தேவனுடைய வழியில் நானா?
என் வழியில் தேவனா?

சகோதரி.சாந்தி பொன்னு
(ஜூலை-ஆகஸ்டு 2013)

இந்தப் பக்கத்தைப் புரட்டிப்பார்க்கும் இந்த விநாடியில் நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை நான் அறியாவிட்டாலும், ஒன்று நிச்சயம். ஒரு சிறு குழப்பம், ஒரு சிறு சலனம், ஒரு சிறு சிடுசிடுப்பு, ஒரு எதிர்பார்ப்பு அதைத் தொடர்ந்து அங்கலாய்ப்பு, இல்லையானால் கோபம் பழிவாங்கல் இப்படி ஏதோவொரு உணர்வினால் மனிதனுடைய உள்ளம் குழம்பி தவித்தபடியே இருக்கும் என்பதை மறுக்கமுடியாது. சாதாரணமாக நூற்றில் தொண்ணூற்றொன்பது பேரும் இப்படி ஏதோவொரு போராட்டத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? இதுதானா மனிதனின் நிலைமை?

நாம் துக்கத்தோடும் குழப்பத்தோடும் தீர்மானம் எடுக்கமுடியாத தவிப்போடும் தடுமாறவேண்டும் என்றா தேவன் விரும்புகிறார்? அதற்காகதானா அவர் தம்முடைய ஒரே பேறான குமாரன் என்றும் பாராமல் பாழாய் போன இந்த பூவுலகத்திற்கு அவரை அனுப்பி, பலியாக ஒப்புவித்தார்? இல்லையே! அப்படியானால் இன்று மனிதனுடைய இந்த அவல நிலைக்கு, அதிலும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நமது தடுமாற்றங்களுக்கும் விழுகைகளுக்கும் யார் காரணம்? அல்லது எது காரணம்?

தனது ஆசிரியர் சொன்னதாக ஒரு சகோதரி சொன்ன கதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒரு தேவ பக்தர், தேவனையும் அவரது வார்த்தைகளையும் மிகவும் நேசிக்கிறவர். ஒருமுறை அவர் வசித்துவந்த பகுதியில் மழை பெய்து வெள்ளம் வந்தது. மக்கள் யாவரும் பயந்து வீடுகளைவிட்டு ஓடினர். அவர்கள் இவரிடமும் வந்து, ஐயா இந்த வெள்ளம் மிகவும் அபாயமானது, நீங்களும் எங்களுடன் வந்துவிடுங்கள் என்று அழைத்தனர். அவரோ, என் தேவன் என்னைக் காப்பாற்றுவார். அவர் வாக்குமாறாதவர் என்று வேத வசனங்களையெல்லாம் சொல்லி, தப்பிப்போக மறுத்து விட்டார். வெள்ளம் உயர்ந்தது. அப்பொழுதும் படகுகளில் வந்து இவரை அழைத்தார்கள். இவரோ மறுத்துவிட்டார். வெள்ளம் உயர உயர இவரும் கூரையில் ஏறி, பின்னர் ஒரு தென்னைமரத்தில் தொங்கிக் கொண்டார். அப்போதும் வானூர்த்தியிலே வந்தவர்கள் கயிறு ஒன்றைக் கீழேவிட்டு, அதைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறும்படி கூச்சலிட்டு கூப்பிட்டனர். இவரோ என் தேவன் என்னைக் காப்பார், இப்படியாகத் தப்பித்துக்கொண்டால் என் விசுவாசம் பரிகாசமாகிவிடும் என்று மறுத்துவிட்டார்.

நடந்தது என்ன? மரம் விழுந்து அவர் இறந்துவிட்டார். இறந்தவர் தேவனிடம், ‘உம்மை நான் எவ்வளவாக நம்பி விசுவாசித்தேன். வாக்குமாறாத நீர் என் விஷயத்தில் வாக்கு மாறியது என்ன?’ என்று கேட்டாராம். தேவனோ, ‘மகனே, நான் வாக்கு மாறவேயில்லை. உன்னைத் தப்புவிப்பேன் என்ற என் வாக்குப்படி எத்தனை தடவை உன்னைத் தப்புவிக்க நான் முயற்சி செய்தேன். மக்களை அனுப்பினேன். படகை அனுப்பினேன். ஏன் வானூர்த்தியையும் அனுப்பினேன். ஆனால் நீயோ மறுத்துவிட்டாய்; நீ என்னை நம்பவில்லை, கீழ்ப்படியவில்லை. நான் என்ன செய்வேன்’ என்றாராம்.

