நீ விரும்பாத இடம்!

Dr.புஷ்பராஜ்
(செப்டம்பர்-அக்டோபர் 2013)

ஒருநாள் ஒரு சிறுமி ஒரு தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு ஒரு அழகான மலரைக் கண்டாள். அதன் அழகில் மயங்கினாள். ஆனால் அந்த மலர் செடியின் அடிப்பாகத்தைக் கவனித்தாள். என்னது இது? சாணியும் சகதியும் நிறைந்த இடத்தில் இந்தச் செடியை வைத்திருக்கிறார்களே! என்ன அழகான பூ, இது இந்த நாற்றமெடுக்கும் அசிங்கமான இடத்திலா இருப்பது? உடனே அவள் அந்தச் செடியை வேரோடு பிடுங்கி தண்ணீர்க்குழாயில் கொண்டுபோய் சேற்றையும், சாணியையும் கழுவினாள். சிறிது நேரத்தில் அந்த மலரும் செடியும் வாடிப்போனது.

அப்போது அங்குவந்த தோட்டக்காரன், அவள் கையில் இருந்த பூச்செடியைக் கண்டு பதறினான். அந்தச் சிறுமியை மிகக் கடுமையாக ஏசினான். ‘என் தோட்டத்திலேயே இந்தப் பூச்செடித்தான் மிகவும் அழகானது. இதைப் பிடுங்கி அழித்துவிட்டாயே!’ என்றான். அதற்கு அந்தச் சிறுமி, ‘அது சகதியிலும் நாற்றமெடுக்கின்ற சாணத்திலும் இருக்கின்றதே என்றுதான் அதைப் பிடுங்கி கழுவி வேறு இடத்தில் நட்டு வைக்க முயன்றேன்’ என்றாள். அதற்கு தோட்டக்காரன், அந்தப் பூச்செடிக்கு நான்தான் அந்த இடத்தை தெரிந்தெடுத்தேன். அங்கு சாணத்தை வைத்ததும் நான்தான். இப்படிப் பட்ட செடி எந்த மாதிரி இடத்திலும் நிலத்திலும் சூழ்நிலையிலும் நன்றாக வளரும். நல்ல பூக்களைக் கொடுக்கும் என்று எனக்குத்தான் தெரியும். ‘எந்தச் செடி எங்கு வைத்தால் நல்லது என்பதை நான் அறிவேன். அர்த்தமில்லாமல், நோக்கமில்லாமல் இப்படிச் செய்யமாட்டேன்’ என்றான். இச் சம்பவத்தை ஒரு மாதாந்திரப் பத்திரிக்கையில் வாசித்தேன்.

சிலசமயம் சிலர் தங்கள் நிலையைக் குறித்து குறைகள் கூறி முணுமுணுக்கிறார்கள். கர்த்தர் நம்மை ஒரு நோக்கத்தோடு ஒவ்வொரு இடத்தில் வைக்கிறார். ஒருவேளை அது உனக்குப் பிடிக்காத இடமாக இருக்கலாம். திருப்தியில்லாத இடமாகவும்கூட இருக்கலாம். அல்லது உனக்கு இஷ்டமில்லாத இடத்தில் உனக்கு இடமாற்றம் கிடைத்திருக்கலாம். நீ மனந்திரும்பின அனுபவமுள்ள கர்த்தருடைய பிள்ளையாக இருந்தால் உன்னை அங்கு கர்த்தர் கொண்டுபோனதில் கர்த்தர் எதையோ எதிர்பார்க்கிறார் என்பதை உணர்ந்து கொள்வாய். உன்னை அங்கு வைத்திருப்பதற்கு தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு.

திருமணத்திற்கு முன் உனக்கு வர வேண்டிய கணவன்-மனைவி இப்படியிருக்கவேண்டும், இப்படிப்பட்ட வேலையில், நல்ல பதவியில் இருக்கவேண்டும். அழகாக, நல்ல நிறமாக, நல்ல உயர்ந்த படிப்போடு இருக்கவேண்டும் என்று எப்படியெல்லாமோ மனதில் நீ கற்பனை செய்து வைத்திருப்பாய். ஆனால், வாழ்க்கைபட்டதோ நீ எதிர்பார்த்ததற்கு நேர்மாறானாதாக மாறி அமைந்துவிட்டது அல்லவா! சோர்ந்துபோகாதே! நமது கலாச்சாரச் சூழ்நிலையில் இப்படியாக மனம் வெதும்பிப் போனவர்கள் ஏராளமானவர்கள். அவர்கள் அனைவருக்கும் இஷ்டப்பட்ட வாழ்க்கை அமைந்துவிடவில்லை. அப்படியே இஷ்டப்பட்ட வேலை அல்லது தொழில் கிடைத்தும் விடுவதில்லை. இப்போதும் இரட்சிக்கப்பட்ட அனுபவத்தைக்கொண்ட தேவபிள்ளைகளுக்கே நான் கூறுகின்ற இவ் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். அப்படிப்பட்டவர்கள் மாத்திரமே எந்தச் சூழ் நிலையிலும் தேவசித்தத்திற்கு தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.

“என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” (பிலிப்.4:11-13).

