நினைவூட்டும் கற்களின் நிதர்சனம்

எம்.எஸ்.வசந்தகுமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2013)
(சென்ற இதழின் தொடர்ச்சி)

4. நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்ததை நினைவில் வைத்திருப்பதற்காக இரண்டு இடங்களில் பன்னிரண்டு கற்கள் வைக்கப்பட்டுள்ளன. யோர்தானின் மேற்குக் கரையில் கில்கால் என்னுமிடத்தில மாத்திரமல்ல, யோர்தான் நதியின் நடுவிலும் இக்கற்கள் வைக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வதிகாரத்தில் இரண்டு ஞாபகச் சின்னங்கள் உள்ளன. 9ஆம் வசனத்தில் ஆற்றின் நடுவில் நாட்டப்பட்ட கற்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

“யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது” (யோசு.4:9).

யோசுவா யோர்தான் நதியின் நடுவில் நாட்டிய கற்களைப் பற்றி வேத ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் உள்ளன. ஆரம்பத்தில் யோசுவா யோர்தான் நதியில் நாட்டிய கற்களையே பன்னிருவரும் எடுத்துக்கொண்டு வந்தனர் என்றும், இதனால் ஒரேயொரு நினைவுச்சின்னம் மட்டுமே ஏற்படுத்தப்பட்டது என்றும் சிலர் கருதுகின்றனர். இதனால், ஆசாரியர்கள் நிற்பதற்காக ஆற்றில் போடப்பட்ட மேடையே ஆற்றில் நாட்டப்பட்ட கற்கள் என்று சிலர் கூறுகின்றனர். சில ஆராய்ச்சியாளர்களுக்கு மூலப்பிரதியில் இவ்வசனம் குழப்பத்தை ஏற்படுத்துவதாயுள்ளது. இதனால், ஆற்றிலிருந்து கற்கள் எடுக்கப்பட்டதைப் பற்றியே இவ்வசனம் கூறவேண்டும் என்று வாதிடுகின்றனர். சிலர் 9 ஆம் வசனம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஆனால் இவை ஆராய்ச்சியாளர்களின் யூகங்களே தவிர உண்மை அல்ல. பன்னிருவரும் ஆற்றில் கற்களை எடுத்த நேரத்திலேயே யோசுவா அவ்விடத்தில் பன்னிரு கற்களை நாட்டியுள்ளான். இவை இஸ்ரவேல் மக்கள் ஆற்றைக் கடப்பதற்கு முன்பு யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியிலிருந்து கொண்டு வரப்பட்டவை என்று கருதப்படுகின்றது.

யோர்தான் நதியில் நாட்டப்பட்ட கற்களைப் பற்றி யோசுவா விளக்கம் எதுவும் கொடுக்காததினால், புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் பழைய ஏற்பாட்டை வியாக்கியானம் செய்யும் முறையின்படியே இக்கற்கள் எதற்காக நதியில் வைக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில், “கில்காலில் வைக்கப்பட்ட கற்களைப் போலல்லாது ஆற்றில் நாட்டப்பட்டவைகளுக்கு வித்தியாசமான காரணமும் அர்த்தமும் உள்ளன”. புதிய ஏற்பாட்டு விளக்கத்தின்படி இஸ்ரவேல் மக்கள் செங்கடலைக் கடந்து சென்றது அவர்கள் பெற்ற ஞானஸ்நானத்திற்கான அடையாளமாய் உள்ளது (1கொரி.10:1,2). செங்கடலைக் கடந்த இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் மரணமடைந்திட, வனாந்தரத்தில் பிறந்த இஸ்ரவேலரே யோர்தான் நதியைக் கடந்ததினால், இது அவர்களுடைய பிதாக்கள் செங்கடலைக் கடந்ததற்கு ஒப்பான அவர்களுடைய ஞானஸ்நானத்திற்கான அடையாளமாய் உள்ளது. ஞானஸ்நானமானது பாவத்திற்கு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு புதிய ஜீவனுக்குள்ளான உயிர்த்தெழுதலுக்கான அடையாளமாய் இருப்பதினால் (ரோம.6:3-5, கொலோ.2:12), யோர்தானில் நாட்டப்பட்டு, தண்ணீர் மறுபடியும் சேர்ந்த பின்னர் தண்ணீருக்குள் மறைந்துபோன கற்கள் இஸ்ரவேல் மக்களுடைய பழைய பாவ வாழ்க்கை மரித்து அடக்கம் பண்ணப்பட்டதை நினைவூட்டும் அடையாளமாய் உள்ளது.

அதாவது, அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் எடுத்துக்கொண்டு வந்த கற்களை ஆற்றில் வைத்துவிட்டுச் சென்றது, அவர்கள் தங்களுடைய பழைய பாவ வாழ்க்கையை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டு, புதிய வாழ்வுக்குள்ளாக வாக்குத்தத்த பூமிக்குள் சென்றுள்ளதை அறியத் தருகின்றது. இதனால், பிற்காலத்தில் அவர்கள் யோர்தான் நதியைப் பார்க்கும்போது தங்களுடைய பாவ வாழ்க்கை மரித்துவிட்டது என்பதை அறிந்தவர்களாகத் தங்களுடைய பாவச் செயல்களை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதை அவர்களுக்கு சுட்டிக் காட்டும் அடையாளச் சின்னமாக தண்ணீருக்குள் மறைந்துபோன கற்கள் உள்ளன.

இக்கற்கள் “இந்நாள்வரைக்கும் இருக்கிறது” என்னும் குறிப்பு, யோசுவாவின் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இக்கற்கள் அவ்விடத்தில் இருந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வாக்கியமாகும். உண்மையில், “குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் உண்மையில் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரமாகவே அக்காலத்தில் இத்தகைய சொற்பிரயோகங்கள் உபயோகிக்கப் பட்டன”.

அது மாத்திரமல்ல, “குறிப்பிட்ட இடத்தைப் போய் பார்க்கத் தூண்டும் அறிவிப்பாக இது உள்ளது”. இதைப் போலவே தேவன் நம்முடைய வாழ்க்கையில் செய்த காரியங்களை நினைவூட்டுவதற்காக நாம் வைத்திருப்பவைகள், மற்றவர்கள் தேவன் நம்முடைய வாழ்வில் செய்தவற்றை அறிந்து கொள்வதற்கான ஆவலை ஏற்படுத்துகின்ற விதத்தில் இருக்கவேண்டும்.

சத்தியவசனம்