இப்படித்தான் நாமும் அநேகந்தடவைகள் கர்த்தரையே சோதித்துப் பார்க்கிறோம்; அல்லது, நாம் நினைத்தபடி தேவன் நடக்க வேண்டும் என்று தப்புக் கணக்குப் போடுகிறோம். இந்த மனிதர் கர்த்தரை நம்பியது தவறா? அல்லது, அவரது விசுவாசம் பொய்யா? இரண்டுமேயில்லை. அப்போ தவறு எங்கே? அன்று மாத்திரம் அந்த வெள்ளம் வற்றிப்போய், அல்லது அந்த வெள்ளத்திலும் இவர் உயிர் தப்பி இருந்தால் நான் விசுவாசித்தபடி கர்த்தர் என் உயிரைக் காத்தார் என்று சொல்லியிருக்கக் கூடும். ஆனால் படகோ கயிறோ வானூர்த்தியோ காப்பாற்ற வந்தபோதும், தான் எண்ணியபடி அற்புதமானவிதத்தில் எதுவும் நடக்காதபடியினாலே அவரால் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கர்த்தர் அற்புதம் செய்வார். அதற்காக அவர் நூதனமான தேவன் அல்ல. காக்கிறவர் காப்பார்; அதற்காக நாம் நினைத்த வழிகளில்தான் அவர் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்பது நியாயமா? நீ தண்ணீரையும் ஆறுகளையும் கடக்கநேர்ந்தாலும் நான் உன்னோடு இருப்பேன் என்று கர்த்தர் சொன்னது சத்தியம்தான். அதற்காக நான் நினைத்தபடிதான் அவர் என்னோடு இருக்கவேண்டும் என்று நினைப்பது நியாயமா?

அன்று இஸ்ரவேலருக்கு ஒரு சோதனை வந்தது. அவர்கள் தேவனைவிட்டு சோரம் போனார்கள். இதனால் கர்த்தர் அவர்களுக்கு ஒரு தண்டனையைக் கட்டளையிட்டார். யூதாவின் கடைசி ராஜாவாகிய சிதேக்கியா ராஜாவின் காலத்தில் கர்த்தர் எரேமியா தீர்க்கனூடாக யூதருக்கு வெளிப்படுத்தியது இதுதான். “பாபிலோன் யூதாவுக்கு எதிராக வரும், அவனை நானே எழுப்புவேன். அவன் வந்து நகரத்தை பாழாக்குவான். அவன் கைகளில் ராஜாவையும் மக்களையும் நானே ஒப்புக்கொடுப்பேன்” என்றுச் சொன்ன கர்த்தர் பாபிலோனிலே எழுபதுவருட சிறையிருப்பையும் அறிவித்தார். இது ஏற்றுக்கொள்ள கடினமாகத்தான் இருந்திருக்கும்.

ஆனால் கர்த்தரோ அவர்களுக்கு வரக்கூடிய அழிவிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியையும் அவர்கள் முன் வைத்தார். பாபிலோன் வரும்போது முரண்டுபிடிக்காமல், கர்த்தரால் நியமிக்கப்பட்ட தண்டனையும் சிட்சையுமாகிய அந்தச் சிறையிருப்புக்குள் மக்கள் இணங்கிப் போகவேண்டும் என்பதே அந்த வழி. அதைவிட்டு, நான் போகமாட்டேன், இதுதான் என் சொந்த பூமி, பாபிலோன் புறஜாதிகளின் தேசம் என்று சொல்லி முரண்டுபிடித்தால்…. “இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும்” (எரேமியா 21:9) இதுதான் கர்த்தருடைய வழி.

