொண்டுவந்து நிறுத்துவதற்காகப் பரலோகத்தை நோக்கி தனது கைகளை உயர்த்துவது போல உள்ளது. ஆம், தேவனுடைய கரங்களைப் பற்றிக்கொள்ள தனது தளர்ந்த கரங்களை உயர்த்துகிறார். தேவனுடைய வல்லமையான கரம் தன்னைச் சுற்றி அரவணைப்பதை உணர அவர் விரும்புகிறார். தேவன் தன்மீது கரிசனையுடையவராயும், அவருடைய அருகாமையை அறிந்துகொள்ளவும் ஆர்வமாய் உள்ளார். தேவனுடன் நேரம் செலவிட அவர் விரும்புகிறார். இதை எங்கிருந்து அவர் பெற்றுக்கொண்டார் என்பதை நீங்கள் அறிய விரும்பினால் சங்.143ஐ வாசிக்க வேண்டும். நீங்கள் தேவனைத் தேடும் பொழுது, உலகத்தைவிட அவரையே அதிக மதிகமாய் விரும்புவீர்கள். நீங்களும் தாவீதைப் போன்று, தேவனை இழுத்து உங்களிடம் வைத்துக்கொள்ள முயற்சிப்பீர்கள்.

தேவன் உங்களுக்காக செய்யவேண்டியதையோ, அவர் தரும் ஆசீர்வாதத்தையோ தேடுவது ஆத்தும வாழ்வின் வெற்றியாகாது. தேவன் நம்மை நிரப்புபவர், நம்மை நேசிப்பவர், தமது குமாரனை நமக்காக கல்வாரியில் மரிக்க அனுப்பியவர். எனவே நாமும் அவருடைய வல்லமையை நாடாமல் அவரையே தேட வேண்டும். ஆங்கில வேத வல்லுநரும், நூலாசிரியருமான லூயிஸ் ஒரு முறை, “சங்கீதத்தின் தேவன் அனைத்தையும் திருப்திபடுத்துபவர். அவரே நம்முடைய மகிழ்ச்சியின் ஊற்றும் காரணருமாவார்” என்று கூறினார்.

தேவனுடன் நெருங்கி வாழவேண்டுமெனில் வேதாகமத்துக்குத் திரும்புங்கள். அங்கேதான் அதற்குரிய வழிகள் கூறப்பட்டுள்ளன. “உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு” (சங்.16:11). “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்று சத்தியவேதம் கூறுகிறது. தேவவார்த்தையை வாசிக்கும்பொழுது, அவரது ஆசீர்வாதங்களையோ, அவர் செய்யும் அற்புதங்களையோ, அவரது வல்லமையையோ நாடாமல் அவரையே நீங்கள் தேடுவீர்கள்; அவருடன் நெருங்கி வாழ விரும்புவீர்கள்.

தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற மனிதரான தாவீது, தமது விருப்பத்தை சங். 63:1இல் வெளிப்படுத்தியுள்ளார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” தாவீதின் வாஞ்சையானது இவ்வசனங்களிலே அழகாகப் பின்னப்பட்டுள்ளது. நீங்களும் நானும் இவ்வித நெருக்கத்தையே தேவனுடன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும். தேவன் நமக்குச் செய்யும் செயல்களைவிட அவரையே நாம் தேட வேண்டும். இந்த ஆத்தும தாகத்தை எவ்வாறு நாம் வளர்த்துக் கொள்ள முடியும்? “என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன் மேலேயே தாகமாயிருக்கிறது” (சங்.42:2) என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ள தேவன் மேலே உள்ள தாகம் என்பதன் பொருள் என்ன?

முதலாவது, தாவீது ஒரு தலைவனையோ, ஒரு உணர்வையோ, அல்லது உள்ளான ஓர் அனுபவத்தையோ தேடவில்லை. அவர் தேவனையே தேடுகிறார். இதுதான் ஆத்தும வெற்றி. தேவன் தம்மை இரக்கமாய் நமக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவர் நமக்காக யாவையும் செய்கிறார். ஆனால் உங்களுக்கு அவர் எவ்வளவு தேவைப்படுகிறார்? அவருக்கு அருகாமையில் இருக்க நீங்கள் எந்த அளவுக்கு விரும்புகிறீர்கள்? அநேகர் தங்களுக்குத் தேவையான அளவு மாத்திரம் தேவனை அறிந்தால் போதுமானது என்று நினைக்கின்றனர். ஆனால் தாவீது அவ்வாறு நினைக்கவில்லை. உங்களை உண்டாக்கிய தேவனுடன் எந்த அளவு ஆழமான உறவு வைத்திருக்கிறீர்கள். தாவீது மற்றும் 42ஆம் சங்கீதத்தில் உள்ள கோராகின் புத்திரரைப் போலவா? உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.

