தித்திக்கும் அமிழ்தம்!

Dr.உட்ரோ குரோல்
(செப்டம்பர்-அக்டோபர் 2013)

தலைப்பைப் படித்தவுடன் உங்களுடைய நாவில் நீர் ஊறுகிறதல்லவா? ஆம், இந்த இதழில் நாம் தேனிலும் மதுரமான தேவனை எவ்வாறு சுவைப்பது என்று அறிந்துகொள்ளப் போகிறோம். தேவனை ருசிப்பது என்பது சற்று வித்தியாசமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் சத்திய வேதாகமம் “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்று கூறுகிறது. தேவனை ருசிப்பது என்றால் என்ன? அவரை நம்முடைய நாவினால் சுவைக்க முடியுமா? என்ற சந்தேகம் நமக்கு எழுவது இயற்கையே. தேவனால் நமக்குத் தரப்பட்டுள்ள உணர்வுகளில் ருசி என்பது மிகவும் வல்லமையுடையதாகும். ருசி இல்லையேல் உணவை நம்மால் ரசித்து புசிக்க முடியாது. நம்முடைய உணவுப் பழக்கமும் ஏன் வாழ்க்கை கூட சிலருக்கு சுவையற்றதாகிவிடும்.

‘காப்பி’ என்ற சொல்லை கண்களால் பார்ப்பதும், அதன் மணத்தை நுகர்வதும், அதனை அருந்தி மகிழ்வதற்கு ஈடாகாதல்லவா? பரிசுத்த வேதாகமத்தில் சுவைக்கு தனி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தில் தேவன் அவர்களை வானத்து மன்னாவால் போஷித்தார். “இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது” (யாத்.16:31) என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

இஸ்ரவேலர்கள் அந்த மன்னாவைக் கண்களினால் காணும்பொழுது அது சிறியதாகவும், உருண்டையாகவும் வெண்மை நிறமாயும் இருக்கக் கண்டார்கள். அதனை ருசிக்கவும் செய்தார்கள். “ஆ! என்ன ருசி! இது தேனைப் போல இருக்கிறது” என்றனர். அது ‘வெண்மை நிறமாயிருந்தது’ என்பது பார்வையுடனும், ‘அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது’ என்பது சுவையுடனும் இணைந்துள்ளது. 40 ஆண்டுகளாக வெறும் அப்பத்தை மாத்திரம் சாப்பிடுவது கடினம் என்பதால் சர்வ ஞானியான தேவன் இந்த ருசியை அந்த மன்னாவில் வைத்தார்.

“அந்த மன்னா கொத்துமல்லி விதையம் மாத்திரமும், அதின் நிறம் முத்துப் போலவும் இருந்தது. ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக் கொண்டு வந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது” (எண்.11:7-8) என்றும் அம்மன்னா வர்ணிக்கப்பட்டுள்ளது. தேனும் ஒலிவ எண்ணெயும் எப்படி ஒத்துள்ளது என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அம்மன்னா இனிப்பு சுவையுடன் இருந்ததால்தான் அந்த மக்கள் அவ்வுணவை விரும்பினர் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

தேவனை அறிந்துகொள்ளும் உணர்வை அம்மக்களுக்கு ஊக்கப்படுத்த தேவன் சுவையை உபயோகித்தார். “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்” (சங்.34:8) என்ற வசனத்தில் காணப்படும் ருசி என்பதன் எபிரெயச் சொல் ‘சாப்பிட்டு அதன் விளைவாக அறிந்து கொள்வது’ என்ற பொருளைத் தருவதாகும். தேவனை அறிந்துகொள்ள எனது சுவை அரும்பினை எவ்வாறு பயன்படுத்துவது? நாம் தேவனை ருசிக்கவேண்டுமானால் அவர் நல்லவர், கிருபையுள்ளவர், இரக்கமுள்ளவர் என்ற அவரது தன்மைகளை அறிந்துகொள்ள வேண்டும். நமது உணர்வுகளின் மூலமாக அவரை நாம் நெருக்கமாக அறிந்துகொள்ளலாம்.

