கோடித்துண்டும் பழைய வஸ்திரமும்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
இயேசுகிறிஸ்து விளம்பின உவமை
(செப்டம்பர்-அக்டோபர் 2013)

“ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்க வேண்டும் என்றார்” (மாற்கு 2: 21,22).

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினிடத்திலே பரிசேயர்கள், உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். இந்த கேள்விக்கு ஆண்டவர் நேரடியாக பதில் சொல்லாமல் அவர்களுக்கு இந்த உவமையை பதிலாகச் சொன்னார். இந்த உவமையில் இரண்டுவிதமான காரியத்தை இயேசு குறிப்பிட்டார். ஒன்று பழைய வஸ்திரத்தோடு புதிய வஸ்திரத்தை இணைப்பதும், இன்னொன்று புதிய இரசத்தை பழைய துருத்தியில் வார்ப்பதும் இயலாது என்பதாகும். இயேசு கிறிஸ்து கூறிய இந்த உவமையின் பின்னணி யில் நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று உண்டு. யூத மார்க்கத்திலே உபவாசம் என்பது இன்றியமையாததாகும்.

யூதர் குடும்பங்களில் திருமண வைபவத்தின்போது உபவாசிப்பது தவிர்க்கப்பட்டது. ஏனென்றால், மணவாளன் இருக்கும்போது அந்தச் சந்தோஷமான சூழ்நிலையில் மணவாளனின் தோழர்கள் உபவாசிக்கவேண்டிய அவசியமில்லை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இயேசுகிறிஸ்துவிடம், உம்முடைய சீஷர் உபவாசியாதிருக்கிறது என்னவென்று கேட்ட பரிசேயரிடத்தில், தன்னை மணவாளனாகவும் தன்னுடைய சீஷர்களை மணவாளனின் தோழர்களாகவும் சித்தரித்துக்காட்டினார். “மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்” (மாற்கு 2:19,20) என்றார். இந்த சம்பாஷணையின்போதுதான் இயேசு இந்த உவமையைக் கூறுகிறார்.

ஒரு பழைய வஸ்திரமானது கந்தலாயிருந்தது. அது அநேகமுறை பயன்படுத்தப்பட்டதாயிருந்தது. அதின் கிழிசல்களையும் துவாரங்களையும் சரிபண்ணுவதற்கு ஒரு புதிய வஸ்திரத்தின் சிறு பாகத்தை எடுத்து அதோடு இணைத்து வைத்தனர். என்ன நடந்தது? அதைப் பயன்படுத்தும்போதும், சலவை செய்யும் போதும் இணைக்கப்பட்ட புதிய வஸ்திரத்தின் துண்டு பழைய வஸ்திரத்தினுடைய துவாரங்களை மேலும் கிழித்தது. அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனுடைய பொருள் என்ன? கிழிந்ததும் கந்தலுமான பழைய வஸ்திரத்தை தூக்கி எறிந்துவிட்டு, புதிய வஸ்திரத் துண்டை அல்ல, புதிய வஸ்திரத்தின் முழுமையையும் நாம் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த உவமையின் வாயிலாக நமக்கு இயேசு எதைப் போதிக்கிறார் என்பதைப் பார்ப்போம். யூதமார்க்கக் கோட்பாடுகளோடு கிறிஸ்துவின் போதனைகளை இணைக்கக்கூடாது. யூதமார்க்கத்திலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது கிறிஸ்துவின் போதனைக்கு உன்னை முழுமையாக அர்ப்பணிக்கவேண்டும் என வலியுறுத்தினார். இல்லாவிடில் பழைய வஸ்திரத்தோடு இணைக்கப்பட்ட புதிய வஸ்திரம் எவ்வாறு பழையதை மேலும் பிய்த்துக் கந்தலாக்கி விடுவதைப் போல நமது வாழ்க்கையும் ஆகும் என யூத ஜனங்களை எச்சரித்தார். இதைப்போன்றே அவரை இரட்சகராய் ஏற்றுக்கொண்ட நம்மையும் அவர் எச்சரிக்கிறார். நாம் முன்பு ஆண்டவரை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தோம்.

ஆண்டவருடைய நற்செய்தி நமக்கு அறிவிக்கப்பட்டபோது அவருடைய கிருபை நம்மைச் சந்தித்தது. நாம் ஆண்டவரை ஏற்றுக்கொண்டவுடனே நமது பழைய வழிகளையும் நமது பழைய வாழ்க்கை முறைமைகளையும் விட்டுவிட்டு ஆண்டவரின் ஈவினாலே புதிய சிருஷ்டியாக புதிய வாழ்க்கை வாழ்வதற்கு ஆண்டவர் வாய்ப்பையும் கிருபையையும் தந்தார். ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நமது பழைய வாழ்க்கையின் அவருக்குப் பிரியமில்லாத சில காரியங்களையும் பழக்கங்களையும் இந்த புதிய மார்க்கத்தோடு இணைக்க முற்படுகிறோம். இதினால் நாம் ஒரு பூரண இரட்சிப்பையும் சந்தோஷத்தையும் அடைய முடியாதபடி வெற்றியில்லாத வாழ்விற்குத் தள்ளப்படுகிறோம். எனவே நாம் நமது பழைய வாழ்க்கையைத் தள்ளிவிட்டு கிறிஸ்துவின் போதனையோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். “ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின”(2கொரி. 5:17) என்று பவுல் கூறுகிறார்.

