இரண்டு விதமான ஜெபம்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜூலை-ஆகஸ்டு 2013)

“அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம் பண்ணினான். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்” (லூக்.18:10-14).

தேவாலயத்திற்கு ஜெபிக்க சென்ற இரண்டு பேரில் ஒருவன் பரிசேயன். இந்த பரிசேயன் பக்திநெறி கோட்பாடுகளைக் கற்று சிறந்தவனாக இருந்தான். அவைகளைத் தவறாமல் கைக்கொள்ளுகிறவனாகவும் இருந்தான். இந்த பரிசேயர்கள், தங்களைமட்டுமே கர்த்தர் அழைத்திருக்கிறார் என்றும், தாங்கள்தான் பரிசுத்தவான்கள் என்றும், பக்திக்குரியவர்கள் என்றும் தைரியமாக பரைசாற்றுகிறவர்களாக இருந்தனர்.

தேவாலயத்திற்கு ஜெபிக்க வந்த மற்றொருவன் ஆயக்காரன். இந்த ஆயக்காரர்கள் மற்றவர்களால் பாவிகள் என்று எண்ணப்பட்டனர். இவர்கள் பாவிகள் என்று எண்ணப்படுகிறவர்களுக்கு அக்காலத்திலே பலவிதமான கருத்துக்கள் உண்டு. பாவம் செய்கிறவர்களையும் பாவிகள் என்று கருதினர். ரோமர்களிடத்தில் வேலை செய்தவர்களையும் அவர்களோடு பழகினவர்களையும் இந்த பக்திமான்கள் பாவிகள் என்று கருதினர். ஆயக்காரர்கள் ரோமர்களுக்காக யூதர்களின் மத்தியிலே வரி வசூலித்தபடியால், ஆயக்காரர்களை பரிசேயர்கள் பக்தியற்றவர்கள், பாவிகள் என்று கருதினார்கள்.

பரிசேயனும் இந்த ஆயக்காரனும் யூதர்களாயிருந்தனர். இரண்டுபேரும் தேவாலயத்திற்கு ஒரே தேவனை வணங்கும்படி செல்லுகிறார்கள். தேவாலயத்திற்கு சென்ற பரிசேயரின் நோக்கமும் ஒன்றுதான், ஆயக்காரனின் நோக்கமும் ஒன்றுதான். இரண்டு பேருமே ஜெபிப்பதற்காகத்தான் தேவாலயத்திற்கு சென்றனர்.

பரிசேயன் ஜெபிக்கும்போது, “தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்றான். இந்த பரிசேயன் தன்னை தேவசந்திதானத்திலே வைத்து தேவ நீதியின் அடிப்படையிலே தன்னை பரிசோதிக்காதபடி தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தான். அதினால்தான் “நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப் போலவும், இந்த ஆயக்காரனைப் போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்” என்றான்.

இரண்டாவதாக, இந்த பரிசேயன், வாரத்திலே இரண்டுதரம் உபவாசிக்கிறேன், ஒழுங்காக தசமபாகம் கொடுக்கிறேன் என்கிறான். தன் நற்கிரியைகளை ஆண்டவர் மறந்து விட்டாரோ என்று எண்ணி அவருக்கு ஞாபகப்படுத்துவதைப் போல சொல்லுகிறான். இதன் பொருள் என்னவென்றால், தனது நற்கிரியைகளினாலே அவரோடு உறவு வைப்பதற்கு தான் தகுதி படைத்தவன் என்கிற உரிமையைக் கோருகிறான். நற்கிரியைகளினாலே நாம் ஒருபோதும் மீட்கப்படுவதில்லை என்று வேதம் தெளிவாக நமக்குக் கூறுகிறது. அப்படியானால் நாம் எவ்வாறு மீட்கப்படுகிறோம்? இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் கிருபையினாலும் விசுவாசத்தினாலும் மட்டுமே நாம் மீட்கப்படுகிறோம். விசுவாசத்தினாலும், கிருபையினாலும் மீட்கப்பட்ட நாம் நற்கிரியைகளைச் செய்ய கடனாளிகளாயிருக்கிறோம் என்று வேதம் போதிக்கிறது. ஆனால் இந்த பரிசேயன், தனது நற்கிரியைகளை உரிமை பாராட்டி ஆண்டவரிடத்திலே ஆசீர்வாதம் பெற விரும்பினான்.

