மேய்ப்பர்களும் பரமசேனையின் துதிபாடலும்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(நவம்பர்-டிசம்பர் 2013)

அன்பானவர்களே! சத்தியவசனம் வாசகர்களுக்கு எனது வாழ்த்துக்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் பவனியும், கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்களும் நினைவில் நிற்பவைகளாகும். நமது ஆண்டவராகிய இயேசு பிறக்கும்போது தேவதூதர்களின் சேனை இவ்வாறு துதிபாடினார்கள். “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக” (லூக்.2:14).

இந்த தூதர்களின் துதியானது பூரணமான தேவனுடைய வாக்குத் தத்தமாகும். இந்தச் செய்தியை இரண்டு பிரிவுகளாக தியானிக்கப் போகிறோம். மேய்ப்பர்களைப் பற்றியும் தூதர்களின் துதிபாடல்களைப் பற்றியும் அறியப்போகிறோம். கிறிஸ்து பிறந்த அன்று தேவதூதன் மேய்ப்பர்களுக்கு தரிசனமாகி பிறப்பின் செய்தியையும் அவரின் பிறப்பிடத்தையும், நோக்கத்தையும் கூறுகின்றான். அப்போது தேவதூதர்களின் பாடலின் வாக்கியத்தைத்தான் லூக்.2:14இல் காண்கிறோம்.

1. மேய்ப்பர்கள்

மேய்ப்பர்களின் பணி கடினமான பணியாகும். இப்பணி செய்வோர் இரவும்பகலும் விழித்து இருக்கவேண்டும். இது மனிதர்களால் அற்பமாய் எண்ணப்பட்டப் பணியாகும். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை அற்பமாய் எண்ணினார்கள் (ஆதி.46:34).

அ. பாக்கியம் பெற்றவர்கள்
இந்த மேய்ப்பர்களுக்கு கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி தூதர்களால் அறிவிக்கப்பட்டது. அந்நாட்களில் தேவதூதர்களைக் காணவும், தேவ வெளிப்பாட்டைக் காணவும் ஜனங்கள் காத்திருந்தனர். கர்த்தரின் வாக்கும் தரிசனமும் ஜனங்களுக்கு கிடைப்பது அரிதாய் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நினையாத வேளையில், எதிர்பாராத நிகழ்ச்சியாக மேய்ப்பர்களுக்கு தூதனின் செய்தியும், தூதர்களின் பாடலும், தெய்வீக குழந்தையைப் பார்க்கும் சிலாக்கியமும் இவர்களுக்கு கிட்டியது. பாக்கியங்கள் பெற்ற பாக்கியவான்கள் என்றே இவர்களைக் கூறலாம். கிறிஸ்துவின் பிறப்பு கிழக்கில் இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு கூறப்பட்டது. பின்பு மேய்ப்பர்களுக்குக் கூறப்பட்டது. ராஜாக்களுக்கும், ஞானிகளுக்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும் கூறப்பட்ட செய்திதான் கிறிஸ்துவின் பிறப்பின் செய்தியாகும்.

நமது கர்த்தராகிய இயேசு சகல ஜனங்களுக்கும் நல்மேய்ப்பராய் இருப்பதினால், மேய்ப்பர்களுக்குக் கூறப்பட்டதோ என்றும்கூட எண்ணலாம். பிரியமானவர்களே! கிறிஸ்துவின் பிறப்பின் செய்தியைக் கேள்விப்படுகிற அனுபவிக்கிற, அறிவிக்கிற ஜனங்கள் பாக்கியங்கள் பெற்ற பாக்கியவான்கள் எனலாம்.