தித்திக்கும் அன்பர்
கர்த்தரை ருசிப்பதால் நான் எதனை அறிந்து கொள்ளுகிறேன்? முதலாவது அவருடைய அன்பை ருசிக்கிறேன். “ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்” (எரேமி.31:3) என்று ஆண்டவர் கூறுகின்றார். ஆனால் நான் தேவனை நினைக்கும் பொழுது, அவர் என்னை நேசிக்கிறார் என்பதை அறியும்பொழுது அவரை நான் சுவைத்து மகிழுகிறேன். இது முட்செடி, அக்கினி ஸ்தம்பம் மற்றும் மேகஸ்தம்பம் இவற்றைக் கண்களால் கண்டு அறிந்து கொள்வது போன்றோ அல்ல. நினைத்தாலே இனிக்கும் தன்மையுடையவர் அவர்.

பழைய ஏற்பாட்டு இஸ்ரவேல் மக்கள் மத்தியில் தேவன் மறைமுகமான வழிகளில் உலாவினார். ஆனால் இக்காலத்தில், நமது அறிவைப்பயன்படுத்தி தேவனை உணர்ந்து கொள்ள வேதபுத்தகம் நம்மை அழைக்கிறது. “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” (யோவா.3:16). ஆம், தேவனுடைய வார்த்தையை நான் வாசிக்கும்பொழுது அவரை நான் அறிந்துகொள்கிறேன்.

கண்களினால் அறிவதைவிட ருசியை உணருவதற்கு சற்று நேரம் அதிகமாகும். தேவன் தம்முடைய விருந்து பந்தியை சகலவிதமான உச்சித பதார்த்தங்களால் நமக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளார். ஆனால் நாமோ வேகமாக உள்ளே சென்று துரித உணவை மட்டும் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறிவிடுகிறோம். அவர் தரும் விருந்தை ரசித்து, ருசித்து உண்ண போதிய நேரத்தை நாம் எடுத்துக்கொள்ளுவதில்லை. இதனால் நாம் திருப்தியடையப் போவதில்லை. தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவர் உங்கள்மேல் கொண்டுள்ள அன்பினை ஆராய்ந்து, சுவைத்து அறிந்துகொள்ளுங்கள்.

“நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை” (1 யோவா.3:1) என்ற வசனத்திலிருந்து அவர் நம்மேல் வைத்துள்ள அன்பு விளங்குகிறது. தேவனுடைய கிரியையாகிய வானங்களையும், அவர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும், என்னைச் சுற்றியுள்ள மரங்களையும் நான் பார்க்கும்பொழுது அவரது படைப்பாற்றலையும், வல்லமையையும், இறையாண்மையையும், பிரசன்னத்தையும் அறிந்துகொள்ளுகிறேன். ஆனால் அவரது அன்பை அறிந்துகொள்ள அவரை ருசிக்க வேண்டும். இந்த ருசி அவரது வார்த்தையாகிய வேதபுத்தகத்தின் வழியாகவே வருகிறது. தேவனை சுவைக்க வேறுவழி இல்லை.

ஜார்ஜ் மத்தேசன் என்ற ஆங்கிலேயர் தமது 18ஆம் வயதில் பார்வைக் குறைவுக்கு ஆளானார். சிறிது சிறிதாக அவரது பார்வை மங்கிக் கொண்டே வந்தது. ஒருநாள் தனது பார்வை முற்றிலும் இழந்துவிடும் என்பதை அவர் தெளிவாக அறிந்துகொண்டார். இதனால் அவர் மணக்க இருந்த பெண், அவரைத் திருமணம் செய்ய விருப்பமில்லாமல், அவருடன் செய்திருந்த தனது திருமண நிச்சயத்தை முறித்துக்கொண்டார்.