சொன்னபடியே நடந்ததா? ஆம் நடந்தது. 23 வருஷங்களாக எரேமியா கர்த்தருடைய வார்த்தையை உரைத்தும் மக்கள் அதைக் கேட்கவில்லை. கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, சிறையிருப்புக்குப் போனவர்கள் மாத்திரமே தப்பிப் பிழைத்தார்கள். தப்பி யோடிய சிதேக்கியாவும் அவனைச் சேர்ந்தவர்களும் அழிந்துபோனார்கள். கீழ்ப்படிந்தவர்களையோ, சிறையிருப்பின் காலம் முடிவுற்ற பின்னர், மீண்டும் எருசலேமுக்குக் கொண்டு வந்து பாபிலோன் இடித்துப்போட்ட தேவாலயத்தையும் கர்த்தர் மீண்டும் கட்டி எழுப்பி, அவர்களைக் குடியமர்த்தினார்.

“கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?” (எரேமியா 23:18).

இப்போது நம்முடைய பிரச்சனை என்ன என்பது விளங்குகிறதா? கர்த்தருடைய வழி என் வழியாயிருக்கவேண்டும் என்பதை சற்றேனும் நினையாமல், என் வழி கர்த்தருடைய வழி என்பதுபோல நாம் வாழுகிறோம். கர்த்தருடைய நினைவின்படி அல்ல; என் நினைவின்படி கர்த்தர் செயற்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது ஜெபங்களும் அதே பிரகாரம்தான் இருக்கிறது. நமது பிரச்சனைகளையும் முறையிட்டு, அதிலிருந்து தப்பிக்கொள்ளக்கூடிய வழியையும் கர்த்தருக்கு நாமே கற்பித்து, அதன்படி நடக்க கர்த்தரையே அழைக்கின்ற அளவுக்கு நாமேதான் கதாநாயகர்களாகிவிட எண்ணுகிறோம் என்பது தான் உண்மை.

நான் கேட்டேன், கர்த்தர் செய்தார் என்பது தான் அநேகருடைய சாட்சியாகவும் இருக்கிறது. ஆம், உண்மைதான், கர்த்தர் தமது பிள்ளைகளின் ஜெபத்தைக் கேட்பார், நாம் கேட்டபடியும் செய்வார். அது அவருடைய சுத்த கிருபை. மாறாக, நாம் சொல்ல அவர் கேட்க, அவர் நமது வேலையாள் அல்ல. அவர் கர்த்தர். அவர் ராஜரீகம் செய்கிறவர். அவரது வழிகள் உயர்ந்தவைகள். அவர் நம்மைத் தப்புவிப்பது சத்தியம்; ஆனால் அது நாம் நினைக்கும் வழியில் அல்ல. அவர் வழிகள் உயர்ந்தவைகள்.

“நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே” (எரேமியா 29:11). நாம் எதிர்பார்க்கும் முடிவை கர்த்தர் தருவார் என்று இந்த வார்த்தையைக் குறித்து தவறான விளக்கங்களை நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியாது. வசனத்தை உற்றுக் கவனியுங்கள். நாம் எதிர்பார்க்கும் முடிவு நல்லதுதான். சமாதானம் வேண்டும். தேசம் அமைதியாய் இருக்க வேண்டும். நமது குடும்பம் நன்றாயிருக்க வேண்டும். எல்லாமே நல்லதுதான். கர்த்தர் அதைச் செய்வார். அன்று யூதரும் அதைத்தான் விரும்பினார்கள். தாம் தமது சொந்த தேசத்தில் வாழவேண்டும் என்று அவர்கள் நினைத்ததில் தவறில்லை.

ஆனால் கர்த்தர் சொல்லுவது என்ன? நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை நான் தருவேன் என்கிறார். ஆனால், அந்த முடிவை உங்களுக்குத் தரும்படி, நீங்கள் நினைத்திருக்கிற நினைவுகள் அல்ல; ‘…நான் நினைத்திருக்கிற நினைவுகளை நான் அறிவேன்’ என்று கர்த்தர் சொல்லுகிறார். உங்கள் தேசத்திற்கு திரும்ப வருவீர்கள். ஆனால் எழுபதுவருட சிறையிருப்பின் பின்னர்தான். ஆலயத்தைக் கட்டி எழுப்புவீர்கள். இப்போது பாபிலோனின் சிறையிருப்புக்குப் போங்கள்; சிறைப்பட்டுப்போகும் தேசத்தில் சந்தோஷமாய் இருங்கள். ஏனெனில் அங்கேயும் நானே உங்களோடு இருப்பேன் என்கிறார் கர்த்தர். மேலும், சிறைப்பட்டுப் போயிருக்கிற பட்டணத்தின் சமாதானத்திற்காக விண்ணப்பம் பண்ணுங்கள், அதற்குச் சமாதானம் இருந்தால் உங்களுக்கும் சமாதானம் என்கிறார். இது விநோதமாக இல்லையா? ஆனாலும் கர்த்தருடைய வழி அதுதான்.