தாவீதின் தேடுதல் ஒரு அறிவியல் தேடுதலோ அல்லது உணர்ச்சியின் தேடுதலோ அல்ல. தேவனை உண்மையாகத் தேடுவதற்கு அவர் தன்னை அர்ப்பணித்தார். தேவனைத் தேட நேரம் ஒதுக்கவேண்டும். தேவனுடன் நெருங்கி வாழ்வது சாத்தியமே. தமக்கென்று திருப்பெயரையும், அடையாளத்தையும், ஆள் தத்துவத்தையும் உடைய ஒரு தேவனை தாவீது வாஞ்சிக்கிறார். வேத புத்தகத்தில் தம்மை வெளிப்படுத்தியுள்ள தேவனை அவர் நாடினார். தாவீது, தேவனை வாஞ்சித்ததைப் போலவே தேவனும் தாவீதை நாடினார்.

இரண்டாவதாக தாவீது, தன்னை அறிந்து கொள்ளும், புரிந்துகொள்ளும் தேவனையே நாடினார். “தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” (சங்.63:1). இங்கு தாவீது, தேவனை, ‘என்னுடைய தேவன்’ என்று அழைக்கிறார். எங்கேயோ வெகு தொலைவில் உள்ள ஒரு தெய்வத்துடன் தொடர்புகொள்ள அல்ல; தம்மை அறிந்துள்ள தேவனையே நாடுகிறார். தேவன் நமக்கு வெகு அருகாமையில் உள்ளார். உங்களுக்கு தேவை மிகுந்த நேரத்தில் மிக அண்மையிலேயே இருக்கிறார். “…என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது” என்று தாவீது கூறுவதிலிருந்து அவர் தேவனைத் தேடுவதில் எவ்வளவு உண்மையுள்ளவராயிருந்தார் என்று தெரிகிறது. இங்கு அவர் தனது சரீரத்தையும் ஆத்துமாவையும் பற்றிக் கூறுகிறார். அவருடைய ஆத்துமா வறண்ட நிலம் தண்ணீருக்காக ஏங்குவது மாத்திரமல்ல; அவருடைய சரீரமும் தேவனை வாஞ்சிக்கிறது என்கிறார். பரிசுத்த தேவனைத் தேடுவதற்கு தனது ஆத்துமாவையும் சரீரத்தையும் உபயோகிக்கிறார்.

ஒரு சமயம் அமெரிக்க தலைவர் ஒருவர் அர்ஜென்டினாவுக்கு சென்றிருந்தார். அப்பொழுது அந்த நாட்டின் அதிபர் அவரை நோக்கி, “தென் அமெரிக்கா ஏழ்மையிலும் வட அமெரிக்கா வளமையுடனும் இருக்கக் காரணம் என்ன?” என வினவினார். அதற்கு அந்த அமெரிக்க நண்பர், “ஏனெனில் தென் அமெரிக்காவுக்கு வந்த ஸ்பெயின் மக்கள் தங்கத்தைத் தேடிவந்தனர்; ஆனால் வட அமெரிக்காவுக்கு வந்த புனித யாத்திரைப் பயணிகள் தெய்வத்தைத் தேடி வந்தனர்” என்று பதிலளித்தார். அன்பானவர்களே நீங்கள் பாடல்கள் பாடுவதாலோ, உங்கள் சாட்சியைப் பகிர்ந்துகொள்வதாலோ தேவனுக்கு சாட்சியாக வாழ்வதாலோ வெற்றியுள்ள கிறிஸ்தவ ஜீவியம் பண்ணமுடியாது. நீங்கள் தேவனைத் தேட வேண்டும். உங்கள் ஆத்துமா தேவனை வாஞ்சித்துக் கதற வேண்டும். உங்கள் சரீரமும் தேவனைத் தேடவேண்டும். “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது” (சங்.42:1).