1882ஆம் ஆண்டு ஜுன் மாதம் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள, ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரிலுள்ள ஒரு திருச்சபையின் குருமனையில் மத்தேசன் காத்துக்கொண்டிருந்தார். அவரது நினைவலைகள் பின்னோக்கி ஓடின; தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண், தன்னைவிட்டுப் பிரிந்து போனதையும், தன்னுடைய இதயத்தை அது சுக்குநூறாக்கி விட்டதையும் எண்ணினார். ஆனால் தன்னைவிட்டு நீங்காத தேவனையும், அவரது அன்பினையும், தமது இதயத்தை அவர் என்றுமே நொறுக்கமாட்டார் என்பதையும் நினைத்து ஓர் அழகிய கவிதையை அங்கே எழுதினார். அது புகழ்பெற்று இன்றும் திருச்சபைகளில் பாடப்படுகிறது.

“அன்பே விடாமல் சேர்த்துக்கொண்டீர்
சோர்ந்த என் நெஞ்சம் உம்மில் ஆறும்;
தந்தேன் என் ஜீவன் நீரே
தந்தீர் பிரவாக அன்பில் பாய்ந்தென்றும்
ஜீவாறாய்ப் பெருகும்”

இந்த தேவனின் அன்புக்கு ஈடான அன்பு இவ்வுலகில் வேறேதும் உண்டோ?

தித்திக்கும் நித்தியர்
சாக்லெட்டை நீங்கள் அதிகம் விரும்புவீர்கள் எனில் அடிக்கடி அதனை வாங்கி சாப்பிடுவீர்கள் அல்லவா? அதுபோல தேவனை சுவைக்கும்பொழுது, மேலும் மேலும் அவரை ருசிப்பதற்கு அவரிடம் திரும்பி வருவீர்கள். ஆனால் இன்று அநேகர் தேவனை ருசிப்பதற்கு அவருடைய தேனிலும் இனிமையான தேவ வார்த்தையை நாடி வருவது கிடையாது. தேவன் தம்மை சத்திய வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பதை அறியாததால் அநேகர் அவரைத் தவறான இடங்களில் தேடிச் செல்லுகின்றனர். ஏமாற்றமே அடைகின்றனர்.

வேதாகமத்தில், இன்றும் நம்முடன் வாழும் ஒரு ஜீவதேவனை நாம் சந்திக்கிறோம். என்னுடைய வாழ்வில் அவர் இருக்கிறார். நம்முடைய முன்னோர்களின் வாழ்விலும் அவர் வாழ்ந்தார், நமக்குப் பின்வரும் சந்ததிகளின் வாழ்விலும் அவர் இருப்பார்; ஏனெனில் அவர் காலங்களைக் கடந்தவர். அவர் நித்தியர்.

ஒவ்வொருமுறையும் நான் வேதாகமத்தை வாசிக்கும்பொழுது, அநாதியாய் என்றும் வாழும் தேவனை நான் ருசிக்கிறேன். “அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்” (உபா.33:27). நமது தேவன் காலங்களுக்கு அப்பால் வாழ்கிறவர். காலங்களின் துவக்கத்துக்கு முன்னரும், காலங்களின் முடிவுக்குப் பின்னரும் அவர் வாழ்வார்.

“நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1தீமோ.1:17) என்று பரிசுத்த பவுலடிகளார் தேவனை அழிவில்லாத இராஜனாக விவரிக்கிறார். தேவன் உன்னதத்தில் இராஜாவாக வீற்றிருக்கிறார். இயேசுகிறிஸ்துதான் இப் பூமியை ஆளும் இராஜாவாக வரப்போகிறார். இதை அறிந்த கிழக்கு தேசத்து ஞானிகள், ஏரோது இராஜாவின் அரண்மனைக்குச் சென்று “யூதருக்கு இராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?” என்று அவர்கள் விசாரித்தனர். யூதருக்கு இராஜாவாகப் போகும் குழந்தை எங்கே? என்று அவர்கள் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் இயேசுகிறிஸ்துவைப் பற்றியும், தேவன் நித்திய இராஜா என்பதைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர்.

