விபசாரத்தின் விளைவுகள்!

தியானம்: ஆகஸ்டு 7 ஞாயிறு; வாசிப்பு: ஆதியாகமம் 21:1-14

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத்
திடநம்பிக்கை உண்டு: அவன்
பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும் (நீதி.14:26)

பாவம் எவ்வளவு கொடியது தெரியுமா? அது எப்போதும் பாவம் செய்கிறவனை மட்டுமல்ல, அது அடுத்தவனையும் பாதிக்கிறது. ஒருவன் களவு செய்தால், பொருளை இழந்தவன் மட்டுமல்ல, எடுத்தவனும் சமாதானத்தை இழந்து விடுகிறான். விபசார பாவமும் அப்படியே, அது செய்தவனையும் அடுத்தவனையும் நேரடியாகவே பாதிக்கிறது. திருமண உறவுக்கு அப்பாற்பட்ட தவறான உறவுகள் யாவுமே விபசார பாவமாகும். எந்தப் பாவமும் கொடியது என்றால், இந்தப் பாவம் ஏற்படுத்தும் விளைவுகளோ மிகவும் கொடியது எனலாம்.

தவறான உறவுகள் மேன்மையான உறவைக் கெடுத்துப்போடுகின்றன. தேவனோடுள்ள உறவு பாதிப்படைகிறது. ஆனால் இன்று எத்தனைபேர் விபசார பாவத்தோடு துணிகரமாய் திருவிருந்தில் பங்குபெறுகின்றனர். சிலவேளைகளில் தேவன் உடனடியாக தண்டிக்காமல் விட்டுப் பார்ப்பார். அன்று தாவீது இரு ஆண்டுகள் தாம் பாவம் செய்த உணர்வின்றி ஜீவித்தாரல்லவா! ஆனால் தேவன் இடைப்பட ஆரம்பித்தாரானால் அதைத் தாங்கிக்கொள்வது கடினம் என்பதை தாவீதின் சம்பவத்தில் கற்றுக்கொள்கிறோம். மாத்திரமல்ல, நாளடைவில் நமது மனச்சாட்சியே நம்மைக் குத்திக் குதறிப்போடும். மன உளைச்சல் உண்டாக்கும். பிற மனித உறவுகள் உடைந்து போகும்.

அடுத்தது, தவறான உறவுகள் பிள்ளைகள் வாழ்வைச் சீர்குலைத்து விடுகிறது. தேவனுடைய வேளைக்குக் காத்திராமல் ஆபிரகாம் அடிமையோடு சேர்ந்து பெற்றெடுத்த பிள்ளை இஸ்மவேலினால் குடும்பத்திற்குள்ளும் சமாதானம் இல்லை; அவனை வெளியே விட்டபோதும் சமாதானம் இல்லை; இஸ்மவேலுக்கும் ஈசாக்குக்கும் நித்தமும் சண்டை.

தேவபிள்ளையே, என்ன சோதனை வந்தாலும், கர்த்தரை நம்பித் திடன் கொள். அப்போது தேவன் உன் பிள்ளைகளைக் காப்பார். திருமணத்திற்குப் புறம்பான எந்த உறவையும் தேவன் அங்கீகரிக்கவே மாட்டார். இஸ்மவேல் ஆபிரகாமின் பிள்ளை என்றதால், தேவன் அவனை உடன்படிக்கையின் பிள்ளையாக அங்கீகரிக்கவில்லை. இன்று பொறுப்பற்று நடக்கும் பெற்றோரினாலே பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிகிறது. வெறுப்படைந்த பிள்ளைகள் சமுதாயத்திற்கே சவாலாக மாறிவிடுகிறார்கள். இது தேவைதானா? தேவபிள்ளையே, நீ தேவனை நம்பு. திடமனதாயிரு. குடும்ப உறவைக் காத்துக்கொள். விபசாரம் என்ற கொடிய அரக்கனிடமிருந்து நம்மைத் தேவன் தப்புவிப்பாராக!

ஜெபம்: கர்த்தாவே, கிருபையாய் நீர் தந்த குடும்பத்தையும் பிள்ளைகளையும் சீரான வழியிலே நடத்த என் வாழ்வை முன்மாதிரியாக மாற்றிப்போடும். ஆமென்.