அந்த வார்த்தைக்கு ஏற்ப கடைசி வரைக்கும் உண்மையாயிருந்தவர்கள் சந்தோஷமாக தேசத்திற்கு திரும்பினார்களா இல்லையா? அந்த சிறையிருப்பின் காலத்தில் புறவினத்தாராகிய அந்த பாபிலோன் மக்களும் ராஜாக்களும் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று கண்டுகொண்டார்களா இல்லையா? கர்த்தரே ராஜரீகம் பண்ணுகிறவர் என்பதைக் கண்டு கொண்டார்களா இல்லையா? தேவனுடைய வல்லமையை ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அனுபவித்தானா இல்லையா?

கடந்த நாட்களில் எனது ஆலய ஆராதனையில் கொடுக்கப்பட்ட செய்தி என்னை வெகுவாக அசைத்துவிட்டது என்று சொல்லுவேன். ஆம், சீரிய நாட்டு இராணுவத் தளபதியாகிய நாகமான் என்ற ஒரு மனுஷனுடைய சரீர சுகத்திற்காக மாத்திரமல்ல, அவனுடைய ஆத்தும இரட்சிப்புக்காக, சீரிய நாட்டுக்கு கர்த்தர் அவன் மூலமாகவே ஜெயத்தைக் கொடுத்து, இஸ்ரவேலிலே ஒரு சிறு பெண்ணுக்கு சிறைவாசத்தையும், அவனுடைய வீட்டிலேயே அவளை வேலைக்காரியாகவும் அனுமதித்தாரே. அந்த நாகமான் இஸ்ரவேலின் தேவனே தேவன் என்று பகிரங்கமாக அறிக்கையிட்டான் அல்லவா! ஆம், கர்த்தருடைய வழிகளை அறியத் தக்கவன் யார்?

தேவபிள்ளையே, நீ தேவனுடைய பிள்ளைதானா? அப்படியானால் ஒன்றை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள். கர்த்தர் நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்றுக்கொண்டது பரலோகில் அவரோடு வாசம்பண்ணுவதற்காக மாத்திரம் அல்ல. இந்தப் பூவுலகில் அவருக்கென்று வாழுவதே நம்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற முக்கியமானதும் முதன்மையானதுமான நோக்கமாகும். ஆகவே, அவரிடத்தில் அன்பு கூருகிற நமக்கு சகலத்தையும் அவர் நன்மையாகவே மாற்றிக்கொடுப்பார். நமது பிரச்சனைகள் நீங்குவது நல்லதுதான். ஆனால் அதே சமயம் நம் பாடுகளுக்கூடாக இன்னொருவன் அல்லது இன்னொரு குடும்பம், அல்லது நமது தேசம் சந்திக்கப்படுமானால் அது எத்தனை பெரிய ஆனந்தம் தெரியுமா?

பிரச்சனைகளைக் கர்த்தரிடத்தில் முறையிடுவதில் தவறில்லை. வேறு யாரிடத்தில் போய் முறையிடுவது? ஆனால் வழிகளைக் கர்த்தரிடத்திலே விட்டுவிடுவோமாக. அவர் வழிகளிலே நமது விருப்பத்துக்கு மாறானவைகளும், திடுக்கிடும் காரியங்களும் சம்பவிக்கலாம்; சம்பவிக்கட்டும். தோற்றுப்போய்விட்டது போலவும் தெரியலாம். தெரியட்டும். எந்த சந்தர்ப்பத்திலும் நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.

அவர் காட்டும் வழி நமது இருதயத்துக்கு ஏற்றதாய் இருக்காவிட்டாலும், சரணாகதியாய் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது அவர் பெரிய காரியங்களை நிச்சயம் செய்வார். அவருடைய வழிகள் உயர்ந்தவைகள். இதை உணர்ந்தோமானால் நம்முடைய பல தடுமாற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உரிய பதில் கிடைத்து விடும். கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

சத்தியவசனம்