வேதாகமத்தின் அனைத்து வசனங்களுமே தேவனுடைய நித்தியத்தையே சுட்டிக்காட்டுகிறது. அதில் 119ஆம் சங்கீதத்தின் 89ஆம் வசனம் “கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது” என்று விளக்குகிறது. தேவன் என்றென்றும் தமது வார்த்தையுடன் தொடர்புடையவர். ஒரு காலத்தில் தேவன் தமது வார்த்தையை நேரடியாக மனிதர்களிடம் பேசி தம்மை வெளிப்படுத்தினார். மற்றொரு காலத்தில் தேவனுடைய மனிதர்கள் பரிசுத்த ஆவியானவரால் ஏவப்பட்டு அவர்களுக்குக் கிடைத்த வெளிப்பாட்டினை எழுதினார்கள். என் காலங்கள் வரையறுக்கப்பட்டவை. எனவே என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தால் தேவன் நித்தியர் என்பதைக் காணமுடியாது. எனக்கு பிறந்த நாள் ஒன்று உண்டு; அதுபோலவே எனக்கு இறக்கும் நாளும் நிச்சயமாக ஒன்று உண்டு. ஆனால் அழியாத தேவனுடைய வார்த்தையில் நான் ‘தேவன் நித்தியர்’ என்பதைக் கண்டு கொண்டேன். வேறு எந்த இடத்திலும் கிடைக்காத, வேறு வழிகளிலும் கிடைக்காத தேவனை அறியும் உணர்வை நான் அவரது வார்த்தையான சத்திய வேதாகமத்தில் கண்டுகொண் டேன். அவருக்கே மகிமை உண்டாவதாக.

புதிய ஏற்பாட்டில் இயேசுகிறிஸ்து, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவா.5:24). “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” (யோவா.6:47). “என்னை விசுவாசித்தீர்களானால் நான் உங்களுடைய கடைசிநாள் மட்டும் கூடவருவேன்” என்று கூறவில்லை. ஆனால், “நீங்கள் என்னை விசுவாசித்தீர்கள் எனில் என்னுடைய நித்திய அன்பில் இருக்கும் திரளானவர்களுடைய கூட்டத்தில் சேர்ந்து கொள்ளுவீர்கள்” என்ற பொருள்படவே கூறினார்.

தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவரை நான் அறிந்துகொள்ளும்பொழுது அவரது அன்பையும், நித்திய தன்மையையும் நான் அறிந்து கொள்ளுகிறேன்.

தித்திக்கும் நம்பிக்கை
தேவனுடைய வார்த்தையின் மூலம் நான் அவரை அதிகமாக அறிந்துகொள்ளும்பொழுது அவரை இன்னும் அதிகமாக என்னால் நம்ப முடிகிறது. 2 சாமு.22:2,3இல் தாவீது தேவனைப் பற்றிப் பாடுகிறார்: “கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சண்ணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே”.

இச்சங்கீதத்தில் அவர் தேவனை பல உருவகங்களால் வர்ணிக்கிறார். ஒரே சொல்லால் விளக்கிச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. அவர் என் கோட்டை, என் கன்மலை, என் துருக்கம், என் கேடகம் என்றெல்லாம் அவரை அதிகமாய் ருசித்துக் கூறுகிறார். அவரைப் பாட, பாட நெஞ்சமெல்லாம் இனிக்கும் அல்லவா?

தேவனை நான் அதிகமாய் ருசிக்க, அவரைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிய, புரிந்து கொள்ள, அவரை நம்ப, அவரை நேசிக்க முடிகிறது. அவரை அதிகமாய் விரும்பும்பொழுது, அவரை நான் அதிகமாய் நேசிக்கிறேன் என்று தாவீது கூறுவதுபோல் உள்ளது. “தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்” (2சாமு.22:31).

எனவே, தேவனை ருசிப்பது என்பது அவரை நம்புவதாகும். தேவனுடைய வார்த்தைக்குள் சென்று, அவரை அறிந்து, அவரை ருசித்து மகிழும்போது அவரை நான் நம்புகிறேன். ருசிப்பது என்பது நம்புவதாகும்.

மேலும் ருசிப்பது என்பது என்னால் இயலாத காரியங்களை அவரிடம் ஒப்படைத்துவிடுவதாகும். “கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்து கொள்” (சங்.37:3) “உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்” (சங்.37:5). தேவனை நம்புங்கள்; அதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கும். உங்கள் வழிகளை அவருக்கு ஒப்புவியுங்கள்.