இன்றைய காலகட்டத்தில் நம்முடைய நாகரீகத்திலும், ஆடை அலங்காரத்திலும், வாழ்க்கை முறையிலும், பிள்ளைகளை வளர்ப்பதிலும், விவசாயத்திலும் பழைய முறைமைகளை விட்டுவிட்டு புதிய முறைகளை கையாள்கிறோம். ஆனால் கிறிஸ்தவ பக்தி வாழ்க்கையிலோ நாம் விட்டுவந்த நமது பழைய மார்க்கத்தின் வழிபாட்டிலும் பழைய நம்பிக்கைகளிலும் கோட்பாடுகளிலும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு பழைய வாழ்க்கையோடு தொடர்ந்து நாம் கிறிஸ்துவோடு வாழ்வது என்பது பீறலை உண்டுபண்ணும், அது வெற்றியை உண்டுபண்ணாமல் தோல்வியைக் கொண்டுவருவதோடு சந்தோஷமில்லாத ஒரு நிலையை அடைகிறோம்.

ஒரு வாலிபனை நான் அறிவேன். அவன் ஆண்டவரின் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவனாக மாறினான். ஆனால் பழைய மார்க்கத்தின் நெறிகளையும் பழைய பழக்கவழக்கங்களையும் விடாமல் மறைமுகமாக அவைகளைக் கைக்கொண்டு கிறிஸ்தவ வழிபாடுகளிலும் கலந்துகொண்டு வந்தான். என்ன நடந்தது தெரியுமா? அவனது வாழ்க்கையிலே பூரண நிச்சயமில்லை, பூரண சமாதானமில்லை, பூரண வெற்றியுள்ள வாழ்க்கையில்லை, ஒருநாளிலே அவன் தனது ஆவிக்குரிய வாழ்விலே தோல்வி அடைந்தவனாய் வழுவிப்போனான்.

அன்பானவர்களே, நமது நிலை எப்படியிருக்கிறது என்று சிந்தித்துப்பார்ப்போமா? “நமது பழைய வாழ்க்கையின் அனுபவங்களை நாம் தூக்கியெறிய வேண்டும் என்று ஓரிடத்தில் நான் பிரசங்கித்தேன். அப்பொழுது ஒரு வாலிபன் என்னிடம் வந்து, அப்படியென்றால் நான் முன்பு பெற்ற எனது வேலையை விட்டுவிடவேண்டுமா எனக் கேட்டான். அதற்கு அவனிடம், நீ செய்வது நலமான வேலையாய் இருக்குமானால் அதை நீ விட்டுவிட வேண்டியதில்லை. ஆனால் உன் பழைய வாழ்க்கையையும் சுபாவத்தையும் நீ கட்டாயம் விட்டுவிட வேண்டும் என்று விளக்கமளித்தேன்”.

யூத சமயம் என்பது பழைய வஸ்திரம், கிறிஸ்துவின் வழிநெறி என்பது புதிய வஸ்திரம். அநேக நம்பிக்கையிலே இரண்டுக்கும் அநேக வித்தியாசமுண்டு. என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசு போதித்தார். யூதர்களுக்கு இது ஒரு மாறுபட்ட சிந்தனையாகக் காணப்பட்டது. நியாயப் பிரமாணத்தைக் கைக்கொள்வதின் மூலமாகவும், நற்கிரியைகளின் மூலமாகவும் நாம் தேவனுக்குப் பிரியமாய் இருக்கிறோம் என்பது அவர்களது கோட்பாடாயிருந்தது. ஆனால் கிறிஸ்துவின் போதனையோ கிருபையினாலும் விசுவாசத்தினாலும் நாம் ஆண்டவரிடத்தில் சேரலாம் எனப் போதிக்கிறது. சில சமயங்களில் நாமும் சில சடங்காசாரங்களைக் கைக்கொள்வதினால் ஆண்டவரைப் பிரியப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறோம். இது பழைய மார்க்கத்தின் பிரதிபலிப்பாகும். ஆனால் இயேசு கூறினார்: பழையதோடு புதியதை சேர்க்காதே. எனவே பழையவைகளை முற்றிலுமாக விட்டுவிடுவோம். ஆண்டவர் காட்டுகிற புதிய வழிக்குள் கடந்துவருவோம்.

“மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்” (எபே.4:24).

சத்தியவசனம்