மேலும், “அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்” என புலம்பல் 3:28 கூறுகின்றது. தாவீதும்கூட இவ்விதமாக கூறுகிறார்: “உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்” (சங்.143:10). ‘எனக்கென்று நான் கற்பனை செய்து வைத்தது, நான் ஆசைபட்டது என ஒன்றுமே இனி எனக்கு வேண்டாம். உமது இஷ்டம், உமது சித்தம், நீர் விரும்புகின்றபடியாக என் வாழ்க்கை அமையட்டும். காரணம் நீர் நல்லவர்; ஆகையால் நீர் எனக்கு மிக நல்லதையே செய்வீர், நல்லதையே கொடுப்பீர்’ என்று கர்த்தர்மேல் நம்பிக்கையை வைத்தவர்களாக நம்மை நாமே தேற்றிக்கொண்டு நமது வாழ்க்கையை கர்த்தருக்கென்று வாழ்ந்து, நம் வாழ்க்கை மூலம் கர்த்தரை சந்தோஷப்படுத்துகிறவர்களாயிருக்க வேண்டும்.

நம்மைப் பற்றியும் நமது அழகைப் பற்றியும், நம் படிப்பைப் பற்றியும், நம் தாலந்துகளைப் பற்றியும், நம் குடும்பப் பெருமைகளைப் பற்றியும் மிக அதிகமாக சிந்திப்பதால்தான், நமது எதிர்பார்ப்பும் மிகப் பெரிதாக இருக்கின்றது. நாம் கற்பனை எல்லையைத் தாண்டி விடுகின்றோம். இவ்விதமான அதிக எதிர்பார்ப்பானது மனநோய்க்கு காரணமாக அமைகின்றது என்கின்றனர் மனோதத்துவர்கள். அதனால்தான் பலர், “எல்லாமே போதுமானதாக இருந்தும் வாழ்க்கையோ எனக்குக் கசக்கின்றது” என்கிறார்கள். தங்கள் வாழ்வில் சிறிதும் திருப்தியில்லையே என்றும் புலம்புகின்றார்கள்.

ஆனால், வேதம் நமக்குப் போதிப்பது என்ன? “உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்” (எபி.13:5). ஆம், எனக்கு இது போதும் என்று எண்ணுகிறவர்கள் பண விஷயத்திலாகட்டும், குடும்ப விஷயத்திலாகட்டும், வேலை, தொழில் என்று எதிலாகட்டும் எனக்கு இதுபோதும் என்று எண்ணுபவர்கள் மட்டுமே எல்லா நிலையிலும் தேவனை மன மாற உள்ளத்திலிருந்து துதிக்க முடியும். எல்லா நிலையிலும் மனோரம்மியமாக இருக்கமுடியும்.

கர்த்தர் உன்னை ஒரு நோக்கமில்லாமல் எந்தவொரு மோசமான இடத்திலும் வைக்கவில்லை. அவருக்கு தெரியாத ஒரு விஷயமும் உன் வாழ்க்கையில் நடப்பதுமில்லை. அந்த பூச்செடி உரிய இடத்திலே வைக்கப்பட்டது போல நாற்றமெடுத்த சாணம்தான் உன்னைச் சுற்றிலும் காணப்படுகின்றது என்றாலும், உன்னைப் பற்றிய தேவனின் எதிர்பார்ப்பில் ‘நீ அங்கு தான் இருக்கவேண்டும்’ என்று உன்னைப் படைத்தவர் எண்ணுகின்றார். என்ன செய்ய?

உன்னிலிருந்து தோட்டக்காரன் எதையோ எதிர்பார்க்கிறான். நிச்சயம் அவன் எதிர்பார்ப்பு மிகச்சிறப்பானதாகத்தான் இருக்கும். உன்னிலிருந்து வெளிவரும் பலன் பலருக்கு சந்தோஷத்தையும், பலருடைய கண்களுக்கு குளிர்ச்சியையும், ஆறுதலையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கக்கூடியதாக இருக்கலாம். அதோடு தோட்டக்காரனுக்கே அது அதிக சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். அந்தச் சாணத்தின் சகதியின் காரணமாக உன்னில் உண்டான பலன் எங்கோ உன்னை உயர்ந்த இடத்திற்குக் கொண்டுபோகப்படுவதாக இருக்கலாம்.

“அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை” (புலம்.3:33). ஏதோ ஒரு நோக்கம் அவருக்குண்டு. சிலவற்றை நமக்கு அவர் தெரிவிப்பார். சிலவற்றை நமக்கு அறிவிக்காமலேயே இருக்கும்படி பார்த்துக்கொள்வார். ஆனால் நாமோ அது ஏன் என்று கேட்கக்கூடாது. “குயவன் கையில் உள்ள களிமண் ஏன் என்னை இப்படி வனைந்தாய் என்று கேள்வி கேட்க அதிகாரம் கொடுக்கப்படவில்லை” (ரோம.9:20). ஆம், கர்த்தரின் கரத்தில்தான் நீங்களும் நானும் இருக்கிறோம்!

“பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்டுத்துகிற வரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின் மேல் உலாவுகிறவருமாயிருக்கின்ற கர்த்தர்” (ஆமோஸ்4:13) மீது நம்பிக்கை வைத்தவர்களாக வாழ்வோமாக!

தேற்றரவாளனாகிய ஆவியானவர்தாமே உங்களை ஆற்றி, தேற்றி பெலப்படுத்தி கர்த்தரின் வருகைமட்டும் அல்லது மரணம் வரைக்கும் வழுவாதபடி நம்மைக் காப்பாராக. ஆமென்!

சத்தியவசனம்