நம் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், எண்ணற்ற துயரங்கள் நேரிட்டாலும், தேவனை நாம் நம்பும்பொழுது, அவர் நம்முடன் அச்சூழலில் வருவார். அவர் நம்மோடு இருப்பது மிகச் சிறந்த பேறு ஆகும். தேவன் நமக்கென்று வைத்திருக்கும் திட்டங்களை நாம் அறியோம். நமக்கு மிகவும் பாதகமான சூழ்நிலை என்ற நிலைமையும் சில வேளைகளில் மிகச் சிறந்த ஆசீர்வாதங்களில் நிறைவுறும். ஆனால் அதற்கான தேவனுடைய நேரத்துக்கு நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில், “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிர.3:11) என்று வேத வாக்கியம் கூறுகிறது.

உங்களுடைய வாழ்வில் இன்று தேவன் செய்யும் காரியங்களை நீங்கள் அறியாவிட்டாலும், அவரை நம்புங்கள். ஏனெனில் நம்மால் புரிந்துகொள்ளாத காரியங்களை அவரிடம் ஒப்படைத்து விடுவதே நம்பிக்கை யாகும். நமக்கு நேரிடும் அனைத்தையும் நாம் அறிவோம் என்று அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனால் அவர் நம்மோடு இருப்பதாக உறுதி அளித்துள்ளார்.

தித்திக்கும் சாந்தசொரூபி
தேவனுடைய வார்த்தையின் மூலமாய் அவருடைய அன்பையும், நித்தியத்தையும் ருசித்து அவரை நம்புகிறோம். “அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களி டத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையு முள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை” (நெகே. 9:17). இங்கு நீடிய சாந்தம் என்பது தேவனுடைய அன்பை விளக்கும் ஒரு சொல்லாகும். நாம் தேவனி டத்தில் அன்புகொள்ளும்போது அவர் தம்முடைய தயையினால் தமது அன்பை நம்மிடம் வெளிப்படுத்துகிறார்.

சங்கீதம் 145:8: “கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்”.

யோவேல் 2:13: “அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார்”.

யோனா 4:2: “நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்”.

நாகூம் 1:3 – “கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்”.

இவ்வசனங்கள் யாவும் தேவனுடைய குணப் பண்புகளை விளக்குவதாய் உள்ளது. தேவன் நீடிய சாந்தமுள்ளவர், இரக்கமுள்ளவர், தயையுள்ளவர், நல்லவர் மற்றும் வல்லவர் என்பதை விளக்குகின்றன.

ருசிப்பது எப்படி?
இவ்வாறான தேவனை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? ஓர் ஐஸ்கிரீமை உண்பதுபோல அறிவது ஒரு முறை. உங்களுடைய நாவினால் அந்த ஐஸ்கிரீமை, சுவைத்து, அது வெண்ணிலா ருசியுடையது என்று உணர்ந்து கொள்ளுகிறீர்கள். அதனை பார்ப்பதாலோ, தொட்டு உணர்வதாலோ அதைப் பற்றி பிறர் கூறுவதைக் கேள்விப்படுவதாலோ அது வெண்ணிலா சுவை என்பதை நீங்கள் அறிய முடியாது. உங்களுடைய நாவினால் அதனை நீங்கள்தான் தனிப்பட்ட முறையில் ருசிக்க வேண்டும். அதேபோல தேவன் நமக்குத் தந்துள்ள உணர்வுகள் மூலமாக தேவனுடைய வார்த்தையை சுவைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவரைப் பற்றியும், அவருடைய இரக்கம், மன்னிப்பு மற்றும் அன்பு போன்ற குணங்களை நாம் அறிய முடியும். தேவனை அறிந்து அவருடைய அன்பை ருசித்தீர்கள் என்றால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

மோசே இஸ்ரவேல் மக்களை ஊக்கப்படுத்தும் பகுதி உபாகமம் 20ஆம் அதிகாரம் ஆகும். இஸ்ரவேல் மக்கள் தேவனிடம் அடிக்கடி முறுமுறுத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த வனாந்தர யாத்திரையில் பலமுறை சோர்ந்து போயினர். ஆனால் மோசே தேவனுக்கு வாயாக இருந்து அம்மக்களை உற்சாகப்படுத்தினார். “இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்ல வேண்டும்” (உபா.20:3,4).