ஆ. பணிவுடன் கீழ்ப்படிந்தவர்கள்
தேவ தூதனின் செய்தி என்னவெனில், “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று. கிறிஸ்துவின் பிறப்பின் செய்தி எல்லா ஜனத்திற்குமுரிய செய்தி மட்டுமல்ல, இது மேய்ப்பர்களுக்குமுரிய செய்தியாகும். ‘காண்பீர்கள்’ என்று கூறப்பட்டுள்ளதே தவிர, ‘போங்கள்’ என்றோ அல்லது ‘போய்ப் பாருங்கள்’ என்றோ கூறப்படவில்லை. செய்தியின் உட்கருத்தை அறிந்து இவர்கள் உடனடியாக கீழ்ப்படிந்து கிறிஸ்துவைக் காணச்சென்றார்கள். நமது வாழ்வில் இத்தகைய கீழ்ப்படிதல் உண்டா? நாம் அறிந்துகொண்ட உண்மைகளுக்கு நாம் கீழ்ப்படிவோமாக!

இ. பிரசித்தம் பண்ணினார்கள்
மேய்ப்பர்கள் தாங்கள் கேட்ட, கண்ட செய்தியினைப் பிரசித்தம் பண்ணினார்கள். பிறப்பின் செய்தி மறுக்கப்பட வேண்டிய மறைக்கப்பட வேண்டிய செய்தியல்ல. இச்செய்தி அறிவிக்கப்படவேண்டிய செய்தியாகும். கிறிஸ்துவின் முதல் வருகையை மேய்ப்பர்கள் அறிவித்தார்கள். நாமோ கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறோம். இருப்பினும் முதலாம் வருகையைக் கேள்விப்படாத எத்தனையோ மக்கள் கூட்டங்கள் உண்டே! அறிவிக்கும் பணியினைச் செய்ய முன்வருபவர்கள் யார்? இந்த மேய்ப்பர்களோ கிறிஸ்துவின் மகிமை எங்கும் பரவும்படி அறிவித்து பிரசித்தம் பண்ணினார்கள்.

2. தூதர்களின் திரள் பாடின துதியின் வாக்குத் தத்தங்கள்

அ. கிறிஸ்துவின் பிறப்பு உன்னதத்தில் இருக்கிற தேவனுக்கு மகிமையைக்கொண்டு வருகின்றது (1தீமோ.1:1)
பாவிகளை இரட்சிக்க இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்தார். ஒரு பாவி மனந்திரும்பு வானானால் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும். பாவிகள் மனந்திரும்பவே கிறிஸ்து பிறந்தார். கிறிஸ்துவின் பிறப்பு பாவிகளின் மீட்புக்கு ஒரே வாசலாகும். கிறிஸ்துவின் பிறப்பு பரலோகத்தில் களிப்பையும் மகிமையையும் கொண்டு வந்தது (லூக்.15:10).

ஆ. கிறிஸ்துவின் பிறப்பு பூமியிலே சமாதானத்தை உண்டுபண்ணியது (எபேசி.2:14-17).
தேவனுக்கும் மனுக்குலத்துக்கும், மனிதர் களுக்கிடையே இருந்த பிரிவினைக்குட்பட்ட உறவுகள் கிறிஸ்துவினால் செம்மையாக்கப்பட்டது. பிரிவினை அகன்றுபோனது. சமாதானம் இல்லாத பூமியில் சமாதான பிரபு பிறந்ததால் பூமியில் சமாதானம் வந்தது.

இ. கிறிஸ்துவின் பிறப்பு மனுஷர்மேல் பிரியம் உண்டாக்கிற்று (1யோவான் 4:9)
மனிதர்களையும், பூமியையும் நேசித்ததினால் தேவன் தமது குமாரனை உலகுக்கு அனுப்பியதால் மனுஷர் மேல் வைத்த தேவ அன்பு – பிரியம் உண்டாயிற்று.

பிரியமானவர்களே! கிறிஸ்துவின் பிறப்பு மகிமையையும், சமாதானத்தையும், அன்பையும் வெளிப்படுத்தியது. இதனை உணர்ந்தவர்களாக நாம் கிறிஸ்துவை ஆராதிப்போம். நமது கொண்டாட்டங்களில் கிறிஸ்துவின் சிந்தையைக் காத்துக்கொள்வோமாக!

சத்தியவசனம்