ஆனால் ஆயக்காரன் அப்படியல்ல, தன் கண்களை வானத்திற்கு ஏறெடுத்துப் பார்க்கத் துணியவில்லை. வானம் என்பது அவருடைய சிங்காசனமாகவும், பூமி அவருடைய பாதபடியாகவும் இருக்கிறது. அவன் வானத்திற்கு நேராக சிங்காசனத்தைப் பார்க்க துணியாதபடி, பூமிக்கு நேராக தன் தலையைத் தாழ்த்தி மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்று சொன்னான். தேவனுடைய அளவு கோலான தேவநீதி, தேவ பரிசுத்தத்திற்கு முன்பாக நிற்க தான் தகுதியற்றவன், தான் ஒரு பாவி என்பதை உணர்ந்தவனாக, “தேவனே! பாவியாகிய என் மேல் கிருபையாயிரும்” என்று அருமையான ஒரு சுருக்க ஜெபத்தைச் சொன்னான். இந்த ஆயக்காரன் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த பரிசேயனைப் பார்க்கவில்லை. பக்கத்திலிருந்த வேறு எவரையும் பார்க்கவில்லை. தன்னையும் தேவனையும் ஒப்பிட்டு அவன் மறுமதிப்பீடு செய்து பாவி என்று உணர்ந்தபோது, அவன் தன் மார்பிலே அடித்துக் கொண்டு ஜெபித்தான். பரிசேயனுடைய ஜெபத்தைக் கவனித்துப் பாருங்கள், அவன் தனக்குள்ளே ஜெபித்தான். ஆயக்காரனோ பாவ உணர்வடைந்தவனாய் தனது மார்பிலே அடித்துக் கொண்டு ஜெபித்தான். வேதம் சொல்லுகிறது, “ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டவனாய் சென்றான், பரிசேயன் எப்படி வந்தானோ அப்படியே சென்றான்”. இந்த உவமை யின் நடுமையக் கருத்து என்னவென்றால், தங்களை நீதிமான்கள் என்று எண்ணி மற்றவர்களை அற்பமாக எண்ணக் கூடாது என்பதாகும் (லூக்கா 18:9).

இதை வாசிக்கும் அருமையான சகோதரனே, சகோதரியே உன்னை நீதிமானாக நீ மதிப்பிடாதே. ஆண்டவர் உன்னை நீதிமான் என்று அழைக்கவேண்டும், அல்லது மற்றவர்களால் நீ நீதிமான் என்று அழைக்கப்பட வேண்டும். இந்த பரிசேயனோ தன்னை நீதிமான் என்று எண்ணினான், மற்றவர்களை அற்பமாக எண்ணினான். “தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” (லூக்கா 18:14). எவருக்குள்ளே தன்னை உயர்த்துகிற எண்ணம் வருகிறதோ, அப்பொழுது மற்றவர்களை அற்பமாக எண்ணுகிற மனப்பான்மை அவர்களுக்குள்ளே வருகிறது. நீங்கள் உங்களை உயர்த்திக்கொண்டு மற்றவர்களை அற்பமாக எண்ணுகிறீர்களா? வேதத்தை நீ முழுமையாக வாசித்தால் அற்பமாக எண்ணப் பட்டவர்களைக் குறித்து பார்க்கிறோம். பழைய ஏற்பாட்டிலே ராகேல் லேயாளை அற்பமாக எண்ணினாள். ஏன்? அவள் கூச்சப்பார்வை உள்ளவளாயிருந்தாள். அதே சமயத்திலே நீங்கள் வேதத்திலே பார்த்தால், பரிசேயன் ஆயக்காரனை அற்பமாக எண்ணினான். யாக்கோபு 2ஆம் அதிகாரத்திலே ஏழைகளை பணக்காரர்கள் அற்பமாக எண்ணியதைக் குறித்து யாக்கோபு குறிப்பிடுகிறார். சபையிலே பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்த ஐசுவரியவான்களை உயர்ந்த ஸ்தானத்திலே வைத்தார்கள். ஏழையைப் பார்த்து அங்கே நில் என்று சொன்னார்கள். இதை யாக்கோபு கண்டிக்கிறார். வஸ்திரத்தின் அடிப்படையிலும், பணத்தின் அடிப்படையிலும் அழகின் அடிப்படையிலும் நாம் பிறரை அற்பமாக எண்ணுகிறோம். ஆன்மீக அடிப்படையிலும்கூட பிறரை அற்பமாக எண்ணுவதுண்டு. இவ்வாறு பிறரை அற்பமாக எண்ணுவதின் மூலகாரணம் என்ன? நமக்குள் இருக்கிற பெருமையாகும். நம்மை நாமே உயர்வாக எண்ணுவதினால்தான் நாம் பிறரை அற்பமாக எண்ணுகிறோம். நம்மை தாழ்த்தினால் பிறரை அற்பமாக எண்ண மாட்டோம்.

இங்கே ஆயக்காரன் நீதிமானாக்கப்பட்டவனாக வீட்டிற்கு சென்றான். பரிசேயனோ எப்படி வந்தானோ அப்படியே சலனமில்லாமல், மாற்றமில்லாமல் எந்த வித்தியாசமுமில்லாமல் கடந்துபோனான். நீங்கள் தேவசந்நிதானத்திலே எப்படி பிரார்த்தனை செய்கிறீர்கள்? நமது ஜெபம் மற்றவர்களை குறைசொல்லுகிறதாக இருக்கிறதா? அல்லது ஜெபத்தில் மற்றவர்களை நம்மோடு ஒப்பிட்டு அளவீடு செய்கிறோமா? அல்லது மற்றவர்களைக் காட்டிலும் நாம் மிஞ்சின நீதிமான் என்று பெருமைப்படுத்துகிற ஜெபமாக இருக்கிறதா? நம்மைநாமே ஆராய்ந்துபார்ப்போம்.

நம்மை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணுகிற அந்த தவறை நம்மைவிட்டு எடுத்துப்போடும்படியாகவும் தாழ்மையாயிருக்க பெலன் தரும்படியாகவும் ஜெபிப்போம். அப்படி ஜெபிப்போமானால் இந்த உவமையை நமது வாழ்வில் நாம் நடைமுறைப் படுத்துகிறவர்களாய் இருப்போம்.

சத்தியவசனம்