செங்கடல் பிரிந்ததும் அதன் நடுவே உலர்ந்த தரையில் அவர்கள் நடந்து வந்ததும் அவர்களுடைய விசுவாசத்தை வளர்க்கவில்லை. தேவன் கொடுத்த மன்னாவும் அவர்களது விசுவாச வளர்ச்சிக்கு உதவவில்லை. அம் மன்னாவை அவர்கள் ருசித்து அது தேனைப் போன்ற சுவையை உடையதாக இருந்ததும் அதுவும் பயனளிக்கவில்லை.

நாமும்கூட இந்த இஸ்ரவேல் மக்களைப் போன்றே இருக்கிறோம். தேவனைப் பற்றியும் நம் வாழ்வில் அவர் வைத்துள்ள திட்டத்தையும் நாம் அறிந்துகொள்ளாததினால், தேவன் மூலமாக வரும் வெற்றியை உணருவதில்லை.

தேவன் தமது திட்டங்களை தமது வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தியுள்ளார். நாம் அதிகமதிகமாய் அதனை வாசிக்க, வாசிக்க தேவனை மாத்திரமல்ல, நம் வாழ்வில் அவர் நமக்காய் வைத்துள்ள அவரது திட்டங்களையும் அறிந்துகொள்ள முடியும். “உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்” என்று சங்கீதம் 119:103இல் சங்கீதக்காரர் கூறியுள்ளார்.

வேதபுத்தகத்தை நினைக்கும்பொழுது, நீங்கள் அதைத் தெளிதேன் என நினைப்பதுண்டா? அல்லது அது பல சட்டங்களையும் நியமங்களையும் உள்ளடக்கியது என்று கருதுகின்றீர்களா? ஆல்பர்ட் மங்கொயில் என்பவர் தமது நூலில் தேவனுடைய கரங்களிலிருந்து நியாயப்பிரமாணங்களை மோசே வாங்கியதை நினைவுகூறும் மத்தியகால யூத பண்டிகை ஒன்றினைப் பின்வருமாறு விளக்குகிறார். “ஒரு தகப்பன் தனது மகனை ஜெபத்துணியால் போர்த்தி, யூத ஆசிரியர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். அவ்வாசிரியர் அப்பையனை தனது மடியில் அமர்த்தி, எபிரெய எழுத்துக்களும், ஒரு வேதபகுதியும், ‘இந்த நியாயப்பிரமாணத்தை சுதந்தரித்துக் கொள்’ என்றும் எழுதியிருந்த எழுத்துப் பலகையில் தேனை ஊற்றி அவனிடம் கொடுத்தார். அப்பையன் அந்த தேனை நக்கி, சரீரப்பிரகாரமாக அந்த வார்த்தைகளை உட்கொண்டான்”.

ஆதிகாலத்து யூதர்களுக்கும் இதுபோன்றதொரு பாரம்பரியம் இருந்தது. ஒரு பையன் முதன்முறையாக நியாயப்பிரமாணங்களை வாசிக்கும்பொழுது அவன் உடன்படிக்கையின் ஒரு மகனாக மாறுகின்றான். ஓர் எழுத்துப்பலகையில் வேதபகுதிகளை எழுதி, அதில் தேனை ஊற்றி அவனை சுவைக்க வைப்பார்கள். தேவ வார்த்தையை அவன் உட்கொள்வதாக அது பொருள்படும்.

எரேமியாவும் இதைப்போன்று தேவ வசனத்தை உட்கொண்டார். துரித உணவுகளை எடுத்து பழகிவிட்ட நாம், நம்முடைய முன்னோர்களைப்போல வேதவசனத்தை பொறுமையாக, சுவைத்து உட்கொள்ளுவதில்லை. எனவேதான் நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பெலவீனர்களாகக் காணப்படுகிறோம். தேவனை வேதாகமத்தில் ருசிக்காது, தவறான இடங்களில் அவரைத் தேடுகிறோம். அனுபவங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்க்கிறோம். “என்னுடைய வார்த்தைகளில் என்னை உனக்கு வெளிப்படுத்தியுள்ளேன். நீ என்னுடைய வார்த்தையை உட்கொள்ள நேரமெடுத்து என்னை சுவைத்துப் பார்” என்று தேவன் நம்மிடம் கூறுகின்றார். நாமோ, “எனக்கு அதைச் செய்ய நேரமில்லை” என்று சொல்லுகிறோம். என்னே பரிதாபம்!