நீங்கள் தேவனைத் தேடுவதற்கு நேரம் ஒதுக்க உங்களுக்கு விருப்பமுண்டா? வேதத்தை வாசிக்க ஆர்வமுண்டா? அல்லது தற்கால கிறிஸ்தவர்கள் செய்வதுபோல மேம்போக்கான, காரியங்களையே செய்துவருகிறீர்களா? ‘Desiring God’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான ஜான் பைப்பர் தம்மை ஓர் இன்பத்தைத் தேடும் கிறிஸ்தவனாக (Christian Hedonist) வர்ணித்துள்ளார். தேவனைத் தமது முழு இருதயத்தோடும் தேடுவதால் கிடைக்கும் இன்பத்தை நாடும் ஒரு கிறிஸ்தவன் என்று தன்னைப்பற்றிக் கூறுகிறார். “கிறிஸ்தவ இன்பத்தைத் தேடுபவன் தேவனிடம் உள்ள இன்பத்தையே நாடுகிறான். அவரே நமது தேடுதலின் முடிவு, அவரையன்றி வேறு இன்பம் தருவது எதுவுமில்லை. நமது உச்சக்கட்ட மகிழ்ச்சி ஆண்டவராகிய அவரே. பொற்தள வீதிகளோ, மறைந்துபோன நமது உறவினர்களைச் சந்திப்பதோ அல்லது மோட்சத்தின் மற்ற மாட்சிமைகளோ நமக்கு மகிழ்ச்சியைத் தராது. இன்பம் தேடும் கிறிஸ்தவன், பொன்னும் வெள்ளியும் நிறைந்த பேழையைத் திறக்கும் சாவியாக தேவனை மட்டுப்படுத்தமாட்டான்.

தவறான நோக்கத்துடன் தேவனை நெருங்கி வாழ விரும்பாதீர்கள். அவர் தரும் ஈவுகளுக்காகவோ, அவர் தரும் நன்மைகளுக்காகவோ அவரை நாடி ஓடாதீர்கள். அவர் தேவனாக இருப்பதற்காக அவரிடம் அன்பு கூருங்கள். தேவனைக் கண்டுகொள்ளும் முன்னதாக தன்னுடைய அமைதியின்மையைப் பற்றி புனித அகஸ்டின், “நீர் உமக்காக எங்களை உருவாக்கினீர், எங்களுடைய இருதயம் உம்மிலே அமைதி கொள்ளுமட்டும் எங்களுக்கு அமைதியில்லை” என்று கூறியுள்ளார்.

தேவனை ஒருமுறைமட்டும் அறிந்து கொண்ட அமைதியற்ற இருதயம், அத்துடன் நிறைவுகொள்ளாது. அது இன்னும் அதிகமாய் தேவனைக் கிட்டிச் சேர வாஞ்சிக்கும். நம்முடைய இருதயத்தின் ஆழமான விருப்பத்தை நிறைவுசெய்யும் ஒருவரை வாஞ்சிப்பது ஒரு தொடர் நிகழ்வாகும். இரட்சிப்பின் அனுபவத்தின் மூலமாக இதைக் கண்டு கொள்ள முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் தாகமான இருதயத்துடன் அவரை வாஞ்சித்து தேடவேண்டும்.

தேவனைப் பற்றி அறிந்துகொள்வது வேறு; தேவனை அறிவது வேறு. அவரை அறிந்து கொள்ள நீங்கள் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை வாசித்து அவரைப்பற்றியும் அவர் நமக்குச் செய்தவைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை நமது வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேவனுடைய வார்த்தையை நாம் அறிந்துகொள்வது மாத்திரமல்ல, அது நம்மை யும் மாற்ற நம்மை ஒப்புவிக்க வேண்டும்.

பகலின் குளிர்ச்சியான வேளையில் தேவனுடன் உறவாடிய ஆதாம் – ஏவாளைப் போலவும், தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கைப் போலவும், தேவனுடைய செயல்களை அறிந்துகொண்ட ஆபிரகாமைப்போலவும், தேவனுடைய இருதயத்துக்கேற்ற தாசனாகிய தாவீதைப் போலவும் வாழ உங்களுக்கு விருப்பமுண்டா? நமக்குப் பிரியமானவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, அவருடன் அதிகம் உரையாடி, அவரைப் பற்றியே மற்றவர்களிடம் பேசி மகிழுகிறோம் அல்லவா? அதுபோலவே நம்மில் அன்புகூர்ந்து நம்முடைய அன்பை, ஆராதனையை விரும்பும் தேவனை நாம் உயர்த்துவோமா?

தேவனது வார்த்தையான வேத புத்தகத்தை வாசியுங்கள், தியானியுங்கள், ஆராய்ச்சி செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அதனை அறிவியுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்