தேவனுடைய பாதத்தில் அமர்ந்து, அமைதி வேளையைக் கடைபிடித்து, அவருடைய வார்த்தையைத் தியானிக்கும்பொழுது, அது தேனைப் போன்று இனிமையாக இருக்கும். சிலவேளைகளில் அது சுவையற்றதாயும் இருக்கலாம். நான் சிறுவனாயிருந்தபொழுது, எனது தாயார் எனக்கும் என் சகோதரருக்கும் சில காய்கறிகளை சாப்பிட வைப்பார். “இதை நான் ஏன் சாப்பிடவேண்டும்? எனக்கு இது பிடிக்கவில்லை?” என்று நான் அவரிடம் கூறுவேன். அதற்கு அவர், “உனக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் உன் நன்மைக்காக இதை நீ சாப்பிட்டே ஆகவேண்டும்” என்று கட்டாயப்படுத்துவார். அந்த நேரத்தில் அது எனக்குப் பிடிக்காவிட்டாலும், நான் அதைச் சாப்பிட பழகிவிட்டேன். அனைத்து உணவுகளும் ஒரே சுவையுடையனவாக இருக்காது. எனக்கு கீரைகளைவிட சாக்லெட் சாப்பிடத்தான் பிடிக்கும். ஆனால் கீரையின் சத்து சாக்லெட்டில் கிடைக்காதல்லவா? ஆனால் நாம் சாக்லெட்டை மட்டுமே சாப்பிட்டு வாழலாம் என்று இக்காலத்தில் நினைக்கிறோம். தேவனைப் பற்றி மிகக் குறைவாகவே அறிந்துள்ளதால் திருச்சபை இன்று உலகத்தை தன்பக்கமாக ஈர்க்க முடியவில்லை. நம்மைச் சுற்றியுள்ள மக்களுக்கு தேவனைப் பற்றி விளக்கிக் கூற இயலவில்லை.

ருசித்துப் பாருங்கள்:
தேவனை அறிந்துகொள்ள அவரை ருசிக்க வேண்டும். “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுர முள்ளதுமாய் இருக்கிறது” (சங்.19:9,10).

வேத புத்தகத்தில் தேவனை நான் காண முடியும். அவ்வாறு கண்டுகொண்ட தேவனை நான் ருசிக்கப் போகிறேன். அவரைப் பற்றிய யாவையும், அவரது திட்டம், தீர்மானம் அவரது வாக்குறுதிகள் யாவையும் நான் அறிந்து கொள்ளப் போகிறேன். அது ஐஸ்கிரீமைப் போல இருந்தாலும், கீரையைப் போல இருந்தாலும் நான் அவரை ருசிக்கப் போகிறேன். அவ்வாறு நான் செய்தால் அது எனக்கு மிகச் சிறந்த நன்மையைக் கொண்டுவரும்.

ஆகவே நமது குடும்பங்களில் வேத புத்தகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதனை வாசிப்போமாக. நம்முடைய பிள்ளைகளையும் அவ்வசனத்தில் வளர்ப்போமாக. அவ்வாறு செய்தால் நீங்கள் ஒரு சிறந்த பெற்றோராய் இருப்பீர்கள். பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகளும் சிறந்த பெற்றோராய் வர இது ஒரு வாய்ப்பாக அமையும்.

எனவே பிரியமானவர்களே, தேவ வசனத்தை நாமும் உட்கொண்டு, நம்முடைய பிள்ளைகளுக்கும் ஊட்டிவிட்டு, நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதனை விருந்தாகக் கொடுக்க உறுதி எடுப்போம்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்